33 இன்பவனத்தில் இனியவன்
33 இன்பவனத்தில் இனியவன்
"எங்க அக்காவை நான் பாக்கணும்" என்று இனியவன் கூறியதை கேட்ட செவிலி, மருத்துவரை ஏறிட்டாள். அவர் சரி என்று தலையசைக்கவும், அவசர சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்தாள்.
"அவர் கண் முழிச்சிட்டாரு. அவங்க அக்காவை பார்க்கணும்னு சொல்றாரு" என்றாள்.
'அக்காவை பார்க்க வேண்டும்' என்று அவன் கூறுகிறான் என்றால், அவனது பழைய நினைவு அவனுக்கு திரும்பி வந்துவிட்டது என்பது அவர்களுக்கு புரிந்து போனது. அது அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது, சித்திரவேல் ஒருவனைத் தவிர. இனியவனை சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என்று தான் அவனை படிக்கட்டில் இருந்து தள்ளினான். ஆனால், அவனது செயல் அவனுக்கே வினையாய் முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எது நடக்கக்கூடாது என்று அவன் நினைத்தானோ அது நடந்து விட்டது. இனியவனுக்கு நினைவு திரும்பி விட்டது. ஏற்கனவே குருபரனுக்கு அவன் மீது சந்தேகம் இருக்கிறது. இனியவனுக்கு கொடுத்த மருந்தை பற்றியும், அதை கொடுத்த மருத்துவனை பற்றியும் குருபரன் இனியவனிடம் கூறினால், இரண்டே நாட்களில் அனைத்தையும் கண்டுபிடித்து விடுவான் இனியவன். போதாத குறைக்கு ஆழ்வி வேறு அவனது மிகப்பெரிய பலமாய் நிற்கிறாள். அவனுடைய குள்ளநரி புத்தி வேகமாய் வேலை செய்தது.
அவர்கள் அனைவரும் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே நுழைய நினைத்த போது, அவர்களை தடுத்தான் சித்திரவேல்.
"இரு நித்தி, மச்சான் கிட்ட போறதுக்கு முன்னாடி, அவர்கிட்ட ஆழ்வியை பத்தி என்ன சொல்ல போறேன்னு யோசிச்சிட்டு போ"
அவனை குழப்பத்தோடு ஏறிட்டாள் நித்திலா.
"நமக்கு இனியவனை பத்தி நல்லா தெரியும். அவர் தன்னை ரொம்ப உயர்வா எண்ணக் கூடியவர். தான் பைத்தியமா இருந்தோம்னு தெரிஞ்சா அவர் என்ன நினைப்பாரு? அவரு பார்கவியை ரேப் பண்ண ட்ரை பண்ணாருன்னு அவர்கிட்ட நீ சொல்ல போறியா? பார்கவியை அவர்கிட்ட இருந்து காப்பாத்தும் போது, ஆழ்வியை அவரு சீரழிச்சதனால, அவருக்கு அவங்களையே கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்னு சொல்ல போறியா?"
நித்திலா அதிர்ந்து நின்றாள்.
"அவரு ஆழ்வியை மனைவியா ஏத்துக்க விரும்பலனா என்ன செய்வ? அவர் பைத்தியமா இருந்ததை ஞாபகப்படுத்துறாங்க அப்படின்னு அவங்களை அவர் வெறுத்தா என்ன செய்வ?"
வெறுப்பு என்ற வார்த்தையை கேட்ட ஆழ்வி, தன் சேலை முந்தானையை இறுகப்பற்றினாள். இனியவனின் வெறுப்பை அவளால் தாங்கவே முடியாது. அவன் அவளை வெறுத்தால், அவள் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டாள். அவள் தன் வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தில் நிற்கிறாள் என்பதை உணர்ந்த போது, அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
"நம்ம அவருக்கு எப்படிப்பட்ட பொண்ணை தேடினோம்னு நீ மறந்துட்டியா? சந்தர்ப்பவாசத்தால அவர் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணை கல்யாணம் மன்னிக்க வேண்டியதா போச்சுன்னு தெரிஞ்சா, அவர் வருத்தப்பட மாட்டாரா? இப்ப தான் அவரு மனநிலை பாதிப்பிலிருந்து வெளிய வந்திருக்காரு. மறுபடியும் நீ அவரை ஸ்டிரெஸ் பண்ண போறியா?"
