1 மனநோயாளி

1 மனநோயாளி

அந்த மிகப்பெரிய மாளிகையை இனியவன் என்னும் இளைஞனின் அவல குரல் உலுக்கியது. அவனது அக்கா நித்திலா, வேதனையுடன் கண்களை மூட, அவனது பாட்டியோ வேதனை தாங்காமல் கண்ணீர் சிந்தினார். நித்திலாவின் கணவனான சித்திரவேல், இனியவனின் கை கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்துக் கொண்டிருந்தான். எப்பொழுதெல்லாம் அவன் கட்டுப்பாட்டை மீறுகிறானோ, அப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது. உண்மையை கூற வேண்டுமானால் அவன் எப்பொழுதுமே கட்டுக்கடங்காதவன் தான், அந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு...!

என்ன நிகழ்ந்தது?

வியாபார உலகத்தை தன் விரல் நுனியில் சுழல விட்டு இளம் வியாபாரியாக வலம் வந்தவன் தான் இனியவன். அவனது திறமைக்கு முன் புகழ் மண்டியிட்டு கிடந்தது. சமுதாயத்தில் அவன் பெற்றிருந்த மரியாதை, அவனது வயதிற்கு ரொம்பவே அதிகம். அவனால் பல பெரும்புள்ளிகள் பயனற்று போனார்கள். அவனது எதிரிகளுக்கு அவன் இலக்கானான்.

ஒரு நாள், சிலரால் அவன் சூழப்பட்டு, வெகு மூக்கமாய் தாக்கப்பட்டான். அவர்களது இலக்கு அவனது மரணமல்ல. அவனை உதவாக்கரை ஆக்க வேண்டும் என்பது தான். அதனால் ஒரு இரும்பு கம்பியால் அவன் தலையில் அடித்தார்கள். நினைவிழந்து ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்தான் இனியவன். அவர்கள் அவனது மண்டையை உடைக்கும் முன், அந்த இடத்தை சென்றடைந்தான் அவனது நண்பனான குருபரன். ஆனால், இனியவன் இப்போது இருக்கும் நிலைமைக்கு மரணம் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. தலையில் பலமான அடிபட்டதால், அவனுக்கு புத்தி பேதலித்துவிட்டது. அவனுக்கு எல்லாம் மறந்து போனது... அவனையும் சேர்த்து. அவனுக்கு ஏதாவது தர மறுத்தால், கட்டுக்கடங்காதவனாய் நடந்து கொண்டான். அவனது கண்களுக்கு புதிதாகவும், கவர்ச்சியாகவும் தெரிந்த அனைத்தையும் அவன் கேட்டது தான் சிக்கலே...!

அவனை பயமுறுத்திய ஒரே ஒரு விஷயம் ரத்தம். ரத்தத்தை பார்த்தால், ஓலமிட்டபடி அந்த இடத்தை விட்டு ஓடி சென்றான்.

அவனுக்கு நிகழ்ந்த விபத்துக்கு பிறகு அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அந்த மருத்துவமனையின் அறையை போர்க்களம் ஆக்கினான் இனியவன். அந்த ரகளையில், அவனுக்கு ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரத்த பை(பவுச்) கீழே விழுந்தது. அதை கவனிக்காமல் அவன் அதன் மீது காலை அழுத்தி வைத்தான். அடுத்த நிமிடம் அந்த பை கிழிந்து, அந்த அறை முழுவதும் ரத்தம் சிதறியது. அவன் ரத்தத்தை பார்த்தது அது தான் முதல் முறை. இனம் புரியாத ஒரு பதற்றம் அவன் முகத்தில் தோன்றியது. பயத்துடன் தொண்டைக் கிழிய கத்தத் துவங்கினான். கட்டிலில் படுத்துக் கொண்டு தன் முகத்தை போர்வையால் போர்த்திக் கொண்டான், அந்த ரத்தத்தை பார்க்க விரும்பாமல்.

இன்று...

