47 ஒலிப்பதிவு

47 ஒலிப்பதிவு ( நீண்ட அத்தியாயம்)

தன் அறைக்கு வந்த இனியவன் முதலில் கதவை சாத்தி தாழிட்டான். தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஆழ்வியின் கைபேசியை எடுத்து தன் கைரேகையை பதிந்து அதை திறந்தான். ஃபைல் மேனேஜருக்கு சென்று, அதில் இருந்த கால் ரெக்கார்டிங்குகளை பார்த்தான். அதில் சுவாமிஜி என்ற பெயரில் ஐந்தாறு ஃபைல்கள் இருந்தன. அதை தனது இமெயில் முகவரிக்கு அனுப்பி விட்டு, அதை ஆழ்வியின் கைபேசியிலிருந்து அழித்ததோடு மட்டும் நிற்காமல், ரீசைக்கிள் பின்னில் இருந்தும் அழித்தான்.  

மீண்டும் தன் அறையை விட்டு வெளியே வந்தான். மறுநாள் பூஜையை பற்றி நித்திலா பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது. அப்படி என்றால், ஆழ்வி நித்திலாவோடு தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான். லேசாய் எட்டிப் பார்த்து அதை நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆம், ஆழ்வி நித்திலாவுடனும் பாட்டியுடனும் பேசிக் கொண்டிருந்தாள். அவளது அறைக்கு வந்து, எங்கிருந்து அவளது கைபேசியை எடுத்தானோ அங்கேயே மீண்டும் வைத்துவிட்டு அமைதியாய் அங்கிருந்து நடையை கட்டினான்.

தன் அறைக்கு வந்த அவன், இயர் போனை மாட்டிக்கொண்டு சுவாமியுடன் ஆழ்வியின் உரையாடலை கேட்கத் தொடங்கினான்.

(குறிப்பு: நான் பழையதை எல்லாம் மீண்டும் இங்கு எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அப்பொழுது தான் அவற்றை கேட்கும் போது இனியவன் என்ன உணர்ந்தான் என்பதை என்னால் விளக்க முடியும். இனியவன் என்ன நினைக்கிறான் என்பதை பிளாக் லெட்டரில் கொடுக்கிறேன்)

ஒளிப்பதிவை ஓட விட்டான் இனியவன்.

"நீங்க அனுப்பின மருந்து கிடைச்சது. அதை நாங்க டெஸ்ட்டுக்கு அனுப்பினோம். அதை உங்க புருஷனுக்கு கொடுதவங்க இதயமே இல்லாதவங்களா இருக்கணும்"

அதைக் கேட்டு இனியவன் அதிர்ச்சி அடைந்தான். மருந்து கொடுத்தார்களா? யார் கொடுத்தது? எதற்காக?

"இவ்வளவு ஆபத்தான ஒரு மருந்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல. இதைப்பத்தி உங்ககிட்ட சொல்ல கூடாது தான். ஆனா விஷயத்தோட வீரியம் உங்களுக்கு தெரியணும் அப்படிங்கிறதுனால இதை நான் உன்கிட்ட சொல்லியே தீரணும் மா. இந்த மருந்தால தான் உங்க புருஷன் தூங்காம இருக்காரு. அவருக்கு ஏற்படுற செக்ஸ் உணர்வுக்கும் இந்த மருந்து தான் காரணம். இப்படிப்பட்ட மருந்தை அவருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறவங்க ரொம்ப கொடூரமானவங்களா இருக்கணும். தனக்குள்ள என்ன நிகழுது? அதை எப்படி தணிக்கணும்னு கூட தெரியாத ஒருத்தருக்கு இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மருந்தை கொடுத்து, அப்படிப்பட்ட உணர்ச்சியை தூண்டிவிடுறாங்கன்னா அவங்க எவ்வளவு மோசமானவங்களா இருக்கணும்? உன் புருஷன் ரொம்ப பாவம் மா"

மென்று விழுங்கினான் இனியவன். அதே நேரம் அவனுக்கு கோபம் எல்லையை கடந்து கொண்டிருந்தது. அவனது பாலுணர்ச்சியை தூண்டும் மருந்தா? அதனால் தான் அவனது சகோதரிகள் கூட அவனிடம் நெருங்காமல் இருந்தார்களா?

"நம்மால அவரை குணப்படுத்த முடியாதா, சுவாமி?"

