17
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
நெம்புக் கோல் இன்றி
புரள்கிறது பூமி
இவனின் கைகளில்
உலகு துடைத்தெறிந்தாலும்
ஈரம் உலர்வதில்லை
இவனின் நெற்றியில்
மூட்டைகளை தூக்கி எறிந்தும்
பாரத்துடனே நகர்கிறது
இவனின் நாட்கள்
பசுமைகளை நட்டுவிட்டு
வறட்சியை பிடுங்கிச் செல்கிறான்
இவன் வீட்டிற்கு
களைத்து சாயும் இவனிடம் தான்
இரத்தம் உறிஞ்சுகின்றன
பேராசை கொசுக்கள்
ஊருக்கு நெய்து கொடுத்து
அம்மணத்தை உடுத்தி
திரிபவனும் இவனே
எட்டிக் கூட பார்க்காதவர்க்கும்
எட்டு மணிநேர கணக்கு
பார்க்காதவனும் இவனே
உயர உயரமாய் கட்டிடம் கட்டி
வாய்பிளந்து பார்க்கும்
ஏமாளி இவனே
பாவம் ஏற்றத் தாழ்வுகளில்
இவனை என்றுமே விட்டதில்லை
தாழ்வுகள்
சரி சரி
அசந்து தூங்குகிறான்
இன்றாவது ஓய்வெடுக்கட்டும்
இந்நாட்டு தியாகிகள்...........!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top