22 பிறவிக் குணம்

22 பிறவிக் குணம்

இனியவன் தன் பெயரை கூறி அழைத்ததை கேட்ட ஆழ்வி நெகிழ்ந்து போனாள். அவளது கண்கள் ஆனந்த கண்ணீரால் குளமாயின. அவன் முன்னேற்றம் காட்டுவான் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாலும், அவன் தன் பெயர் கூறி அழைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அவளுக்கு ஆர்வம் அதிகமானது. அவன் வேறு என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று!

"ஆழ்வி, அண்ணன் உன் பெயரை சொல்லி கூப்பிடுறாரு" என்று அவளை மகிழ்ச்சியோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் பார்கவி.

"என்ன மந்திரம் செஞ்சீங்க ஆழ்வி? இதுக்கு முன்னாடி அவன் ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல... இன்னிக்கு உங்களை பேர் சொல்லி கூப்பிடுறான்... அப்படின்னா, அவனுக்கு உங்களை ஞாபகம் இருக்கு. நீங்க ரொம்ப கிரேட், ஆழ்வி!" என்றாள் நித்திலா.

தன்னை சமாளித்துக்கொண்ட ஆழ்வி,

"அவர் முன்ன மாதிரி முரட்டுத்தனமா நடந்துக்குறது இல்லன்னு நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேனே" தன் ஆனந்த கண்ணீரை துடைத்தபடி கூறினாள் அவள்.

"ஆழ்வி ஆழ்வி தான். யாரும் தன்னை பாராட்டுறதை கூட விரும்புறதில்ல" என்றாள் பார்கவி.

"உனக்கு நான் சொல்றதுல சந்தேகம் இருந்தா, நீயே போய் உங்க அண்ணன் முன்னாடி நின்னு பாரு. அவரோட பார்வையில மாற்றம் தெரியுதான்னு நீயே தெரிஞ்சுக்கோ" என்றாள் ஆழ்வி நம்பிக்கையோடு.

பார்கவி மென்று விழுங்கினாள். ஏனென்றால் அவளுக்கு தான் அவன் பார்வையின் ஆழத்தை கண்ட அனுபவம் இருக்கிறதே...!

"கிரில் கேட் பூட்டி தான் இருக்கு. பயப்படாம போ" என்றாள் ஆழ்வி.

சரி என்று தலையசைத்து விட்டு, மெல்ல இனியவனின் அறையை நோக்கி சென்றாள் பார்கவி. இனியவன் கிரில் கதவை பிடித்துக் கொண்டு, ஆழ்வியை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மீண்டும் அவள் பெயர் கூறி அழைத்தான்.

"ஆழ்வி, இங்க வா..." என்றான்.

அவன் முன்னாள் சென்று நின்றாள் பார்கவி. ஆனால் அவன் அவளை சட்டை கூட செய்யவில்லை.

சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

"அண்ணா" என்றாள் பார்கவி.

ஆனால் அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. ஓர் அடி முன்னே நகர்ந்து, மெல்ல அவன் கையை தட்டினாள். அவள் கையை தட்டிவிட்ட அவன்,

"போ..." என்றான் முகத்தை சுருக்கி.

"ஆழ்வி, சீக்கிரம் வா" என்றாள் பார்கவி சந்தோஷத்துடன்.

ஆழ்வி இனியவனின் அறையை நோக்கி ஓடினாள். நித்திலாவும் பாட்டியும் அவளை பின்தொடர்ந்தார்கள்.

ஆழ்வியை பார்த்தவுடன், முதல் முறையாய் புன்னகைத்தான் இனியவன்.

"ஆழ்வி," என்று தன் கரங்களை விரித்து அவளை தன்னிடம் அழைத்தான் புன்னகைத்தபடி.

அதை கண்ட பார்கவி வானில் பறந்தாள் என்று தான் கூற வேண்டும். அவள் ஆழ்வியை இறுக்கமாய் அனைத்து, அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்து,

"நீ கடவுள் ஆழ்வி. என்ன சொல்றதுன்னே எனக்கு புரியல. நீ பொண்ணே கிடையாது... நீ ஒரு அதிசயம்...!" என்று மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"ஏய்ய்ய்.... ஆழ்வியை விடு..." என்றான், கிரில் கதவை தன் கையால் வேகமாய் தட்டிய இனியவன், அங்கு இருந்த அனைவரையும் திகைக்க செய்து.

