24 கேள்விக்கணைகள்
24 கேள்விக்கணைகள்
தனக்குப் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்த ஆழ்வி, திகில் அடைந்தாள். மெல்ல அவள் பின்னால் திரும்ப, நம்ப முடியாத முகபாவத்துடன் நின்றிருந்தான் முத்து. என்ன செய்வது என்று புரியாத ஆழ்வி, தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.
"எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நிச்சயம் நீங்க தப்பானவங்களா இருக்க முடியாது. ஏன்னா, நீங்க வந்ததுக்கு பிறகு தான் இனியவன் அண்ணன் கிட்ட நம்ப முடியாத அளவுக்கு மாற்றங்கள் தெரியுது. அவர் அந்த மோசமான நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்துட்டு இருக்காரு. நான் உங்க அர்ப்பணிப்பை என் கண் முன்னாடி பார்க்கிறேன் அண்ணி. நீங்க தப்பானவங்க இல்லன்னா, நீங்க சிங்க்ல கொட்டின மருந்து தப்பானதா இருக்கணும்... நான் சொல்றது சரியா?"
"முத்து, உங்களுக்கு என் புருஷன் மேல உண்மையான விசுவாசம் இருக்குன்னு நான் நம்புறேன். தயவு செஞ்சு, இந்த விஷயத்தை வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க"
"சத்தியமா சொல்ல மாட்டேன் அண்ணி. ஆனா, நான் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் வேணும். அந்த மருந்து மோசமானதா?"
ஆமாம் என்று தலையசைத்த ஆழ்வி,
"அந்த மருந்து தான் அவரை மூர்க்கத்தனமாக வைச்சிருந்தது. அவரோட நிலைமையை மோசமாக்கிக்கிட்டே போனதும் அந்த மருந்து தான்" என்று இறுதியாய் உண்மையை உரைத்தாள்.
"இந்த விஷயத்துல, சித்ரா அண்ணனுக்கு பங்கு இருக்குன்னு மட்டும் சொல்லிடாதீங்க, அண்ணி"
"அப்படி சொல்ல கூடாதுன்னு தான் எனக்கும் ஆசை. ஆனா, என்னால சொல்ல முடியாது. டாக்டர் கூட சேர்ந்துக்கிட்டு அவர் தான் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காரு"
முத்துவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"அவர் இந்த குடும்பத்தை ஏமாத்தினது மட்டும் இல்லாம, என் கையாலேயே அந்த மருந்தை அண்ணனுக்கு கொடுக்க வச்சு, என்னையும் துரோகம் செய்ய வச்சிருக்காரு...!" என்ற போது அவன் கண்கள் கலங்கி, தொண்டையை அடைத்தது.
அப்பொழுது சமையலறைக்குள் கோபமாய் நுழைந்தான் குருபரன். ஆழ்வியின் தோள்களை பற்றிய அவன்,
"நீங்க சொல்றது உண்மையா, ஆழ்வி? இனியாவுக்கு கொடுத்த மருந்து மோசமானதா? அதக்கு சித்திரவேலும் உடந்தையா? அதை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான்.
அவள் முத்துவிடம் பேசிக் கொண்டிருந்ததை குருபரன் கேட்டுவிட்டான் போலிருக்கிறது.
"எங்க கல்யாணத்துக்கு அடுத்த நாள், அண்ணனும் டாக்டரும் பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன். அதனால, அவருக்கு அந்த மருந்தை கொடுக்கிறதை நான் உடனடியா நிறுத்திட்டேன்"
"நான் இதை சும்மா விட போறதில்ல" என்று கோபத்தில் கொந்தளித்தான் குருபரன்.
"அண்ணா ப்ளீஸ், தயவு செஞ்சி பொறுமையா இருங்க"
"என்னால எப்படி பொறுமையா இருக்க முடியும், ஆழ்வி?"
"நம்ம இருந்து தான் ஆகணும். அவங்க வேற ஏதாவது ஒரு விதத்துல அவரை அட்டாக் பண்ணா என்ன செய்வீங்க? அவங்களை ஏமாத்தறதுக்கு இது தான் எனக்கு ரொம்ப சுலபமான வழி. ஒருவேளை அவங்க இன்னும் கொடூரமான மருந்தை அவருக்கு ஊசி போட்டு விட்டுட்டாங்கன்னா, அதுக்கு அப்புறம் அவருக்கு நம்ம மாற்று மருந்து கூட கொடுக்க முடியாது"
"அதுக்காக, என்னை வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?"
