43 முரண்பாடு

43 முரண்பாடு

தன் அறைக்கு வந்த ஆழ்வி, கதவை சாத்தி தாழிட்டு விட்டு, அந்த அழைப்பை ஏற்றாள். அவளை பின்தொடர்ந்து வந்த இனியவன், அதை பார்த்து முகம் சுருக்கினான். யாரிடம் பேசுவதற்காக அவள் கதவை சாத்தி தாழிட்டு கொண்டாள்?

"வணக்கம், சுவாமி" என்றாள் ஆழ்வி.

"சாரி, மா. நேத்து நீங்க எனக்கு ஃபோன் பண்ணியிருந்திங்க போல இருக்கு. என்னால அதை அட்டென்ட் பண்ண முடியல. ஒரு முக்கியமான கேசை பார்த்துகிட்டு இருந்தேன். அதனால தான் பேச முடியாம போச்சு. உங்க புருஷனை கூட்டிக்கிட்டு இங்க வர்றதுக்கு நீங்க ரெடியா?"

"நாங்க அங்க வரப்போறதில்ல, சுவாமி" என்றாள் சோகமாக.

"ஏன் மா? ஏதாவது பிரச்சனையா?"

"அவருக்கு பழைய ஞாபகமெல்லாம் திரும்பி வந்துடுச்சு, சுவாமி"

மறுபுறம் அமைதியாகி போனது.

"சுவாமி..."

"அப்படின்னா, அவர் உங்களை மறந்துட்டாரு, இல்லயா?" என்றார் ஏமாற்றத்துடன்.

"ஆமாம் சுவாமி. அவர் என்னை மொத்தமா மறந்துட்டாரு" என்றாள் தொண்டை அடைக்க.

"அவருக்கு எப்படி பழைய ஞாபகம் திரும்பி வந்திச்சு? மறுபடியும் அவருக்கு தலையில் அடிபட்டுச்சா?" என்று சரியாய் யுகித்தார்.

"ஆமாம் சுவாமி, அவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துட்டாரு"

"இது எப்படி நடந்தது. அவர் குணமாயிகிட்டு தானே வந்தார்? அப்படி இருக்கும் போது, எப்படி படிக்கட்டில் இருந்து அவர் தவறி விழுந்திருக்க முடியும்? அவர் கவனக்குறைவா இருந்தாரா?"

"எனக்கு தெரியல சுவாமி. அவர் கீழே விழும் போது தான் நான் பார்த்தேன். கீழே விழுந்து அவர் தலையில் அடிபட்டுடுச்சு"

"அவர் விழுறதை நீங்க பார்த்தீங்களே, உங்களால அவரை காப்பாத்த முடியலயா?"

"நான் அவர்கிட்ட நெருங்குறதுக்கு முன்னாடி, என் கண்ணு முன்னாடியே அவர் கீழே விழுந்துட்டாரு. அடுத்த சில நொடியில அவர் மயக்கமாயிட்டாரு"

யோசனையில் ஆழ்ந்தார் சுவாமி.

"கீழ விழுந்து சில நொடிகளுக்கு பிறகு தான் அவர் மயங்கினாரா?"

"ஆமாம்"

"அவர் கீழ விழுறதை பார்த்தப்போ, உங்களுடைய ரியாக்ஷன் என்ன?"

"அழறதைத் தவிர நான் வேற என்ன செய்ய முடியும்? அவர் பேரை சொல்லி கத்தி அழுதேன். என்னால வேற எதுவும் செய்ய முடியல"

"அப்படின்னா உங்க குரல் அவரோட மூளையில பதிவாகி இருக்கணும்"

"நீங்க சொல்றது எனக்கு புரியல"

"அவர் கீழ விழுந்து, தலையில் அடிபட்டு தானே அவருக்கு ஞாபகம் திரும்ப வந்தது?"

"ஆமாம்"

"தலையில அடிபட்டு சில நொடிகளுக்கு பிறகு தானே அவருக்கு மயக்கம் வந்தது?'

"ஆமாம்"

"தலையில அடிபட்ட உடனேயே அவருக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வந்திருக்கணும். அவர் கீழே விழுந்த பிறகு, நீங்க அவர் பேரை சொல்லி அழுதிருக்கீங்க. அப்படின்னா, நிச்சயம் அவர் முழுசா தன் நினைவை இழக்குறதுக்கு முன்னாடி உங்களுடைய குரலை கேட்டிருக்கணும். அப்படின்னா உங்களோட குரலை அவர் அடையாளம் காண வாய்ப்பிருக்கு"

திகைத்து நின்றாள் ஆழ்வி. அவளது குரலை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது என்று இனியவன் கூறினானே!

