38 இணைக்கப்பட்ட புள்ளிகள்...

38 இணைக்கப்பட்ட புள்ளிகள்...

"நம்ம மாமல்லபுரத்துல சந்திச்சோமே" என்று ஆர்வம் ததும்ப அவன் கூற, அது இனியவனை மேலும் குழப்பியது.

"மாமல்லபுரமா? நான் மாமல்லபுரத்துக்கு போனதே இல்ல"

"அட... போன மாசம் மாமல்லபுரம் வந்திருந்தீங்களே..."

"நீங்க வேற யாரையோ நினைச்சு பேசிகிட்டு இருக்கீங்க"

"நான் அடிச்சு சொல்லுவேன், அது நீங்க தான். அன்னைக்கு உங்க வைஃப்கிட்ட என்ன பேசினீங்கன்னு கூட எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு"

"வைஃபா?"

"ஆமாம்"

"இல்ல இல்ல, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க..."

"டிஎன் 09 ஏஜே 1000 உங்க கார் நம்பர் தானே?"

இனியவன் திகைத்தான். ஆம், அது அவர்கள் வீட்டில் இருக்கும் காரின் எண் தான். அவனுக்கு ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், அன்று அவன் அந்த காரில் வரவில்லை. வேறு ஒரு காரில் வந்திருந்தான். அப்படி இருக்கும் பொழுது, அவன் வீட்டில் இருக்கும் காரின் எண், இந்த மனிதனுக்கு எப்படி தெரிந்தது?

"என்னோட கார் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எந்த ஃபேன்சி நம்பரையும் நான் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டேன். அதே மாதிரி, அன்னைக்கு நீங்க சொன்னதையும் நான் இன்னும் மறக்கல" என்றான் நம்பிக்கையோடு.

"நான் அன்னைக்கு என்ன சொன்னேன்?" என்றான் இனியவன்.

"உங்க வைஃப் கிட்ட உங்க அம்மாவை பத்தி கேட்டீங்க"

"அம்மாவை பத்தியா? என்ன கேட்டேன்?" என்றபடி சிக்னலை ஏறிட்டான். இன்னும் 60 நொடிகள் இருந்தன.

அந்த மனிதனும் சிக்னலை பார்த்துவிட்டு, கடகடவெ ஒப்பிக்க ஆரம்பித்தான்.

"உங்க வைஃப்கிட்ட உங்க அம்மா எங்கன்னு கேட்டீங்க. அவங்க சாமிகிட்ட போயிட்டதா அவங்க சொன்னாங்க. நீங்க ஏன்னு கேட்டீங்க. சாமிய பார்க்க போயிருக்காங்கன்னு அவங்க சொன்னாங்க. அதை கேட்டு, நீங்க டீப்பா யோசிச்சிங்க. உங்களுக்கு அம்மா இல்லன்னு கஷ்டமா இருக்கான்னு அவங்க கேட்டதுக்கு, நீங்க இல்லன்னு சொன்னீங்க"

"நான் இல்லன்னு சொன்னேனா?" என்றான் ஆச்சரியமாக.

"அதைக் கேட்ட அவங்களும் ஆச்சரியம் தான் பட்டாங்க"

"அதுக்கு நான் என்ன சொன்னேன்?"

"எனக்கு நீ இருக்கியே, நீ அம்மா செய்ற எல்லாத்தையும் எனக்கு செய்ற. அதனால எனக்கு அம்மா வேணாம். நீ தான் வேணும்னு அவங்களை கட்டிப்பிடிச்சுகிட்டீங்க"

"நான் கட்டிப்பிடிச்சிக்கிட்டேனா?" என்று முகம் சுருக்கினான் நம்ப முடியாமல்.

"ஆமாம். நீங்க அவங்களை பப்ளிக்கா கட்டிப் பிடிச்சீங்க. அவங்க அவ்வளவு அழகா இருந்தா, நீங்க ஏன் ரொமான்டிக்கா இருக்க மாட்டீங்க?"

சில நொடி யோசித்த அவன்,

"அவங்க பேர் உங்களுக்கு தெரியுமா?" என்றான்.