"இல்ல. நான் அப்படி சொல்லல. அண்ணன் மதுரைக்கு போயிருக்காரு. அவரு இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் திரும்ப வருவாரு. அதுவரைக்கும் நான் அவருக்கு ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த பத்து நாள்ல அவர்கிட்ட இன்னும் கூட நிறைய முன்னேற்றம் தெரியும்னு நான் நம்புறேன்..."
"என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்குறீங்க?" என்று முகத்தை சுருக்கினான் குருபரன்.
சில நொடி திகைத்தாள் ஆழ்வி.
"நீங்க இனியாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குறீங்களா?" என்றான் ஆச்சரியத்தோடு.
ஆம் என்று தலையசைத்த ஆழ்வி,
"நான் ராமநாதபுரத்தில் இருக்கிற மனநிலை சரியில்லாதவங்களை குணப்படுத்துற ஒரு வைத்தியசாலையில இருந்து சித்த மருந்தை வரவழைச்சு அதை அவருக்கு கொடுத்துக்கிட்டு இருக்கேன்"
"இதை பத்தி வேற யாருக்குமே தெரியாதா?"
"இல்ல. எனக்கு யாரை நம்பறதுன்னே தெரியல. நான் ரொம்ப பயந்து போயிருக்கேன். அவங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டா என்ன செய்றது? அதனால அதை நான் ரகசியமா வச்சிருக்கேன். அதே நேரத்துல, அண்ணனைப் பத்தியும் என்னால யார்கிட்டயும் சொல்ல முடியல"
"யாருக்கும் தெரியாம இத எல்லாம் எப்படி செய்றீங்க, ஆழ்வி?
"என் ஃப்ரெண்ட் மீனாவோட ஹெல்ப்போட செய்றேன். தயவு செஞ்சி இதைபத்தி பார்கவி கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க. ஏன்னா, இது சித்திரவேல் அண்ணனை பத்தின விஷயம். அவரை பத்தின உண்மை தெரிஞ்சா, இவங்க என்ன செய்வாங்கன்னு எனக்கு தெரியல"
குருபரன் யோசனையில் ஆழ்ந்தான். ஆழ்வி கூறுவது சரி தான். சித்திரவேலை பற்றிய உண்மை தெரிந்தால், இந்த பெண்கள் உடைந்து தான் போவார்கள். ஆனால் சித்திரவேல் எதற்காக இதையெல்லாம் செய்கிறான்? அவன் கம்பெனி விஷயத்தில் கூட தலையிடுவது இல்லையே? அவன் எப்பொழுதும் அதில் ஆர்வம் காட்டியதே இல்லை. அப்படி இருக்கும் பொழுது அவன் இப்படி செய்வதற்கான காரணம் என்ன?
"ஆழ்வி, இது சாதாரண விஷயமில்ல. நீங்க ரொம்ப எச்சரிக்கையோட இருக்கணும். ஆனா, நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கேன்" என்றான் குருபரன்.
அப்பொழுது அவர்கள்,
"நானும் இருக்கேன்" என்று முத்து கூறுவதை கேட்டார்கள்.
அவனைப் பார்த்து நன்றியோடு புன்னகைத்தாள் ஆழ்வி.
"எது செய்யறதா இருந்தாலும் விளைவுகளை ஆலோசனை பண்ணி, அதுக்கப்புறம் செய்யுங்க அண்ணா" என்று குருபரனிடம் கெஞ்சினாள் ஆழ்வி.
அவன் சரி என்று தலையசைத்தான்.
"வைத்தியர் இனியாவை பத்தி என்ன சொல்றாரு?"
"அந்த மருந்தை அவருக்கு கொடுத்தவங்க, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாதவங்களா இருக்கணுமாம். அந்த மருந்தால தான் அவருக்கு செக்ஸ் ஃபீலிங்ஸ் ஏற்பட்டு இவ்வளவு காட்டுதனமா நடந்துக்கிறாருன்னு சொன்னாரு"
"இந்த மருந்தை பத்தி அந்த டாக்டருக்கு எப்படி தெரிஞ்சது?"
"அவருக்கு நான் அந்த மருந்தை அனுப்பி வச்சேன். அதை டெஸ்ட் பண்ணி பாத்துட்டு, அதுக்கு பிறகு தான் அவருக்கு தேவையான மருந்தை அனுப்பினாரு. அந்த மருந்தை தான் நான் இப்போ அவருக்கு ரெகுலரா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அதனால தான் அவர்கிட்ட சீரான முன்னேற்றம் தெரியுது"
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, ஆழ்வி. நீங்க இனியாவுக்கு கிடைச்ச வரம்" என்றான் குருபரன்.
