41 உண்மை
41 உண்மை
பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்டு அதிர்ந்து நின்றான் இனியவன். குடிகாரன் பொய் கூற மாட்டான் என்று அவனுக்கு தெரியும் அது அவனுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. இந்த குடிகாரனிடமிருந்து அவனுக்கு ஏதாவது உண்மை தெரிய போகிறதா?
இங்கும் அங்கும் பார்த்த சொல்லின் செல்வன்,
"அவ வீட்ல இல்ல போல இருக்கே" என்றான்.
"யாரைப் பத்தி பேசுற?" என்றான் இனியவன்.
"வேற யாரு? உன் பொண்டாட்டியை பத்தி தான்... அவ என்னை இங்க பார்த்தா, என் மேல கோவத்துல பாய்வா. ஆனா, அவளுக்கு என் மேல ரொம்ப பிரியம்"
அவனது மனைவிக்கு இவன் மீது பிரியமா? யாரிவன்? அவனது மனைவி யார்? ஒன்றும் கூறாமல், அவனைப் பேச விட்டு அவனையே பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன்.
"எங்க அம்மா எனக்கு துட்டே கொடுக்க மாட்டேங்குது. அப்போ நாங்க என்ன தான் செய்றது? அதனால தான் அவகிட்ட பணம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன். எங்க அவ?" என்று இனியவனை தாண்டி கொண்டு உள்ளே சென்றான்.
"நீ யாரைப் பத்தி பேசிகிட்டு இருக்க?" என்றான் இனியவன் மீண்டும்.
"ஆமாம், நீ இப்படித்தானே கேப்ப...! ஒரு பைத்தியக்காரன்கிட்ட நான் வேற என்ன எதிர்பார்க்க முடியும்?"
பைத்தியக்காரனா? இவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? என்று தன் முஷ்டியை மடக்கினான் இனியவன். ஆனால் அவன் உதிர்த்த அடுத்த வார்த்தைகள் அவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
"நீ அவளை கெடுத்ததால தான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்னு மறந்துடாத. இல்லன்னா உனக்கு நாங்க ஏன் அவளை கல்யாணம் பண்ணி வெச்சி இருக்க போறோம்?" என்றான் அந்த முட்டாள் குடிகாரன், ஒரு பைத்தியத்திடம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற அறிவு கூட இல்லாமல்.
"கெடுத்தேனா?" என்றான் தாங்க முடியாத அதிர்ச்சியுடன்.
"பின்ன என்ன? இல்லன்னா உன்னை மாதிரி ஒரு பைத்தியத்துக்கு எதுக்கு என் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க போறேன்?"
"தங்கச்சியா?"
"ஆமாம்"
அவனது சட்டை காலரை பற்றி, அவன் விழிகளை விரியச் செய்தான் இனியவன்.
"யாருடா உன் தங்கச்சி?"
சொல்லின் செல்வனின் முகத்தில் பயம் படர்ந்தது.
"சொல்லுடா" என்று இனியவனின் பாணியில் கர்ஜனை செய்தான் அவன்.
"ஆ... ழ்... வி..."
அவனது சட்டையை பற்றி இருந்த அவனது கரங்கள் தளர்ந்தது.
"ஆழ்வியா? ஆழ்வி என்னோட வைஃபா?"
"ஆமாம், எதுக்காக நீ இப்படி எல்லாம் நடந்துக்கிற? நான் என் ஃபிரண்டு சொன்ன வார்த்தையை நம்பி இருக்கக் கூடாது"
"உன் ஃப்ரெண்ட் என்ன சொன்னான்?"
"என் தங்கச்சியை யார் கூடவோ கோவில்ல பாத்ததா சொன்னான். நீ தான் குணமாயிட்டேன்னு நினைச்சேன்"
"உன் ஃபிரண்டு யாரோ ஒருத்தன்னு தானே சொன்னான்? அது நானா இருப்பேன்னு நீ எப்படி நெனச்ச?"
