37 அந்தக் குரல்...

37 அந்தக் குரல்...

பார்கவியும் ஆழ்வியும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட பிறகு, சந்தேக மேகங்கள் இனியவனின் மன வானில் சூழ்ந்தன. அவன் குடும்பத்தாரின் பேச்சில் நிறைய முரண்பாடுகள் தென்பட்டன. ஆழ்வி அவனது அறையில் தங்கியதற்கான உண்மையான காரணத்தை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான். தன் எண்ணங்களில் தொலைந்து போயிருந்த அவன்,  திடீரென்று ஓர் ஆழ்ந்த பார்வை அவன் மேல் ஊடுருவி இருப்பதை உணர்ந்தான். அந்த திசை நோக்கி அவன் திரும்ப, ஆழ்வி தன் பார்வையை வேறு பக்கம் திருப்புவதை கண்டான். அவளைப் பார்த்தபடி அவளை நோக்கி நடந்தான். அப்பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த மேசையின் முனை, சற்று வெளியே நீட்டி கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அது அவன் கால் விரலில் இடித்தது.

"அவுச்..." என்றான்.

"என்ன்னனங்க..." என்றபடி அவனை நோக்கி ஓடிய ஆழ்வி அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவன் காலை தேய்த்து விட்டாள்.

"ரொம்ப வலிக்குதா?" பதறினாள்.

பதில் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன். தலையை உயர்த்தி அவனை பார்த்த ஆழ்வி, சுயநினைவு பெற்று தயக்கத்துடன் எழுந்து நின்றாள். அவளுக்கு படு சங்கடமாய் போனது. தன் மனதில் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை இனியவனுக்கு. அவனது தங்கையே ஒன்றும் செய்யாமல் நிற்கும் பொழுது, ஆழ்வி எதற்காக இவ்வளவு பதற்றப்படுகிறாள்? அப்பொழுது அவன் மூளைக்குள் வேறு ஒரு விஷயமும் உரைத்தது,

"நீ இப்போ என்னை எப்படி கூப்பிட்ட?" என்று கண்களை சுருக்கினான்.

"என்னங்கன்னு..." என்று மெல்லிய குரலில் கூறினாள் ஆழ்வி.

மென்று விழுங்கினான் இனியவன். இனம் புரியாத ஒரு பதற்றம் அவன் மனதை ஆட்கொண்டது. தன் இதயத்தில் ஒரு படபடப்பை உணர்ந்தான் அவன். மேலும் தான் பலவீனம் அடைந்து விடும் முன் அங்கிருந்து உடனடியாக தன் அறையை நோக்கி சென்றான்...! தன் அறைக்கு வந்த அவன், சோபாவில் அமர்ந்து கண்களை மூடினான்.

அவன் தலைக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் அந்த குரல் ஆழ்வியுடையதா? அவனுக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஏனென்றால், ஆழ்வியின் குரல், அவன் தலைக்குள் ஒலிக்கும் அந்த குரல் போல் உரக்க ஒலிக்கவில்லை. அவள் அவனை மெதுவாக அழைத்தாள். அது அவள் குரல் தானா என்று அவனுக்கு உடனடியாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால் எப்படி? அவளிடம் கேட்டால் கூறுவாளா? ஏன் அவனிடம் அனைவரும் எதையோ மறைப்பது போல் அவனுக்கு தோன்றுகிறது? அவனது சொந்த குடும்பத்தினரே அவனுக்கு ஏன் அந்நியமாய் தெரிகிறார்கள்? அதே நேரம், அவன் இதயம் ஏன் தனக்கு ஆழ்வியுடன் ஏதோ தொடர்பு இருப்பது போல் உணர்கிறது? அப்படி என்ன தொடர்பு இருந்து விட முடியும்? அது அவன் ஏற்கனவே ஒருமுறை அவளை சந்தித்திருக்கிறான் என்பதால் ஏற்பட்ட உணர்வா? இல்லை, அவன் மனம் கூறிய பதிலில் அவனுக்கு திருப்தி இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று அவன் முடிவு எடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே நடந்தான். ஆழ்வி இன்னும் வரவேற்பறையில் தான் அமர்ந்திருந்தாள். அவள் தன்னை பார்க்கிறாள் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான். படிக்கட்டின் மத்தியில் வந்து நின்று, தள்ளாடியபடி தன் தலையைப் பிடித்து அழுத்தினான். அவன் எதிர்பார்த்தபடியே அவனைப் பார்த்து திகில் அடைந்தாள் ஆழ்வி. தனக்கு மயக்கம் வருவது போல் பாசாங்கு செய்தான் இனியவன்.

