3 தகிக்கும் கண்கள்
3 தகிக்கும் கண்கள்
பார்கவி அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்த சித்திரவேல், பாட்டியை பார்த்து,
"எதுக்காக பார்க்கவிகிட்ட இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்கீங்க, பாட்டி? இன்னும் மூணு நாள்ல அவளோட காலேஜ் முடியுது. அவ ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறது வாஸ்தவம் தானே?" என்றான்.
"நம்ம இன்னு (இனியவனை அவர்கள் செல்லமாய் இப்படி அழைப்பது வழக்கம்) மட்டும் நல்லா இருந்தா, நான் எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன், மாப்பிள்ளை. அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. ஏதாவது தப்பா போனா, அவன் நம்மளை மன்னிக்கவே மாட்டான்"
இனியவன் குணமடைந்து விடுவான் என்பதில் பாட்டிக்கு இருந்த நம்பிக்கை, சித்திரவேலுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
"நீங்க கவலைப்படாதீங்க பாட்டி. நான் தான் இருக்கேன்ல? நான் பார்த்துக்கிறேன்" என்று அவரை சமாதானப்படுத்த முயன்றான்.
"எனக்கு இருக்கிற ஒரே தைரியம் நீங்க தான், மாப்பிள்ளை. நீங்க மட்டும் இல்லன்னா, எங்க குடும்பத்தோட நிலைமை என்னவாகி இருக்குமோ, என்னால கற்பனையே பண்ணி பார்க்க முடியல" என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
"உங்க கூட துணையா இருக்க வேண்டியது என்னோட கடமை, பாட்டி. இது என் குடும்பம்"
"நீங்க எங்களுக்கு மாப்பிள்ளையா வந்தது நாங்க செஞ்ச அதிர்ஷ்டம்" என்று மகிழ்ந்தார் பாட்டி.
அவர்களை பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.
"நம்ம எத்தனை மணிக்கு கோவிலுக்கு போகணும்?" என்றான் சித்திரவேல்.
"நாலு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும். நடை திறக்கும் போது கோவிலுக்கு போயிட்டா, முதல்ல சாமியை கும்பிட்டுட்டு வந்துடலாம்" என்றாள் நித்திலா.
"சரி"
"இன்னைக்கும், இன்னுவை நீங்க வீட்ல ஃப்ரியா தானே விட போறீங்க?" என்றார் பாட்டி.
"ஆமாம் பாட்டி. அவர் ஃப்ரீயா இருக்கட்டும். நம்ம யாரும் வீட்ல இருக்க போறதில்லையே... இப்படியே அடைச்சு வச்சா, அவர் இன்னும் மூர்க்கமா மாறிடுவாரு. அவருக்கும் ஒரு மாற்றம் தேவை தானே?" என்றான் சித்திரவேல்.
ஆம் என்று தலையசைத்த பாட்டி,
"முத்து..." என்று வேலைக்காரனை அழைத்தார்.
"இதோ வரேன் பாட்டி" என்று சமையலறையிலிருந்து ஓடி வந்தான் முத்து.
"நாங்க சாயங்காலம் கோவிலுக்கு போறோம். இன்னுவை ஃப்ரீயா விட்டுட்டு போறோம். நீ ஜாக்கிரதையா இரு" என்று எச்சரித்தார்.
"சரிங்க பாட்டி"
"நீ எங்க இருந்தாலும் அவன் மேல ஒரு கண் வச்சுக்கோ" என்றார் பாட்டி அதை முத்து தவறாமல் செய்து வந்த போதிலும்.
"சரிங்க பாட்டி"
ஆழ்வியின் வீடு
பார்ட்டிக்கு செல்ல தயாரானாள் ஆழ்வி. தலை சீவி தன் கூந்தலில் பொருத்துவதற்காக ஒரு கிளிப்பை எடுக்க அவள் நினைத்தபோது, அவளது அம்மா கற்பகம் தடுத்தார்.