"ஆனா, ஆழ்வி அவனோட வைஃப்..."
"நான் இல்லன்னு சொல்லல. ஆனா, அதை அவர்கிட்ட சொல்றதுக்கான நேரம் இது இல்லன்னு தான் சொல்றேன். முதல்ல அவரோட மனநிலை எப்படி இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கணும். அதை தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் மெதுவா ஆழ்வியை பத்தி அவர்கிட்ட சொல்லலாம்"
"இல்ல, எது எப்படி இருந்தாலும், இன்னு ஆழ்வியை பத்தியும், அவனுடைய கல்யாணத்தை பத்தியும் தெரிஞ்சுகிட்டு தான் ஆகணும். அவன் ஆழ்வியை ஏத்துக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் உறுதியாக.
"ஒருவேளை ஏத்துக்கலனா? அது தான் என்னோட கேள்வி. உனக்கு இனியவனை பத்தி தெரியாதா? அவர் தன் முடிவை மாத்திக்க கூடியவரா? அவர் எவ்வளவு பிடிவாதக்காரர்னு நமக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஆழ்வியோட வாழ்க்கையில நீ ரிஸ்க் எடுக்கணும்னு நினைக்கிறியா?"
நித்திலா ஏதோ கூற முற்பட்டபோது,
"அவர் சொல்றது சரி தான்" என்றாள் ஆழ்வி.
நித்திலாவும் பார்கவியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டார்கள்.
"இனியவருக்கு தலையில அடிபட்டு இருக்கு. அவர் இப்போ மன அழுத்தம் இல்லாம இருக்கணும். அவர் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை பாத்துட்டாரு. மேலமேல அவரை குழப்ப வேண்டாம். அவர் கொஞ்சம் தேறி வர்ற வரைக்கும் நான் காத்திருக்கேன். அதுவரைக்கும் நான் நம்ம வீட்ல இருந்து வெளியில போறேன்"
"இல்ல, நான் உன்னை எங்கேயும் போக விடமாட்டேன். எனக்கு இனியவனை பத்தி நல்லா தெரியும். அவன்கிட்ட இத பத்தி எப்படி பேசணும்னு எனக்கு தெரியும். நீ போக வேண்டாம், ஆழ்வி"
"நீங்க இவ்வளவு நம்பிக்கையா இருக்கும் போது, ரெண்டு மூணு நாள்ல என்னக்கா ஆயிடும்?"
நித்திலா எதுவும் கூறுவதற்கு முன்,
"இது நல்ல யோசனையா தெரியுது. நாங்க இனியவனோட கண்டிஷனை பத்தி உங்களுக்கு அப்டேட் பண்றோம்" என்றான் சித்திரவேல்.
அப்பொழுது ஒரு செவிலி இனியவனின் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
"நித்திலா, பார்கவி யாரு?"
"இவங்க ரெண்டு பேரும் தான்" என்றான் சித்திரவேல்.
"அவர் உங்க ரெண்டு பேரையும் உள்ள கூப்பிடுறாரு" என்றாள்.
நித்திலாவும் பார்கவியும் ஆழ்வியை வேதனையோடு பார்த்தார்கள். தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட ஆழ்வி,
"நீங்க போய் அவரை பாருங்க கா" என்றாள்.
"ஆனா நீங்க எங்க போவீங்க, ஆழ்வி? நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போக மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது, உங்களால வேற எங்க போக முடியும்?"
"நான் மீனா வீட்டுக்கு போறேன்"
"வேணா, ஆழ்வி. நம்ம முயற்சி பண்ணி பார்க்கலாம்"
"வேணாம் கா. நான் ரிஸ்க் எடுக்க விரும்பல" என்று அவள் அங்கிருந்து கிளம்ப நினைத்த போது, அவள் கையைப் பிடித்து நிறுத்திய நித்திலா,
"நீ என்னை நம்புற இல்ல?" என்றாள்.