"ஆழ்வி... வா..." என்று மீண்டும் கத்தினான்.

தன்னை பார்கவியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்ட ஆழ்வி, அவன் அறையின் கதவை திறந்து கொண்டு, உள்ளே நுழைந்தாள். அடுத்த நொடி அவளை அணைத்துக் கொண்ட இனியவன்,

"ஆழ்வியை தொடாதே... என் வைஃப்" என்றான் அவன்.

நம்ப முடியாத முகபாவத்துடனும், கண்ணீருடனும் புன்னகை புரிந்தாள் ஆழ்வி.

சரி என்று சிரித்தபடி தலையசைத்தாள் பார்கவி.

"அக்கா, நம்ம ஐபிகே திரும்பி வந்துட்டார்னு நினைக்கிறேன்" என்றாள் பார்க்கவி சந்தோஷமாய்.

"எனக்கும் அப்படித்தான் தோணுது. பாரு, அவன் ஆழ்விகிட்ட எவ்வளவு உரிமை காட்டுறான்னு...! ஐபிகே எப்பவும் ஐபிகே தான், அவன் நினைவுல இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி..." என்று தன் மகிழ்ச்சி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்  நித்திலா.

"அவனுக்கு ஆழ்வி மேல எவ்வளவு பிரியம் பாரேன்!" என்றார் பாட்டி நெகிழ்ச்சியுடன்.

சித்திரவேலுக்கு ஃபோன் செய்து, அங்கு நடந்ததை கூற எண்ணினாள் நித்திலா. அதை புரிந்து கொண்ட ஆழ்வி,

"அண்ணனுக்கு ஃபோன் பண்ண போறீங்களா?" என்றாள்.

ஆம் என்று தலையசைத்தாள் நித்திலா.

"வேண்டாம். அவர் நேர்ல வந்து பாக்கட்டும். இது அவருக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமே" என்றாள்.

"ஆழ்வி சொல்றது கரெக்டு தான் கா. மாமா நேர்ல வந்து அண்ணனை பார்த்து மயங்கி விழுட்டும்" என்று சிரித்தாள் பார்கவி.

அது நித்திலாவுக்கும் பிடித்திருக்கவே,

"ஆமாம், செம சார்பிரைசா இருக்கும்" என்று அவனுக்கு ஃபோன் செய்யும் எண்ணத்தை கைவிட்டாள்.

"சரி வாங்க போகலாம். அவனை மேல மேல கோபப்படுத்த வேண்டாம்" என்று அங்கிருந்து அனைவரையும் அழைத்துச் சென்றாள் நித்திலா.

"நம்ம இன்னு எவ்வளவு அழகா பேசுறான்…" என்று மகிழ்ச்சி கடலில் திளைத்த படி நடந்தார் பாட்டி. 

........

என்றும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தாள் ஆழ்வி. இனியவனின் முகத்தை பற்றி, முத்தங்களால் நிரப்பினாள்.  அவனும் அதை திரும்பச் செய்தான். மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக்கொண்ட அவளுக்கு, அவன் சாப்பிடாமல் இருக்கிறான் என்பது நினைவுக்கு வந்தது. 

"என்னங்க, உங்களுக்கு பசிக்குதா?" என்றாள், அவன் கண்ணம் தொட்டு.

அவன் ஆம் என்று தன் உதடுகளை அழுத்தி, தலையசைத்தான்.

"சரி, முதல்ல வந்து பிரஷ் பண்ணுங்க" என்றாள். 

அவனுக்கு பல் துலக்க கற்றுக் கொடுத்தாள். அதை செய்யும் போது அவள் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அவனுக்கு முகம் கழுவிவிட்டு, அவன் கையை பிடித்து உணவு மேசைக்கு அழைத்து வந்தாள், அவன் முகத்தை கவனித்தபடி. அங்கிருந்த நித்திலா, பார்கவி மற்றும் பாட்டி மூவரும் ஆழ்வி அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு வியப்படைந்தார்கள்.