"ஆமாம் சுவாமி, என்னோட குரலை ஏற்கனவே கேட்டுருக்கேன்னு அவர் சொன்னாரு"

"அப்படியா? ரொம்ப நல்லது"

"ஆனா, அதுல என்ன பிரயோஜனம் இருக்கு? அவர் தான் என்னை மறந்துட்டாரே???"

"அப்படி சொல்லாதிங்க மா... உங்க குரல் அவருக்கு எப்படிப்பட்ட உணர்வை கொடுத்துதுன்னு நமக்கு தெரியாதே...!"

அவளது குரல் அவனுக்கு என்ன உணர்வை கொடுத்திருக்கும் என்று புரியாததால், அவள் அமைதி காத்தாள்.

"இப்போ அவர் எப்படி இருக்காரு?"

"ரொம்ப நார்மலா இருக்காரு. எல்லார்கிட்டயும் நல்லா பேசுறாரு"

"உங்ககிட்டயும் நல்லபடியா பேசுறாரா?"

"பேசுறாரு"

"உங்க கல்யாணத்தை பத்தி நீங்க அவர்கிட்ட சொல்லலயா?"

"இல்ல, சுவாமி"

"ஏன் சொல்லல?"

"அவர் அதை எப்படி எடுத்துக்குவாருன்னு எனக்கு தெரியல"

"அவர் அதை எப்படி எடுத்துக்குவாருங்குறது இந்த விஷயமே இல்ல. உண்மையை அவர்கிட்ட சொல்றது தான் நல்லது. இதுல கால தாமதம் செய்யாதிங்க. சில விஷயங்கள் எல்லாம் சரியான நேரத்தில் செய்யணும். காலம் கடத்தாம உண்மையை சொல்லிடுங்க மா"

"முயற்சி பண்றேன், சுவாமி"

"உங்களுக்கு கடவுள் பக்கபலமா இருக்கட்டும்" அவர் அழைப்பை துண்டித்தார்.

.......

இரவு

அனைவரும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆழ்வி தான் அனைவருக்கும் பரிமாறினாள். இனியவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பாட்டிக்கு அவள் பரிமாறிய போது,

"எனக்கு ஆச்சரியமா இருக்கு கா..." என்று இனியவன் கூற, அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை பார்த்தார்கள். பாட்டிக்கு பரிமாறிவிட்டு இனியவனுக்கு பரிமாறினாள் ஆழ்வி.

"நான் கோமா ஸ்டேஜுக்கு போறதுக்கு முன்னாடி, என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீங்க தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தீங்க..."

அதைக் கேட்ட ஆழ்வியின் கை அப்படியே நின்றது. அதை கவனித்த இனியவன், உள்ளூர புன்னகைத்துக் கொண்டான்.

"நீங்க இப்போ அதைப்பத்தி பேசவே இல்லயே...! என்ன ஆச்சுக்கா?" என்றான் அவர்களது முகத்தை கவனித்தவாறு.

நித்திலாவை பார்த்தபடி மென்று விழுங்கினாள் ஆழ்வி.

"நீ எதுக்கு பரிமாறுறதை நிறுத்திட்ட, ஆழ்வி?" என்றான் இனியவன்.

ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு அவனுக்கு பரிமாறினாள்.

"அக்கா, பாருங்க, ஆழ்வி கூட உங்க பதிலை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா" என்றான் புன்னகையோடு.

அவனுக்கு பதில் கூற திணறினாள் நித்திலா.

"நீங்க இப்ப தான் கோமாவில் இருந்து வெளியே வந்திருக்கீங்க. உடனே கல்யாணத்தைப் பத்தி பேசி உங்களை ஸ்ட்ரெஸ் பண்ண வேண்டாம்னு நித்தி நினைக்கிறா. அதனால தான் அதை பத்தி உங்ககிட்ட பேசல. இதைப் பத்தி பேசுறது உங்களுக்கு பிடிக்காதுன்னு அவளுக்கு தெரியுமே" என்று நிலைமையை சமாளித்தான் சித்திரவேல்.

"அப்படியா, கா?"

ஆமாம் என்று அவசரமாய் தலையசைத்தாள் நித்திலா.

"நல்லவேளை, நீங்க திருந்தவே மாட்டீங்கன்னு நினச்சேன்" என்று சிரித்தான் இனியவன்.

