2 புத்தகம்

2 புத்தகம்

ஏ எம் டி கல்லூரி

இனியவனின் சகோதரியான பார்கவி, தேர்வு நடைபெற்ற கூட்டத்தை விட்டு வெளியே வந்து, தனது தோழி மீனாட்சி உடன் யாருக்காகவோ காத்திருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்த ஒரு பெண்ணை பார்த்து புன்னகைத்த படி ஓடிச் சென்று அவனை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள். 

"தேங்க்யூ சோ மச், ஆழ்வி. நான் இந்த பேப்பர்ல நிச்சயமா ஃபெயில் ஆயிடுவேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். நீ மட்டும் உன்னோட புக்ஸை எனக்கு கொடுக்காம இருந்திருந்தா, என்னால படிச்சிருக்கவே முடியாது" என்றாள் ஆழ்வி

"நல்ல காலம், நான் என் புக்கை உனக்கு கொடுத்தேன்..." என்று சிரித்தாள் பார்கவி.

ஆழ்வியும் மீனாட்சியும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்கள்.

"அடுத்தது என்ன செய்யப் போற ஆழ்வி?" என்றாள் மீனாட்சி.

"வேற என்ன? ஏதாவது வேலை தேடணும்" என்றாள் சாதாரணமாய்.

ஆழ்வி அவர்கள் இருவருக்கும் நெருக்கமான தோழி என்றாலும், தன்னுடைய குடும்ப நிலையை எப்பொழுதும் அவர்களிடம் கூறியதில்லை. அவளது அம்மா கற்பகம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர். அவளது அப்பா கொடுக்கத் தவறிய அந்த ஆடம்பரமான வாழ்க்கையை, தன் அம்மாவிற்கு வழங்க வேண்டும் என்று விரும்பினாள் ஆழ்வி. ஏனென்றால், அவர் விருப்பத்தில் தவறு இருப்பதாய் அவள் நினைக்கவில்லை. தன்னுடைய சாதாரண விருப்பத்தை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாதவராய் இருந்தார் கற்பகம். அவளுடைய அப்பாவால் அவர்களுக்கு வெகு சாதாரண வாழ்க்கையை தான் தர முடிந்தது. அவள் அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமானது. வீட்டு வாடகை என்னும் மிகக் குறைந்த வருமானத்தை வைத்து தான் அவர்களது வாழ்க்கை குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆழ்வியின் அப்பா இறந்தபோது, அவள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். வசதியின்மை காரணமாக அவள்  கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட நினைத்தார் கற்பகம். ஆனால் அதே நேரம், அவளை கல்லூரிக்கு அனுப்புவதை தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனென்றால் ஆழ்வி ஒருத்தி தான் அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை. தன் குடும்பத்தின் பாரத்தை சுமக்க ஆழ்வியும் தயாராக தான் இருந்தாள். ஏனென்றால் அவளது ஒரே அண்ணன் சிறிதும் பொறுப்பற்றவனாய் சாராயக்கடலில் மூழ்கி திளைத்தான். அவர்களது குடும்ப நிலையை அவளது  தோழிகள் தெரிந்து கொண்டதே அவரது அப்பாவின் இறுதி சடங்கில் தான்.

"நான் எங்க மாமா கிட்ட சொல்லி உனக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்றேன். உனக்கு நிச்சயம் அவர் வேலை கொடுப்பாரு ஏன்னா உன்னோட திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் பார்கவி.

"ரொம்ப தேங்க்ஸ் கவி. எனக்கு மட்டும் வேலை கிடைச்சிட்டா, எங்க அம்மாவோட ஆசை எல்லாம் நான் நிறைவேத்துவேன்."

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத ஆழ்வி, உன்னால நிச்சயமா உங்க அம்மாவுடைய ஆசை எல்லாம் நிறைவேற்றவே முடியாது" என்றாள் மீனா.

