21 முதல் மாற்றம்

21 முதல் மாற்றம்

மறுநாள்

மருத்துவர் கூறிய அந்த குறிப்பிட்ட மருந்தை உணவில் கலந்து, அதை இனியவனுக்காக முத்துவிடம் கொடுத்து அனுப்பினாள் ஆழ்வி. சித்திரவேல் வீட்டில் இருக்கும்போது இனியவனின் அறைக்கு அவள் செல்ல வேண்டாம் என்று எண்ணினாள். ஆனால் எப்பொழுதும் எந்த பிரச்சனையும் செய்யாமல் உணவை சாப்பிட்டு வந்த இனியவன், அந்த உணவை சாப்பிடாமல் தரையில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான். அதை கண்ட முத்து, வியப்புடன் அங்கிருந்து வந்தான்.

"அவரு சாப்பிட்டாரா?" என்றாள் ஆழ்வி.

"இல்ல, அண்ணி. அவர் அதை தொடக்கூட இல்ல" என்றான் முத்து.

ஆழ்வி பெருமூச்சு விட்டாள். அவள் இனியவனின் அறைக்கு சென்றால் தான் அவன் சாப்பிடுவான். ஆனால் சித்திரவேல் இருக்கும் வரை அவளால் அவன் அறைக்கு செல்ல முடியாது. அவள் தவிப்போடு காத்திருந்தாள். ஆனால் சித்திரவேலோ, அன்று எங்கும் செல்வது போல் இல்லை. அன்று இனியவன் அந்த மருந்தை சாப்பிட்டாக வேண்டும். அதனால், தன்னை சமாளித்துக் கொண்டு, இனியவனின் அறைக்கு சென்றாள். அங்கு அவன் கட்டிலில் அமர்ந்து, சாப்பாடு தட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தான். ஏனென்றால் அவன் பசியில் இருந்தான். அவளை பார்த்தவுடன் ஓடி வந்து, அவளை இடுப்பை சுற்றி வளைத்து தூக்கிக் கொண்டான்.

"என்னங்க... என்னை கீழே விடுங்க" என்றாள்.

அவளை தூக்கி சென்று, கட்டிலின் மீது இறக்கி விட்டான்.

"உங்களுக்கு பசிக்குதுல்ல? அப்படி இருக்கும் போது ஏன் சாப்பிடல?" என்றாள்.

அந்த தட்டை எடுத்து, அதை அவளிடம் கொடுத்தான்.

"என்ன?" என்றாள் ஆழ்வி.

"ஆஆஆ..." என்று வாயை திறந்து, அவளை ஊட்டி விடுமாறு கேட்டான்.

சிரித்தபடி அவனுக்கு ஊட்டி விட துவங்கினாள் ஆழ்வி. எந்த தொந்தரவும் செய்யாமல் அதை சாப்பிட்டு முடித்தான். முதல் நாள் அவளுக்கு ஊட்டி விட்டது போல், அவன் இன்று செய்யவில்லை. அவனுக்கு பசி அதிகமாய் இருந்ததால், அவன் அவளுக்கு ஊட்டி விட நினைக்கவில்லை.

"குட் பாய்" என்று, அவன் வாயை தன் சேலை முந்தானையால் துடைத்து விட்டாள்.

அவனும் அவள் முந்தானையால் அவள் வாயை துடைத்து,

"குட்பாய்" என்றான். அதைக் கேட்டு சிரித்த ஆழ்வி,

"நான் பாய் இல்ல. கேர்ள்... ஆழ்வி... உங்க வைஃப்..." என்றாள்.

"நான் ஆழ்வி" என்றான் அவனும்.

"இல்ல, நீங்க இனியவன்... ஆழ்வி ஹஸ்பண்ட்..." என்றாள்.

"நீ...?" என்றான் அவளை சுட்டிக்காட்டி.

"நான் ஆழ்வி..."

முகத்தை சுருக்கி மேலே பார்த்தான் இனியவன்.

