40 அக்காவும் தம்பியும்
40 அக்காவின் தம்பியும்
புன்னகையுடன் இனியவனின் அறைக்குள் நுழைந்தாள் நித்திலா.
"எப்படி இருக்க, இன்னு?"
"எனக்கு என்ன ஆச்சு?"
அவன் அருகில் அமர்ந்தாள் நித்திலா. அப்பொழுது அவள் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
"ஆமாங்க அய்யா, நாளன்னைக்கு சாயங்காலம்..."
"....."
"பூஜைக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நான் செஞ்சிடுறேன்"
"....."
"இந்த பூஜை என் தம்பியோட நல்ல எதிர்காலத்திற்காக"
தன் விழிகளை சுழற்றினான் இனியவன்.
"ரொம்ப நன்றிங்க, ஐயா"
அழைப்பை துண்டித்து விட்டு இனியவனை பார்த்து புன்னகை புரிந்தாள் நித்திலா, ஏதோ பெரிதாய் சாதித்து விட்டது போல!!!
"உங்க பூஜை வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா?"
"ஆமாம், நீ வெளியே போக ஆரம்பிச்சுட்ட. நீ உன்னோட ஃஸ்பீடை இன்க்ரீஸ் பண்றதுக்கு முன்னாடி இந்த பூஜையை முடிக்கணும்னு நினைக்கிறேன்"
"நடத்துங்க"
"எதுக்காக ரூமுக்குள்ளேயே உட்கார்ந்துகிட்டு இருக்க? வெளிய வந்து எங்க கூட இரேன்..."
"டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வரேன், கா"
"சரி சீக்கிரமா வா. நாங்க உனக்காக டீயோட காத்துகிட்டு இருக்கோம்"
"உங்களுக்கு என்ன ஆச்சுக்கா? வழக்கமா நான்னு சொல்ற நீங்க, இப்பெல்லாம் நாங்கன்னு சொல்றீங்க?"
தடுமாறிய நித்திலா, தன்னை சமாளித்துக் கொண்டு,
"உன்னை நாங்க ரொம்ப மிஸ் பண்ணோம். எல்லாரும் உன் கூட இருக்கணும்னு விருப்பப்படறாங்க. அதனால தான்..." என்று அங்கிருந்து சென்றாள்.
அவன் உடை மாற்றிக் கொண்டு வந்த போது, ஆழ்வி அனைவருக்கும் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தாள். அவனிடமும் ஒரு குவளையை நீட்டினாள்.
"தேங்க்ஸ்..." அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.
தானும் ஒரு குவளையை எடுத்துக் கொண்டு அவனுக்கு எதிரில் அமர்ந்தாள் ஆழ்வி. அவளை கவனித்தபடி தேனீரை பருகினான் இனியவன். அவனை கள்ள பார்வை பார்த்தபடி இருந்தாள் ஆழ்வி. அவளை கவனிக்காதவன் போல் இருக்கவே முடியவில்லை இனியவனால்.
*இவள் மட்டும் அவனுக்கு மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்...! அழகாய், அமைதியாய், புத்திசாலியாய், திறமைசாலியாய், இப்படி ஒரு மனைவியை அடையும் அளவிற்கு அவனுக்கு கொடுப்பினை இருக்கிறதா? என்று எண்ணினான் இனியவன். தன் மனைவி யார் என்று தெரியாமல் இருப்பது சித்திரவதை. அதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ கண்டுபிடித்தாக வேண்டும் என்று எண்ணினான்.
தேனீரை பருகிய இனியவன்,
"குட் டீ" என்றான் தன் கையில் இருந்த குவளையை ஆழ்வியை நோக்கி லேசாய் உயர்த்தியபடி.
அவள் புன்னகைத்தாள்.
"ஆழ்வி ரொம்ப நல்லா டீ போடுவாங்க. நாங்க எல்லாரும் அவங்க டீக்கு ஃபேன் ஆயிட்டோம்" என்றாள் நித்திலா.
"அக்கா, உங்களுக்கு ஆழ்வி போடுற டீ பிடிச்சிருந்தா, அதை எப்படி போடணும்னு அவகிட்ட கத்துக்கணும். அதை விட்டுட்டு, அவளை வேலை வாங்க கூடாது" என்று தன் தோள்களை குலுக்கினான் இனியவன்.
