27 இனியவனின் ஆர்வம்

27 இனியவனின் ஆர்வம்

இனியவனுடனும் பார்கவியுடனும் இன்பவனம் வந்து சேர்ந்தாள் ஆழ்வி. அவள் இனியவனின் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தாள். அவர்கள் மாமல்லபுரத்தில் பார்த்த பல விஷயங்களை நினைவு கூர்ந்து, அவன் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தான். அவனை நேராய் தங்கள் அறைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள், குருபரன் மற்றும் பார்கவியின் முன்னிலையில் கேட்டது போல், பாட்டி மற்றும் நித்திலாவின் முன் அவன்  கேள்வி என்ற பெயரில் வெடிகுண்டு எதையும் தன் மீது தூக்கிப் போட்டு விட வேண்டாம் என்று எண்ணி...! 

வெளியில் சுற்றி திரிந்ததில் அவளது முடி மிகவும் வறட்ச்சியாய் காணப்பட்டதால், கட்டியிருந்த தன் தலை முடியை உதறிவிட்டு லேசாய் எண்ணெய் வைத்து சீவிக் கொண்டாள். அவள் வெளியே செல்ல வேண்டாம் என்று முடிந்தவரை முயன்றாள். ஆனால் அப்படி அவளால் இருக்க முடியவில்லை. இரவு உணவு சாப்பிடுவதற்கு வெளியே சென்று தீர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நித்திலா சாப்பிட அவர்களை அழைத்தாள். ஆழ்விக்கு பதற்றமாய் இருந்தது. ஏனென்றால், இனியவன் எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தான்.  அவன் தலைக்குள் என்னென்ன கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. இன்று அவன் நிறைய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டான். எது அவனை இப்படி யோசிக்க வைத்தது என்று தான் அவளுக்கு புரியவில்லை.

சாப்பிடும் பொழுது அனைவரும் ஒரு விஷயத்தை கவனித்தார்கள். ஆழ்வியின் பக்கம் சாய்ந்து, மூச்சை உள்ளே இழுத்தபடி இருந்தான் இனியவன்.

"ஆழ்வி, இன்னு என்ன செய்றான்?" என்றார் பாட்டி.

"அவரு என் ஹேர் ஆயிலை ஸ்மெல் பண்றாருன்னு நினைக்கிறேன்"  என்று சிரித்தாள் ஆழ்வி.

"நீ தயார் செய்யற எண்ணெயோட ஸ்மெல் அண்ணனுக்கு பிடிச்சிருக்கு போல இருக்கு" என்றாள் பார்கவி.

"அப்படியா? நீங்களே தயார் செய்வீங்களா?" என்றாள் நித்திலா.

"ஆமாம் கா. அவளோட ஹேர் ஆயிலை அவளே செய்வா. அதுவும் நிறைய ஸ்பெஷல் இன்கிரிடியன்ஸ் போட்டு...! அதோட ஸ்மெல் ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும். அந்த எண்ணெய் தான் அவ ஹேரோட சீக்ரெட். பாருங்க அவ முடி எவ்வளவு அடர்த்தியா, நீளமா, அழகா இருக்கு..."

"அடுத்த தடவை நீங்க அந்த எண்ணெய்யை பிரிப்பேர் பண்ணும் போது, எனக்கும் சேர்த்து பண்ணி கொடுங்க, ஆழ்வி" என்றாள் நித்திலா, அவள் கூந்தலை மீண்டும் நுகர்ந்து கொண்டிருந்த இனியவனை பார்த்தபடி.

தண்ணீர் குவளையுடன் மேசைக்கு வந்த முத்து, அவன் அப்படி செய்வதை பார்த்து புன்னகைத்தான்.

"ஆழ்வி, உன்னோட தலகாணி கவரை இன்னுகிட்ட கொடுத்துடு. அவன் ஒரு ஓரமாக உட்கார்ந்து உன்னை எந்த தொந்தரவும் செய்யாம, அதை ஸ்மெல் பண்ணிக்கிட்டு இருப்பான் போலிருக்கு" என்றார் பாட்டி.

"வாய்ப்பில்ல பாட்டி... எது எப்படி இருந்தாலும், அண்ணன் அவளை விடவே மாட்டார்" என்றாள் பார்கவி.

"ஆழ்வி..." என்று இனியவன் அவளிடம் ஏதோ கேட்க நினைத்த போது, அவன் வாயில் ஒரு சப்பாத்தி துண்டை வைத்து அடைத்தாள் ஆழ்வி, அவனை ஒன்றும் கேட்க விடாமல் செய்து.

