42 கேள்விக் கணைகள்

42 கேள்விக் கணைகள்

எலுமிச்சையும் உப்பும் கலந்த தண்ணீரோடு இனியவனின் அறையை நோக்கி சென்றாள் ஆழ்வி. அது சித்திரவேலுக்கு எரிச்சலை தந்தது.

"நித்தி, நம்ம ஆழ்வியை இனியாவுக்காக இதையெல்லாம் செய்யவிடாம தடுக்கணும்னு நினைக்கிறேன்" என்றான் தீவிரமான சிந்தனையில் இருப்பவனை போல.

"ஏன்?" என்றாள் முகத்தை சுருக்கி.

"அதெல்லாம் அவருக்கு பிடிக்கலன்னா என்ன செய்றது? அவரு அவங்ககிட்ட சத்தம் போட்டா என்ன செய்றது? ஏற்கனவே அவருக்கு தலையில அடிபட்டு இருக்கு. அவர் மனநிலை எந்த நிலைமையில இருக்குன்னு நமக்கு நிச்சயமா தெரியல. கொஞ்ச நாளைக்காவது நம்ம அவரை டிஸ்டர்ப் பண்ண கூடாது"

"அவனோட மைண்ட் கண்டிஷன் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும், அவன் ஆழ்வியை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்"

"நீ அவரோட சம்மதம் இல்லாம ஆழ்வியை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சேங்குறதை மறந்துடாத. அவருக்கு அவங்களை பிடிக்கலன்னா என்ன செய்வ?"

"நான் அப்படி நினைக்கல. அவன் ஆழ்விகிட்ட  எவ்வளவு பிரியமா பேசினான்னு நீங்க பாக்கலயா?"

"அது அவங்க பார்கவிக்கு ஹெல்ப் பண்ணாங்க அப்படிங்கிறதுக்காக..."

"அதையே தான் நானும் சொல்றேன், அவனோட ஒய்ஃப், அவனோட மனநோயிலிருந்து அவனை வெளியில கொண்டுவர பாடுபட்டாள்னு தெரிஞ்சா, அவனுக்கு நிச்சயம் அவளை பிடிக்கும்" என்று கூறிவிட்டு அந்த இடம் விட்டு சென்றாள் நித்திலா, மேற்கொண்டு அதைப்பற்றி எந்த விவாதமும் செய்ய விரும்பாமல். அது சித்திரவேலுக்கு ஏமாற்றத்தை தந்தது.

...........

தன் அறையின் கட்டிலில் படுத்துக்கொண்டு ஆழ்விக்காக காத்திருந்தான் இனியவன். அவனுக்காக எதையாவது தயார் செய்து எடுத்துக்கொண்டு அவளே அவனது அறைக்கு வருவாளா, அல்லது முத்துவிடம் கொடுத்து அனுப்புவாளா என்று அவனுக்கு நிச்சயமாய் தெரியவில்லை. நீண்ட பெருமூச்சு இழுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

பிரச்சனை என்பது பிரச்சனையே இல்லை! அந்த பிரச்சனையை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது தான் பிரச்சனையே...! ஒருபுறம், அவனது மனநோய் அவனது வாழ்க்கையை மிக மோசமாக பாதித்திருக்கிறது. அதே நேரம், அந்த மனநோய் தான் ஈடு இணையற்ற ஒரு மனைவியை அவன் வாழ்க்கைக்கு இட்டு வந்திருக்கிறது. அவனது வாழ்க்கையில் விதி தான் எப்படி ஒரு ஆட்டம் ஆடி இருக்கிறது...! அவன் ஒரு பெண்ணை சந்தித்தான். அவளை சந்தித்த அடுத்த சில நாட்களில் அவனுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அந்த மனநோயிலிருந்து அவன் குணமடைந்த போது, அவன் சந்தித்த அதே பெண் அவனுக்கு முன்னால், அவன் மனைவியை நிற்கிறாள்...! பாவம் அவள், அவனால் தான் அவள் பல கொடுமைகளை சந்தித்திருக்கிறாள். எப்படித்தான் அப்படி ஒரு காலகட்டத்தை அவள் கடந்து வந்தாளோ! அவளுக்கு தோளோடு தோள் நிற்க வேண்டும் என்பது தான் அவனுக்கும் ஆசை. ஆனால் இப்பொழுது அவன் அதை செய்யும் நிலையில் இல்லை. ஏனென்றால் அவனது வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது என்பதை தெரிந்து கொண்டே தீர வேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான். அவனுக்கு நிகழ்ந்த விபத்துக்கும், அவன் குணமடைந்ததற்கும் இடைப்பட்ட காலத்தில், அவனது வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்? மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேறி விட்ட பிறகு, அவனுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்காமல், எதற்காக அவன் குடும்பத்தார் அவனுக்கு  ஆழ்வியை திருமணம் செய்து வைத்தார்கள்? திருமணமும் செய்து வைத்துவிட்டு அதை அவனிடம் இருந்து மறைத்தும் வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்?

