39 ஆழ்வியின் அக்கறை
39 ஆழ்வியின் அக்கறை
மருத்துவமனையில் இருந்து மீண்டும் தன் அலுவலகம் நோக்கி காரை செலுத்தினான் இனியவன். அப்பொழுது ஒரு கைபேசி ஒலிக்கும் ஒலி கேட்டது. அவன் இங்கும் அங்கும் தேடினான். ஏனென்றால் அவனிடம் தான் கைபேசி இல்லையே. அப்பொழுது, பின் இருக்கையில் ஒரு பேசிக் மாடல் ஃபோன் இருந்ததை பார்த்தான். அதில் அவனது அக்கா நித்திலாவின் பெயர் ஒளிர்ந்தது. அதனால் அந்த அழைப்பை ஏற்றான்.
"அக்கா..."
"இன்னு... நீ எங்க இருக்க?"
"ஏன் கா?"
"இன்னும் நீ ஆஃபீசுக்கு வந்து சேரலன்னு குரு சொன்னான். நீ எங்க இருக்க?"
"என்னை ட்ராக் பண்றீங்களா?"
"வாய மூடு. நாங்க எவ்வளவு ஒரிடா இருக்கோம்னு உனக்கு தெரியுமா?"
"நாங்களா? உங்களைத் தவிர எனக்காக வேற யாரு கா கவலைப்பட போறா?" என்றான் வேண்டுமென்றே.
திகைத்துப் போன நித்திலா, தன்னை சமாளித்துக் கொண்டு,
"நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு. நீ எங்க இருக்க?" என்றாள்.
"இந்த ஆறு மாசத்துல சென்னை ரொம்ப மாறிப் போயிருக்கு. அதனால ஊர் எப்படி இருக்குன்னு பார்க்க ஜஸ்ட் சுத்திக்கிட்டு இருந்தேன்"
"இப்படி சின்ன பிள்ளைத்தனமா நடந்துக்காதே, இன்னு"
"அக்கா, நீங்க தான் சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கிறீங்க. நான் இனியவன் பாலகுமாரன்... அதை மறந்துடாதீங்க"
"ஆனா, நீ முதல்ல மாதிரி இல்லயே... உனக்கு தலையில அடிபட்டிருக்கு"
"வித்தியாசமா ஃபீல் பண்ணா காரை நிறுத்திடுறேன். போதுமா?"
"போதும். சீக்கிரம் வீட்டுக்கு வா"
"இப்போ தான் ஆஃபீஸ்க்கு போய்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு வர கொஞ்சம் டைம் எடுக்கும்"
நித்திலா பெருமூச்சு விட்டாள்.
"இந்த ஃபோன் யாரோடது?"
"பாட்டியோட ஃபோன்... நேத்து சாயங்காலம் அவங்க அதை கார்லயே மறந்துட்டாங்கலாம்"
"சரி, வரும் போது நான் கொண்டு வரேன்" என்று அழைப்பை துண்டித்தான் இனியவன்.
அடுத்த சில நிமிடங்களில் பாட்டியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான் குருபரன். அந்த அழைப்பை ஏற்றான் இனியவன்.
"எங்க இருக்க, இனியா?"
"ஆஃபீஸ்க்கு வந்துகிட்டு இருக்கேன்"
"நீ வீட்டை விட்டு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்பினதா நித்திலா சொன்னாங்க. எதுக்காக இவ்வளவு லேட் ஆகுது?"
"ஆளாளுக்கு ஏன் இவ்வளவு ஓவரா ரியாக்ட் பண்றீங்க?"
"இஸ் எவரிதிங் ஆல்ரைட்?"
"நீ எதைப் பத்தி பேசுற?"
"கார், டயர், எல்லாத்தையும் பத்தி தான்"
"உனக்கு ஆஃபீஸ்ல வேற வேலை இல்லயா?"
"என்னோட பாஸ் ஆஃபிஸ்ல இருக்கும் போதே எனக்கு டைம் இருந்ததில்ல... அப்படி இருக்கும் போது, அவர் இல்லாதப்போ எனக்கு எப்படி டைம் இருக்கும்?"
