46 சுவாமிஜி யார்?

46 சுவாமிஜி யார்?

தன் கைபேசியுடன் தன் அறைக்கு வந்த ஆழ்வி, மீனாவுக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை உடனே ஏற்றாள் மீனா.

"ஆழ்வி..."

"நீ என்னை உனக்கு கால் பண்ண சொன்னதா பார்கவி சொன்னா. என்ன விஷயம் மீனா?"

"அண்ணனுக்கு நினைவு திரும்பிடுச்சே, அவருக்கு உன்னை ஞாபகம் இருக்கா?"

"அவருக்கு எப்படி என்னை ஞாபகம் இருக்கும்? அவர் படிக்கட்டுல இருந்து கீழே விழுந்து தலையில அடிபட்டு தானே அவருக்கு நினைவு திரும்பி வந்தது? அவருக்கு ட்ரீட்மென்ட் முழுசா கொடுத்திருந்தா அவருக்கு என்னை ஞாபகம் இருந்திருக்கும்...!"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆழ்வி"

"இதெல்லாம் தலவிதி. நான் இன்னும் என்னெல்லாம் பார்க்கணுமோ எனக்கு தெரியல" என்றாள் தொண்டை அடைக்க ஆழ்வி.

"அந்த அறிவுகெட்ட பார்கவி என்ன செஞ்சுகிட்டு இருக்கா? அவளால அவர்கிட்ட உண்மையை சொல்ல முடியாதா?"

"யாரும் எதுவும் செய்யக்கூடிய நிலையில இல்ல. இது யாருமே எதிர்பார்க்காதது. நம்ம அவரை ட்ரீட்மெண்ட்டுக்கு ராமநாதபுரம் கூட்டிக்கிட்டு போகலாம்னு தானே நினைச்சுக்கிட்டு இருந்தோம்...? அவரோட மனநிலை பத்தி அவருக்கு எதுவுமே தெரியாது. அவரு பைத்தியமா இருந்தாருன்னு அவர்கிட்ட சொன்னா அவருக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்?"

"இந்த பிரச்சனைக்கு என்ன தான் முடிவு?"

"எனக்கு தெரியல"

"நீ யாருன்னு அவர் கேட்கலையா?"

"நான் வேலை தேடி வந்திருக்கிறதா அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க அவர்கிட்ட சொல்லிட்டாங்க"

"அவர் சாதாரணமா கூட உன்கிட்ட பேசலயா?"

"பேசினாரு. அவரு ரொம்ப நல்லவரு. அவர் எனக்கு அவங்க கம்பெனியில் வேலை கொடுக்க கூட தயாரா இருக்காரு"

"ஓ..."

"நாளைக்கு நான் அவர்கூட ஆஃபீசுக்கு போக போறேன்"

"அட்லீஸ்ட் இந்த ஒரு சந்தோஷமான விஷயமாவது நடக்குதே"

"ம்ம்... நான் அப்புறமா உனக்கு கால் பண்றேன்"

"சரி" என்று பெருமூச்சு விட்டு அழைப்பை துண்டித்தாள் மீனா.

.........

இனியவனின் மனம் ஓய்வில்லாமல் ஆலோசித்துக் கொண்டே இருந்தது. அவனது மனம் சுழன்று கொண்டிருந்தது எல்லாமே சித்திரவேலை சுற்றி தான். ஏனென்றால் கிட்டத்தட்ட ஆழ்வி பற்றி அவனுக்கு இருந்த சந்தேகங்கள் மெல்ல தெளிவடைய துவங்கி விட்டது . குருவுக்கு ஆழ்வியின் மீது அதீத திருப்தி இருப்பதாய் தெரிகிறது. குரு நிச்சயம் தவறான ஒரு பெண்ணை ஆதரிக்க மாட்டான். அதுவும், அவன் விஷயத்தில் நிச்சயம் செய்ய மாட்டான். அதனால், இங்கு ஆழ்வியை விட அதிகம் கவனம் செலுத்த வேண்டியது சித்திரவேலிடம்தான் என்று எண்ணினான் அவன்.