"நாங்க யாருமே அவங்ககிட்ட கேட்கிறதே இல்ல. அவங்க தான் அதை விருப்பத்தோட செய்றாங்க" என்றாள் நித்திலா.
இனியவன் ஆழ்வியை பார்க்க, அவள் ஆம் என்று தலையசைத்தாள். அவன் இடவலமாய் தலையசைத்த படி தேனீரை பருகினான். பார்கவி தேநீரை பருகாமல் பதற்றத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த அவன்,
"ஓய்... உனக்கு என்ன ஆச்சு? உனக்கு டீ பிடிக்கலயா?" என்றான்.
அவனுக்கு பதில் கூறாமல், அந்த தேநீரை அவசரமாய் பருகினாள் பார்கவி. அதை பார்த்து பின்வாங்கினான் இனியவன். நித்திலாவும், பாட்டியும் வாய்விட்டு சிரித்தார்கள். தன் சிரிப்பை உதடு கடித்து கட்டுப்படுத்திக்கொண்டாள் ஆழ்வி.
"ஏதாவது பிரச்சனையா?" என்றான்.
"நாளைக்கு பார்கவி ரொம்ப பெரிய பிரச்சனையை ஃபேஸ் பண்ண போறா" என்றாள் நித்திலா.
"என்ன பிரச்சனை?"
பார்கவி தன் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள, அனைவரும் சிரித்தார்கள்.
"என்ன பிரச்சனைன்னு யாராவது சொல்றீங்களா?" என்றான் பொறுமை இழந்த இனியவன்.
"அவளுக்கு நாளைக்கு ரிசல்ட் வருது..."
அதை கேட்ட இனியவன் தன் வாயை பொத்திக் கொண்டான், தன் வாயில் இருந்த தேநீரை துப்பி விடாமல் இருக்க. அதை விழுங்கிவிட்டு வாய்விட்டு சிரித்தான்.
"ஓ... நீ டேஞ்சர்ல இருக்கியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் பார்கவி.
"நீ எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதி இருக்கேன்னு தானே சொன்னே?"
"சொன்னேன் தான்... ஆனா, நாளைக்கு ரிசல்ட் ஆச்சே... எனக்கு இப்பவே வயித்தை கலக்குது"
புன்னகையுடன் அமர்ந்திருந்த ஆழ்வியை பார்த்த தூயவன்,
"உனக்கு பயமா இல்லயா ஆழ்வி?" என்றான்.
தன் பெயரை அவன் கூற கேட்ட ஆழ்வி திடுக்கிட்டாள்,
"அவ ஏன் பயப்பட போறா? அவ தான் யுனிவர்சிட்டி ரேங்க்கை எதிர்பார்த்துகிட்டு இருக்காளே..." என்றாள் பார்கவி சலிப்புடன்.
"தட்ஸ் கிரேட்... நீ ஆழ்வியை பார்த்து காப்பி அடிச்சேன்னு சொன்ன, அப்புறம் எதுக்கு பயப்படுற? நீ யுனிவர்சிட்டி செகண்ட் ரேங்க் வந்துடுவ..." கிண்டல் செய்தான்.
"வந்துடுவேன் தான், ஆனா ஒரே ஒரு பேப்பரை நினைக்கும் போது எனக்கு பயமா இருக்கு"
"ஏன்? அந்த பேப்பரை நீ காப்பி அடிக்கலயா?"
"அதை என்னால சரியா செய்ய முடியல. ஏன்னா, அன்னைக்கு வந்த எக்ஸாம்மினர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்"
"போன போகுது, விடு... மறுபடியும் எழுதிக்கலாம்"
"ஆனா ஆழ்வி என் கூட இருக்க மாட்டாளே..."
"ஐயோ பாவம்...! இதுக்காகத்தான் நம்ம ஃபிரண்டை எல்லாம் கூட நம்மளை மாதிரியே பிடிக்கணும்" என்று சிரித்தான் இனியவன்.
அவன் சிரிப்பதை ரசித்துக் கொண்டிருந்த ஆழ்வி,
"கவலைப்படாத. நீ நிச்சயம் பாஸ் பண்ணிடுவ" என்றாள்.
"நெஜமாவா?"
"ஆமாம். நிச்சயம் பாஸ்மார்க் வந்துடும்"
"நான் மட்டும் பாஸ் பண்ணிட்டா..."
