29 வந்தது வினை

29 வந்தது வினை

இரவு

வேலைகளை முடித்துக் கொண்டு தன் அறைக்கு திரும்பினாள்  ஆழ்வி. அவளுக்காக இனியவன் காத்திருப்பது போல் தெரிந்தது.

"ஆழ்வி, இங்க வா" என்றான்.

"என்ன வேணும் உங்களுக்கு?"

"இங்க வா, எனக்கு தூக்கம் வருது"

கட்டிலுக்கு சென்ற ஆழ்வி அவன் அருகில் படுத்துக்கொண்டாள். அடுத்த நொடி அவள் வயிற்றில் காதை வைத்து உற்று கேட்கலானான் இனியவன்.

"என்னங்க, என்ன செய்றீங்க?"

"சாமி உன் வயித்துல பாப்பா வச்சாரான்னு பார்க்கிறேன்"

அதைக் கேட்டு சிரித்த அவள்,

"நான் சாமிகிட்ட பாப்பா வேணும்னு கேட்கல" என்றாள். 

"ஆனா, நான் கேட்டேன்" என்றான்.

"அப்படியா? உங்களுக்கு ஏதாவது கேக்குதா?"

"இல்லையே..."

"இங்க வாங்க"

மேல் நோக்கி நகர்ந்த அவன் அவளைப் பார்க்க,

"சரியான நேரம் வரும் போது, சாமியே நமக்கு பாப்பா கொடுப்பாங்க. புரிஞ்சுதா?"

"உன் வயித்துக்குள்ள பாப்பா வரும் போது, நீ எனக்கு சொல்லணும்"

"நிச்சயமா சொல்றேன்"

மறுநாள் காலை

சமையலறைக்கு சென்ற ஆழ்வி, அழைப்பு மணியின் ஓசை கேட்டு நின்றாள். முத்து ஓடிச்சென்று கதவை திறந்தான். சித்திரவேல் உள்ளே நுழைவதை பார்த்த ஆழ்வி, கலங்கி போனாள்.

அவன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவான் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சித்திரவேலின் ஊடுருவும் பார்வை, அவளை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்து,

"எப்படி இருக்கீங்க, அண்ணா?" என்றாள்.

சித்திரவேலும் தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்த படி,

"நல்லா இருக்கேன் ஆழ்வி" என்றான்.

அவனை நோக்கி ஆர்வமாய் ஓடி வந்தாள் நித்திலா.

"என்னங்க நீங்க வந்துட்டீங்களா? திரும்பி வர பத்து நாள் ஆகும்னு சொன்னீங்களே...?"

"வாயிதா தள்ளி போயிடுச்சு. அதனால உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமுன்னு சொல்லாம வந்தேன்"

"நாங்களும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கோம். ஆனா, எங்களுடைய சர்ப்ரைஸ்க்கு ஈடு இணையே கிடையாது" என்று அலட்டலாகவும், ஆர்வத்துடனும் கூறினாள் நித்திலா.

"அப்படி என்ன சர்ப்ரைஸ்?" என்றான் தன் ஆர்வத்தை காட்டிக் கொள்ளாமல்.

ஆழ்வியை நோக்கி திரும்பிய  நித்திலா,

"ஆழ்வி, இன்னு எங்க?" என்றாள்.

நித்திலா தன் கணவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையை பார்த்த ஆழ்வி, இயலாமையுடன் நின்றாள். இனியவனின் நிலையை பார்த்தால், அவன் மகிழ்வான் என்று எவ்வளவு கண்மூடித்தனமாய் நம்புகிறாள் இந்த பெண்...!

"அவர் இன்னும் தூங்கி எழுந்துக்கல,  கா..."

"ஓ..."

மீண்டும் அவனை நோக்கி திரும்பிய நித்திலா,

"நீங்க போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க, அப்புறம் நாங்க உங்களை சர்ப்ரைஸ் பண்றோம்" என்று சிரித்தாள்.

"என்ன ஆச்சு, நித்தி? மச்சான் நல்லா இருக்காரு இல்ல?"

"ஷ்... இப்போ எதுவும் கேட்காதீங்க. போய் ஃபிரெஷ் ஆயிட்டு வாங்க" என்று தங்கள் அறை இருந்த  வழியை சுட்டிக்காட்டினாள்.

பெருமூச்சு விட்ட சித்திரவேல், தங்கள் அறைக்கு சென்றான்.

