9 பூங்குழலிக்கு விருப்பமில்லை
9 பூங்குழலிக்கு விருப்பமில்லை
மகிழன் கூறியதை கேட்ட வடிவக்கரசிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் எப்படி பூங்குழலியை இவ்வாறு அவமானப் படுத்தலாம்? அவள் பின்னால் வெட்கம்கெட்டு சுற்றியது அவன் தானே? இங்கு எல்லாமே பணம் தானா? அப்படி என்றால், பூங்குழலிக்கு இப்படிப்பட்ட ஒருவன் தேவையில்லை. அவளுக்கு ஒரு நல்லவன் தான் துணையாக கிடைக்க வேண்டும். தங்களுக்கும் சுயமரியாதை உண்டு, தங்களாலும் யாரது உதவியும் இன்றி வாழ முடியும் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர்களைப் பிரித்து மேய்ந்து விட தயாரானார் வடிவுக்கரசி. ஆனால் அவர்கள் பேசியதை கேட்டு அப்படி நின்றார்.
"நான் என்ன செய்ய போறேன்னு தெரியல. மகிழனுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு எப்படி சிவகாமி கிட்ட சொல்லுவேன்?" மனதார வருந்தினார் மணிமாறன்.
"ஏற்கனவே தில்லை அண்ணனை பறி குடுத்துட்டு நிக்கிறவங்களுக்கு, நம்ம பங்குக்கு பிரச்சனை கொடுக்க போறத நினைச்சா, எனக்கு என் மேலயே ஆத்திரம் வருது" தலையில் அடித்துக் கொண்டார் மின்னல்கொடி.
"மகிழனை நம்ம அப்படி எல்லாம் விட்டுடக் கூடாது. நம்ம கம்பெனியோட மேனேஜின் போர்டுல இருந்து அவனை நான் எடுத்துடப் போறேன். இந்த சொத்து ஒன்னும் என் பாட்டன் பூட்டன் சம்பாதிச்சது கிடையாது. மலரவன் சம்பாதிச்சு சேர்த்தது. அவன் தான் விழுந்த இந்த கம்பெனியை தூக்கி நிறுத்தினவன். இதுல சொந்தம் கொண்டாட மகிழனுக்கு எந்த உரிமையும் இல்ல. அவனை போர்டுல இருந்து தூக்கி எறிஞ்சா, அப்ப தெரியும் யாரு பிச்சைக்காரன்னு" சீறினார் மணிமாறன்.
"அவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறது எனக்கு நல்லதா படல. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட முடியும். ஆனா, கட்டாயப்படுத்தி அவனை அவ கூட சந்தோஷமா நம்மால வாழ வைக்க முடியாது. அது பூங்குழலியோட சந்தோஷத்தை குலைக்கும். அவ சந்தோஷமா வாழ வேண்டிய குழந்தை. இவனை விடுங்க" கண்ணீர் சிந்தினார் மின்னல்கொடி.
"இவன் தானே அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒத்தை காலில் நின்னான்...? தன்னுடைய எதிர்காலத்தைப் பத்தி எந்த கவலையும் இல்லாம, தன் வேலையை பார்த்துக்கிட்டு பூங்குழலி நிம்மதியா இருந்தா. இவன் தான் அவளோட கவனத்தை தன் பக்கம் திருப்பினான். நம்ம பிள்ளை இவ்வளவு கீழ்த்தரமானவனா இருப்பான்னு என்னால நம்பவே முடியல"
"ஆமாம், இவன் தான் அவ பின்னாடி சுத்தினான். ஆனா இப்போ அவன் அடியோட மாறிப் போயிட்டான். அதை பத்தி பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்ல. பூங்குழலி மாதிரி நல்ல பொண்ண மனைவியா அடையுற தகுதி இவனுக்கு இல்ல. அவளுக்கு என்ன விதிச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்"
தவியாய் தவித்தார் மணிமாறன். சிவகாமியை நேரில் சந்தித்து, மகிழன் பூங்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்ற முடிவை அவரிடம் கூறியாக வேண்டுமே...! அவர் எப்படி அதை செய்யப் போகிறார்? தில்லை குடும்பத்தாருக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை இந்த திருமணம் தானே? அவரால் எப்படி அவர்களின் மனதை உடைக்க முடியும்?
"நல்ல காலம், பூங்குழலி மகிழனை எப்பவும் என்டர்டைன் பண்ணவே இல்ல... அவன் கிட்ட இருந்து அவ விலகியே இருந்தது ரொம்ப நல்லதா போச்சு"
"என்னப்பா சொல்றீங்க? அவன்கிட்ட இருந்து அவ விலகியே இருந்தாளா? ஏன்? அவளுக்கு அவனைப் பிடிக்கலையா?" என்றான் மலரவன் நம்ப முடியாமல்.
"ஆமாம். பூங்குழலி அவன் மேல இன்ட்ரஸ்ட் காட்டவேயில்ல. தில்லை அண்ணனுக்காக தான் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னு நினைக்கிறேன்" என்றார் மின்னல்கொடி.
