13 திருமணம்
13 திருமணம்
கற்பகம் கையெழுத்திட்ட பத்திரங்களை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மீண்டும் ஒரு பத்திரத்தை அவரிடம் வழங்கினாள் ஆழ்வி.
"இது என்ன?" என்றார் கற்பகம்.
"நம்ம இதைப் பத்தி ஏற்கனவே பேசிட்டோம்"
அவள் கையிலிருந்து அதை பிடிங்கி கையெழுத்திட்டார் கற்பகம். நித்திலாவின் முன் அதைப் பற்றி பேச அவர் விரும்பவில்லை. ஆழ்வியின் மீது கோப பார்வையை வீசிவிட்டு, அதில் சொல்லின்செல்வனும் கையொப்பமிட்டான். அவர்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டாள் ஆழ்வி.
அவளது முக பாவத்தை படித்தவாறு அதை அவள் கையில் இருந்து மெல்ல இழுத்தாள் பார்கவி. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதை அவளிடம் கொடுத்தாள் ஆழ்வி. அதை படித்த நித்திலாவும் பார்கவியும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த பத்திரத்தின் படி,
கற்பகமும், சொல்லின்செல்வனும் எந்த விதத்திலும் ஆழ்வியுடன் தொடர்புடையவர்களாய் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய உறவை ஆழ்வி முறித்துக் கொள்வதாய் அதில் எழுதி இருந்தது.
அந்தப் பத்திரத்தின் மூலம், ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாய் புரிந்து கொண்டாள் நித்திலா. இந்த திருமணம் ஆழ்வியின் விருப்பமின்றி நடக்கிறது. அவளை கட்டாயப்படுத்தி தான் இந்த திருமணத்தை அவள் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அப்படி என்றால் பார்கவி கூறியது உண்மை தான். அவர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் போல் தெரிகிறது. நித்திலாவை பதற்றம் ஆட்கொண்டது. ஆழ்வி முழு மனதோடு இனியவனை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது அம்மாவிற்காகவும் அண்ணனுக்காகவும் தான் அவள் ஒப்புக் கொண்டிருக்கிறாள்.
நித்திலாவிடம் இருந்து அந்த பத்திரத்தை பெற்றுக் கொண்டாள் ஆழ்வி. தனது உண்மை நிலை நித்திலாவுக்கு தெரிய வேண்டும் என்று அவள் விரும்பினாள். அதோடு மட்டுமல்லாது, அவளது இந்த நிலைக்கு முழுக்க முழுக்க நித்திலா தான் காரணம் என்பதும் நித்திலாவுக்கு தெரிய வேண்டும். அவள் மட்டும் பணத்தை கற்பகத்தின் முன் வைக்காமல் இருந்திருந்தால், இந்த திருமணம் நிச்சயம் நடைபெறாது. எக்காரணத்தைக் கொண்டும், ஆழ்வி மறுபடியும் தன் அம்மா வீட்டிற்கு செல்ல மாட்டாள் என்பதை நித்திலா உணர வேண்டும். ஆழ்வியின் வாழ்வில் தன்னுடைய பாத்திரம் எப்படிப்பட்டது என்பது அவளுக்கு புரிந்தே இருந்தது.
"நாளைக்கு காலையில நாங்க பூ முடிக்க வறோம்" என்றாள் நித்திலா.
"வாங்க" என்றார் கற்பகம்.
"வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் முடிச்சிடுங்க. கல்யாணத்துக்கும் ஆழ்விக்கும் தேவையான எல்லாத்தையும் நானே அனுப்பி வச்சிடுறேன்"
"சரி மா"
"நாங்க கிளம்பறோம்"
"பை, ஆழ்வி" என்றாள் பார்கவி.
ஆழ்வி தலையசைக்கவும், அவர்கள் புறப்பட்டு சென்றார்கள். ஆழ்வி தன் அறைக்கு செல்ல நினைத்தபோது,
"எங்க உதவி இல்லாம உன்னால வாழ்ந்துட முடியும்னு நீ நினைக்கிறியா?" என்றார் கற்பகம்.
"எனக்கு உங்க உதவி தேவையில்ல"
"தமிழரசி என்ன சொன்னான்னு நீ மறந்துட்டியா? இனியவனுக்கு நினைவு திரும்பிட்டா, அவன் உன்னை மறந்துடுவான். அவன் ஒரு கோடீஸ்வரன். உன்னை நிச்சயம் தன் மனைவியா அவன் ஏத்துக்க மாட்டான். நம்ம இழப்புக்காக நித்திலாவும் ஏற்கனவே நமக்கு பணம் கொடுத்துட்டா. அதனால அவளும் உன்னை சப்போர்ட் பண்ண மாட்டா. எப்படி இருந்தாலும், நீ இங்க தான் திரும்பி வந்தாகணும். அதை மறக்காத"
"ரொம்ப சந்தோஷம்... நீங்க என்ன செய்றீங்கன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கு... ஆனாலும் நீங்க இத செய்றீங்க... பணத்துக்காக...! செய்யுங்க. கடவுள் உங்களை காப்பாத்தட்டும்."