அங்கேயே சற்று நேரம் நின்று என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள் ஆழ்வி. அவள் பதட்டம் அடையக் கூடாது. இது புத்திசாலித்தனத்தோடு செயல்பட வேண்டிய நேரம். அவளது பதற்றம், அவளது மூலையின் செயல்பாட்டை தடுக்கும். சித்திரவேல் திரும்பி வந்துவிட்ட விஷயத்தை முதலில் குருபரனுக்கு தெரிவிக்க வேண்டும்.

தன் அறையை நோக்கி ஓடிய அவள், தன் கைபேசியை தேடினாள். அது இனியவனின் தலையணையின் அடியில் இருந்தது. அதை எடுத்து குருபரனுக்கு ஃபோன் செய்தாள். அவனது எண், எங்கேஜ்டாய் இருந்தது. அவனது அழைப்புக்காக காத்திருந்தாள். அவளது மிஸ்டு காலை பார்த்தால், அவன் அவளை அழைப்பான் என்று அவளுக்கு தெரியும்.

எதிர்பார்த்தபடியே, அடுத்த நிமிடம் அவளுக்கு குருபரனிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றாள் ஆழ்வி. அவள் எதுவும் கூறும் முன்,

"ஆழ்வி, சித்திரவேல் வந்துட்டான் போல இருக்கே. நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்" என்றான் குருபரன்.

"அவர் வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இப்ப தான் முத்து ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான்"

"நீங்க முத்து கூட தான் பேசிக்கிட்டு இருந்தீங்களா?"

"ஆமாம். நான் ஏற்கனவே அவனை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி சொல்லிட்டேன். உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் அவன் செய்வான். எனக்கு எந்த நேரமா இருந்தாலும் கால் பண்ணுங்க"

"சரிங்க அண்ணா. நீங்க கவலைப்படாதீங்க. நான் அவருக்கு தெரியாம அவரை கவனிச்சிகிட்டு இருப்பேன். நமக்கு அவரைப் பத்தி தெரியும்னு அவருக்கு தெரியக்கூடாது. முக்கியமா, நான் இனிவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிற விஷயம், நிச்சயம் அண்ணனுக்கு தெரியவே கூடாது. வீட்ல இருக்குற எல்லா மருந்தையும் அவருக்கு தெரியாம நான் ஒளிச்சு வைக்கப் போறேன்.  அண்ணன் இப்போதைக்கு பிளாங்கா தான் இருக்காரு. ஆனா, என் புருஷனோட  முன்னேற்றத்துக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்க அவர் முயற்சி பண்ணுவாரு. டாக்டர் கூட சேர்ந்து எதையாவது செஞ்சி, என்னை தடுக்க பார்ப்பாரு. நீங்க அந்த டாக்டர் மேல ஒரு கண்ணு வச்சுக்கங்க, அண்ணா"

குருபரனிடமிருந்து எந்த பதிலும் பெறவில்லை ஆழ்வி. அவன் பக்கத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது.

"அண்ணா, நீங்க லைன்ல தானே இருக்கீங்க?"

"ம்ம்ம்... என்ன சொல்றது, ஆழ்வி? நான் உங்களை ஜாக்கிரதையா இருக்க சொல்லி எச்சரிக்க நெனச்சேன். ஆனா நீங்க என்னை விட ரொம்ப வேகமா என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுன்னு முடிவே செஞ்சு வச்சுட்டீங்க. வெல்டன்..."

"நம்ம அப்படித்தானே அண்ணா இருந்தாகணும்?  இது இனியவர் பத்தின விஷயமாச்சே"

"சித்திரவேல் திரும்பி வந்ததை நினைச்சு, நீங்க ரொம்ப பதட்டமா இருப்பீங்கன்னு நினைச்சேன்"

"நான் கொஞ்சம் பதட்டமா தான் இருக்கேன். ஆனா அந்த பதட்டம், என்னுடைய தைரியத்தை மீறி போக விடக்கூடாது. பயப்படுறதை விட்டுவிட்டு, எச்சரிக்கையா நடந்துக்க வேண்டிய நேரம் இது. என்னை அடிச்சு வீழ்த்தினதுக்கு பிறகு தான், அவரால இனியவரை எதுவும் செய்ய முடியும். அவர் இனியவரை என்ன செய்றார்னு நானும் பார்த்துடுறேன்" என்றாள் நம்பிக்கையோடு.

அவளது தைரியம் குருபரனுக்கு வியப்பை தந்தது.