"என்ன ஆழ்வி, அவன் ஏதோ கேட்கணும்னு நினைக்கிறான் போல இருக்கே" என்றாள் நித்திலா.

"காலையில இருந்தே அண்ணன் நிறைய ஷார்ப்பான கேள்வி எல்லாம் கேட்டு அவளை கதி கலங்க வச்சிக்கிட்டு தான் இருக்காரு" என்று கிண்டலாய் சிரித்தாள் பார்கவி.

"அப்படியா ஆழ்வி?"

"அப்படிலாம் ஒன்னும் இல்ல" என்று மேலும் ஒரு வாய் சப்பாத்தியை அவனுக்கு ஊட்டி விட்டாள்.

"ஆழ்வி, உன்கிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்" என்றார் பாட்டி.

"சொல்லுங்க, பாட்டி"

"நமக்கு இடையில நிறைய விஷயம் நடந்துடுச்சு. அதுல பெரும்பாலானது கசப்பானது தான். அது எனக்கும் தெரியும். நீ இப்பவும் எங்க மேல கோவமா தான் இருக்கியா?"

"நான் எப்பவுமே உங்க மேல கோவமா இருந்ததில்ல" என்றபடி இனியவனுக்கு அடுத்த வாய் உணவை ஊட்டி விட்டாள்.

"நீ சொல்றது உண்மையா இருந்தா, நித்திலாவை அக்கான்னு கூப்பிடு. இனியவனுக்கு அக்கான்னா, அவ உனக்கும் அக்கா தானே?"

"ஆமாம் ஆழ்வி. என்னை யாரோ மாதிரி நீங்க, வாங்க, போங்கன்னு கூப்பிடுறத விட்டுட்டு, அக்கான்னு பார்கவி கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்களேன்" என்று வேண்டுகோள் விடுத்தாள் நித்திலா.

"நான் உங்களை அக்கான்னு கூப்பிடுறேன். ஆனா ஒரு கண்டிஷன்..."

"என்ன கண்டிஷன்?"

"நீங்களும் என்னை நீங்க, வாங்க, போங்கன்னு கூப்பிடாம, ஆழ்வின்னு ஒருமையில பார்கவியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க"

சரி என்று சந்தோஷமாய் தலையசைத்தாள் நித்திலா.

அந்த சின்ன இடைவெளியே இனியவனுக்கு கேள்வி கேட்க போதுமானதாய் இருந்தது.

"ஆழ்வி, எங்க அம்மா சாமியை பாக்க போனாங்கன்னு சொன்னல? அவங்க எப்ப திரும்பி வருவாங்க?" என்றான். 

பாட்டியும் நித்திலாவும் அவனை வியப்போடு பார்த்தார்கள். காலையில் அவனுக்கும் ஆழ்விக்கும் இடையில் நடந்த உரையாடல் பற்றி அவர்களுக்கு தெரியாது அல்லவா...!

"அவங்க திரும்பி வர மாட்டாங்க" என்று மெல்லிய குரலில் கூறினாள்.

"ஏன் வர மாட்டாங்க?"

"அவங்க ரொம்ப நல்லவங்க. அதனால கடவுளுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிடுச்சு. அதனால அவங்க கிட்டயே வச்சுக்கிட்டாங்க"

இனியவனின் முகத்தில் திகில் படர்ந்ததை கவனித்தாள் ஆழ்வி. 

"அப்போ நீயும் சாமிகிட்ட போயிடுவியா?" என்றான்.

பதில் கூற தடுமாறினாள் ஆழ்வி.

"நீயும் தானே நல்லவ? அப்ப கடவுள் உன்னையும் கூப்பிடுவாங்களா?"

இந்த விஷயத்தில் அவனுக்கு உண்மையை கூறி புரிய வைப்பதா, வேண்டாமா என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவன் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை புரிந்துகொண்டு, விரைவாக ஒரு முடிவுக்கு வந்து, இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.

"எங்க அம்மா என்னை விட்டுட்டு போன மாதிரி நீயும் போகாத, ஆழ்வி" என்று  அவளை அணைத்துக் கொண்டான். இந்த முறை, அவனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆழ்விக்கு தோன்றவில்லை. கலங்கிய கண்களுடன் அவன் தலையை கோதிவிட்டாள்.

ஆழ்வி அவனுக்கு பதில் கூறும் முன், பாட்டி பதிலளித்தார்.

"கடவுள் உன் ஆழ்வியை கூப்பிட மாட்டாங்க. ஏன்னா, உனக்காக ஆழ்வியை அனுப்பி வச்சதே அவங்க தான்"

முதல்முறையாக, ஆழ்வி அல்லாத வேறு ஒருவர் கூறியதை கேட்டு புன்னகை புரிந்தான் இனியவன்.

