23 மிகப்பெரிய மாற்றம்
23 மிகப்பெரிய மாற்றம்
சித்த மருத்துவரிடம் பேசிவிட்டு, வரவேற்பறைக்கு வந்தாள் ஆழ்வி.
"என்னங்க எங்க?" என்றாள் நித்திலா.
"அவர் தூங்குறாரு" என்று சிரித்தாள் ஆழ்வி.
அவளை நோக்கி ஓடிச் சென்று ஆற தழுவிக் கொண்டு,
"இன்னுவை மாத்தினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஆழ்வி..." அவள் முதுகை தட்டிக் கொடுத்தாள் நித்திலா.
"என் கடமையை தான் நான் செஞ்சேன்"
"காலையிலேயே உங்களை கட்டிப்பிடிக்கணும்னு தோணுச்சு. ஆனா, உங்க 'என்னங்க' என் மேல கோவப்படுவார்னு பயந்து தான் உங்ககிட்ட வரல. அதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்" என்று சிரித்தாள் நித்திலா.
மென்மையாய் புன்னகைத்தாள் ஆழ்வி.
"உங்களுக்கு தெரியுமா, ஆழ்வி, நம்ம இன்னு ரொம்ப பொசசிவ். அதை அவன் வெளிப்படையா காட்ட மாட்டானே தவிர, அவன் அப்படித்தான். அதை இன்னைக்கு நான் அப்பட்டமா பார்த்தேன்"
அப்படி என்றால், சித்தமருத்துவர் கூறியது உண்மை தான். இயற்கையாகவே அவனுக்கு பொசசிவ்வான குணம் இருக்கிறது. மருந்தின் தன்மையால் அது மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கி இருக்கிறது.
அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டாள் ஆழ்வி. குருபரனை பார்க்க சென்றிருந்த பார்கவியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். மதிய உணவுக்குப் பிறகு அவர்களுடன் அமர்ந்து சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்தாள் ஆழ்வி. அவர்களுடன் நெருக்கமாக பழக துவங்கினாள் அவள். ஏனென்றால் சித்திரவேலை எதிர்த்து நிற்க, அவர்களது துணை இன்றியமையாதது என்று அவளுக்கு புரிந்திருந்தது. ஆனால், இனியவனை வெளியே அழைத்துச் செல்வது பற்றி அவள் பேச தயங்கினாள். இவ்வளவு விரைவாக அதைப் பற்றி பேசுவது உசிதமாக இருக்காது என்று அவள் எண்ணினாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அதை பற்றி பேச நினைத்தாள்.
அவள் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தாளே தவிர, அவளது பார்வை இனியவனின் அறைக்கு செல்லும் வழியிலேயே இருந்தது. ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அறையை விட்டு வெளியே வந்தான் இனியவன், ஆழ்வியை தேடியவாறு. அவனது அறையின் கதவு, திறந்தே இருந்ததால், இந்த முறை அவள் பெயரை கூறி அழைக்கவில்லை. ஆழ்வி அவனை நோக்கி செல்ல நினைத்தபோது,
"அவன் இங்க வரட்டும், ஆழ்வி" என்றாள் நித்திலா.
தூக்கம் கலையாத கண்களுடன் அவளிடம் வந்த இனியவன், அவள் பக்கத்தில் அமர்ந்து, அவள் இடையை சுற்றி வளைத்துகொண்டு, அவள் தோளில் சாய்ந்து கொண்டான். ஆழ்வி சங்கடத்துடன் நெளிய, மற்றவர்கள் தங்கள் புன்னகையை கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.
"என்னங்க, உங்களுக்கு தூக்கம் வருதா?"
"ம்ம்ம்" கால்களை நீட்டி அவள் மடியில் படுத்துக் கொண்டான்.
"உங்க கல்யாணத்துக்கு முன்னாடி, இன்னு இப்படியெல்லாம் தூங்கினதே இல்ல" என்றாள் நித்திலா.