"எதுக்காக இந்த கிளிப்பை இன்னும் வச்சுக்கிட்டு இருக்க? அதோட முனை எவ்வளவு கூர்மையா இருக்கு பாரு. உன் ஃபிரண்டுங்க யாராவது உன்னை கட்டிப்பிடிச்சா, அது அவங்க கையை கீறும்" என்றார்.
"அப்படின்னா, கொஞ்சம் இறக்கி போட்டு விடுங்க. அப்போ அவங்களை அது கீறாது"
"இதை தூக்கி போட்டா தான் என்ன?"
"மா, நாப்பது ரூபா கொடுத்து வாங்கினேன். எப்படி என்னால தூக்கி போட முடியும்?"
"இப்படிப்பட்ட வாழ்க்கையை தான் உங்க அப்பா நமக்கு கொடுத்துட்டு போயிருக்காரு. எங்க வீட்ல நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என் வாழ்க்கையை உங்க அப்பா பாழாக்கிட்டாரு"
அமைதியாய் இருந்தாள் ஆழ்வி. கற்பகம் இப்படி எல்லாம் புலம்புவது சாதாரணமாய் நடப்பது தான். அவருக்கு திருமணம் ஆகி 25 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், அவளுடைய அப்பா இறந்துவிட்ட போதிலும், புலம்புவதை தொடர்ந்தார் கற்பகம்.
"வாழ்க்கை பூரா புலம்பிக்கிட்டே இருக்கணும்ங்குறது என் தலையெழுத்து" என்றார்.
"அம்மா, நடந்ததை மாத்த முடியாதுன்னு நினைச்சா, நிச்சயம் நீங்க புலம்பறதை நிறுத்திடலாம்." என்றாள் ஆழ்வி.
பெருமூச்சு விட்டார் கற்பகம்.
"இதையெல்லாம் நெனச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. ஏமாற்றங்களை மட்டுமே நினைச்சுகிட்டு இருந்தா, உங்களுக்கு ஸ்ட்ரெஸ் தான். அதுக்கு பதில், உங்க வாழ்க்கையை நல்லபடியா மாத்த, உங்களுக்கு கடவுள் நல்ல பெண்ணை கொடுத்து இருக்கிறார் இல்ல? அதை நினைச்சு பாருங்க" என்று தன் அம்மாவை அன்பாய் அணைத்து கொண்டாள் ஆழ்வி.
"என்னை எப்படி சமாளிக்கிறதுன்னு உனக்கு நல்லா தெரியும் தானே...!"
புன்னகைத்தாள் ஆழ்வி.
"நடந்ததை நம்மால மாத்த முடியாது அப்படிங்கறதை நான் ஒத்துக்குறேன். ஆனா உங்க அண்ணனை பத்தி நெனச்சு பாத்தியா? அவனை நினைக்கும்போது எனக்கு எப்படி கோவம் வராம இருக்கும்?"
அவர் கேட்ட கேள்விக்கு ஆழ்வியிடம் பதில் இல்லை. அவளது அண்ணனைப் பற்றி பேச அவள் தயாராக இல்லை. அவன் எப்படி அவர்கள் கையிலிருந்து நழுவினான் என்று அவர்களுக்கு புரியவில்லை. வேண்டாத நண்பர்களுடன் சேர்ந்து, குடித்து அழிந்தான் அவன். அவன் சம்பாதிக்கும் பணம் அத்தனையும் குடித்தே அழித்தான். அது தான் கற்பகத்தின் கோபத்திற்கு காரணம்.
"அம்மா எனக்கு லேட் ஆகுது. நான் இன்னைக்கு லேட்டா தான் வருவேன். சீக்கிரமா கிளம்ப என் ஃபிரண்ட்ஸ் விட மாட்டாங்க"
"உன் ஃபிரண்டை வீட்ல கொண்டு வந்து விட சொல்லு. அவகிட்ட தான் கார் இருக்கே" என்றார். அவர் பேசியது பார்கவியை பற்றி தான்.
"நான் கிளம்பறேன் மா"
அவள் கையை பற்றிய கற்பகம்,
"பார்கவிகிட்ட உன் வேலையைப் பத்தி கேட்க மறக்காதே" என்றார் அவளது முகவாய் கட்டை பிடித்தபடி.