ஆம் என்று தலையசைத்த அவள், கண்ணீர் சிந்திய படி மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.
"நித்தி, மச்சான் உங்களுக்காக காத்திருக்காரு" என்றான் சித்திரவேல்.
நித்திலாவும் பார்கவியும் உள்ளே சென்றார்கள். சித்திரவேல் வெற்றி புன்னகை பூத்தான். அவன் உடனடியாக முத்துவுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்றான் முத்து.
"முத்து, இனியவன் வீட்டுக்கு வராரு. அவர் ரூம்ல இருக்கிற ஆழ்வியோட எல்லா திங்ஸையும் எடுத்துடு. நம்ம அதை ஆழ்விக்கு அனுப்பி வைக்கணும்"
"அண்ணி எங்க போனாங்க?"
"அவங்க மீனா வீட்டுக்கு போயிட்டாங்க"
"அவங்க ஏன் அங்க போனாங்க?"
"என்னை கேள்வி கேக்குறதை நிறுத்திட்டு, நான் சொன்னதை செய். இனியவன் வீட்டுக்கு வரும் போது, ஆழ்வி அங்க இருந்ததுக்கான எந்த தடயமும் இருக்கக் கூடாது. இனியவனுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது"
முத்துவுக்கு விஷயம் புரிந்து போனது.
"சரி" என்ற முத்து, யோசனையுடன் இனியவனின் அறைக்குச் சென்றான். அங்கிருந்த ஆழ்வியின் அனைத்து பொருட்களையும் நீக்கி ஒரு பையில் எடுத்து அடுக்கினான்... ஒரு பொருளைத் தவிர... தலையணை உறை.
இதற்கிடையில்...
நித்திலாவையும் பார்கவியையும் பார்த்த இனியவன், புன்னகை புரிந்தான். அவர்கள் இருவரும் ஓடிச்சென்று அவனை அணைத்து கொண்டு அழுதார்கள்.
"ரிலாக்ஸ், கைஸ்... ஐ அம் ஆல்ரைட்" என்றான்.
அவன் பழையபடி பேசியதை கேட்ட அவர்கள், மகிழ்ச்சி அடைந்தார்கள்.
"என்னை சில பேரு அடிச்சாங்க தானே?"
அவர்கள் அழுதபடி ஆம் என்று தலையசைத்தார்கள். அப்பொழுது அங்கிருந்த நாள்காட்டியின் மீது அவன் பார்வை சென்றது.
"வாட் த ஹெல்... நான் ஆறு மாசம் சுயநினைவு இல்லாம இருந்தேனா?"
அவர்கள் அனைவரும் திகைத்து நிற்க,
"நீங்க கோமாவுல இருந்தீங்க" என்றான் சித்திரவேல்.
"என்ன்னனது? கோமாவா?" என்றான் அதிர்ச்சியோடு.
"ஆமாம்..."
"ஆனா, எனக்கு ஏதோ வித்தியாசமா தோணுது... என்னன்னு தெரியல" என்று முகம் சுருக்கினான்.
"வித்தியாசமான்னா எப்படி?" என்றாள் நித்திலா ஆர்வத்தோடு.
"என...க்கு தெரி...யல..."
"நித்தி, எதுக்காக அவரை ஸ்ட்ரெஸ் பண்ற? அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்"
தன் கன்னத்தை தடவிய இனியவன், முகம் சுளித்தான்.
"அக்கா எனக்கு முடி வளர்றது நின்னுடுச்சா?"
இப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து முகம் சுருக்கினார்கள்.
"ஆறு மாசமா பெட்ல இருந்து இருக்கேன்... ஆனா என் முகத்துல தாடியே இல்லயே... ஷேவ் பண்ணிட்டீங்களா?" என்று சிரித்தான்.
