30 மாட்டிக்கொண்ட மருத்துவன்

30 மாட்டிக்கொண்ட மருத்துவன்

கொடூரமான ஊசியை இனியவனுக்கு போட சித்திரவேல் திட்டமிட்டுக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட ஆழ்வியின் மூலாதாரமே ஆட்டம் கண்டது. அந்த ஊசியின் விளைவு எப்படிப்பட்டது என்பது அவளுக்கு தெரியும். அவர்கள் அதைப்பற்றி பேசிக் கொண்டதை தான் அவள் கேட்டாளே...! மீண்டும் அவர்கள் இனியவனை புதைகுழியில் தள்ள முயல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது, தன் கணவனை காக்க ஆழ்வி இருக்கிறாள் என்று!!! ஆழ்வி உயிரோடு இருக்கும் வரை, அவர்கள் இனியவனை நெருங்க கூட முடியாது. ஊசி போடுவதெல்லாம் கனவில் கூட நடக்காது.

குருபரனுக்கு  ஃபோன் செய்தாள் ஆழ்வி.

"சொல்லுங்க, ஆழ்வி"

"அண்ணா, சித்திரவேலும், டாக்டரும் சேர்ந்து இன்னைக்கு சாயங்காலம் இனியவருக்கு ஊசி போட பிளான் பண்ணியிருக்காங்க"

"என்ன்னனது?" என்று பல்லை கடித்தான் குருபரன்.

"ஆமாம், இன்னைக்கு சாயங்காலம் டாக்டர் இங்க வர போறான்"

"கவலைப்படாதீங்க, நான் இருக்கேன்"

"இல்ல, அண்ணா. என்ன செய்யணும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்"

குருபரன் திகைத்தான். அவள் முடிவு செய்து விட்டாளா!

"என்ன முடிவு பண்ணிங்க, ஆழ்வி?"

"சித்திரவேலை நம்ம ஆஃப் பண்ணி ஆகணும். இந்த வீட்ல அவரை பவர் இல்லாதவரா நம்ம மாத்தணும்"

"எப்படி?"

"நம்ம டாக்டரை அடிக்கிற அடியை பார்த்து, அவர் தானாவே வாயை மூடணும்"

"நீங்க என்ன சொல்றீங்க, ஆழ்வி?"

"இப்போதைக்கு சித்திரவேலோட சுய ரூபத்தை நம்ம நித்திலா அக்காவுக்கு காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, அவங்க இந்த விஷயத்துக்கு தன்னை தயார் படுத்திக்கல. திடீர்னு இந்த உண்மையை போட்டு உடைச்சா, அதை அவங்களால தாங்க முடியாது"

"உண்மை தான். ஆனா..."

"ஆனா, அவங்க மனசுல அவரைப்பத்தி சந்தேக விதையை நம்ம தூவணும்"

"கொஞ்சம் தெளிவா பேசுங்க, ஆழ்வி"

"டாக்டரோட சுய ரூபத்தை நம்ம எல்லாரும் முன்னாடியும் தோலுரிச்சி காட்டணும்"

"ஒருவேளை, டாக்டர், சித்திரவேலை பத்தின உண்மையை சொல்லிட்டா, பரவாயில்லயா?"

"பரவாயில்ல, அதை நம்ம செய்யக்கூடாது, அவ்வளவு தான். ஆனா, டாக்டர் அப்படி செய்வான்னு எனக்கு தோணல"

"ஏன்?"

"சித்திரவேல் ஒரு லாயர். தன்னை வெளியில கொண்டுவர அவனுக்கு சித்திரவேலோட உதவி தேவை. அதனால, அவன் சித்திரவேலை காட்டிக் கொடுக்க மாட்டான்"

"ஆனா, டாக்டர் இனியாவுக்கு தப்பான மருந்து கொடுத்ததை நம்ம எப்படி நிரூபிக்கிறது?"

தனது திட்டத்தை அவனிடம் கூறினாள் ஆழ்வி. அதை கேட்ட அவன் வாயடைத்து நின்றான்.

"சரிங்க, ஆழ்வி. நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்"

"நான் உங்களை சங்கடப்படுத்தலையே..."

"இல்ல, ஆழ்வி. இனியான்னு வந்துட்டா, நான் யாரைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன். அது பார்கவியா இருந்தாலும் சரி...!" என்று அவன் கூறியதை கேட்டு வியந்தாள் ஆழ்வி.