"அப்போ, என்னை ட்ராக் பண்றதை நிறுத்திட்டு, வேலையை பாரு"
"செஞ்சிகிட்டு தான் இருக்கேன்..."
"என்ன செய்ற?"
"கான்ஃபரன்ஸ்க்கு அரேஞ்ச் பண்ணிட்டு இருக்கேன்"
"ஒ..."
"நீ சீக்கிரம் வந்தா, அந்த கான்ஃபரென்ஸை உன்னோட கம்பேக் மீட்டிங்கா வச்சுக்கலாம்"
"வரேன்" என்று அழைப்பை துண்டித்தான்.
தனது நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வர்த்தகர்களைப் பற்றி எண்ணியபடி காரை செலுத்தினான் இனியவன். அவர்கள் அனைவருக்கும் குருபரன் என்ன பதில் அளித்திருப்பான்? தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களையும், ஒப்பந்ததாரர்களையும், விற்பனையாளர்களையும் சமாளிப்பது என்பது, குருபரனுக்கு அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது. இனியவன் இல்லாதது குறித்து அவர்கள் குருபரனை கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரித்து இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன பதில் கூறப்பட்டு இருக்கிறதோ...! அவன் கூறிய கதைகளை எத்தனை பேர் நம்பினார்களோ...!
காரை பார்க் செய்துவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான் இனியவன். திடீரென்று தங்கள் அலுவலகத்தில் நுழைந்த இனியவனை பார்த்த ஊழியர்கள், அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்கள். அவனுக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், நேராக தன் அறைக்கு சென்றான் இனியவன். அவனை பார்த்தவுடன் அவனது அறைக்கு ஓடினான் குருபரன்.
"வெல்கம் பேக், இனியா"
லேசாய் தலையசைத்து விட்டு தன் நாற்காலியில் அமர்ந்தான் இனியவன்.
"டேக் யுவர் சீட்" என்றான்.
அவனுக்கு முன்னால் அமர்ந்தான் குருபரன்.
"எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு?"
"வெல்... கிரேட்..."
"நம்மளோட டீலர்சையும், ஷேர் ஹோல்டர்சையும் எப்படி சமாளிச்ச? அவங்க என்னை பத்தி கேட்கலயா?"
"எப்படி கேட்காம இருப்பாங்க?"
"நீ என்ன சொன்ன?"
"உண்மையை சொன்னேன்"
"என்ன உண்மை?"
"நீ கோமாவில் இருந்தேன்னு"
"அவங்க அதுக்கு ரியாக்ட் பண்ணலயா?"
"நம்ம ஆஃபீஸ் ரெஸ்பான்சிபிலிட்டியை நித்திலா எடுத்துக்கிட்டாங்க. அவங்க ஆக்டிவ் சிஇஓ ஆனாங்க. அது எல்லாருக்கும் நிம்மதியை தந்தது"
"அதுவும் நல்ல ஐடியா தான். கான்ஃபரன்ஸ் எப்போ?"
"இன்னும் அரை மணி நேரத்துல..."
"ம்ம்ம்..."
"நீ ஏதாவது சாப்பிடுறியா?"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம்... எனக்கு மாமல்லபுரத்தை பத்தி ஏதாவது சொல்லு"
"மாமல்லபுரமா?" என்று முகத்தை சுருக்கினான் குருபரன்.
"ஆமாம், நீ தானே சொன்ன, அது பார்க்க வேண்டிய இடம்னு? நீ அதோட வரலாறை விலாவரியா சொன்னா, பாக்கலாமா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்"
குருபரன் பதற்றமானான். அவன் எங்கே மாமல்லபுரத்தின் வரலாறையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்? அவன் தான் பார்கவியுடனும் இனியவனுடனும் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தானே...!
"பெருசா என்னால எதுவும் சொல்ல முடியல. ஏன்னா, என் கூட பொண்ணுங்கள கூட்டிகிட்டு போனதால, அவங்க மேலயே கவனமா இருக்க வேண்டியதா போச்சு. அதனால அதோட வரலாறை எல்லாம் நான் கேட்கல"
"நான் ஆஃபீசுக்கு வர்ற வழியில ஒருத்தரை மீட் பண்ணினேன்" என்று அவன் முகத்தை ஊன்றி கவனித்தவாறு கூறினான் இனியவன்.