"சந்தேகமே இல்ல, நீங்க பக்கா இனியவன் டைப். அவனும் இப்படித் தான், எதுக்கும் கலங்க மாட்டான். சரி, டாக்டர் அங்கு வரும் போது எனக்கு தெரியப்படுத்துங்க"

"சரிங்க, அண்ணா"

அழைப்பை துண்டித்து விட்டு, கவிழ்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்த இனியவனின் பக்கத்தில் அமர்ந்தாள் ஆழ்வி. அவன் தலையை மெல்ல வருடி கொடுத்தாள். பாவம், இவரது வாழ்க்கை தான் எவ்வளவு கடினமானது...! கோடீஸ்வரனாய் இருந்து கொண்டு, சொந்த குடும்பத்திலேயே கூட தனக்கு எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவரது எதிரிகள் அவருக்கு சித்த பிரம்மை பிடிக்கச் செய்து, சகதியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள், என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.

"கடவுளே! எங்களை வீழ்த்த காத்திருக்கிற அத்தனை பிரச்சனைகள்ல இருந்தும், அவரைக் காப்பாத்த எனக்கு தைரியத்தை  கொடு. எப்பவும் நியாயம் தான் ஜெயிக்கும்னு அவருடைய எதிரிகளுக்கு காட்டு. அவருக்கு எந்த பாதகமும் ஏற்பட்டுடக் கூடாது, தாயே!" என்று பிரார்த்தித்தாள்.

அவளது அலமாரியில் இருந்த அத்தனை மருந்துகளையும் எடுத்து ட்ரெஸ்ஸிங் டேபிளின் அடி தட்டில் வைத்து பூட்டினாள். அப்படிப்பட்ட மருந்து அங்கு இருந்ததற்கான அறிகுறியே தெரியாமல் பார்த்துக் கொண்டாள். மீண்டும் கட்டிலுக்கு வந்து இனியவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

தூக்கத்தில் இருந்து கண் விழித்த இனியவன், ஆழ்வி தன்னுடன் அமர்ந்திருப்பதை பார்த்து சந்தோஷமடைந்தான். தன் தலையை, தலையணையில் இருந்து அவள் மடிக்கு மாற்றி அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டான்.

"என்னங்க, போய் பிரஷ் பண்ணுங்க. நான் உங்களுக்கு தலைக்கு குளிக்க வச்சு, உங்க தாடியையும் ட்ரிம் பண்ணி விடுறேன்" முதல் நாள் இரவு, அவன் தலையில் அவள் தேய்த்து விட்ட எண்ணெயை சித்திரவேல் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாள் அவள்.

"ம்ம்ம்"

"போங்க"

எழுந்து அமர்ந்த இனியவன், தூக்க கலக்கத்தில் அவள் தோளில் சாய்ந்து கொண்டான். ஏனோ அவனை ஆரத் தழுவி கொள்ள வேண்டும் என்று தோன்றியது ஆழ்விக்கு. அவளது கரங்கள் அவனை பாதுகாப்பாய் தழுவிக் கொண்டன. அவளை நோக்கி நெருங்கிய அவனும், அவளை அணைத்துக் கொண்டான். கண்களை மூடி அவனது அணைப்பின் கதகதப்பை உணர்ந்தாள் ஆழ்வி.

"ஆழ்வி..."

"ம்ம்ம்?"

"நீ என்னை கட்டிப்பிடிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிக்குது"

"எனக்கும் தான்" என்ற போது அவள் தொண்டையை அடைத்தது.

"அப்போ நீ ஏன் என்னை கட்டியே பிடிக்க மாட்டேங்குற?"

"கட்டிப்பிடிக்க தான் நினைக்கிறேன். ஆனா நீங்க தான் இப்பெல்லாம் உங்க ஃபோனை கையில வச்சுக்கிட்டு பிஸியா இருக்கீங்க"

"நம்ம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?"

மென்மையாய் புன்னகைத்த அவள், சரி என்று தலையசைத்தாள். அவள் கைப்பேசியை எடுத்த இனியவன், அவளை கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு,

"இங்க உட்காரு" என்று தன் தொடையை தட்டினான்.

"இங்கயா?"

"ம்ம்ம்" என்று உதடுகளை அழுத்தினான்.

சிரித்தபடி அவன் மடியில் அமர்ந்து, அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டாள். அதையும் புகைப்படம் எடுத்தான் இனியவன். தன் முகத்தை கோணலாக்கி அவள் பார்க்க, அவன் வாய்விட்டு சிரித்தான். அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு அதையும் புகைப்படம் எடுத்தான்.

"இங்க பாரு, நான் எத்தனை ஃபோட்டோ எடுத்து இருக்கேன்..."