தனது அறைக்குச் சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள்.
பணப்பையை திறந்த சொல்லின்செல்வனின் கண்கள் மின்னியது. அதிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்துக் கொண்டான்.
"அது எவ்வளவுன்னு உனக்கு தெரியுமா? இரண்டு லட்சம் டா..."
"அதனால என்ன? நம்ம பெரிய கோடீஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தக்காரங்களாக போறோம். என் பைக்கை பாரு. நான் எப்படி அவங்க வீட்டுக்கு இதுல வர முடியும்? நமக்குன்னு ஒரு கௌரவம் இல்லையா?"
"அதுக்கு...?"
"நான் ஒரு புது பைக் வாங்க போறேன்"
"இரண்டு லட்சத்துக்கு பைக்கா?"
"அதுக்காக மட்டும் இல்ல. நான் என் ஃபிரண்டுங்க கிட்ட கொஞ்சம் கடன் வாங்கி இருக்கேன். அதையும் திருப்பிக் கொடுக்கணும்..."
"ஆனா அதுக்காக..."
"அம்மா, என்னை அல்பத்தனமான கேள்வி எல்லாம் கேட்காத... ஒரு லட்சாதிபதி மாதிரி நடந்துக்கோ..."
அந்த வாக்கியம், அவர் முகத்தில் புன்னகையை மலரச் செய்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து சென்றான் சொல்லின்செல்வன். பெருமூச்சு விட்டார் கற்பகம். நல்லவேளை, மொத்த தொகை எவ்வளவு என்பது அவனுக்கு தெரியாது. இல்லாவிட்டால் அவனை கையிலேயே பிடிக்க முடியாது. தலை வாசலை தாழிட்டு விட்டு, ஆழ்வியின் அறைக்குச் சென்று கதவை தட்டினார். அவர் எதுவும் கேட்கும் முன், பணப்பையை எடுத்து தன் அறைக்கு வெளியே வைத்து, மீண்டும் கதவை தாழிட்டுக் கொண்டாள் ஆழ்வி. அந்த பையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார் கற்பகம்.
மறுநாள்
ஆழ்விக்கு பூ முடிக்க, அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் இனியவன் குடும்பத்தினர். கற்பகமும் சொல்லின்செல்வனும் அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். வரவேற்பறைக்கு வந்த ஆழ்வி, தன் கைகளை குவித்து அவர்களை வரவேற்றாள்.
"இங்க வந்து உட்காருமா" என்றார் பாட்டி.
அவர் அருகில் சென்று அமர்ந்தாள் அவள். அவளுக்கு பூ முடித்துவிட்டு, ஏராளமான பட்டுப் புடவைகளையும் நகைகளையும் அவளுக்கு பரிசாய் வழங்கினார்கள் இனியவன் குடும்பத்தினர். நெருக்கமாய் கட்டிய மல்லிகை சரத்தை அவள் தலையில் சூட்டி அவள் நெற்றியில் குங்குமம் இட்டாள் நித்திலா.
"உங்களுக்கு இனியவனுடைய நிலைமை என்னன்னு நல்லாவே தெரியும். அவருக்கு இந்த சமுதாயத்தில் ரொம்ப பெரிய மரியாதை இருக்கு. அதனால நாங்க யாருக்கும் அவரைப் பத்தி தெரிய வேண்டாம்னு நினைக்கிறோம். அதனால, இந்த கல்யாணத்தை நமக்குள்ளேயே நடத்திக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்." என்றான் சித்திரவேல்.
"கவலைப்படாதீங்க. நாங்களும் எங்க சொந்தக்காரங்க யாரையும் கூப்பிட போறது இல்ல. என்னோட ஒரே ஒரு ஃபிரண்டு மட்டும் வருவா" என்றார் கற்பகம்.
இனியவன் குடும்பத்தினர் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்கள்.
திருமண வேலைகள் முழு வீச்சில் தொடங்கியது. குலதெய்வ கோவிலுக்கு செல்வதை தவிர்க்க முடியவில்லை ஆழ்வியால். பூஜை முழுக்க அவள் அமைதியாய் நின்றிருந்தாள். ஆனால் அதற்காக அவள் குலதெய்வத்திடம் பேசி தீர்க்கவில்லை என்று அர்த்தம் அல்ல.