ஆழ்வியின் தொண்டையை அடைத்ததை உணர்ந்தான் இனியவன்.

"நிச்சயம் முடியும். இப்போ இது உங்க பிரச்சனை மட்டுமில்ல. என்னோட பிரச்சனையும் கூட...  இந்த விஷயம் எனக்கு ஒரு சவால். உங்க ஃபிரண்டு மீனா, இன்னைக்கு ராத்திரி இங்கிருந்து கிளம்புறாங்க. நான் உங்க புருஷனுக்கு தேவையான எல்லா மருந்தையும் அவங்க கிட்ட கொடுத்து அனுப்புறேன். அது கூடவே, அதை எப்படி பயன்படுத்தணும் அப்படின்னு தெளிவா எழுதி அனுப்புறேன்.  நீங்க அதுபடி செஞ்சா போதும்"

இனியவனுக்கு மீனாவை தெரியும். அவள் பார்கவியின் தோழி. அவளது சொந்த ஊர் ராமநாதபுரம் என்று பார்கவி கூறியிருந்தாள். அப்படி என்றால் மீனாவின் மூலமாகத்தான் ஆழ்விக்கு இந்த மருத்துவரை பற்றி தெரிந்திருக்க வேண்டும். 

"நன்றிங்க சுவாமி"

"நான் இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதிங்க மா. நீ உன் புருஷன் குணமாகணும்னு நினைச்சா, நீ உன்னை தியாகம் பண்ணணும்"

இனியவன் முகம் சுருக்கினான். தியாகம் செய்வதா? அதற்கு என்ன அர்த்தம்?

"நீங்க சொல்றது எனக்கு புரியல"

"நீங்க அவரு ரொம்ப காட்டுதனமா நடந்துக்கிறார்னு சொன்னீங்க.  இருந்தாலும் நீங்க அவர்கிட்ட நெருங்கி போய் தான் ஆகணும். நமக்கு வேற வழியில்ல. அவரோட ரத்தத்தோட வேகத்தை குறைக்க தேவையான மருந்தை நான் உங்களுக்கு  அனுப்பத்தான் போறேன். ஆனாலும் அது எந்த அளவுக்கு நமக்கு சாதகமா வேலை செய்யப் போகுதுன்னு தெரியல. அவருடைய உண்மை நிலை என்னன்னு நான் நேர்ல பாக்கல இல்லயா? நான் அனுப்புற மருந்தை கொடுக்க தொடங்குங்க. அவர் முதல்ல நல்லா தூங்கட்டும். முதல் ஒரு பத்து நாளுக்கு அவரோட ரூமுக்குள்ள நீங்க போக வேண்டாம். ஆனா பதினோராவது நாள், நீங்க அவரோட ரூமுக்கு போய், அவர் நடவடிக்கைகளை பத்தின ரிபோட்டை எனக்கு அனுப்பணும். உங்களைத் தவிர வேற யாரும் அதை செய்ய முடியாது"

இனியவன் பதற்றமானான். என்ன சிகிச்சை முறை இது? ஆனால் ஆழ்வியின் பதில் அவனுக்கு வியப்பளித்தது.

"நான் நிச்சயம் அதை செய்றேன் சுவாமி"

"ஒருவேளை அவர் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டா, உடனே அவர் அறையை விட்டு வெளியில வந்துடுங்க. அதுக்கப்புறம் அவருக்கு கொடுக்குற மருந்தோட பவரை நம்ம இன்னும் கொஞ்சம் அதிகபடுத்தி கொடுக்கலாம்"

"அந்த மருந்தோட பவரை நம்ம இப்பவே அதிகப்படுத்தி கொடுக்க முடியாதா?"

"இப்பவே அது போதுமான அளவுக்கு பவர்ஃபுல்லா தான் இருக்கு. அவர் மெட்டபாலிசத்துக்கு தகுந்த மாதிரி தான் நம்ம அதை அதிக படுத்தணும். இல்லன்னா அது ஓவர் டோஸ் ஆயிடும். இப்போ நான் கொடுக்கிற மருந்தே அவருக்கு போதுமானதா இருக்கும்னு தான் நினைக்கிறேன்"

"சரிங்க சுவாமி"

"நீங்க என்னை எப்ப வேணா ஃபோன் பண்ணி கூப்பிடலாம். எதுக்காகவும் தயங்க வேண்டாம். கவலைப்படாதீங்க, நம்ம அவரை கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலமைக்கு கொண்டு வந்துடலாம்,

"ரொம்ப நன்றி சுவாமி"

"இன்னொரு விஷயம், நான் உங்களுக்கு கொடுத்திருக்கிற மருந்து, படிப்படியான முன்னேற்றத்தை கொண்டு வரும் அப்படிங்கிறதால, அவர் தன் சுயநினைவை அடையும் போது, உங்களை மறக்க மாட்டார்"

"உண்மையாவா? உங்களை என் வாழ்க்கையில நான் எப்பவும் மறக்க மாட்டேன்" என்றாள் சந்தோஷமாக.