"யாரை மீட் பண்ண?"
"அவன் யாருன்னே எனக்கு தெரியாது. ஆனா, என்னை அவன் போன மாசம் மாமல்லபுரத்தில் பாத்ததா சொன்னான்"
குருபரன் திகில் அடைந்தான் என்று கூறத் தேவையில்லை.
"என்ன்னனன?"
ஆம் என்று தலையசைத்தான் இனியவன்.
*அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை* என்று கூறாமல்,
"அவன் வேற என்ன சொன்னான்?" என்ற அவனை, ஊடுருவும் பார்வையோடு லேசாய் புன்னகைத்த இனியவன்,
"அவன் என்னென்னமோ உளறி கொட்டினான். நான் கோமாவில் இருந்திருந்தா, நான் எப்படி மாமல்லபுரம் போயிருக்க முடியும்?"
குருபரன் தன் தொண்டையில் சிக்கிய ஏதோ ஒன்றை விழுங்க படாத பாடு பட்டான்.
"அவன் ஒரு பைத்தியக்காரனா இருப்பான் போல இருக்கு" என்று சிரித்தான் இனியவன்.
குருபரன் அமைதியாய் இருந்தான். அவனிடம் தெரிந்த தவிப்பை கவனிக்கவே செய்தான் இனியவன்.
"ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்குற?"
"நான்... நான் போய் கான்ஃபரன்ஸ் வேலையை கவனிக்கணும்"
"சரி, நீ போ, நான் வரேன்"
தலையசைத்த குருபரன் அங்கிருந்து சென்றான். யோசனையுடன் தன் கண்களை சுருக்கினான் இனியவன். எதற்காக குருபரனின் முகத்தில் பதற்றம் தென்பட்டது? உண்மையை கூறவிடாமல் எது அவனை தடுக்கிறது? கடந்த ஆறு மாதத்தில் அவன் இருந்த நிலை தான் என்ன? அவனிடம் கூற முடியாத அளவிற்கா அவனது நிலைமை இருந்தது?
குருபரனின் மனம் முழுவதும் இனியவன் கூறியதிலேயே சுழன்று கொண்டிருந்தது. அவன் மாமல்லபுரம் சென்றது குறித்து அவனிடம் யார் கூறி இருப்பார்கள்? யார் அந்த மனிதன்? இனியவன் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை. ஆனால் அவன் முகத்தில் எந்த குழப்பமும் இல்லை. அப்படி என்றால் அந்த மனிதன் அவனிடம் எந்த உண்மையையும் கூறி இருக்க மாட்டான் என்று எண்ணியபடி தன் வேலையை தொடர்ந்தான் குருபரன்.
குருபரன் கூறியபடியே அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் கூடினார்கள். அதில் ராஜா சர்மாவும் அவரது முன்னாள் மனைவியான ரீனா சர்மாவும் இருந்தார்கள். அவர்கள் பேசிக் கொள்ளவும் இல்லை, சம்பிரதாயமாக சிரித்துக் கொள்ளவும் இல்லை. கான்ஃபரன்ஸ் துவங்கியது. இன்டர்காம் மூலமாக இனியவனை அழைத்தான் குருபரன்.
"சொல்லு, குரு"
"எல்லாரும் வந்துட்டாங்க. நீ வரலாம்"
"ஓகே, நான் சொல்றதை கேளு"
"சொல்லு"
"என்னோட பழைய நம்பரோட எனக்கு ஒரு புது ஃபோன் வேணும்"
"சரி"
"நான் வரேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு, கான்பிரன்ஸ் ஹாலை நோக்கி நடந்தான் இனியவன்.
அந்த இடத்தில் கூடியிருந்த அனைவரும், குருபரன் அந்த கூட்டத்தை துவங்காமல் அவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்ததை பார்த்து ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
"குரு எதுக்காக காத்துகிட்டு இருக்க?" என்றார் ஒரு மூத்த வியாபார புள்ளி.