சித்திரவேல் வாங்கி வந்த பெல்ஜியம் கண்ணாடியை பார்த்துவிட்டான் இனியவன். வழக்கம்போல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதை நோக்கி ஓடிய அவன், அதை தன் கையில் எடுக்க முயன்றான். சித்திரவேல் அதை தடுக்க போக, அப்பொழுது ஆரம்பித்தது தான் இந்த ரகளை. பொறுமையிழந்து கலாட்டா செய்ய துவங்கினான் இனியவன்.  மேலும் மூர்க்கமாய் அதை பறிக்க முயன்றான். அவனை கட்டுப்படுத்த சொல்லி வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டான் சித்திரவேல். அவன் மீது பாய்ந்து அனைவரும் சேர்ந்து அவனை தரையில் வைத்து அழுத்தினார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சித்திரவேல் அவன் கை கால்களை சங்கிலியால் பிணைத்தான்.

பாட்டியின் அறைக்கு சித்திரவேல் வந்தபோது அங்கு, நித்திலாவும் பாட்டியும் அழுது கொண்டிருப்பதை கண்டான்.

"அழாதே நித்தி, நான் டாக்டருக்கு ஃபோன் பண்ணிட்டேன். அவர் வந்துகிட்டு இருக்காரு"

"டாக்டர் வரதும் போறதுமா தான் இருக்காரு. ஆனா, என் தம்பி அப்படியே தான் இருக்கான்" என்றாள் நித்திலா இயலாமையுடன்.

"நம்மளால ஆன மட்டும் முயற்சி செஞ்சுகிட்டு தானே இருக்கோம்...? ஆனா, இனியன்கிட்ட எந்த முன்னேற்றமும் இல்ல. அது ஏன்னு தான் எனக்கும் புரியல" என்றான் சித்திரவேல் வேதனையுடன்.

"அவனை நம்ம ஃபாரினுக்கு கூட்டிக்கிட்டு போய், அட்வான்ஸ் லெவல் ட்ரீட்மென்ட் கொடுத்தா என்ன?" என்றார் பாட்டி.

"பாட்டி, அவரோட கண்டிஷன் என்னன்னு உங்களுக்கு தெரியாதா? டாக்டர் என்ன சொன்னாருன்னு நீங்க மறந்துட்டீங்களா? இது சாதாரண நோய் இல்ல... மனநோய். இதை மருந்தால மட்டும் குணமாக்க முடியாது. ஆனாலும் நம்ம சும்மா இல்லையே...! அமெரிக்காவோட அட்வான்ஸ்டு சைக்கியாட்ரி ஹாஸ்பிடல்ல இருந்து மருந்தை வர வச்சிருக்கோம். எல்லாத்துக்கும் மேல ஒரு முக்கியமான விஷயத்தை நாம்ம மறந்துடக்கூடாது. இனியன் ஒரு ஃபேமஸ் பிசினஸ்மேன். அவரோட ட்ரீட்மெண்ட்டை நம்ம  வெளிப்படையா செய்ய முடியாது. இன்னும் கொஞ்சம் நாள்ல அவர் எப்படியும் குணமாயிடுவாரு. அப்போ மக்கள் அவரைப் பார்த்து பைத்தியக்காரன்னு கிண்டல் பண்ணுவாங்க. அது அவரோட தன்னம்பிக்கையை குறைக்கும். இல்லன்னா அவரை அது மறுபடி இதே நிலைமைக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு. இந்த சமுதாயம் நம்ம பலவீனத்தோட விளையாடுற சந்தர்ப்பத்தை தவறவிடுறதே இல்ல. அப்படி நிச்சயம் நடக்கக்கூடாது. ஏன்னா, அவருக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு"

அவன் கூறியதில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அவர்கள் ஆம் என்று தலையசைத்தார்கள்.

"தயவு செஞ்சு அவர் முன்னாடி மட்டும் போயிடாதீங்க. பொம்பளைங்க யாரும் அவர்கிட்ட போக கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு" என்றான் வேதனை மேலோங்க.