அனைத்தையும் மறந்து,

"என்ன்னனங்க..." என்று உரத்த குரல் எழுப்பிய படி அவனை நோக்கி விரைந்தாள் ஆழ்வி.

அவன் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த குரல், ஆழ்வியுடையது தான் என்பது நிச்சயமாகி போனது இனியவனுக்கு. ஆனால் அவளது குரல் அவன் மனதிற்குள் ஏன் ஒலிக்கிறது? அவனை சிலர் அடித்துப் போட்ட போது அவள் அந்த இடத்தில் இருந்தாளா? ஆனால் அவளுக்கு தான் அவனை தெரியாதே...! அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஓடி வந்து அவனை இறுக பற்றிக் கொண்டாள் ஆழ்வி. மெல்ல தள்ளாட்டத்துடன் படி இறங்கி வந்தான் இனியவன். அவன் தோள்களை பற்றி தன் மீது சாய்த்துக் கொண்டாள் ஆழ்வி, அவனுக்கு அதிர்ச்சி அளித்து.

"என்னங்க, உங்களுக்கு என்ன செய்யுது? கடவுளே! இப்ப நான் என்ன செய்வேன்...?" என்று பிதற்றினாள் ஆழ்வி.

அவனை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தாள். அங்கிருந்த தண்ணீர் குவளையை எடுத்துப் பார்த்தபோது அதில் தண்ணீர் இருக்கவில்லை. தண்ணீர் கொண்டு வர சமையல் அறையை நோக்கி ஓடினாள். அப்பொழுது, தன் தொடையின் கீழ் எதையோ உணர்ந்தான் இனியவன். அது ஒரு கைபேசி. அதை எடுத்து, அங்கிருந்த மேசையின் மீது வைக்க நினைத்த போது, அவன் பெரு விரல் ரேகை அழுந்தி, அந்த கைபேசி அன்லாக் ஆனது. அது அவனை மேலும் குழப்பியது. யாருடைய கைபேசி இது? அந்த கைபேசியை லாக் செய்து, மீண்டும் அதை அன்லாக் செய்ய அவன் நினைத்தபோது, ஆழ்வியின் காலடி சத்தம் கேட்டு, அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ஆழ்வி. மெல்ல கண் திறந்தான் இனியவன். அவள் அவனை தண்ணீர் குடிக்க செய்தாள். அவன் அதை மறுக்கவில்லை. அவள் முகத்தை உற்று கவனித்தபடி தண்ணீரை பருகினான்.

"இப்போ பரவாயில்லயா?" என்றாள் கவலையாக.

ஆம் என்று தலையசைத்த அவன், அவளது முகத்தில் தோன்றிய நிம்மதியை கவனித்தான். சோபாவை விட்டு மெல்ல எழுந்து நின்றான்.

"கொஞ்ச நேரம் உட்காரலாமே"

"பரவாயில்ல" என்றபடி மாடியை நோக்கி மெல்ல நடந்தான்.

ஆழ்வி தன்னை பின்தொடர்வதை உணர்ந்த அவன்,

"என்ன?" என்றான்.

அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,

"எதுக்காக என் பின்னாடி வர?" என்றான்.

"நீங்க மயங்கினீங்க..."

"அதுக்கு?"

"நீங்க பத்திரமா போறீங்களான்னு பார்க்க தான் வரேன்"

"என்னைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற?" என்ற அவனது கேள்வி, சில நொடி அவளை திகைப்படைய வைத்தது.

"உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்"

"தேவையில்ல. நானே போவேன்"

தயங்கியபடி நின்றாள் அவள்.

"போ..."

"நீங்களும் போங்க"

"போறேன்" என்று தன் அறைக்கு வந்து கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டான். நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.