"நெஜமாவா?" என்று புன்னகையுடன் கேட்க,

"ஆமாம், உங்க அம்மா தான் கடவுள்கிட்ட சொல்லி, உனக்கு வேண்டியதை எல்லாம் செய்ய ஆழ்வியை உனக்காக அனுப்பி வச்சிருக்காங்க"

அதை கேட்ட ஆழ்வி உணர்ச்சிவசப்பட்டாள். நித்திலா மற்றும் பார்கவியின் நிலையும் அதே தான்.

"நிஜமாவா, ஆழ்வி? எங்க அம்மா தான் உன்னை எனக்காக அனுப்பி வச்சாங்களா?" என்று பாட்டி கூறியதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவளிடம் கேட்டான். ஏனென்றால், அவனைப் பொறுத்தவரை ஆழ்வி மட்டும் தான் நம்ப தகுந்தவள்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் உங்களை விட்டு போக மாட்டேன்" என்று அவன் கூற,
யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அவள் கன்னத்தை கையில் ஏந்தி,  அவள் இதழில் அழுத்தமாய் இதழ் பதித்தான், அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து.

"நீ ரொம்ப நல்லவ" என்று சந்தோஷமாய் புன்னகைத்தான்.

தன் கண்ணின் கருவிழியை மெல்ல அவர்களை நோக்கி நகர்த்தினாள் ஆழ்வி, அவர்களுடைய முக பாவத்தை கவனிக்க. அவர்கள் வாயைப் பிளந்தபடி அமர்ந்திருந்தார்கள். கண்களை மூடி தலை குனிந்தாள் ஆழ்வி.

"ஆழ்வி, எனக்கு ஊட்டி விடு" என்று சாதாரணமாய் கேட்டான் இனியவன், தான் அவளை எவ்வளவு சங்கடப்படுத்தி விட்டோம் என்பது தெரியாமல்.

வேகமாய் சாப்பிட்டு முடித்துவிட்டு, இனியவனுடன் தங்கள் அறைக்கு சென்றாள் ஆழ்வி.

"இங்க பாருங்க" நீங்க மத்தவங்க முன்னாடி என்னை முத்தம் கொடுக்கக் கூடாதுன்னு நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன்ல? " என்று உதடு சுழித்தாள்.

"சரி, அப்போ யாருக்கும் தெரியாம முத்தம் கொடுக்கிறேன்" என்று அவள் கன்னத்தைப் பற்றி மீண்டும் அவள் உதட்டில் முத்தமிட்டான்.

பெருமூச்சு விட்டாள் ஆழ்வி. அவள் அவனுக்கு புரிய வைக்க நினைத்தது என்ன, அவன் புரிந்து கொண்டது என்ன?

"வா ஆழ்வி, எனக்கு தூக்கம் வருது" என்று அவளை இழுத்துக் கொண்டு கட்டிலை நோக்கி சென்றான்.

"நீங்க படுங்க. நான் டிரஸ் மாத்திகிட்டு வரேன்"

தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றாள்.

"ஆழ்வி, எதுக்காக  பாத்ரூம்ல போய் டிரஸ் பண்ற? நான் எப்பவும் இந்த ரூம்ல தானே டிரஸ் பண்றேன்? அதே மாதிரி நீயும் பண்ணு"

மென்று விழுங்கினாள் ஆழ்வி.

"இல்ல அது வந்து..."

"இங்கேயே சேஞ்ச் பண்ணிக்கோ..."

"இல்ல நான் டிரஸ் சேஞ்ச் பண்ணல. நான் இந்த டிரஸ்லயே தூங்குறேன்" என்று அவன் பக்கத்தில் படுத்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.  இனியவன் அவளை அணைத்துக் கொண்டான். அவன் தலையில் எண்ணெய் தேய்த்து விட, அவன் உறங்குவதற்காக காத்திருந்தாள் ஆழ்வி. மெல்ல கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். என்ன என்பது போல் அவள் புன்னகைக்க,

"கேர்ள்ஸ் எப்படி அம்மாவா ஆவாங்க?" என்றான்.

ஆழ்விக்கு தூக்கி வாரி போட்டது.

"அம்மாவா?"

"ஆங்... இன்னிக்கு ஒரு பாப்பாவுக்கு அவங்க அம்மா பால் ஊட்டுனாங்க இல்ல?"

"அதனால?"

"அவங்க எப்படி அம்மாவானாங்க?"

"எல்லா பொண்ணுங்களும் அம்மாவா ஆவாங்க"

"நெஜமாவா?"

ஆமாம் என்று தலையசைத்தாள். 