"தேங்க்ஸ், அண்ணா"

"ரெடியா இருங்க"

"இருக்கேன்" அழைப்பை துண்டித்த அவள், அவளது தலையணையை  முகர்ந்து கொண்டிருந்த இனியவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவனுக்கு பழச்சாறு எடுத்துக்கொண்டு அங்கு வந்த முத்துவும் அவனை பார்த்து புன்னகைத்தான். தன் தலையசைத்து அவனை தன் அறைக்குள் நுழைய அனுமதி தந்தாள் ஆழ்வி.

"அண்ணி, குரு சார்கிட்ட உங்க பிளானை சொல்லிட்டீங்களா?"

"எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீங்க எதுவுமே தெரியாத மாதிரி இருங்க. ஏன்னா, இந்த வீட்ல எனக்கு உதவி செய்ய இருக்கிறது நீங்க மட்டும் தான். அந்த உதவியை இழக்க நான் விரும்பல"

"கவலைப்படாதீங்க அண்ணி. நான் அவர்கிட்ட ஜாக்கிரதையா இருப்பேன்,

அவனிடம் ஒரு உறையை கொடுத்த அவள்,

"குரு அண்ணா இங்க வரும் போது, இதை அவர்கிட்ட கொடுத்துடுங்க" என்றாள்.

"சரிங்க அண்ணி," என்று அதை அவளிடம் இருந்து பெற்று தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, ஆழ்வியின் தலையணையில் இருந்து வந்த, அவளது கேச எண்ணையின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருந்த இனியவனை பார்த்து புன்னகைத்தபடி அங்கிருந்து சென்றான் முத்து.

இனியவனின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் ஆழ்வி. அவன் கன்னத்தை கையில் ஏந்தி அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு, அவனை அணைத்துக் கொண்டாள். அவள் தன்னை அணைப்பது இனியவனுக்கு பிடிக்கும் என்பதால், அவனும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

ஆழ்விக்கு பதட்டமாய் இருந்தது. அவளுடைய திட்டம் வெற்றி பெறுமா இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால், எதிராளியின் முழு திட்டத்தையும் அவள் அறிய மாட்டாள் அல்லவா! அவர்கள் வேறு என்னவெல்லாம் திட்டம் தீட்டி வைத்திருக்கிறார்களோ!

இனியவனின் பிடியிலிருந்து அவள் வெளிவர நினைத்தபோது, அவன் தன் பிடியை இறுக்கி,

"போகாத, ஆழ்வி. நீ என்னை கட்டிப்பிடிச்சா எனக்கு பிடிக்கும்" என்றான்.

"உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும்"

"அப்புறம் ஏன் என்கிட்ட இருந்து போற?"

"சரி, நான் போகல" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஏனோ தெரியவில்லை, அவளது மனதில் அமைதியே இல்லை. அவளது இதயம் நிம்மதி இழந்து காணப்பட்டது. அவளது வாழ்க்கையின் மிகப்பெரிய புயலை எதிர்கொள்ள அவள் தயாராகிக் கொண்டிருந்தாள். எப்படி இருந்தாலும், அவள் அதை எதிர்த்து நின்று தான் ஆக வேண்டும். அதை எதிர்த்து நின்றால் தான் அவளால் இனியவனை காக்க முடியும். ஒருவேளை அதில் அவள் தோற்றால், அவளது கடும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.

சமையல் அறையில்...

மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தான் முத்து. அப்பொழுது அங்கு வந்தான் சித்திரவேல். அவனை பார்த்தவுடன் முத்துவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இருந்தாலும், தன்னை சமாளித்துக் கொண்டு அவனை பார்த்து புன்னகைத்தான்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றான்.

இனியவனின் மருந்து டப்பாவை எடுத்து அதை பரிசோதித்தான் சித்திரவேல்.

"ஆழ்வி இனியவனுக்கு மருந்தை கரெக்டா கொடுக்கிறாங்களா?" என்றான் அந்த மருந்தை பார்த்தபடி.

சிரமப்பட்டு தன் முகபாவத்தை மாறாமல் பார்த்துக் கொண்ட முத்து,

"என்ன இப்படி கேக்குறீங்க? அவரு காட்டுத்தனமா கட்டுப்பாடு இல்லாம நடந்துக்கிட்ட போது நீங்க என்னை எந்த கேள்வியும் கேக்கல... ஆனா இப்ப அவரு சூப்பரா மாறுனதுக்கு அப்புறம் இவ்வளவு சந்தேகமா?" சித்திரவேல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவனை திருப்பிக் கேள்வி கேட்டான் முத்து.

