11 இனியவன்

11 இனியவன்

சுதாகரித்துக் கொண்ட தமிழரசி,

"இனியவன் மனநிலை சரியில்லாதவரா? அப்படி இருந்துமா நீ அவரை கல்யாணம் பண்ணிக்க போற? ஏன்?" என்றார் அதிர்ச்சியோடு.

ஆழ்வி அதற்கு பதில் கூறும் முன்,

"அவரு அவளை ரேப் பண்ணிட்டாரு" என்றார் கற்பகம்.

அவர் அப்படி செய்யவில்லை என்று ஆழ்வி கூறும் முன்,

"ரேப் பண்ணாரா? மனநிலை சரியில்லாத ஒருத்தர், எப்படி ரேப் பண்ண முடியும்? அதை செய்றதுக்கு ஒரு தெளிவு வேணும். அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல" என்றார் தமிழரசி.

"அவர் என்னை ரேப் பண்ணல. அட்டாக் பண்ணாரு. அவ்வளவு தான்" என்றாள் ஆழ்வி தயக்கமின்றி.

"அதைப் பத்தி எல்லாம் யார் யோசிப்பா? இந்த உலகத்தை பொருத்தவரை, நீ கெடுக்கப்பட்டவ" கற்பகம் வாதாடினார்.

"அதனால இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிட்டியா?" என்றார் தமிழரசி திகிலுடன்.

"காரணம் அது இல்ல ஆன்ட்டி. நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அம்மாவுக்கு அவங்க ஒரு கோடி கொடுக்கிறேன்னு சொன்னாங்க"

கற்பகத்தை எது இப்படி ஒரு இரக்கமற்ற முடிவை எடுக்கச் செய்தது என்று இப்பொழுது தமிழரசிக்கு புரிந்து போனது. பணம்
என்று வந்துவிட்டால், கற்பகத்திற்கு எந்த நெறிமுறைகளும் கிடையாது. அவருக்கு வேண்டியதெல்லாம் பணம் மட்டும் தான். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். பெற்ற மகளை பைத்தியத்திற்கு திருமணமும் செய்து வைப்பார். தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் கற்பகத்தை பார்த்தார் தமிழரசி.

"உனக்கு என்ன பைத்தியமா? நீ எப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்குறேன்னு உனக்கு தெரியுமா?"

"நான் பணத்துக்காக மட்டும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அவனை இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு வசதியான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும்" என்று தன் செயலுக்கு காரணம் கூறினார் அவர்.

"ஐபிகேவுக்கு சுயநினைவு வந்துட்டா என்ன செய்வ?"

"அப்படின்னா ரொம்ப நல்லது தானே?" என்றார் பெருமையாக.

"அறிவுகெட்டவளே... அவருக்கு சுயநினைவு வந்துட்டா, அவருக்கு ஆழ்வியை ஞாபகம் இருக்காது. இப்போ நடக்குற எல்லாத்தையும் அவர் மறந்துடுவாரு"

"எது எப்படி இருந்தாலும் இவ தானே அவர் பொண்டாட்டி? நான் என்ன அவரை அவ்வளவு சுலபமா விட்டுடுவேன்னு நினச்சியா?" என்றார் தெனாவட்டாக.

"என்னத்த கிழிப்ப? ஆங்? உன்னால எதையும் புடுங்க முடியாது. ஏன்னா இந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது. அவரு மனநிலை சரியில்லாதவரு. அதனால இந்த கல்யாணத்தை உன்னால ரிஜிஸ்டர் பண்ண முடியாது. சட்டப்படி ரெண்டு பேர் விருப்பத்தோடயும் தான் கல்யாணம் நடக்கணும். அப்படி நடக்காத பட்சத்துல, அது ஏத்துக்கப்படாது"

பேச்சிழந்து நின்றார் கற்பகம்.

"நம்ம இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண முடியாதா?"

"முடியாது..."

"அதனால என்ன? அவன் என்ன செஞ்சான்னு சொல்லி, அவனுக்கு நம்மால புரிய வைக்க முடியாதா?"

"இனியவன் பாலகுமாரனை பத்தி உனக்கு என்ன தெரியும்? மனநிலை சரியில்லாத ஒருத்தனை பத்தி மட்டும் தான் உனக்கு தெரியும். சுயநினைவோட இருக்கும் போது அவரோட செயல்பாடுகள் எப்படி இருக்கும்னு உனக்கு தெரியாது. இப்போ தான் எனக்கு புரியுது, அவர் ஏன் பைத்தியமா ஆக்கப்பட்டார்னு. அவருக்கு என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா?"