"நீங்க நல்லா இருப்பீங்க..." அவர் அழைப்பை துண்டித்தார்.

குற்ற உணர்ச்சியோடு கண்களை மூடினான் இனியவன். தன்னை குணப்படுத்த ஆழ்வி எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மோசமான மருந்தை கொடுத்து அவனை கீழ்த்தரமான நிலையில் வைத்திருந்தது யார்? ஆழ்வி எப்படி அதை கண்டுபிடித்தாள்? அதை செய்தது யார் என்று அவளுக்கு தெரியுமா?

சித்த மருத்துவரிடம், அதை செய்தது சித்திரவேல் என்ற உண்மையை, ஆழ்வி அவர்களுக்கு இடையில் நடைபெற்ற ஜும் மீட்டிங்கின் போது கூறினாள். அதை அவள் ரெக்கார்ட் செய்யவில்லை என்பது நமக்கு நினைவிருக்கும். அதனால் தான் சித்திரவேலை பற்றி இனியவனுக்கு தெரியவில்லை.

அவசரமாய் அடுத்த ஒலிப்பதிவை கேட்கத் துவங்கினான் இனியவன். அது மருந்து கொடுக்க ஆரம்பித்த பிறகு, இனியவனிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்து அவள் சுவாமியிடம் பேசியது.

"கேட்டை திறக்கிற சத்தம் கேட்டு அவர் என்னை திரும்பிப் பார்த்தார். என்னை பார்த்த உடனே அவர் முகத்துல ஒரு திகைப்பு தெரிஞ்சது. சுவர் பக்கமா திரும்பி நின்னு கீழ குனிஞ்சுக்கிட்டார். மெதுவா திரும்பி நான் அவரை நோக்கி நடந்து வர்றதை பார்த்துட்டு மறுபடியும் திரும்பிக்கிட்டாரு. நான் அவர் தோளை தொட்ட போது அவர் அதிர்ச்சியானார். என் பக்கம் திரும்பி என்னை மேலிருந்து கீழ வரைக்கும் பார்த்தாரு. அவரோட முகபாவம் மாறுச்சு. என்னை இறுக்கமா கட்டிப்புடிச்சு, என் தாடையை உறிஞ்சார். ( இனியவன் சங்கடத்தில் நெளிந்தான்) நான் அசையாம அப்படியே நின்னேன். ஏன்னா அவரோட அணைப்புல இருந்த வித்தியாசத்தை என்னால உணர முடிஞ்சது. அது முன்னாடி இருந்த மாதிரி அவ்வளவு காட்டுதனமா இல்ல."

முன்பிருந்ததைப் போல் இல்லையா? அப்படி என்றால் அவன் அவளிடம்  வெகு முரட்டுத்தனமாய் நடந்திருக்க வேண்டும். அவன் அவளை இறுக்கமாய் கட்டி அணைத்ததாய் அவள் கூறினாள். அப்படி என்றால் அவனது அணைப்பு முன்பு எப்படி இருந்திருக்கும்? என்று எண்ணிய போது அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.

"திடீர்னு அவர்கிட்ட ஒரு திகைப்பு ஏற்பட்டுச்சு என்னோட முடியை முன் பக்கம் இழுத்து விட்டு என் தலையில் இருந்த க்ளிப்பை பயத்தோடு பார்த்து, பயத்தோட பின்னோக்கி நகர்ந்தார்"

க்ளிப்பா? அதைப் பார்த்து அவன் ஏன் பயப்பட வேண்டும்? இனியவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"நான் என் தலையில் இருந்த கிளிப்பை கழட்டி வீசினேன். என் கையை நீட்டி அவரை என்னை கட்டிக்க சொல்லிக் கூப்பிட்டேன்"

இனியவன் வியப்பில் புருவம் உயர்த்தினான். எப்படி அவனை அணைத்துக் கொள்ளச் சொல்லும் துணிவு அவளுக்கு ஏற்பட்டது? சற்று நேரத்திற்கு முன்பு அவன் அவளை அனைத்த போது அவளிடம் ஒரு பதற்றம் தென்பட்டதை அவன் கவனித்தான். அப்படி இருக்கும் பொழுது எப்படி அவள் துணிச்சலோடு அவன் அறைக்குள் நுழைந்து அவனை அணைத்துக் கொள்ளச் சொன்னாள்?

