34 அவன் மனதில் இருப்பது என்ன?
34 அவன் மனதில் இருப்பது என்ன?
(வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறப்பு பதிவு)
ஆழ்வியை பார்த்த இனியவனின் முகம் பிரகாசமடைந்தது. அவனது இதழ்கள் அணிச்சையாய் புன்னகை புரிந்தன. அனைவரது பார்வையும் ஆழ்வியின் மீது இருந்ததால், அவன் முக மாற்றத்தை ஒருவரும் கவனிக்கவில்லை. இனியவனால் தன் கண்களை நம்ப முடியவில்லை. சமாளித்துக் கொண்ட அவன்,
"எப்படி இருக்கீங்க, பாட்டி?" என்றான் ஆழ்வியை பார்த்தவாறு.
"நீ நல்லா ஆன பிறகு, எனக்கு என்ன கவலை? ரொம்ப சந்தோஷமா இருக்கேன்"
"எங்க போயிருந்தீங்க?"
"நானும் ஆழ்வியும் கோவிலுக்குப் போயிருந்தோம்" என்றார் அவர், ஆழ்வியை சுட்டிக்காட்டி.
அவன் ஆழிவியை பார்த்த போது, அவள் தன் வயிற்றுக்குள் ஏதோ உருளுவது போல் உணர்ந்தாள். அவளது பெயரை மனதிற்குள் முணுமுணுத்தான் இனியவன், ஆழ்வி...!
சூழ்நிலையை சித்திரவேல் தன் கையில் எடுத்துக் கொள்ள நினைத்த போது, பாட்டி முந்தி கொண்டார்.
"இவ ஆழ்வி, நம்ம பார்கவியோட ஃப்ரெண்ட். நம்ம வீட்ல தான் ஒரு மாசமா தங்கியிருக்கா. வேலை தேடி வந்திருக்கா"
"ஹாய் ஆழ்வி..." என்றான் அவள் முகத்தை கவனித்தவாறு.
நித்திலாவும் பார்க்கவியும் புன்னகை புரிந்தார்கள்.
"வண...க்கம்ங்க..." என்று தடுமாறினாள் ஆழ்வி.
பார்கவியை நோக்கி திரும்பிய இனியவன்,
"உன்னோட எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிருக்கும் இல்ல?" என்றான்.
"ஆமாம் ணா..."
"பாஸ் பண்ணிடுவியா?" என்றான் கிண்டலாய், எப்பொழுதும் போலவே.
"நிச்சயமா பாஸ் பண்ணிடுவேன். ஏன்னா, எனக்கு முன் பெஞ்சில் இருந்தது ஆழ்வி" என்று சிரித்தாள் பார்கவி.
ஆச்சரியமடைந்தான் இனியவன். ஏனென்றால், அவள் காப்பி அடித்ததை பற்றி எல்லாம் இதற்கு முன் அவனிடம் பேசியது இல்லை.
"உன்னோட ஃபிரண்டு எழுதின ஆன்சர் எல்லாம் கரெக்ட்டுதான்னு உனக்கு தெரியுமா?" என்றான் இனியவன் ஆழ்வியை பார்த்து புன்னகைத்தவாறு.
"அவ தான் ணா எங்க க்ளாஸ் டாப்பர். அவ நம்ம ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணனும்னு நான் நினைச்சேன். ஆனா அவ தான் அதை மெரிட்டோட செய்யணும்னு நினைக்கிறா. அதனால தான் ப்ராப்பரான இன்டர்வியூக்காக காத்துக்கிட்டு இருக்கா" என்றாள் பார்கவி பெருமையுடன்.
"ஓ..." என்று இனியவன் ஆழ்வியை பார்க்க, அவள் அவனை பார்க்கவில்லை.
இனியவனின் கவனம் மீண்டும் அந்த சென்சார் செய்யப்பட்ட அறைக்கு சென்றது.
"நீங்க யாரும் எனக்கு இந்த ரூமை திறந்து காட்ட விரும்பல போல இருக்கு...!" என்றான்.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, இன்னு" என்று ஆழ்வியின் பக்கம் திரும்பிய நித்திலா,
"ஆழ்வி, அதை ஓபன் பண்ணு" என்றாள்.
சரி என்று தலையசைத்த ஆழ்வி, தன் கட்டை விரலை சென்சாரில் அழுத்தி, அதை திறக்க, மேலும் வியப்புக்கு உள்ளானான் இனியவன்.
