12 விற்பனை முடிந்தது
12 விற்பனை முடிந்தது
இன்பவனம்
"நான் நாளைக்கு ஆழ்வி வீட்டுக்கு பூ முடிக்க போறேன்" என்றாள் நித்திலா மதிய உணவு சாப்பிட்டபடி.
அனைவரும் அவளை பார்க்க,
"நீங்க எல்லாரும் நம்ம இன்னுவோட நலத்தில் அக்கறை இருக்கிறவங்கன்னு நான் நம்புறேன். அது உண்மையா இருந்தா, நீங்களும் என் கூட வாங்க"
"நீ எங்களைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க, நித்தி? இன்னு குணமாகணும்னு நாங்க யாரும் நினைக்கலையா?" என்றார் பாட்டி.
நித்திலா எதுவும் கூறுவதற்கு முன்,
"எனக்கு இந்த கல்யாணம் ஆழ்வியோட நடக்கிறதுல விருப்பமில்ல" என்றாள் பார்கவி.
"அவங்க ஒத்துக்கிட்டாங்க"
"அவளை கட்டாயப்படுத்தி ஒத்துக்க வச்சிருப்பாங்க"
"அது நம்ம இன்னுவோட அதிர்ஷ்டம்... அப்படித்தான் நான் நம்புறேன்"
"எது உன்னை அப்படி நம்ப வச்சதுன்னு எனக்கு புரியல" என்றான் சித்திரவேல்.
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா, பாட்டி, ஒரு தடவை நம்ம இன்னுவோட ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காட்டினோம்"
தலையசைத்தார் பாட்டி.
"அவனோட ஜாதகப்படி, அவனுக்கு இருபத்தி எட்டு வயசுல கல்யாணம் ஆகும்"
பாட்டி ஆம் என்று தலையசைத்தார்.
"இருபத்தி எட்டு வயசுல அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னா, அவனுக்கு எப்பவுமே கல்யாணம் நடக்காதுன்னு சொன்னார். இந்த மாசத்தோட அவனுக்கு இருபத்தி எட்டு வயசு முடியுது"
ஆம் என்று தலையசைத்த பாட்டி,
"அதுமட்டுமில்ல அவனுடைய கல்யாணம், வழக்கமா நடக்கிற மாதிரி நடக்காதுன்னு சொன்னாரு. அதுக்கான அர்த்தம் எனக்கு அப்ப புரியல" என்றார்.
"நான் அவரைக் கேட்ட போது, அவர் எனக்கு எந்த பதிலும் சொல்லல. இப்ப தான் எனக்கு புரியுது. நம்ம இன்னுவோட மோசமான எதிர்காலத்தை அவர் கணிச்சிருக்கணும். அதுக்காகத்தான் நமக்கு ஒரு ஹின்ட் குடுத்தாரு போலிருக்கு"
"ஜோசியம், ஜாதகம் எல்லாம் வெறும் மாயை" என்றான் சித்திரவேல்.
"இருந்துட்டு போகட்டும்... ஜோசியர் சொன்னபடி இன்னுவோட கல்யாணம் வழக்கமான ஒன்னா இருக்காது. இப்போ அப்படித்தானே நடக்க போகுது? அதை நீங்க இல்லன்னு சொல்ல முடியாதே. அவனோட கல்யாணம் இருபத்தி எட்டு வயசுல நடக்கலன்னா, அவனுக்கு எப்பவுமே கல்யாணம் ஆகாதுன்னு சொன்னாரு. ஒருவேளை அவனுக்கு கல்யாணம் நடக்கலனா, அவன் எப்பவுமே குணமடைய மாட்டான் அப்படிங்கற மறைமுக அர்த்தம் கூட இதுக்கு இருக்கலாம் இல்லையா? அப்படி எப்படி என்னால நடக்க விட முடியும்?"
சித்திரவேலுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை.
"எல்லாமே சரியா கூடி வரும் போது, அதை நடத்த நமக்கு என்ன பிரச்சனை? "
"ஒரு மனநோயாளியை, கல்யாணம் எப்படி குணப்படுத்தும்னு எனக்கு புரியல" பெருமூச்சு விட்டான் சித்திரவேல்.