"அவரோட பார்வை கீழே விழுந்திருந்த கிளிப் மேலையே இருந்தது. நான் அவர்கிட்ட வேகமா போய் அவரை கட்டிப்பிடிச்சு கிட்டேன்"

நம்ப முடியாமல் விழி விரித்தான் இனியவன். பார்க்க மென்மையான பெண் போல் இருக்கிறாள்...! ஆனால் அவள் மனதளவில் ஓர் இரும்பு பெண்ணாய் இருக்க வேண்டும். அதனால் தான் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் கையாளும் திறன் அவளுக்கு இருக்கிறது. ஆழ்வி என்ற பெயர் அவளுக்கு பொருத்தமானது தான். ஆழ்வி என்றால் தலைவி என்று பொருள் ஆயிற்றே...!

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை இறுக்கமா கட்டிப் பிடிச்சுகிட்ட அவரு, இப்போ என்னை வெறிச்சி பார்த்துக்கிட்டு ஒன்னும் செய்யாம அதிர்ச்சியோட நின்னாரு.  நான் சிரிச்சுகிட்டே அவர் முகத்தை ஏந்தி அவர் நெத்தியிலயும் கன்னத்திலையும் முத்தம் கொடுத்தேன். அவர் மந்திரிச்சு விட்டவர் போல நின்னாரு"

அதைக் கேட்ட இனியவன் புன்னகை புரிந்தான், இப்பொழுது அவள் அவனுக்கு முத்தம் கொடுத்தால் கூட அவன் அப்படித்தான் நிற்பான் என்று எண்ணி...!

"கலஞ்சிருந்த அவரோட தலையை என் கை விரலால நான் ஒழுங்கு படுத்தினேன். அவர் திகைப்போட என்னையே வச்ச கண் வாங்காம பார்த்துக்கிட்டு இருந்தாரு"

"ஏன்னா அவர்கிட்ட இப்படியெல்லாம் அன்பா நடந்துக்கிற முதல் பெண் நீங்க தான். உண்மைய சொல்லப்போனா அவர்கிட்ட எந்த பொண்ணும் கிட்ட நெருங்கினதே இல்லயே" என்றார் சுவாமிஜி.

"நான் கட்டிலை நோக்கி போனேன் அவர் என் பின்னாடியே வந்தாரு. அவரை கட்டிலில் உட்கார வச்சு, அவர் தோளை அழுத்தி படுக்க வச்சேன். அவரும் நல்ல பிள்ளையா படுத்துக்கிட்டாரு. அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தலையை கோதிவிட ஆரம்பிச்சேன். அவர் ஏற்கனவே தூக்கத்தில் இருந்ததால மெல்ல கண்ணை மூடிக்கிட்டாரு. அடுத்த சில நிமிஷங்கள்ல தூங்கிட்டாரு. சத்தம் செய்யாம அங்கிருந்து வந்துட்டேன்"

"உண்மையாவா சொல்றீங்க நீங்க அப்படியெல்லாம் செஞ்சீங்களா?"

சுவாமிஜியின் குரலில் இருந்த நம்பிக்கையின்மையை உணர்ந்தான் இனியவன். ஒரு பைத்தியக்காரனிடம் அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் என்பதை இனியவனாலும் நம்ப முடியவில்லை.

"ஆமாம் சுவாமி"

"பிரமாதம் மா. நீங்க ரொம்ப பெரிய காரியம் செஞ்சிருக்கீங்க. உங்களோட தைரியத்தை நான் பாராட்டியே ஆகணும். நீங்க ஒரு அசாத்திய பெண்மணி!"

ஆம் அவள் அசாத்தியமான பெண் தான்...!