அப்படி ஒரு அதிரடி கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்க்காத சித்திரவேல், திகைத்து நின்றான்.

"இந்த மருந்தை கொடுத்ததால தானே இனியா அண்ணன் இப்படி மாறி இருக்காரு?" என்றான் முத்து.

"ஆமா, ஆமா, அதுல எந்த சந்தேகமும் இல்ல" என்று சங்கடத்தோடு பல்லை காட்டினான் சித்திரவேல்.

"நீங்க இனியா அண்ணனை பாக்கலயா? அவரு ரொம்ப மாறிட்டாரு இல்ல?" என்றான் முத்து.

"ஆமாம், அவரு மாறிட்டாரு" என்று தன் தலையை அழுத்தினான்.

"உங்களுக்கு காபி வேணுமா?"

"இல்ல, எனக்கு காபி வேண்டாம். கொஞ்சம் டீ போட்டு கொடு.  உன்னோட மசாலா டீ..."

"சரிங்க, அண்ணா"

குழப்பத்தோடு வெளியேறினான் சித்திரவேல்.

அவனுடைய ஸ்பெஷல் மசாலா தேனீரை சித்திரவேலுக்காக தயார் செய்தான் முத்து. சித்திரவேலை பற்றி ஆழ்வி கூறிய போது கூட அவனால் அதை நம்ப முடியவில்லை. ஆனால் இப்பொழுது, அவன் நடந்து கொண்ட விதத்தை பார்த்தபோது இனியவனின் நிலைக்கு முக்கிய காரணம் அவன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது. அது முத்துவுக்கு கோபத்தை வரவழைத்தது.

அவன் ஏதோ தீவிரமாய் யோசித்தான். தனது யோசனையில் அவனுக்கு முழுதும் உடன்பாடு இல்லாவிட்டாலும், அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. இனியவனுக்காக சித்திரவேல் வைத்திருந்த மருந்தை எடுத்து, அதை சித்திரவேலுக்கு கொடுக்க வேண்டிய தேநீரில் கலந்தான் முத்து.

"என்ன மன்னிச்சிடுங்க, நித்திலா அக்கா. நீங்களும் இந்த குடும்பமும் ஏமாத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்க. இந்த குடும்பத்தோட உப்பை தின்ன, உண்மையான வேலைக்காரனா இருந்துகிட்டு, உங்க புருஷன் இனியவன் அண்ணனுக்கு செய்த துரோகத்தை என்னால சகிச்சிக்க முடியல. அவரு என் கையாலேயே அந்த மருந்தை இனியா அண்ணனுக்கு கொடுக்க வச்சிட்டாரு. அந்த தப்பை நான் தெரியாம தான் செஞ்சேன். ஆனா இனிமே நான் அப்படி இருக்க மாட்டேன். ஆழ்வி அண்ணி உங்க புருஷனை பத்தின உண்மையை உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு நினைக்கிறாங்க. ஏன்னா, அவங்க உங்களை காயப்படுத்த விரும்பல. முக்கியமான குற்றவாளியா இருந்துகிட்டு, மறுபடியும் இனியா அண்ணனை பைத்தியமா ஆக்குறதை பத்தி யோசிச்சுகிட்டு, உங்க புருஷன் இந்த வீட்ல சுதந்திரமா சுத்திக்கிட்டு இருக்காரு. தான் விதைச்சதை அவர் அறுத்து தான் ஆகணும். இந்த மருந்தோட பாதிப்பு எப்படிப்பட்டதுன்னு அவர் உணர்ந்து தான் ஆகணும்" என்று தன் மனதிற்குள் எண்ணியவாறு அந்த மருந்தை கலந்தான் முத்து.

அதை சித்திரவேலிடம் முத்து வழங்கினான். அதை பருகிய சித்திரவேல், முத்துவை நிமிர்ந்து பார்த்தான். முத்துவுக்கு லேசான பயம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும், அவன் திடமாய் நின்றான்.

"டீ ரொம்ப நல்லா இருக்கு" என்று அதை ருசித்து குடித்தான் சித்திரவேல்.

உள்ளூர புன்னகைத்துக் கொண்டான் முத்து. அவனுக்கு தெரியும், சித்திரவேலால் அந்த மருந்தை உணர முடியாது. ஏனென்றால், அந்த தேனீரில் இருந்த மசாலாவின் நறுமணம், அந்த மருந்தின் வாசத்தை அடக்கி விடும் என்று அவனுக்கு தெரியும்.