"என்னால இதை நம்ப முடியல. நீ தான் ஜிம் அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பாக்குறியா ஆழ்வி?" என்றான்
"ஆமாம், அவங்க தான் வீட்ல சும்மா இருக்காம ஏதாவது செய்யணும்னு கேட்டாங்க. அதனால தான், இந்த பொறுப்பை நான் அவங்க கிட்ட விட்டேன்" என்றான் சித்திரவேல்.
"ஆழ்வி..." அவளை அழைத்தான் இனியவன்.
"ஆங்...?" என்றாள் திடுக்கிட்டு.
"உன்னை பார்த்தா, ஜிம்முக்கு எல்லாம் போற மாதிரி தெரியலையே... உனக்கு இதுல ஏதாவது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?"
அவள் இல்லை என்று தலையசைத்தாள். இனியவன் ஏதும் கூறுவதற்கு முன்,
"அவ கத்துக்குவா, இன்னு. அவ ரொம்ப டேலண்டட் பர்சன்" என்றாள் நித்திலா.
இனியவன் திகைத்தான். ஆழ்விக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனாலும் அவளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த அறைக்குள் நுழைந்தான். அங்கு நுழைந்த உடன் அவன் ஏதோ விசித்திரமாய் உணர்ந்தான். அவன் மனதை அந்த இடம் ஏதோ செய்தது. அவனுக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை. உடனே வெளியேறினான்.
"இன்னு, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ"
"ஆமாம் கா, எனக்கு தலை வலிக்குது. ஒரு காபி கிடைக்குமா?" என்று அவன் கூறியது தான் தாமதம், சமையலறையை நோக்கி விரைந்தாள் ஆழ்வி, அவனுக்கு காபி கொண்டு வர.
"அவ எங்க ஓடுறா?" என்றான் இனியவன்.
"உனக்கு காபி கொண்டு வர"
"அவளா?"
"ஆமாம்"
"எனக்கா?" என்றான் நம்ப முடியாமல்
"உனக்கு தான்"
"ஆனா ஏன்?"
"அவங்க அப்படித்தான்" என்றான் சித்திரவேல்.
ஒன்றும் கூறாமல் தன் அறைக்குச் சென்றான் இனியவன்.
பார்கவி பாட்டியை சந்தோஷமாய் அணைத்துக்கொண்டாள்.
"ஆழ்வியை கூட்டிகிட்டு வந்ததுக்கு தேங்க்யூ சோ மச் பாட்டி"
நித்திலாவை ஏறிட்டார் பாட்டி.
"எப்படி நீ ஆழ்வியை இன்னு கிட்ட இருந்து தள்ளி வைக்க நினைக்கலாம்?"
"நான் அவங்கள போக சொல்லல. அவங்க தான் பிடிவாதமா நான் போறேன்னு சொன்னாங்க. அவங்க இன்னுவை ஸ்ட்ரெஸ் பண்ண விரும்பல"
"அவ மனநிலை சரியில்லாதவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு கூடத்தான் சொன்னா. அப்போ, நீ தான் அவளை கட்டாயப்படுத்தி சரின்னு சொல்ல வச்ச. அப்படி இருக்கும்போது, இன்னைக்கு ஏன் நீ அதை செய்யல? எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும், நீ அவளுக்கு சப்போர்ட்டா இருந்து பிரச்சனையை சமாளிப்பேங்குற நம்பிக்கையை நீ அவளுக்கு கொடுத்து இருக்கணும்"
"நான் இன்னுவை ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ண வேண்டாம்னு நினச்சேன். அவன் ரொம்ப பெரிய மன நோய்ல இருந்து இப்ப தேறி வந்திருக்கான்"
"அதனால ஆழ்வி எப்படி போனாலும் பரவாயில்லன்னு விட்டுட்டியா?"
"இல்ல பாட்டி, நான் அவளை விட்டுடல. நான் அவளுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன். எப்படியும் நான் அவளை மறுபடியும் கூட்டிக்கிட்டு வந்திருப்பேன். இது ரெண்டு மூணு நாளைக்கு தான்..."
"உனக்கு எடுத்து சொல்லப்பட்ட விஷயத்தை எல்லாம் ஓரமா வச்சுட்டு (என்ற போது அவர் சித்திரவேலை பார்த்தார்) விஷயத்தோட ஆழம் என்னன்னு நீ ஆராஞ்சி பார்த்து இருக்கணும். நீ தான் அவளை இன்னுவோட வாழ்க்கையில கூட்டிகிட்டு வந்த. அவளோட வாழ்க்கைக்கு நீ தான் பொறுப்பு. எப்படி நீ அவளைப் போக விடலாம்?"