"ஃபியூ மினிட்ஸ் சார்..." என்றான் குரு.
"யாராவது வர வேண்டி இருக்கா?"
"ஆமாம், சார்"
அதே நேரம் அந்த கான்ஃபரன்ஸ் அறையின் கதவு திறந்தது. வழக்கம் போல் புயலென உள்ளே நுழைந்தான் இனியவன். அங்கிருந்த அனைவரும் தங்கள் நாற்காலிகளை விட்டு எழுந்து நின்றார்கள்... சிலர் திகைப்புடனும்... சிலர் ஆச்சரியத்துடனும்... சிலர் அதிர்ச்சியுடன்... சிலர் ஆர்வத்துடனும்...!
"ஹலோ ஜென்டில்மென்..." புன்னகைத்தான் இனியவன்.
"ஐபிகே, நீங்க எங்க போயிருந்தீங்க?"
"உங்களுக்கு என்ன ஆச்சு?"
"நீங்க நல்லா இருக்கீங்களா?"
"உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?"
கேள்வி மேல் கேள்விகள் கேட்கப்பட்டன. தன் கையை உயர்த்தி அவர்களை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தான் இனியவன்.
"ப்ளீஸ், டேக் யுவர் சீட்ஸ்..."
அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்தார்கள்.
"உங்க எல்லாரையும் ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பண்றதுல ரொம்ப சந்தோஷம். நான் கோமா ஸ்டேஜ்ல இருந்தேன்" அங்கிருந்தவர்களின் முக பாவங்களை படித்தவாறு கூறினான் இனியவன்.
அனைவரும் அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டார்கள்.
"ஆமாம், ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் என்னோட நினைவு திரும்பி வந்தது. நான் இல்லாதப்போ நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப தேங்க்ஸ். என்னோட கம்பெனியை அதே பொசிஷன்ல வச்சிருக்க ஹெல்ப் பண்ணதுக்காக உங்க எல்லாருக்கும் நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன்"
"வெல்கம் பேக் ஐபிகே..." அனைவரும் அவனை கைத்தட்டி வரவேற்றார்கள்.
லேசாய் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டான் இனியவன். ஒரு மணி நேரத்தில் அந்த கான்ஃபரன்ஸ் நிறைவு பெற்றது. அந்த கூடத்தை விட்டு அவன் வெளியே வந்த பின், ஒவ்வொருவரும் அவன் உடல் நிலையை பற்றி விசாரிக்க துவங்கினார்கள். அனைவருக்கும் பதில் அளித்த பிறகு, தன் அறையை நோக்கி நடந்தான் இனியவன். அப்பொழுது,
"நீ உண்மையிலேயே கோமாவில் தான் இருந்தேன்னு உனக்கு தெரியுமா?" என்ற கேள்வியை கேட்டு பின்னால் திரும்பினான். அங்கு ரீனா சர்மா ஒரு திருட்டுப் புன்னகையுடன் நின்றிருந்தாள்.
இனியவனின் கண்கள் சுருங்கியது.
"என்ன கேட்டீங்க?"
"நீ கோமாவில் இருந்ததா உனக்கு யார் சொன்னது...?"
இனியவன் அவளுக்கு பதில் கூறும் முன்,
"ரீ..னா..." என்றபடி அவளது முன்னாள் கணவரான ராஜா சர்மா அவளை நோக்கி விரைந்து வந்தார்.
"நீ அவர்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க?" என்றார் மெல்லிய குரலில்.
"அவனுக்கு நான் உண்மையை சொல்லப் போறேன்" என்றாள். ஆனால் அவள் அதை மெல்லிய குரலில் கூறவில்லை.
"எல்லா உண்மையும் சொல்லிட முடியாது. வாயை மூடிக்கிட்டு கிளம்பு. இல்லன்னா விளைவுகள் மோசமா இருக்கும்" என்று அவளை எச்சரித்தார் ராஜா சர்மா.
இனியவன் மீது ஒரு கோப பார்வையை வீசிவிட்டு அந்த இடம் விட்டு அகன்றாள் ரீனா.
