18 யுக்தி

18 யுக்தி

தன் கையை விரித்து இனியவனை தன்னிடம் வருமாறு அழைத்தாள் ஆழ்வி. ஆனால் இனியவனின் கண்களோ அவள் தரையில் வீசி எறிந்த கிளிப்பின் மீதே இருந்தது. சில வேக அடிகள் எடுத்து வைத்து அவனை நெருங்கிய அவள், அவனைத் தழுவிக் கொண்டாள். சற்று நேரத்திற்கு முன்பு அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட அவன், இப்பொழுது திருதிருவென விழித்தபடி சிலையென நின்றான். அவனைப் பார்த்து புன்னகைத்த ஆழ்வி, அவன் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு, பிறகு அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.  மந்திரித்து விட்டவனை போல் நின்றான் இனியவன். பரட்டையாய் இருந்த அவனது தலை முடியை தன் விரல்களால் கோதி ஒழுங்கு படுத்தினாள். இனியவனின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் கூற முடியவில்லை. அவன் கண்ணிமைக்காமல் அவளையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் முதல் பெண் ஆயிற்றே அவள்...! உண்மையை கூறப்போனால், அவனிடம் இதுவரை யாருமே அப்படி நடந்து கொண்டதில்லை.

அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவனுக்கு தோன்றவில்லை, வேறு எதுவும் செய்ய வேண்டும் என்றும் தோன்றவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவள் செய்ததெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளது முத்தம், அவளது தொடுதல், அவளது அணைப்பு, அவள் அவன் தலையை கோதிவிட்ட விதம், அனைத்தும் பிடித்திருந்தது.

அவள் மெல்ல கட்டிலை நோக்கி நடந்தாள். சாவி கொடுத்த பொம்மையை போல் அவளை பின்தொடர்ந்தான். அவன் தோள்களை அழுத்தி, அவனை கட்டிலின் மீது அமரச் செய்து, அவனை படுத்துக்கொள்ள செய்தாள். சொன்ன பேச்சை கேட்கும் நல்ல பிள்ளை போல் அதை செய்தான் அவன். அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவன் தலையை மெல்ல கோதிவிட்டாள். ஏற்கனவே தூக்க கலக்கத்தில் இருந்த அவனை, உறக்கம் மெல்ல ஆட்கொண்டது.  சத்தம் செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ஆழ்வி.

மறுநாள் காலை

மருத்துவருக்கு ஃபோன் செய்து, அவரிடம் நடந்தது எதையும் மறைக்காமல் கூறினாள் ஆழ்வி. அதை கேட்ட மருத்துவர் திகைப்படைந்தார்.

"உண்மையாவா சொல்றீங்க? நீங்க அப்படியெல்லாம் செஞ்சீங்களா?" என்றார் நம்ப முடியாமல்.

"ஆமாம் சுவாமி"

"பிரமாதம் மா. நீங்க ரொம்ப பெரிய காரியம் செஞ்சிருக்கீங்க. உங்களோட தைரியத்தை நான் பாராட்டியே ஆகணும். நீங்க ஒரு அசாத்திய பெண்மணி!"

"அவர் நான் சொன்னதுக்கு கீழ்படிஞ்சார், சுவாமி"

"அது ஒரு நல்ல அறிகுறி. அப்படின்னா, அவரை மாத்தி கொண்டு வர்றது நமக்கு கஷ்டமா இருக்காது"

"எனக்கும் அப்படித்தான் தோணுது, சுவாமி" என்றாள் நம்பிக்கையுடன்.

"நான் அனுப்பியிருந்த மருந்தையெல்லாம் பாத்திங்களா?"

"பார்த்தேன் சுவாமி"

"அதுல ஒரு பாட்டில் இருக்கு"

"ஆமாம், இருக்கு"

"அது ஒரு மூலிகை தைலம். அவரை உங்களால தூங்க வைக்க முடியுதுன்னா, அதை எடுத்து அவர் உச்சந்தலையில நல்லா சூடு பறக்க தேச்சு விடுங்க. உச்சந்தலையில மட்டும் தான். அதை தொடர்ந்து தேச்சிக்கிட்டு வந்தா, அவர்கிட்ட இன்னும் கூட நல்ல முன்னேற்றம்  தெரியும்"

"அதை நான் எப்போதிலிருந்து செய்யணும்?" என்றாள் ஆர்வமாக.