"இல்ல பாட்டி, நாங்க..." என்று சித்திரவேல் ஏதோ கூற நினைக்க, அவனை தடுத்து நிறுத்தினார் பாட்டி.
"போதும் மாப்பிள்ளை. நீங்க இன்னு மேல வச்சிருந்த அக்கறையை நாங்க ஏற்கனவே பார்த்தோம். இப்போ அவன் நல்லாயிட்டான். எங்களுக்கு (என்பதை அழுத்தி) அவனைப் பத்தி உங்களை விட நல்லாவே தெரியும். இந்த நிமிஷத்துல இருந்து நாங்க அவனை பார்த்துக்குறோம்" என்றார்.
பாட்டி தன்னை இப்படி மூக்குடைப்பு செய்வார் என்பதை சித்திரவேல் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நித்திலா தனக்கு சாதகமாய் பேசுவாள் என்று எதிர்பார்த்த அவன், ஏமார்ந்து போனான்.
"நீங்க என்னை தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்க, பாட்டி"
"இதைப்பத்தி மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பல. இன்னு விஷயத்துல நாங்க கேர்லஸ்ஸா இருந்தது உண்மை தான். ஆனா இதுக்கப்புறம் நாங்க அப்படி இருக்க விரும்பல. ஆழ்வி இங்க வந்துட்டா. அவளோட நல்ல குணத்தை யாராலையும் விரும்பாம இருக்க முடியாது, இன்னுவையும் சேர்த்து. அவனுக்கு நிச்சயமா ஆழ்வியை பிடிக்கும். இல்லனா, நாங்க அவனுக்கு பிடிக்கிற மாதிரி செய்வோம்"
அந்த இடம் விட்டு எரிச்சலோடு அகன்றான் சித்திரவேல். பாட்டியின் கரத்தை பற்றிய நித்திலா,
"ஐ அம் சாரி பாட்டி, நான் ஆழ்வியை போக விட்டிருக்க கூடாது. நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான்"
"எடுப்பார் கை பிள்ளையா இருக்கிறது நல்லது இல்ல, நித்தி. நம்ம எடுக்குற முடிவு சரியா தப்பான்னு யோசிக்கிற அறிவு நமக்கும் இருக்கு. நமக்கு நல்லா தெரியும், தன்னோட குடும்பத்தை உதறி தள்ளிட்டு தான் ஆழ்வி நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. அப்படி இருக்கும் போது, அவ யாரோட பொறுப்பு? நம்ம தானே...?"
ஆம் என்று தலையசைத்தாள் நித்திலா.
"நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், நித்தி. ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கை நம்மளை சார்ந்து இருக்கு"
"சத்தியமா இனிமே எந்த தப்பும் நடக்காம பாத்துக்குறேன் பாட்டி"
சரி என்று தலையசைத்து நடந்தார் பாட்டி
அலுவலகம்
ஒரு முக்கியமான கான்ஃபரென்சை முடித்துக் கொண்டு வெளியே வந்த குருபரன், யாரோ தன்னை அழைப்பதை கேட்டு நின்றான். ரீனாவின் முன்னாள் கணவனான ராஜா சர்மா அங்கு நின்றிருப்பதை பார்த்து புன்னகை புரிந்தான்
"ஹலோ சார், எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன். நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா குரு?"
"தாராளமா கேளுங்க சார்"
"இனியவன் எங்க? அவனுக்கு என்ன தான் ஆச்சு? அவனைப் பத்தி ஆளாளுக்கு என்னென்னமோ பேசுறாங்களே... என்னால அதையெல்லாம் தாங்கவே முடியல"
"அவன் நல்லா இருக்கான், சார்"
"நீங்க ஏன் ஒரு தடவை அவனை ஆஃபிசுக்கு கூட்டிக்கிட்டு வந்து எல்லார் வாயையும் அடைக்கக் கூடாது?"
"அதை சீக்கிரமே நிச்சயமா செய்வேன், சார். இனியவன் உங்க எல்லாருக்கும் முன்னாடி வருவான்"
"அது சீக்கிரம் நடக்கணும்னு நான் விருப்பப்படுகிறேன். இந்த ஆஃபீஸ் இழந்த தன்னுடைய களையை அடையும்"
"நீங்க சொல்றது சரி தான் சார்"
"டேக் கேர்"
ராஜா சர்மா அவனிடமிருந்து விடை பெற்று சென்றார். ஒரு பக்கம் அவருடைய முன்னாள் மனைவி இனியவனை எள்ளி நகையாடுகிறாள். இவரோ அவனை நினைத்து கவலைப்படுகிறார்.