ஆம், அவர்கள் மேலும் ஒரு கொடுமையான சிக்கலை எதிர்கொண்டார்கள். இனியன் பெண்களால் பெரிதும் கவரப்பட்டான். பெண்களின் உடலமைப்பு அவனுக்குள் ஏதோ செய்தது. மருத்துவருடன் வந்த ஒரு செவிலியை தொட அவன் முயன்றான். அந்த செவிலியை கண்டவுடன், அவன் கண்களில் தீப்பொறி பறந்ததை கவனித்தான் சித்திரவேல். அன்று அவனை ஊசி போட்டு தான் கட்டுப்படுத்த முடிந்தது. அதற்கு பிறகு தான், கிரில் கேட்டுடன் கூடிய  பிரத்தியேகமான ஒரு தனி அறையில் அவனை அடைத்து வைப்பது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். வெளியில் இருந்தபடியே அவனை கவனிக்க அது வசதியாய் இருந்தது.

"எவ்வளவு நாளைக்குத்தான் நம்ம இப்படியே இருக்க முடியும்? இந்த பிரச்சனையில இருந்து அவனை வெளியில கொண்டு வரவே முடியாதா?"

"அதுக்கு ஒரு வழி இருக்கு. ஆனா நம்மால அதை செய்ய முடியாது" என்றான் சித்திரவேல்.

"ஏன் முடியாது? என்னன்னு சொல்லுங்க. முடியுமா முடியாதான்னு நம்ம அப்புறம் யோசிக்கலாம்"

"ஆரம்பத்துல நம்ம வீட்ல இருந்த ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்க்க அவர் ஆசைப்பட்டார். ஆனா இப்போ, அது மேல இருந்த ஆசை அவருக்கு போயிடுச்சு. ஏன்னா அதெல்லாம் அவருக்கு பழகிப்போச்சு. நம்ம அவரை தொட விட்டோம், உடைக்க விட்டோம், இந்த வீட்ல எங்க வேணும்னாலும் சுத்த அவரை அனுமதிச்சோம். இப்போ, அவர் அதை எல்லாம் தொட்டுக் கூட பாக்குறதில்ல. ஏன்னா அது மேல இருந்த ஆர்வம் போயிடுச்சு..."

அவன் கூற வருவது என்ன என்பதை புரிந்து கொண்டுவிட்ட நித்திலா அதிர்ச்சி அடைந்தாள்.

"இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க? பொம்பளைங்க கூட இருந்து பழகிட்டா, அவனுக்கு அவங்க மேல இருக்கிற இன்ட்ரஸ்ட் போயிடும்னு சொல்றீங்களா?"

மென்று விழுங்கினான் சித்திரவேல்.

"இது சுத்த பைத்தியக்காரத்தனம்..."

"நீ ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கலனாலும் அது தான் அவரோட மெண்டல் கண்டிஷன். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன், சில டெஸ்ட் எல்லாம் எடுத்து மருந்து கொடுத்து சரியாக்குற வியாதி இல்ல இது. அவருக்கு அடிபட்டதுல இருந்து நம்ம அவரை கவனிச்சிகிட்டு தான் வறோம். ஒவ்வொரு நாளும் அவரோட செயல் புதுசா தானே இருக்கு? அதுல இதுவும் ஒன்னு. பொம்பளைங்ககிட்ட அவரை நம்ம நெருங்க விடாத வரைக்கும் அவருக்கு அவங்க மேல இருக்கிற அட்ராக்ஷன் போகாது"

நித்திலாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியும், மாப்பிள்ளை. இது ஒரு கௌரவமான குடும்பம். எந்த காரணத்துக்காகவும், ஒழுக்கம் கெட்ட பொம்பளைங்களை இந்த வீட்டுக்குள்ள வர நான் விடமாட்டேன்"

அமைதி காத்தான் சித்திரவேல். பாட்டியின் யூகம் சரிதான். இனியவனுடன் இருக்க, பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு பெண்ணை அழைத்து வரலாம் என்று தான் அவன் எண்ணியிருந்தான்.

"அவர் என்ன நினைக்கிறார், பாட்டி?" என்றாள் நித்திலா.