அதே நேரம்,

வழக்கம் போல் முத்துவுக்கு உதவுவதற்காக சமையலறைக்கு சென்றாள் ஆழ்வி.

"அண்ணி தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்களேன்" என்று கெஞ்சினான் முத்து.

"எதுக்காக இப்படி சொல்றீங்க முத்து?"

"உங்களை நான் வேலை வாங்குறதுக்காக இனியவன் அண்ணன் என் மேல பயங்கர கோவத்தில் இருக்காரு. அவர் என்னை எப்படி திட்டினார் தெரியுமா? தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க"

"நான் இந்த குடும்பத்துக்காக வேலை செய்ய நினைக்கிறேன். அதில் என்ன தப்பு இருக்கு?"

"இந்த பாவப்பட்ட வேலைக்காரன்கிட்ட இந்த நியாயத்தை பேசுறதுக்கு பதில் நீங்க உங்க புருஷன்கிட்ட போய் பர்மிஷன் வாங்கிடுங்க அண்ணி"

ஆழ்வி பெருமூச்சு விட்டாள்.

"அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு அண்ணி? இந்த வீட்ல இவ்வளவு வேலைக்காரங்க இருக்காங்க. நீங்க ராணி மாதிரி கால் மேல கால் போட்டுகிட்டு உக்காந்திருங்க, அண்ணி"

ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றாள் ஆழ்வி

அதேநேரம் நித்திலாவின் அறைக்கு சென்றான் இனியவன். நித்திலா கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசி முடிக்கட்டும் என்று கட்டிலில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான் இனியவன்.

"சரிங்க ஐயரே. நாளைக்கு காலையில நாங்க ரெடியா இருப்போம். நான் பூஜைக்கு சர்க்கரை பொங்கல் செஞ்சு வச்சிடுறேன்"

"........."

"சரிங்க ஐயரே" அழைப்பை துண்டித்து விட்டு இனியவனை பார்த்து புன்னகை புரிந்தாள்.

"அக்கா, என் ஃபோன்ல சார்ஜ் இல்ல. நான் உங்க ஃபோன்ல இருந்து ஒரு கால் பண்ணிக்கட்டுமா?" ஆழ்வியிடம் கூறிய அதே சாக்கை அவளிடம் கூறினான்.

"ஓ, தாராளமா பண்ணிக்கோ" என்று தன் கைபேசியை அவனிடம் கொடுத்தாள் நித்திலா.

*சுவாமிஜி* என்று அவளது கைபேசியில் அவன் தட்டச்சு செய்தான். ஆனால் அவளது காண்டாக்ட் லிஸ்டில் சுவாமிஜியின் பெயர் இல்லை. இனியவன் முகத்தை சுருக்கினான். சுவாமிஜியுடன் நேரடி தொடர்பில் இருந்தது ஆழ்வியாக இருந்த போதிலும், அவனது அக்காவிடம் அவரது கைபேசி எண் எப்படி இல்லாமல் போனது?

"சுவாமிகிட்ட பேசிட்டிங்களா, கா?" என்றான் நித்திலாவின் முகபாவத்தை கவனித்தவாறு.

"சுவாமியா? நீ யாரைப் பத்தி பேசுற இன்னு?" என்ற நித்திலாவின் முகத்தில் எந்தவித பதற்றமும் தென்படவில்லை.

"ஓ.. நம்ம ஐயரை தான் சுவாமின்னு சொல்றியா?" என்று சிரித்த நித்திலாவின் சிரிப்பு உண்மையாக தெரிந்தது.

