26 சுற்றுலா

26 சுற்றுலா

தன் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து விக்கித்து நின்றாள் ஆழ்வி. அந்தப் பெண்ணை நோக்கி நீட்டிக் கொண்டிருந்த அவனது கையை அவசரமாய் கீழே இறக்கி விட்டாள்.

"என்னங்க அவங்களை பார்க்காதீங்க" என்று மெல்லிய குரலில் கூறினாள்.

"ஏன்?" என்று மீண்டும் அந்த பெண்ணை பார்த்தான் இனியவன்.

அவன் முகவாய்கட்டை பற்றி தன்னை நோக்கி திருப்பி, அவனை பார்க்க விடாமல் செய்து,

"அது அவங்க பர்சனல்" என்றாள்.

"இதுவும் பர்சனலா?" என்று முகம் சுருக்கினான்.

"ஆமாம்"

"ஆனா, நீ பர்சனல் விஷயம் எல்லாம் ரகசியமா தானே செய்யணும்னு சொன்ன? அப்புறம் எதுக்காக அவங்க எல்லாருக்கும் முன்னாடி செய்றாங்க?"

"அவங்க பாப்பாவுக்கு பால் கொடுக்குறாங்க"

"ஆனா, நீ எல்லாருக்கும் முன்னாடியும் தானே எனக்கு சாப்பாடு கொடுக்கிற?"

திகைத்தாள் ஆழ்வி. இதை இப்பொழுதே முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், இது அவளை வில்லங்கமான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

"அது உங்களை மாதிரி இல்ல, குட்டி பாப்பா. அவங்க ஏன் மறைச்சிகிட்டு பால் ஊட்டுறாங்கன்னா, குழந்தைக்கு பேட் வைப்ஸ் படக்கூடாதுன்னு தான்"

"அவங்க எல்லாரும் முன்னாடியும் கொடுத்தா பாப்பாவுக்கு பேட் வைப்ஸ் வருமா?"

"ஆமாம்"

"பேட் வைப்ஸ் வந்தா என்ன ஆகும்?"

"பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போகும்"

"ஆனா, இங்க பால் கொடுத்தா எல்லாரும் தானே பாப்பாங்க? அப்போ ஏன் இங்க குடுக்குறாங்க?"

"குழந்தைக்கு பசிக்கும் இல்ல? அதுக்கு இதெல்லாம் தெரியாது..."

"அப்போ அவங்க பாப்பாவை வீட்டுக்கு கூட்டிகிட்டு போக வேண்டியது தானே?"

"வீட்டுக்கு போறதுக்குள்ள பாப்பாவுக்கு பசி அதிகமாயிடும் இல்ல? அதனால தான் அவங்க அம்மா இங்கேயே பால் கொடுக்குறாங்க"

"பாப்பாவுக்கு பேட் வேர்ட்ஸ் வந்தா?"

"நேத்து நீங்க ஹேர் கட் பண்ணிக்கிட்டு வந்த போது, பாட்டி உங்களுக்கு சுத்தி போட்டாங்க இல்ல? அந்த மாதிரி பாப்பாவுக்கும் அவங்க சுத்தி போட்டுடுவாங்க. குழந்தைக்கு பசிக்கும் போது, அம்மா வேற எதை பத்தியும் யோசிக்க மாட்டாங்க"

"அம்மான்னா யாரு?"

"குழந்தை இந்த பூமிக்கு வர்றதே   அம்மாவால தான். அவங்க தான் குழந்தையை ரொம்ப அக்கறையா பாத்துக்குவாங்க. குழந்தையோட சந்தோஷத்துக்காக என்ன வேணா செய்வாங்க. அதுக்கு வேண்டியதை எல்லாம் செஞ்சு கொடுப்பாங்க" நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆழ்வி. ஏனென்றால், விஷயம் வேறு பக்கம் திசை திரும்பி விட்டது அல்லவா?

"என் அம்மா எங்க?" என்றான் இனியவன்.

மீண்டும் திகைப்புக்கு ஆளான ஆழ்வி, தன்னை சமாளித்துக் கொண்டு,

"அவங்க சாமிகிட்ட போயிட்டாங்க" என்றாள்.

"ஏன் போனாங்க?"

"அவங்களுக்கு கடவுளை பாக்கணும்னு தோணுச்சு. அதனால போனாங்க"

யோசிக்க துவங்கினான் இனியவன்.

"உங்களுக்கு அம்மா இல்லையேன்னு வருத்தமா இருக்கா?" என்றாள் கவலையோடு.

இல்லை என்று தலையசைத்து அவளுக்கு ஆச்சரியம் அளித்தான்.

"இல்லையா? ஏன்?" என்றாள்.