"என்னங்க, நான் சொல்றதை கேளுங்க" என்று அவள் கூற, கட்டிலை விட்டு எழுந்து நின்று அவள் கூறுவதை கேட்டான்.

"நான் ஓடினா, நீங்க என்னை துரத்தி பிடிக்கணும்" என்று சைகை செய்து அவனுக்கு புரிய வைக்க முயன்றாள். 

அங்கிருந்து ஓடுவது போல் ஓடி, அவனை தன்னை துரத்துமாறு கூறினாள். அவள் ஓடத் தொடங்கியவுடன், அவளை துரத்தி பிடித்தான் இனியவன். அவள் மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தாள். அவனும் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான். சற்று இடைவெளி விட்டு, மீண்டும் அவள் ஓட, அவளை மீண்டும் துரத்தினான் இனியவன். அந்த செயலை மேலும் இரண்டு முறை செய்த பிறகு, அவன் அறையின் கதவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அப்பொழுது தான், அவனது அறைக்கு யாராவது வருகிறார்களா என்று அவளால் அந்த பாதையில் கண் வைக்க முடியும். அவன் அறைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று அவளுக்கு தெரியும். ஆனால் சித்திரவேலை குறைத்து எடை போட்டு விட முடியாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டமிடுவதற்காக அவன் அங்கு வர வாய்ப்பு இருக்கிறது.

ஆழ்வி எண்ணியபடியே அவளை தேடினான் சித்திரவேல். அவள் வரவேற்பறையில் இல்லாமல் போகவே, சமையலறைக்கு சென்று பார்த்தான். அங்கு முத்து மட்டுமே இருந்ததால்,

"ஆழ்வி எங்க?" என்றான்.

"அவங்க அண்ணன் ரூம்ல இருக்காங்க" என்றான் முத்து.

அங்கிருந்து நேராக இனியவனின் அறையை நோக்கி வந்தான் சித்திரவேல். சற்று தூரத்தில் நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, காதை கூர்மையாக்கிக் கொண்டு நின்றான். அவன் வருவதை பார்த்து விட்ட ஆழ்வி, ஓடத் துவங்கினாள். அவளை இனியவன் துரத்தினான்.

"என்னங்க... ப்ளீஸ் என்னை விடுங்க, என்னால இதை தாங்க முடியல" என்று அவள் ஓட, அவளை துரத்தினான் இனியவன்.

சித்திரவேல் மெல்ல உள்ளே எட்டிப் பார்க்க, தன்னை காத்துக் கொள்ள ஆழ்வி ஓடுவதையும், இனியவன் அவளை துரத்துவதையும் கண்டான். சரியாக அதே நேரம், அவள் புடவை முந்தானையை பற்றிய இனியவன், அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

அப்பொழுது, சித்திரவேலை நித்திலா அழைப்பது அவர்கள் காதில் விழுந்தது. வேறு வழி இன்றி சித்திரவேல் அந்த இடம் விட்டு சென்றான்.

மூச்சு வாங்கிய படி கட்டிலில் அமர்ந்தாள் ஆழ்வி. இனியவனும் அவள் பக்கத்தில் அமர, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஆழ்வி. சித்திரவேலின் அல்பத்தனமான யோசனைகளை எண்ணியபடி அவள் எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை. நாளை இனியவனிடம் ஏற்பட இருக்கும் மாற்றத்தை எப்படி அவனிடமிருந்து மறைப்பது என்பது அவளுக்கு புரியவில்லை. அவ்வளவு சுலபமாய் அவளால் அதை மறைத்துவிட முடியுமா? அவள் இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் அவள் ஒரு விஷயத்தை உணர்ந்தாள். இனியவன் சிறிதும் அசையாமல் அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தான். ஏனென்றால், அவள் தன் தோளிலிருந்து தலையை எடுத்து விட வேண்டாம் என்று அவன் எண்ணியது தான் காரணம். அவள் மெல்ல தன் தலையை உயர்த்தி அவனை பார்க்க, அவன் மீண்டும் அவள் தலையை தன் தோளில் அழுத்தி, அவளை சாய்த்துக் கொண்டான். புன்னகைத்தபடி அவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்து, அவன் கையை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டாள். தன் உதடுகளை அழுத்தி, புருவம் உயர்த்தினான் இனியவன். அவள் அப்படி செய்த போது, அவன் தன் மனதில் ஏதோ உணர்ந்து இருக்கலாம்.