"என் தங்கச்சி அவ புருஷன் கூட போகாம வேற யாரு கூட கோவிலுக்கு போவா?"
"உன்னோட ஃபிரண்டுக்கு உன் தங்கச்சியோட புருஷன் யாருன்னு தெரியாதா?"
"உன் குடும்பத்தார் உன்னோட மனநோயை பத்தி யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைச்சாங்க. அதனால கல்யாணத்துக்கு வேற யாரையும் கூப்பிட அவங்க அனுமதி தரல"
"கல்யாணம் எங்க நடந்தது?"
"இங்க தான்... உங்க வீட்ல..."
"நான் பைத்தியமா இருந்திருந்தா, எதுக்காக உன் தங்கச்சி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா? எல்லாத்தையும் ஒழுங்கா எனக்கு சொல்லு. இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்" என்றான் பல்லை கடித்த படி.
"அவ உன் தங்கச்சிகிட்ட புக்கு வாங்குறதுக்காக உங்க வீட்டுக்கு வந்தப்போ, நீ அவளை ரேப் பண்ணிட்ட. அதனால தான் உங்க கல்யாணம் நடந்தது. நான் அவகிட்ட இருந்து பணம் வாங்கிட்டு போலாம்னு தான் வந்தேன். வேற எதுக்காகவும் இல்ல. என்னை விட்டுடு. நான் மறுபடியும் இங்க வரமாட்டேன்" என்று தடுமாறினான்.
"நான் அவளை கெடுத்தேனா?"
"உனக்கு எதுவுமே தெரியாத மாதிரி எதுக்காக என்னை திரும்ப திரும்ப கேள்வி கேட்கிற?"
பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு,
"இதை வச்சுக்கோ. இப்போ உண்மையை சொல்லு" என்றான்.
"ஆழ்வி உங்க வீட்டுக்கு வந்தப்போ, நீ உன் தங்கச்சி பார்கவியை ரேப் பண்ண ட்ரை பண்ண. அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்த ஆழ்வி நினைச்சா. அவ பார்கவியை காப்பாத்திட்டா. ஆனா தன்னை அவளால காப்பாத்திக்க முடியல. அந்த கிரில் போட்ட ரூம்ல உங்கிட்ட அவ மாட்டிக்கிட்டா"
ஓங்கி துடித்த இதயத்துடிப்புடன் அவனை பார்த்துக் கொண்டு நின்றான் தூயவன். அவன் தன் தங்கையை தொட முயன்றானா?
"நீ சொல்றதெல்லாம் உண்மையா? என்ற போது அவன் தொண்டையை அடைத்தது.
"சத்தியம்... வேணும்னா உங்க குடும்பத்துல யாரை வேணும்னாலும் கேட்டு பார்த்துக்கோ"
அவனது சட்டையின் காலரை விட்டான் இனியவன்.
"ஒரு பைத்தியத்தை கல்யாணம் பண்ணிக்க அவ எப்படி சம்மதிச்சா?" என்று மென்று விழுங்கினான்.
"ஆரம்பத்துல ஆழ்வி உன்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்ல. நானும் எங்க அம்மாவும் தான் அவளை உன்னை கல்யாணம் பண்ணிக்க வச்சோம். அப்படி செஞ்சதுக்காக அவ எங்ககிட்ட ரொம்ப கோவமா இருக்கா. அவ எங்களை மன்னிச்சிடுவான்னு நினைக்கிறேன்..."
தன் தாடையை இறுக்கிய இனியவன்,
"எதுக்காக ஒரு மெண்டலை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவளை ஃபோர்ஸ் பண்ணிங்க?"
"உங்க அக்கா எங்களுக்கு பணம் கொடுத்தாங்க"
"அக்க்க்கா...." என்று பல்லை கடித்தான் இனியவன்.
"கல்யாணத்துக்கு அப்புறம் நீ உங்க தங்கச்சியை பார்க்கவே இல்லயா?"
"இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் அவ எங்களை பார்க்கவே இல்ல. உனக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்காக அவ இன்னும் எங்க மேல கோவமா தான் இருக்கா போல இருக்கு"
இயலாமையுடன் கண்களை மூடினான் இனியவன்.
"உங்க வீடு எங்க இருக்கு?"
"லட்சுமி நகர்"
"உன்னோட ஃபோன் நம்பரை எனக்கு கொடு. நானா உன்னை இங்க கூப்பிடுற வரைக்கும் நீ இந்த பக்கம் தலை வச்சி படுக்க கூடாது. புரிஞ்சுதா?"
"சரி"
தனது கைபேசி எண்ணை அவனுக்கு கொடுத்து விட்டு, அங்கிருந்து ஓட்டமாய் ஓடினான், ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத சொல்லின் செல்வன்.
சிறிய காலகட்டத்திற்குள் தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்பதை நம்ப முடியாமல் நின்றான் இனியவன். அவனது குடும்பத்தார் கூறியது போல் அவன் கோமாவில் இல்லை. அவன் பைத்தியமாய் இருந்திருக்கிறான். தன் தங்கையையே பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். அப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கும்? பார்கவி உயிரை விட்டிருப்பாள். இனியவனின் கண்கள் கலங்கின. தொப்பென்று சோபாவில் அமர்ந்தான். எப்படிப்பட்ட காலகட்டத்தை அவன் கடந்து வந்திருக்கிறான்...! இதை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை. இப்பொழுது அவன் என்ன செய்வது?
அவன் மூளைக்குள் ஏதோ ஒன்று உறைத்தது, ஆழ்வி...! ஆழ்வி அவன் மனைவி. மனைவி மட்டுமல்ல, பார்கவியை காப்பாற்றியதன் மூலம் மிகப்பெரிய பழியிலிருந்து அவனைக் காத்திருக்கிறாள். எவ்வளவு பெரிய தியாகம் அவளுடையது...! பார்கவியை அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவள் தன்னையே தியாகம் செய்திருக்கிறாள். ஆனால், அவளது அண்ணனோ ஆரம்பத்தில் அவள் அவனை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறினானே! யார் தான் ஒரு பைத்தியத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்! அவள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது உண்மை. அப்படி இருக்கும் போது, இப்பொழுது எப்படி அவள் சகஜமாய் இருக்கிறாள்? இந்த வாழ்க்கைக்கு அவள் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, அவன் குடும்பத்தினருக்காக அவனை அவள் ஏற்றிருக்க வேண்டும். உண்மையிலேயே அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறதா? அதை தெரிந்து கொள்ள நினைத்தான் தூயவன்.
கண்களை மூடினான் இனியவன். அப்படி என்றால் அந்த மாமல்லபுரம் மனிதன் பொய் உரைக்கவில்லை. அவன் ஆழ்வியுடன் மாமல்லபுரம் சென்றிருக்கிறான். அங்கு அவன் தனக்கு அம்மா வேண்டாம் ஆழ்வி தான் வேண்டும் என்று கூறியிருக்கிறான். அவன் அவ்வாறு கூறினான் என்றால், உண்மையிலேயே ஆழ்வி நல்ல மனைவியாக தான் இருக்க வேண்டும். அவள் அவனுக்கு வேண்டியதை எல்லாம் முழு மனதோடு செய்தாளா? அல்லது பரிதாபத்தின் பேரில் செய்தாளா? ஒரு பைத்தியக்காரனை திருமணம் செய்து கொள்ளும் தைரியம் அவளுக்கு எப்படி வந்தது? பார்க்க பதுமை போல் இருந்தாலும் அவள் உண்மையிலேயே தைரியசாலியாக இருக்க வேண்டும். ஒருவேளை திருமணத்திற்கு பிறகு அவள் அவனை காதலிக்க தொடங்கி இருக்கலாம். அதனால் தான் எப்பொழுதும் அவனை அப்படி ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் அவனுக்கு வலிக்கும் போதெல்லாம் அவள் தவித்து போகிறாள். அதனால் தான் அன்று இரவு அந்த கிரில் கேட் அறையில் அவள் அழுது கொண்டிருந்திருக்கிறாள்.
