28 கோவிலில் இனியவன்

28 கோவிலில் இனியவன்

அழகு ததும்பும் இனியவனின் புகைப்படத்தை தன் கைபேசியில் பதிவேற்றினாள் நித்திலா. அதை பாட்டியிடமும் பார்கவியிடமும் காட்டிய அவள், இனியவனை நோக்கி சென்ற ஆழ்வியை அழைத்து,

"ஆழ்வி, உங்க என்னங்க எப்படி இருக்காரு பாரு" என்றாள்.

அதைக் கேட்ட இனியவன், ஆழ்வியுடன் ஓடிச் சென்று அவளது கைபேசியை பார்த்தான். தனது புகைப்படத்தை பார்த்த அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஆழ்வியின் கையில் இருந்த கைபேசியை பிடுங்கிக் கொண்டு, தங்கள் அறையை நோக்கி நடந்தான். அதை கண்டு நித்திலா பதற்றம் அடைந்தாள். 

"அட கடவுளே...! என் மொபைலை அவன் உங்க ரூமுக்கு கொண்டு போறான். அதை அவன்கிட்ட இருந்து வாங்கணுமே... ஒடச்சிடப் போறானே..." என்ற நித்திலா, ஓடிச் சென்று அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கினாள்.

அவளை கோபமாய் முறைத்தபடி நின்றான் இனியவன்.

"மாமா எனக்கு ஃபோன் பண்ணுவாரு, இன்னு"

"நான் என்னங்க" என்று கத்தினான்.

இயலாமையுடன் ஆழ்வியை ஏறிட்டாள் நித்திலா, அவளது உதவியை நாடி. நித்திலாவின் கையில் இருந்து, அந்த கைபேசியை அவன் மறுபடி பிடுங்க முயன்ற போது, அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் ஆழ்வி.

"என்னங்க, அது அவங்களோட ஃபோன். நீங்க அதை யூஸ் பண்ண கூடாது"

அவள் கையை உதறிவிட்டு, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான் இனியவன்.

"சாரி ஆழ்வி, ப்ளீஸ் அவனை சமாதானப்படுத்து" என்று கெஞ்சினாள் நித்திலா.

"நான் பார்த்துக்கிறேன், கா. நீங்க கவலைப்படாதீங்க" என்று தங்கள் அறைக்கு சென்றாள் ஆழ்வி.

அங்கு, தரையை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் இனியவன். சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த தன் கைபேசியை எடுத்துக் கொண்டு வந்து அவன் பக்கத்தில் அமர்ந்த ஆழ்வி, தலை சாய்த்து அவனை பார்த்தாள். அவன் அவளுக்கு எதிர்ப்புறம் முகத்தை திருப்பிக் கொண்டான்.

"யாரோ என் மேல ரொம்ப கோவமா இருக்கிற மாதிரி தெரியுது?"

அவளைப் பார்க்கவில்லை இனியவன்.

"நான் என்னோட ஃபோனை அவருக்கு கொடுக்கலாமுன்னு நினைச்சேன்...! ஆனா அவர் என்கிட்ட பேச மாட்டேன்னு சொன்னா, நான் என்ன செய்றது?" என்று தன் கைபேசியை அவன் முகத்திற்கு முன்னால் ஆட்டினாள்.

சிரித்தபடி அவளை நோக்கி திரும்பினான் இனியவன். அவள் கைபேசியை அவளிடம் இருந்து பறித்து, அதை இடப்புறமும் வலப்புறம் திருப்பிப் பார்த்தான்.

"இருங்க..."

அவன் கையில் இருந்து அதைப் பெற்று, தன் கைரேகையை அதில் பதிந்து அதை திறந்தாள். கேமராவை தேர்வு செய்து, தங்களது முதல் செல்ஃபியை அதில் பதிவு செய்தாள். அதன் பிறகு அந்த கைபேசியை எப்படி பிடிக்க வேண்டும் என்றும், எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அவனுக்கும் கற்றுக்கொடுத்தாள். 