கற்பகம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, ஆழ்வி துணுக்குற்றாள். ஏனென்றால் அவளுக்கும் கூட இனியவனை பற்றி ஒன்றும் தெரியாது.

"தன்னுடைய புத்திசாலித்தனத்தையும், சரியான திட்டமிடுதலையும் மட்டுமே வச்சு ரொம்ப குறைஞ்ச வருஷத்திலேயே வியாபார உலகத்தோட கிங்கா ஆனவரு இனியவன் பாலகுமாரன். அவரை மாதிரி அசாத்திய செயல் திறமையை இதுவரைக்கும் யார்கிட்டயும் நான் பார்த்ததில்ல. வியாபார பெரும்புள்ளிகள் அவரை *காட் ஆஃப் ஐடியாஸ்ன்னு* சொன்னாங்க. அவரோட அசுர வளர்ச்சியால வியாபார பெரும்புள்ளிகள் பல பேர் ஆட்டம் கண்டாங்க. அவரோட நேர்மையா போட்டி போட்டு ஜெயிக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டாங்க. கரெக்டா ஸ்கெட்ச் போட்டு அவரை சுத்தி வளச்சுட்டாங்க. கொஞ்சம் யோசிச்சு பாரு, அவர் மேல அவங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தா, அவரை கொல்ல சந்தர்ப்பம் இருந்த போதும், அதை செய்யாம, அவரை பைத்தியமாக்கி இருப்பாங்க...! இந்த விதத்துல தான் அவரை பழிவாங்கணும்னு அவங்க நினைச்சாங்க. எந்த புத்தியை வச்சு அவர் எல்லாரையும் ஆண்டாரோ, அந்த புத்தியை பேதலிக்க வச்சுட்டாங்க. அவர் உதவாக்கரையா இருக்கணும் அப்படிங்கிறது தான் அவர்களுடைய எண்ணம். இப்படித்தானே தங்களை தாங்களே திருப்திப்படுத்திக்க முடியும்? இது தான் இனியவனுடைய பவர்"

"ஒருவேளை அவர் ஆழ்வியை ஏத்துக்கலனா, நம்ம அவங்க குடும்பத்து மேல கேஸ் போட முடியாதா?"

"நீ தாராளமா அதை செய்யலாம். ஆனா முதல் வாய்தாவிலேயே அந்த கேசை அவர் உடைச்சிடுவாரு. அதை செய்ய, அவருக்கு அவரோட லாயர் மிஸ்டர் ஜீவானந்தம் கூட தேவைப்பட மாட்டாரு. அவரோட ஜூனியரே போதும். ஜீவானந்தம் யாருன்னு உனக்கு தெரியுமா?"

பதில் கூறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் கற்பகம்.

"அவர் தான் பார் கவுன்சிலோட பிரசிடெண்ட். அவர் கோர்ட்டுக்கே வர மாட்டாரு. எல்லாத்தையும் அவரோட ஜூனியரே பார்த்துக்குவாங்க. ஆனா இனியவன் பின்னாடி ஓடுவாரு. அப்போ இனியவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவரா இருந்திருப்பார்னு யோசிச்சி பாத்துக்கோ"

அவர் கூறுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வியின் கண்கள் கற்பகத்தின் முகபாவத்தை  படித்துக் கொண்டிருந்தன. இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. இனியவனுக்கு நினைவு திரும்பிவிட்டால், அவனுக்கு அவளை ஞாபகம் இருக்காது என்று அவளுக்கு தெரியும். நித்திலா அவளிடம் இது பற்றியெல்லாம் ஏற்கனவே கூறியிருந்தாள். அவளுக்கு புதிதாய் இருந்ததெல்லாம், இனியவனின் செயல் திறமையை பற்றி தமிழரசி கூறியது தான். அவன் அவ்வளவு திறமை வாய்ந்தவனா? அப்படிப்பட்ட ஒருவனுக்கா அவள் மனைவியாக போகிறாள்? அப்படி என்றால் நிச்சயம் அவனை மணந்து கொள்வதில் பயன் இருக்கிறது. அவனுக்கு அவளை தெரியாவிட்டால் என்ன? அவன் குணமடைய, இவள் காரணமாய் இருந்தால், அந்த திருப்தியே போதுமானதாக இருக்குமே...! இதில் ஐபிகேவை பற்றி தமிழரசிக்கே தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. தனது வியாபார எதிரிகளுக்கு அவன் சிம்ம சொப்பனமாய் இருந்திருக்கலாம். ஆனால் தன் சகோதரிகளுக்கு ஒரு நல்ல சகோதரனாய் இருந்திருக்கிறான். அவன் எவ்வளவு நன்றி உணர்ச்சிக் கொண்டவன் என்று நித்திலா கூறினாளே!