"ஆமாம், நித்தி தான் டாக்டர் கிட்ட சொல்லி உங்களுக்கு ஷேவ் பண்ண சொன்னா. தாடியோட உங்களை பார்க்க அவளுக்கு சங்கடமா இருந்தது"
வியப்போடு புருவம் உயர்த்தினான் இனியவன்.
"உனக்கு தலை வலிக்குதா, அண்ணா?" என்றாள் பார்க்கவி.
"லேசா" என்றான் புன்னகையோடு.
"கொஞ்ச நேரம் தூங்கு" என்றாள் நித்திலா.
"வீட்டுக்கு போகலாம், கா" என்றான் சலிப்போடு.
"நிச்சயமா போகலாம். நான் டாக்டர் கிட்ட டிஸ்டார்ஜ் பத்தி பேசுறேன். அதுவரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்ற சித்திரவேல், மருத்துவரை காணச் சென்றான்.
நித்திலாவும் பார்கவியும் கூட வெளியே வந்தார்கள்.
"அக்கா, எனக்கு ஆழ்வியை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு" என்று கண்ணீர் சிந்தினாள் பார்கவி.
"ஆமாம் கவி. ஆனா, இன்னுவை இப்போ ஸ்ட்ரெஸ் பண்ண முடியாது. அவனை ரெண்டு நாள் கவனிச்சுட்டு, அதுக்கப்புறம் ஆழ்வியை பத்தி அவன் கிட்ட சொல்லலாம்."
"எப்படியாவது அதை செய், கா"
"நிச்சயம் செய்வேன். ஆழ்வி கூட இருந்தா, நிச்சயம் இன்னு சந்தோஷம் தான் படுவான்"
அப்பொழுது பாட்டி சந்தோஷமாய் வருவதை அவர்கள் பார்த்தார்கள். சித்திரவேல் அவருக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறிவிட்டிருந்தான்.
"இன்னு உங்ககிட்ட பேசினானா?"
"ஆமாம் பாட்டி, நம்ம இன்னு திரும்ப வந்துட்டான்..."
"ஆழ்வி எங்க? அவ முகத்துல இருக்கிற சந்தோஷத்தை நான் பாக்கணும்" என்றார் பாட்டி ஆர்வத்தோடு.
"அவ இங்க இல்ல பாட்டி"
"இங்க இல்லன்னா என்ன அர்த்தம்?"
அங்கு நடந்தவற்றை பாட்டியிடம் விளக்கிக் கூறினாள் நித்திலா. பாட்டியின் முகம் மாறியது. ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நடந்தார்.
"பாட்டி, எங்க போறீங்க?"
"கோவிலுக்கு போறேன்"
"நீங்க இன்னுவை பாக்கலையா?"
"அவன் எங்க போகப் போறான்? வீட்டுக்கு தானே வரப்போறான்?" என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்தார்.
அவர் அங்கிருந்து செல்வதை பார்த்த சித்திரவேல், நித்திலாவிடம் வந்து,
"பாட்டி எங்க போறாங்க?" என்றான்.
"கோவிலுக்கு போறாங்க"
"ஓஹோ, அவங்க இன்னு திரும்பி வந்ததுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லப் போறாங்களா?" என்றான்.
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
மீனாவின் வீடு
தன் வீட்டின் வாசலில் நின்ற ஆழ்வியை பார்த்து குழம்பினாள் மீனா.
"ஆழ்வி, எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன்"
"உன் வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?"
"நல்லா இருக்காரு"
"நீ அவரை தனியா விட்டுட்டு இங்க எப்படி வந்த?"
"நான் கொஞ்ச நாளைக்கு இங்க தங்கலாமா?" என்றாள் அவள் கேள்விக்கு பதில் அளிக்காமல்.
"இங்கயா? எல்லாம் நல்லா தானே இருக்கு? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்றாள் பதற்றத்தோடு.
நடந்தவற்றை ஆழ்வி அவளிடம் கூற, அதைக் கேட்ட மீனா பதற்றமடைந்தாள்.
