32 மீண்டுவிட்ட இனியவன்
32 மீண்டுவிட்ட இனியவன்
"நான் கிளம்புறேன். எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டு, நான் உங்களுக்கு கால் பண்றேன்" என்றான் குருபரன். நித்திலா சரி என தலையை அசைத்தாள்.
குருபரன் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின், தன் அறைக்குச் சென்றாள் நித்திலா. அவளை சித்திரவேல் பின் தொடர்ந்தான். அவர்கள் செல்லட்டும் என்று காத்திருந்த பார்கவி, குருபரனுக்கு பின்னால் ஓடினாள்.
"குரு..." என்று அவள் கூப்பிட, காரின் கதவை திறக்க சென்ற குருபரன், நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.
"குரு, நானும் உங்க கூட வரட்டுமா?"
"எங்க வர போற? ஆஃபீஸுக்கா?"
"இல்ல இல்ல ராமநாதபுரத்துக்கு"
"ஏன் கவி? நீ அங்க வந்து என்ன செய்யப் போற?" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.
"ஆழ்வி கூப்பிட்டா, மீனாவும் வருவா"
"அப்படின்னா நீயும் எங்க கூட வர தயாராக இருக்க?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"அந்த கிளினிக்கை பத்தி மீனா உன்கிட்ட எப்ப சொன்னா?"
"அண்ணன் ஆழ்வியை அட்டாக் பண்ணப்போ சொன்னா..."
"அந்த கிளினிக்கை பத்தி என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லயா?"
"இல்ல... மாமா..."
"நீயும் உன் விவஸ்த்தைக் கெட்ட மாமாவும்... உங்க அண்ணனை விட உங்க மாமா உனக்கு முக்கியமா போய்ட்டானா?"
"அக்காவும் பாட்டியும் அமைதியா இருக்கும் போது என்னால என்ன செய்ய முடியும்?"
"அவங்க அமைதியா இருந்தாங்க... அதனால, இது எந்த அளவுக்கு அவசியம்னு நீ யோசிக்க கூட இல்ல. அப்படித்தானே?"
"இல்ல குரு, அந்த நேரத்துல எனக்கு எதுவுமே தோணல"
"ஆமா, உனக்கு அழ மட்டும் தான் தெரியும். எத்தனை தடவை நீ ஆழ்விக்காக அழுதிருப்ப? அழறதை நிறுத்திட்டு, உங்க அண்ணனுக்கு எப்படி ட்ரீட்மென்ட் பண்றதுன்னு நீ பிரயோஜனமா யோசிச்சிருக்கணும். அதையும் செய்யல, அவனை குணமாக்குறதுக்கு இருந்த வழியை பத்தி என்கிட்டயும் சொல்லல..."
பதில் கூற முடியாமல் அமைதியாய் நின்றாள் பார்கவி. கோபமாய் அந்த இடம் விட்டு அகன்றான் குருபரன். அவன் தன் மீது கடும் கோபத்தில் இருப்பதை புரிந்து கொண்டாள் பார்கவி.
இதற்கிடையில்...
தன் அறைக்கு வந்த நித்திலா தன் உடைகளை எடுத்து ஒரு பையில் அடுக்க தொடங்கினாள்.
"நித்தி, பெரிய பேக்கா எடுத்துக்கிட்டா நம்ம ரெண்டு பேரோட டிரஸ்ஸையும் வைக்கலாமில்ல?" என்றான் சித்திரவேல்.
"நீங்க எங்க கூட வர வேண்டாம். நீங்க இங்கேயே இருந்து உங்க வேலையை பாருங்க" என்றாள் நித்திலா கோபமாய்.
"இல்ல, நித்தி..."
"போதும்... நீங்க இதுவரைக்கும் செஞ்சதே போதும். உங்களை நம்புனது எவ்வளவு பெரிய தப்புன்னு நிரூபிச்சிட்டீங்க. கண்மூடித்தனமா உங்களை நம்புனதுக்காக நான் வெட்கப்படுறேன். இந்த நிமிஷத்திலிருந்து நீங்க சொல்ற எதையும் நான் கேட்கப் போறதில்ல"
"தயவுசெய்து என்னை இப்படி எல்லாம் அவமானப்படுத்தாத, நித்தி. நீ பேசுறதை எல்லாம் பார்த்தா, மச்சானோட நிலைமைக்கு நான் தான் காரணம்னு சொல்ற மாதிரி இருக்கு"
"நீங்க தான் காரணம். சந்தேகம் இல்லாம நீங்க தான் காரணம்"
"நித்தி... ப்ளீஸ் நான் சொல்றதை கேளு"
"உங்க வெட்டி எமோஷன்சை கேட்க எனக்கு நேரமில்ல. இந்த குடும்பத்துக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். எது எப்படி இருந்தாலும் நான் அதை செஞ்சு தான் தீருவேன். இன்னு குணமாகற வரைக்கும் நான் சும்மா இருக்க போறதில்ல"
"நீ அதை செய்ய வேண்டாம்னு நான் சொல்லலயே..."