ஆனால் இனியவன் தன் நிம்மதியை மொத்தமாய் தொலைத்தான். யார் இந்த பெண்? இவன் தள்ளாடுவதை பார்த்து அவள் ஏன் கலக்கமடைய வேண்டும்? அவன் விழுந்தால் அவளுக்கு என்ன? அவள் அவனைப் பற்றிக் கொண்ட விதமும், தன் மீது சாய்த்துக் கொண்ட விதமும், அவன் மீது அக்கறை காட்டிய விதமும், அனைத்தும் அவனை குழப்பியது.

அதுமட்டுமின்றி, அந்த கைபேசி யாருடையது? எதற்காக அவனது கைரேகை பதிந்தவுடன் அது திறந்து கொள்ள வேண்டும்? அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.

அன்று இரவு

அந்த நாள் முழுவதும் குழப்பமும் சிந்தனையுமாய் கடந்தது இனியவனுக்கு. தூக்கம் வராமல் படுக்கையில் பிரண்டு கொண்டிருந்தான். தண்ணீர் குடிக்க அங்கிருந்த பாட்டிலை எடுத்த போது அது காலியாய் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு சத்தம் இன்றி அறையை விட்டு வெளியே வந்தான். தண்ணீரை குடித்துவிட்டு, அந்த பாட்டிலையும் நிரப்பிக் கொண்டு தன் அறைக்கு நடந்தான். அப்பொழுது, கிரில் போடப்பட்ட அந்த அறையில் மெல்லிய வெளிச்சம் இருப்பதை பார்த்தான்.

"என்ன லைட் அது?" என்று முணுமுணுத்த படி அந்த அறையை நோக்கி  மெல்லச் சென்றான்.

ஆழ்வி அந்த அறையில் இருப்பதை பார்த்து முகம் சுருக்கினான். அந்த அறையின் மூலையில் அமர்ந்து, தன் கைபேசியை பார்த்து அழுது கொண்டிருந்தாள் ஆழ்வி. அவள் கைபேசியின் வெளிச்சத்தில் அவள் அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. ஏனோ அவள் அழுவதை பார்த்தபோது அவன் மனதை ஏதோ செய்தது. எதற்காக அவள் அழுது கொண்டிருக்கிறாள்? தன் கைபேசியில் எதையோ பார்த்த அவள் முகம், சட்டென்று புன்னகையை சூடிக் கொண்டது. அடுத்த நொடியே மீண்டும் அவள் தன் கைபேசியை அணைத்தபடி அழத்துவங்கினாள். இனியவனுக்கு ஒன்றுமே புரியாவிட்டாலும், ஏதும் நல்லதாய் தோன்றவில்லை. அது ஏனென்று அவனுக்கே புரியவில்லை. தன்னை பார்த்தால் அவள் என்ன செய்வாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அங்கேயே நின்றான். தன் முழங்கால்களை கட்டிக்கொண்டு, அதில் தன் முகம் புதைத்துக் கொண்டாள் அவள்.

"ஆழ்வி..." என்று மெல்லிய குரலில் அவளை அழைத்தான் இனியவன்

திடுக்கிட்டு தலையை உயர்த்திய ஆழ்வி, தன் கண்களை அவசரமாய் துடைத்துக் கொண்டு இங்கும் அங்கும் தேடினாள். இனியவன் இருளில் நின்றிருந்ததால், அவன் நின்றிருப்பதை அவளால் பார்க்க முடியவில்லை. ஒரு விரக்தி பெருமூச்சு விட்டு, கரங்களால் முகத்தை மூடினாள், அது அவளது கற்பனை என்று எண்ணி.

"ஆழ்வி..." என்று மீண்டும் அவளை அழைத்தான் இனியவன்.

எழுந்து நின்ற அவள், தன் கைபேசியின் டார்ச்சை உயிரூட்டி, யாராவது இருக்கிறார்களா என கவனித்தாள். இனியவன் அவளை பார்த்துக்கொண்டு நின்றிருப்பதை பார்த்த அவள், தன் கைபேசியை சட்டென்று கீழே இழுத்துக் கொண்டாள். அவளது மனதை பதற்றம் ஆட்கொண்டது. இனியவன் அவளை கேள்வி கேட்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவன் என்ன கேட்கப் போகிறானோ...! தன் முகத்தை துடைத்தபடி வெளியே வந்தாள்.