அவள் பேச்சை தடுத்து,
"என்ன செய்வ? உன் ஃபிரண்டுக்கு நீ என்ன கொடுப்ப?" என்றான் இனியவன்.
"நீயே சொல்லு... நான் அவளுக்கு என்ன கொடுக்கலாம்?"
சிரித்தபடி ஆழ்வியை பார்த்த இனியவன்,
"உன் ஃபிரண்டையே கேளு. அவளுக்கு என்ன வேணுமோ அதை கொடு" என்றான்.
"அவ என்கிட்ட எதுவுமே கேட்க மாட்டா" என்றாள் பார்கவி, சட்டென்ற முக மாற்றத்துடன்.
யோசனையோடு அவளைப் பார்த்தான் இனியவன்.
"நான் ஏற்கனவே அவளுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்" என்று மென்று விழுங்கினாள், ஆழ்வியை சங்கடத்திற்கு உள்ளாக்கி.
"அதுக்கு என்ன அர்த்தம்?"
"யாருமே செய்ய முடியாததை அவள் எனக்காக செஞ்சிருக்கா"
தன் தலையை லேசாய் அசைத்தபடி அமைதியாய் இரு என்பது போல் அவளுக்கு ஜாடை காட்டினாள் ஆழ்வி. அதை கவனித்த இனியவன்,
"என்ன செஞ்சா?" என்றான்.
"ஒன்னும் இல்ல. நான் அவ கூட இங்க தங்கணும்னு விருப்பப்பட்டா. அவ அதைப்பத்தி தான் பேசுறா" என்று சோபாவை விட்டு எழுந்து நின்ற ஆழ்வி,
"கவி, வா, உன் ரூமுக்கு போகலாம்" என்றாள்.
பார்கவி பெருமூச்சு விட, அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ஆழ்வி. அவர்களை சந்தேகத்தோடு பார்த்தான் இனியவன்.
"எதுக்காக திடீர்னு கவி எமோஷனல் ஆயிட்டா?"
பாட்டியும் நித்திலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டர்கள்.
"அவங்களுக்குள்ள ஏதோ சீக்ரெட் இருக்குன்னு நினைக்கிறேன்"
தேனீர் குவளையை மேஜை மீது வைத்துவிட்டு அந்த இடம் விட்டு அகன்றான் இனியவன், பார்கவி கூறியதை பற்றி யோசித்தபடி. எதற்காக பார்கவி ஆழ்விக்கு கடமைப்பட்டிருக்கிறாள்? ஆழ்வியின் துணையோடு பார்கவி அவளது பரிட்சையை எழுதி இருக்கிறாள். அவளுக்கு ஏதாவது கொடுக்கவும் நினைக்கிறாள். ஆனால், ஆழ்வி அவளுக்காக செய்த ஏதோ ஒன்றைப் பற்றி பேசிய போது அவள் உணர்ச்சிவசப்பட்டாள். பரிட்சையில் தேருவதற்கு உதவி செய்ததை விட, அப்படி என்ன பெரிய உதவியை அவள் செய்திருக்கப் போகிறாள்? எதற்காக இவர்கள் அனைவரும் அவனை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் வைத்திருக்கிறார்கள்? அவனது சந்தேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமானது, அவர்கள் வாழ்க்கையில் ஆழ்வியின் கதாபாத்திரம் மிகப்பெரியதாய் இருக்கும் என்பது தான் அது.
மறுநாள் காலை
பார்கவி பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்த இனியவன் வியப்படைந்தான். சிரித்தபடி வரவேற்பறையில் அமர்ந்தான். சமையலறையில் இருந்து வந்த நறுமணம் அவன் மனதை மயக்கியது. தான் தயார் செய்த கமகமக்கும் சர்க்கரை பொங்கல் கிண்ணத்துடன் சமையல் அறையை விட்டு வெளியே வந்தாள் ஆழ்வி. இனியவனை பார்த்த அவள், சில நொடி நின்று, பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அவளது மென்மையான தோற்றத்தை பார்த்த அவனும் மயங்கித்தான் போனான்.
"அந்த கிண்ணத்துல என்ன இருக்கு?"