அவனை நாற்காலியில் அமர வைத்தாள் ஆழ்வி. அங்கு வந்த முத்து இனியவன் அவர்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்து பின்வாங்கினான்.

"அண்ண்ண்ணா... நீங்களா?" என்று தடுமாறினான்.

சிரித்தபடி அவனுக்கு சாப்பிட கற்றுக் கொடுத்தாள் ஆழ்வி.

"வேணா, நீ எனக்கு ஊட்டி விடு" என்றான் அவன்.

வியாப்போடு அவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்கள் மற்ற அனைவரும்.

"நீங்க இதையெல்லாம் கத்துக்கணும்" என்றாள் ஆழ்வி. அவன் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு, தன் உதடுகளை ஒன்றாய் அழுத்தினான்.

"இன்னு, நான் உனக்கு ஊட்டி விடட்டுமா?" என்றாள் நித்திலா.

இனியவன் அவளை பார்க்கவில்லை.

"இன்னு..." என்று அவள் மீண்டும் அழைக்க,

"என்னங்க அவங்க உங்களை தான் கூப்பிடுறாங்க" என்றாள் ஆழ்வி.

அவன் அவளை நோக்கி திரும்பி,

"நான் என்னங்க... ஆல்வி ஹஸ்பண்ட்" என்றான்.

அதை கேட்டு வியப்படைந்த நித்திலா, தன் கையால் வாயை பொத்தினாள்.

"ஆழ்வி அவரை என்னங்கன்னு தானே கூப்பிடுறா, அதனால அது தான் அவர் பேருன்னு நினைச்சுகிட்டர் போலிருக்கு" என்று சிரித்தாள் பார்கவி.

"அப்படியா? உங்க பேர் என்னங்கவா?" என்று சிரித்தாள்.

"என்னங்க, அவங்க உங்க அக்கா. அவங்க உங்களை இன்னுன்னு கூப்பிடுவாங்க" என்று அதை அவனுக்கு கற்றுக் கொடுக்க முயன்றாள் ஆழ்வி.

அதைக் கேட்ட இனியவனின் முகம் மாறியது. அவனுக்கு இன்னு என்று அழைப்பது பிடிக்கவில்லை.

"பரவாயில்ல விடுங்க ஆழ்வி. என்னங்கன்னு கூப்பிடுறது கூட கியூட்டா தான் இருக்கு" என்று தன் தம்பியை ரசித்தாள் நித்திலா.

"என்னங்க, உங்களுக்கு நான் ஊட்டி விடட்டுமா?" என்றாள் நித்திலா.

"வேணா போ... ஆழ்வி நீ எனக்கு ஊட்டு" என்றான்.

அவனுக்கு ஊட்டி விட துவங்கினாள் ஆழ்வி, அவர்களது மகிழ்ச்சியான மனநிலையை மாற்ற விருப்பமில்லாமல்.

அவசர அவசரமாய் சிற்றுண்டியை சாப்பிட்ட பார்கவிக்கு தொண்டையில் சிக்கியது.

"மெதுவா சாப்பிடு. எதுக்காக இவ்வளவு அவசரமா சாப்பிடுற? இப்போ நீ எந்த ட்ரைனை பிடிக்க போற?" என்றார் பாட்டி.

"நான் என் ஃபிரண்டை பாக்க போறேன்" என்று அவசரமாய் அங்கிருந்து ஓடினாள்.

அவள் சென்றது குருபரனை சந்திக்கத்தான். இனியவனிடம் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய மாற்றத்தை அவனிடம் கூறத் தான் அவள் ஓடினாள்.