அந்த கைபேசியை அவளிடம் இருந்து பெற்று, தங்கள் இருவரையும் இணைத்து செல்ஃபி எடுக்க துவங்கினான் இனியவன். ஆழ்வி அங்கிருந்து செல்ல எழுந்து நின்றாள். அவளை அங்கிருந்து செல்ல விடாமல், தன்னை நோக்கி இழுத்தான் இனியவன். அவள் அவனது மடியில் விழ, அவள் இடையை சுற்றி வளைத்து பிடித்து அதையும் படமாக்கினான். ஆழ்வி அவன் கன்னத்தில் அழகாய் முத்தமிட, அதுவும் அந்த கைபேசியில் பதிவானது.

"என்னங்க, ஃபோட்டோஸ் எடுத்தது போதும். நான் போகணும். ஃபோனை நீங்களே வச்சுக்கோங்க" என்று அங்கிருந்து கிளம்பி சென்றாள்.

அவள் சமையலறைக்கு வந்த போது, கிட்டத்தட்ட காலை உணவை சமைத்து முடித்து விட்டிருந்தான் முத்து.

"சாரி முத்து, நான் வர லேட் ஆயிடுச்சு"

"பரவாயில்ல அண்ணி. உங்களுக்கு தான் அண்ணனை சமாளிக்கிற ரொம்ப பெரிய வேலை இருக்கே" என்றான்.

"நான் போய் அவரை சாப்பிட கூட்டிகிட்டு வரேன்" என்று சிரித்தபடி அங்கிருந்து சென்றாள் ஆழ்வி.

அவள் தங்கள் அறைக்கு வந்த போது, அவளது கைபேசியை கட்டிலில் வைத்து, அதை 'தொப்பு தொப்பு' என்று அடித்துக் கொண்டிருந்தான் இனியவன்.

"என்னங்க, என்ன செய்றீங்க?" என்றபடி அவனை நோக்கி ஓடினாள் ஆழ்வி.

"அது மூடிக்கிச்சு... திறக்க மாட்டேங்குது, ஆழ்வி"

"அதை இப்படி திறக்க கூடாது. இருங்க, நான் உங்களுக்கு செஞ்சு காட்டுறேன்" தன் கட்டை விரலை அதன் சென்சாரில் அழுத்தி, அதைத் திறந்தாள்.  

அதை அவள் கையில் இருந்து இனியவன் வாங்கிய வேகத்தில் அது மீண்டும் லாக் ஆனது. தன் ரேகையை அதில் பதிந்து அதை திறக்க முயன்றான் இனியவன். அது முடியாமல் போகவே, அவன் வெறுப்படைந்தான்.

"உங்க ஃபிங்கர் பிரிண்டை நம்ம முதல்ல அதுல ரிஜிஸ்டர் பண்ணணும். அப்போ தான் நீங்க உங்க விரலை அதுல அழுத்தினீங்கன்னா, அது ஓபன் ஆகும். இருங்க நான் உங்களுக்கு செஞ்சு காட்டுறேன்"

அவனை கட்டிலில் அமர வைத்து, லாக் ஸ்கிரீன் செட்டிங்ஸ்க்கு சென்று, அதில் அவனது கைரேகையை பதிவு செய்தாள்.  அந்த ஃபோனை லாக் செய்து, அதை அவனிடம் கொடுத்து திறக்கச் செய்தாள். தன் கைவிரலை வைத்தவுடன் அது திறந்து கொண்டதை பார்த்த இனியவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு, அந்த கைபேசியை திறப்பதும் முடுவதுமாக இருந்தான். அதை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் அது அவனுக்கு மிகவும் புதிது அல்லவா?

"இப்போ, நம்ம சாப்பிட போலாம் வாங்க"

அவன் கையைப் பிடித்து தரை தளத்திற்கு அழைத்து வந்தாள். இனியவனோ, அவளுடன் நடந்தபடி  அந்த கைபேசியை திறப்பதும் மூடுவதுமாக பிஸியாக இருந்தான்.

அவன் நித்திலாவை பார்த்த போது, தன் கையில் இருந்த கைபேசியை அவளிடம் காட்டி *பார் என்னிடமும் ஒரு கைபேசி இருக்கிறது* என்பது போல் பெருமை அடித்துக்கொண்டான். அவனது குழந்தைத்தனமான செயலை பார்த்த நித்திலா, சிரிப்பை அடக்கிய படி தன் தலையை அசைத்தாள்.

இனியவன் தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி புகைப்படம் எடுத்ததை பார்த்த அவர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள்.