"பூஜைக்காக சர்க்கரைப் பொங்கல் செஞ்சேன்"
"வாவ்... எனக்கு சர்க்கரை பொங்கல் பிடிக்கும்"
"தெரியும்..."
இனியவன் கண்களை சுருக்க, தன் நாக்கை கடித்துக் கொண்டாள் ஆழ்வி.
"கவி சொன்னா..."
ஆழ்ந்த பார்வையுடன் தலையசைத்தான் இனியவன். அந்த சர்க்கரைப் பொங்கல் கிண்ணத்தை பார்கவியிடம் கொடுத்தாள் ஆழ்வி. பூஜையை முடித்துக்கொண்டு அவர்கள் வெளியே வந்தார்கள்.
"அக்கா... பாட்டி... சீக்கிரமா வாங்க" என்று கத்தினாள் பார்கவி.
"வரோம் வரோம்..."
"எதுக்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க?" என்றான் இனியவன்.
"இன்னைக்கு எங்க ரிசல்ட்"
"அதுக்கு?"
"நாங்க கோவிலுக்கு போறோம்"
"ஓஹோ... உன்னோட பேப்பரை எல்லாம் கரெக்ஷன் பண்ணது கடவுளா?"
"இன்னைக்கு என்னை கிண்டல் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காத. எனக்கு சுத்தமா மூடே இல்ல"
"அப்படின்னா நீ டிபன் கூட சாப்பிட போறது இல்லயா...?"
"சாப்பிட்டுடுட்டு தான் கோவிலுக்கு போவேன்"
"அது தான் நல்ல ஐடியா. யாருக்கு தெரியும்? ஒரு வேலை ரிசல்ட் வந்ததுக்கு பிறகு நீ அழுதுகிட்டு இருக்கும் போது சாப்பிட மூடு இருக்குமோ இருக்காதோ...!"
"அண்ணா நெகட்டிவா பேசாத. நான் ஏற்கனவே பயந்து போயிருக்கேன்"
"இந்த நேரத்துக்கு, எல்லாமே செட்டில் ஆகி இருக்கும். எதுவும் உன்னோட ரிசல்ட்டை மாத்த போறதில்ல. அதனால உன் ரிசல்ட் நெகட்டிவா வந்தா, என்னை குறை சொல்லாத"
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, உணவு மேசையில் சென்று அமர்ந்தாள் பார்கவி.
அப்பொழுது குருபரன் வருவதை கண்டான் இனியவன். அவனுக்கு புதிய கைபேசியும் சிம்கார்டும் வாங்கி வந்து அவனிடம் கொடுத்தான் குருபரன்.
"நீ கேட்டது..."
"தேங்க்ஸ் குரு"
"எனி டைம்..."
"வந்து எங்க கூட பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடு..."
"எனக்கு முதல்ல டீ வேணும்" என்றபடி சமையலறையை நோக்கி சென்றான் குருபரன்.
அமைதியாய் நின்றான் இனியவன். ஏனோ அவனுக்கு எதுவும் தவறாக படவில்லை.
"ஹாய் ஆழ்வி..."
"ஹாய் அண்ணா"
"எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன்"
"நிஜமாவே நல்லா இருக்கீங்களா?"
அமைதியாய் நின்றாள் ஆழ்வி.
"நேத்து பார்கவி இனியாவுக்கு க்ளூ கொடுக்க நினச்சப்போ, எதுக்காக அவளை நீங்க தடுத்து நிறுத்துனீங்க?"
"அவ எதுக்காக எனக்கு கடமைப்பட்டவள்னு காரணத்தை சொல்ல நினைச்சா. இனியவர் அவகிட்ட எவ்வளவு சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தாரு தெரியுமா! அவர் ஒரு டிபிக்கல் பிரதர். அவர் கவியை என்ன செஞ்சாருன்னு தெரிஞ்சா, அவர் எவ்வளவு வருத்தப்படுவாரு...? அவர் உடஞ்சு போயிடுவாரு அண்ணா"
"நமக்கு வேற வழி இல்ல, ஆழ்வி"
"இருக்கு... நம்ம உண்மையை எடிட் பண்ணி சொல்லலாம். முக்கியமான விஷயத்தை மட்டும் விட்டுட்டு, உண்மையை சொல்ல முடியும். எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல. அவரை காயப்படுத்த எனக்கு மனசு வரல"
"என்ன நடக்கப்போகுதோ" என்று பெருமூச்சு விட்டான் குருபரன். அவள் கூறியதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், அவளிடம் அதைப் பற்றி விவாதம் செய்ய அவன் விரும்பவில்லை.