சிறிது நேரத்திற்கு பிறகு, இனியவனுக்கு தூக்கம் வந்தது. அது அந்த மருந்தின் விளைவு. 
அவன் அவளது மடியில் படுத்து, அடுத்த சில நிமிடங்களில் உறங்கிப் போனான். அவன் இதுவரை எப்பொழுதும் உறங்காத அளவிற்கு ஆழ்ந்த உறக்கம் அது. அவள் அவனைப் படுக்க வைத்து விட்டு, தன் புடவையை சரி செய்து கொண்டு, சமையலறைக்கு வந்தாள். அவனது தட்டை சிங்கில் வைத்தாள்.

"அண்ணன் சாப்பிட்டாரா அண்ணி?" என்றான் முத்து.

"சாப்பிட்டார்" என்று அந்த தட்டை கழுவி வைத்தாள்.

"எனக்கு ஆச்சரியமா இருக்கு. இன்னைக்கு மாதிரி, அவர் இதுக்கு முன்னாடி சாப்பிடாம இருந்ததே இல்ல"  என்றான் முத்து.

ஆழ்வி மென்மையாய் புன்னகைக்க,

"உங்களுக்கு ரொம்ப பொறுமையும், அளவுக்கு அதிகமான தைரியமும் இருக்கு அண்ணி" என்றான்.

"எனக்கு வேற வழி இருக்கா?" என்றாள்.

அவன் இல்லை என்று தலையசைத்தான்.

"சில நேரம் அவர் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிறார். எப்போ அவரோட புத்தி மாறும்னே சொல்ல முடியல" என்று அவள் கவலையோடு கூற, அவன் முகம் மாறியதில் இருந்தே அவள் சொன்னதை அவன் நம்பி விட்டான் என்று அவள் புரிந்து கொண்டாள்.

"அண்ணன் மனநிலை சரியில்லாதவர். ஆனா, நீங்க கவலைப்படாதீங்க, அண்ணி. சீக்கிரமே அவர் குணமாயிடுவாரு. நீங்க இங்க வந்ததுக்கு பிறகு அவர் கிட்ட நான் நிறைய மாற்றங்களை பாக்குறேன்" என்றான் முத்து.

ஆம் என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து புன்னகைத்தபடி நடந்தாள் ஆழ்வி. அவளுக்காக வருத்தபட்டான் முத்து.

இனியவன் உறங்கி விட்ட பிறகும், அவன் மீது ஒரு கண் வைத்தபடியே இருந்தாள் ஆழ்வி. அவ்வப்போது அவனது அறைக்கு சென்று, அவனை கவனித்தபடி இருந்தாள்.  இதற்கிடையில் எப்படி சித்திரவேலை சமாளிப்பது என்பது பற்றியும் அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

மறுபுறம் ஆழ்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் சித்திரவேல். அவள் எவ்வளவு தான் இனியவனை சமாளிக்க முயன்றாலும், நிச்சயம் அது நடக்கப்போவதில்லை. அவர்களது மருந்தை இனியவன் சாப்பிட்டு கொண்டிருக்கும் வரை, அவனது ரத்தத்தின் வேகம் நிச்சயம் தனியாது. வாழ்க்கை முழுக்க, இனியவன் துரத்த, அவள் ஓடிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று எண்ணினான் சித்திரவேல்.

மதிய உணவு வேலை

அன்று இனியவனை கவனித்துக் கொள்ளும் வேலை இல்லாததால், ஆழ்வி தான் சமைத்தாள்.  சமைத்த உணவை உணவு மேசைக்கு கொண்டு வந்து வைத்தபடி அவள் சித்திரவேலை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது பதற்றம் அதிகரித்த வண்ணம் இருந்தது. அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள். ஆழ்வி அனைவருக்கும் உணவு பரிமாற துவங்கினாள்.