"அவங்க என்கிட்ட என்னமோ சொல்ல வந்தாங்க" என்றான் இனியவன்.
"அவளை விடு... அவ எவ்வளவு திமிரு பிடிச்சவள்னு உனக்கு தெரியாதா?"
"அவங்க திமிருக்கும் என்னோட கடந்த காலத்துக்கும் என்ன சம்மந்தம்?"
"ஒன்னும் இல்ல. அவளோட வார்த்தையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. அவ இப்படித்தான் எதையாவது உளறுவா. நீ சின்ன பையன். நீ சந்தோஷமா இருக்கணும். நடந்தத எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இரு"
அவரை முனைப்பான பார்வை பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன்.
"யார் சொல்றதையும் கேட்காத... இப்போ நீ பெட்டரா இருக்கேன்னு நினைக்கிறேன்..."
ஆம் என்று தலையசைத்தான் இனியவனுக்கு தெரியும். ராஜா ஷர்மா அவனது நலம் விரும்பி. ஆனால் அவனுக்கு தெரியக்கூடாது என்று அவர் நினைப்பது என்ன? அப்படி எதைத்தான் இவர்கள் அனைவரும் மறைக்க முயல்கிறார்கள்? அது அவ்வளவு சீரியசான விஷயமா?
அப்பொழுது அங்கு வந்த குருபரன், இனியவனின் முகத்தை பார்த்த உடனேயே ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான்.
"குரு, நான் கிளம்புறேன்" என்றான் இனியவன்.
"சரி, இனியா..."
ராஜா சர்மாவும் தலையசைத்தார்.
பலப்பல எண்ண சுழற்சியுடன் காரை செலுத்தி சென்றான் இனியவன். ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவர்கள் அனைவரும் அதை அவனிடம் மறைக்க மாட்டார்கள். கடந்த ஆறு மாதத்தில் அவனது உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவனது முனைப்பு அதிகமானது. ஆனால் அதை எப்படி செய்வது என்று தான் அவனுக்கு புரியவில்லை. எங்கிருந்து துவங்குவது, யாரிடமிருந்து துவங்குவது ஒன்றும் புரியவில்லை.
இன்பவனம்
அவன் வீட்டிற்குள் நுழைந்த போது, வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆழ்வி, அவனைப் பார்த்தவுடன், அவன் முகத்தை கவனித்தபடி சோபாவை விட்டு மெல்ல எழுந்து நின்றாள். அவளது முகபாவத்தை கவனித்தவாறு இனியவனும் நின்றான். அவன் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.
"எதற்காக அவள் இங்கு தனியாக அமர்ந்திருக்கிறாள்? ஒருவேளை அவனுக்காக காத்திருக்கிறாளோ?" என்று எண்ணினான் அவன்.
மாமல்லபுரம் பற்றி கூறிய அந்த மனிதனின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தது.
கோதுமை நிறத்தில், பூசினார் போல், அடர்ந்த இடுப்பளவு கருங்கூந்தல்...! மென்று விழுங்கியபடி சென்று சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
"உங்களுக்கு என்ன செய்யுது?" என்றாள் ஆழ்வி தயக்கத்துடன்.
கண்களை திறந்து ஒன்றும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன். அந்த பார்வை அவள் வயிற்றுக்குள் நண்டூறச் செய்தது.
"எனக்கு குடிக்க ஏதாவது கொண்டுவரச் சொல்லி முத்துகிட்ட சொல்ல முடியுமா?" என்றான் அவள் முகத்தை படித்தவாறு.
அடுத்த நொடி சமையல் அறையை நோக்கி சிட்டாய் பறந்தாள் ஆழ்வி. அவனுக்கு பிடித்த ஆரஞ்சு பழச்சாறை தயார் செய்து கொண்டு வரவேற்பறைக்கு அவள் வந்த போது, அவனை அங்கு காணவில்லை. அதனால் அவன் அறைக்குச் சென்றாள். அங்கு அவன், தன் கை விரல்களை பிணைத்துக் கொண்டு தரையை பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான். கதவை தட்டும் சத்தம் கேட்டு தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான். அவள் வருவாளா மாட்டாளா என்பதை பற்றித்தான் அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இதோ, அவள் பழச்சாறுடன் வந்து நிற்கிறாள். தலையசைத்து அவள் உள்ளே வர அனுமதி தந்தான். உள்ளே வந்த அவள், அந்த பழச்சாறை அவனிடம் நீட்டினாள்.