அவனுடைய புகழுறைக்கு செவிமடுக்காமல்,
"எனக்கு உங்க ஹெல்ப் வேணும் அண்ணா" என்றாள்.
"நீங்க என்ன வேணும்னாலும் என்கிட்ட கேக்கலாம்"
"டாக்டர் அவரை எங்கேயாவது வெளியில கூட்டிகிட்டு போக சொல்லி இருக்காரு. வெளி உலகத்தை பார்த்தா, அவர் நிறைய விஷயங்களை கத்துக்குவாராம். அதை எப்படி செய்யறதுன்னு எனக்கு தெரியல"
"இதை பத்தி நீங்க நித்திலா கிட்ட பேசினீங்களா?"
"இன்னும் பேசல. அதை இவ்வளவு சீக்கிரம் எப்படி பேசுறதுன்னு எனக்கு தெரியல"
"சரி, அதை என்கிட்ட விடுங்க. நான் பார்த்துக்கிறேன்"
சரி என்று தலையசைத்த ஆழ்வி,
"நீங்க ஹாலுக்கு போங்க. அவங்க நம்மளை சந்தேகப்பட போறாங்க" என்றாள்.
"சரி" என்று சமையலறையை விட்டு சென்றான் குருபரன்.
இனியவனின் அறைக்கு சென்ற ஆழ்வி, அவன் தூக்கத்தில் மெல்ல அசைவதை கண்டாள். அவன் தலையை வருடி கொடுத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்களை திறந்த இனியவன், அவள் மடியில் படுத்துக்கொண்டான்.
"என்னங்க, போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க"
"நான் நேத்தே பிரஷ் பண்ணிட்டேன் ஆழ்வி" என்றான் தூக்கம் கலையாத குரலில்.
அதைக் கேட்டு சிரித்த ஆழ்வி,
"நீங்க தினமும் பிரஷ் பண்ணணும்" என்றாள்.
"ஏன்?"
"அப்ப தானே நீங்க ரொம்ப ஹெல்த்தியா, ஸ்ட்ராங்கா இருக்க முடியும்?"
முகத்தை சுருக்கி அவளை பார்த்தான்.
"ஏன் என்னை இப்படி பாக்குறீங்க?"
"நீ தினமும் பிரஷ் பண்ணுவியா?"
"ஆமாம், தினமும் பண்ணுவேன்"
"அப்போ, நீ ஏன் என்னை மாதிரி ஸ்ட்ராங்கா இல்ல?"
திகைத்துப் போனாள் ஆழ்வி. ஒவ்வொரு நாளும் அவன் ஏதோ ஒரு முன்னேற்றத்தை காட்டிக் கொண்டிருக்கிறான். இன்று, இந்த கேள்வி...! சித்த மருத்துவ சுவாமி கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவன் கேள்விகளுக்கு பதில் கூற அவள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார் அல்லவா? இன்னும் என்னவெல்லாம் கேட்க போகிறானோ தெரியவில்லையே என்று எண்ணி மென்று விழுங்கினாள்.
"நான் உங்களை மாதிரி ஸ்ட்ராங்கா இல்லையா?" என்றாள்
அவன் இல்லை என்று தலையசைத்தான்.
"ஏன் அப்படி சொல்றீங்க?"
வெட்டுக்காயம் இருந்த அவளது கையை உயர்த்திய அவன், அதில் இருந்த காயத்தை லேசாய் தடவினான். ஆழ்வி பேச்சிழந்து போனாள். அவன் கூற வருவது என்ன என்பது அவளுக்கு புரிந்து போனது.
"நீங்க என்ன சொல்ல வரீங்க?"
அவள் பக்கம் திரும்பி, அவளது இடையை சுற்றி வளைத்துக் கொண்டு அவள் வயிற்றில் முகம் பதித்து கொண்டான்.
"நான் ஸ்ட்ராங்கா இருந்தா, நான் ஏன் உங்க கிட்ட சண்டை போடலன்னு கேட்கிறீங்களா?"
இருந்த நிலையில் இருந்தபடியே தலையை அசைத்தான் அவன்.
"அது ஏன்னு உங்களுக்கு தெரியுமா?"
தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
"ஏன்னா, நீங்க பாய், நான் கேர்ள். பாய்ஸ், கேர்ள்ஸை விட ரொம்ப ஸ்ட்ராங்"
"ஏன்?"
"கடவுள் அப்படித்தான் அவங்களை படைச்சிருக்காரு"
"ஏன்?"
"பாய்ஸ் தான் கேர்ள்ஸ்க்கு பாதுகாவலர்கள். அவங்களோட பார்ட்னரை பாதுகாக்கிற பொறுப்பு அவங்களுக்கு இருக்கு"
"பாது...?"
"பாதுகாவலர்கள் அப்படின்னா, எந்த கஷ்டமும் வராம காப்பாத்துறவங்க..."
"பார்ட்னர்னா?"
"பார்ட்னர்னா, ஃபிரண்ட்ஸ், அண்ணன் தங்கச்சி, ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்"
சட்டென்று கட்டிலில் எழுந்து அமர்ந்த அவன்,
"என்னங்க, ஆழ்வி?" என்றான்.
"ஆமாம்... நம்மளும் பார்ட்னர்ஸ் தான்... ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்"
"என்னங்க ஆழ்வியை பாதுகாக்கணுமா?"
ஆம் என்று புன்னகையுடன் தலையசைத்த ஆழ்வி,
"ஆமாம், நீங்க என்னை பாதுகாக்கணும். ஏன்னா, நீங்க என்னை விட ரொம்ப ஸ்ட்ராங்"
"என்னங்க ஆழ்வியை பாதுகாக்கணும்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
"ஆமாம், என்னை பாதுகாக்கணும்னா, நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அதுக்கு தினமும் பிரஷ் பண்ணணும்"
"என்னங்க ஆழ்வியை பாதுகாக்கணும்" என்று கட்டிலை விட்டு இறங்கி, குளியலறையை நோக்கி சென்றான் இனியவன்.
அவனுக்கு உதவுவதற்காக அவனை பின்தொடர்ந்து சென்றாள் ஆழ்வி. அவன் என்ன செய்கிறான் என்று அமைதியாய் கவனித்தாள். பேஸ்டை கையில் எடுத்து, அதை அவன் ஒரு அமுக்கு அமுக்க, அந்த டியூபில் இருந்த பாதி பேஸ்ட் வெளியே வந்து விழுந்தது. ஆழ்வி விழி விரிய அவனைப் பார்க்க, வழக்கம் போல் தன் உதடுகளை அழுத்தி அவளை பார்த்தான் இனியவன்.
"பேஸ்ட்டை இவ்வளவு வேகமா அழுத்தக் கூடாது. மெதுவா செய்யணும்" என்று அவன் விரல்களை பிடித்து அவனுக்கு மெல்ல அழுத்தி காட்டினாள்.
அதை ஸ்லோ மோஷனில் அழுத்தி தன் பிரஷில் நிரப்பிவிட்டு, பெருமையோடு ஆழ்வியை பார்த்தான் இனியவன், ஏதோ தான் பெரிதாய் சாதித்து விட்டவனை போல...! கைத்தட்டி அவனை உற்சாகப் படுத்தினாள் ஆழ்வி.
அவன் முகத்தை கழுவ செய்து, அவனை தரைத்தளம் அழைத்து வந்தாள் ஆழ்வி. அவன் தீவிரமாய் எதையோ யோசித்தபடியே இருந்தான். இனியவன் ஆழ்வியுடன் வருவதை பார்த்த குருபரன் புன்னகை புரிந்தான்.
"ஹாய் என்னங்க..." என்று சிரித்தான் குருபரன்.
அவன் அப்படி அழைப்பதை கேட்ட நித்திலாவும், பார்கவியும் வாய்விட்டு சிரித்தார்கள்.
"இவர் உங்க ஃபிரண்ட் குருபரன்"
அவனைப் பார்த்த இனியவன், தன் முகத்தை ஆழ்வியின் பக்கம் திருப்பிக் கொண்டான்.
"ஹாய் சொல்லுங்க"
"ஹாய்" என்று முகத்தை இறுக்கமாய் வைத்துகொண்டு கூறிய அவனைப் பார்த்து புன்னகைத்தான் குருபரன்.
ஆழ்வியை பார்த்த இனியவன்,
"கடவுள்னா யாரு?" என்றான்.
ஆழ்வி மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரும் திகைத்தார்கள்.