"அப்படியா?" என்றாள் ஆழ்வி, நித்திலா கூறியது அவளுக்கு புதிய செய்தி என்பது போல...!
"இவ்வளவு ஷார்ட் பீரியட்ல, அவன் இவ்வளவு மாறிட்டான்னு என்னால நம்ப முடியல"
ஆழ்வி அமைதியாய் இருந்தாள்.
"எது எப்படியோ, நம்ம இன்னு குணமாயிகிட்டு வரான். நமக்கு அது போதும். காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். அவன் இருந்த மோசமான நிலையை விட்டு அவன் வெளியே வந்திருக்கான். அது
போதாதா?" என்றார் பாட்டி
ஆம் என்று தலையசைத்தாள் நித்திலா.
"நான் உங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரவா?" என்றாள் ஆழ்வி.
"நீங்க ரொம்ப அருமையா டீ போடுறீங்கன்னு நான் ஒத்துக்குறேன். ஆனா, ஆழ்வியோட ஹஸ்பண்டை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா? நீங்க அவனை விட்டுட்டு போனா, அவனுக்கு கோவம் வரும். ஒரு டீக்காக எங்க உசுரை விட சொல்றீங்களா?" என்று சிரித்தாள் நித்திலா
"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது" என்று அவன் தலையை தூக்கி மெல்ல சோபாவின் மீது வைத்துவிட்டு, புன்னகையுடன் சமையல் அறைக்கு சென்றாள் ஆழ்வி. அவளை பின் தொடர்ந்து சென்ற பார்கவி, சமையலறை மேடையின் மீது அமர்ந்து ஆழ்வியை தன்னை நோக்கி இழுத்து,
"உனக்கு ரொம்ப ஸ்பெஷலான தேங்க்ஸ் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கேன், ஆழ்வி. அண்ணன் க்யூர் ஆனதுக்கு பிறகு, ரொம்ப பெரிய பார்ட்டி கொடுக்க நான் பிளான் பண்ணிக்கிட்டு இருக்கேன். முக்கியமா உனக்கு..."
"நீ உன்னோட குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்ததை நினைச்சி நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்" என்றாள் ஆழ்வி.
"என்னோட குற்ற உணர்ச்சி மொத்தமா போயிடுச்சுன்னு சொல்ல முடியாது. அண்ணன் குணமாயிகிட்டு வந்தாலும், அதுக்காக நீ எடுக்கிற உழைப்பு, நம்ப முடியாத அளவுக்கு ரொம்ப அதிகம். சத்தியமா சொல்றேன், ஒருவேளை உன் இடத்துல நான் இருந்திருந்தா, உன்னை மாதிரி எல்லாம் நான் எதுவும் செஞ்சிருக்க மாட்டேன்" என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
"என்னை நினைச்சு நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்ல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒவ்வொரு நிமிஷத்தையும் உங்க அண்ணன் கூட நான் ரொம்ப என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன்"
பெருமையுடன் அவளை பார்த்து புன்னகைத்தாள் பார்கவி.
இதற்கிடையில்...
தூக்கத்திலிருந்து கண்விழித்த இனியவன், திடுக்கிட்டு சோபாவில் எழுந்தமர்ந்தான். இங்கும் அங்கும் தன் பார்வையை ஓடவிட்டு ஆழ்வியை தேடினான்.
"இன்னு, உனக்கு ஏதாவது வேணுமா?"
"நான் என்னங்க..." என்று மிடுக்காய் கூறிவிட்டு, சமையல் அறையை நோக்கி நடந்தான் இனியவன்.
சமையலறை வாசலில் நின்று தன் கண்களை ஓட விட்டான். அவனைப் பார்த்த ஆழ்வி புன்னகைத்தாள்.
"என்னங்க, நீங்க எழுந்துட்டீங்களா?"