"நீங்க சொன்னா மட்டும் யாரு கேக்க போறது?" என்று அந்த அறையை விட்டு வெளியேறினாள் மேலும் அவனிடம் விவாதிக்க விருப்பம் இல்லாமல்.
எரிச்சலுடன் தன் தலையை கோதினான் சித்திரவேல். புவனேஸ்வரன் கைது செய்யப்பட்டு விட்டான். தான் எவ்வளவு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று சித்திரவேலுக்கு தெரியும். இதன் பிறகு குருபரன் நிச்சயம் சும்மா இருக்க மாட்டான். இனியவனையும், அவனை சேர்ந்தவர்களையும் சுற்றி அவனது கண்கள் பதிந்திருக்கும். முக்கிய குற்றவாளியை பிடிக்கும் வரை அவன் ஓய மாட்டான். குருபரனுக்கு தன்மீது மிகுந்த சந்தேகம் இருக்கிறது. அவனது கைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படலாம். அவனும் கண்காணிக்கப்படலாம். அவனுடைய செயல்பாடுகளை சில நாட்களுக்கு அவன் நிறுத்தி வைக்க வேண்டும். அதற்கு முன், இனியவன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்லாமல் தடுக்க வேண்டும். இனியவன் குணமாக கூடாது. அவன் சுயநினைவை பெற்று விட்டால், அவனது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். எப்படியாவது அவனை தடுத்து நிறுத்த வேண்டும். அதை எப்படி செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தான் சித்திரவேல்.
மறுபுறம்,
"நெஜமாவா சொல்ற?" என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் மீனா, ஆழ்வி இனியவனை ராமநாதபுரம் அழைத்துச் செல்ல போகும் விஷயத்தை கேட்டு.
"ஆமா, நாங்க ராமநாதபுரம் போறோம். நீயும் என் கூட வரணும்னு நான் விரும்புறேன். எங்க கூட வரியா, மீனா?" என்றாள் ஆழ்வி.
"நிச்சயமா... நான் உன் கூட சந்தோஷமா வருவேன், ஆழ்வி. உங்க ஆக்காமடேஷன் பத்தி எல்லாம் நீ கவலையே படாத. எங்க சித்தப்பா கிட்ட சொல்லி உனக்கு எல்லா வசதியும் நான் செஞ்சு கொடுக்கிறேன். அண்ணன் குணமாகற வரைக்கும் அங்க நீ எந்த பிரச்சனையும் இல்லாம தங்குறதுக்கு நான் கேரன்டி"
"தேங்க்யூ சோ மச், மீனு"
"சுவாமிகிட்ட பேசிட்டியா?"
"பேசப் போறேன்... இதை உன்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு நினைச்சேன். உன்னால தானே அவர் இந்த அளவுக்கு குணமாகி இருக்காரு! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மீனா"
"ஹலோ, இந்த மாதிரி தேங்க்ஸ் எல்லாம் சொல்லி நீ எஸ்கேப் ஆக முடியாது. எனக்கு ட்ரீட் வேணும்"
"உனக்காக என்ன வேணாலும் செய்வேன்"
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆழ்வி. நான் உன்னை நினைச்சி எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா?"
"தெரியும் டா... நான் சுவாமிகிட்ட பேசிட்டு எப்போ கிளம்பறதுன்னு உனக்கு சொல்றேன்"
"நானும் எங்க சித்தப்பா கிட்ட இதை பத்தி பேசறேன்"
"சரி"
அழைப்பை துண்டித்து விட்டு சுவாமிக்கு ஃபோன் செய்தாள் ஆழ்வி.
"எப்படி இருக்கேம்மா?"
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சுவாமி"
"உங்க சந்தோஷத்துக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?"
"நாங்க உங்ககிட்ட அவரை கூட்டிகிட்டு வரப் போறோம்?" என்றாள் குதூகலமாய்.
"அப்படியா? உங்க குடும்பத்தார் கிட்ட நம்ம ட்ரீட்மெண்ட்டை பத்தி சொல்லிட்டீங்களா?"