"எப்ப வேணா செய்ய ஆரம்பிக்கலாம். முடிஞ்சா இன்னிக்கு கூட செய்யுங்க"

"அப்படின்னா நான் இன்னைக்கே அதை செய்ய ஆரம்பிச்சிடுறேன், சுவாமி"

"அது சரி, உங்க குடும்பத்துல இருக்கிற யாரும் அவர்கிட்ட ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கலையா?"

"இல்ல சுவாமி, அவரோட ரூம் கடைசியில இருக்கிறதால, யாரும் அந்த பக்கம் போக மாட்டாங்க. சாப்பாடு கொடுக்க வேலைக்காரர் மட்டும் போய்க்கிட்டு இருந்தாரு. இப்போ அந்த வேலையை நான் ஏத்துக்கிட்டதால, அவர் கூட பெரும்பாலும் அந்த பக்கம் போறது இல்ல. சித்திரவேல் அண்ணனும் ஊர்ல இல்ல"

"அவர் ரூம் பக்கம் யாருமேவா போக மாட்டாங்க?"

"போக மாட்டாங்க சுவாமி"

"அதுவும் நல்லதுக்கு தான். தொடர்ந்து அவருக்கு மருந்தை கொடுத்துகிட்டு வாங்க. ராத்திரியில அந்த எண்ணையை அவர் உச்சந்தலையில தேச்சு விடுங்க"

"சரிங்க சுவாமி. ரொம்ப நன்றி"

"பரவாயில்ல மா" என்று அழைப்பை துண்டித்தார் மருத்துவர். இதமாய் புன்னகைத்தாள் ஆழ்வி.

வெளியே வந்த ஆழ்வி, மெல்ல இனியவன் இருந்த அறையின் பக்கம் எட்டிப் பார்த்தாள். இனியவன்  கிரில் கதவின் அருகில் நின்று, இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள். அவன் அவளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்வதில் அவளுக்கு சிரமம் இருக்கவில்லை. மெல்ல பின்னோக்கி நகர்ந்து, அவன் கண்ணில் படாமல் அங்கிருந்து சென்றாள். இப்பொழுது அவன் எதிரில் அவள் செல்ல கூடாது.

மதியம்

முத்துவிடம் இனியவனுக்கான உணவை கொடுத்து அனுப்பினாள் ஆழ்வி. சென்ற வேகத்திலேயே தட்டுடன் திரும்பி வந்தான் முத்து.

"என்ன ஆச்சி, முத்து? ஏன் திரும்பி வந்துட்டீங்க? அவர் சாப்பிடலயா?"

"இல்ல அண்ணி, அவர் தூங்கிகிட்டு இருக்காரு"

"தூங்குறாரா?"

"ஆமாம். அவர் கேட்டுக்கு பக்கத்துல உக்காந்து, கேட்ல சாஞ்சி தூங்கிட்டு இருக்காரு"

அவளுக்கு இனியவனை எண்ணி பாவமாக இருந்தது. அவளுக்காக காத்திருந்து, அவன் உறங்கியிருக்க வேண்டும்.

"உங்களுக்கு தெரியுமா அண்ணி, அண்ணன் இதுவரைக்கும் இந்த மாதிரி எல்லாம் தூங்குனதே இல்ல. அதனால தான் அவரை எனக்கு டிஸ்டர்ப் பண்ண தோணல. தூங்கி எழுந்த பிறகு சாப்பிடட்டும் அண்ணி" 

அவள் சரி என்று புன்னகையுடன் தலையசைத்தாள். 

இரவுக்காக காத்திருந்தாள் ஆழ்வி. முதல் நாளை போலவே இனியவனின் அறைக்கு வந்தாள். வழக்கம் போல், கட்டிலில் படுத்துக் கொண்டு வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன். கதவை திறக்கும் சத்தம் கேட்டவுடன் கட்டிலை விட்டு குதித்து எழுந்து, அவளை நோக்கி ஓடி வந்து, அவளை பார்த்தபடி அவள் முன்னாள் நின்றான். ஒருவேளை, முதல் நாள் அவள் செய்தது போல் இன்றும் செய்வாள் என்று எதிர்பார்த்தானோ என்னவோ.

அவனை புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள். அவன் கன்னங்களில் முத்தமிட்டு, அவன் தலையை கோதி விட்டாள், முதல் நாள் செய்தது போலவே...! ஏனென்றால் அவளது செயல்களை அவன் மனதில் பதிய வைக்க நினைத்தாள் அவள். அவற்றை அவனால் நினைவு கோர முடிகிறதா என்று பார்க்க எண்ணினாள்.