"அழகா இருக்கு"

"ஆழ்வி அழகு" என்றான்.

"சரி, ஃபோட்டோ எடுத்தது போதும். இப்போ போய் குளிங்க"

"என் ஃபோனை ஜாக்கிரதையா வச்சுக்கோ"

சரி என்று தலையசைத்த அவள், அவனை தலைக்கு குளிக்கச் செய்து, தரைதளம் அழைத்து வந்தாள், அவர்களது மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள.

நமக்கு எவ்வளவு எதிரிகள் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் உறவினன் என்னும் முகமூடியை அணிந்து அணிந்து கொண்டிருக்கும் எதிரியை வீட்டிலேயே வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் ஆழ்வி அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். வெகு நாட்களுக்கு அவளால் இனியவனை சித்திரவேலிடமிருந்து மறைத்து விட முடியாது. சித்திரவேலை மட்டுமல்ல, இனியவனின் வெறித்தனத்திற்கு முக்கிய காரணமாய் இருக்கும் டாக்டரையும் சமாளிக்க அவள் வழி கண்டுபிடித்தாக வேண்டும்.

இனியவனோடு வரவேற்பறைக்கு வந்தாள் ஆழ்வி. சித்திரவேல் ஏற்கனவே அங்கு வந்துவிட்டிருந்தான். இனியவனின் தோற்றத்தையும், அவன் வெகு சாதாரணமாய் இருந்ததையும் பார்த்த அவன் மென்று விழுங்கினான். நித்திலா, பாட்டி, மற்றும் பார்கவி மூவரும் புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"அக்கா, மாமாவை கெட்டியா பிடிச்சுக்கோ. அவரு மயங்கி விழுந்துட போறாரு" என்று பார்கவி சிரித்தபடி கூற, ஒரு செயற்கை புன்னகையை அணிந்தான் சித்திரவேல்.

"என்னால நம்பவே முடியல" என்றான்.

"எல்லாத்துக்கும் ஆழ்வி தான் காரணம்" என்றாள் நித்திலா.

"என்னங்க, பாருங்க, இங்க யார் வந்திருக்கிறதுன்னு..." சாதாரணமாய் இருக்க முயன்றாள் ஆழ்வி.

சித்திரவேலை பார்த்த இனியவன், முகம் சுருக்கினான். அவன் கூறிய அடுத்த வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

"எனக்கு இவனை பிடிக்கல..."

சந்தேகமின்றி அது சித்திரவேலை எரிச்சல் அடையச் செய்தது.

"அவர் தானே அவனை தனி ரூம்ல போட்டு பூட்டி வச்சுருந்தாரு? அதனால தான் அவன் இப்படி சொல்றான்னு நினைக்கிறேன்" என்றாள் நித்திலா.

"என்னங்க, அவர் உங்க மாமா"

"இல்ல ஆழ்வி... இவன் ஒரு பேட் வைப்...!" என்று கூறி அனைவரையும் பேச்சிழக்கச் செய்தான் இனியவன், ஆழ்வியையும் சேர்த்து. சித்திரவேலோ எரிச்சலின் உச்சத்தில் நின்றான்.

"வாங்க சாப்பிடலாம்" என்று அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் ஆழ்வி.

அனைவரும் அவர்களை பின்தொடர்ந்தார்கள், சித்திரவேல் ஒருவனைத் தவிர. ஆனால் ஆழ்வியின் கண்கள் அவன் மீது தான் இருந்தது. எதிர்பார்த்ததுபடியே, யாருக்கோ ஃபோன் செய்ய சித்திரவேல் வெளியே சென்றான். அவனை கவனிக்குமாறு முத்துவுக்கு ஜாடை காட்டினாள் ஆழ்வி. அதை புரிந்து கொண்ட முத்து, சித்திரவேல் பேசுவதை ஒட்டு கேட்க சென்றான். அவன் பேசியதை கேட்ட முத்து வெலவெலத்து போனான். தான் கேட்டதை அப்படியே கொண்டு வந்து ஆழ்வியிடம் ஒப்பித்தான். அது ஆழ்வியையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

"இனியவனோட மாற்றத்தை என்னால நம்பவே முடியல. அவன் ரொம்ப தெளிவா பேசுறான். இது நமக்கு நல்லது இல்ல. இன்னைக்கு சாயங்காலம், அந்த இன்ஜெக்ஷனை எடுத்துக்கிட்டு இங்க வந்துடு" என்று டாக்டரிடம் கூறினான் சித்திரவேல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top