அப்பொழுது குருபரனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பு பார்கவியிடம் இருந்து வந்ததை பார்த்து அதன் முகம் மலர்ந்தது.
"சொல்லு கவி"
"அண்ணனுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு"
"என்ன்னனது?"
"நேத்து சாயங்காலம் அவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துட்டாரு. நாங்க அவரை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணோம். அவருக்கு நினைவு திரும்பி வந்த போது, அவருக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு"
"அப்படின்னா அவன் ஆழ்வியை மறந்துட்டான்..."
"ஆமாம் குரு, அண்ணன் ஆழ்வியை மறந்துட்டாரு."
"ஆழ்வி எப்படி இருக்காங்க?"
"அவ நல்லா இருக்கா. அவ மீனாவோட வீட்டுக்கு போறேன்னு சொல்லி அங்க போனா. ஆனா பாட்டி அவளை மறுபடியும் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க"
"என்ன்னனது? எதுக்காக அவங்க வீட்டை விட்டு போனாங்க?"
மருத்துவமனையில் நடந்தவற்றை அவனிடம் கூறினாள் பார்கவி.
"நீ ஏன் என்கிட்ட எதையும் முன்னாடியே சொல்லல?" என்றான் கோபமாய்.
"நான் உனக்கு ஃபோன் பண்ணேன். ஆனா உன் நம்பர் வாய்ஸ் மெயில்ல இருந்தது. உனக்கு ஃபாரின் கிளைன்ட் மீட்டிங் இருக்குன்னு நீ ஏற்கனவே என்கிட்ட சொல்லி இருந்த. அதனால தான் நான் உனக்கு ஃபோன் பண்ணல"
"சரி நான் வீட்டுக்கு வரேன்"
"ஓகே"
அழைப்பை துண்டித்த குரு, கோபத்தில் பல்லை கடித்தான். சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு எப்படி சரியாய் அடுத்த நாள் இனியவன் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தான்? இதுவும் சித்திரவேலின் கேடுகெட்ட வேலையாக தான் இருக்க வேண்டும். எப்படியோ இனியவனுக்கு நினைவு திரும்ப விட்டது. ஆனால் அவன் ஆழ்வியை மறந்து விட்டான். இப்போது ஆழ்வியின் நிலை என்ன? அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு இனியவனைக் காணச் சென்றான் குருபரன்.
இன்பவனம்
தன் அறைக்கு வந்த இனியவன் கட்டிலில் விழுந்தான். ஏதோ ஒன்று அவனது மூளையை தாக்கியது அவன் நாசியிலன் வழியாக... அந்த தலையணையில் வீசிய வாசனை...! அதை நுகர்ந்த அவன் முகம் சுருக்கினான். அது ரூம் ஃபிரஷ்னர் வாசனை போலவும் இல்லை, சோப்பு வாசனை போலவும் இல்லை. ஆனால் அந்த மனம் நன்றாக இருந்தது. என்ன மனம் இது?
அப்பொழுது அவன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒருவேளை வந்திருப்பது ஆழ்வியாக இருக்குமோ என்ற ஆர்வத்தோடு அவன் பார்த்தான். அவள் தானே அவனுக்கு காபி போட சமையலறைக்கு ஓடினாள்? ஆனால் முத்துவை பார்த்தவுடன் அவன் முகத்தில் லேசான ஏமாற்றம் தெரிந்தது. உள்ளே வா என்பது போல் அவனுக்கு சைகை செய்தான். காபி குவளையுடன் உள்ளே வந்த முத்து, அதை அவனிடம் கொடுத்தவாறு,
"எப்படி இருக்கீங்க அண்ணா?" என்றான் மகிழ்ச்சியை குரலில் காட்டி.
"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?" என்றான் அந்த காப்பியை பருகிய படி.
"நல்லா இருக்கேன் அண்ணா"
"காபி ரொம்ப நல்லா இருக்கு. நீ நல்லா காபி போட கத்துக்கிட்ட போல இருக்கே" என்று வேண்டுமென்றே கூறினான், அந்த காபியை போட்டது யார் என்று தெரிந்து கொண்டே.
"ஆழ்வி அண்ணி..."