சரி என்றுதலையசைத்து அங்கிருந்து கிளம்பினாள் ஆழ்வி.
ஏடிஎம் கல்லூரி
ஆழ்வி புடவை கட்டிக் கொண்டு வருவதை பார்த்து புன்னகைத்தாள் பார்கவி.
"என்னோட டிரெஸ்ஸை செலக்ட் பண்ண எனக்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. ஆனா நீ, ஒரு புடவை கட்டிக்கிட்டு வந்து என்னை ஓரம் கட்டிட்ட... புடவைல நீ ரொம்ப அழகா இருக்க" என்றாள் பார்கவி.
"ஆமாம் ஆழ்வி... புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்றாள் மீனாட்சி.
மென்மையாய் புன்னகைத்தாள் ஆழ்வி.
"புக்கு கேட்டேனே எங்கே?"
தனது பையில் அந்த புத்தகத்தை தேடிய பார்கவி, அதை காணாமல், தன் தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
"அட கடவுளே! சாரி ஆழ்வி. நான் அதை டைனிங் டேபிளிலேயே விட்டுட்டேன்னு நினைக்கிறேன்" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ஆழ்வி.
"என்ன சொல்ற கவி?"
"டென்ஷன் ஆகாத... என்னை பாரு. ஒரு சாப்ட்ரை கூட முழுசா படிக்கல. ஆனா எவ்வளவு கூலா இருக்கேன்! நீ ஒரே ஒரு சாப்ட்ரை மட்டும் தான் படிக்கல. ஆனா, அதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிற...!"
மீனாட்சி வாய்விட்டு சிரித்தாள்.
"நீ புக்கு கொண்டு வரலன்னா நான் எப்படி படிக்கிறது?" என்றாள் ஆழ்வி கவலையுடன்.
"ஒன்னு பண்ணு. பார்ட்டி முடிஞ்சதுக்கு பிறகு, என்னோட வீட்டுக்கு வா. நான் டிரைவர்கிட்ட உன்னை கொண்டு போய் உன் வீட்டில் விட சொல்றேன். என்ன சொல்ற?"
பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.
"ரிலாக்ஸா இரு செல்லம்... என் வீட்டுக்கு வா. உன்னை என் அக்காவுக்கும் மாமாவுக்கும் இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன்"
சில நொடி யோசித்த ஆழ்வி, சரி என்று தலையசைத்தாள். பார்கவியின் மாமாவை சந்தித்தால், தனக்கு வேலை கிடைப்பது உறுதியாகும் என்று அவள் எண்ணினாள்.
"சீக்கிரம் வீட்டுக்கு போனா, படிக்க நேரம் கிடைக்கும்னு நினைச்சேன்"
"வாய்ப்பில்ல ராஜா... நீ அவ்வளவு சீக்கிரமெல்லாம் வீட்டுக்கு ஓடிட முடியாது. பார்ட்டி முடிகிற வரைக்கும் எங்க கூட தான் இருக்கணும்" பார்கவியும் மீனாட்சியும் அவளை இழுத்துக் கொண்டு பார்ட்டி ஹாலுக்கு ஓடினார்கள்.
"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்" என்றாள் மீனாட்சி.
"என்ன?"
"எக்ஸாம் முடிஞ்சதுக்கு பிறகு நான் என் சொந்த ஊருக்கு போக போறேன். அங்க ஒரு மாசம் தங்கப் போறேன்"
"ஏதாவது ஸ்பெஷலா?"
"என்னோட கசினோட வெட்டிங். செம ஜாலியா இருக்கும்" என்றாள் குதூகலமாய்.
"ராமநாதபுரம் தானே உன்னோட ஊர்?"
"ஆமாம், ஏர்வாடி வில்லேஜ்..."
"அங்க என்ன ஸ்பெஷல்?" என்றாள் பார்கவி.
"அங்க, பைத்தியக்காரங்களை குணமாக்குற சென்டர் நிறைய இருக்கு. உன்னை மாதிரி பைத்தியத்துக்கு அது ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்" என்றாள் மீனாட்சி கிண்டலாய். ஆழ்வி வாய்விட்டு சிரிக்க, அமைதியானாள் பார்கவி.