இனியவனின் சக்தி வாய்ந்த பார்வை தன் மீது இருப்பதை கண்டாள். அவள் தன்னிடம் பேசுவாளா இல்லையா என்று யோசித்தபடி நின்றான் இனியவன்.

"நீங்க தூங்கலயா?"

"உன்னை நானும் அதே கேள்வியை தான் கேட்க நினைக்கிறேன், ஆழ்வி"

"இல்ல, எனக்கு தூக்கம் வரல" அதனால தான்..." என்ற அவள் பேச்சை வெட்டி,

"அழுதுகிட்டு இருந்தியா?" என்றான்?

"அழுதேனா? நானா? இல்லயே..." என்று சமாளித்தாள்.

"நீ அழுததை நான் பார்த்தேன்" என்றான் உறுதியோடு.

"ஓ, அதுவா? என் கண்ணுல ஏதோ விழுந்துடுச்சு"

அவள் கூறுவது பொய் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அது அவள் சொந்த விஷயமாக இருக்கலாம் என்று எண்ணி தன் அறைக்கு சென்றான் இனியவன்.

அவன் தன் அறைக்கு சென்று கதவை சாத்தி தாளிடும் வரை, அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஆழ்வி. பொங்கி வந்த அழுகையை உதடு கடித்து கட்டுப்படுத்திய படி பார்கவியின் அறையை நோக்கி ஓடினாள். பார்கவிக்கு வாக்கு கொடுத்தபடி, அன்று அவள் அறையில் தான் தங்கினாள் ஆழ்வி. 

மறுநாள் காலை

கோட்டு சூட்டு சகிதம் வந்த இனியவனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எங்கோ செல்வதற்காக அவன் முழுவதும் தயாரான நிலையில் வந்தான். அங்கிருந்த அனைவரையும் விட, அதிகமாய் அதிர்ச்சியுடன் காணப்பட்ட ஆழ்வியை அவன் கவனித்தான்.

"நீ எங்க போற, இன்னு?" என்றார் பாட்டி.

"ஆஃபீஸுக்கு போறேன் பாட்டி"

"என்னது? ஆனா பூஜை முடிகிற வரைக்கும் நீ வீட்டிலேயே இருப்பேன்னு சொன்னியே" என்றாள் நித்திலா.

"சும்மா ஒரு மணி நேரத்துக்கு போயிட்டு வரேன் கா. என்னால வீட்ல உக்காந்திருக்க முடியல"

"ஏன் இப்படி எல்லாம் செய்ற? உனக்கு தலையில அடிபட்டு இருக்கு. நீ ரெஸ்ட் ல இருக்கணும்"

"ஒரு மணி நேரத்துல வந்துடுவேன் கா"

"போகணும்னு என்ன அவசியம்?"

"நான் உயிரோட இருக்கேன்னு உலகத்துக்கு சொல்லணும். அதுக்காக போறேன்"

"அதை இரண்டு நாள் கழிச்சு கூட செய்யலாமே"

"ஏற்கனவே ஆறு மாசம் வீணா போச்சு. என்னோட ஆஃபீஸ் கண்டிஷன் எப்படி இருக்குன்னு எனக்கு தெரியல"

"குரு தான் அதைப் பார்த்துக்க இருக்கானே"

"நானும் இருக்கேன்"

அவர்கள் கூறும் எந்த சமாதானத்தையும் ஏற்க அவன் தயாராக இல்லை என்பது புரிந்து போனது.

"நீ காரை ஓட்டிகிட்டு போகாத. டிரைவரை கூட்டிக்கிட்டு போ"

"அக்கா, ப்ளீஸ், ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. நான் நல்லா இருக்கேன்"

நேற்று மாலை உங்களுக்கு மயக்கம் வந்ததே என்று கூற நினைத்தாள் ஆழ்வி. ஆனால் அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று பயந்தாள். ஒருவேளை அவன் அவள் மீது கோபம் கொள்ளலாம். அதனால் அவள் அமைதி காத்தாள்.

"எனக்கு பிரேக்ஃபாஸ்ட் குடுப்பீங்களா, மாட்டீங்களா?" என்றான் இனியவன்.