"என்னை நீங்க எப்பவும் கைவிடமாட்டீங்கன்னு நான் நம்பி இருந்தேன். என்னோட கஷ்ட காலத்துலயும் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுவீங்கன்னு நெனச்சேன். ஆனா, இப்போ என் வாழ்க்கையில நடக்கிறதை எல்லாம் பார்த்தா, நான் நினைச்சது தப்புன்னு தோணுது. யாராலும் நினைச்சு பார்க்க முடியாத ஒரு மோசமான காலகட்டத்தில் நான் இருக்கேன். எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது?"
வெறுப்புடன் கோவிலை சுற்றத் துவங்கினாள். அப்போது யாரோ யாரிடமோ கூறுவது அவள் காதில் விழுந்தது.
"எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு நினைக்காத. நடக்கிற எல்லாத்துக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்"
அந்த கோவிலை சேர்ந்த வேறொரு அர்ச்சகர், ஒரு பெண்மணிக்கு தைரியம் அளித்து கொண்டிருந்தார்.
"நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்கைக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கு. எது எப்படி இருந்தாலும், நம்ம இந்த பூமிக்கு எதுக்கு வந்தோமோ அது நடந்தே தீரும். ஆரம்பத்துல உனக்கு காரணம் புரியாமல் இருக்கலாம். ஆனா, ஒரு நாள் நிச்சயம் நீயே புரிஞ்சுக்குவ. நல்லதை அடைய கெட்டதை கடந்து தான் ஆகணும். உனக்குன்னு நிர்ணயிக்கப்பட்டது உன்னை வந்து அடஞ்சே தீரும். ஒரு விஷயத்தை எப்பவும் மறக்காத. தன்னோட மிகச்சிறந்த மாணவனுக்கு தான், ஆசிரியர் மிகவும் கஷ்டமான வேலையை கொடுப்பார். ஏன்னா, அவனால தான் அதை செய்ய முடியும்னு அவருக்கு தெரியும். அப்படித்தான் ஆண்டவனும்... அவருடைய சக்தியை சந்தேகப்படாத. எதார்த்தத்தை ஏத்துக்கோ. நீ யாருன்னு கடவுள் உனக்கே புரிய வைப்பார்"
அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பது போல் பேசிக் கொண்டிருந்த அவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆழ்வி. கடவுள் அவளுக்கு கொடுக்க நினைக்கும் பதில் இது தானா? அவள் இந்த பூமிக்கு வந்ததற்கான காரணம் இது தானா? இனியவனை மணந்து கொள்ளத்தான் அவள் பிறப்பெடுத்தாளா? ஆனால் மனநிலை சரியில்லாதவனை மணந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன? தன் சுயநினைவிலேயே இல்லாத ஒருவனை மணந்து கொண்டு அவள் என்ன செய்யப் போகிறாள்? ஒன்றும் புரியாததால் அவளுக்கு சலிப்பாய் இருந்தது.
"போகலாமா?" என்றார் கற்பகம்.
அர்ச்சகர் கூறியதை நினைத்தபடி அவருடன் நடந்தாள் ஆழ்வி
மறுநாள், அவள் கையில் மருதாணி வரைந்து விட, ஒரு அழகு கலை நிபுணரை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் நித்திலா. ஆழ்வி அதை மறுக்கவில்லை. அவள் கையில் மருதாணி வரைய துவங்கிய அந்த பெண், நிறுத்திவிட்டு,
"மாப்பிள்ளை பெயரை உங்க கையில எழுதட்டுமா?" என்றாள்.
அவள் குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்தாள் ஆழ்வி. அவளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நித்திலா அந்த பெண்ணிடம் கூறி இருக்க வேண்டும். சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி. அவளது யூகம் சரி தான் என்று எண்ணும்படி, சிறிது நேரத்திற்கு பிறகு நித்திலா அவளுக்கு ஃபோன் செய்து,
"ரொம்ப தேங்க்ஸ் ஆழ்வி" என்றாள்.
"எதுக்கு தேங்க்ஸ்?"