அவனது எண்ணச் சங்கிலி அறுபட்டது, ஆழ்வி அவனது அறையின் கதவை தட்டிய போது. அவளுக்காக காத்திருந்த இனியவன்,

"கம் இன்"  என்றான்.

உள்ளே நுழைந்த ஆழ்வி, அவன் கட்டிலில் படுத்திருப்பதை கண்டாள்.  அவளை பார்த்தவுடன் அவன் எழுந்து அமராதது அவளுக்கு கவலையை தந்தது. அவனுக்கு அவ்வளவு தலை சுற்றலா இருக்கிறது? தன் கையில் இருந்த டம்ளரை அவனை நோக்கி நீட்டினாள்.

"இது என்ன?" என்றான் முகத்தில் எந்த மாறுபாடும் இன்றி, அவள் கையில் இருந்த டம்ளரைப் பெற்றுக் கொள்ளாமல், படுத்த நிலையில் இருந்தபடியே.

"லெமன் சால்ட் வாட்டர்"

"எதுக்கு?"

"லோ பிபிக்கு"

"அதைக் கூட நீ தான் கொண்டு வருவியா?"

"அக்காவுக்கு இதைப் பத்தி தெரியுமான்னு தெரியல.  அதனால தான் நான் கொண்டு வந்தேன்"

"எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்" என்றான் வேண்டுமென்றே, அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக.

"தயவுசெஞ்சி இதை குடிச்சிட்டு தூங்குங்களேன். உங்களுக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும்."

அவளை ஆழமான பார்வை பார்த்த அவன்,

"என்னை யாராவது எதுக்காகவாவது ஃபோர்ஸ் பண்ணா எனக்கு பிடிக்காது" என்றான் அவளது முகத்தை படித்தவாறு.

தன் கையில் இருந்த டம்ளாரை அழுத்தி பிடித்தபடி மென்று விழுங்கியபடி நின்றாள் ஆழ்வி.

"என்ன?"

"உங்களை ஃபோர்ஸ் பண்றதுக்காக தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க. ப்ளீஸ் இதை குடிச்சிடுங்க" என்று அந்த டம்ளரை அவனை நோக்கி நீட்டினாள்.

சில நொடிகள் அவளை ஊடுருவும் பார்வை பார்த்த அவன்,

"நீ என்னை ரொம்ப டிமாண்ட் பண்றேன்னு உனக்கு தோணலயா?" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.

"அதுல ஒரு நியாயம் இருக்க தானே செய்யுது?" என்று அவனுக்கு பதில் கூறாமல் மறு கேள்வி கேட்டாள் ஆழ்வி.

"நீ சொல்றதை நான் ஏன் கேக்கணும்? நீ என்ன எனக்கு பொண்டாட்டியா?"

அவன் கேட்ட கேள்வி, சந்தேகம் இல்லாமல் ஆழ்வியை அதிர்ச்சி அடையச் செய்தது. வேறெங்கோ பார்த்தபடி சங்கடத்துடன் நின்றாள். இப்பொழுது அவள் என்ன பதில் கூறுவது? ஆம், நான் உங்கள் பொண்டாட்டி தான் என்றா? அப்படி கூறிவிட்டால் என்ன ஆகும்? இனியவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியும்.

"எதுக்காக இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்றாள்.