விறுவிறுவென நடந்து வந்த இனியவன், சமையலறை மேடையில் அமர்ந்திருந்த பார்கவியின் கையைப் பிடித்து கீழே இழுத்தான் . அவள் மேடையின் மீதிருந்து தொப்பென கீழே குதித்தாள்.
"இது என் இடம்" என்று அவள் அமர்ந்திருந்த இடத்தில் குதித்து அமர்ந்து கொண்டான்.
ஆழ்வி பெருமூச்சு விட, ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள் பார்கவி.
"இன்னைக்கு காலையில, அண்ணி அண்ணனை அங்க உட்கார வச்சாங்க. அதனால தான், அவர் அந்த இடத்துக்காக உங்ககிட்ட சண்டை போடுறாரு" என்றான் முத்து சிரித்தபடி.
"ஓ... அதை முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல? நான் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணாம விட்டிருந்தா, என் காலே உடஞ்சிருக்கும்..." என்றாள் திகிலுடன் பார்கவி.
"என்னங்க, அவ உங்க தங்கச்சி. நீங்க அவகிட்ட இப்படியெல்லாம் முரட்டுத்தனமா நடந்துக்க கூடாது"
இனியவன் பார்கவியை பார்க்க, அவள் எச்சரிக்கையுடன் ஆழ்வியின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
"சாரி சொல்லுங்க" என்றாள் ஆழ்வி.
"அது என் இடம்" என்றான் கோபமாய்.
"விடு ஆழ்வி அவரை கோபப்படுத்தாதே" என்றாள் பார்கவி பயத்துடன்.
"சரி, நீ போ, கவி..."
அங்கிருந்து சென்றாள் பார்கவி.
"பாருங்க, அவ எவ்வளவு பயந்து போயிருக்கா..." என்றாள் அவன் தலை முடியை தன் கைவிரல்களால் ஒதுக்கியபடி.
"தலை சீவி விட்ட பிறகு, என்னங்க அழகா ஆயிட்டாரு" என்று சிரித்தான் முத்து.
"என்னங்க எப்பவுமே அழகு தான். கரெக்டு தானே?" என்றாள் ஆழ்வி.
"என்னங்க எப்பவுமே அழகு தான்" என்று அதையே திருப்பிக் கூறினான் இனியவன்.
அதைக் கேட்டு கலீரென்று சிரித்தாள் ஆழ்வி.
"ஆழ்வி?" என்று அவளை சுட்டிக்காட்டினான்.
"என்ன சொல்றீங்க?"
"அழகு?"
"நான் அழகா இருக்கேன்னு நானே சொல்லிக்க கூடாது" என்று சிரித்தாள் அவள்.
"என்னங்க?"
"ஓ... நீங்க தாராளமா சொல்லலாம்"
"ஆழ்வி எப்பவுமே அழகு தான்"
"அண்ணி, அண்ணன் கலக்குறாரு" என்று சிரித்தான் முத்து.
அதன் பிறகு அவளை மற்ற யாருடனும் இருக்க அவன் அனுமதிக்கவில்லை. அவன் அவர்களுடன் வரவேற்பறையில் இருக்க விரும்பவில்லை. அவனுக்கு ஆழ்வியுடன் இருக்கத்தான் பிடித்திருந்தது.
இரவு
இனியவனுக்கு உணவு கொடுத்த பிறகு, அவனை தூங்க வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள் ஆழ்வி. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே விழித்துக் கொண்டு விட்ட இனியவன், அவளை தேடிக் கொண்டு சமையலறைக்கு வந்தான். அவனைப் பார்த்த முத்து,
"அண்ணியை தேடுறீங்களா, அண்ணா?" என்றான்
அவனுக்கு பதில் கூறாமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.
"வாங்க நான் உங்களை அண்ணி ரூமுக்கு கூட்டிக்கிட்டு போறேன்" என்று முத்து முன்னாள் செல்ல, அவனை பின்தொடர்ந்து வந்தான் இனியவன்.