"சித்திரவேலை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?"
"இல்ல ஆழ்வி. என்னோட ஆளுங்க அவனை ஃபாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க. ஆனா அவன் யாரையும் மீட் பண்றதும் இல்ல, யார்கிட்டயும் பேசுறதும் இல்ல. அவன் மனசுல என்ன இருக்குன்னு புரியல. ஆனா கவலைப்படாதிங்க உண்மை என்னன்னு நம்ம சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்"
"டாக்டர் விஷயம் என்ன ஆச்சு?"
"அவன் இன்னும் போலீஸ் கஸ்டடியில் தான் இருக்கான். ஆனா அவனோட ஒய்ஃப் ஆள் கொணர்வு மனுவை கோர்ட்டில் தாக்கல் பண்ணியிருக்கா. இதுவும் நிச்சயம் சித்திரவேலோட வேலையா தான் இருக்கணும்"
"அப்படின்னா இப்போ என்ன நடக்கும்"
"கமிஷனர் டைரக்டா நமக்காக இதுல இன்வால்வ் ஆனதனால, நான் அவனை ரிலீஸ் பண்ண சொல்லிட்டேன். ஆனா யார்கிட்டயும் உண்மை சொல்லக்கூடாதுன்னு வார்ன் பண்ணி விட சொல்லி இருக்கேன்"
"நல்ல காரியம் பண்ணிங்க. இல்லன்னா இனியவருக்கு அதை பத்தி தெரிஞ்சிடும்"
"அதனால தான் நான் ரிலீஸ் பண்ண சொன்னேன்"
"நீங்க இங்கிருந்து போங்க. இல்லன்னா அவருக்கு நம்ம மேல சந்தேகம் வரும்" என்ற அவள், அவனிடம் ஒரு தேனீர் குவளையை கொடுத்தாள். இனியவன் உணவு மேசையில் அமர்ந்து தன் புதிய கைபேசியை ஆக்டிவேட் செய்து கொண்டிருந்தான். ஆழ்வியும் அங்கு வந்தாள். பார்கவி அனைவருக்கும் சர்க்கரை பொங்கலை பரிமாறினாள்.
"கவலைப்படாத கவி, உன்னோட எக்ஸாம் பேப்பரில் இருந்த ஆன்சர்ஸ்க்காக உன்னோட கடவுள் உன்னை பாஸ் பண்ணலனாலும், இந்த பொங்கலுக்காக நிச்சயமா உன்னை பாஸ் பண்ணிடுவாரு" என்று ஒரு தேக்கரண்டி பொங்கலை தன் வாயில் அடைத்தான் இனியவன்.
குருபரனிடம் ஒரு கிண்ணத்தை கொடுத்தாள் பார்கவி.
"வாவ்... சக்கரை பொங்கலா? ஆழ்வி தான் ப்ரிப்பேர் பண்ணாங்களா?" என்றபடி அவளிடம் இருந்து அதை பெற்றான் குருபரன்.
ஆம் என்று தலையசைத்தாள் பார்கவி.
"ஆழ்வி, நீங்க கலக்கிட்டீங்க" என்றான் குருபரன்.
ஆழ்வியையும், அவள் சமைத்த சர்க்கரைப் பொங்கலை ஆவலுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த குருபரணையும் பார்த்தான் இனியவன்.
"எப்போ ரிசல்ட்?"
"பதினோரு மணிக்கு" என்றபடி பதற்றத்துடன் பொங்கலை சாப்பிட்டாள் பார்கவி.
"பாரு... இவ்வளவு டென்ஷன்லயும் அவ சக்கரை பொங்கலை விட தயாரா இல்ல" என்று அவள் காலை வாரினான் இனியவன்.
"இது ரொம்ப நல்லா இருக்கு, அண்ணா"
வாய்விட்டு சிரித்தான் இனியவன்.
"பாஸ் பண்ணிட்டா, உனக்காக ஆழ்வி இதை மறுபடியும் செய்வாங்க" என்றான் குருபரன்.