"அவரைப் பத்தி நீ தான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டியே... இப்போ என்ன செய்யப் போற?" என்றார் தமிழரசி.

"இப்போ எங்களால என்ன செய்ய முடியும்? நாங்க தான் ஏற்கனவே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோமே" என்றார் தடுமாற்றத்துடன்.

"அப்படின்னா இந்த கல்யாணத்தை நீ ஆழ்விகாக செய்யல... உனக்காக மட்டும் தான் செய்யற... அப்படித்தானே?"

அமைதியாய் நின்றார் கற்பகம்.

"நீயெல்லாம் ஒரு அம்மாவா?"

"நான் என்ன செய்றேன்னு எனக்கு நல்லா தெரியும். அவன் இவளை மறந்துட்டா என்ன? என் பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்க்க என்னால முடியும். ஒரு வக்கீலா இருந்துகிட்டு நீ தான் தினம் தினம் எத்தனையோ டிவோர்ஸ் கேஸ் எல்லாம் பார்த்திருப்பியே... இதுக்காக நீ ஒன்னும் பெருசா அலட்டிக்க வேண்டாம்..."

தமிழரசிக்கு கோபம் கொப்பளித்தது.

"ஆன்ட்டி..." என்று அவர் கையை பிடித்தாள் ஆழ்வி.

அவளை வேதனையுடன் பார்த்தார் தமிழரசி.

"அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக, எனக்கு சுயநலவாதின்னு பட்டம் கொடுத்தாங்க. இந்த விஷயத்துல யார் குறுக்க வந்தாலும், அவங்க தூக்கி எறிய தயங்க மாட்டாங்க. விடுங்க"

"இதை நான் எப்படி விடுறது?"

"விட்டுத்தான் ஆகணும். நமக்கு வேற வழி இல்ல"

"அவளுக்கு என்ன வேணும் அப்படிங்கறத பத்தி எனக்கு கவலை இல்ல. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நீ ஒரு மேஜர். உன்னை இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறதுக்காக அவங்களை உன்னால ஜெயில்ல கூட தள்ள முடியும். நீ சரின்னு சொல்லு, நான் அவங்களுக்கு எதிரா கேஸ் போடுறேன்" சீறினார் தமிழரசி.

கற்பகம் அதிர்ந்தார் அவருக்கு தான் தெரியுமே, ஆழ்விக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று...!

"வேண்டாம் ஆன்ட்டி. எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க"

"என்ன செய்யணும்?"

"எனக்கு கொஞ்சம் லீகல் பேப்பர்ஸ் வேணும்"

"ஆனா உன்னோட கல்யாணம் லீகல் கிடையாது"

"என் கல்யாணத்தை பத்தி பேசல"

"பின்ன?"

"இந்த குடும்பத்தோட எனக்கு இருக்கிற எல்லா உறவையும், லீகலா முறிச்சுக்க நினைக்கிறேன்"

தமிழரசி அதிர்ச்சி அடைய, கற்பகம் மென்று விழுங்கினார். அவர்கள் அவளை எந்த அளவிற்கு காயப்படுத்தி இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள அதுவே தமிழரசிக்கு போதுமானதாக இருந்தது.

"கல்யாணத்துக்கு பிறகு அவங்க என்னை சந்திக்கக் கூடாது. எக்காரணத்துக்காகவும் அவங்க எங்க மாமியார் வீட்டுக்கு வரக்கூடாது, நானே செத்தாலும்...! எல்லாத்தையும் விட முக்கியமா, இவங்களோ, இவங்க மகனோ என் மாமியார் வீட்டிலிருந்து வேற எதையும் எதிர்பார்க்க கூடாது" என்றாள் உறுதியுடன்.

கற்பகத்திற்கு அவமானமாய் போனது. ஆழ்வி தன் மீது கோபமாய் இருப்பதாகவும், சில நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் அவளது பிடிவாதத்தை பார்த்த போது, அவள் அவ்வளவு எளிதாய் அவர்களை மன்னித்து விடப் போவதில்லை என்பது அவருக்கு புரிந்தது.

"ஆனா ஆழ்வி, இதையெல்லாம் செஞ்சு உனக்கு என்ன கிடைக்கப் போகுது?"