"எங்க இன்னுவை நாங்க இப்படி எல்லாம் பாப்போம்னு நெனச்சு கூட பாத்ததில்ல" என்றாள் நித்திலா.

"ஆமாம் ஆழ்வி, அண்ணன் ஒரு பக்கா ஹீரோ மெட்டீரியல்...! அவரோட கேரக்டர்ல, ஒரு துளி கூட காமெடியனுக்கு இடமே இல்ல. தன்னோட இமேஜ் பத்தி அவரு ரொம்ப கவனமா இருப்பாரு. முக்கியமா அவரோட டிரெஸ்ஸிங்ஸ்...!" என்றாள் பார்கவி.

"இவன் எதிர்காலத்துல எப்படி இருப்பானோ தெரியல" என்றாள் நித்திலா.

"அவன் ரொம்ப நல்லா இருப்பான். எனக்கு ஆழ்வி மேல பரிபூரண நம்பிக்கை இருக்கு. அவன் அவளை மறுபடியும் பழைய மாதிரியே மாத்தி கொண்டு வருவா" என்றார் பாட்டி.

அவர்கள் பேசுவதை அமைதியாய் கேட்டபடி அவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் ஆழ்வி. தன் கண்ணில் படுவதை எல்லாம் புகைப்படமாய் எடுத்துக் கொண்டிருந்தான் இனியவன். தட்டு, தம்ளர், தண்ணீர்பாட்டில், கிண்ணம், பூஜாடி, கருமாரியம்மன் புகைப்படம், அனைத்தும் அவன் கைபேசிக்குள் அடங்கியது.

"ஆழ்வி, வேண்டாத ஃபோட்டோஸை எல்லாம் அப்புறமா டெலிட் பண்ணிடு. இல்லன்னா மெமரி வேஸ்ட் ஆகும்" என்றாள் பார்கவி.

சரி என்று தலையசைத்த ஆழ்வி, இனியவன் உறங்கிய பிறகு, அவனது புகைப்படங்களை தவிர, மற்ற அனைத்தையும் டெலிட் செய்தாள். அந்த புகைப்படங்கள் அவள் கைபேசியின் மெமரியை பிடித்துக் கொள்வதை பற்றி அவள் கவலைப்படவில்லை. அந்த புகைப்படங்களை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள். 

மறுநாள்

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், பாட்டியும் நித்திலாவும் கோவிலுக்கு கிளம்பினார்கள். ஆழ்வியின் கைபேசியுடன் இருந்த இனியவனை பார்த்தாள் நித்திலா.

"ஆழ்வி, நீயும் எங்க கூட கோவிலுக்கு வா" என்றார் பாட்டி.

தயக்கத்துடன் இனியவனை ஏறிட்டாள் ஆழ்வி.

"இன்னுவையும் கூட்டிகிட்டு வா" என்ற நித்திலாவை வியப்போடு பார்த்தாள் ஆழ்வி.

"எந்த பிரச்சனையும் பண்ணாம இன்னு நம்ம கூட கோவிலுக்கு வந்தான்னு, அவன்கிட்ட நான் ஃபியூச்சர்ல சொல்லுவேன்" என்று சிரித்தாள் நித்திலா.

"இன்னுவுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது தெரியுமா, ஆழ்வி?" என்றார் பாட்டி.

"அப்படியா பாட்டி?"

"அவன் அவனை மட்டும் தான் நம்புவான்... ஆனா இப்போ என்னடான்னா, கடவுள்கிட்ட நேரடியா பேசுறான்" என்று சிரித்தார் பாட்டி.

"கோவில்ல அவரை யாராவது பார்த்தா என்ன பண்றது?" என்றாள் ஆழ்வி.

"இனியவன் பாலகுமாரனுக்கு பரிச்சையமானவங்க யாரும் கோவிலுக்கு வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், அதுல பெருசா வித்தியாசம் ஒன்னும் இருக்காது. ஏன்னா, அண்ணன் யார்கிட்டயும் அவ்வளவா கலந்தெல்லாம் பழக மாட்டாரு" என்ற பார்கவியை,

"நீயும் எங்களோட வரியா?" என்றாள் நித்திலா.