பதில் கூற முடியாமல் அமைதியானால் ஆழ்வி. மீனா கூறுவது ஒன்றும் தவறில்லை. ஏனென்றால் அவளது அம்மாவின் ஆசைக்கு அளவே இல்லை. அவரை திருப்திப்படுத்துவது என்பது நடக்காத விஷயம்.

"நான் உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடு"

வலிய புன்னகைத்தாள் ஆழ்வி.

"இன்னும் நமக்கு ஒரே ஒரு எக்ஸாம் தான் இருக்கு. தயவு செய்து நல்லா படிச்சிட்டு ஆழ்வி. நான் மட்டும் ஃபெயில் ஆனா, எங்க அக்கா என்னை கொன்னுடுவா" என்றாள் பார்கவி கெஞ்சலாக.

சிரித்தபடி சரி என்று தலையசைத்த ஆழ்வி,

"ஆனா புக் இல்லாம நான் எப்படி படிக்கிறது?" என்றாள்.

"இதுவரைக்கும் நீ எதையுமே படிக்காத மாதிரி பேசுறியே...!" என்றாள் பார்கவி.

"நான் இன்னும் லாஸ்ட் சாப்ட்வேரை தொடவே இல்ல. அதை படிக்கணும்"

"நாளைக்கு நான் ஃபேர்வெல் பார்ட்டிக்கு வரும் போது அதை கொண்டுவரேன். கவலைப்படாதே"

"பார்ட்டியா?" என்று பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.

"ஏன்? நீ பாட்டிக்கு வரப்போறதில்லையா?"

"இல்ல நான் என்ன நெனச்சேன்னா..."

"ஏன் வர மாட்ட?" என்றாள் மீனா.

"பார்ட்டிக்கு வரலைன்னா வீட்ல உட்கார்ந்து படிப்பேன். நீ எங்க வீட்டுக்கு வந்து அந்த புக்கை கொடுக்க முடியுமா? ப்ளீஸ் கவி" இன்று பொய் கூறி சமாளித்தாள் அவள் அவளுக்கும் கூட அந்த ஃபேர்வெல் பார்ட்டிக்கு வந்து அவள் தோழிகளுடன் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனாலும் அதற்கு வரவேண்டாம் என்று அவள் முடிவு எடுத்ததற்கு காரணம், பார்ட்டிக்கு அணிந்து கொண்டு வரும் அளவிற்கு நல்ல உடைகள் அவளிடம் இல்லை.

"அதெல்லாம் முடியாது. இது நம்ம ஃபேர்வல். நீ வந்து தான் ஆகணும்" என்றாள் பார்கவி.

"ஆமாம் ஆழ்வி நாளைக்கு எடுக்க போற ஃபோட்டோஸ் எல்லாம் நம்ம லைஃப்ல எப்பவுமே ஞாபகமா  இருக்கும். நீயும் அதுல இருக்கணும்னு நாங்க ஆசைப்படுறோம். தயவு செய்து வராம மட்டும் இருந்திடாத" என்றாள் மீனா.

வேறு வழி இல்லாமல் சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"சரி நான் வரேன். நாளைக்கு மறக்காம புக்கு எடுத்துக்கிட்டு வந்துடு"

"ஷ்யூர், ஷ்யூர்... நாளைக்கு செம ஜாலியா இருக்க போகுது" என்று துள்ளி குதித்தாள் பார்கவி.

"நான் கிளம்பறேன். பை"

"பை ஆழ்வி"

ஆழ்வி கல்லூரியில் இருந்து புறப்பட்டாள், நாளை நடக்க இருக்கும் பார்ட்டியை நினைத்தபடி. நாளை என்ன உடை அணிவது என்பதை பற்றி யோசித்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை கவனித்த அவளது அம்மா கற்பகம்,

"என்ன யோசிச்சிகிட்டு இருக்க?" என்றார்.

"நாளைக்கு எங்க காலேஜ் ஃபேர்வல் டே. ஆனா, என்கிட்ட நல்ல டிரஸ் எதுவும் இல்ல" என்று கூறியபடி நாற்காலியில் அமர்ந்தாள்.