ஓரக் கண்ணால் கட்டிலை பார்த்தான் இனியவன். அவன் கையைப் பிடித்து, கட்டிலுக்கு அழைத்துச் சென்றாள். அவனை கட்டிலில் படுக்க வைத்து தலையை கோதிவிட, முதல் நாளை போலவே சீக்கிரமே அவன் உறங்கிப் போனான். தான் கொண்டு வந்திருந்த எண்ணெயை எடுத்து, உச்சந்தலையில் சூடு பறக்க தேய்த்து விட்டாள். பின்பு அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள். அந்த மூலிகை எண்ணெய்யின் விளைவால், முதல் நாளை விட நன்றாகவே உறங்கினான் இனியவன்.

மறுநாள் காலை

வரவேற்பறைக்கு வந்தாள் ஆழ்வி.  அங்கு நித்திலாவும், பாட்டியும் தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள்.

"வாங்க ஆழ்வி, டீ சாப்பிடுங்க" என்றாள் நித்திலா.

"அப்புறமா சாப்பிடுறேன். நான் ஒரு விஷயம் தெரிஞ்சுக்க நினைக்கிறேன்" என்றாள்.

"என்ன தெரிஞ்சுக்கணும், சொல்லுங்க ஆழ்வி?"

"இனியாவை பத்தி எனக்கு சொல்லுங்களேன்"

நித்திலாவின் முகம் மலர்ந்தது. பாட்டியும் கிட்டத்தட்ட அவளது நிலையில் தான் இருந்தார்.

"இன்னு ரொம்ப ஃபேமிலி ஓரியண்ட்டட். எல்லாரையும் மனசார நேசிப்பான். குடும்பம்னு வந்துட்டா அவனுக்கு வேற எதுவுமே முக்கியம் கிடையாது. யார் செஞ்ச சின்ன உதவியையும் மறக்கவே மாட்டான். அதுவே பிசினஸ்ன்னு வந்துட்டா அவன் நெருப்பு மாதிரி. அவன் ஒரு விஷயத்துல இறங்குறான்னு தெரிஞ்சா, அவனுடைய எதிரிங்க எல்லாம் நடுங்குவாங்க. அவன் ஒரு விஷயத்தை முடிக்கணும்னு நினைச்சா, எப்படியும் அதை முடிச்சே தீருவான்"

இதமாய் புன்னகைத்தாள் ஆழ்வி. அவள் கேட்டது இதைப் பற்றி அல்ல. இனியவனின் தற்போதய மனநிலையை பற்றி தான் அவள் தெரிந்து கொள்ள எண்ணினாள்.

"ஏன் சிரிக்கிறீங்க ஆழ்வி?" என்றாள் நித்திலா குழப்பத்துடன்.

"நான் அவரோட இப்போதைய மனநிலையைப் பத்தி கேட்டேன்"

"ஓ... நீங்க பொதுவா கேட்டதால..."

"பரவாயில்ல, அவரைப் பத்தி கேட்க நல்லா இருக்கு"

அவளது புதிய அணுகுமுறை அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

"நீங்க இன்னுவோட ப்ரெசென்ட் கண்டிஷனை பத்தி தெரிஞ்சிக்க நினைக்கிறீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"அவன் பேசவே மாட்டேங்கிறான். ஆனா ஏதாவது உளறிக்கிட்டும், விசித்திரமா சத்தம் போட்டுக்கிட்டும் இருக்கான். அவன் சுத்தமா தூங்குறது இல்ல. அவனாவே சாப்பிடுறான். அனா, கீழேயும் மேலேயும் சிந்துவான்..."

"என்ன சொல்றீங்க? அவர் தூங்குறது இல்லையா?" என்றாள், அதைப் பற்றி அவளுக்கு தெரியாததை போல.

இனியவனின் அறை அந்த வீட்டின் கடைக்கோடியில் இருந்ததால், யாரும் தொடர்ச்சியாய் அவன் மீது கவனத்தை வைத்திருப்பதில்லை. அதனால் தான் அவனிடம் ஏற்பட்ட சீரான மாற்றத்தை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அது ஆழ்விக்கு தெரிந்தே இருந்தது. அவளுக்கு மேலும் ஒரு விஷயம் கூட தெரியும். இதற்கு பிறகு  இனியவனின் முன்னேற்றம் வெகு வேகமாய் இருக்கப் போகிறது. அவர்களுக்கு அது குறித்து எந்த சந்தேகமும் வரக்கூடாது. அப்படி நடக்காமல் இருக்க ஒரு உபயத்தை அவள் கையாள நினைத்தாள். அதனால் தான் அங்கு வந்து அமர்ந்திருக்கிறாள்.