காபி குடிப்பதை நிறுத்தினான் இனியவன், முத்து ஆழ்வியை அண்ணி என்று அழைத்ததை கேட்டு.
"பார்கவி அக்கா ஃபிரண்டு தான் போட்டாங்க"
"நீ அவளை அண்ணின்னு கூப்பிடுறியா?"
"வாய் தவறி சொல்லிட்டேன் ணா" என்று பொய் கூறினான். வேண்டுமென்றே தான் அவன் ஆழ்வியை அண்ணி என்று அழைத்தான். இனியவனின் மனதில் சந்தேக விதையை தூவ வேண்டும் என்பதற்காக.
காபியை குடித்து அந்த குவளையை அவனிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு முத்து, அவன் அறையை விட்டு சென்றான்.
மீண்டும் கட்டிலில் படுத்தான் இனியவன். இப்பொழுது அவன் படுத்தது மற்றொரு தலையணையின் மீது. ஆனால் அது முன்னால் தந்த வாசனையை தரவில்லை. மீண்டும் அந்த தலையணையை எடுத்து நுகர்ந்தான். ஏன் இந்த தலையணையில் மட்டும் இந்த வாசனை வருகிறது? என்ற யோசனை அவன் மனதில் தோன்றியது. அந்த தலையணையை அணைத்துக் கொண்டான். அந்த வாசம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவன் இதழில் புன்னகை மலர்ந்தது. ஆழ்வி அவன் வீட்டில் இருக்கிறாள். அதோடு மட்டுமல்லாது, அவனுக்கு காபி போட்டு கொடுத்தாள்...!
அவன் ஒருமுறை தற்செயலாய் சந்தித்த பெண் அவள்...!
ஆம் அவன் தாக்கப்படுவதற்கு முன், அவளை அவன் ஒரு முறை சந்தித்து இருக்கிறான். அன்று வழக்கம் போல் அவன் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் மிதிவண்டியில் சென்ற வயதான ஒரு பழ வியாபாரி, சாலையில் கொட்டி கிடந்த பிரேக் ஆயிலை கவனிக்காமல் செல்ல, அதில் சறுக்கி, அவர் மிதிவண்டி யோடு கீழே சரிந்தார். அவர் கொண்டு வந்த மாம்பழங்கள் சாலையில் உருண்டு ஓடின. ஆனால் அதைப்பற்றி கவலையில்லாமல் அந்த மாம்பழங்களை நசுக்கியபடி வாகனங்கள் அவரை கடந்து சென்றன. அதை கவனித்த இனியவன், தன் காரை நிறுத்தினான். காரை விட்டு இறங்கி அவருக்கு உதவலாம் என்று அவன் நினைத்த போது, அவனது கால்கள் ஒட்டிக்கொண்டன, ஒரு பெண் நடு ரோட்டில் தோன்றி, எதிரே வந்த வாகனங்களை கைகாட்டி நிற்கச் செய்தாள். அவள் பார்க்க எளிமையாகவும் மென்மையானவளாகவும் தோன்றினாள். அதே நேரம் அழகாகவும் தைரியசாலியாகவும் இருந்தாள். அந்த பழ வியாபாரி தன் பழங்களை அவசரமாய் பொறுக்க துவங்கினார். அந்தப் பெண்ணும் அவருக்கு உதவினாள். அவளுக்கு நன்றி கூறிவிட்டு அந்த இடம் விட்டு சென்றார் அந்த பழ வியாபாரி.
இனியவனும் அந்த இடம் விட்டு சென்றான். அந்த பெண்ணை பற்றி நினைத்த போதெல்லாம், அப்பொழுதெல்லாம் அவன் முகத்தில் ஓர் மெல்லிய புன்னகை தோன்றியது. அடுத்த மூன்றாவது நாள், அவன் தாக்கப்பட்டு தன் சுயநினைவை இழந்தான். ஆனால் அந்த மூன்று நாட்களில் எப்போதெல்லாம் அவன் அந்த இடத்தை கடந்தானோ, அப்பொழுதெல்லாம் அவனது கண்கள் அந்தப் பெண்ணை தேடியது. அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. இப்பொழுது அவள், அவன் வீட்டில் தன் தங்கையின் தோழியாய் வந்திருக்கிறாள். அவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவளை பிடித்து விட்டது போல் தெரிகிறது...! அவள் இவ்வளவு இனிமையானவளாக இருந்தால் ஏன் பிடிக்காது? அக மகிழ்வோடு புன்னகை புரிந்தான் இனியவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top