"நீ கவலைப்படாத ஆழ்வி. ஒருவேளை உன் மாமியார் வீட்டை சேர்ந்தவங்க யாரும் உன் புருஷன் கிட்ட எதுவும் சொல்லலன்னா, அதை நான் செய்வேன்" என்றாள்.
"நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?"
மீனா சரி என்று தலையசைத்தாள். அவளுக்கு தெரியும் ஆழ்வியால் தூங்க முடியாது. சிறிது நேரம் தனியாக இருக்க நினைக்கிறாள். மீனா அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு,
அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவை திறந்த மீனா, பார்கவியின் பாட்டி நின்றிருப்பதை கண்டாள்.
"வாங்க பாட்டி" என்று மகிழ்வோடு கூறினாள்.
"ஆழ்வி எங்க?"
"அவ என் ரூம்ல இருக்கா"
"நான் அவளை பார்க்கலாமா?"
"தாராளமா பாருங்க. வாங்க பாட்டி" என்று அவரை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் மீனா. அந்த அறையின் கதவை அவள் தட்டிய போது,
"மீனா, கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடு ப்ளீஸ்" என்றாள் ஆழ்வி கெஞ்சலாய்.
"ஆழ்வி..." என்று பாட்டி அழைக்க, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் ஆழ்வி.
தன் கண்களை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள். பாட்டி உள்ளே வந்தார். சாதாரணமாய் இருப்பதாய் காட்டிக் கொள்ள அவரை பார்த்து புன்னகைத்தாள் ஆழ்வி. அவளை ஊடுருவும் பார்வை பார்த்தார் பாட்டி. தன்னை வெகு நேரம் கட்டுப்படுத்த முடியவில்லை அவளால். பாட்டி தன் கைகளை விரிக்க, அவரை கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள் ஆழ்வி. அவளது முதுகை வருடி கொடுத்த பாட்டி,
"வா போகலாம்" என்றார்.
அவரை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் ஆழ்வி.
"இல்ல பாட்டி... அவரை ஸ்ட்ரெஸ் பண்ண வேண்டாம்..."
"இன்னுவை நம்ம ஸ்ட்ரெஸ் பண்ண கூடாதுன்னு நான் ஒத்துக்குறேன். ஆனா அதே நேரம், நீ ஸ்ட்ரெஸ் ஆக நான் விடமாட்டேன். நீ எங்க வீட்டு மருமக. எங்க இன்னுவோட வைஃப். நீ அவன் கூட, எங்க வீட்ல தான் இருக்கணும்"
"ஆனா..."
"நீ அவன் வைஃப்ன்னு நம்ம அவன் கிட்ட இப்போவே சொல்ல போறது இல்ல. ஆனா நீ அவன் கூட தான் இருக்கணும். அது தான் என்னோட முடிவு"
"பாட்டி..."
அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார் பாட்டி.
"நான் ஆழ்வியை எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன்" என்றார் பாட்டி மீனாவிடம்.
"சரிங்க பாட்டி" என்று சந்தோஷமாய் தலையசைத்தாள் மீனா.
ஆழ்வியை காரில் அமர வைத்து வண்டிகை கிளப்புமாறு ஓட்டுனருக்கு கட்டளையிட்டார் பாட்டி.
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு, பாட்டி"
"பயமா? உனக்கா?" என்று சிரித்தார் பாட்டி.
ஆழ்வி பெருமூச்சு விட்டாள்.
"ஆழ்வி, உன் தைரியத்தை நான் ரொம்ப ரசிச்சிருக்கேன். அவன் காட்டுமிராண்டியா இருந்தப்போ அவனோட ரூமுக்குள்ள நீ தைரியமா போன. யாராலயும் கட்டுப்படுத்த முடியாத அவனை உன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்த. அவன் குணமானதுக்கு பிறகு உனக்கு பயமா இருக்கா?"
அவள் மனதில் என்ன உணர்கிறாள் என்பதை எப்படி கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை.
"கவலைப்படாத, உன்னை மாதிரி நல்ல பொண்ணை அவன் நிச்சயம் வெறுக்க மாட்டான்"
தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதாள் ஆழ்வி.