"இல்லங்க சுவாமி. அவங்களை பொறுத்த வரைக்கும், இனியவர் உங்களுடைய புது பேஷன்ட்"
"அப்படியா? ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம ட்ரீட்மென்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திடலாம். அவர் சீக்கிரமாகவே குணமாயிடுவாரு"
"ரொம்ப நன்றி சுவாமி"
"இப்போ அவர் எப்படி இருக்காரு?"
"ரொம்ப நல்லா நடந்துக்குறாரு ஆனா சட்டுனு கோபம் வந்துடுது. பிடிவாதம் அதிகமா இருக்கு. எல்லாத்தையும் டிமாண்ட் பண்றாரு"
"அதெல்லாம் அவரோட சுபாவமா இருக்கும். அவரை தான் இங்க அழைச்சிக்கிட்டு வர போறீங்களே... அதுக்கப்புறம் அவரை நாங்க பார்த்துக்கிறோம்"
"சரிங்க சுவாமி. ரொம்ப நன்றி" என்று அழைப்பை துண்டித்தாள்.
அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கவிழ்ந்து படுத்துக் கொண்டு தனது தலையணையை நுகர்ந்து கொண்டிருந்த இனியவனை பார்த்தபடி சென்று கதவை திறந்தாள் ஆழ்வி. அங்கு நித்திலா நின்று கொண்டிருந்தாள்.
"உள்ள வாங்கக்கா... "
"உங்க ஃபிரண்டு மீனாவுக்கு ஃபோன் பண்ணி, நம்ம இன்னுவோட ட்ரீட்மென்ட்க்கு வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் கொஞ்சம் சீக்கிரமா செய்ய சொல்லுங்க. நம்ம ஏற்கனவே ரொம்ப லேட் பண்ணிட்டோம்"
"சரிங்க அக்கா, நான் மீனா கிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்"
நித்திலா அங்கிருந்து செல்ல எத்தனித்து, பின் நின்று,
"ஐயம் சாரி ஆழ்வி" என்றாள்.
"ஏன் கா சாரி சொல்றீங்க?"
"எல்லாத்துக்கும் தான். முக்கியமா கண்மூடித்தனமா இருந்ததுக்கு. என்னோட பொறுப்பை உங்க தோளில் சுமத்திட்டு நான் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்...!"
ஆழ்வி அமைதியாய் இருந்தாள். இதைப் பற்றி அவள் என்ன கூற முடியும்?
"ஆனாலும் ஒரு விஷயத்தை நம்ம மறுக்க முடியாது. என்னோட தப்பால எங்க இன்னுவோட வாழ்க்கையில ஒரு நல்லது நடந்திருக்கு. அவனுக்கு நீங்க கிடைச்சிருக்கீங்க. நீங்க அவனோட வாழ்க்கையில அடி எடுத்து வச்சிருக்கீங்க. நான் இதை அந்த விதத்துல தான் பாக்குறேன்"
ஆழ்வி புன்னகை புரிந்தாள்.
"ரொம்ப சீக்கிரமே நம்ம பழைய ஐபிகே வை பார்க்க போறோம். எனக்கு அதுல பரிபூரண நம்பிக்கை இருக்கு"
அவள் கூறியதை ஏற்று தலையசைத்தாள் ஆழ்வி. நித்திலா அங்கிருந்து புன்னகையோடு நடந்தாள்.
மோட்டுவளையை முறைத்து பார்த்துக் கொண்டு படுத்திருந்த இனியவனை பார்த்த ஆழ்வி,
"என்னங்க, நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்" என்று சமையல் அறையை நோக்கி ஓடினாள்.
சமையலறையில் முத்து பழச்சாறு தயாரித்துக் கொண்டிருந்தான். ஆழ்வியை பார்த்து, தன் வேலையை நிறுத்தினான்.
"ஏதாவது சொல்லணுமா, முத்து?"
"சித்ரா அண்ணன் வந்து, அந்த மருந்தை எடுத்து சிங்கில் கொட்டி தண்ணியை திறந்து விட்டுட்டாரு, அண்ணி"
"எப்போ?"
"இப்போ தான்"
"சரி, ஜாக்கிரதையா இருங்க"
"நீங்களும் ஜாக்கிரதையா இருங்க, அண்ணி. அவர் உங்க மேல ரொம்ப கோவமா இருப்பாரு"
ஆழ்வி சரி என்று தலையசைத்தாள். தன் வேலையை தொடர்ந்தான் முத்து.
அதே நேரம், இனியவனின் அறைக்கு சென்ற சித்திரவேல்,
"இனியவன், என்கூட வா" என்றான்.