"இல்ல, நான் என் ஃபிரண்டை பாக்க போறேன்"

"ஆழ்வி தான் உன்னோட ஃப்ரெண்டு. அவ நம்ம கூட இருக்கா. அப்படி இருக்கும் போது, நீ எந்த ஃபிரண்டை பாக்க போற?" என்றார் பாட்டி.

பார்கவி துணுக்குற்றாள். அவள் குருபரனை சந்திக்க செல்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் ஆழ்வி.

"மீனாவை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு" என்று அவளது உதவிக்கு வந்தாள் ஆழ்வி.  அவளுக்கு தன் கண்களால் நன்றியை தெரிவித்த பார்கவி,

"உன்னை கூட அவ பாக்கணும்னு சொன்னா, ஆழ்வி" என்றாள்.

"நான் அவகிட்ட அப்புறமா பேசிக்கிறேன்"

"ஆழ்வியோட ஃபோனை இன்னு அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கான். அதனால தான் அவளால யாருகிட்டயும் பேச முடியல" என்று சிரித்தாள் நித்திலா.

"மீனா ஃப்ரீயா இருந்தா நான் கூட்டிகிட்டு வர ட்ரை பண்றேன்" என்றாள் பார்கவி.

சரி என்று தலையசைத்த ஆழ்வி, இனியவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள்.

காரில்...

"என்னங்க, கோவில்ல எதுக்காகவும் நீங்க கத்தக்கூடாது. எது பேசினாலும் மெதுவா தான் பேசணும். என்னைத் தவிர வேற யார்கிட்டயும் எதுவும் கேட்கக்கூடாது. புரிஞ்சுதா?" என்று அவனுக்கு அறிவுறுத்தி அழைத்துச் சென்றாள்.

நல்ல பிள்ளை போல் தலையசைத்தான் இனியவன்.

கோவிலில்...

மற்ற மூவரும் பயபக்தியோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, இனியவன் தன் சுற்றுப்புறத்தை கண்களால் ஆராய்ந்த படி இருந்தான்.

அப்பொழுது ஒரு பெண்மணி தன் மகளோடு வந்து, கருவறை முன் நின்றார். இனியவனின் பார்வை அந்த பெண் மீது வேர் விட்டு நின்றது. ஏனென்றால், அவர் ஒரு கர்ப்பிணி. அவர்களைப் பார்த்து புன்னகைத்தார் பண்டிதர்.

"என் பொண்ணு வயித்துல வளர குழந்தைக்காகவும், அவளோட நார்மல் டெலிவரிக்காகவும் ஒரு பூஜை பண்ணலாம்னு இருக்கேன்" என்றார் அந்த பெண்மணி.

"ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்க பொண்ணும், அவ வயித்துல இருக்குற குழந்தையும் நல்லபடியா இருப்பாங்க. நான் பூஜைக்கு ஏற்பாடு பண்றேன்"

மென்று விழுங்கியபடி, தன் ஓரக்கண்ணால் இனியவனை பார்த்தாள் ஆழ்வி. அவள் எதிர்பார்த்ததுபடியே அந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைப் பார்த்தபடி தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான் இனியவன். அவன் அவளிடம் ஏதோ கேட்க முயல, தன் ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து,

"ஷ்... சத்தமா பேசாதீங்க" என்றாள்.

"ஆழ்வி, அவங்க வயித்துல பாப்பா இருக்கா?" என்றான் ரகசியமாய்.

அதை எதிர்பார்த்த ஆழ்வி, ஆம் என்று தலையசைத்தாள்.

"சாமி தானே பாப்பா குடுப்பாங்கன்னு சொன்ன? அப்புறம் அவங்க வயித்துக்குள்ள பாப்பா எப்படி போச்சு?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"சாமி தான் அவங்க வயித்துக்குள்ள பாப்பாவை வச்சிருக்காங்க" என்று சமாளிக்க முயன்றாள்.

"எப்படி?"

"கடவுளால எல்லாமே செய்ய முடியும்"

"சாமி உனக்கு பாப்பா கொடுத்தா உன் வயிறும் பெருசா ஆயிடுமா?" என்றான் பரிதவிப்போடு.

"ஆமாம், எல்லார் வயிறும் பெருசா ஆகும்"

"வலிக்குமா?"

இல்லை என்று தலையசைத்தாள்.

"நெஜமாவா?"

"நெஜமா..."