தன் கண்களை மெல்ல இமைத்தான் இனியவன். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"நான் அவர்கிட்ட பேசிட்டேன். நாளைக்கு பூஜைக்கு வேண்டிய எல்லாம் தயாராயிடுச்சு"

ஒன்றும் புரியாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன். அவனே சுவாமிஜியிடம் பேசினான். அவர் தான் அவனது மனநல மருத்துவர் என்பதையும் தெரிந்து கொண்டான். அவர் ஆழ்வியின் பெயரை தெள்ளத் தெளிவாய் உச்சரித்து அவளை அழைத்தார். ஆனால் அவனது அக்காவிற்கோ அவரைப் பற்றி தெரியவில்லை. இங்கு என்ன தான் நடக்கிறது? நித்திலா பாசாங்கு செய்வதாக தெரியவில்லை. அவளது முகம் சலனமற்று இருந்தது. அவனுக்கு தெரியும், அவனது அக்கா உணர்வுகளை மறைப்பதில் அவ்வளவு திறமைசாலி அல்ல. அவன் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த பிறகு, பலமுறை அவள் முகம் பதற்றத்துடன் மாறியதை அவன் கவனித்திருந்தான். ஆனால் இப்பொழுது, அவள் வெகு தெளிவாகவும் பதற்றமின்றியும் இருந்தாள். அது இனியவனை வெகுவாய் குழப்பியது. உண்மையிலேயே சுவாமியை பற்றி அக்காவுக்கு எதுவும் தெரியாதா? அப்படி என்றால் அவரிடம் ஆழ்வி எப்படி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்?

அதே எண்ணத்துடன் வரவேற்பறைக்கு வந்தான். அங்கு ஆழ்வியை காணவில்லை. அவள் எங்கு சென்றாள்? ஒருவேளை சமையலறையில் இருக்கிறாளோ? என்ற எண்ணியபடி சமையலறைக்கு வந்தான். அவள் அங்கும் இல்லை. அவனை பார்த்தவுடன் முத்து பதற்றமானான்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா அண்ணா?" என்றான்.

ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நடந்தான் இனியவன்.

"நல்லவேளை அண்ணியை நான் இன்னைக்கு இங்க வேலை செய்ய விடல. அவங்க இங்க வேலை செய்யறதை அண்ணன் பார்த்திருந்தா, என்னை அப்படியே உயிரோடு முழுங்கி இருப்பார்" என்று முணுமுணுத்தான்.

தன் அறையை நோக்கி சென்ற இனியவனின் கால்கள் வேகத்தை குறைத்தன, ஆழ்வி அவள் அறையை விட்டு வெளியே வருவதை பார்த்தபோது. அவள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் தென்பட்டது. அவன் அவளை பார்த்து புன்னகைக்க, அவளும் தான் புன்னகைத்தாள். ஆனால் அது உண்மையாய் தெரியவில்லை. மறுபடியும் தன் அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். தன் அறையின் கதவை இனியவன் தட்டுவதை பார்த்து எழுந்து நின்றாள்.  அவள் அனுமதி அளிக்கும் முன்பே அவள் அறைக்குள் நுழைந்தான் இனியவன்.

"நீ அப்சட்டா இருக்கியா?"

அவள் ஒன்றும் கூறவில்லை.

"அப்படின்னா நீ அப்சட்டா தான் இருக்க"

அவள் இல்லை என்று தலையசைத்தாள். 

"அப்புறம் ஏன் உன் முகம் இப்படி வாடிப் போய் இருக்கு?"

"அது எப்பவும் அப்படித்தான் இருக்கும்"

"வாய்ப்பே இல்ல... நீ என்னமோ நான் உன் முகத்தை கவனிக்காத மாதிரி இல்ல பேசுற!" என்று கூறிய அவனை திடுக்கிட்டு ஏறிட்டாள் ஆழ்வி.
அவன் கூறியதன் அர்த்தம் என்ன?

"காலைல ரொம்ப ஃபிரஷா இருந்தியே... இப்போ உனக்கு என்ன ஆச்சு?"

"காலையில் நான் பிரிஸ்கா இருந்தேன். ஏன்னா என்னை சேர்ந்தவங்களுக்கு என்னால ஏதோ செய்ய முடியுதுன்னு ஒரு திருப்தி இருந்தது"

"இப்போ உன்னோட திருத்திக்கு என்ன ஆயிடுச்சு?"

"என்னை கிச்சன்ல வேலை செய்ய கூடாதுன்னு முத்து தடுத்துட்டார். நான் வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டாரு" என்றாள் சோகமாய்.