"ஏய் என்ன ஆச்சு?" என்றாள் ஆழ்வி, அவளுடைய முகம் மாறியதை கவனித்து.
ஒன்றுமில்லை என்று தலை அசைத்தாள் பார்கவி.
"விடு ஆழ்வி, சில சமயம் உண்மை கசக்கத்தான் செய்யும்" என்று மேலும் அவள் காலை வாரினாள் மீனாட்சி.
இந்த முறை, அவளை அடிக்க கையை ஓங்கினாள் பார்கவி. அங்கிருந்து மீனாட்சி தப்பி ஓட, அவளை விடாமல் துரத்தி சென்றாள் பார்கவி. அவர்களை பார்த்து சிரித்தபடி நின்றாள் ஆழ்வி. இது அவர்களுக்குள் எப்பொழுதும் நிகழ்வது தான்.
மாலை
சித்திரவேலுடன் கோவிலுக்கு செல்ல தயாரானார்கள் பாட்டியும் நித்திலாவும். புறப்படுவதற்கு முன் முத்துவை அழைத்தான் சித்திரவேல், நித்திலாவையும் பாட்டியையும் வெளியே அனுப்பிவிட்டு.
"சொல்லுங்க அண்ணா"
"நாங்க கிளம்பறோம். இனியவனை இன்னைக்கு ஃப்ரீயா விடு. நீயும் ஏதாவது ஒரு ரூமுக்கு போய் பூட்டிக்கோ. தேவைப்பட்டாலே ஒழிய வெளிய வராத"
"சரிங்க அண்ணா"
அவர் வெளியில வந்ததுக்கு பிறகு அவருடைய ரூமை மட்டும் கிளீன் பண்ணிடு"
"சரிங்க அண்ணா"
"அவருக்கு கொடுக்கவேண்டிய மருந்தை எல்லாம் ஒழுங்கா கொடுக்கிற இல்ல?"
"ஆமாங்கண்ணா. ஒருவேளை கூட மறக்குறது இல்ல" என்றான் அக்கறையோடு.
உண்மையான வேலைக்காரனான அவன், அதை செய்ய எப்படி மறப்பான்? சித்திரவேல் அவனிடம் அவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருந்தானே! இனியவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு, அந்த பொடியை சாப்பாடுடன் கலந்து அவனுக்கு கொடுத்துக் கொண்டு வந்தார்கள். மாத்திரையாக கொடுத்தால் அவனை சாப்பிட வைக்க முடியாது என்பதால் அந்த ஏற்பாடு.
"குட்... நாங்க லாவண்யா வர்றதுக்கு முன்னாடி வந்துடுவோம். அவ வீட்டுக்கு வர ஏழு மணி ஆயிடும். ஏழு மணிக்குள்ள நாங்க வரலன்னா, இனியவனை அவரோட ரூம்ல கொண்டு போய் லாக் பண்ணிடு"
"பண்ணிடுறேன் ணா"
"ஜாக்கிரதையா இரு"
"சரிங்க அண்ணா"
தனது கட்டை விரலை சென்சாரில் வைத்து அழுத்தி, இனியவன் இருந்த அறையின் கிரில் கதவை திறந்தான் சித்திரவேல். கட்டிலில் படித்துக் கொண்டு மோட்டுவளையை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த இனியவன், கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, கட்டிலிலிருந்து குதித்தெழுந்து வெளியே ஓடினான். அங்கேயே நின்று அவனை சிறிது நேரம் கவனித்தான் சித்திரவேல். ஏதாவது புதிதாய் கிடைக்கிறதா என்று தேடினான் இனியவன். அங்கிருந்த பூச்சாடியை எடுத்த அவன், அதை அசட்டையாய் தூக்கி எறிந்தான். சமையலறைக்குச் சென்று அதன் கதவை திறக்க முயன்றான். ஆனால் அதன் கதவை முத்து பூட்டிவிட்டிருந்தான். சென்ற முறை அங்கிருந்த கண்ணாடி பாத்திரங்களை எல்லாம் போட்டு உடைத்து விட்டான் இனியவன். அதில் அவனுக்கு சில காயங்கள் ஏற்பட்டது அதை தவிர்க்கவே இந்த முறை சமையல் அறையை பூட்டி வைத்தான் முத்து. இனியவனின் கைக்கு எந்த கூர்மையான பொருளும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டான் அவன்.