அப்பொழுது சித்திரவேலுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவன் ஏற்றான். அவனது முகம் கோபமாய் மாறியது.

"என்ன்னனது? என்ன செஞ்சு தொலைச்சி வச்சிருக்கிங்க?" என்றான் பல்லை கடித்த படி.

"........."

"நான் உங்க லாயர். என்னை கேட்காம நீங்க எப்படி அவரை போய் சந்திச்சீங்க?"

"......"

"இல்ல, இந்த கேஸ் முடிகிற வரைக்கும் நீங்க அவரை சந்திச்சிருக்கவே கூடாது. இன்னும் பத்து நாள்ல அடுத்த வாய்தா வரப்போகுது. அடுத்த வாய்தாவுக்கு முன்னாடி நம்மகிட்ட இருக்கிற சாட்சியை அவங்க கலைக்க முயற்சி பண்ணுவாங்கன்னு நான் ஏற்கனவே உங்ககிட்ட இரு சொல்லி இருந்தேன்ல?"

"......."

"என்னை இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் பண்ணிடுங்க. எனக்கு இந்த கேஸ் வேண்டாம்"

".........."

"பின்ன என்னங்க? நான் சொல்றத கேட்க நீங்க தயாரா இல்லனா, அப்புறம் இந்த கேசை நான் எடுத்து நடத்துறதுல என்ன பிரயோஜனம் இருக்கு?"

"........"

எரிச்சலுடன் தன் கை விரல்களை தன் தலை முடியில் நுழைத்த்த சித்திரவேல்,

"சரி, சரி, நான் கண்டினியூ பண்றேன். ஆனா நான் சொல்ற எதையும் நீங்க மறுக்காம செய்யணும். என் பேச்சை மீறி நீங்க நடக்கக்கூடாது"

"......."

"நான் மதுரைக்கு கிளம்பி வரேன்"

"......"

"பின்ன என்ன? நீங்க செஞ்ச தப்பை, நான் சென்னைல இருந்துகிட்டு எப்படி சரி கட்டுறது?"

"......"

"பரவாயில்லை விடுங்க" என்று அழைப்பை துண்டித்தான்.

"என்ன ஆச்சு சித்ரா?" என்றாள் நித்திலா.

"நான் உடனே மதுரைக்கு கிளம்பி போயாகணும். இல்லனா இந்த கேசை என்னால் ஜெயிக்க முடியாது"

அதைக் கேட்ட ஆழ்வி, சாப்பிடுவதை சில நொடி நிறுத்திவிட்டு, மீண்டும் சந்தோஷமாய் சாப்பிட துவங்கினாள்.

"நேத்து தானே மதுரைலயிருந்து வந்திங்க?" என்றாள் நித்திலா கவலையோடு.

"அங்க ரொம்ப பெரிய தப்பு நடந்திருக்கு. நான் போய் தான் ஆகணும். வேற வழி இல்ல"

"எப்போ திரும்பி வருவீங்க?"

"அடுத்த வாய்தா பத்து நாள் கழிச்சு தான். அதுக்கு பிறகு தான் என்னால வர முடியும்"

"சரி, நான் உங்க திங்க்ஸ்ஸை எல்லாம் எடுத்து வைக்கிறேன்"

சரி என்று தலையசைத்தான் சித்திரவேல்.

அவர்கள் தங்கள் அறைக்கு கிளம்பி சென்றார்கள், சித்திரவேலுக்கு தேவையான உடைகளை எடுத்து வைக்க.

*இன்னைக்கு நான் பாயசம் செஞ்சு சாமிக்கு படைக்கணும்* என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டாள் ஆழ்வி.

சித்திரவேல் அந்த வீட்டை விட்டு கிளம்பும் இன்பமயமான காட்சியை காண, வரவேற்பரையிலேயே இருந்தாள் ஆழ்வி. ஒரு பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் சித்திரவேல். 