முகத்தை உம் என்று வைத்துக் கொண்டாள் நித்திலா.

"ஆமாம், ஆழ்வி... நீ இங்க வேலை தேடி தானே வந்த?" என்றான் இனியவன்.

ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"நீ ஏதாவது இன்டர்வியூ அட்டென்ட் பண்ணியா?"

ஆழ்விக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை. இப்பொழுது, அவள் உதவிக்கு வந்தாள் நித்திலா.

"சில கம்பெனிஸ்க்கு அப்ளை பண்ணிட்டு, இன்டர்வியூக்காக காத்துகிட்டு இருக்கா"

"நீங்க என்னைக்கு கா பூஜை பண்ண போறீங்க?"

"நாளன்னைக்கு"

"பூஜை முடிஞ்சதுக்கு பிறகு நான் ஆஃபீசுக்கு போகலாம்னு இருக்கேன். அப்போ நீயும் உன்னோட சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு என் கூட ஆஃபீஸ்க்கு வா, ஆழ்வி" என்றான் இனியவன்.

ஆழ்வி திகைத்து நிற்க, மற்ற பெண்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள், சித்திரவேல் ஒருவனைத் தவிர.

"என்ன ஆச்சு? நான் என்ன சொன்னேன்னு உனக்கு புரியலயா? என்கூட நீயும் ஆஃபீசுக்கு வான்னு சொன்னேன்" என்றான் இனியவன்.

ஆழ்வி தலையசைக்க,

"என்ன புரிஞ்சது?" என்றான்.

"நானும் உங்க கூட ஆஃபீசுக்கு வரணும்"

"எஸ்... உனக்கு எங்க கம்பெனில வொர்க் பண்றதுல எந்த பிரச்சனையும் இல்லயே?"

இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.

"நீ இங்க வேலை தேடி தானே வந்திருக்க?"

"ஆமாம்"

"வீட்டிலேயே இருந்தா எப்படி உனக்கு வேலை கிடைக்கும்? உனக்கு ஏதாவது வேணும்னா அதை அடைய நீ முயற்சி செஞ்சுகிட்டே இருக்கணும்" என்ற வார்த்தைகளை சரியான இடைவெளி விட்டு அழுத்தமாய் கூறினான் இனியவன்.

*அதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன்?* என்று எண்ணினாள் ஆழ்வி.

"புரிஞ்சுதா?"

"புரிஞ்சது"

இனியவன் தன் அறைக்கு செல்ல, பதற்றத்துடன் அமர்ந்தாள் ஆழ்வி.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு, கா" என்று நகம் கடித்தாள்.

"உன் முகத்தை பார்க்கும் போதே தெரியுது" என்று புன்னகைத்தாள் நித்திலா.

ஆழ்வி உதடு சுழித்தாள்.

"பயப்படாத, நீ உன் புருஷன் கூட தான் இருக்க போற. அப்படி இருக்கும் போது எதுக்காக டென்ஷன் ஆகுற? நீ அதுக்கு சந்தோஷம் தானே படணும்?" என்றாள்.

"ஆமாம் ஆழ்வி, இந்த சான்சை நீ யுட்டிலைஸ் பண்ணி, அண்ணன் மனசை கொள்ளையடிச்சி, அவரை ஃப்ளாட் ஆக்கிடு" என்று சிரித்தாள் பார்கவி.

அவன் ஏற்கனவே ஃப்ளாட் ஆகிவிட்டான் என்ற உண்மை தெரியாத ஆழ்வி, வெட்கப்பட்டாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு...

யாரோ தன் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் இனியவன். புன்னகையுடன் நின்றிருந்த சித்திரவேலை பார்த்து தானும் புன்னகை புரிந்தான்.

"மாமா, நீங்களா? உள்ள வாங்க" என்று அவனுக்கு வழி விட்டு ஒதுங்கினான் இனியவன்.

உள்ளே வந்த சித்திரவேல் சோபாவில் அமர்ந்து கொள்ள, அவனுக்கு எதிரில், கட்டிலில் அமர்ந்தான் இனியவன்.

"இப்போ நீங்க எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் மாமா"

"உங்களை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு"

இனியவன் புன்னகைத்தான்.

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு வந்தேன்" என்றான் தயக்கத்துடன்.