"உறவு மேல இருந்த நம்பிக்கை அடியோட அழிஞ்சதுக்கு பிறகு, என்ன கிடைச்சு என்ன ஆகப்போகுது, ஆன்ட்டி?"

"இங்க பாரு, உனக்கு யாரும் இல்லைன்னு நினைக்காத. உனக்கு நான் இருக்கேன். என் கூட என் வீட்டுக்கு வந்துடு"

"தேங்க்ஸ் ஆன்ட்டி. எனக்காக ஒருத்தர் இருக்காங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"நீ இந்த கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்ல"

"இல்ல ஆன்ட்டி. இவங்க வேணா ஒரு நல்ல அம்மாவாவும், நல்ல அண்ணனாவும் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் ஒரு நல்ல மகள் தானே! நான் எப்பவுமே என் அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்னு தான் விரும்பி இருக்கேன். அது இந்த விதத்தில் நடக்கிறது என் தலையெழுத்து. அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்" என்றாள் வலி நிறைந்த பார்வையோடு.

"இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிட்டா நீ எவ்வளவு கஷ்டப்படணும் தெரியுமா? இந்த வாழ்க்கை அவ்வளவு சுலபமா இருக்காது"

"இந்த வீட்டை விட்டு நான் போகலைனா, என் வாழ்க்கை இன்னும் கொடுமையா இருக்கும். இதுக்கு பிறகு இங்க என்னால நிம்மதியா இருக்க முடியாது"

அவள் அதை எந்த அர்த்தத்தில் கூறினாள் என்று புரிந்தது தமிழரசிக்கு.

"என் வாழ்க்கையை பிரயோஜனமா செலவு பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது. அவர் என்னை மறக்கிறதை பத்தி நான் கவலைப்படல. திறமைசாலியான ஒருத்தருக்கு மனைவியா இருந்தோம் அப்படிங்கற திருப்தியாவது மிஞ்சட்டுமே..."

"சட்டப்படி நீ அவர் மனைவி இல்ல"

"இதயம் இல்லாத ஒரு பொம்பளைக்கு மகளா பிறந்ததுக்கு அது எனக்கு கிடைச்ச தண்டனைனு நினைச்சுக்கிறேன்"

அவளுக்காக வருந்தினார் தமிழரசி.

"நான் கேட்ட பேப்பர்சை மட்டும் கொண்டு வாங்க ஆன்ட்டி"

"சரி"

"எனக்கு இன்னொரு டாகுமெண்ட்டும் வேணும்"

சரி என்றார் தமிழரசி. அது என்ன என்று ஆழ்வியும் கூறவில்லை, தமிழரசியும் கேட்கவில்லை.

"என் கல்யாணத்துக்கு நீங்க வரணும்"

"ஒரு லாயரா இருந்துகிட்டு, இல்லீகலா நடக்குற கல்யாணத்துக்கு நான் வரக்கூடாது. ஆனாலும் உனக்காக நான் இந்த கல்யாணத்துக்கு வருவேன்... கொஞ்ச நேரத்துக்கு, நான் ஒரு லாயர் அப்படிங்குறதை மறந்துட்டு..."

ஆழ்வி புன்னகைத்தாள்.

இன்பவனம்

திருமண தேதியை குறிக்க தங்கள் குடும்ப ஜோசியருக்கு முன் அமர்ந்திருந்தாள் நித்திலா. அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த சித்திரவேல், அவரைப் பார்த்து நின்றான்.

"மொத்தம் மூணு தேதி இருக்கு. அதுல ஒன்னு, ரொம்ப பிரமாதமான நாள். நூறு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரும்"

"அப்படின்னா அந்த தேதியையே குறிச்சிடுங்க"

"ஆனா அந்த நாள் வர்ற வெள்ளிக்கிழமை..."

"அதனால என்ன? ஒன்னும் பிரச்சனை இல்ல? நான் வேண்டிய ஏற்பாட்டை செய்றேன்" என்றாள் நித்திலா.

"அப்ப சரி"

"எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா உங்களுக்கு ஃபோன் பண்றேன்"

"தாராளமா..."

ஜோசியர் அங்கிருந்து கிளம்பினார்.

"ஆழ்வியோட வாழ்க்கையை கெடுக்க நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க?" என்றான் சித்திரவேல்.

"ஏற்கனவே பதில் தெரிஞ்ச கேள்விக்கு, நான் மறுபடியும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்"

"இருக்கு..."

"நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க... என்னை சுயநலவாதின்னு நினைங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு"

"நித்தி..."

"உங்களுக்கு என்ன பிரச்சனை? இந்த வீட்டுக்கு கண்ட பொம்பளைங்களை கூட கூட்டிட்டு வர நீங்க தயாரா தானே இருந்தீங்க? அப்படி இருக்கும்போது இப்ப மட்டும் எதுக்காக இவ்வளவு வருத்தப்படுறீங்க?"

"ஏன்னா, ஆழ்வி அந்த மாதிரி பொண்ணு கிடையாது"

"அதுக்காகத்தான் நான் அவங்க நம்ம இன்னுவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். என் தம்பிக்கு சுகத்தை கொடுக்கிற பொம்பளையை விட, அவன்  வாழ்க்கைக்கு ஏத்த ஒரு நல்லவ தான் அவசியம்"

தன் கைபேசியை எடுத்து ஆழ்வியின் வீட்டு எண்ணுக்கு ஃபோன் செய்தாள் நித்திலா. அந்த அழைப்பை ஆழ்வியே ஏற்றாள். 

"நித்திலா பேசுறேன்"

"ஆழ்வி தான் பேசுறேன்"

"ஆழ்வி, நான் கல்யாண தேதியை நிச்சயம் பண்ணியிருக்கேன்" என்றாள் தயக்கத்துடன்.

"ஓ..."

"வர்ற வெள்ளிக்கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்காம்"

"ஓ..."

"அந்த தேதியில உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?"

"இல்ல" என்று உறுதியுடன் வந்தது அவளிடமிருந்து. அது நித்திலாவின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.

"தேங்க்யூ ஆழ்வி, ஆன்ட்டிக்கு ஓகேவான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க"

"அவங்க சந்தோஷப்படுவாங்க"

"அப்படின்னா நான் ஏற்பாட்டை எல்லாம் ஆரம்பிக்கட்டுமா?"

"செய்யுங்க"

"நான் ஆன்ட்டிகிட்ட கொஞ்சம் பேசலாமா?"

"எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்டயே சொல்லலாம்"

"இல்ல, அது வந்து..."

"பணத்தை பத்தி பேசணுமா?"

"ஐ அம் சாரி, ஆழ்வி..."

"ஒரு நிமிஷம்..."

ரிசிவரை கற்பகத்தை நோக்கி நீட்டினாள் ஆழ்வி.

"வணக்கம் ஆன்ட்டி"

"வணக்கம் மா"

"உங்களுக்கு பணத்தை செக்கா கொடுக்கட்டுமா? இல்ல, கேஷாவே கொடுத்துடட்டுமா?"

"கேஷா, கேஷா... எனக்கு செக்கு எல்லாம் போடத் தெரியாது, மா"

"சரிங்க ஆன்ட்டி. நான் சாயங்காலம் உங்க வீட்டுக்கு பணம் கொண்டு வரேன்"

"இன்னைக்கு சாயங்காலமா?" என்றார் ஆர்வத்துடன்.

"ஆமாம் ஆன்ட்டி" 

"நான் வீட்ல தான் இருப்பேன். உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்"

"கல்யாணத்தை வெள்ளிக்கிழமை ஃபிக்ஸ் பண்ணிடலாமா?"

"ஓ, தாராளமா... எப்ப வேணாலும் ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க"

"தேங்க்யூ ஆன்ட்டி"

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்"

"சொல்லுங்க ஆன்ட்டி"

"நீங்க எனக்கு எவ்வளவு பணம் கொடுக்குறீங்கன்னு என் பையன் முன்னாடி சொல்லிடாதீங்க. அவன் எல்லாத்தையும் குடிச்சே அழிச்சிடுவான். நீங்க எனக்கு இருவது லட்சம் மட்டும் தான் கொடுக்குறீங்கன்னு சொல்றீங்களா?" என்றார் கவலையோடு.

"சரிங்க ஆன்ட்டி. நான் சாயங்காலம் வீட்டுக்கு வரேன்"

"தேங்க்யூ மா" என்று முகம் எல்லாம் பல் தெரிய சிரித்தபடி அழைப்பை துண்டித்தார் கற்பகம்.

தன் கைகளை கட்டிக்கொண்டு, முகத்தை சுருக்கி அவரையே பார்த்துக் கொண்டிருந்த ஆழ்வியை பார்த்த அவர், கண்டும் காணாதது போல் தன் அறைக்குச் சென்றார்.

தொடரும்...








Bạn đang đọc truyện trên: AzTruyen.Top