சிறிது நேரத்திற்கு பிறகு, இனியவனின் முணங்கலை கேட்டாள் ஆழ்வி. அவன் எழுந்து விட்டான் போல் தெரிந்தது. அவனது அறைக்கு சென்ற அவள், அவன் கட்டிலில் அமர்ந்தபடி தூங்கி வழிந்து கொண்டிருப்பதை கண்டாள். அவள் சென்று அவன் பக்கத்தில் அமர, அவள் தோளில் சாய்ந்த படி உறங்கினான். அவனை தொந்தரவு செய்யாமல், அவனை தன் தோளில் சாய்ந்து இருக்கவிட்டாள். மீண்டும் அவன் உறங்கிப் போக, அவனை படுக்க வைத்துவிட்டு, தன் அறைக்கு வந்து மருத்துவருக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்ற அவர்,

"சொல்லுங்கம்மா, ஏதாவது பிரச்சனையா?" என்றார்.

"அவர் விடாம தூங்கிக்கிட்டே இருக்காரு. ஏதாவது பிரச்சனையா சுவாமி?" என்றாள்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. அந்த மருந்து வேலை செய்யுது. அதனால் தான் அவர் தூங்கிக்கிட்டு இருக்காரு. அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவர் தூங்கினா விட்டுடுங்க" என்றார்.

"சரிங்க சுவாமி" என்று அழைப்பை துண்டித்து, நிம்மதி பெருமூச்சு விட்டாள். 

வேண்டிக் கொண்டபடியே பாயாசம் செய்து அதை அம்மனுக்கு படைத்துவிட்டு, அதை அனைவருக்கும் வழங்கினாள் ஆழ்வி.

"இன்னைக்கு என்ன விசேஷம் ஆழ்வி, பாயசம் செஞ்சிருக்கீங்க?" என்றாள் நித்திலா.

"சாமிக்கு படைக்கணும்னு தோணுச்சு. அதனால செஞ்சேன்"

"ஆழ்வி, நீ எப்படி அண்ணனை சமாளிக்கிற? அவரு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறாரா?" என்றாள் பார்கவி கவலையுடன்.

அந்த கேள்வியை கேட்டதற்காக பார்கவிக்கு மனதிற்குள் நன்றி கூறிக் கொண்டாள் ஆழ்வி. இப்பொழுது, அப்படிப்பட்ட ஒரு கேள்வி தான் அவளுக்கு தேவைப்பட்டது.

"ஆரம்பத்துல அவர் ரொம்ப கடுமையா தான் இருந்தாரு. ஆனா இப்போ ரொம்ப அமைதியா ஆயிட்டாரு. எனக்கு அவர்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுது. அவர் குழந்தை மாதிரி நடந்துக்கிறார்" என்றாள். 

ஏனென்றால் அடுத்த நாள் அவனிடம் அவர்கள் மாற்றத்தை காணும் போது, அவர்களை கையாள அவளுக்கு சுலபமாக இருக்கும் அல்லவா?

"எது எப்படி வேணா இருக்கட்டும். நீ தான் எங்க குடும்பத்தோட விடிவெள்ளி, ஆழ்வி. இன்னு எப்படி இருந்தான்னு எங்களுக்கு தெரியும். நீ நெருப்புல இறங்கி அவனை வெளியில கொண்டு வந்திருக்க" என்றார் பாட்டி நா தழுதழுக்க.

"அவர் என்னோட புருஷன் பாட்டி. என் இடத்துல வேற யார் இருந்தாலும் அப்படித்தான் செய்வாங்க"

"இல்ல, இதை நான் ஒத்துக்க மாட்டேன். நீ அவனுக்காக எந்த அளவுக்கு பாடுபட்டுக்கிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும். உன் இடத்துல வேற யாரு இருந்தாலும், நிச்சயம் இதை செய்ய மாட்டாங்க" என்றாள் நித்திலா.

"எல்லாம் சீக்கிரமே சரியாயிடும். அவரும் பழைய மாதிரி மாறுவார்" என்றாள் ஆழ்வி.