ஆழ்வி அறைக்கு வந்த முத்து, அவள் அறையின் கதவை தட்டினான். கதவை திறந்த ஆழ்வி, முத்து இனியவனுடன் நிற்பதை பார்த்தாள். அவளைப் பார்த்த அடுத்த நொடி, வழக்கம்போல் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டான் இனியவன். சிரித்தபடி அந்த இடம் விட்டு சென்றான் முத்து.
"நீங்க தூங்கலையா?"
"நீ போகாத, ஆழ்வி"
சற்று யோசித்த அவள், சரி நீங்க என் கூட தூங்குங்க, என்று கட்டிலுக்கு அழைத்து வந்து அவனை படுக்க செய்தாள். கட்டிலில் படுக்க விரும்பாத அவன், அவள் மடியில் வழக்கம் போல் படித்துக் கொண்டான். அப்பொழுது அங்கிருந்த கண்ணாடியில் அவனது உருவத்தை கண்டான். கட்டிலை விட்டு கீழே இறங்கி கண்ணாடியை நோக்கி ஓடினான். அவன் கண்ணாடியை நெருங்கிய போது, அவனது உருவமும் நெருங்கியது. அவன் கையை அசைத்த போது, அந்த உருவமும் கையை அசைத்தது.
"ஆழ்வி, அவனைப் பாரு" என்று தன் உருவத்தை அவளிடம் காட்டினான்.
ஆழ்வி அதை கேட்டு சிரித்தாள். ஆழ்வியின் அறையில் இருந்த அந்த மனிதனின் மீது அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவனை அடித்து துவைக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் முகத்தில் குத்துவதற்காக கையை ஓங்கினான். அதை கண்ட ஆழ்வி திகில் அடைந்தாள். ஓடி சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். ஆழ்வியை கண்ணாடியில் கண்ட அவன் திகைத்து நின்றான்.
"ஆழ்வி, நீ வந்துட்ட" என்று கண்ணாடியில் தெரிந்த ஆழ்வியின் உருவத்தை காட்டினான்.
அவன் அருகில் வந்த அவள்,
"இது தான் இனியவன், என் ஹஸ்பண்ட்" என்று அவனை தொட்டு காட்டினாள்.
இனியவன் முகத்தை சுருக்கினான்.
"இது இனியவன், இது ஆழ்வி" என்று அவன் தலையை கோதி விட்டாள்.
"என்னங்க" என்று தன் உருவத்தை கண்ணாடியில் தொட்டான்.
"ஆமாம்... நீங்க தான் அவர்... அவர் தான் நீங்க... அழகா இருக்கீங்க இல்ல?"
"ஆழ்வி அழகு" என்றான் திடமாய்
"சரி வாங்க தூங்கலாம்" என்றாள் சிரித்தபடி.
தன்னுடன் ஆழ்வியும் படுத்துக் கொண்டதை பார்த்த இனியவன், தன் உதடுகளை அழுத்தினான். தன் பக்கத்தில் இருந்த தலையணையை தட்டி அவனை படித்துக் கொள்ளுமாறு சைகை செய்தாள் ஆழ்வி. அவளை அணைத்துக் கொண்டு படுத்துக்கொண்டான் இனியவன், அவளை உறையச் செய்து.
இனியவனை அவனது அறைக்கு கொண்டு வந்தது, அவள் நிகழ்த்திய மிகப் பெரிய மாற்றம். அப்படி செய்ய மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்த அறையில் ஒரு முறை உறங்கி விட்டால், அவனது மனதை மாற்றுவது நடக்காத காரியம். எப்பொழுதும் அவளுடன் அந்த அறையில் உறங்க வேண்டும் என்று தான் அவன் அடம் பிடிப்பான். அது அவளுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும். இன்று அவளை அணைத்துக் கொண்டு படுத்தவன், நாளை என்ன செய்வான் என்று தெரியாது. பழையபடி அவனுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுக்கா விட்டாலும், அவனது வயதுக்குரிய உணர்வுகள் இருக்கத்தானே செய்யும்? ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. அவள் எதற்கும் தயாராக இருந்து தான் ஆக வேண்டும்.