"பார்ட்டிக்கு போய்தான் ஆகணுமா?"

" எனக்கு வேலை கிடைக்கணும்னு உங்களுக்கு விருப்பம் இல்லையா என்று அவரை திருப்பி கேள்வி கேட்டாள் ஆழ்வி. அவரை எப்படி வாயடைக்க செய்ய வேண்டும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

"கிடைக்கணும் தான்..."

குறைந்தபட்ச வசதிகளோடு வாழ, ஆழ்வி வேலைக்கு சென்றால் தான் முடியும் என்று அதற்காக காத்திருந்தார் கற்பகம். அவரைப் பொறுத்தவரை, ஆழ்விக்காக அவர் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும், முதலீடு...!

"அப்படின்னா நான் இந்த பார்ட்டிக்கு  போய் தான் ஆகணும்"

"ஏன்?"

"பார்கவி புக்கை பார்ட்டிக்கு கொண்டுவரேன்னு சொல்லி இருக்கா. அவ புக்கு கொண்டு வந்தா மட்டும்தான் என்னால் படிக்க முடியும். அப்ப தான் நான் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண முடியும். அப்ப தான் எனக்கு வேலை கிடைக்கும்"

பெருமூச்சு விட்டார் கற்பகம்.

"அதோட மட்டுமில்லாம, அவங்க மாமா கிட்ட பேசி, அவங்க கம்பெனியிலேயே எனக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தரேன்னு பார்க்கவி சொல்லி இருக்கா"

"அப்படியா? அப்படின்னா நீ நிச்சயமா பார்ட்டிக்கு போகணும்" என்றார் ஆர்வத்துடன்.

"ஆனா நான் என்ன டிரஸ் போட்டுக்கிட்டு போவேன்? பார்ட்டிக்கு போடுற மாதிரி நல்லதா என்கிட்ட எந்த ட்ரெஸ்ஸும் இல்லையே..."

"என் புடவையை கட்டிக்கிட்டு போ"

"எந்தப் புடவை?" என்றாள் ஆர்வமாக.

"உங்க அப்பா எனக்கு கடைசியா ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார் இல்ல... அதோட பிளவுஸை ஆல்டர் பண்ணி போட்டுக்கோ உனக்கு அந்த புடவை நல்லாயிருக்கும்" 

சரி என்று சந்தோஷமாய் தலையசைத்தாள் ஆழ்வி. அவளுக்கும் கூட அந்த புடவை மிகவும் பிடிக்கும். அதை ஒருமுறையாவது கட்டிவிட வேண்டும் என்று தான் அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள். நாளை அவளது விருப்பம் நிறைவேற போகிறது.

இன்பவனம் 

நித்திலாவின் அறைக்கு வந்த பார்கவி, அவள் அறையின் கதவை தட்டினாள்.

"உள்ள வா கவி"

"வந்திருக்கிறது நான் தான்னு பாக்காமலே எப்படிக்கா கண்டுபிடிச்ச?" அவள் பக்கத்தில் அமர்ந்தாள் பார்க்கவி.

"வேலைக்காரங்களா இருந்தா, என்னை அம்மான்னு கூப்பிடுவாங்க. ரொம்ப முக்கியமான வேலையா இல்லாத பட்சத்துல பாட்டி என் ரூமுக்கு வர மாட்டாங்க. நீயும் இனியாவும் மட்டும்தான் என் ரூமுக்கு வர்றவங்க" என்று ஆழமான அர்த்தத்துடன் கூறினாள்.

ஆம் என்று சோகமாய் தலையசைத்தாள் பார்கவி.

"என்ன விஷயமா வந்த, சொல்லு"

" எனக்கு உன்னோட ரெக்கமண்டேஷன் வேணும் கா" முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

"எதுக்கு?"

"என்னோட ஃப்ரெண்ட் ஆழ்விக்காக. மாமாகிட்ட சொல்லி அவளுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ண சொல்றியா?"