"ஒரு பொம்பளையை இந்த வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தா, அவனுக்கு பொம்பளைங்க மேல இருக்குற ஈர்ப்பு போயிடும்னு நீங்க எதை வச்சு சொன்னீங்க?"
"முயற்சி பண்ணி பார்க்கலாமேன்னு தான்..."
"அதே மாதிரி தான் இதுவும்..."
"ஆனா ஆழ்விக்கு வாழ்க்கை இருக்கு"
"நான் ஒன்னும் அவங்க வாழ்க்கையை திருடல"
"நீ மறைமுகமா அதைத்தான் செய்ற"
"நீங்க அவங்க வீட்டுக்கு வரீங்களா வரலயான்னு எனக்கு கவலை இல்ல. இந்த கல்யாணம் நிச்சயம் நடக்கும். நாளைக்கு காலையில நான் அங்க போறேன்"
"சரி... ஆனா இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் அவசியமா? இனியவனுக்குத்தான் எதுவுமே தெரியாதே..."
"ஆனா, ஆழ்விக்கு தெரியுமே...! அவங்க சுயநினைவோடு தானே இருக்காங்க? அவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு தெரியும். அது தான் முக்கியம். இந்த கல்யாணத்தோட ஒவ்வொரு கட்டத்துலையும், இன்னு தான் அவங்க புருஷன்னு அவங்க உணரணும். இந்த கல்யாணம் நடக்கப் போற நாள், ரொம்ப அருமையான, விசேஷமான நாள். நூறு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருமாம். நம்ம இன்னு, ஆழ்வியோட சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
"இனியவன் இருக்கிற நிலைமை நமக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது, எப்படி நம்ம அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? அவர் எப்படி அவங்க கழுத்துல தாலி கட்டுவாரு?"
"நம்ம தான் செய்ய வைக்கணும்"
"நம்ம எப்படி செய்ய முடியும்?"
"அவனை எப்படி குளிக்க வைக்கிறீங்க?"
திகைத்து நின்றான் சித்திரவேல்.
"அப்படித்தான் இதையும் செய்யப் போறோம். அவன் அரை மயக்க நிலையில் இருந்தா போதும். அவனை நம்ம தாலி கட்ட வச்சிடலாம்"
அவர்கள் இருவரும் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார் பாட்டி. இந்த திருமணத்தை திறம்பட நடத்தி வைக்க, நித்திலா எல்லாவற்றையும் தீர்க்கமாய் திட்டமிட்டு விட்டது அவருக்கு புரிந்தது.
"நாங்க இந்த கல்யாணத்துல உடன்பாடு இல்லாம தான் இருந்தோம். அதுக்காக, நாங்க இந்த கல்யாணத்துல கலந்துக்க மாட்டோம்னு அர்த்தம் இல்ல. எங்களுக்கும் இன்னு மேல அக்கறை இருக்கு. நீ முதல்ல அதை புரிஞ்சுக்கோ" என்றார் பாட்டி.
நித்திலா அமைதியாய் இருந்தாள்.
"நாளைக்கு காலைல நம்ம ஆழ்வி வீட்டுக்கு போகலாம்" என்றார் பாட்டி.
பார்கவியை பார்த்தபடி தலையசைத்தாள் நித்திலா.
"நானும் வரேன். எப்படி இருந்தாலும் நான் ஆழ்வியை ஃபேஸ் பண்ணி தானே ஆகணும்?" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் பார்கவி.
அவள் சீக்கிரம் சமாதானம் ஆகி விடுவாள் என்று நம்பினாள் நித்திலா.
.........
நித்திலாவுக்காக குழிப்பணியாரமும் பஜ்ஜியும் செய்து வைத்துவிட்டு, குளித்து தயாரானார் கற்பகம். அவரது ஆட்டத்தை அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆழ்வி... அவரது ஆட்டத்தின் நடன இயக்குனர், பணம் ஆயிற்றே...! அவளது வாழ்வில், பணம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகப்பெரியது. இனியவனின் குடும்பத்தினரை சந்திக்கும் வரை அவளுக்கு கூட இவ்வளவு மதிப்பு இருக்கும் என்று அவளுக்கு தெரியாது. அவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு அவளுடைய மதிப்பு ஒரு கோடியாய் மாறிப்போனதே...! ஒரு சாதாரண புத்தகத்தால் அவளது வாழ்க்கை தலைகீழாய் மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த புத்தகம் அவள் வாழ்க்கையின் அத்தியாயம் ஆகிப்போனது. அதை எண்ணி வலி நிறைந்த புன்னகை சிந்தினாள் அவள்.