ஒரு பைத்தியக்காரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் அவனது அக்காவிற்கு ஏன் வந்தது? யாராவது ஒரு பைத்தியத்திற்கு திருமணம் செய்து வைக்க நினைப்பார்களா? எதற்காக அவனது அக்கா அப்படி ஒரு பாவத்தை செய்தார்? எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கும் துணிவு அவருக்கு வந்தது? அதிர்ஷ்டவசமாய் அவன் குணமடைந்து விட்டான் தான்... ஒருவேளை அவன் எப்பொழுதும் குணம் அடையாமலேயே போயிருந்தால் என்னவாகி இருக்கும்? அவனது அக்காவிற்கு என்னவானது?
அவனை ஆழ்விக்கு திருமணம் செய்து வைத்து விட்டு எதற்காக அவன் திருமணத்தைப் பற்றி அவனிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள்? என்ன காரணத்திற்காக? அவன் பைத்தியக்காரனா இருந்தான் என்பது கசப்பான உண்மை தான். அதனால் என்ன? என்றாவது ஒருநாள் அவன் அதை தெரிந்து கொண்டு தானே ஆக வேண்டும்? உண்மையை எவ்வளவு நாளைக்குத்தான் மறைத்து விட முடியும்? எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் திருமணம் ஆனவன். ஆழ்வி அவனது மனைவி. அது தான் முக்கியம்.
இப்பொழுது அவன் என்ன செய்யப் போகிறான்? அவர்கள் அனைவரையும் நிற்க வைத்து கேள்வி கேட்க போகிறானா? இல்லை. அவர்கள் எவ்வளவு நாளைக்கு இந்த உண்மையை மறைக்கிறார்கள் என்று பார்க்கலாம். அவர்கள் அதை மறைப்பதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவனும் சும்மா இருக்க போவதில்லை. அவர்களிடம் இருந்து உண்மையை எப்படி பெறுவது என்று அவனுக்கு தெரியும். அதை அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும்.
அப்பொழுது கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. சோபாவில் சாய்ந்துகொண்டு அவர்களை கவனிக்கலானான். பார்கவியை பார்த்த போது அவனுக்கு குற்ற உணர்ச்சி பிடுங்கி தின்றது. அவன் ஆழ்வியை நேரடியாக பார்க்கா விட்டாலும், அவனது ஒட்டுமொத்த கவனமும் அவள் மீதே குவிந்திருந்தது.
"அண்ணா, நான் பாஸ் ஆயிட்டேன்" என்று சந்தோஷமாய் கத்திய படி அவனை நோக்கி ஓடி வந்தாள் பார்கவி.
"கங்கிராஜுலேஷன்ஸ்" மென்மையாய் புன்னகைத்தான்.
"தேங்க் காட். நான் பாஸ் பண்ணிட்டேன்" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"உன் ஃபிரண்டு உன்னை காப்பாத்திட்டா... இல்ல?" என்று இரட்டை அர்த்தத்தில் கூறி ஆழ்வியை நோக்கினான்.
ஆமாம் என்று தலையசைத்தாள் பார்கவி.
"ஐ அம் சாரி. நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்" என்று பகிரங்கமாய் அவளிடம் மன்னிப்பு கேட்டான், அவன் செய்த தவறுக்கு அவன் பொறுப்பில்லை என்றாலும். அவனுடைய இருப்பையே அவனால் புரிந்து கொள்ள முடியாத போது, அவனை குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
அவனை அனைவரும் குழப்பத்தோடு பார்த்தார்கள்.
"ஐ மீன், நான் உன் கூட இருந்திருந்தா, உன் எக்ஸாமுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பேன் இல்ல?" என்று சமாளித்தான்.