நித்திலா அவளுக்கு பதில் கூறும் முன்,

"அவ ரொம்ப திறமைசாலி... ரொம்ப நல்லா படிப்பா... எல்லாத்துக்கும் மேல அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..."

"எல்லாத்தையும் அவ ரொம்ப ரொம்ப வச்சிருக்கா போல இருக்கே" என்று சிரித்தாள் நித்திலா.

"அக்கா, ப்ளீஸ் ப்ளீஸ் மாமா கிட்ட பேசு. அவ குடும்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு கா"

தன் தலை சாய்த்து அவளை கிண்டலாய் பார்த்தாள் நித்திலா. பார்கவியின் அடுத்த வாசகம் அவள் முகபாவத்தை மாற்றியது.

"அண்ணன் மட்டும் நல்லா இருந்திருந்தா, நான் அவர்கிட்டயே கேட்டிருப்பேன். என்னோட ஆசையை அவர் நிறைவேத்தி வைச்சிருப்பாரு. நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன் கா..." என்ற அவளது கண்கள் கலங்கியது.

"எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல கவி. ஏன் தான் கடவுள் நம்மளை இப்படி எல்லாம் சோதிக்கிறாங்களோ தெரியல" என்ற நித்திலாவால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

"எனக்கு கடவுள் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு கா"

"அப்படி சொல்லாத கவி... நடக்கிற எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்"

"எந்த காரணத்துக்காக அண்ணனை அவங்க இப்படியெல்லாம் தண்டிக்கிறாங்க?"

"நம்மளால எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடியாது கவி. ஆனா ஒரு நாள் நமக்கு புரியும்" அவளது கண்ணீரை துடைத்து விட்டாள்.

இப்படித்தான் நித்திலா தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கும் கூட இனியவன் எதற்காக இப்படி ஒரு கொடுமையான கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று புரியவில்லை. உண்மையைக் கூறப்போனால் தண்டனையை அனுபவிப்பது இனியவன் அல்ல அவனை சேர்ந்தவர்கள் தான். அவனுக்குத்தான் அவனுக்கு என்ன நிகழ்கிறது என்றே தெரியவில்லையே. அவனது சுயநினைவு திரும்ப வந்தாலும் கூட அவனுக்கு நிகழ்ந்தது எதுவும் அவனுக்கு நினைவிருக்கப் போவதில்லை.

"அண்ணன் எப்படிக்கா இருக்காரு? இன்னைக்கு அவர் ஏதாவது கலாட்டா பண்ணாரா?"

"இல்ல"

"அவருக்கு என்ன தான் கா பிரச்சனை? சில சமயம் ரொம்ப நார்மலா இருக்காரு... அவரே சாப்பிடுறாரு... ஆனா திடீர்னு கண்ட்ரோலே பண்ண முடியாத அளவுக்கு மாறிடுறாரு... ஏன் கா?"

நித்திலா தயங்கினாள்.

"ஏதாவது சீரியசான விஷயமா?"

"அவனுக்கு செக்ஸுவல் ஃபீலிங்ஸ் வரும் போது தான் தன்னுடைய கண்ட்ரோலை அவன் இழக்கிறான்"

"அவருக்கு அதெல்லாம் கூட வருமா என்றாள் வேதனையுடன்"

"அவன் இருபத்தி ஒம்போது வயசு பையன். அவன் தன்னோட நினைவை இழந்து இருக்கலாம் ஆனால் அவன் உடம்பில் இருக்கிற ஹார்மோன் எல்லாம் அதோட வேலையை செய்யத்தானே செய்யும்? தனக்குள்ள என்ன நடக்குதுன்னு அவனுக்கு புரியாது இல்லையா... தன்னோட பிரச்சனையை யார்கிட்டயும் சொல்லவும் முடியாது. அப்படின்னா அவன் என்ன தான் செய்வான்?"

"இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கு பதில், அவர் செத்தே போய் இருக்கலாம். அண்ணனை இப்படியெல்லாம் என்னால பார்க்கவே முடியல. அவருக்கு எப்ப தான் விடியப்போகுதோ தெரியல" என்று முகத்தை மூடி அழுதால் பார்க்கவி

"கடவுள் அவன் வாழ்க்கைக்கு ஒரு விடிவெள்ளியை அனுப்புவார்னு நான் நம்புகிறேன்" என்று அவளும் அழுதாள்.

"நான் போறேன் கா"

"நான் ஆழ்வியோட வேலையைப் பற்றி மாமா கிட்ட பேசுறேன்"

"தேங்க்ஸ் கா"

மறுநாள்

உணவு மேசைக்கு வந்த பார்கவி அணிந்திருந்த ஆர்ப்பாட்டமான உடையை பார்த்து புன்னகை புரிந்தாள் நித்திலா. உயர்ந்த வேலைப்பாடு அமைந்த டிசைனர் கவுனை அணிந்திருந்தாள். தனது கைப்பையையும் ஆழ்வி கேட்ட புத்தகத்தையும் தனக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் வைத்தாள். 

"பார்க்க பொம்மை மாதிரி அட்டகாசமா இருக்க" என்றாள் நித்திலா.

"ஆமாம், உன்னோட பாய் ஃப்ரெண்ட் உன்னை பார்த்து மயங்கி விழப் போறான்" என்று சிரித்தான் சித்திரவேல்.

தன் நுனி நாக்கை கடித்தபடி வேண்டாம் என்று தலையசைத்தாள் பார்கவி, அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டியை பார்த்தபடி. சங்கடத்துடன் அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியை தள்ள, அதில் இருந்த புத்தகம் கீழே விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.

"உன்னோட கிளாஸ் பாய்ஸை பத்தி சொன்னேன். அந்த பாய்ஸ் எல்லாம் உன் ஃபிரண்டு தானே..." என்று சமாளித்தான் சித்திரவேல்.

ஆம் என்று சங்கடத்துடன் தலையசைத்து சாப்பிட துவங்கினாள் பார்கவி.

"இன்னைக்கு ப்ரோக்ராம் என்ன?" என்றான் சித்திரவேல்.

"என் ஃப்ரெண்ட்ஸோட செமையா என்ஜாய் பண்ண போறேன்..."

"ஓ...  என்ஜாய்"

"நான் இன்னைக்கு வீட்டுக்கு லேட்டா தான் வருவேன்" என்றபடி எழுந்து நின்றாள், தன் மதிய உணவை முடித்துக் கொண்டு.

"பார்கவி..." என்ற பாட்டியின் கண்டிப்பான குரல் கேட்டு கண்களை இறுக்க மூடினாள்.

"ஏழு மணிக்கு வீட்ல நீ இருக்கணும். புரிஞ்சுதா உனக்கு?" என்றார்.

அவள் நித்திலாவையும் சித்திரவேலையும் கெஞ்சலாய் பார்க்க,

"பாட்டி இன்னைக்கு அவளுக்கு ஃபேர்வெல்..."

" அதனால என்ன மாப்பிள்ளை? எல்லாமே ஒரு நாள் முடிவுக்கு வந்துதானே ஆகணும் எல்லாத்துக்கும் நம்ம மனசை நம்ம தயாரா வச்சுக்கணும். இல்லன்னா பாக்குறது எல்லாம் தனக்கு வேணும்னு அது கேட்டுகிட்டே இருக்கும். ஏழு மணிக்கு வீட்ல நீ இருக்கணும்" என்றார் பாட்டி.

"நீங்க எல்லாரும் கோவிலுக்கு போறீங்கன்னு அக்கா சொன்னாளே?"

"ஆமாம், ஆனா நீ வரதுக்கு முன்னாடி நாங்க வீட்ல இருப்போம்"

சரி என்று தலையசைத்த பார்கவி, தனது கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றாள், ஆழ்வி கேட்ட புத்தகத்தை அங்கேயே விட்டுவிட்டு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top