ஐபிகே இண்டஸ்ட்ரீஸ்

ரீனா சர்மாவை பற்றி யோசித்தபடி அமர்ந்திருந்தான் குருபரன். எதற்காக அவள் என்றோ இனியவன் உதிர்த்த வார்த்தைகளை அவனிடம் குறிப்பிட்டு கூறினாள்? இனியவனின் தற்போதைய நிலைமை என்ன என்பது அவளுக்கு எப்படி தெரியும்? அவனுக்கு தெரிந்தவரை, இனியவன் நிலையை பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் சித்திரவேல் மிகுந்த உறுதியாய் இருந்தான். இனியவன் விஷயத்தில் தன் புத்திக்கு எட்டாத ஏதாவது ஒன்று இருக்கிறதா? இனியவனின் சிகிச்சை முறை பற்றியும், அவனது கௌரவம் குறித்தும் சித்திரவேல் மிகுந்த அக்கறையோடு இருக்கிறான். அவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் அதை ரகசியமாய் வைத்திருக்கிறார். அது அவனுக்கு தெரிந்த விஷயம் தான். அப்படி இருக்கும் பொழுது, எதற்காக ரீனா சர்மா அவனை அப்படி எகத்தாளம் செய்தாள்? இதைப்பற்றி அவன் நித்திலாவிடம் பேசுவது என்று முடிவு எடுத்தான்.

அப்பொழுது அவன் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வழக்கம் போலவே, அவனது அனுமதியை பெறாமல், அவன் அறையின் உள்ளே நுழைந்தாள் பார்கவி. அவளை பார்த்தவுடன் பளிர் என்று சிரித்தான் குருபரன். ஓடி வந்து அவனை மகிழ்ச்சியோடு அனைத்து கொண்டாள் பார்கவி.

"என்ன ஆச்சு? எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டியா? இவ்வளவு சந்தோஷமா இருக்க?" என்றான் குருபரன்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல்,

"இன்னைக்கு வீட்ல என்ன நடந்தது தெரியுமா?" என்றாள்.

"என்ன?"

ஒன்று விடாமல் அவனிடம் கூறி முடித்தாள் பார்கவி. அவள் அவ்வளவு மகிழ்ச்சியோடு கூறியதை எந்த குறிக்கீடும் செய்யாமல், கேட்டுக்கொண்டு நின்றான் குருபரன்.

"ரொம்ப நாளுக்கு பிறகு இன்னைக்கு ஐபிகேவை நான் பார்த்தேன்" என்றாள்.

"ஆனா இதெல்லாம் எப்படி நடந்தது?" என்றான் குருபரன்.

"நான் தான் சொன்னேன்... ஆழ்வி தன்னோட வாழ்க்கையையே அண்ணனுக்காக தியாகம் பண்ணிட்டான்னு...!" என்றாள்.

அது கேட்டு வியப்படைந்தான் குருபரன். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழ்விக்காக தேம்பித் தேம்பி அழுதாளே பார்கவி...! இந்த இரண்டு நாட்களில், எப்படி அவனிடம் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்க முடியும்?  அங்கு என்ன தான் நடக்கிறது?

"இன்னைக்கு நாங்க அண்ணனோட சேர்ந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டோம் தெரியுமா!" என்றாள்.

"அப்படியா? அவன் அமைதியா இருந்தானா?"

"அமைதியா மட்டுமில்ல, அவர் ஒரு டிப்பிக்கல் ஹஸ்பெண்ட் மாதிரி நடந்துக்கிட்டார். ஒருவேளை நான் ஆழ்வியை தொட்டிருந்தா, என்னை கொன்னிருப்பாரு" என்று சிரித்தாள்.

அவன் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

"நான் இனியாவை பாக்கணும்" என்றான்.

"வீட்டுக்கு வந்து பாத்துட்டு போ"

"இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. நாளைக்கு வரேன்" என்றான்.

"சரி" என்றாள் பார்கவி.

"எனக்கு இனியாவோட இம்ப்ரூவ்மென்ட் பத்தி தெரியும்னு யார்கிட்டயும் சொல்லாத. நான் வேற ஒரு விஷயத்தை பத்தி நித்திலா கிட்ட பேச வீட்டுக்கு வரேன்" என்றான். சரி என்று தலையசைத்தாள் பார்கவி.