"நான் முத்துவ தானே ஏதாவது கொண்டுவர சொன்னேன்?" என்றான் அந்த பழச்சாரை அவளிடம் இருந்து வாங்கிக் கொள்ளாமல்.
"முத்து மார்க்கெட்டுக்கு போயிருக்காரு. அவர் வர லேட் ஆகும். அதனால் தான் நான் கொண்டு வந்தேன்"
அதை அவளிடம் இருந்து அவன் பெற்றுக் கொண்டவுடன், அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
"நீ எதுக்காக இதையெல்லாம் செய்ற, ஆழ்வி?" என்றான்.
எந்த அர்த்தத்தோடு அதை கேட்கிறான் என்று புரியாமல் அவனை பார்த்தாள் ஆழ்வி.
"நீ எங்களோட கெஸ்ட். நீ இங்க வேலை தேடி வந்திருக்க..."
"நான் இதை எல்லாம் செய்றது உங்களுக்கு பிடிக்கலன்னா நான் செய்ய மாட்டேன்..." அவள் குரலில் சோகம் இழையோடியதை உணர்ந்தான் இனியவன்.
"இல்ல, எனக்கு சங்கடமா இருக்கு..."
"எனக்கு இதையெல்லாம் செய்றதுல எந்த பிரச்சனையும் இல்ல"
"தேங்க்ஸ்" அந்த பழச்சாறை பருகினான் இனியவன் அவளை பார்த்தபடி.
"நீங்க காலையில மாத்திரை போடாம போய்ட்டீங்க..." என்றாள்.
அதைக் கேட்ட இனியவன் திகைத்தான். ஆம் அவன் மாத்திரை சாப்பிடவில்லை.
"உனக்கு எப்படி தெரியும்?"
"காலையில சாப்பிட்டு அப்படியே கிளம்பி போயிட்டீங்க. நீங்க மாத்திரை போடல"
ஆம் என்று தலையசைத்தான்.
"ப்ளீஸ், உங்களை கவனிச்சிக்கோங்க. மாத்திரை போட மறக்காதீங்க"
ஒன்றும் கூறாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன்.
"உங்களுக்கு நான் மாத்திரை எடுத்துக் கொடுக்கவா?" என்றாள் இங்கும் அங்கும் தேடியபடி.
அங்கிருந்த மேசையை சுட்டிக்காட்டினான் இனியவன். விரைந்து சென்ற ஆழ்வி, அவன் காலை நேரத்தில் சாப்பிட வேண்டிய மாத்திரையை, மருந்து சீட்டை படித்துக் கூட பார்க்காமல் எடுத்ததை பார்த்து திகைப்பில் ஆழ்ந்தான். அவன் எந்த மாத்திரையை சாப்பிட வேண்டும் என்று அவளுக்கு எப்படி தெரியும்? அந்த மாத்திரைகளையும் தண்ணீர் பாட்டிலையும் அவனிடம் கொடுத்தாள். அவளிடம் இருந்து அதைப் பெற்று விழுங்கினான். அவள் முகத்தில் திருப்தியை கண்டான் இனியவன். புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள் ஆழ்வி. தன் மனைவியைப் பற்றி அந்த மாமல்லபுரம் மனிதன் கூறியது உண்மையாக இருக்குமா?
*ஒரு அம்மா செய்ற எல்லாத்தையும் நீ எனக்கு செய்ற. எனக்கு அம்மா வேண்டாம். நீ தான் வேணும்*
ஒருவேளை மாமல்லபுரத்தில் அவனுடன் இருந்த பெண், ஆழ்வியாக இருந்தால், அவன் அப்படி கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது, என்று எண்ணினான் இனியவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top