அவன் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

"அப்போ நீயும் சாமிகிட்ட பாப்பா கேளு"

"நான் அவங்ககிட்ட அப்புறமா கேட்கிறேன்"

"இப்ப ஏன் கேட்க மாட்ட?"

"நான் உங்களை பார்த்துக்கணும்ல?"

"அதனால என்ன?"

"ஒரு குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு வந்துட்டா, என்னால உங்களை எப்படி பார்த்துக்க முடியும்?"

"எங்க ரெண்டு பேரையும் பாத்துக்கோ"

"அது ரொம்ப கஷ்டமா இருக்கும்"

"பாப்பாவுக்கு என்ன செய்யணும்?"

"பாப்பாவுக்கு சாப்பாடு கொடுக்கணும், தூங்க வைக்கணும், எப்பவும் கூடவே இருந்து கவனிச்சுக்கணும், எல்லாத்தையும் கத்துக் கொடுக்கணும்"

"நீ என்னை பாத்துக்கோ. நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்"

"நீங்களா?" என்று சிரித்தாள்.

"ஆமாம் ஆழ்வி, நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்"

"என்னங்க, உங்களைப் பார்த்துக்கவே ஒரு ஆள் வேணும். அப்படி இருக்கும் போது, நீங்க எப்படி பாப்பாவை பார்த்துக்க முடியும்?"

"அப்போ நீ சாமிகிட்ட பாப்பா கேட்க மாட்டியா?" என்றான் ஏமாற்றத்துடன்

"கேட்பேன்"

"எப்போ?"

"நீங்க பெரிய பையனா ஆகும் போது"

"நான் ஏற்கனவே பெரிய பையன் தானே? பாரு, நான் உன்னை விட ஹைட்டா இருக்கேன்"

"அவ்வளவு என்ன அவசரம்? நீங்க பாப்பாவை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறீங்க?"

"போட்டோ எடுப்பேன்" என்று யோசிக்காமல் அவன் கூற, அதைக் கேட்டு சிரித்தள் ஆழ்வி.

"சோ ஸ்வீட். வாங்க போகலாம்"

அவள் பின்னால் திரும்ப, தன் கைபேசியுடன் அங்கு நின்றிருந்தாள் நித்திலா.

"சாரி ஆழ்வி, குழந்தையை பத்தி உங்க குழந்தை புருஷன் பேசினதை எல்லாம் நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன்" என்றாள்.

அதைக் கேட்டு வாயை பிளந்தாள் ஆழ்வி.

"இன்னு குணமானதுக்கு பிறகு, இதை நான் அவன்கிட்ட போட்டு காட்டி அவனை எப்படி கலாய்க்கிறேன்னு பாருங்க..."

"வேண்டாம் கா. அப்படி செய்யாதீங்க"

"ஏன், ஆழ்வி?"

"அவர் தன்னை தாழ்வா நினைச்சி வருத்தப்பட வாய்ப்பிருக்கு..."

பெருமூச்சுவிட்டு நித்திலா,

"சரி, நான் இதை அவன்கிட்ட காட்ட மாட்டேன். ஓகே வா?" என்றாள்.

சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி.

அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்தார்கள். அதே நேரம், அந்த கோவிலை ஒரு நபர் காரில் கடந்து சென்றார். இனியவன் அவர் கண்ணில் பட்டான். இனியவன், இனியவனை போலவே இருந்ததை பார்த்த அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். வெட்டி சீரமைக்கப்பட்ட தலைமுடியுடனும், சவரம் செய்யப்பட்ட முகத்துடனும் இருந்த அவனது தோற்றம், அந்த நபருக்கு ஏதோ ஒரு விஷயத்தை கூறியது. அதோடு மட்டுமல்லாது, தன் கையில் இருந்த கைபேசியால், தன் அருகில் நின்றிருந்த பெண்ணுடன் சேர்த்து தன்னை செல்பி எடுத்துக் கொண்டிருந்தான் இனியவன். அந்தப் பெண் அவனிடம் ஏதோ கூற, அவள் கூறியதை ஏற்று தலையசைத்தான் இனியவன். அந்த நபர் துணுக்குற்றார். யாரோ ஒருவருக்கு ஃபோன் செய்தபடி, அந்த இடம் விட்டு சென்றார் அந்த நபர்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top