இனியவன் ஆர்வமானான். பெண்கள் அவனிடத்தில் சொல்ல தயங்கும் ஏதோ ஒரு விஷயத்தை தன்னிடம் கூறவே சித்திரவேல் வந்திருக்கிறான் என்று எண்ணினான் அவன். அது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. அவனிடம் உண்மையை கூற யாரோ ஒருவர் இருக்கிறாரே!

"நீங்க அவசரப்படுறீங்கன்னு நினைக்கிறேன்" என்றான் சித்திரவேல்.

அந்த வார்த்தைகள் இனிவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவன் சித்திரவேலிடம் எதிர்பார்த்தது இதையல்ல.

"நீங்க எதை பத்தி பேசுறீங்க, மாமா?" என்றான் தன் ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல்.

"ஆழ்வி ஒரு ஃபிரெஷ் கேண்டிடேட். இப்ப தான் கிராஜுவேஷனை முடிச்சிருக்காங்க. அவங்களோட எபிலிட்டி தெரியாம நீங்க எப்படி அவங்களுக்கு வேலை கொடுக்கணும்னு நினைக்கிறீங்க? அவங்க பார்கவி எக்ஸாம்ல பாஸ் பண்ண ஹெல்ப் பண்ணாங்க. அதுக்காக நம்ம கம்பெனில வேலை செய்றதுக்கான குவாலிபிகேஷன் அவங்களுக்கு இருக்குன்னு அர்த்தம் இல்லயே..."

மென்று விழுங்கினான் இனியவன். சித்திரவேலின் பிரச்சனை என்ன? ஆழ்வியை தன்னுடன் அலுவலகத்திற்கு அழைத்தபோது, பெண்களின் கண்களில் மகிழ்ச்சிப் பொறி பறந்ததை அவன் கவனித்தான். ஆனால் சித்திரவேல் எதற்காக அவர்களுக்கு எதிராய் இருக்கிறான்? ஆழ்வி அவனது மனைவி...! மற்றவர்களை பொறுத்தவரை அவனுக்கு அந்த உண்மை தெரியாது. அப்படி என்றால், அவளுக்கு அவன் வேலை கொடுத்தால் அதற்காக அவர்கள் சந்தோஷம் தானே பட வேண்டும்? அவனுடன் ஆழ்வி அலுவலகம் வந்தால், அவனுடன் இருக்கும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கும். அவளிடம் அவன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கும். அவனுக்கு அவளை பிடிக்கவும் செய்யும். அவன் ஆழ்வியை அலுவலகம் அழைத்து செல்லும் முடிவை கூறும் போது, அவர்களது முகங்கள் மாறுவதை பார்க்க விரும்பினான் இனியவன். அதில் அவன் திருப்தியும் அடைந்தான். ஆனால், சித்திரவேலுக்கு அதில் மகிழ்ச்சி இல்லை போல் தெரிகிறது. ஆனால் ஏன்?

எவ்வளவு யோசித்த போதும், சித்திரவேலை பற்றிய ஒரு முடிவுக்கு அவனால் வர முடியவில்லை. சித்திரவேலின் மீது அவனுக்கு அதிருப்தி ஏற்பட்டது. தன் முடிவுக்கு எதிராய் அவன் பேசியிருக்கக் கூடாது. ஏனென்றால் ஆழ்வி அவனது மனைவி. இனியவன் உஷார் ஆனான். ஏதோ தவறாய் தெரிகிறது. ஆனால் தன் ஏமாற்றத்தை சித்திரவேலிடம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.

"என்னை தப்பா நினைக்காதீங்க. எனக்கு தோணினதை நான் சொன்னேன்"

"என்கிட்ட எதை பத்தி வேணும்னாலும் பேச உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நானும் கூட அதைப்பத்தி தான் நினைச்சுகிட்டு இருக்கேன். நான் அவசரப்பட்டிருக்க கூடாது. ஆனா கவலைப்படாதீங்க. நான் அவ வேலை செய்றதை கொஞ்ச நாள் கவனிச்சிட்டு, எனக்கு திருப்தி இல்லனா நான் அவளை வேலையை விட்டு தூக்க தயங்க மாட்டேன்"

சித்திரவேலின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி குறியீடை கவனித்தான் இனியவன். இவருக்கு என்ன பிரச்சனை? ஒருவேளை பெண்கள் வேலைக்கு செல்வதில் இவருக்கு விருப்பம் இல்லையோ? இந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? என்று எண்ணிய இனியவனை, சித்திரவேலின் அடுத்த வார்த்தைகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றன.