"வாடகைக்கு ஒரு பொம்பளையை கூட்டிகிட்டு வந்து அவன் கூட இருக்க வைக்க நினைக்கிறாரு"

"என்ன்னனது?" அதிர்ந்தாள் நித்திலா.

"நம்ம வேற என்ன செய்யறது, நித்தி? இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். அக்காவா பாட்டியான்னு வித்தியாசத்தை புரிஞ்சுக்கிற நிலைமைல இல்ல இனியன். ஏதாவது நடக்க கூடாதது நடந்துட்டா நம்மளால என்ன செய்ய முடியும்? அதுக்கு தான், விஷயம் கை மீறி போறதுக்கு முன்னாடி, ஏதாவது செய்யணும்னு சொல்றேன். அவரோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, நித்தி..."

"ஒருவேளை, அவனுக்கு பொம்பளை மேல இருக்குற ஆர்வம் குறையலன்னா? அந்த பொம்பளை கூடவே அவன் எல்லா நேரமும் இருக்கணும்னு நினைச்சா? அந்த பொம்பளை அவனை விட்டு போகும்போது, அவன் இன்னும் கட்டுக்கடங்காதவனா மாறினா? அப்போ என்ன செய்வீங்க?" என்றார் பாட்டி.

சித்திரவேல் பதில் அளிக்கவில்லை. அவனால் பதில் கூற முடியவில்லை. ஏனென்றால் பாட்டி கூறுவது போல் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவன் மனம் எப்படி மாறும் என்று யாராலும் கணிக்க முடியாது.

பெருமூச்சுவிட்டு, பாட்டியின் அறையை விட்டு வெளியேறினான் சித்திரவேல். அவனை பின் தொடர்ந்து வந்தாள் நித்திலா.

"ஒரு நிமிஷம் சித்து..."

திரும்பி நின்று அவளை ஏறிட்டான் சித்திரவேல்.

"இனியாவோட புத்தி பேதலிச்சு போயிருக்கு. அப்படி இருக்கும் போது, எப்படி அவனால ஒரு பொண்ணு கூட செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பை ஏற்படுத்திக்க முடியும்னு நினைக்கிறீங்க? அது ரொம்ப கஷ்டமாச்சே... போதுமான நாலேஜ் இல்லாம அவனால எப்படி செக்ஸில் ஈடுபட முடியும்?"

"எனக்கும் ஒன்னும் புரியல. அவருக்கு பொம்பளைங்க மேல ஒரு அட்ராக்சன் இருக்கு. அதே நேரம், அது செக்ஸ் சம்பந்தப்பட்டதுன்னு நம்மளால சொல்ல முடியாது. ஒருவேளை, அவரோட அட்ராக்சன் பொம்பளையை தொட்றதா மட்டும் கூட இருக்கலாம். ஏன்னா, பொம்பளையோட உடல் அமைப்பு அவர்கிட்ட இருந்து வித்தியாசப்படுது இல்லையா? அவர் விஷயத்துல என்னால எந்த முடிவுக்கு வர முடியல" என்றான் அவன் கவலையோடு.

"பாட்டி சொல்றது தப்பில்ல. ஒரு பொம்பளையை தொட்டதுக்கு பிறகு, அது போதும்னு அவன் நினைப்பான்னு நம்மால சொல்ல முடியாது. ஏன்னா, உயிர் இல்லாத பொருளை தொடுறதும், உயிர் உள்ள ஒரு பொம்பளையை தொடுறதும் ஒன்னு இல்ல. அவளைத் தொடும் போது, அவனுக்குள்ள எப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படும்னு நம்மால சொல்ல முடியாது. அது அவனை ஆபத்தானவனா மாத்த வாய்ப்பு இருக்கு"

ஆம் என்று தலையசைத்த சித்திரவேல்,

"பார்கவியை ஜாக்கிரதையா  இருக்க சொல்லு" என்றான்.

"அவளுக்கு தான் தெரியுமே" என்றாள் மெல்லிய குரலில்.

ஆம் என்று தலையசைத்தான் சித்திரவேல். பார்கவி இனியவனின் தங்கை. அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்...





Bạn đang đọc truyện trên: AzTruyen.Top