"ஆமாம், இன்னு தூங்கவே மாட்டேங்கிறான். ஏன்னு தான் தெரியல"

அப்பொழுது, சித்திரவேல் ஒரு பையுடன் வருவதை அவள் கண்டாள். அவன் ஒரு வழக்கு விஷயமாக மதுரை வரை சென்றிருந்தான்.

"எப்படி இருக்கீங்க, சித்ரா?" என்றாள் நித்திலா.

"உன்னை பாக்காம நான் எப்படி நல்லா இருப்பேன்?" என்றான் அவன், வாழைப்பழம் போல.

தன் முகத்தை தாழ்த்திக் கொண்டாள் ஆழ்வி, அவள் முக மாற்றத்தை அவர்கள் பார்க்க வேண்டாம் என்பதற்காக.

"என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றான் சித்திரவேல், அவர்களுடன் அமர்ந்தபடி.

"இன்னுவோட மனநிலையை பத்தி  தெரிஞ்சுக்கணும்னு ஆழ்வி கேட்டாங்க"

பெருமூச்சுவிட்ட சித்திரவேல்,

"என்ன சொல்றது ஆழ்வி, அவர் பொம்பளைங்கள பார்த்தாலே தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துடுகிறார். அதனால தான் அன்னைக்கு உங்ககிட்ட காட்டுத்தனமா நடந்துக்கிட்டாரு"

அவளுக்கு தெரியாததை அவன் கூறுவது போல் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆழ்வி.

"உங்ககிட்ட சொல்றதுல என்ன இருக்கு ஆழ்வி, நான் அவருக்காக ஒரு பொம்பளையை கூட்டிகிட்டு வரலாம்னு கூட நினைச்சேன்"

ஆழ்வி தன் முகத்தை சுருக்க, நித்திலாவும் பாட்டியும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

"எதுக்காக?" என்றாள் ஆழ்வி.

"அவரை அமைதி படுத்தத் தான்"

ஆழ்வி அதிர்ச்சியோடு தன் விழி விரித்தாள். 

"அவரை வேற எப்படி சாந்தப்படுத்துறதுன்னு எனக்கு தெரியல. அதனால அப்படி செய்ய நினச்சேன். ஆனா, இவங்க யாரும் அதுக்கு ஒத்துக்கல"

நித்திலாவும் பாட்டியும் சங்கடத்திற்கு ஆளானதை உணர்ந்தாள் ஆழ்வி. அவள் மனதில் ஒரு பொறி தட்டியது.

"அந்த விதத்துல அவரை சாந்தபடுத்திட முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?"

"ஆமாம், அதனால தான் நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நான் நினைச்சேன். ஏன்னா, அவரோட முரட்டுத்தனத்துக்கு முன்னாடி உங்களால் ஈடு கொடுக்க முடியாது" என்றான் அவளுக்காக உண்மையாய் வருத்தப்படுபவனை போல.

அப்போது, இனியவன்,

"ஓஓய்ய்ய்...." என்று கத்துவதை அவர்கள் கேட்டார்கள்.

ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.

"இனியவனுக்கு என்ன ஆச்சு? ஏன் அவர் இப்படி கத்துறாரு?" என்றான் சித்திரவேல்.

"எனக்கும் ஒன்னும் புரியலங்க" என்றாள் நித்திலா.

ஆழ்வி திகைத்து நின்றாள். முதல் நாள் நிகழ்ந்தவற்றை நினைவில் நிறுத்தி, அவன் அவளை அழைக்கிறானோ?  அவளது மூளை பரபரவென வேலை செய்தது.

"அவர் இப்படித்தான் திடீர் திடிர்னு கத்துவாரா?" என்றாள் லேசான பயத்தை முகத்தில் காட்டியவாறு.

"அவர் ரொம்ப விசித்திரமான சத்தம் போட்டு கத்தத்தான் செய்வார்" என்றான் சித்திரவேல்.

"அவருக்கு என்ன ஆச்சுன்னு நான் போய் பாக்குறேன்" என்று அவன் அறையை நோக்கி நடந்தாள். 