"எது அவனை திடீர்னு கடவுளை பத்தி கேட்க வச்சது?" என்றார் பாட்டி.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க ஒரு விஷயத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். அதைவிட்டு இன்னும் அவர் வெளியில வரல போல இருக்கு" என்றாள்.
"சொல்லு ஆழ்வி" என்றான் இனியவன்.
"அங்க பாருங்க" என்று அங்கிருந்த கருமாரியம்மன் படத்தை காட்டினாள்.
"அவங்க தான் கடவுள்"
"நிறைய கை வச்சிருக்காங்களே அவங்களா?"
"ஆமாம்"
"அவங்க தான் நம்மளை செஞ்சாங்களா?"
"ஆமாம். அவங்க தான் நம்மலயும், இந்த உலகத்தையும், எல்லாரையும் படைச்சாங்க"
"உலகம்னா?"
"நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கிற இந்த இடம் தான் உலகம். நம்ம கேக்குற எல்லாத்தையும் அவங்க கொடுப்பாங்க"
மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் இனியவன்.
"என்னால இதை நம்பவே முடியல. என்ன ஒரு இம்ப்ரூவ்மெண்ட்...!" என்றான் குருபரன் ஆச்சரியத்தோடு.
"எல்லா கிரெடிட்டும், என்னங்களோட வைஃப் ஆழ்விக்கு தான் போகணும்" என்றாள் நித்திலா.
"ஆமாம், ஆழ்வி செய்ற எல்லாத்தையும் அவர் திரும்ப செய்றாரு... ஆனா அவர் இப்படி கேள்வி கேட்கிறது ரொம்ப புதுசா இருக்கு" என்றாள் பார்கவி.
"ஆழ்வி, நீங்க ஏன் அவனை வெளியில எங்கையாவது கூட்டிக்கிட்டு போக கூடாது?" என்றான் குருபரன்.
நித்திலாவை பார்த்தாள் ஆழ்வி.
"வெளி உலகத்தை பார்த்தா அவன்கிட்ட இன்னும் கூட நிறைய இம்ப்ரூவ்மென்ட் தெரியும்னு நினைக்கிறேன். அவன் ரொம்ப சந்தோஷமாவும் இருப்பான்"
"ஆனா அது ரிஸ்க் ஆச்சே... ஒருவேளை வெளி உலகத்தை பார்த்து, ஆர்வத்துல அவன் கட்டுப்பாடு இல்லாம நடக்க ஆரம்பிச்சா என்ன ஆகும்?" என்றார் பாட்டி.
"ஆமாம், குரு. அவன் அப்படி நடக்க ஆரம்பிச்சா, ஆழ்வியால அவன் பின்னாடி ஓட முடியாது..." என்றாள் நித்திலா.
"நீங்க எங்க கூட வரீங்களா?" என்றாள் ஆழ்வி குருபரனிடம்.
"நானா?"
"நீங்க வர்றதா இருந்தா, நான் அவரை வெளியில கூட்டிக்கிட்டு போறேன்"
"நிச்சயமா வரேன். இனியாவுக்காக நான் எது வேணாலும் செய்வேன்"
"அப்படின்னா நானும் உங்க கூட வரேன்" என்றாள் பார்கவி.
"நெஜமா தான் சொல்றியா குரு?" என்றாள் நித்திலா.
"ஆமாம். ஆழ்விக்கு என்னால ஆன உதவியை செய்யணும்னு நினைக்கிறேன்"
"எப்ப போக போறீங்க?" என்றார் பாட்டி.
"நாளன்னைக்கு சண்டே. அன்னைக்கு போலாமா?" என்றான் குருபரன்.
சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி.
"ஜாக்கிரதையா இருக்கணும்" என்றாள் நித்திலா.
"நான் பார்த்துக்கிறேன்..." என்ற குருபரன்,
"இனியாவோட இம்ப்ரூவ்மெண்ட் பத்தி சித்திரவேலுக்கு தெரியுமா?" என்றான்.
"இல்ல, நான் இன்னும் அதை பத்தி சொல்லல" என்று நித்திலா சிரிக்க, அது அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது.
"அக்கா அவரை சர்ப்ரைஸ் பண்றதுக்காக, அவர் கிட்ட சொல்லாம வச்சிருக்காங்க. அண்ணனை பார்த்து மாமா மயங்கி விழப் போறாரு" என்று சிரித்தாள் பார்கவி.
"செம ஐடியா போங்க...! அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க" என்று குருபரன் சிரிக்க, ஆழ்வி தன் சிரிப்பை அடக்கி கொண்டாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top