"இனியவனோட பெயரை உங்கள் கையில் எழுதிக்கிட்டதுக்கு"
அதற்கு ஆழ்வி ஒன்றும் கூறவில்லை. அது நித்திலாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது. *இது என் கடமை* என்று அவள் கூறுவாள் என எதிர்பார்த்து இருந்தாள் நித்திலா. உண்மையை கூற வேண்டும் என்றால், தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று ஆழ்விக்கே புரியவில்லை. விஷயத்தின் ஆழத்தை உணராமல், யாருக்கும் எந்த நம்பிக்கையும் அளிக்க அவள் தயாராக இல்லை. முதலில், அவள் தெளிவாக வேண்டும் என்று விரும்பினாள். பிறகு தானே மற்றவரின் மனதை அவள் தெளிவடைய செய்ய முடியும்?
மறுநாள் நலங்கு வைத்து முடிந்தானது. இனியவனுக்கும் தான். வழக்கம்போல் அரை மயக்க நிலைக்கு ஆளாக்கப்பட்டு அவனுக்கு நலங்கு வைத்தார்கள்.
இரு வீட்டாரும் திருமணத்திற்கு தயார். இனியவன் குடும்பத்தினர் தனக்கு வழங்கிய உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டாள் ஆழ்வி. தன் வீட்டிலிருந்து அவள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.
இன்பவனம்
ஆழ்வியின் குடும்பத்தினரை வரவேற்றார்கள் இனியவனின் குடும்பத்தினர். பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்ட அவர்களது வீட்டை பார்த்து அதிசயித்தாள் ஆழ்வி. இனியவன் மனநிலை சரியில்லாதவன் என்பதால், அவர்கள் எதையும் குறைத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவம் அவளுக்கு பிடித்திருந்தது.
"பார்கவி, ஆழ்வியை உன் ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ" என்றாள் நித்திலா.
"வா ஆழ்வி" அவளை தன்னுடன் அழைத்துச் சென்றாள் பார்கவி.
புதிய பட்டுப் புடவையுடன் அவள் அறைக்கு வந்த நித்திலா, அதை அவளிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தாள்.
"நீ ஏதாவது சாப்பிடுறியா? காபி கொண்டு வரட்டுமா?" என்றாள் பார்கவி.
"எனக்கு ஒன்னும் வேண்டாம்"
ஆழ்வின் தன்னிடம் பழையபடி பேசாததை நினைத்து பார்க்கவிக்கு வருத்தமாய் இருந்தது. அவள் தன்னிடம் பழையபடி பேசுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை.
புரோகிதர் மந்திரங்களை ஓதத் துவங்கினார். சிறிய அளவில் போடப்பட்டிருந்த மேடையின் அருகே நின்றிருந்தார்கள் கற்பகமும் சொல்லின்செல்வனும். மணமகனை அழைத்து வரச் சொல்லி கூறினார் புரோகிதர். அரை மயக்க நிலையில் இருந்த இனியவன் அழைத்து வரப்பட்டான். எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவான் போல் இருந்த அவனது கண்கள் பாதி மூடியபடியே இருந்தது.
"கல்யாணம் பெண்ணை கூட்டிகிட்டு வாங்க" என்றார் புரோகிதர்.
பார்கவி ஆழ்வியை அழைத்து வந்தாள். மேடைக்கு சென்ற ஆழ்வி, தமிழரசி உள்ளே நுழைவதை பார்த்தவுடன், ஓடி சென்று அவர் பாதம் தொட்டு ஆசி பெற்றாள்.
"என்கிட்ட காலையிலேயே அவ ஆசிர்வாதம் வாங்கிட்டா" என்றார் கற்பகம் சங்கடத்துடன்.
அவர் பொய் கூறுகிறார் என்று நித்திலாவுக்கு புரிந்தது. இருந்தாலும் சிரித்து வைத்தாள். தமிழரசியை பார்த்த சித்திரவேலின் முகம் மாறியது. அவனைப் பார்த்த தமிழரசியும் வியப்படைந்தார்.
"சார், நீங்க இங்கேயா?"
"இது என் மாமியார் வீடு. மாப்பிள்ளை என்னோட மச்சினன் தான்"
"நான் ஆழ்வியோட ஃபேமிலி ஃப்ரெண்ட்"
"ஓ..."
"உங்களை மாதிரி ஒரு ஃபேமஸான அட்வகேட் இருக்கிற வீட்ல இப்படி ஒரு இல்லீகள் வெட்டிங் நடக்கிறதுக்கு எப்படி சார் அனுமதிச்சிங்க?"
"நானும் உங்களை மாதிரி தான் மேடம் இந்த கல்யாணத்துக்கு வந்து நிற்கிறேன்..."
தமிழரசி பெரு மூச்சு விட்டார்.
"நானும் உங்களை மாதிரி சூழ்நிலை கைதி தான்" என்றான் சித்திரவேல்.