"நிஜமா அவன் அப்படி சொன்னானா?"

அவள் ஆம் என்று சோகமாய் தலையசைத்தாள்.

"நல்ல காலம் நான் ஹாஸ்பிடல்ல இருந்து திரும்பி வந்தததுக்கு பிறகு யாருமே என் பேச்சைக் கேட்கலன்னு எனக்கு கடுப்பா இருந்தது. நீ சொல்றதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றான்.

அவனை அவள் சலிப்புடன் ஏறிட்டு தலை குனிந்து கொண்டாள்.

"உங்களுக்கு நான் வேலை செய்றது பிடிக்கலன்னா அதை நீங்க என்கிட்ட நேரடியா சொல்லி இருக்கலாமே?"

"நான் உன்கிட்ட நேரடியாக சொல்லலயா?"

"ஆனா வேலை செய்றதுல என்ன தப்பு இருக்கு? என்னால வேலை செய்யாம சும்மா இருக்க முடியல"

"இன்னும் ஒரு நாள் தானே? அதுக்கப்புறம் நீ ஆஃபீஸ் போனதுக்கு பிறகு உனக்கு வேலை செய்வெல்லாம் நேரம் இருக்காது. நீ இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் நிம்மதியா இரு"

இந்த வீட்டில் இருக்கும் வரையா? என்று திடுக்கிட்டாள் ஆழ்வி.

"உனக்கு வேலை கிடைச்சுட்டா நீ இந்த வீட்டை விட்டு போயிடுவ தானே?" என்றான்.

அதைக் கேட்ட ஆழ்வி மென்று விழுங்கினாள்.  அப்படி என்றால் அவன் தனக்கு வேலை கொடுப்பது இங்கிருந்து அனுப்புவதற்காக தானா?

"நான் ரொம்ப பேராசைக்காரனா இருக்க விரும்பல ஆழ்வி. அதனால தான் உன்னை சமையல் செய்ய விடாம தடுத்திட்டேன்"

"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல"

"நீ ரொம்ப நல்லா சமைக்கிற. முக்கியமா டீ ரொம்ப நல்லா போடுற. நான் அதை எல்லாம் சாப்பிட்டு பழக்கப்படுத்திக்கிட்டா, நீ இந்த வீட்டை விட்டு போனதுக்கு பிறகு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் இல்ல? அப்புறம் நீ எப்பவும் இங்கயே இருக்கணும்னு எனக்கு நினைக்க தோணும். அது நல்லதில்ல தானே? நீ இங்கேயே இருக்கணும்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? எனக்கு உரிமை இல்லாத ஒருத்திகிட்ட நான் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை வளர்த்துக்க கூடாதுன்னு எனக்கு தெரியாதா?"

ஆழ்விக்கு தொண்டையை அடைப்பது போல் இருந்தது அவன் அவள் அங்கிருந்து செல்வதைப் பற்றி பேசுகிறான். அவளுக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை.

"ஆமாம்... நீ ரொம்ப பெரிய பக்திமானா இருப்ப போல இருக்கே...!"

"பக்திமானா?" என்று திக்கினாள். 

"நீ சாமியாருங்க பேச்சை எல்லாம் விடாம கேப்ப போல இருக்கு...!"

"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல"

"நான் குருவோட ஃபோன்ல இருந்து பேசும்போது உன்னோட கால் லிஸ்டில் யாரோ சுவாமிஜின்னு ஒரு பேரை பார்த்தேன்" என்றான் அவளை ஆழ்ந்து கவனித்தவாறு.

ஆழ்வியின் கண்கள் அகல விரிந்தன. ஒரு திடீர் பதற்றம் அவள் முகத்தை ஆட்கொண்டது. தன் சேலை முந்தானியை இறுக்கமாய் பற்றினாள்.

"ஓ... ஆங்... போன மாசம் அவரோட சொற்பொழிவில் நான் கலந்துக்கிட்டேன். அப்ப தான் அவரோட நம்பர் எனக்கு கிடைச்சிது" என்று தடுமாறினாள்.