"நான் சொன்னதுக்கு அவர் கீழ்படிஞ்சி நடந்தார், சுவாமி"

"அது ஒரு நல்ல அறிகுறி. அப்படின்னா அவரை மாத்திக் கொண்டு வருவது நமக்கு கஷ்டமா இருக்காது"

"எனக்கும் அப்படித்தான் சுவாமி தோணுது"

"நான் அனுப்பியிருந்த மருந்தை எல்லாம் பார்த்தீர்களா?"

"பார்த்தேன் சுவாமி"

"அதில் ஒரு பாட்டில் இருக்கு"

"ஆமாம் இருக்கு"

"அது ஒரு மூலிகை தைலம் அவரை உங்களால் தூங்க வைக்க முடியுதுன்னா, அதை எடுத்து அவர் உச்சந்தலையில் நல்ல சூடு பறக்க தேச்சு விடுங்க. உச்சந்தலையில் மட்டும் தான் அதை தேய்க்கணும். அதை தொடர்ந்து தேச்சிக்கிட்டு வந்தா, அவர்கிட்ட இன்னும் கூட நல்ல முன்னேற்றம் தெரியும்"

"நான் எப்போதிலிருந்து ஆரம்பிக்கணும்?"

"எப்ப வேணும்னாலும் ஆரம்பிக்கலாம்"

"அப்படின்னா நான் அதை இன்னைக்கே ஆரம்பிச்சிடுறேன்"

"அது சரி, உங்க குடும்பத்துல இருக்கிற யாரும் அவர்கிட்ட ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கலையா?"

தன் கண்களை சுருக்கினான் இனியவன். ஆம், எதற்காக யாருக்கும் தெரியாமல் அவள் அவனுக்கு சிகிச்சை அளித்திருக்கிறாள்? அவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருந்தால், அவளுக்கு வேண்டிய உதவியும் செய்து, அவளை கொண்டாடி தீர்த்து இருப்பார்களே...! அப்படி இருக்க எதற்காக அவர்களிடம் இருந்து ஆழ்வி அதை மறைத்து வைத்திருந்தாள்?

"இல்ல சுவாமி, அவரோட ரூம் கடைசியில இருக்கிறதால யாரும் அந்த பக்கம் போக மாட்டாங்க. சாப்பாடு கொடுக்க வேலைக்காரர் மட்டும் போய்கிட்டு இருந்தாரு. இப்ப அந்த வேலையையும் நான் ஏத்துக்கிட்டதால அவர் கூட பெரும்பாலும் அந்த பக்கம் போறது இல்ல. சித்திரவேல் அண்ணனும் ஊர்ல இல்ல."

எதற்காக அவள் சித்திரவேலின் பெயரை குறிப்பாய் கூறுகிறாள்? சித்திரவேல் தான் அவனை கவனித்துக் கொண்டிருந்தானோ...?

"அவர் ரூம் பக்கம் யாருமே வா போக மாட்டாங்க?"

"போக மாட்டாங்க சுவாமி"

"அதுவும் நல்லதுக்கு தான். தொடர்ந்து அவருக்கு மருந்து கொடுத்துக்கிட்டு வாங்க. ராத்திரியில அந்த எண்ணையை அவர் உச்சந்தலையில் தேச்சு விடுங்க"

"சரிங்க சாமி. ரொம்ப நன்றி"

"பரவாயில்ல அம்மா"

அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இனியவன் பெருமூச்சு விட்டான் அவனுக்கு இருக்கும் குழப்பத்தை தீர்த்துக்கொள்ள அவன் முனைந்தான். ஆனால் அவனது குழப்பம் இன்னும் தீவிரமாகி கொண்டிருக்கிறது... ஒரே ஒன்றைத் தவிர... ஆழ்வி.! இப்படிப்பட்ட ஆபத்தான வாழ்க்கையை வாழ யாராவது துணிய முடியுமா? அவள் அவனை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டவளாய் இருந்திருந்தால், அவனை குணப்படுத்த எதற்காக இவ்வளவு முனைப்பு காட்ட வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் எவ்வளவு பாடுபட்டாள் என்று அவன் குடும்பத்தாரிடம் கூறி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று அவள் ஏன் நினைக்கவில்லை? ஏன் இந்த பெண் இவ்வளவு மர்மமாக இருக்கிறாள்?

அவன் அடுத்த ஒலிப்பதிவை ஓட விட்டான்.

"மன்னிச்சிடுங்க சுவாமி. நான் அவர்கூட இருந்தேன். அதனால தான் உங்க ஃபோனை அட்டென்ட் பண்ண முடியல"

"பரவாயில்ல ம்மா. உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?"