மறுநாள் காலை
இனியவன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவனது அறைக்கு வந்த நித்திலா, அவனது அறை காலியாய் கிடந்ததை பார்த்து திகில் அடைந்தாள். அவன் எங்கு சென்றான்? பதற்றத்துடன் ஆழ்வியின் அறையை நோக்கி ஓடினாள், விஷயத்தை அவளிடம் கூற. அப்பொழுது தன் அறையை விட்டு வெளியே வந்தாள் ஆழ்வி.
"ஆழ்வி, இன்னு அவன் ரூம்ல இல்ல"
"அவர் இங்க தான் தூங்கிக்கிட்டு இருக்காரு"
"ஓஹோ, அவனை உங்க ரூமுக்கு கூட்டிகிட்டு வந்துட்டீங்களா?"
"இல்ல, அவர் என்னை தேடி இங்க வந்துட்டாரு"
"அவன் தூங்கினானா?"
"நல்லாவே தூங்கினாரு" என்றாள் ஆழ்வி, அவள் கேட்டதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு.
அன்பாய் அவள் கன்னம் தட்டி விட்டு அங்கிருந்து சென்றாள் நித்திலா.
சமையலறைக்கு சென்ற ஆழ்வி, பரபரவென சிற்றுண்டி தயார் செய்து முடித்தாள். அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது பார்கவி ஓடிச்சென்று கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே அங்கு குருபரன் நின்றிருந்தான்.
"ஹாய்"
உள்ளே நுழைந்தான் குருபரன்
"என்ன குரு, இவ்வளவு காலையில் இங்க வந்திருக்க?" என்றாள் நித்திலா.
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்" என்றான்.
"சொல்லு"
"இனியாவோட ப்ரெசென்ட் கண்டிஷனை பத்தி யாருக்கெல்லாம் தெரியும்?"
"ரீசண்டா ஆழ்வியோட அம்மா, அண்ணன், அப்புறம் அவங்க ஆன்ட்டிக்கு தெரியும்"
"வேற யாருக்கு?"
"வேலை யாருக்கும் தெரியாது. நம்ம தான் அதை ரொம்ப ரகசியமா வச்சிருக்கோமே..."
"அப்படின்னா ரீனா சர்மாவுக்கு எப்படி தெரிஞ்சது?"
"ரீனா சர்மாவுக்கா?" என்று முகம் சுருக்கினாள் நித்திலா.
"இனியாவோட ப்ரெசென்ட் கண்டிஷன் பத்தி சொல்லி, என்னை அவன் நக்கல் பண்ணா. எனக்கு அவ மேல ரொம்ப ஸ்ட்ராங்கான சந்தேகம் இருக்கு"
"சந்தேகம்னா?"
"இனியாவோட ப்ரெசென்ட் கண்டிஷனுக்கும் அவளுக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு நான் நினைக்கிறேன்"
"அவ அந்த அளவுக்கு போவான்னு நினைக்கிறியா?"
"ஏன் போக மாட்டா? இனியா அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்னு, அவ அவன் மேல செம கடுப்புல இருந்தா"
அதைக் கேட்டு அதிர்ந்தாள் நித்திலா.
"அவ இன்னுவை கல்யாணம் பண்ணிக்க நினைச்சாளா?"
"ஆமாம். அவன்கிட்ட நேரடியாகவே கேட்டா"
"இது எப்ப நடந்தது?"