அவனை நோக்கி ஒரு அலட்சிய பார்வையை வீசிவிட்டு தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் இனியவன்.
"ஆழ்வி உன்னை கிச்சனுக்கு வர சொன்னாங்க" என்றான்.
கட்டிலில் இருந்து எகிறி குதித்த இனியவன், சமையலறையை நோக்கி ஓடினான். அவனைத் தடுத்து நிறுத்த சித்திரவேல் முயன்றான். ஆனால் இனியவனின் வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனாலும் அவனை பின்தொடர்ந்து ஓடினான், வரவேற்பறையில் யாராவது இருக்கிறார்களா என்று எச்சரிக்கையாய் பார்த்தபடி. அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, இனியவனை மாடிப்படியில் பிடித்து தள்ளினான். மாடிப் படியிலிருந்து எகிறி கீழே விழுந்த இனியவன்,
"ஆழ்.....வி..." என்று கூச்சலிட்டான்.
அப்பொழுது சமையல் அறையை விட்டு வெளியே ஓடிவந்த ஆழ்வி, இனியவன் கீழே விழுவதை பார்த்து திகில் அடைந்தாள்.
"என்...னங்க..." என்ற கதறலுடன் அவனை நோக்கி ஓடினாள்.
கடைசி படிக்கட்டில் இனியவனின் தலை மோதி, அவனது கண்கள் இருண்டது.
"என்னங்க..." என்ற ஆழ்வியின் குரல், அவன் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது... அவன் மயக்க நிலைக்குச் செல்லும் வரை.
அங்கு ஓடி வந்த அனைவரும், இனியவனை தன் மடியில் ஏந்தி அழுது கொண்டு இருந்த ஆழ்வியை பார்த்து பிரம்மை பிடித்தபடி நின்றார்கள். இனியவனை பிடித்து தள்ளிவிட்ட சித்திரவேல், உடனடியாக அந்த இடம் விட்டு அகன்று, இப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் வந்து நின்றான்.
இனியவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். மருத்துவர்கள் அவனை பரிசோதித்துப் பார்த்தார்கள். அவன் படிக்கட்டில் இருந்து எகிறி விழுந்ததால் அவன் தலையில் மட்டும் தான் காயம் ஏற்பட்டிருந்தது. சிடி ஸ்கேன் செய்யப்பட்டு, இனியவன் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டான்.
ஐசியு வுக்கு வெளியே அமர்ந்து, ஓயாமல் அழுது கொண்டிருந்தாள் ஆழ்வி கடவுளை பிரார்த்தனை செய்தபடி.
"ஆழ்வி, ப்ளீஸ் அழாதீங்க. இன்னுவுக்கு ஒன்னும் ஆகாது" என்று அவளை சமாதானம் செய்ய முயன்றாள் நித்திலா.
"ஏன் தான் நம்ம இன்னுவுக்கு அடி மேல அடிபடுதோ..." என்றபடி அழுதார் பாட்டி.
அன்று இரவு 9:00 மணி வரை இனியவனுக்கு நினைவு திரும்பவே இல்லை. ஒன்றுமே சாப்பிடாமல் இருந்த அனைவரும் பலவீனமாகி போனார்கள். பாட்டியையும் சேர்த்து.
"பாட்டி, நீங்க வீட்டுக்கு போங்க. உங்களால ராத்திரி எல்லாம் இங்க உட்கார்ந்து இருக்க முடியாது" என்றாள் ஆழ்வி தன் கண்ணீரைத் துடைத்தபடி.
"ஆமாம் பாட்டி, நானும் பார்கவியும் ஆழ்வியோட இங்க இருக்கோம். நீங்க வீட்டுக்கு போங்க" என்றாள் நித்திலா.
"நீங்க காலையில வாங்க, பாட்டி" என்றாள் பார்கவி.
டிரைவருடன் பாட்டியை வீட்டிற்கு அனுப்பினார்கள்.
மறுநாள் காலை
மெல்ல கண் விழித்த இனியவன், தன் தலையில் இருந்த பாரத்தை உணர்ந்தான். தலையை அழுத்தியபடி முகம் சுருக்கினான். அவன் மனதில் ஏதோ தோன்றியது. அவனை நோக்கி ஒரு செவிலி ஓடி வருவதை பார்த்தான்.
"இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு, சார்?" என்றாள் அந்த செவிலி.
"தலை ரொம்ப வலிக்குது. நான் எங்க அக்காவை பாக்கணும்" என்றான் மனநிலை பாதிப்பிலிருந்து மீண்டு விட்ட இனியவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top