"நீங்க சீக்கிரமே லைஃப்ல செட்டில் ஆகணும். நீங்க மட்டும் சரின்னு சொன்னா, நல்ல கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பணக்கார வீட்டு பொண்ணா பார்த்து, நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"

அவனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன்.

"உங்களுக்கு தான் தெரியுமே, உங்களை மாப்பிள்ளையாக்கிக்க எவ்வளவு பெரிய பணக்காரங்க எல்லாம் போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு..." என்று புன்னகைத்தான் சித்திரவேல். ஆனால் அவனது புன்னகை அவன் கண்களை சென்று அடையவில்லை.

"எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, நான் நிச்சயம் உங்ககிட்ட சொல்றேன் மாமா. எனக்கும் உங்களை விட்டா வேற யார் இருக்கா?" என்று தானும் புன்னகைக்க முயன்றான் இனிய இனியவன்.

"ரொம்ப காலம் கடத்தாதீங்க. உங்களுக்கு ஏற்கனவே இருபத்தி ஒம்போது வயசு ஆயிடுச்சு"

கல்யாணம் பற்றி தனது எண்ணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள சித்திரவேல் முயல்கிறானோ என்று எண்ணினான் இனியவன்.

"நீங்க சொல்றதும் சரி தான் மாமா. ஆனா, ஒரு பணக்கார வீட்டு பொண்ணு எனக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுப்பாள்னு நினைக்கிறீங்களா?"

"அதுல என்ன சந்தேகம்? அவள் கௌரவத்துல உங்களுக்கு சரிசமமா இருந்தா தான் உங்களுக்குள்ள எந்த ஒரு முரண்பாடும் ஏற்படாது. சாதாரண பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு தயவு செய்து நினைக்காதீங்க. அப்படிப்பட்ட பொண்ணு உங்களுக்கு சூட்டாக மாட்டா. மாடனான பொண்ணு தான் உங்க கிரீடத்துல வைரமா ஜொலிப்பா. ஒருவேளை, நித்திலாவோ பாட்டியோ உங்களுக்கு சாதாரண குடும்ப பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கலாம். ஆனா அவங்க சொல்றதை கேட்டு உங்க வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க. நீங்க இனியவன் பாலகுமாரன்...! ஒரு ராஜா, ராணியை தான் கல்யாணம் பண்ணிக்கணும். சாதாரண பொண்ணை இல்ல..." என்றான் சித்திரவேல்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை இனியவனுக்கு. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாகி போனது. சித்திரவேலுக்கு அவனுக்கு நடந்த கல்யாணம் பிடிக்கவில்லை... இல்லாவிட்டால், அவனுக்கு ஆழ்வியை பிடிக்கவில்லை...!

ஒருவேளை, அவன் மற்றவரை கணிப்பதில் அவசரம் காட்டுகிறானோ? எதற்காக அவன் சொல்லின் செல்வனை நம்ப வேண்டும்? அவன் கூட பொய் கூறி இருக்கலாமே...! அவனுக்கு யாரை நம்புவது என்று புரியவில்லை, சித்திரவேலையா, அல்லது சொல்லின் செல்வனையா?

ஆழ்வி அவனது மனைவியாக இருந்தால், சித்திரவேல் எதற்காக அவன் பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்? நிச்சயம் ஆழ்வி பணக்கார வீட்டு பெண் அல்ல. அப்படி இருந்திருந்தால், எதற்காக அவளது அண்ணன் பணத்திற்காக இங்கு வந்திருக்க போகிறான்? இதைப் பற்றி யாரிடமும் கேட்காமல் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினான் இனியவன். ஏனென்றால், அவனை சுற்றி நிறைய முரண்பாடுகள் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றி யாரிடம் கேட்பது?

அப்பொழுது அவன் மனதில் ஒரு பொறி தட்டியது. ஆழ்வியின் கைபேசி...! அவனது கைவிரல் பட்டு அவளது கைபேசி திறந்து கொண்டதே! அவள் அவனது மனைவி இல்லை என்றால் அது எப்படி சாத்தியப்படும்? அவன் அவளது கணவனாக இருந்த போதிலும், ஒரு பைத்தியக்காரனை தன் கைபேசியை கையாள அவள் எப்படி அனுமதித்தாள்? உண்மையிலேயே அவளது கைபேசியில் அவனது கைரேகை பதிக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது அது தற்செயலாய் நிகழ்ந்ததா? சோதித்து பார்த்து விட வேண்டியது தான்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top