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நம்ப முடியாத அளவுக்கு அவர்கிட்ட முன்னேற்றம் தெரியுது" என்றாள் சந்தோஷமாக.

"நீங்க பேசுறதை பார்த்தா, நீங்க என்னோட சிகிச்சை முறையை நம்பல போல இருக்கே"

"நான் உங்க சிகிச்சை நம்பினேன். ஆனா இந்த அளவுக்கு வேகமான முன்னேற்றம் இருக்கும்னு எதிர்பார்க்கல"

"உங்க புருஷன் ரொம்ப நாளைக்கு முன்னாடியே குணமாகி இருக்க வேண்டியவர் மா. அவரோட கெட்ட நேரம், அந்த மோசமான மருந்தால அவர் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருக்கிறார். நான் அந்த மருந்தை பத்தி ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன். அந்த மருந்தால தான் அவர் காட்டுதனமாக நடந்துக்கிட்டார். ஆனா இனிமே அப்படி எல்லாம் நடக்காது. நம்மளோட மருந்து அவரோட மூளையோட செயல்பாட்டை சீர்படுத்தும். அவரோட நரம்புகளை அமைதியா வைக்கும். அதோட, அவருடைய உடம்புல இருக்கிற விஷயத்தன்மைகளை முறிக்கிற மாற்று மருந்தாவும் செயல்படும். கவலைப்படாதீங்க அவர் சீக்கிரமே குணமாயிடுவார்"

"ரொம்ப நன்றி சுவாமி"

"நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன். இது எனக்கும் கூட ஒரு மிகப்பெரிய சவால் தான். சீக்கிரமே அவரோட நினைவை நம்ம திரும்ப கொண்டு வந்துடலாம். நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்"

"சொல்லுங்க சுவாமி"

"நாளைக்கு அமாவாசை"

"ஆமாம்..."

"நம்ம மனநிலைக்கு நிலவுக்கும் தொடர்பு இருக்கிறதா நாங்க நம்புறோம். அதனால அது மனநிலை சரியில்லாதவங்க கிட்ட ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்"

"அதுக்கு நான் என்ன செய்யணும் சுவாமி?" என்றாள் பதற்றத்துடன்.

"நான் கொடுத்த மருந்துல ஒரு சின்ன பாட்டில் இருக்கும். அதுல இருக்கிறது பத்து மில்லி மருந்து தான். அதை நாளைக்கு காலையில உங்க புருஷனுக்கு கொடுத்துடுங்க. நாளைக்கு ராத்திரி அது அவரை சமநிலையில வைக்கும். அதே நேரத்துல, இந்த மாதிரி மருந்து அமாவாசை தினத்தில் பவர்ஃபுல்லா வேலை செய்யும். அதனால அடுத்த நாள் காலையில நீங்க அவர்கிட்ட ஒரு பெரிய மாற்றத்தை பார்ப்பீங்க"

"ஓ... சரிங்க சுவாமி"

"உங்க மனசுல என்ன கேள்வி எழுந்ததுன்னு நான் சொல்லட்டுமா? இந்த மாதிரி பவர்ஃபுல்லான மருந்தை ஏன் முன்னாடியே கொடுக்கலைன்னு கேக்குறீங்க, அப்படித்தானே?"

"அது வந்து..."

"ஆரம்பத்துல நம்ம குடுக்குற மருந்தோட வீரியத்தை தாங்குற அளவுக்கு அவர் உடம்புக்கு சக்தி இருந்திருக்காது. ஆனா இப்போ, அவர் பத்து நாளைக்கு மேல நம்ம மருந்தை சாப்பிட்டுட்டார். அதனால இந்த மருந்தோட சக்தியை அவரால தாங்க முடியும். அவருக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. அதனால் தான் இப்போ அதை கொடுக்கிறேன்"

"இப்படி கேள்வி கேட்கிறதுக்காக என்னை மன்னிச்சிடுங்க, சுவாமி"

"இதுல தப்பா நினைக்க ஒன்னும் இல்ல. நீங்க அவர் மேல இருக்கிற காதலால் தானே இதையெல்லாம் செய்றீங்க? அது தான் உங்களை கேள்வி கேட்க வைக்கிது"

அதை கேட்டு திகைத்தான் இனியவன். எப்படி ஒரு பைத்தியக்காரனை ஒரு பெண் காதலிக்க முடியும்? அவன் ஆழ்வியிடமிருந்து எந்த பதிலையும் கேட்கவில்லை. அவளும் கூட திகைத்து தான் போயிருக்க வேண்டும்.