அவள் கூறியது அங்கிருந்த மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

ஹோட்டல் ப்ளூ டைமண்ட்

அங்கு நடைபெற்ற ஒரு  கான்ஃபிரன்சை முடித்துக் கொண்டு, அந்த மிகப்பெரிய அறையை விட்டு வெளியே வந்தான் குருபரன். அப்பொழுது யாரோ அவன் தோளை தட்ட, பின்னால் திரும்பி பார்த்தான். அங்கு ஒரு பெண் நின்றிருந்தாள்.

"ஹலோ மிஸ்டர் ஹனுமான், எங்க உன்னோட ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி?" நீ அவனை ஏழு கடல் தாண்டி கொண்டு போய் ஒளிச்சு வச்சு இருக்கிறதா பேசிக்கிறாங்களே...!" என்றாள் நக்கலாய்.

அவள் ரீனா சர்மா. சென்னையின் சக்தி வாய்ந்த வியாபார பெண்மணிகளில் ஒருத்தி.

"இனியா அப்ராட்ல இருக்கான்" என்றான் குருபரன் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு.

"நீ உண்மையிலேயே குருபரன் தானா? இல்ல, உன் கம்பெனியோட ரெக்கார்டட் வாய்ஸா? ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்ல உனக்கு போரடிக்கலையா?"

"நான் ஏன் பொய் சொல்லணும்?"

"ஐபிகே பத்தின சிகரெட்டை மூடி மறைக்கத் தான்..."

"இதுல முடி மறைக்க எந்த சீக்ரெட்டும் இல்ல"

"என்ன மேனேஜர் நீ? உன் பாஸ் எவ்வளவு கிரேட்டான ஆளு...! அவன் வாழ்க்கையில எந்த சீக்ரெட்டும் இல்லன்னு சொல்ற...? நான் அவன் வாழ்க்கையே சீக்ரெட்டா மாறிட்டதா கேள்விப்பட்டேனே...!"

குருபரன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,

"உங்க பாஸ் என்ன சொன்னான்னு உனக்கு ஞாபகம் இருக்கா, குரு?" என்றாள்.

நின்று அவள் முகத்தை திரும்பி பார்த்தான் குருபரன்.

"ஒரு மெண்டல் கூட என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னான். ஞாபகம் இருக்கா?"

கோபத்தில் தன் பல்லை கடித்தான் குருபரன்.

"எல்லாரும் பேசிக்கிறாங்க, ஐபிகே மெண்டல் ஆயிட்டானாமே...! உனக்கு அது பத்தி ஏதாவது தெரியுமா?" என்று சிரித்தாள் அவள்.

"ஐபிகே சொன்னது சரி தான். எந்த மென்டலும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்" என்று கோபமாய் கூறியபடி நடந்தான் குருபரன்.

"போ, போ, ஐபிகே நிச்சயம் பழையபடி மாற மாட்டான்" முணுமுணுத்தாள்.

தன்னை ஓர் கடவுள் போல் எண்ணிக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பேசினாள் அவள். ஆனால், அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை, அவன் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு நபர் ஏற்கனவே அவனது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்து விட்டாள் என்றும், அவன் குணமடைய அவள் உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும் , அவளது கடின உழைப்புக்கான பலனின் பழத்தை விரைவில் அவள் சுவைக்க இருக்கிறாள் என்றும்...!

மறுநாள் காலை

அனைவருக்கும் தேநீர் வழங்கிவிட்டு தானும் அவர்களுடன் தேனீர் அருந்தி கொண்டிருந்தாள் ஆழ்வி. அவள் இனியவனின் அறைக்கு செல்லவில்லை. அவன் தானாகவே எழட்டும் என்று காத்திருந்தாள். அப்பொழுது,

"ஆழ்ழ்ழ்வி..."

என்ற உரத்த குரல் கேட்டு திடுக்கிட்டாள். அவளை அழைத்தது இனியவனே தான். அனைவரும் அவளை நம்ப முடியாமல் பார்க்க, அவளோ நெகிழ்ந்து போனாள். 

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top