மேடையை நோக்கி சென்றாள் ஆழ்வி, மயக்க நிலையில், கிண்டர் கார்டன் பிள்ளை போல் தலையை ஒட்ட வழித்து வாரிவிட்டபடி அமர்ந்திருந்த இனியவனை பார்த்தபடி. *ஏதோ இருக்கிறேன்* என்பது போல் அவன் இடையில் ஒட்டிக் கொண்டிருந்தது அவன் அணிந்திருந்த வேட்டி. அவன் அருகில் சென்று அமர்ந்தாள் ஆழ்வி. நித்திலாவும் பார்கவியும் அவனை இருபுறமும் பிடித்துக் கொண்டு நின்றார்கள்.
திருமாங்கல்யத்தை அவர்களிடம் வழங்கினார் புரோகிதர். அவனை அதைப் பிடித்துக் கொள்ள செய்து, ஆழ்வியின் கழுத்தில் அணிவித்து விட்டாள் நித்திலா. அவன் கையில் குங்குமத்தை கொடுத்து, அதை கொண்டு அவள் வகிட்டையும் நிரப்பினாள். இனியவன் ஏதோ முணுமுணுத்தான். அது என்னவென்று யாருக்கும் புரியவில்லை. அது அவனுக்கே புரிந்ததோ என்னவோ. அசையாத பார்வையோடு அவனை பார்த்துக்கொண்டு உறுதியாய் நின்றாள் ஆழ்வி. இனியவனை அவனது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு வேலை ஆட்களை பணித்தாள் நித்திலா. அவர்கள் அவனை குண்டு கட்டாய் தூக்கிச் சென்றார்கள்.
கற்பகமும் சொல்லின்செல்வனும் அவர்களிடம் இருந்து விடை பெற்றார்கள். உணர்ச்சிவசப்பட்டு ஆழ்வியை அணைத்துக்கொண்ட தமிழரசி,
"தைரியமா இரு. என்ன வேணும்னாலும் எனக்கு ஃபோன் பண்ணு. அடுத்த நிமிஷம் நான் வந்து நிற்பேன்" என்றார்.
"எனக்கு தெரியும்" ஆன்ட்டி
"போயிட்டு வரேன்" அரை மனதாய் கிளம்பிச் சென்றார் தமிழரசி.
ஆழ்வியிடம் வந்த நித்திலா,
"என் கூட வாங்க" என்று அவளை அழைத்துச் சென்றாள்.
தடதடக்கும் இதயத்தோடு அவளை பின்தொடர்ந்தாள் ஆழ்வி. தன்னை இனியவனின் அறைக்கு அழைத்துச் செல்கிறாளோ? அவனுடைய மனைவி என்பதால், அவனுடன் தான் இருக்க வேண்டும் என்று கூறுவாளோ?
ஆனால் அவளுக்கு வியப்பளிக்கும் வகையில், அவளை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றாள் நித்திலா. அந்த அறையின் வாசலில் பிரம்மிப்புடன் நின்றாள் ஆழ்வி. பெரும் பகட்டுடன் அலட்டலாய் இருந்தது அந்த அறை.
"இது தான் இன்னுவோட ரூம். இன்னையிலயிருந்து இது உங்களுடைய ரூமும் கூட"
நித்திலவை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆழ்வி.
"உங்களுக்கு டின்னரை நான் இங்கேயே அனுப்புறேன். சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. நம்ம நாளைக்கு பேசிக்கலாம்" மென்மையாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
கதவை சாத்தி தாழிட்டு விட்டு, அந்த அறையில் அடியெடுத்து வைத்தாள் ஆழ்வி. அவள் உள்ளே நுழைந்த போது, ஏதோ ஒரு புது வித உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது. அந்த அறையின் அமைப்பை வைத்து, இனியவனின் விருப்பம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள அவளுக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. அவன் மிக உயர்வான வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவனது கிங் சைஸ் கட்டிலில் தயக்கத்துடன் அமர்ந்தாள். தனக்கு வலப்பக்கம் திரும்பிய போது, அவளது இதயம் துடிப்பதை சில நொடிகள் நிறுத்தியது, இனியவனின் மிகப்பெரிய புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்ததை பார்த்து. இவனா இனியவன்? சந்தேகமே இல்லை, அவன் இனியவன் தான். எவ்வளவு கம்பீரமான அழகு...! என்ன ஒரு கவர்ச்சியான புன்னகை...! எவ்வளவு நவீனமாய் இருந்திருக்கிறான்...! அசந்து நின்றாள் ஆழ்வி. அவளிடம் ஏதோ உரையாடிய அவனது கண்களை பார்த்தபோது அவளது இதயத்துடிப்பு இருமடங்கானது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top