"நீங்க லைன்ல இருக்கீங்களா?" என்றார் சுவாமி.

"இருக்கேன் சுவாமி..."

"நான் நாளைக்கு உங்க காலுக்காக காத்திருப்பேன். அவர்கிட்ட ஏற்பட்ட மாற்றத்தை பத்தி நீங்க எனக்கு சொல்லுங்க"

"சரிங்க சுவாமி. அவரை கவனிச்சிட்டு உங்ககிட்ட சொல்றேன்"

அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த ஒளிப்பதிவை ஓட விட்டான் இனியவன்.

"என்னம்மா ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?"

"ஆமாம் சுவாமி. அவர் ஓயாம தூங்கிக்கிட்டே இருக்காரு. அதனால ஏதாவது பிரச்சனையாகுமா?"

"ஒன்னும் ஆகாது. அந்த மருந்து சரியாக வேலை செய்யுது. அதனால தான் அவர் தூங்கிகிட்டிருக்காரு. அவரை தொந்தரவு செய்யாம தூங்க விடுங்க. நல்லா தூங்கட்டும்"

அந்த உரையாடல் அதோடு முடிந்தது.

சுவாமி சொன்ன மருந்தை ஆழ்வி தனக்கு கொடுத்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை பார்த்து விடலாம்.

அடுத்த ஒளிப்பதிவை ஓட விட்டான்.

"தேங்க்யூ சோ மச் சுவாமி. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. இன்னைக்கு அவர் என்னை பேர் சொல்லி கூப்பிட்டாரு... சிரிச்சாரு... சில வார்த்தைகள் பேசினார்... அவர் பக்கத்துல நின்ன அவரோட தங்கச்சியை ஏறெடுத்து கூட பாக்கல. அவ வேணும்னே அவர் கையை தொட்ட போது கூட அவர் தட்டி விட்டுட்டாரு. அவர் கண்ணில் துளி கூட காமமே இல்ல. இன்னைக்கு எல்லாரோடவும் உக்காந்து பிரேக்பாஸ்ட் சாப்பிட்டாரு. அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாருக்கும் சந்தோஷம் தாங்க முடியல. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல சுவாமி" என்று ஒரே மூச்சில் கூறி முடித்தாள் ஆழ்வி.

"அவருக்கு தேவையில்லாத காம உணர்வுகள் இருக்காதுமா. நம்மளுடைய சிகிச்சையே அதுக்காக தானே! நீங்க தொடர்ந்து மருந்தை கொடுத்துகிட்டே வாங்க. அடுத்த மாசம் நம்ம வேற மருந்தை மாத்தி கொடுக்கலாம்"

"சரிங்க சுவாமி. இன்னும் ஒரு விஷயம்..."

"சொல்லுங்கம்மா"

"அவர் ரொம்ப பொசசிவா நடந்துக்குறாரு. அவரோட தங்கச்சி என்னை கட்டிப்பிடிச்சப்போ அவருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. அவர் ஏன் சுவாமி இப்படி மாறிட்டாரு? அதுவும் நம்ம மருந்தோட சைடு எஃபெக்ட்டா இருக்குமா?"

அதைக் கேட்டு கண்களை சுழற்றி சிரித்தான் இனியவன். அவள் சுவாமிஜியுடன் பேசியதை எல்லாம் கேட்கும் போது, அவனுக்கே அவளை எப்பொழுதும் தன்னருகே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதே...! பிறகு ஒரு பைத்தியக்காரன் என்ன செய்வான்?

"இல்லம்மா, அவரோட உண்மையான குணத்தை தான் நம்ம மருந்து வெளியில் கொண்டு வரும். அவர் உண்மையிலேயே பொசசிவ்வானவராக தான் இருப்பாரு. நீங்க அவர் குடும்பத்தார்கிட்ட கேட்டுப்பாருங்க. ஆரம்பத்தில் இருந்தே அது தான் அவரோட இயற்கை குணமா இருந்திருக்கும். இப்போதைக்கு அவர் கிட்ட நீங்க ஒருத்தர் தான் நெருங்கி பழகிகிட்டு இருக்கீங்க. அதனால அவர் உங்ககிட்ட அப்படி ஒரு பொசசிவ்ன்ஸை காட்டுறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. அவரோட உலகம் ரொம்ப சின்னது. அந்த உலகத்துக்குள்ள தைரியமா உள்ள நுழைஞ்சு, அவர் கூட நெருங்கி பழகுறது நீங்க மட்டும் தான். அதனால அவர் உங்ககிட்ட அப்படித்தான் இருப்பார்"

அந்த மருத்துவரின் மீது மிகப்பெரிய மரியாதை தோன்றியது இனியவனுக்கு.