"ஒரு தடவை, ரெண்டு தடவை இல்ல, பல தடவை நடந்தது. இனியா அவளை ரிஃப்யூஸ் பண்ணிட்டான்"
நித்திலா யோசனையில் ஆழ்ந்தாள். அவளை இனியவன் ஏன் தவித்தான் என்று அவளுக்கு புரிந்தது. அவள் வியாபார பெரும்புள்ளியான ராஜா சர்மாவின் மனைவி. இனியவனை திருமணம் செய்து கொள்வதற்காக தான் அவள் ராஜா சர்மாவை விவாகரத்து செய்தாள் என்று கூட ஒரு வதந்தி வியாபார உலகத்தில் உலவிக் கொண்டிருந்தது.
"அவ மேல நம்ம ஒரு கண்ணு வைக்க முடியாதா?" என்றாள் நித்திலா.
"இதுவரைக்கும் நான் அதை செய்யல. ஆனா இனிமே நிச்சயம் செய்வேன்" என்றான் குருபரன்.
அவர்கள் பேசுவதை ஒரு தூணுக்கு பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் ஆழ்வி. இனியவனின் விஷயத்தில் சித்திரவேல் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று நினைத்திருந்த அவளுக்கு, இந்த செய்தி அதிர்ச்சியை தந்தது. ரீனா சர்மா யார்? தேனீர் குவளையுடன் வெளியே வந்தாள் ஆழ்வி.
"ஹாய் ஆழ்வி எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன்...!
"அவங்களால நாங்க எல்லாருமே நல்லா இருக்கோம்" என்றாள் நித்திலா.
"நிஜமாவா?"
"ஆமாம். இப்போ இன்னு எப்படி இருக்கான்னு பார்த்தா, நீ மயங்கி விழுந்துடுவ"
"அப்படியா?"
"டிபன் சாப்பிட்டுட்டு போங்க" என்றாள் ஆழ்வி.
"வித் ப்ளஷர்' என்றான் குருபரன்.
ரீனா ஷர்மாவை பற்றி யோசித்தபடி சமையல் அறைக்கு சென்றாள் ஆழ்வி.
தேனீரை பருகிய குருபரன்,
"இனியா எங்க இருக்கான்?" என்றான்.
"எக்ஸ்கியூஸ் மீ... உன் இஷ்டத்துக்கு எல்லாம் நீ அவரை கூப்பிட முடியாது. என்னங்கன்னு தான் கூப்பிடணும்" என்று சிரித்தாள் நித்திலா.
சிரித்தபடி தேனீர் குவளையை மேஜையின் மீது வைத்தான் குருபரன்.
"நான் என்னங்கன்னு அவனே சொல்லுவான்"
"ஓ..."
"ஆழ்வி அவனை அப்படித்தானே கூப்பிடுறாங்க...? அதனால, அவன் என்னங்க மட்டும் தான்...! வேற எதையும் ஏத்துக்க அவன் தயாரா இல்ல"
"ஆழ்வி அவனோட உலகமாவே மாறிட்டாங்க போல இருக்கே...!"
"உண்மை தான். அவங்க தான் அவன் உலகம்"
"அவன் இப்படி மாறிட்டான்னு என்னால நம்பவே முடியல"
"ஆமாம், ஆழ்வியால் மட்டும் தான் அதை செய்ய முடியும்"
"இனியா ரொம்ப லக்கி"
"சந்தேகமே இல்ல. ஆழ்வி அவனுடைய வாழ்க்கைல வந்த விதம் வேணும்னா கசப்பானதா இருக்கலாம். ஆனா அவங்க தான் அவனுக்காக விதிக்கப்பட்டவங்க. அதுக்காகத்தான் அப்படி எல்லாம் நடந்திருக்கு "
குருபரனுக்கு மனநிறைவாய் இருந்தது.
சமையலறையில்...
முத்து சமையலறையை விட்டு வெளியே செல்வதை கண்ட ஆழ்வி, அவன் திரும்பி வருவதற்கு முன், பழைய மருந்தை எடுத்து, அவசரமாய் சிங்கில் கொட்டினாள். ஆனால் அவளுக்கு பின்னால் யாரோ நின்றிருந்ததை உணர்ந்த அவள், திகிலடைந்தாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top