"இனியவன் எவ்வளவு இனிமையானவன்னு நீ பார்க்க போற. ஆனா நீ ஒரு வேலை செய்யணும்"
"என்ன பாட்டி?"
"உன்னோட தாலியை மறைச்சுக்கோ"
"ஏன் பாட்டி?"
"என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல?"
"இருக்கு"
"அப்போ நான் சொல்றதை செய்"
பாட்டி கூறியதை கேட்ட ஓட்டுநர் புன்னகை புரிந்தார். அவருக்கு பாட்டி ஏன் அப்படி கூறினார் என்று புரிந்து போனது. தாலியோடு அவளை இனியவன் பார்த்தால், அவளை வேறொருவரின் மனைவி என்று நினைப்பான். அதன் பிறகு அவளை திரும்பி கூட பார்க்க மாட்டான். அதனால் தான் அவளது மாங்கல்யத்தை அவர் மறைக்கச் சொன்னார்.
இதற்கிடையில்...
கண்களை மூடி படுத்திருந்த இனியவன், திடுக்கிட்டு கண் விழித்தான்.
"என்ன்னனங்க...!" என்ற நடுக்கம் தரும் பெண்ணின் குரல் தன் மனதில் ஒலித்ததை கேட்டு.
தன் கண் முன்னால் யாரோ இறந்து விழுவதை போல அப்படி அலறுவது யார்? அது கனவா அல்லது அவனுடைய கற்பனையா? அவனால் முடிவுக்கு வர முடியவில்லை. அந்த குரல் அவனுக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.
மருத்துவமனையில் முடிக்க வேண்டிய சம்பிரதாயங்களை முடித்துக் கொண்ட சித்திரவேல், இனியவனை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
இன்பவனம்
அவனுக்கு ஆலம் சுற்றினாள் நித்திலா. வழக்கம் போல் ஏகத்தாள புன்னகை வீசினான் இனியவன். வீட்டிற்குள் நுழைந்த அவன், தன் அறைக்குச் செல்ல மனமில்லாமல் தன் வீட்டை சுற்றி பார்வையிட்டபடி இருந்தான்.
"நம்ம வீடு தலைகீழா மாறின மாதிரி தெரியுது" என்ற அவனது கவனத்தை ஒன்று ஈர்த்தது. கிரில் கதவு போடப்பட்ட அறை. முகத்தை சுருக்கி சிரித்த அவன்,
"ஆறு மாசத்துல இவ்வளவு மாற முடியுமா?" என்ற படி அந்த அறையை நோக்கி சென்றான். அதில் இருந்த சென்சார் லாக் அவனை வியப்புறச் செய்தது. அந்த அறை காலியாய் இருந்தது.
அனைவரும் ஒருவரை ஒருவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டார்கள். சித்திரவேலின் மூளை வேகமாய் வேலை செய்தது.
"இது என்ன ரூம்?" என்றான் இனியவன்.
"நாங்க ஒரு சின்ன ஜிம் வைக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்"
"ஓக்க்க்கே... ஆனா அதுக்கு கிரில் கேட் அவசியமா?"
"கொஞ்சம் ரிச்சா செய்யலாம்னு நினைச்சோம்..."
"நைஸ்... கதவைத் திறங்க" என்றான்.
சித்திரவேல் திகில் அடைந்தான். இன்னும் அவன் ஆழ்வியின் கைரேகையை அதிலிருந்து மாற்ற வில்லையே...!
"என்ன ஆச்சு?" என்று புருவம் உயர்த்திய இனியவன்,
"இன்னு..." என்ற குரல் கேட்டு திரும்பினான்.
ஒரு பெண்ணுடன் நின்றிருந்த பாட்டியை பார்த்து புன்னகை புரிந்தான் இனியவன். ஆழ்வியை கண்ட சித்திரவேல் அதிர்ச்சி அடைய, நித்திலாவும் பார்கவியும் நிம்மதி அடைந்தார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top