"டீ போடுறதுல நீ ரொம்ப எக்ஸ்பெக்ட் ஆயிட்ட, முத்து" என்று அந்த டீயை குடித்து முடித்தான் சித்திரவேல்.

அந்த குவளையை பவ்யமாய் அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு அந்த இடம் விட்டு நகர்ந்தான் முத்து.

சிறிது நேரத்திற்கு பிறகு,

தங்கள் அறைக்கு வந்த நித்திலா, சித்திரவேலின் விசித்திரமான நடத்தையை பார்த்து முகத்தை சுருக்கினாள். அவன் ஏதோ அவஸ்தையில் இருப்பதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு, கட்டிலின் மீது இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தான்.

"சித்ரா, உங்களுக்கு என்ன ஆச்சு?" என்றாள்.

நித்திலாவை பார்த்த அவன், ஓடி சென்று கதவை சாத்தி தாழிட்டான்.

"என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் இல்ல?"

பரபரவென தன் சட்டையை அவிழ்த்த அவன், அவளது புடவையை பிடித்து இழுக்க முயன்றான்.

"சித்ரா..." என்றாள் அவள் அதிர்ச்சியாக.

"நான் மதுரைக்கு போயி ஒரு வாரத்துக்கு மேல ஆயிடுச்சு. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல"

"இந்த நேரத்துலயா?" என்றாள் அவள் திகைப்போடு.

"இதுக்கு என்ன நேரம் காலம் எல்லாம்...? ப்ளீஸ், வா, நித்தி" என்று அவளை கட்டிலில் தள்ள, அவள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

அப்பொழுது பாட்டி அவளை அழைப்பதை அவர்கள் கேட்டார்கள்.

"சித்ரா, உங்களை கண்ட்ரோல் பண்ணுங்க. பாட்டி என்னை கூப்பிடுறாங்க. நான் போகணும்"

"ப்ளீஸ், போகாதே நித்தி..."

"பிஹேவ் யுவர்செல்ஃப்... பட்டப்பகல்ல கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம என்ன வேலை செய்றீங்க?" அவனைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.

கோபமாய் கட்டிலை குத்தினான் சித்திரவேல். தனக்குள் என்ன நிகழ்கிறது என்று அவனுக்கு புரியவில்லை. அவனது உடல் நெருப்பாய் கொதித்தது. குளியலறைக்குச் சென்ற அவன், ஷவரை திறந்து விட்டு ஓடும் தண்ணீருக்கடியில் நின்றான். அவன் மதுரையில் இருந்தவரை அவனுக்குள் இப்படிப்பட்ட பாலுணர்வு எதுவுமே ஏற்படவில்லை. அப்படி இருக்கும் போது, அது திடீரென தனக்குள் ஏற்பட்ட காரணம் என்ன? குளிர்ந்த நீரில் அவன் எவ்வளவு நேரம் நின்ற போதிலும் அவனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி குளியலறையை விட்டு வெளியேறி, உடை அணிந்து கொண்டு வந்தான்.

அவனைப் பார்த்த நித்திலா தன் சிரிப்பை அடக்கி கொண்டாள். என்ன தான் அவன் அமைதியாய் அமர முயன்றாலும், அது அவனால் முடியவில்லை. அவனது மூளை வேலை செய்யவே இல்லை. அவனால் நேராய் அமரக்கூட முடியவில்லை. கிட்டத்தட்ட அவன் இனியவனையும் டாக்டரையும் மறந்தே போனான். பேய் பிடித்த அவனது ரத்த செல்கள், அவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. தான் விசித்திரமாய் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூட அவன் உணரவில்லை. அவனது எண்ணம் முழுவதும் பாலுறவில் நிறைந்திருந்தது.

மாலை

இன்பவனம் வந்தான் டாக்டர் புவனேஸ்வரன். பாட்டியும் நித்திலாவும் அவனை பார்த்து புன்னகைத்தார்கள்.

"வாங்க, டாக்டர்"

"எப்படி இருக்கீங்க?" என்றபடி சோபாவில் அமர்ந்தான் புவனேஸ்வரன்.

"நல்லா இருக்கோம். முத்து... டாக்டருக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்றார் பாட்டி.