"தெரியாது"

"அவங்க என்னோட வைஃப்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அது ரொம்ப சிம்பிள். அவங்க கழுத்துல புது தாலி போட்டிருந்தாங்க. நீங்க எப்பவும் அவங்க கூடயே ஒட்டிக்கிட்டு இருந்தீங்க. எல்லாத்துக்கும் மேல, உங்களுக்கு அம்மா வேண்டாம், அவங்க தான் வேணும்னு சொன்னீங்க. அப்ப அவங்க யாரு?"

சரியாய் அதேநேரம் சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியது.

"அவங்க பாக்க எப்படி இருந்தாங்க?" என்று அவசரமாய் கேட்டான் இனியவன், வாகனங்கள் நகர துவங்கியதை பார்த்து.

"கோதுமை நிறந்துல, பூசின மாதிரி, அடர்த்தியா இடுப்பளவுக்கு நல்ல முடி" என்று ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபடி கூறிவிட்டு சென்றான் அவன்.

அவன் சென்று விட்டான் தான்... ஆனால், இனியவன் இன்னும் அங்கேயே நின்றிருந்தான். பின்னால் வந்த வாகனங்களின்  ஒலியை கேட்ட பிறகே அவனுக்கு சுயநினைவு வந்தது. கியரை மாற்றிக்கொண்டு அந்த இடம் விட்டு சென்றான் இனியவன். இதெல்லாம் என்ன? அந்த மனிதன் அவனுடைய மனைவியை பற்றி கூறினான்... அவனுக்கு எப்பொழுது திருமணம் ஆனது? அவன் கோமாவில் இருந்ததாய் அவன் குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் ஒரு அந்நிய மனிதனோ, அவனை மனைவியுடன் மாமல்லபுரத்தில் போன மாதம் பார்த்தேன் என்று அடித்துக் கூறுகிறான். அந்தப் பெண் யாராக இருக்கும்? கோதுமை நிறத்தில் பூசினார் போல, இடுப்பளவு கருங்கூந்தலுடன்...? அதே உருவ அமைப்பை கொண்ட ஆழ்வியின் முகம் அவன் கண்ணில் வந்து போனது. எதையோ யோசித்த அவன், தான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி சென்றான்.

...........

ஆழ்வியின் அம்மா கற்பகம், வெள்ளி ஜரிகை பட்டுப்புடவை அணிந்து கொண்டு, நூறு கிராம் மதிப்புள்ள தங்க சங்கிலியும் அதற்கு பொருத்தமான காதணியும், கை நிறைய தங்க வளையல்களும் அணிந்திருந்தார். அவர் ஏதோ திருமணத்திற்கு செல்கிறாரோ என்று நினைத்தால் அது உண்மை அல்ல. தன் வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு, 65" தொலைக்காட்சி பெட்டியில் மெகா தொடரை பார்த்தபடி, பாதாம் அல்வாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒரு பணியாள் அவருக்கு காலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

அப்படித்தான், தான் நினைத்தபடியே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் நினைத்தது அவருக்கு கிடைத்து விட்டது. பெற்ற மகளை விற்று தன் ஆசைகளை அவர் பூர்த்தியாக்கிக் கொண்டார். தன் மகள் மனநிலை சரியில்லாத கணவனுடன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறாள் என்பதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவர் ஒரு நல்ல தாயாக இருந்திருந்தால், அவர் அந்த திருமணத்தையே நடத்தி வைத்திருக்க மாட்டாரே...!

ஆனால் அனைத்தும் நம் விருப்பபடியே நடந்து விடுவதில்லை. அவரது கதையிலும் ஒரு வில்லன் இருந்தான். அது அவரது மகன் சொல்லில் செல்வன். கிட்டத்தட்ட கற்பகத்திடமிருந்து பாதிக்கு மேலான பணத்தை அவன் பிடுங்கி விட்டிருந்தான். அதை குடிக்கவும், குதிரை பந்தயத்திற்கும் செலவழித்தான். நல்ல வேலை, கற்பகம் நித்திலாவிடமிருந்து பெற்ற உண்மை தொகை அவனுக்கு தெரியாது.

"சரசு.." என்று சமையற்கரியை கூப்பிட்டார் கற்பகம்.