தான் சமைத்த, அவனுக்கு பிடித்த பேன்கேக்கை அவனுக்கு பரிமாறினாள் ஆழ்வி. அதை பார்த்த அவன், அவளை நோக்கி புருவம் உயர்த்தினான். அவள் தட்டையே பார்த்தபடி அவனுக்கு அதை பரிமாறினாள்.

பேன்கேக் போலவே இருந்த பேன் கேக்கை அவன் சாப்பிட்டு, அதை நிச்சயம் முத்து செய்திருக்க மாட்டான் என்று புரிந்து கொண்டான். அவன் தான் முத்து சமைத்ததை ஏற்கனவே சாப்பிட்டு இருக்கிறானே...!

அப்பொழுது தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தான் முத்து.

"முத்து..." என்று அவனை அழைத்தான் இனியவன்

"சொல்லுங்க அண்ணா"

"பேன் கேக் ரொம்ப நல்லா இருக்கு"

ஆழ்வியை பார்த்த முத்து,

"பேன் கேக் ரொம்ப நல்லா இருக்காம்" என்றான்.

இனியவன் தன் இட புருவத்தை உயர்த்தி அவனை பார்க்க,

"அவங்க தான் இன்னைக்கு அதை செஞ்சாங்க அண்ணா" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் முத்து.

"எனக்கு ஒரு விஷயம் புரியல. எப்படி நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளியை நீங்க சமைக்க விடுறீங்க?" என்றான் இனியவன்.

"அவ போர் அடிக்குதுன்னு சொன்னா. அதனால தான்" என்றார் நித்திலா.

"ஆழ்வி நம்ம குடும்பத்துல ஒருத்தி. அப்படி தான் நாங்க நினைக்கிறோம்" என்றார் பாட்டி.

"ரொம்ப நல்லா இருந்தது, ஆழ்வி. ரொம்ப தேங்க்ஸ்" என்றான் இனியவன்.

லேசான தலையசைப்பை பதிலாக தந்தாள் ஆழ்வி.

"நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடு. நீ போர் அடிக்குதுன்னு சமைச்ச. அதுக்காக எல்லாருக்கும் நீ தான் பரிமாறணும்னு அவசியம் இல்ல" என்றான்.

மறுப்பு கூறாமல் அமர்ந்தாள் ஆழ்வி. சாப்பிட்டு முடித்து, அங்கிருந்து சென்றான் இனியவன். குருவுக்கு ஃபோன் செய்து, இனியவனின் வரவை அவனிடம் கூறினாள் நித்திலா. இனியவனை வரவேற்க தன்னை தயார் படுத்திக் கொண்டான் குரு.

அலுவலகத்தை நோக்கி காரை செலுத்திக் கொண்டு சென்றான் இனியவன். சிக்னலில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்ததை பார்த்து வண்டியை நிறுத்தினான். அந்த சிக்னல் மாற எண்பத்தி ஐந்து வினாடிகள் இருந்ததை பார்த்து எரிச்சல் அடைந்தான்.

"எல்லாமே மாறிடுச்சு. இந்த சிக்னலோட டைம், ஆறு மாசத்துக்கு முன்னாடி வெறும் 45 நிமிஷம் தான்" என்று நினைத்தான் இனியவன்.

அப்பொழுது வேறு ஒரு கார் அவன் காருக்கு பக்கத்தில் வந்து நின்றது. அந்த காரின் பாசஞ்சர் சீட்டில் இருந்த ஒருவன் தன் காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, இனியவனை பார்த்து கையசைத்தான். முகத்தில் எந்த பாவமும் இன்றி அவனை ஏறிட்டான் இனியவன்.

"எப்படி இருக்கீங்க ஹீரோ?" என்றான் அந்த மனிதன்.

அவன் ஹீரோ என்று யாரை அழைக்கிறான் என்று புரியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தான் இனியவன்.

"நான் உங்ககிட்ட தான் பாஸ் பேசுறேன்"

"என்கிட்டயா?"

"ஆமாம். என்னை மறந்துட்டீங்களா?"

அந்த மனிதன் யார் என்று இனியவனுக்கு தெரியவில்லை.

"நம்ம மாமல்லபுரத்துல மீட் பண்ணணோமே..." என்று அந்த மனிதன் ஆர்வமுடன் கூட, அது அவனை மேலும் குழப்பியது.

தொடரும்...



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top