"ஏன்னா நீ பிடிவாதக்கார பொண்டாட்டி மாதிரி நடந்துக்கிற"

"உங்களுக்கு ஜூஸ் கொண்டு வர்றது அவ்வளவு பெரிய குற்றமா?" என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

அதைக் கேட்டு லேசாய் சிரித்த அவன்,

"நிச்சயமா இல்ல... ஆனா என்னை கட்டாயப்படுத்துறது தான்..."

"இந்த ஜூஸ் உங்க நல்லதுக்காகத்தான் உங்களை கஷ்டப்படுத்த இல்ல. அப்படி இருக்கும் போது என்ன பிரச்சனை?"

"உன் மேல திணிக்கப்படுற எல்லாத்தையும் நீ ஏத்துக்குவியா?" என்றான் அவளை கவனமாய் கவனித்தவாறு.

"திணிக்கப்படுறதா?"

"இப்படி யோசிச்சு பாரு, உங்க அம்மா, அப்பா இல்ல, அண்ணன் அக்கா யாராவது உனக்கு விருப்பம் இல்லாத ஒருத்தரை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்னு சொன்னா, நீ என்ன செய்வ? அவங்களுக்காக கல்யாணம் பண்ணிக்குவியா?"

அவனை விசித்திரமாய் பார்த்த ஆழ்வி,

"இந்த ஜூசும் கல்யாணமும் ஒண்ணா?" என்றாள்.

"அது அந்த நபரையும் அவங்களோட ஆட்டிட்யூடையும் பொருத்தது"

அவனுடைய கேள்விகளுக்கு பதில் கூற முடியும் என்றுஅவளுக்கு தோன்றவில்லை. அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது, தன் கையை நீட்டி அவளது வழியை மறித்து நின்ற இனியவன்,

"அவ்வளவு தானா?" என்றான்.

அவனை ஒரு சமதள பார்வை பார்த்தாள் ஆழ்வி.

"நீ அவ்வளவு சீக்கிரமா பேக்ஆஃப் ஆக மாட்டேன்னு நினச்சேன்"

"நான் உங்களை ஃபோர்ஸ் பண்றேன்னு நீங்க நினைக்கும் போது, அதை செய்ய வேண்டாம்னு நினைக்கிறேன்"

"நீ அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவியா?"

"என்னால ஆன மட்டும் முயற்சி பண்ணேன். அதுக்கு மேல எதுவும் நடக்கலன்னா, நான் என்ன செய்றது? அதே நேரம் அது அந்த நபரையும் அவரோட ஆட்டிட்யூட்டையும் பொறுத்தது" அவன் கூறிய அதே வார்த்தைகளை திரும்ப கூறினாள் .

அவள் கண்களை சந்தித்தவாறு அவள் கையில் இருந்த டம்ளரை எடுத்து அந்த ஜூசை மெல்ல பருகினான், அவளை புன்னகைக்கச் செய்து. சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து அவளை உச்சி முதல் பாதம் வரை கவனித்தவாறு மெல்ல அந்த சாறை பருகினான். அவனது மனைவி...!

அவனது கண்கள் தன் மேல் உலவுவதை உணர்ந்தே இருந்தாள் ஆழ்வி. அவளது உடலில் ஆயிரம் வாட் மின்சாரம் பாய்வது போல் இருந்தது. அவளது கண்ணம் பரபரவென சிகப்பேறி போனது. அதை கண்டு இனியவன் மலைத்து நின்றான். ஒரே ஒரு பார்வையின் மூலம் ஒரு பெண்ணின் கன்னங்கள் சிகப்பாக முடியுமா? அவள் தன் பதற்றத்தை மறைக்க முயல்வதை கவனித்தான். புடவைக்கு முன்னுரிமை அளிக்கும் இப்படி ஒரு மென்மையான மனைவி தனக்கு அமைவாள் என்பதை அவன் கனவிலும் கூட நினைத்ததில்லை. எனக்கு வாய்க்கப் போகும் மனைவி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் அவன் இருந்தான். ஆனால் அவனே எதிர்பாராத விதத்தில் அவனுக்கு அழகான, புத்திசாலியான, பண்பாட்டை மதிக்கும் மனைவி கிடைத்திருக்கிறாள். அந்த மாமல்லபுரம் மனிதன் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. *எனக்கு அம்மா வேணாம். நீ தான் வேணும்* இப்பொழுது அவனுக்கு, யாருமே வேண்டாம், அவள் மட்டும் போதும் என்று தோன்றியது!