"சொல்லுங்கம்மா"

"மட்டன் குழம்புல நிறைய காரம் போடாத. கொஞ்சம் முந்திரிபருப்பை அரைச்சு ஊத்து" என்றார்.

"சரிங்கம்மா" என்று சமையலறைக்கு சென்றாள் சரசு.

வேறொரு வேலைக்காரி பதற்றமாய் உள்ளே ஓடி வந்தாள். 

"என்ன ஆச்சு, லட்சுமி? எதுக்காக இப்படி ஓடி வர?" என்றார் கற்பகம்.

"உங்க பிள்ளை வராருமா" என்றாள் லட்சுமி.

அதை கேட்டு கற்பகம் அதிர்ச்சி அடைந்தார்.

"முதல்ல கதவை சாத்து" என்று பரபரவென தன் நகைகளை கழட்ட தொடங்கினார்.

"எனக்கு தலை வலிக்குதுன்னு நான் தூங்குறதா அவன்கிட்ட சொல்லு" என்று விட்டு, சமையல்காரியை அழைத்து சமைப்பதை நிறுத்தச் சொன்னார்.

"எல்லாரும் பின் கட்டுக்கு போங்க. அவன் போனதுக்கு பிறகு திரும்பி வாங்க" என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார்.

அவர்களுக்கு அவர் எதுவும் கூற வேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கே தெரியும். எப்பொழுதெல்லாம் சொல்லின் செல்வன் அங்கு வருகிறானோ, இது தான் அங்கு நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் பின்கட்டுக்கு ஓடி சென்று மறைந்து கொண்டார்கள். பின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தாள் லட்சுமி.

அதேநேரம் கதவை தட்டினான் சொல்லின் செல்வன். லட்சுமி சென்று கதவை திறந்தார்.

"அம்மா எங்க?" என்று தள்ளாட்டம் போட்டபடி கேட்டான். அவன் குடித்திருப்பது கண்கூடாய் தெரிந்தது.

"அம்மா தூங்கிக்கிட்டு இருக்காங்க" என்றாள் அந்த பெண்.

கற்பகத்தின் அறைக்கு சென்று கதவை தட்டினான் சொல்லின் செல்வன்.

"அவங்களுக்கு தலைவலி"
என்று லட்சுமி கூறியதை காதில் வாங்காமல், மேலும் பலமாய் தட்டினான்.

சற்று நேரத்தில் பழைய புடவை ஒன்றை கட்டிக்கொண்டு வந்து கதவை திறந்தார் கற்பகம்.
நகைகள் அனைத்தையும் கழட்டி விட்ட பிறகு ஏழைப் போல் காட்சி அளித்தார் அவர்.

"செல்வம்..." என்றார் மெல்லிய குரலில் ஒரு நோயாளியை போல.

"எனக்கு பணம் வேணும்"

"பணமா? நான் எங்கிருந்து கொண்டு வர்றது? நீ தான் எல்லாத்தையும் என்கிட்ட இருந்து ஏற்கனவே பிடிங்கிட்டியே. என்னை பாரு. என்கிட்ட ஹாஸ்பிடல் போறதுக்கு கூட காசு இல்ல. உன்கிட்ட காசு இருந்தா எனக்கு குடு" என்றார்.

"உன் நடிப்பை எல்லாம் நிறுத்து. நீ பொய் சொலறேன்னு எனக்கு தெரியும்" என்று அவரை பிடித்து தள்ளிவிட்டு அவர் அறையில் இருந்த அலமாரியில் தேடினான். ஆனால் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கட்டிலில் அமர்ந்து கொண்டு அழுதார் கற்பகம்.

"ஏன் டா இப்படி எல்லாம் செய்யற? எனக்கு புள்ளையா இருந்துகிட்டு உன்னால எனக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கா?"

அவருடைய புலம்பலுக்கு செவிமடுக்காமல் அலமாரியில் இருந்த துணிமணிகளைப் பிடித்து கீழே இழுத்தான் செல்வன்.

"அம்மா எனக்கு காசு வேணும்"

"நீ தான் தேடி பார்த்துகிட்டு இருக்கியே... அப்புறம் ஏன் என்கிட்ட கேக்குற?"