"அப்படின்னா அவர் குணமானதுக்கு பிறகு கூட என் மேல பொசசிவா தான் இருப்பாரா?"

இனியவனின் முகத்தில் புன்னகை தோன்றியது அந்த புன்னகை, 'அதில் என்ன சந்தேகம்?' என்ற கேள்வியை எழுப்பியது.

"நிச்சயமா அப்படித்தான் இருப்பார். ஏன்னா அது அவர் ரத்தத்திலேயே இருக்கு. அப்படி இருக்கும்போது அவர் எல்லாரையும் விட உங்க மேல அதிகமா பொசசிவா தான் இருப்பாரு"

அவர் கூறியதை கேட்டு இனியவனின் புன்னகை விரிவடைந்தது.

"அவர் கோபக்கார கூட இருப்பார் போல இருக்கே...!"

"ஆமாம் சுவாமி, எல்லாத்தையும் உரிமையோடு டிமாண்ட் பண்ணி வாங்குறாரு. ரிக்வெஸ்ட் பண்றதும் இல்ல... பயமும் சுத்தமா இல்ல..."

இனியவன் உதடு கடித்து சிரித்தான்.

"அதனால தான் அவரோட எதிரிகளுக்கு அவர் முன்னாடி நின்னு சண்டை போடுற தைரியம் இல்லாமல் போய் இருக்கு..."

கோபத்தில் பல்லை கடித்தான் இனியவன். அவனை அப்படி செய்தது யார் என்று எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்தாக வேண்டும்.

"நீங்க சொல்றது உண்மை தான் சுவாமி"

"கவலைப்படாதீங்க சீக்கிரமே அவருடைய இயற்கை சுபாவத்தை நம்ம திருப்பிக் கொண்டு வந்துடலாம்."

"ரொம்ப நன்றி சுவாமி"

"அவரை எங்கையாவது வெளியில கூட்டிகிட்டு போங்க. வெளி உலகத்தை பார்த்தா அவர் சந்தோஷப்படுவாரு"

"வெளியிலயா?"

"ஆமாம், அவர் வெளியுலகத்தை பார்த்து அவராவே நிறைய விஷயங்கள் கத்துக்கட்டும். ஆனா, அவர் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல நீங்க தயாரா இருக்கணும். புது விஷயத்தை பார்க்கும்போது அவர் நிறைய கேள்விகள் கேட்பார்."

அவர் குரலில் ஒருவித குறும்புத்தனத்தை உணர்ந்தான் இனியவன்.

"சரிங்க சுவாமி"

அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதற்கு பிறகு வேறு எந்த ஒலிப்பதிவும் அதில் இல்லை.

இனியவனின் மனதில் எழுந்த ஒரே கேள்வி எதற்காக ஆழ்வி அவன் குடும்பத்திற்கு தெரியாமல் அவனுக்கு சிகிச்சை அளித்தாள்? என்பது தான். அவன் குடும்பத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா? அவனுக்கு பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து வைப்பதை பற்றி அவனிடம் பேசினான் சித்திரவேல். ஒருவேளை இதற்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? அதை சோதித்து பார்த்து விடுவது என்று தீர்மானித்தான் இனியவன்.

ஆழ்வி...! அவனுக்கு எப்படிப்பட்ட மனைவி வாய்த்திருக்கிறாள்! சுயநலம் என்பதே சிறிதும் இல்லை! அன்று இரவு அந்த கிரில் ரூமில் அவள் அமர்ந்து அழுததை அவன் பார்த்தான். அவனை நினைத்து தான் அவள் அழுதிருக்க வேண்டும். இதற்கு அவன் துரிதமாய் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அவன் மனைவியை அவன் இப்படி அழவிடுவது சரியாகாது. தன் கையில் இருந்த தலையணையை அணைத்துக் கொண்டு உறங்கினான் இனியவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top