"எனக்கு தான் நீ இருக்கியே...! அம்மா என்னெல்லாம் செய்வாங்களோ அதையெல்லாம் நீ தான் எனக்கு செய்யறியே. எனக்கு அம்மா வேணாம், நீ தான் வேணும்" என்று அவளை அணைத்துக் கொண்டான், மற்றவர் முன், தன்னை அணைக்க கூடாது என்று அவள் கூறியதை மறந்து.

அவன் கூறியதை கேட்டு நெகிழ்ந்து போன ஆழ்விக்கும், அது பெரிதாய் தெரியவில்லை.

"வாவ்... வாட் ய கிரேட் லவ்" என்று யாரோ கூறுவதை கேட்டு, அவள் தன்னை அவனிடமிருந்து பின்னால் இழுத்தாள்.

அவர்கள் அமர்ந்திருந்த பாறைக்கு பின்னால் இருந்த மரத்தில் சாயந்தபடி அமர்ந்திருந்த ஒருவர், அவர்களை பார்த்து புன்னகை புரிந்தார். அவர் யார் என்று ஆழ்விக்கு தெரியவில்லை. அவரும் ஓர் சுற்றுலா பயணி போலிருக்கிறது.

"சூப்பரா பதில் சொன்னீங்க, பாஸ். இப்படி ஒரு வைஃப் கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்று கூறியபடி அவர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

"என்னங்க, இதுக்காகத் தான் நீங்க மத்தவங்க முன்னாடி என்னை கட்டிப்பிடிக்க கூடாதுன்னு நான் சொன்னேன்" என்று முகத்தை சுளித்தாள் ஆழ்வி.

"ஆனா, நான் உன்னை கட்டி பிடிச்சதை பத்தி அவர் எதுவுமே சொல்லலயே!" என்று அவளுடன் விவாதித்து, அவளை பேச்சிழக்க செய்தான்.

குருபரனும், பார்கவியும் அவர்களுக்கு சற்று தொலைவில் இருந்தபடி, அவர்கள் பேசுவதை கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்பதை ஆழ்வி புரிந்து கொண்டுவிட்டாள். ஆனால் அது குறித்து அவள் அவர்களிடம் ஒன்றும் கேட்கவில்லை.

மதிய உணவை வழங்குவதற்காக இனியவனை அவர்கள் காருக்கு அழைத்து வந்தார்கள். டிக்கியை திறந்துவிட்டு, அதில் இனியவனையும் ஆழ்வியையும் அமரச் செய்த குருபரன், பார்கவியுடன் நின்றபடி சாப்பிட்டான். அது இன்னோவா கார் என்பதால், உள்ளே ஆழ்ந்து இல்லாமல், உட்கார வசதியாய் மேலோட்டமாய் இருந்தது.

"ஆழ்வி, நீ எனக்கு ஊட்டு" என்றான் இனியவன் வழக்கம் போலவே.

"இது பப்ளிக் பிளேஸ். இங்க என்னால ஊட்ட முடியாது. நீங்களே சாப்பிடுங்க"

"நான் சாப்பிட மாட்டேன்" என்றான் பிடிவாதமாய்.

பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.

"ஊட்டி விடுங்க, ஆழ்வி" என்றான் குருபரன்.

ஆழ்வி அவனுக்கு சாப்பாடை ஊட்ட முயன்ற போது, அவளது சேலை தலைப்பை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டான்.

"என்ன செய்றீங்க" என்று சங்கடத்துடன் கேட்டாள் ஆழ்வி.

"பேட் வைப்ஸ்ல இருந்து என்னை நான் பாதுகாக்குறேன்" என்றான்.

"கடவுளே...! ஐபிகே பேட் வைப்சை பத்தி எல்லாம் பேசறானே" என்று வாய்விட்டு சிரித்தான் குருபரன்.

"அவரு ஐபிகே இல்ல. ஆழ்வியோட என்னங்க" என்று சிரித்தாள் பார்கவி.

சிரித்தபடி அவனுக்கு ஊட்டிவிட்டாள் ஆழ்வி.

"உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லணும் ஆழ்வி" என்றான் குருபரன்.

"சொல்லுங்க, அண்ணா"

"நானும் பார்க்வியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்"

"நான் அதை கெஸ் பண்ணினேன். இவருக்கு அதைப் பத்தி தெரியுமா?" என்று இனியவனை சுட்டிக்காட்டி கேட்டாள். அதை கவனித்த இனியவன்,

"எனக்கு தெரியாது" என்று பதில் கூறினான்.

"நீங்க கேட்ட கேள்விக்கு ஐபிகே பதில் சொல்லிட்டான்" என்று சிரித்தான் குருபரன்.

"இவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறீங்களா?"

"இவர் ஒத்துக்குவாரு... ஆனா ஐபிகேவை பத்தி எனக்கு நிச்சயமா தெரியல" என்றான் குருபரன்.

"சரியான நேரம் வரும் போது, நான் நம்ம ஃபேமில இருக்கிறவங்க கிட்ட இதை பத்தி பேசலாம்னு இருக்கேன்" என்றாள் பார்கவி.

சரி என்று தலையசைத்துவிட்டு, காரை விட்டு கீழே இறங்கி கை கழுவினாள் ஆழ்வி. இனியவன் இறங்காமல், காலை ஆட்டியபடி அப்படியே அமர்ந்திருந்தான்.

அப்பொழுது அவர்கள் அதே குரலை மீண்டும் கேட்டார்கள். மரத்தில் சாய்ந்தபடி அவர்களிடம் பேசிய அதே மனிதன் அங்கு நின்றிருந்தான்.

"உங்க ஸ்டேட்மென்ட் மாதிரியே, உங்க கார் நம்பரும் ரொம்ப யூனிக்கா இருக்கு, பாஸ்" என்று சிரித்தபடி சென்றார் அந்த மனிதர்.

அவர்களது கார் எண், டிஎன் 09 ஏஜே 1000.

"கார் நம்பர்னா என்ன?" என்றான் இனியவன்.

அவனுக்கு அதைப்பற்றி விளக்கி கூறினாள் ஆழ்வி. அதற்குப் பிறகு, கார் எண்களை கவனிக்க துவங்கினான் இனியவன். அவர்கள் மேலும் இரண்டு மணி நேரம் மாமல்லபுரத்தில் சுற்றி திரிந்தார்கள். அர்ஜுனன் தவம், பட்டர் பால் பாறை, கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம் என சென்ற இடமெல்லாம் கேள்விக்கணைகளை தொடுத்தவாரு இருந்தான் இனியவன்.

மணி நான்கு

"கிளம்பலாமா ஆழ்வி?" என்றான் குருபரன்.

சரி என்று தலைசைத்தாள் ஆழ்வி.

அவர்கள் மாமல்லபுரத்தை விட்டு புறப்பட்டார்கள். அரை மணி நேர பயணத்திற்கு பிறகு, சாலையில் கூட்டம் கூடி நிற்பதை கவனித்தான் குருபரன். துணுக்குற்ற அவன், காரின் வேகத்தை குறைத்தான். ஆழ்வியும் அதை கவனித்தாள்.

"அங்க என்ன பிரச்சனை, அண்ணா?"

"ஆக்சிடென்ட்டுனு நினைக்கிறேன்"

ஆழ்விக்கு பதற்றம் ஏற்பட்டது. இனியவனுக்கு ரத்தத்தை கண்டால் பயம். அவன் ரத்தத்தை பார்த்து விட்டால் என்ன செய்வது? சித்த மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, அவன் ரத்தத்தை பார்த்தால் எப்படி நடந்து கொள்வான் என்று அவளுக்கு தெரியாவிட்டாலும், அவளுக்கு பதற்றமாய் இருந்தது. விபத்து நடந்த பகுதியை அவர்களது கார் மெல்ல அணுகியது. அங்கு நிகழ்ந்தது மிக கொடூரமான விபத்து போல் தெரிந்தது. சாலையில் ரத்தம் சிதறி கிடந்தது. அதை ஆழ்வியாலேயே பார்க்க முடியவில்லை. அப்படி இருக்கும் பொழுது, இனியவன் நிலை என்னவாகும்? எதைப் பற்றியும் யோசிக்காமல், தன் சேலை தலைப்பால் அவனையும் தன்னையும் சேர்த்து மூடிக்கொண்டு அவனை பார்த்து புன்னகை புரிந்தாள் ஆழ்வி.

"ஆழ்வி, என்னை கார் நம்பரை பார்க்க விடு" என்றான்.

"நீங்க அப்புறமா பார்க்கலாம்"

"இப்ப ஏன் பார்க்க கூடாது?" என்று அவள் சேலை முந்தானியை விலக்க முயன்றான்.

"இருங்க" என்று அவன் முகத்தை தன் கைகளில் பற்றிக் கொண்டு, அவனை இந்தப் புறமும், அந்தப்புறமும் பார்க்க விடாமல்,
அவர்களது கார் அந்த இடத்தை கடக்க காத்திருந்தாள்.