கோபமாய் வெளியே வந்த அவன், சுவரோடு இணைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சி பெட்டியை எடுத்தான். அவனை நோக்கி ஓடிய கற்பகம் அவனைத் தடுத்தார்.

"எதுக்குடா இப்ப அதை எடுக்கிற? விடு அதை..." 

கற்பகத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இப்பொழுது அவனுக்கு பணம் கொடுத்து விட்டால், மீண்டும் மீண்டும் அவன் அதையே தான் செய்வான்.

"நான் சொல்றதை கேளுடா. என்கிட்ட இருந்தா உனக்கு கொடுக்க மாட்டேனா?" என்றார்.

அவரைப் பிடித்து தள்ளிவிட்டு அந்த தொலைக்காட்சி பெட்டியை தூக்கிக்கொண்டு நடந்தான். அவன் ஏற்கனவே போதையில் இருந்ததால், அவனால் திடமாய் நடக்க முடியவில்லை. அவன் கையில் இருந்த தொலைக்காட்சி பெட்டி கீழே விழுந்து நொறுங்கியது.

"என்ன வேலை டா செஞ்சிருக்க நீ... இங்க வந்தது இந்த டிவியை உடைக்க தானா? உன்னால எனக்கு ஒரு லட்சம் நஷ்டம்" என்று அவன் முதுகில் வேகமாய் அறைந்தார்.

"வீட்டை விட்டு வெளியில போ. மறுபடியும் வந்தா, உன்னை கொன்னுடுவேன்" என்று அவனை வெளியே பிடித்து தள்ளி கதவை சாத்தினார்.

நொறுங்கி கிடந்த தொலைக்காட்சி பெட்டியை பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டார்  கற்பகம்.

இதற்கிடையில்

மருத்துவமனையை வந்தடைந்தான் இனியவன். வரவேற்புக்கு சென்று தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை பார்க்க விரும்புவதாய் கூறினான். அப்பொழுது அந்த வரவேற்பை கடந்து சென்ற மருத்துவர், அவனை பார்த்து வரவேற்றார்.

"ஹலோ இனியவன், எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் டாக்டர். உங்களை பார்க்கத்தான் வந்தேன்,"

"என்னோட கேபினுக்கு வாங்க" என்ற அவரை பின்தொடர்ந்தான் இனியவன்.

"சொல்லுங்க இனியவன்..."

"ரொம்ப டயர்டா இருக்கு"

"தலைவலி இல்லயா?"

"லேசா இருக்கு"

"மெடிசன்செல்லம் கரெக்டா சாப்பிடுறீங்க இல்ல?"

"சாப்பிடுறேன் டாக்டர்... என்னோட ஆறு மாசத்துக்கான கம்ப்ளீட் ரிப்போர்ட்டை கொடுக்க முடியுமா?" என்றான் அவர் முகத்தை படித்தவாறு.

"ஆறு மாசத்துக்கான ரெக்கார்டா?அதெல்லாம் எங்ககிட்ட இல்லயே..."

"இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம், டாக்டர்?"

"நீங்க இங்க அட்மிட் ஆகி இருந்தது ஒரு நாள் தான். அடுத்த நாளே உங்களுக்கு நினைவு வந்து நாங்க உங்க டிஸ்சார்ஜ் பண்ணிட்டோம்"

"ஒரு நாளா?" என்று முகம் சுருக்கினான் இனியவன்.

"ஆமாம்"

"நான் இதுக்கு முன்னாடி இங்க அட்மிட் ஆகலன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?"

"நிச்சயமா சொல்ல முடியும். நீங்க படிக்கட்டிலிருந்து தவறி விழுந்துட்டதா உங்க ஃபேமிலி மெம்பெர்ஸ் உங்களை இங்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து, உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு நான் தான் டிஸ்சார்ஜ் பண்ணேன்"

"நான் படிக்கட்டில் இருந்து ஸ்லிப் ஆனேனா?"

"ஆமாம். நான் உங்களை தரோவா மறுபடியும் செக் பண்ணணும்னு நினைக்கிறீங்களா?"

"இல்ல டாக்டர். அதெல்லாம் வேண்டாம். தேங்க்யூ..."