அவருக்கும் கூட ஒரு மசாலா டீயை கொடுத்து விடலாமா என்று யோசித்தான் முத்து. ஆனால் ஆழ்வியும் குருபரனும் வேறு திட்டம் வைத்திருக்கிறார்கள். அவன் ஏதோ செய்யப் போக, அது அவர்களுக்கு வினையாய் முடிந்து விடக்கூடாது என்று தன் திட்டத்தை கைவிட்டான். சித்திரவேலின் தற்போதைய நிலையை எண்ணி அவன் உள்ளுற நகத்துக் கொண்டான். ஆழ்வியின் திட்டம் செயல்படுத்தப்படும் வரை தான் எதுவும் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்த அவன், சாதாரண தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தான்.

"இனியவன் எப்படி இருக்காரு?" என்றான் புவனேஸ்வரன்.

"நீங்க அவனைப் பார்த்தா அசந்துடுவீங்க" என்றாள் நித்திலா சந்தோஷமாய்.

"அப்படியா? நல்ல காலம், நீங்க என் டிரீட்மெண்ட்டை நினைச்சி கவலைப்பட்டுக்கிட்டே இருந்தீங்க. பாத்திங்களா, இப்போ அவரு நல்ல இம்ப்ரூவ்மென்ட் காட்ட ஆரம்பிச்சிட்டாரு" என்றான் பெருமையாய்.

அப்போது, அவனிடம் தேனீர் குவளையை கொடுத்தான் முத்து. அதை பெற்றுக்கொண்ட புவனேஸ்வரன்,

"தேங்க்யூ" என்றான் புன்னகையோடு.

அங்கிருந்து முத்து வெளியே சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

"சித்திரவேல் எங்க?" என்றான் புவனேஸ்வரன்.

"குளிச்சுகிட்டு இருக்காரு" என்று தன் சங்கடத்தை காட்டிக் கொள்ளாமல் கூறினாள் நித்திலா. எதற்காக அவன் அன்று இத்தனை முறை குளித்தான் என்பது தான் அவளுக்கு புரியவேயில்லை.

"சரி, இனியவனை கூப்பிடுங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் சீக்கிரம் போயாகணும். அவருக்கு ஊசி போடத்தான் நான் வந்தேன்" என்றான் புவனேஸ்வரன்

பாட்டியும் நித்திலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனென்றால், இதுவரை அவன் எப்பொழுதும் இனியவனுக்கு ஊசி போட்டதே இல்லை.

"என்ன இன்ஜெக்ஷன், டாக்டர்?" என்றாள் நித்திலா.

"அது அவரோட பிரைன் ஃபங்ஷனை அதிகப்படுத்தும். கொஞ்ச நாள்ல அவர் நம்ப முடியாத அளவுக்கு இம்ப்ரூவ்மெண்ட் காட்டுவாரு"

"அப்படியா?" என்று முகம் சுருக்கினார் பாட்டி.

"ஆமாம், ஆரம்பத்துல கொஞ்சம் விசித்திரமா நடந்துக்குவாரு. ஆனா போக போக அவர் நல்லா குணமாயிடுவாரு"

"நீங்க அவருக்கு இன்ஜெக்ஷன் போடுறதை நான் விரும்பல" என்ற குரல் பின்னால் இருந்து கேட்க, அனைவரும் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு இனியவனுடன் நின்றிருந்தாள் ஆழ்வி

"ஏன், ஆழ்வி?" என்றார் பாட்டி.

"ஏன்னா, இந்த டாக்டர் ஒரு ஃபிராடு" என்றாள் ஆழ்வி.

"என்ன சொல்ற, ஆழ்வி?" என்றாள் நித்திலா அதிர்ச்சியோடு.

"இந்த ஆள் கொடுத்த மருந்து தான் அவரை பைத்தியமா வச்சிருந்துது"

"இல்ல, இவங்க பொய் சொல்றாங்க" என்று கத்தினான் புவனேஸ்வரன்.

அதேநேரம் தரைதளம் வந்தான் சித்திரவேல். புவனேஸ்வரன் அவனை நோக்கி ஓடினான்.

"சித்திரவேல், இந்த பொண்ணு தேவை இல்லாம இனியவனோட பைத்தியக்காரத்தனத்துக்கு என்னை காரணம் காட்டுறாங்க"

"இதெல்லாம் என்ன, ஆழ்வி? இவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? எதுக்காக தேவையில்லாம ஆழ்வி இவர் மேல பழி போடுறாங்கன்னு எனக்கு புரியல" என்றான் கோபமாய்.

"அவங்க பழி போடல" என்ற குரல் தலைவாசல் பக்கமிருந்து கேட்டது. அங்கு குருபரன் நின்றிருந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top