அவள் வரவேற்பறையில் அமர்ந்திருப்பதை பார்த்த கற்பகம் வியப்படைந்தார். அவள் கற்பகத்துடன் பேசுவதையே நிறுத்திவிட்டு, சதா தன் அறையிலேயே இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
அப்பொழுது, தொலைபேசி மணி அடித்தது. அதை கற்பகம் ஏற்பதற்கு முன், ஆழ்வி எடுத்துப் பேசினாள்.
"ஹலோ..."
"நீ கேட்ட பேப்பர்சை ரெடி பண்ணிட்டேன். நான் இப்ப உன் வீட்டுக்கு வரேன்"
"வாங்க ஆன்ட்டி. நான் வீட்ல தான் இருக்கேன்" அழைப்பை துண்டித்தாள்.
அவள் ஏன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள் என்ற காரணம், இப்பொழுது கற்பகத்திற்கு புரிந்தது. சில நிமிடத்திற்கு பிறகு அங்கு வந்தார் தமிழரசி. தான் கொண்டு வந்த பத்திரங்களை அவளிடம் கொடுத்தார். அவற்றை படித்துப் பார்த்தாள் ஆழ்வி. படித்து முடித்து, தமிழரசியை பார்த்து தன் தலையசைத்தாள்.
"நான் கிளம்புறேன்" என்றார் தமிழரசி.
"ஏதாவது சாப்பிடுங்க ஆன்ட்டி"
"எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கற்பகத்தை பார்த்து கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார் அவர்.
அந்த பத்திரங்களுடன் தன் அறைக்குச் சென்றாள் ஆழ்வி.
சில நிமிடத்திற்கு பிறகு தன் அறை oகதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் ஆழ்வி. அங்கு பார்கவி நின்றிருந்தாள். அவள் எதிர்பார்க்காத வண்ணம் அறைக்குள் வந்து கதவை சாத்தி தாழிட்டாள்.
"ஆழ்வி..."
"மன்னிப்பு கேட்கிறதை நிறுத்து. இதுல மன்னிப்பு கேட்க எதுவும் இல்ல"
"என்னால தானே உன்னோட வாழ்க்கை இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளாச்சு..."
"உன்னாலயா? எப்படி?"
"நான் அந்த புக்கை மறந்திருக்கக் கூடாது. உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிருக்கக் கூடாது..."
"நீ அப்படி செய்யாம போயிருந்தா, வேற ஒரு விதத்துல அது நிச்சயம் நடந்திருக்கும். ஏன்னா, இது தான் என்னோட விதி. அதை உன்னால மாத்த முடியாது"
"நீ மனசு உடைஞ்சு போய் இருக்கேன்னு எனக்கு தெரியும்"
"அதுக்கு நீ காரணம் இல்ல"
"ஆனா..."
"இங்க பாரு கவி, நான் ஏற்கனவே ரொம்ப சோர்ந்து போய் இருக்கேன். உறுதியா இருக்க முயற்சி பண்றேன். என்கிட்ட இப்படி கெஞ்சி, என்னை இன்னும் டையார்ட் ஆக்காத"
அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் பார்கவி.
"சத்தியமா சொல்றேன், நான் எப்பவும் உனக்கு பக்கத்துணையா இருப்பேன். உனக்கு எதிரா யார் இருந்தாலும் சரி, உன்னை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்"
ஆழ்வி புன்னகை புரிந்தாள். இந்த சகோதரிகள் இருவரும் ஒன்று போல் இருக்கிறார்கள்... அவர்களது சகோதரனை நேசிக்கிறார்கள்... மற்றவர்களை மதிக்கிறார்கள்... அவர்களது குடும்பத்தின் நலனை நாடுகிறார்கள்... அதேநேரம், அவர்களுக்கு குற்ற உணர்ச்சியும் இருக்கிறது. மொத்தத்தில் இவர்கள் நல்லவர்கள்!
"என்னை நம்பு, ஆழ்வி..."