கண்களை சுருக்கினான் இனியவன். சொற்பொழிவா? அவனுக்கு சுவாமிஜி யார் என்று நன்றாகவே தெரியும். அவர் ஒரு சாமியார் அல்ல, ஒரு மருத்துவர்! அவளது பதற்ற நிலை அவனது சந்தேகத்தை மேலும் உறுதி அடையச் செய்தது.

"ஆனா அவரோட நம்பரை நீ ஏன் வாங்கி வச்சிருக்க?"

"அப்ப தானே அடுத்த  சொற்பொழிவு எப்ப நடக்கும்னு நான் தெரிஞ்சுக்க முடியும்?"

"அவரே உனக்கு ஃபோன் பண்ணி அவரோட சொற்பொழிவு எப்ப நடக்கும்னு சொல்லுவாரா?"

அவன் ஏன் அப்படி கேட்டான் என்று ஆழ்விக்கு புரியவில்லை.

"இல்ல... உன்னோட இன்கமிங் கால் லிஸ்டில் அவர் பேர் இருந்ததை பார்த்தேன்" என்பதை கேட்டு அவள் திகைத்து நின்றாள். 

"அவர் தெரியாம என் நம்பரை டயல் பண்ணி இருப்பார்னு நினைக்கிறேன்"

"ஓஹோ... அவரோட அடுத்த சொற்பொழிவு எப்ப நடக்கப்போகுது?"

"அடுத்த மாசம் இருக்கும்னு நினைக்கிறேன்" என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.

"பாட்டிக்கும் அக்காவுக்கும் சொற்பொழிவு கேட்கணும்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா? அவங்களுக்கும் உங்க சுவாமிஜியை பத்தி சொல்லு. ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்று கூற அவள் முகத்தில் கிலி படர்ந்தது.

சுவாமிஜியை பற்றி அவர்களிடம் அவள் எப்படி கூற முடியும்? ஒரு வேளை அவர்கள் முன்னிலையில் இனியவன் சுவாமிஜியை பற்றி கூறிவிட்டால் அவளது நிலைமை என்னவாகும்? இனியவனின் கண்கள் அவளது முகத்திலேயே ஆழ்ந்து ஊன்றி இருந்தது

"என்னங்க..."

"ம்ம்ம்?"

"அக்காகிட்டயும் பாட்டிகிட்டையும் சுவாமிஜி பத்தி எதுவும் சொல்லாதீங்க"

"ஆனா ஏன்?"

"அவரோட அடுத்த சொற்பொழிவு எப்ப நடக்கும்னு தெரியாது. அவங்க மனசுல எதுக்காக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தணும்? அதுக்காக தான் சொல்றேன்"

அப்படி என்றால் சுவாமிஜியை பற்றி அவன் குடும்பத்தில் இருப்பவர் யாருக்கும் தெரியாது. ஆனால் ஏன்? அவர்கள் அவன் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அப்படி என்றால் அவர்களுக்கு தெரியாமல் சுவாமிஜின் உதவியுடன் ஆழ்வி அவனுக்கு சிகிச்சை அளித்தாளா? அப்படி இருந்தால் அதை பற்றி அவன் குடும்பத்தாருக்கு தெரிவிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? எதற்காக அவள் அவர்களிடம் அவனது சிகிச்சை பற்றி ஒன்றும் கூறவில்லை? எப்படி அவன் குடும்பத்தில் இருந்த யாரும் அது பற்றி தெரியாமல் இருந்தார்கள்? அவன் குடும்பத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்படிப்பட்ட மடையர்களா? ஒரு வேளை, இதற்குப் பிறகு ஆழ்வி அவனது சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இருந்தாளோ? இருக்கலாம்... அது அது பற்றி அவர்களிடம் அவள் கூறுவதற்கு முன்பாக அவனுக்கு சுயநினைவு திரும்ப வந்திருக்க வேண்டும். அதனால், அவர்களிடம் அவரைப் பற்றி கூறும் எண்ணத்தை அவள் கைவிட்டு இருக்கலாம்.