"நீ அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம். உன்னோட சார்பா அதை ஆழ்வி செஞ்சிட்டா" என்று ஆழ்வியை பார்த்து புன்னகைத்தாள் பார்கவி.
"ஆமாம், நான் செய்ய வேண்டியதை அவ செஞ்சுட்டா" என்று அவளை ஏறிட்டான் இனியவன். அவனிடம் ஒரு மாற்றத்தைக் கண்ட ஆழ்வி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நாங்க எதிர்பார்த்த மாதிரி, ஆழ்வி தான் ஃபர்ஸ்ட் ரேங்க்" என்றாள் பார்கவி.
"கங்கிராஜுலேஷன்ஸ் ஆழ்வி" என்றான் இனியவன்.
"தேங்க்ஸ்" என்றாள் புன்னகையுடன்.
"உனக்கு என்ன வேணும்? சொல்லு" என்று பார்கவியை கேட்டான் இனியவன்.
"என் கதையை விடு ண்ணா, நம்ம ஆழ்விக்கு ஏதாவது கொடுக்கணும். என்ன சொல்ற?" என்றாள் ஆர்வத்துடன்.
இனியவன் ஆழ்வியை பார்க்க, அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
"என்னை ஏதாவது கேளு ஆழ்வி" என்றான் இனியவன்.
"எனக்கு எதுவும் வேண்டாம். பார்கவி என்னோட ஃப்ரெண்ட். நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணினேன். அதுக்காக எனக்கு நீங்க எதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்ல" என்றாள் பணிவாக.
"ஒருத்தரோட வாழ்க்கையை காப்பாத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல, ஆழ்வி" என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.
"ஆமாம், ஆழ்வி..."
"கவி, ப்ளீஸ், நான் செஞ்சதை ரொம்ப மிகைப்படுத்தி பேசாதே. நான் என் கடமையைத்தானே செஞ்சேன்?" என்று அவளை கண்டித்தாள் ஆழ்வி.
"எல்லாத்தையும் உன்னுடைய கடமையா தான் நினைப்பியா?" என்றான் இனியவன்.
அவன் எந்த அர்த்தத்தில் கேட்கிறான் என்று புரியாத ஆழ்வி, பதில் அளிக்காமல் புன்னகை புரிந்தாள்.
"இன்னு, நீ எதுக்காக இங்க உக்காந்து இருக்க?" என்றாள் நித்திலா.
"தல சுத்துற மாதிரி இருந்தது கா"
ஆழ்வியின் முகம் சட்டென்று மாறியதை கவனித்தான் இனியவன். அவள் பதற்றம் அடைந்தாள். அவன் எதிர்பார்த்தபடியே அனைவரும் அவளையே பார்த்தார்கள்.
"நீ ஏதாவது சாப்பிட்டியா?" என்றார் பாட்டி
"சாப்பிட்டேன்"
"உன்னோட பிபி லோவாகி இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றாள் நித்திலா.
அவர்கள் அவனைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம், சமையலறையை நோக்கி ஓடினாள் ஆழ்வி. சோபாவை விட்டு எழுந்து நின்ற இனியவன்.
"நான் என் ரூமுக்கு போறேன்" என்றான்.
"நான் உங்க கூட வரட்டுமா?" என்றான் சித்திரவேல்.
"வேணாம் மாமா. நான் போறேன்" என்று தன் அறையை நோக்கி நடந்தான்.
எலுமிச்சை சாறில் உப்பு கலந்து கொண்டு வந்த ஆழ்வி, அவன் அங்கு இல்லாததை கண்டு,
"அவர் எங்க?" என்றாள்.
"அண்ணன் ரூமுக்கு போயிட்டாரு" என்றாள் பார்கவி.
தான் கொண்டு வந்த எலுமிச்சை சாறுடன் அவன் அறைக்குச் சென்றாள் ஆழ்வி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top