இன்பவனம்

இன்பவனத்தில் இருந்தவர்கள், இனியவன் ஆழ்வியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பதை கண்டார்கள். வரவேற்பறையில் இருந்த சோபாவில் அவனை அமர வைத்து, டிவியை ஆன் செய்து அவனை பார்க்கச் செய்தாள் ஆழ்வி. ஆனால் அவன் அதில் எந்த விருப்பமும் காட்டவில்லை. ஆழ்வியை தேடிக் கொண்டு சமையலறைக்கு சென்றான். சமையல் மேடையில் அவனை அமர வைத்தாள் ஆழ்வி. அவன் அங்கு அமர்ந்திருப்பதை கண்ட முத்து,

"அண்ணி, நீங்க ஒரு மந்திரவாதி" என்றான்.

அவன் கூறியதை கேட்டு சிரித்த ஆழ்வி, தான் தயார் செய்த பழச்சாறை தம்ளர்களில் ஊற்றினாள்.

"அன்பால எல்லாத்தையும் மாத்த முடியும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். இன்னைக்கு தான் அண்ணி முதல் தடவையா கண்ணால பாக்குறேன்" என்றான் முத்து.

ஒரு பழச்சாறு தம்ளரை இனியவனிடம் கொடுத்த ஆழ்வி, மற்றவருக்கும் வழங்க அதை கொண்டு சென்றாள்.

"ஆழ்வி, இன்னு... இல்ல இல்ல உங்க என்னங்க எங்க?" என்று சிரித்தாள் நித்திலா.

"ஜூஸ் குடிச்சுக்கிட்டு இருக்காரு" என்று அவளும் சிரித்தாள். 

"இதோ வந்துட்டாரு" என்றார் பாட்டி.

அங்கு வந்த இனியவன், ஆழ்வியின் கையைப் பிடித்து, தன்னுடன் அவளை இழுத்துச் சென்றான்.

"என்னங்க, என்னை எந்த கூட்டிட்டு போறீங்க?" என்றாள், அவனுடன் நடந்தவாறு.

பாட்டியும் நித்திலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவளை தன் அறைக்கு இழுத்து வந்து, கட்டிலில் அமர வைத்து,

"போகாத" என்று அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

மெல்ல அவன் தலையை கோதி விட்டாள் ஆழ்வி. அது அவன் வழக்கமாய் உறங்கும் நேரம். அவன் உறங்கிய பிறகு மெல்ல கட்டிலை விட்டு கீழே இறங்கி, கதவை சாத்தாமல் திறந்தபடியே விட்டு
வெளியேறினாள்.

தன் அறைக்கு வந்த ஆழ்வி, சித்த மருத்துவருக்கு ஃபோன் செய்தாள்.  அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை பற்றி அவரிடம் கூற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், அவருக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும்.

அந்த அழைப்பை அவர் ஏற்றார். அவர் எதுவும் கூறுவதற்கு முன்,

"உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உங்களுக்கு தெரியாது. இன்னைக்கு அவர் என்னை பேர் சொல்லி கூப்பிட்டார், என்னை பார்த்து சிரிச்சாரு, சில வார்த்தைகள் பேசினார், அவர் தங்கச்சி பக்கத்துல போன போது, அவளை ஏறெடுத்து கூட பாக்கல. அவ அவரை தொட்டப்போ கூட, அவ கையை தட்டி விட்டுட்டார். அவர் கண்ல எந்த ஒரு காமமும் இல்ல. இன்னைக்கு எல்லாரோடையும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார். எல்லாரும் தாங்க முடியாத சந்தோஷத்துல இருக்காங்க. எல்லா பெருமையும் உங்களைத்தான் சேரணும்" என்று ஒரே மூச்சில் கூறி முடித்தாள்.

"அவர் மனசுல வேண்டாத காம உணர்ச்சிகள் இனிமே எழாது. அது தான் நம்மளுடைய சிகிச்சையே. அவரைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க. தொடர்ந்து மருந்தை கொடுத்துக்கிட்டு வாங்க. அடுத்த மாசம் நம்ம வேற மருந்தை மாத்தி, கொஞ்சம் டோஸ் அதிகப்படுத்தி கொடுக்கலாம்" என்றார்.

"சரிங்க சுவாமி... இன்னொரு விஷயம்..."