அவனது கண்கள் மெல்ல அவளது கழுத்தை நோக்கி தாழ்ந்தன. அவளது தாலி எங்கே போனது? அவள் அதை கழட்டி வைத்து விட்டாளோ? அவனது கண்கள் கூர்மையாயின. அவளது இரவிக்கையின் உள்ளே, லேசான மேடு கீழ் நோக்கி செல்வதை கவனித்தான் அவன். அது அவள் தாலி தான். அதை தன் இரவிக்கைக்குள் அவள் மறைத்து வைத்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்து போனது.

"நீ என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிற... ஐ மீன், எங்களை நல்லா கவனிச்சுக்கிற... இல்ல?"

அதற்கு அவள் பதிலளிக்கவில்லை. அதற்கு என்ன கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை.

"நீ எப்பவுமே இப்படித்தானா?"

"என்னால முடிஞ்சதை மத்தவங்களுக்கு செய்றேன்"

"நைஸ்" என்று அந்த பழச்சாறை பருகினான்.

அதை அவன் மடமடவென குடிக்காமல் மெல்ல மெல்ல பருகியது அவளுக்கு வியப்பளித்தது.

"நீ என்னோட ரூம்ல தங்கி இருந்த தானே?" என்று அவள் எதிர்பாராத கேள்வியை வீசினான் இனியவன்.

அதிர்ச்சியில் விழி விரித்தவள், மென்று விழுங்கினாள். அந்த கேள்விக்கு அவள் தயாராகாத நிலையில், அவளுக்கு எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை.

"இல்ல... நான்... வந்து..." என்று தன் சேலை முந்தாணியை இறுக பற்றினாள். 

"ரிலாக்ஸ், கெஸ்ட் ரூம்ல டிரைனேஜ் ப்ளாக் இருந்ததுன்னு முத்து சொன்னான். அதனால தானே அக்கா உன்னை என் ரூம்ல தங்க வச்சாங்க?"

நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆழ்வி. அதை பார்த்த இனியவன் உள்ளூர புன்னகைத்துக் கொண்டான்.

"ஆனா, பார்கவி ரூம்ல தங்காம நீ எதுக்காக என்னோட ரூம்ல தனியா தங்கணும்னு நினைச்ச?" என்று மீண்டும் ஒரு கேள்வியை அவள் மீது தூக்கி போட்டான்.

"பார்கவி தனியா இருக்க விரும்புவாள்னு தான்..."

"ஆனா, அவ உன்னை அவ ரூம்ல வந்து தங்க சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டாளே... நீயும் அவ ரூம்ல தங்குன தானே?"

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டான் என்பது அப்போது தான் அவளுக்கு தெரிந்தது. அவள் மாட்டிக் கொண்டு விட்டாளா?

"நான் அவ கூட தங்குறதை அவ விரும்புவாள்னு அன்னைக்கு எனக்கு தெரியாது" என்று சமாளித்தாள்.

மெல்ல தலையசைத்த அவன்,

"உன்னோட ஹேர் ஆயில் ஸ்மெல் ரொம்ப நல்லா இருக்கு" என்றான்.

அவளது கை அணிச்சையாய் அவள் தலையை தொட்டது.

"என்னோட பில்லோவில் இன்னும் கூட உன்னோட ஹேர் ஆயில் ஸ்மெல் இருக்கு"

பதற்றத்துடன் அவனை ஏறிட்ட ஆழ்வி, அந்த தலையணையை எடுப்பதற்காக தன் கையை நீட்டினாள். அவள் அதை தொடுவதற்கு முன், அவள் கையை பற்றினான் இனியவன். அவன் கையையும் பிறகு அவனையும் அதிர்ச்சியோடு பார்த்தாள் ஆழ்வி. 

"என்ன செய்யற?" என்றான், அவள் செய்ய முனைந்தது என்ன என்பதை  யூகித்து விட்ட போதிலும். 

"அந்த பில்லோ கவரை  ரிமுவ் பண்ணிடலாம்னு..."