"அது சரி திடீர்னு எதுக்காக நீ இவ்வளவு பதட்டமாயிட்ட?

ஆழ்வியின் பதற்றம் மேலும் அதிகரித்தது. இனியவன் அவள் பதற்றத்தை கண்டுபிடித்து விட்டாரா?

"இல்லையே... நான் பதட்டமா இல்லையே..." என்று அவனுக்கு எதிர்புறம் திரும்பி நின்றாள்.

இரண்டு எட்டில் அவளை அடைந்த இனியவன், அவளுக்கு பின்னால் நின்று அவள் கூந்தலில் இருந்து வந்த கேச எண்ணெய்யை முகர்ந்தான். பதற்றமாக இருந்த காரணத்தால், அவன் தன் பின்னால் நிற்பதை கவனிக்கவில்லை ஆழ்வி.

"இந்த வாசனை என்னை கொல்லுது" என்றான் மெல்லிய குரலில்.

பின்னால் திரும்பிய ஆழ்வி, அவன் தனக்கு வெகு அருகில் நின்றிருப்பதை பார்த்து திடுக்கிட்டு பின்னோக்கி நகர, தடுமாறி விழ போனாள். அவள் இடையை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்தான் இனியவன். அவளது மருண்ட பார்வையை பார்த்த அவன் முகத்தில் புன்னகை துளிர்விட்டது.

"நீ சினிமாவில நடிக்கலாம்"

அவன் ஏன் அப்படி கூறினான் என்று புரியாமல் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"நொடிக்கு நொடி மாறிக்கிட்டே இருக்கிற உன் முகபாவத்தை பார்க்க கோடி ரூபாய் கொடுத்தால் கூட தகும்" என்று சிரித்தான்.

அவன் ஏற்படுத்திய பதற்றத்தில் அவளுக்கு காய்ச்சல் வருவது போல் இருந்தது. அவளது உடல் சூடு சட்டென்று எகிறியது. அதை உணர்ந்த இனியவன்,

"உனக்கு ஜுரம் அடிக்குதா?" என்றான்

"ஆங்?"

"உன் உடம்பு கொதிக்குது பாரு"

அப்பொழுது தான் அவள் அவனது அணைப்பில் இருப்பதையே அவள் உணர்ந்தாள். அவனை லேசாய் பிடித்து தள்ளிவிட்டு அவனிடமிருந்து பின்னோக்கி நகர்ந்தாள். சிரித்தபடி அவளிடம் இருந்து பின்னால் சென்றான் இனியவன். அவள் சங்கடத்தின் உச்சியில் ஆழ்ந்தாள். தன் புடவை முந்தானியில் முடிச்சிட்டவாறு தலை குனிந்து நின்றாள்.

"நான் உன்கிட்ட என்னமோ கேட்டேன் ஆழ்வி. உனக்கு ஜுரம் அடிக்குதா?"

அவள் இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள். 

"அப்போ எதுக்காக உன் உடம்பு இவ்வளவு சூடுது?"

"இல்ல ஒன்னும் இல்ல"

"நான் தான் சுடுதுன்னு சொல்றேனே" என்று அவள் நெற்றியை தொட்டான்.

அவனை மிரட்ச்சியுடன் பார்த்தாள்.

"இப்ப சூடு இல்லையே..."

"நான்... நான் போகணும்"
என்றபடி அவனை விட்டு பின்னோக்கி நகர்ந்து, ஓடிப்போனாள். அவள் பதற்றத்தை பார்த்து தன் சிரிப்பை அடக்கியபடி நின்றான் இனியவன்.

அவளது அறையை விட்டு செல்லலாம் என்று அவன் நினைத்தபோது, அவன் கண்ணில் பட்டது அவளது கைபேசி. சில நொடி திகைத்த அவன், தன்னை சுதாகரித்துக் கொண்டு, ஆழ்வி அங்கிருந்து சென்று விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், அவள் கைபேசியை எடுத்து தன் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top