"சொல்லுங்கம்மா"

"அவர் என்கிட்ட ரொம்ப பொசசிவ்வா இருக்காரு. அவர் தங்கை என்னை கட்டிப்பிடிச்ச போது அவருக்கு கோபம் வந்திருச்சு. அவர் ஏன் இப்படி மாறிட்டாருன்னு எனக்கு தெரியல. இது கூட நம்ம மருந்தால தானா?" என்று அவள் கேட்க, அதைக் கேட்டு சிரித்த அவர்,

"இல்லம்மா. இது அவருடைய பிறவி குணமாயிருக்கும். அவரோட உண்மை குணத்தை தான் நம்ம மருந்து வெளியில கொண்டு வரும். அவர் நல்லா இருந்த போது, இப்படித்தான் இருந்திருப்பாரு. அவங்க குடும்பத்தார்கிட்ட விசாரிச்சு பாருங்க. ஆரம்பத்துல இருந்தே, அவர் பொசசிவா தான் இருந்திருப்பாரு. அதனால் தான், அதே மாதிரி இப்போ உங்ககிட்ட நடந்துக்கிறார். உங்க ஒருத்தரை தவிர வேற யாருமே அவர் கூட பேசுறதில்ல, இல்லையா? அவரோட உலகமே ரொம்ப சின்னது. நீங்க மட்டும் தான் அந்த உலகத்துக்குள்ள தைரியமா நுழைஞ்சு அவரோட நெருக்கமா இருக்கீங்க. அதனால அவர் உங்க மேல அப்படி பொசசிவ்வா இருக்கிறது வாஸ்தவம் தான்"

"அப்படின்னா, அவர் குணமான பிறகு கூட இப்படித்தான் இருப்பாரா?"

"நிச்சயமா அப்படித்தான் இருப்பார். அது அவர் ரத்தத்திலேயே இருக்கணும்"

ஆழ்வியின் முகத்தில் புன்னகை படர்ந்தது.

"நீங்க சொல்றதை கேட்கும் போது அவர் கோபக்கார இருப்பாரு போல இருக்கு?"

"ஆமாம் சுவாமி. அவர் எதையுமே தைரியமா உரிமையோட தான் கேக்குறார். பயமோ, தயக்கமோ அவர்கிட்ட சுத்தமா இல்ல"

"கேட்கவே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அதனால தான் அவருடைய எதிரிங்க அவருக்கு முன்னாடி நின்னு சண்டை போட தைரியம் இல்லாம, அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்காங்க" என்றார்.

"நீங்க சொல்றது சரியா தான் இருக்கும் சுவாமி" என்றாள்.

"கவலைப்படாதீங்க. உங்க வீட்டுக்காரரோட உண்மையான குணத்தை சீக்கிரமே  வெளிய கொண்டு வந்துடலாம்"

"ரொம்ப நன்றி சுவாமி"

"முடிஞ்சா அவரை வெளியில எங்கேயாவது கூட்டிக்கிட்டு போங்க"

"வெளியில கூட்டிகிட்டு போறதா?"

"ஆமாம், வெளி உலகத்தை பார்க்கும் போது, அவர் தானாவே நிறைய விஷயங்களை கத்துக்குவார். ஆனா அவர் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல நீங்க தயாரா இருக்கணும். புதுசா, வித்தியாசமான விஷயங்களை பார்க்கும் போது, அவர் மனசுல நிறைய கேள்வி எழும்" என்று கூறிய போது அவர் குரலில் ஒரு குறும்பு தெரிந்தது.

"சரிங்க சுவாமி, நான் ட்ரை பண்றேன்" என்றாள் ஆழ்வி.

அவர் அழைப்பை துண்டித்தார். அவர் கூறியதை எண்ணி, யோசனையில் ஆழ்ந்தாள் ஆழ்வி. எப்படி அவள் இனியவனை வெளியே அழைத்துச் செல்வது? அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவனது உண்மை நிலை என்னவென்று உலகத்திற்கு தெரிய வேண்டாம் என்று எண்ணுகிறார்கள். அதனால் தான் அவனுடைய சிகிச்சை முறையை கூட மாற்றாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, அவனை வெளியில் அழைத்துச் செல்ல அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்? அதை எப்படி நிறைவேற்றுவது என்று அவளுக்கு புரியவில்லை.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top