கூட்டத்திலிருந்து காரை வெளியே கொண்டு வர, காரை லேசாய் உடைத்து திருப்பினான் குருபரன். அதில் நிலை தடுமாறிய ஆழ்வி, இனியவன் மீது விழுந்தாள். அப்போது அவர்களது இதழ்கள் சந்தித்துக் கொண்டன. அந்த எதிர்பாராத நிகழ்வால் அதிர்ச்சி அடைந்தாள் ஆழ்வி. ஆனால் இனியவனுக்கு அது பிடித்திருந்தது.

"ஆழ்வி, நம்ம கிராஸ் பண்ணிட்டோம்" என்றான் குருபரன்.

சேலை தலைப்பை எடுத்துவிட்டு நேராய் அமர்ந்து கொண்டாள்.

"ஆழ்வி, நீ செஞ்ச மாதிரி, நம்ம முகத்தை மூடிகிட்டு தான் முத்தம் கொடுக்கணுமா?" என்றான் இனியவன்.

பார்கவி பின்னால் திரும்பி ஆழ்வியை பார்க்க, ரியர் வியூ கண்ணாடியின் மூலமாக அவளைப் பார்த்தான் குருபரன். அவர்களது பார்வையை சமாளிக்க தினறினாள் ஆழ்வி.

"சொல்லு, ஆழ்வி"

"நான் தெரியாம உங்க மேல மோதிக்கிட்டேன்" என்று தடுமாற்றத்துடன் மெல்லிய குரலில் கூறினாள்.

"அப்போ, தெரிஞ்சு என் மேலே மோத மாட்டியா?" என்றான் ஏமாற்றத்துடன்.

"ஷ்... சத்தமா பேசாதீங்க"

"தெரிஞ்சி என் மேல மோத மாட்டியா?" என்றான் ரகசியமாய்.

"நம்ம அப்புறம் பேசலாம். புரிஞ்சுதா?"

"சரி. நீ என் மேல மோதுன மாதிரி ஒரு தடவை மோது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

குருபரனும், பார்கவியும் தங்கள் சிரிப்பை அடக்க படாத பாடுபட்டார்கள்.

"என்னங்க, நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல?நம்ம விஷயம் பர்சனலா இருக்கணும்" என்று ரகசியமாய் கூறினாள்.

அவளது சேலை முந்தானியை பிடித்து இழுக்க முயன்றான் இனியவன், சற்று முன், ஆழ்வி தங்கள் இருவரையும் போர்த்திக் கொண்டது போல் செய்வதற்காக. ஆனால் ஆழ்வி அதற்கு அனுமதிக்கவில்லை. தன் சேலை தலைப்பை கெட்டியாய் பற்றி கொண்டு, விடாமல் பிடித்துக் கொண்டாள். அது அவனுக்கு ஏமாற்றத்தை தந்தது.

"போ..." என்று ஜன்னல் பக்கம் திரும்பி, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டான்.

பார்கவி ஜன்னல் பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டு சிரிக்க, தன் உதடு கடித்து சிரித்தபடி வண்டியை ஓட்டி சென்றான் குருபரன். ஐம்பது மீட்டர் கடந்த பிறகு, ஒரு காபி ஷாப் இருந்ததை கவனித்தான் குருபரன். அந்தக் கடைக்கு முன்னதாகவே காரை நிறுத்திய அவன்,

"பார்கவி, வா, நம்ம போய் ஆழ்விக்கும், ஐபிகேவுக்கும் காபி வாங்கிட்டு வரலாம்" என்றான்.

சரி என்று தலையசைத்து, காரை விட்டு கீழே இறங்கினாள் பார்கவி. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி அவர்கள் அந்த கடையை நோக்கி சென்றார்கள்.

காரை விட்டு அவர்கள் வெகு தூரம் சென்று விட்டார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, இனியவனை தன்னை நோக்கி திருப்பினாள் ஆழ்வி. முகத்தை சுளுக் என்று வைத்துக் கொண்டு அவளை பார்த்தான் இனியவன். அவன் முகத்தைப் பற்றி தன் இதழ்களை அவன் இதன் மீது ஒற்றி எடுத்து அவனை புன்னகைக்க செய்தாள்.

"சந்தோஷமா?"

அவள் முகத்தைப் பற்றிய அவன், அழுத்தமாய் அவள் இதழில் முத்தமிட்டு,

"சந்தோஷம்" என்றான், ஆழ்வியை சிரிக்கச் செய்து.

அவர்கள் இருவருக்கும் காப்பியை வாங்கிக்கொண்டு, குருபரனும் பார்கவியும் காருக்கு வந்தார்கள். இனியவன் சகஜமாய் மாறிவிட்டதை பார்த்த அவர்கள், அவன் கேட்டதை ஆழ்வி கொடுத்து விட்டதை புரிந்து கொண்டார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top