"யூ ஆர் வெல்கம்"

கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினான் இனியவன். அவன் எதிர்பார்த்ததை விட ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. இவர்கள் அவனிடமிருந்து ஏதோ ஒரு மிகப்பெரிய உண்மையை மறைக்கிறார்கள். அவன் கோமாவில் இருந்தது உண்மை அல்ல. அவன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்திருக்கிறான். ஆனால் ஏன் அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை?  இந்த ஆறு மாதத்தில் அவன் வாழ்க்கையில் நடந்தது என்ன? சொல்ல முடியாத பயம் அவன் மனதில் தோன்றியது. அந்த அந்நியன் கூறியது போல் அவன் திருமணமானவனா. அது உண்மையாக இருந்தால், அவன் என்ன செய்யப் போகிறான்? அவனது மனைவி யார்? அவனுக்கு ஆழ்வி நினைவுக்கு வந்தாள். அந்த மனிதன் கூறிய அத்தனை அம்சங்களும் அவளுக்கு பொருந்தி போனது. அவள் அவனது மனைவியாய் இருக்கும் வாய்ப்பு இருக்கிறதா? மெல்லிய புன்னகை தோன்றி, அவன் இதழ்களை மெலிதாக்கியது. அடுத்த நொடி அது மறைந்து போனது. ஒருவேளை அவள் அவன் மனைவியாய் இல்லாமல் போனால்? அப்படி என்றால், அவன் மனைவி யார்? தன் மனதில் உள்ள கோபத்தை எல்லாம் வெளியேற்ற அவனுக்கு கத்த வேண்டும் போல் தோன்றியது.

ஆனால் இது கத்துவதற்கான நேரம் அல்ல. அவனுக்கு அவன் குடும்பத்தினரைப் பற்றி நன்கு தெரியும். காரணம் இல்லாமல் அவர்கள் எதையும் அவனிடமிருந்து மறைக்க மாட்டார்கள். உண்மையை மறைக்க அவர்களுக்கு சரியான காரணம் இருக்க வேண்டும். ஆனால் அந்த உண்மை தான் என்ன? அதை எப்படி தெரிந்து கொள்வது?

அங்கிருந்த இரும்பு நாற்காலியில் தரையை பார்த்தபடி அமர்ந்தான். தனக்கு தெரிந்தவரை புள்ளிகளை இணைக்க முயன்றான். அவன் மருத்துவமனையில் இரண்டு நாட்களே இருந்ததாய் மருத்துவர் கூறினார். ஆனால் அவனது குடும்பத்தினரோ அவன் ஆறு மாத காலமாய் கோமாவில் இருந்ததாய் கூறுகிறார்கள். அவனுக்கு அறிமுகம் இல்லாத அந்நிய மனிதன் ஒருவன், சென்ற மாதம் அவனை மாமல்லபுரத்தில் பார்த்ததாய் கூறுகிறான். அவன் கோமாவில் இருந்திருந்தால் அவன் எப்படி மாமல்லபுரத்தில் இருந்திருக்க முடியும்? அப்பொழுது அவன் மனதில் வேறு ஒரு விஷயம் உரைத்தது. ஆழ்வியையும், பார்கவியையும் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றதாய் குரு அவனிடம் கூறினானே...! அவர்களுடன் தானும் சென்றிருந்தானோ? அப்படி என்றால் தன் அம்மாவைப் பற்றி அவன் பேசியது யாருடன்? அந்தப் பெண் கோதுமை நிறத்துடன் பூசினார் போல இடுப்பளவு கருங்குந்தலுடன் இருந்ததாய் அந்த மனிதன் கூறினான். அந்தப் பெண் ஆழ்வியாக இருப்பாளா? ஆனால் அவள் திருமணம் ஆகாதவள் ஆயிற்றே... அவள் கழுத்தில் தாலி இல்லையே... அவனால் எந்த புள்ளியையும் இணைக்க முடியவில்லை.

எது எப்படி இருந்த போதிலும் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் திறமைசாலிகளாக நடித்துக் கொள்ளட்டும். தனக்கும் நடிக்க தெரியும் என்று இவன் காட்டிவிட்டால் போகிறது. அவர்கள் அவனிடம் மறைப்பது என்ன என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஆழ்வி அவனுடைய மனைவியா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்குள் அதிகமானது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top