"நீயும் கூடவா?"

"ஆமாம்..."

"எப்போ?"

பதில் கூறாமல் புன்னகைத்தாள்.

"சொல்லு, ஆழ்வி"

"நாளைக்கு சொல்றேன். இப்ப தூங்குங்க" என்று அவன் தலையை தலையணையில் அழுத்தினாள்.

மறுநாள் காலை 

இனியவனை குளிக்கச் செய்துவிட்டு, தானும் குளித்து முடித்து, குளியலறையை விட்டு வெளியே வந்தாள் ஆழ்வி. அவன் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான். சிரித்தபடி ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு சென்ற அவள், யோசனையுடன் அமர்ந்திருந்த அவனை, கண்ணாடியில் பார்த்தபடி தலை சீவினாள். இன்று அவளுக்கு என்ன கேள்வி காத்திருக்கிறதோ...!

தலையை வாரி முடித்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் பருகினாள்.

"ஆழ்வி, நீ எப்போ அம்மாவா ஆவ?" முதல் நாள் கேட்ட அதே கேள்வியை மீண்டும் இனியவன் கேட்டபோது, திடுக்கிட்டு  வாயிலிருந்த தண்ணீரை துப்பினாள்.

தன் விழி விரித்து அவனை ஏறிட்டாள். அவன் இன்னும் அந்த கேள்வியை மறக்கவில்லையா?

"நீயும் தானே அம்மாவா ஆவ?"

"ஆமாம்,"

"எப்போ ஆவ?"

"அது என் கையில இல்ல"

"அப்போ யார் கையில இருக்கு?"

"அது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்"

"நிறைய கை வச்சிருக்காங்களே, அவங்க தானே?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"அப்போ நான் அவங்க கிட்டயே கேட்கிறேன்"

அவள் பதிலுக்காக காத்திராமல், தரைதளம் நோக்கி ஓடினான். அதை பார்த்த ஆழ்வி திகில் அடைந்தாள்.

"அடக்கடவுளே... இவரு கீழ போய் என்ன கலாட்டா செய்யப் போறாரோ தெரியலையே" என்று பதறியபடி  அவன் பின்னால் ஓடினாள்.

மாடி படியில் நின்றவாறு, பூஜை அறையில் இருந்த அம்மன் படத்தை பார்த்து,

"சாமி..." என்று அவன் கத்த,

வரவேற்பு அறையில் இருந்த அனைவரது பார்வையும் அவன் பக்கம் திரும்பியது. இவ்வளவு காலை வேளையில், அவனை எது கடவுளை அவ்வளவு சத்தம் போட்டு அழைக்க வைத்தது என்று தெரிந்து கொள்ள அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ஆழ்வி எப்போ அம்மாவா ஆவா?" என்று கடவுளிடம் அதட்டலுடன் கேள்வி கேட்டான், என்னவோ கடவுள் அவனுடைய மாணவி என்பது போலவும், அவன் அவரது ஆசிரியர் என்பது போலவும்.

தன் உதடு கடித்து புருவம் உயர்த்தினார் பாட்டி. நித்திலாவும் பார்கவியும் தங்கள் சிரிப்பை அடக்க வாயை பொத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு காபி கொடுத்துக் கொண்டிருந்த முத்து சிரித்தபடி அந்த இடம் விட்டு நகர்ந்தான்.

"அண்ணா, நீங்க மட்டுமே பதில் சொல்ல முடியுற கேள்வி அது" என்று சிரித்தாள் பார்கவி.

அதைக் கேட்டு பாட்டியும் நித்திலாவும் கொல்லென்று சிரித்தார்கள்.

இனியவன் மீண்டும் ஏதோ கூற முயல, அங்கு வந்த ஆழ்வி அவன் வாயை பொத்தினாள்.

"ஷ்ஷ்... என்னங்க, நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன், இது ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் விஷயம். இது ரகசியமாக இருக்கணும்"

"அப்போ நான் சாமிகிட்ட எப்படி கேக்குறது?"

"நீங்க மெதுவா பேசினாலும் அவங்களுக்கு கேட்கும். ஆனா, நம்ம ரகசியம், ரகசியமா தான் இருக்கணும்"

தன் கண்களை சுருக்கி சீரியஸாய் தலையசைத்த இனியவன், பூஜை அறைக்கு ஓடினான். அம்மன் படத்தின் அருகே வந்து, அவர் காதில் ரகசியமாய், தன் கையால் வாயை மறைத்துக் கொண்டு பேசினான்.

அந்த அழகிய காட்சியை தன் கைபேசியில் புகைப்படம் ஆக்கினாள் நித்திலா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top