"நான் உன்னை நம்புறேன்"
அவளது கன்னத்தை மென்மையாய் தொட்ட பார்கவி,
"என் அண்ணன் சீக்கிரமா குணமாயிடணும்" என்றாள் தொண்டையை அடைக்க.
மென்று விழுங்கினாள் ஆழ்வி. இனியவனை பற்றி தமிழரசி கூறியது அவள் நினைவுக்கு வந்தது. அவன் குணமடைந்து விட்டால் அவனுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது. அவன் அவளை மறந்து விடுவான். திருமணம் என்பது இரு மனம் ஒத்து நடைபெற வேண்டிய ஒன்று. அப்பொழுது தான் அதை சட்டம் ஏற்க்கும்.
தான் செய்த, பஜ்ஜி, குழிப்பணியாரங்களுடன் அவளது அறைக்கு வந்தார் கற்பகம். அவரைப் பார்த்து சம்பிரதாயமாய் புன்னகைத்தாள் பார்கவி.
"நான் இதையெல்லாம் செஞ்சிருக்கிறப்போ நீ இங்க வந்திருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். இதை எல்லாம் சாப்பிட்டு பாரு"
"தேங்க்ஸ் ஆன்ட்டி" என்று அவரிடமிருந்து அந்த தட்டை பெற்றுக் கொண்டாள்.
"சாப்பிடு, இன்னும் வேணும்னா கேளு"
"ம்ம்ம்"
அப்பொழுது அவர்கள் அழைப்பு மணியின் ஓசையை கேட்டார்கள்.
"உங்க அக்கா வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்று சந்தோஷமாய் ஓடினார் கற்பகம்.
அவர் நினைத்தது சரி தான். இரண்டு பைகளுடன் நின்றிருந்தாள் நித்திலா.
"வாம்மா, உள்ள வா..."
உள்ளே வந்த நித்திலா, அங்கு பார்கவி இருந்ததை பார்த்து ஒரு நொடி திகைத்து, பின் ஆழ்வியை பார்த்து புன்னகைத்தாள்.
"இதுல நீங்க கேட்ட பணம் இருக்கு" என்று தன் கையில் இருந்த பைகளை கீழே வைத்தாள் நித்திலா.
அந்த பைகளை திறந்து பார்த்தார் கற்பகம். அதில் ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவர் அதை தொட முயன்ற போது,
"ஒரு நிமிஷம்" என்றாள் ஆழ்வி.
அனைவரும் அவளை பார்த்தார்கள்.
"அந்த பணத்தை தொடரத்துக்கு முன்னாடி, நீங்களும் உங்க பையனும் இந்த பத்திரத்தில் கையெழுத்து போடுங்க"
"என்ன பத்திரம் அது?" என்றாள் நித்திலா.
பார்கவியும் குழப்பத்தோடு பார்த்தாள்.
"நம்ம அப்புறம் பேசிக்கலாம்" என்றார் கற்பகம்.
"இல்ல, இப்பவே கையெழுத்து போடுங்க"
"ஆனா, செல்வா வீட்ல இல்லையே"
"ஃபோன் பண்ணி வர சொல்லுங்க"
அமைதியாய் நின்றாள் நித்திலா. அவளுக்கு இதைப் பற்றி கேட்பதா வேண்டாமா என்று புரியவில்லை. ஏனென்றால் கையெழுத்து கேட்பது ஆழ்வி ஆயிற்றே...!
"அவன் பணத்தை ஊதாரி தனமா செலவு செஞ்சிடுவான்" என்றார் கற்பகம்.
"அதுக்கு?"
"உனக்கு தெரியாதா அவன் எப்படிப்பட்ட குடிகாரன்னு?"
"அதுக்கு?"
"எல்லா பணத்தையும் அவன் செலவு பண்ணிடுவான்"
"அதுக்கு?"
தன் பல்லை கடித்தார் கற்பகம். அவரால் இனியவனின் சகோதரிகளுக்கு முன்னால் ஒன்றும் பேச முடியவில்லை.
"இவ்வளவு பணம் வேணும்னு கேட்ட போதே அதை எப்படி பாதுகாக்கிறதுன்னு நீங்க யோசிச்சி இருக்கணும். உங்க மூளையை யூஸ் பண்ணி அதை பாதுகாத்துக்கோங்க"
"சரி, அந்த பேப்பரை என்கிட்ட கொடு" என்று அதை அவள் கையில் இருந்து பிடுங்கி படித்தார் கற்பகம்.
