1
அவன் எண்ணங்கள் சிகரம் தொடும் உயரம் செல்லக்கூடியவை ! அவன் எண்ணங்கள் உயரே கிளம்புகிற பெரும்பான்மையான சமயங்களில் மற்றவர்களின் கேலியும்,கிண்டலும் அவன் எண்ணங்களுக்கு உயரத் தடை ஆவதுண்டு , அவனிடம் பேசுகிறவர்கள் தகாத வார்த்தைகளை சொல்லி ,தாழ்வு மனப்பான்மைக்குள் அவனை தள்ளி விடுகிற சமயங்களிலெல்லாம் அவன் கண்ணீருக்குள் மூழ்கி விடுவதுண்டு ,பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்த ஒரு ராத்திரியில் கவிதை ஒன்று அவனோடு பேச ஆரம்பித்தது !
♦கனவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !
♦முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன் முட்டாளாய் மாறிவிடும் முட்டாள் நீயில்லை !
சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,
வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்
மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !
மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்
வானம் மாறாது வையத்தில் வீழாது
♦உன்னைப் பார்த்து உலகம் சொல்லும்
இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!
கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்
கரங்கள் கண்டு கலங்கி விடாதே !
வானம் போல வாழப் பழகு
புல்நுனி மீது பனித்துளி போல
முள் நுனி மீதும் உறங்கப் பழகு
கட்டி வைத்த கோட்டை தனை
கண்ணீரில் கரைத்திடாதே !
மனம் வரைந்த சித்திரத்தை
அழுதழுது அழித்திடாதே!
♦உன்னை அழவைத்த
உலகம் இதைப்பற்றி
உனக்கு தெரியுமா ?
♦ "அதைசெய் " "இதைசெய் " என்று
அறிவுரை ஆயிரம் சொல்லும்
உந்தன் வருத்தம் போக்க
ஆறுதல் வார்த்தை சொல்லும்
வெற்றி பெற வழிகள் சொல்லி
வேறு பாதை உனை திருப்பும் ;
ஆடு நனைய அழுகை கொள்ளும்
அதிசய ஓநாய்க் கூட்டம்
♦யார் மீதும் முழுதாக
நம்பிக்கை கொள்ளாதே!
எவர்பற்றி எவரிடமும்
எப்போதும் சொல்லாதே !
சுவரில்லா சித்திரங்கள்
பார்வைக்கு படுவதில்லை
சுவரை முதலில் கட்டு
சித்திரம் அதன்பின் தீட்டு
♦கனவுகள் கண்ணீரில்
மூழ்கி விடக்கூடாது !
♦கனவை கனலாக்கி
கண்ணீர் காயவை!
உணர்வை உணவாக்கி
கனவை வாழவை !
♦கனவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top