"நான் உன்னை அதை செய்ய
சொன்னேனா?" 

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

"அந்த வாசனை நல்லா இருந்துதுன்னு தானே சொன்னேன்? அது நல்லா இருக்குன்னு சொன்னா, எனக்கு அது பிடிச்சிருக்குன்னு அர்த்தம். எனக்கு நல்ல ஃபீலிங்ஸை கொடுக்கிறதை நீ ரிமூவ் பண்ணிடுவியா?"

அவள் அவசரமாய் இல்லை என்று தலையசைத்தாள். அவனது இயல்பான புன்னகை அவள் வயிற்றை கலக்கியது.

"எதுக்காக அன்னைக்கு அந்த கிரில் கேட் ரூமில் உட்கார்ந்திருந்த?"

அவனது கேள்விக்கணைகளை எதிர் கொள்ள முடியாமல் திணறிப் போனாள் ஆழ்வி. அவனுக்கு என்ன ஆனது? எதற்காக இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான்?

"எனக்கு தூக்கம் வரல. அதனால தான் ஜிம்மை பத்தி யோசிச்சுகிட்டு அங்க வந்தேன்"

"அந்த ரூம் ஜிம்முக்கு சூட் ஆகும்னு நினைக்கிறியா? அதை பார்க்க ஜெயில் மாதிரி இல்ல? ஏனோ தெரியல அந்த ரூம் எனக்கு ஒரு நல்ல ஃபீலிங்கை கொடுக்க மாட்டேங்குது. அங்க போனாலே என் மனசுக்கு ஏதோ கலவரமா ஆயிடுது. எனக்கு அந்த ரூமை பிடிக்கல" என்றான் ஓரக்கண்ணால் அவளை கவனித்தவாறு.

அவன் கூறியது நிச்சயம் ஆழ்வியை கலவரப்படுத்தியது. உண்மையிலேயே அவனுக்கு அப்படியெல்லாம் தோன்றுகிறதா? அவள் முகத்துக்கு முன்னால் விரல்களை சொடுக்கி,

"என்ன யோசிக்கிற?" என்றான்.

அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,

"உன்னோட குரலை முன்னாடியே கேட்ட மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு" என்றான்.

அப்படியா? என்பது போல் அவள் அவனைப் பார்க்க, அவன் உதடுகளை அழுத்தி ஆம் என்பது போல்  தலையசைத்தான்.

"பை தி வே, நீ எங்க இருந்து வந்திருக்க, ஆழ்வி? உன்னோட சொந்த ஊர் எது?" என்று கேட்டுவிட்டு மீதமிருந்த கடைசி வாய் பழச்சாரை பருகி முடித்தான், அவள் முகத்தை கவனித்தபடி.

இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் கூறப் போகிறாள்? எனது வீடு இங்கிருந்து நாலே கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லட்சுமி நகரில் இருக்கிறது என்றா? அப்படி என்றால், நீ இங்கு எதற்காக தங்கி இருக்கிறாய் என்று அவன் கேட்க மாட்டானா? கலக்கத்துடன் நின்றாள் ஆழ்வி.

அப்பொழுது அவள் கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அவள் முகத்தில் அசாதாரண பாவம் தோன்றியது. அவள் பதற்றப்படுகிறாளா அல்லது மகிழ்கிறாளா என்று அவனுக்கு புரியவில்லை. இனியவன் தன் கண்களை சுருக்கினான், யாருடைய அழைப்பு அது? என்பது போல. அந்த அழைப்பு இனியவனின் சித்த மருத்துவரிடம் இருந்து வந்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ" என்றபடி தன் கைபேசியை பார்த்தபடி அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள் ஆழ்வி.

அவள் செல்வதையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன். எதற்காக அந்த அழைப்பை பார்த்தவுடன் அப்படி ஒரு மாற்றம் அவளிடம் ஏற்பட்டது? இவர்கள் அவனிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் மறைத்து வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. அவன் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம் ஏராளமாக இருக்கும் போலிருக்கிறது என்று எண்ணினான் இனியவன்.

தொடரும்...






Bạn đang đọc truyện trên: AzTruyen.Top