*கற்பகமாகிய நானும், என் மகன் சொல்லின்செல்வனும், இனியவனின் குடும்பத்திடமிருந்து பெறும், முதல் மற்றும் கடைசி தொகை இது தான். இதற்கு பிறகு பணத்திற்காகவோ வேறு எந்த உதவிக்காகவோ, நாங்கள் அவர்கள் குடும்பத்தை தொல்லை செய்ய மாட்டோம். ஒருவேளை நாங்கள் அப்படி கேட்டால், அவர்கள் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். இதன் பிறகு எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை*
ஆழ்வியை பார்த்து முறைத்தார் கற்பகம். அவள் அதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை.
"அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் நித்திலா தயக்கத்துடன்.
அதை அவளிடம் கொடுத்தார் கற்பகம். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதற்காக. அதை படித்தாள் நித்திலா. பார்கவியும் அந்த காகிதத்தில் தன் கண்களை ஓட்டினாள். அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்று கூறத் தேவையில்லை.
"இதெல்லாம் தேவையில்ல, ஆழ்வி" என்றாள் நித்திலா.
"மன்னிச்சிடுங்க. அது உங்களுக்காக இல்ல. அது என் மரியாதையை காப்பாத்திக்க" என்றாள் உறுதியோடு.
"அதுல கையெழுத்து போடுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்று கூறி அவர்களை பேச்சிழக்கச் செய்தார் கற்பகம்.
"எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றார் அவர்.
"சொல்லுங்க ஆன்ட்டி"
"இதுலயிருந்து என்பது லட்சத்தை தனியா எடுத்து உங்ககிட்ட வச்சுக்கோங்க. நான் அப்புறமா வாங்கிக்கிறேன்"
சரி என்று தலையசைத்தாள் நித்திலா.
ஒரு பையில் இருந்த 30 லட்சத்தை எடுத்து, அடுத்த பையில் வைத்து, அதை ஆழ்வியிடம் கொடுத்தாள் நித்திலா.
"இதை உங்க ரூம்ல வச்சுக்கோங்க. அப்புறமா ஆன்டிகிட்ட கொடுங்க"
ஆழ்வி அதை மறுக்க நினைத்த போது,
"ப்ளீஸ், எனக்காக" என்றாள் நித்திலா.
சரி என்று அந்தப் பையை தன் அறைக்கு எடுத்துச் சென்றாள். கற்பகம் சொல்லின்செல்வனுக்கு ஃபோன் செய்தார்.
"நமக்கு பணம் கொடுக்க நித்திலா வந்திருக்காங்க"
"அப்படியா?"
"சீக்கிரமா வா"
"இதோ கிளம்பிட்டேன்" என்று அழைப்பை துண்டித்தான் அவன்.
*ஒரு பாட்டில் வாங்க பணம் இல்லையேன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதிர்ஷ்டம் கதவை தட்டிடுச்சி* என்று தன் இரு சக்கர வாகனத்தை உதைத்தான் அவன்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் வீடு வந்து சேர்ந்தான். தன் முன்னாள் இருந்த பெண்களை பார்த்து பல்லை காட்டி,
"வணக்கங்க" என்றான்.
பணத்தை தேடி அவனது கண்கள் இங்கும் அங்கும் அலைந்தது. நாற்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த பையில் அவன் கண்கள் நிலைபெற்று நின்றது.
"பணத்தை வாங்கிக்குறதுக்கு முன்னாடி, நம்ம இந்த பத்திரத்தில் கையெழுத்து போடணும்னு ஆழ்வி கேட்கிறா" என்றார் கற்பகம்.
"ஓ...தாராளமா" என்று பணத்தை பார்த்தபடி கூறிய அவன், அவர் கையிலிருந்த பத்திரத்தை வாங்கி, படித்து கூட பார்க்காமல் கையொப்பமிட்டான். கற்பகமும் கையெழுத்திட்டார். தன் தொண்டையை அடைத்த வாஸ்துவை விழுங்கினாள் ஆழ்வி. அவள் விற்கப்பட்டுவிட்டாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top