"டேய், எதுக்காக நீ பிரஷர் கொடுக்கிற...? அவளுக்கு பாஸ் பண்றதுல்லயே சந்தேகம் இருக்கே" என்றான் இனியவன்.
"ஆழ்வி, அவ ஃபெயில் ஆனாலும் பொங்கல் செஞ்சு குடுங்க" குருபரன் சிரித்தான்.
"அவ ஃபெயில் ஆக மாட்டா. அதுக்கு நான் கேரன்டி" என்றாள் ஆழ்வி.
"நீங்க அதை எப்படி இவ்வளவு கான்ஃபிடன்டா சொல்ல முடியும்?"
"ஏன்னா, பார்கவி அவளைப் பார்த்து தான் காப்பி அடிச்சாளாம்" என்று சிரித்தான் இனியவன்.
ஆழ்வி மட்டுமல்ல, குருபரனும் அவன் சிரிப்பதை ரசித்து பார்த்தான். இனியவன் ஆழ்வியை பார்த்தபோது, அவள் தலை குனிந்து கொண்டாள். அது அவன் சிரிப்பை நிறுத்தியது. ஏன் எப்பொழுதும் அவள் தன்னை ஊடுருவும் பார்வை பார்க்கிறாள்?
"இன்னு, நீயும் எங்க கூட கோவிலுக்கு வா" என்றாள் நித்திலா.
"சாரிக்கா, நான் என் ஃபோனை ஆக்டிவேட் பண்ணணும்" என்று சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டான் இனியவன்.
"சித்திரவேல் எங்க?" என்றான் குருபரன்.
"அவரு ஒரு கிளையன்ட்டை பார்க்க போயிருக்காரு. நேரா கோவிலுக்கு வந்துடுவாரு" என்றாள் நித்திலா.
"ஓ..."
"சீக்கிரமா கிளம்புங்க. ரிசல்ட் வரும் போது நான் கோவிலில் இருக்கணும்" என்றாள் பார்கவி.
அதைக் கேட்ட இனியவன்,
"நான் என் ரூமுக்கு போறேன். இல்லன்னா, நான் பைத்தியம் ஆயிடுவேன்" என்றான்.
பைத்தியம் என்ற வார்த்தையை கேட்ட அனைவரும் அமைதியாகி போனார்கள்.
முகத்தை சுருக்கி அவர்களைப் பார்த்த அவன்,
"என்ன்னன?" என்றான்.
அவர்கள் அனைவரும் இடவலமாய் தலையசைக்க.
"இவங்களுக்கு என்ன தான் பிரச்சனைன்னு ஒன்னும் புரியல" என்று முணுமுணுத்தபடி தன் அறையை நோக்கி சென்றான் இனியவன்.
குருபரன் அலுவலகம் செல்ல, மற்ற அனைவரும் கோவிலுக்கு கிளம்பி சென்றார்கள்.
தன் அறைக்கு வந்த இனியவன், தன் புதிய கைபேசியில் முழு கவனத்தையும் செலுத்தினான். சிறிது நேரத்திற்கு பிறகு, அழைப்பு மணியின் ஓசை கேட்டது. வந்திருப்பது தன் குடும்பத்தார் அல்ல என்பது அவனுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் பார்கவியின் பரிட்சை முடிவு வெளிவந்த பிறகு தான் வருவார்கள். அதோடு மட்டுமில்லாமல், அவர்களிடம் மற்றொரு சாவி இருந்தது. அதனால் தரைதளம் வந்தான். அவன் கதவை திறக்கும் முன், மேலும் இருமுறை அழைப்பு மணி ஓசை கேட்டது.
கதவை திறந்த இனியவன், மது நெடியுடன் நின்றிருந்த ஒரு அந்நியனை பார்த்து முகம் சுருக்கினான். அவன் குடித்திருக்கிறான் என்று அவனுக்கு புரிந்து போனது. இனியவன் அவனை எதுவும் கேட்பதற்கு முன்,
"எல்லாத்தையும் நீயாவே செய்ற அளவுக்கு உன் பொண்டாட்டி உன்னை தயார் பண்ணிட்டாளா?" என்றான் அந்த மனிதன், இனியவனை தலை முதல் கால் வரை பார்த்தபடி.
பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்ட இனியவன் அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டான். அவன் ஆழ்வியின் அண்ணன், சொல்லின் செல்வன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top