அனைவரும் அவளை பின்தொடர்ந்தார்கள். ஆழ்வியை பார்த்தவுடன் இனியவனின் முகம் பிரகாசம் அடைந்தது. தன் கைகளை கதவின் வழியாக வெளியே விட்டு, தன்னிடம் வருமாறு அவளிடம் சைகை காட்டினான்.

"அய்யய்யோ, அவர் என்ன செய்றாரு?" என்று பயப்படுவது போல் பாசாங்கு செய்தாள் ஆழ்வி.

"அவன் உங்களை கூப்பிடுறான் ஆழ்வி" என்றாள் நித்திலா. 

"என்னது? அப்படின்னா நான் அவர் ரூமுக்கு போகணும்னு சொல்றீங்களா?" என்றாள் போலியான பயத்தோடு.

சித்திரவேல் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவள் மனதில் பயத்தை விதைக்க முயன்றான்.

"ஆழ்வி, அவரோட ரூமுக்குள்ள போறது ரொம்ப ஆபத்தான விஷயம். ஆனாலும் நீங்க அவரோட வைஃப் அப்படிங்கறதால, அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்!" என்றான் கபட எண்ணத்தோடு.

சித்திரவேலை பொறுத்த வரை, ஆழ்வி அவனது அறைக்குள் நுழைந்தாள், இனியவன் அவளிடம் காட்டுதனமாய் நடந்து கொள்வான். அதனால், அவன் அறைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையே ஆழ்வி அடியோடு கைவிட்டு விடுவாள்.

"ஓய்..." என்று மறுபடியும் கத்தினான் இனியவன்.

"இப்படித்தான் அவரு காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்குவார்" என்றான் சித்திரவேல்.

"ஆழ்வி, நீங்க அவன்கிட்ட போக வேண்டாம். தயவு செஞ்சி இந்த இடத்தை விட்டு போயிடுங்க" என்று அவளை அங்கிருந்து இழுத்தாள் நித்திலா.

ஆழ்வி அங்கிருந்து ஒரு அடி எடுத்து வைக்க, இனியவன் மேலும் சத்தமாய் உருமினான்.

ஆழ்வி தன் கையை உதறிவிட்டு,

"நான் போய் தான் பாக்குறேனே" என்று அவன் அறையை நோக்கிச் சென்று, தன் விரலை அந்த சென்சாரில் பதிய வைத்து, கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அடுத்த நொடி, அந்த அறையின் கதவு பூட்டிக் கொண்டது. அனைவரும் தாள முடியாத அதிர்ச்சியோடு நின்றார்கள்.

இந்த முறை, அவளது அணைப்புக்காக காத்திருக்காத இனியவன், அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான், அவள் அங்கிருந்து செல்லக்கூடாது என்று.

"ஆழ்வி, தயவுசெஞ்சி வெளியில வந்துடுங்க" என்று நித்திலா கதறினாள்.

"அவர் என்னை ரொம்ப இறுக்கமா பிடிச்சிருக்காரு" என்றாள் ஆழ்வி.

"எப்படியாவது முயற்சி பண்ணி வெளியில வந்துடுங்க. அவனை பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு" என்றாள் நித்திலா.

அவன் பிடியிலிருந்து வெளியே வருவது போல் பாசாங்கு செய்தாள் ஆழ்வி. அது மேலும் அவனை தன் பிடியை இறுக்கிகொள்ளச் செய்தது.

"என்னால முடியல. தயவுசெஞ்சி எல்லாரும் இங்கிருந்து போயிடுங்க. ப்ளீஸ், தயவு செஞ்சி அவர் எதுவும் செய்யறதுக்கு முன்னாடி இங்கிருந்து போயிடுங்களேன்..." கெஞ்சினாள் ஆழ்வி

நித்திலாவின் கண்கள் குளமாயின. பாட்டி நடுங்கும் கைகளுடன் தன் கண்ணீரை துடைத்தார். சித்திரவேலின் கையை பிடித்து  அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் நித்திலா. பதற்றமே வடிவாய் அவர்களை பின் தொடர்ந்தார் பாட்டி. சித்திரவேல் கள்ள புன்னகையுடன் அவர்களோடு சென்றான்.

அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, நிம்மதி பெருமூச்சு விட்ட ஆழ்வி,  இனியவனை அணைத்துக் கொண்டாள்.

தொடரும்...












Bạn đang đọc truyện trên: AzTruyen.Top