ஏஎம்டி கல்லூரி
ஆழ்வியை அணைத்த மீனாட்சி, அவள் கூந்தலிலிருந்து வீசிய வாசத்தை உள்ளெழுத்து
"ப்பா... என்ன ஒரு வாசனை" என்றாள்.
"இது நானே வீட்ல செய்யற எண்ணெய்" என்றாள் ஆழ்வி.
"ஆமாம். நீ ஏற்கனவே என்கிட்ட சொன்ன. நான் அதை வீட்ல செய்ய ட்ரை பண்ணேன். ஆனா இந்த மாதிரி ஒரு நல்ல ஸ்மெலை என்னால கொண்டு வர முடியல" என்று மீண்டும் அதை நுகர்ந்தாள்.
"அடுத்த தடவை இந்த எண்ணெயை செய்யும் போது, உனக்கும் சேர்த்து செஞ்சு கொடுக்கிறேன்"
"தேங்க்யூ சோ மச்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் மீனாட்சி.
"ஓகே மீனாட்சி. நாங்க கிளம்பறோம்" என்றாள் பார்கவி.
"ஓகே. நல்லா படி ஆழ்வி" என்று மீனாட்சி கூற, சரி, என்று தலைசைத்தாள் ஆழ்வி. அப்பொழுது மணி 6:15.
அவர்கள் பார்க்கவியின் வீடு வந்து சேர்ந்தபோது மணி 6:40. தன் அக்காவும், மாமாவும் வீட்டிற்கு வந்து விட்டிருப்பார்கள் என்று எண்ணினாள் பார்கவி. ஆனால் அவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது அவள் அறியாதது. வழக்கம்போல், தன்னிடம் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறந்தாள் பார்கவி. அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்து வாயடைத்து நின்றாள் ஆழ்வி. அப்படி ஒரு வீட்டை அவள் தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அவ்வளவு ஏன், அப்படி ஒரு ஆடம்பரமான வீடு இருக்கக் கூடும் என்று கூட அவள் கற்பனை செய்ததில்லை.
"இரு ஆழ்வி. நான் புக்கை கொண்டு வரேன்" என்றாள் பார்கவி.
சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி
அந்த புத்தகத்தை உணவு மேஜைக்கு கொண்டு வந்தது நினைவில் இருந்ததால், நேராக உணவு மேஜைக்கு சென்று அதை தேடினாள்.
"முத்து..." என்று குரல் கொடுத்தாள், தன் வீட்டிற்கு வந்த தோழியை உபசரிக்க நினைத்து.
அதனால் முத்துவை அழைத்து அவளுக்கு ஏதாவது கொடுக்க எண்ணினாள்.
அவள் குரலைக் கேட்டு திடுக்கிட்டான் முத்து. இனியவன் வெளியில் இருக்கிறானே...! பீதி அடைந்த முத்து வரவேற்பறைக்கு ஓடி வந்தான். ஒருவேளை இனியவன் பார்கவியின் குரலை கேட்டிருந்தால் என்ன ஆவது? ஆம் அவன் கேட்டுத்தான் விட்டான்...!
புத்தகம் கீழே கிடப்பதை கண்ட பார்கவி, குனிந்து அதை எடுத்தாள்.
அதே நேரம் தனக்கு முன்னால் நின்றிருந்த பெண்ணை கண்டான் இனியவன். அவனது கண்கள் தகித்தன. தன்னை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்த அவனை பார்த்த அவள், கலங்கினாள். எதிர்பார்த்தபடியே அவளை நெருங்கினான் இனியவன். அந்த பெண் ஆழ்வி அல்ல, பார்கவி...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top