"அவளோட காலேஜ்ல அவளுக்கு இருந்த நல்ல பெயரை எடுத்துக்க கூடாது அப்படிங்கிறதுல அவ ரொம்ப தீர்மானமா இருந்தா. இவன் எவ்வளவோ ட்ரை பண்ணியும் கூட, காலேஜ்ல அவனை அவ மீட் பண்ணவே இல்ல. ஒருவேளை, அவளுக்கு அவனைப் பிடிச்சிருந்தா, அப்படி செஞ்சிருக்க மாட்டாளோனு எனக்கு தோணுது"
"அப்படியா?" என்றான் ஆச்சரியமாய் மலரவன். வடிவுக்கரசியும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தார்.
"ஆமாம், நான் ஒரு நாள் சாதாரணமா தில்லையை பார்க்கலாம்னு போயிருந்தேன். அப்போ தில்லைக்கு பூங்குழலி கிட்ட இருந்து ஃபோன் வந்தது..."
ஃப்ளாஷ்பேக்
தனது கைபேசியை பார்த்த தில்லைராஜன், குழப்பத்தில் முகம் சுளித்தார்.
"பூங்குழலி ஃபோன் பண்றா... எதுக்குன்னு தெரியலையே" என்றபடி அந்த அழைப்பை ஏற்ற தில்லைராஜன்,
"குழலி, ஏதாவது பிரச்சனையா? இது நீ காலேஜ்ல இருக்கிற நேரமாச்சே?" என்றார்.
"ஆமாம் பா, நான் காலேஜில் தான் இருக்கேன். அவர் இங்க வந்திருக்காரு"
"அவர்னா யாரு?"
"அவர் தான் பா, மகிழன்"
"மகிழனா?" என்றபடி மணிமாறனை ஏறிட்டார் தில்லைராஜன்.
"அப்பா ப்ளீஸ், என் காலேஜுக்கு வந்து, என்னை கூட்டிகிட்டு போயிடுங்கப்பா"
"ஆனா ஏன்டா? மகிழன் கிட்ட நீ இரண்டு வார்த்தை பேசினா ஒன்னும் தப்பில்ல"
"ஐயோ அதெல்லாம் வேண்டாம்பா. இது என்னோட காலேஜ். இங்க எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. என்னோட ப்ரொஃபசரஸ் எல்லாம் என் மேல ரொம்ப மரியாதை வச்சுருக்காங்க. நான் அவர்கிட்ட பேசுறதை பார்த்தா, ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் என்னை ஏகத்துக்கும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. எங்களுக்கு இன்னும் நிச்சயம் கூட ஆகல. எனக்கு இதெல்லாம் பிடிக்கல பா. அவருக்கு என்னை பார்க்கணும்னு தோணுச்சுன்னா, நம்ம வீட்டுக்கே வரலாம் இல்ல? எதுக்குப்பா இங்க வரணும்?"
"சரி, சரி, இரு நான் வரேன்" என்றார் தில்லைராஜனை பார்த்தபடி.
"காலேஜ் பெல் அடிக்க இன்னும் பதினஞ்சி நிமிஷம் தான் இருக்கு. அதுக்குள்ள வந்துடுங்கப்பா"
"சரிடா"
"நீங்க வர்ற வரைக்கும் நான் வெளியில வரமாட்டேன் பா"
"உனக்கு மகிழனை பிடிக்கலையா டா?" என்ற கேள்வியை மணிமாறனின் முன் கேட்க அவர் தயங்கவில்லை.
ஸ்பீக்கரை ஆன் செய்யுமாறு மணிமாறன் அவருக்கு சைகை செய்தார். யோசிக்காமல் அதை செய்தார் தில்லைராஜன்.
"அது வேற, இது வேறப்பா. கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும், கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி ஊரை சுத்துறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல? இது என்னோட ஃபைனல் செமஸ்டர். படிக்க வேண்டியதும், ப்ராஜெக்ட் வொர்க்கும் நிறைய இருக்கு. இதுக்கு இடையில, நான் அவர்கிட்ட பேசிகிட்டு, அவர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிக்கிட்டு இருக்க என்னால முடியாது. தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்கப்பா"
"சரிடா" அழைப்பை துண்டித்தார் தில்லைராஜன்.
"மகிழனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீ ஒன்னும் அவளை கட்டாயப்படுத்தலையே?" என்றார் மணிமாறன்.
"கட்டாயப்படுத்தல... கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன். அதுக்கு அவ..."
அவரது பேச்சை துண்டித்து,
"உங்க இஷ்டம்னு சொல்லிட்டாளா?" என்றார் மணிமாறன்.
ஆமாம் என்று தலையசைத்தார் தில்லைராஜன். பெருமூச்சு விட்ட மணிமாறன்,
"சரி, நீ போய் அவளை கூட்டிகிட்டு வா" என்றார்.
"நீ மகிழனை எதுவும் சொல்லாத, மாறா"
"நான் அவனை ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனா இதுக்கப்புறம் அவன் பூங்குழலியை டிஸ்டர்ப் பண்ணாம நான் பார்த்துக்கிறேன்"
"அவளோட படிப்பை முடிக்கிற வரைக்கும் தானே..." புன்னகைத்தார் தில்லைராஜன்.
"அவங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும்" என்ற பதில் திடமாய் வந்தது மணிமாறனிடம் இருந்து.
தில்லைராஜன் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின், மகிழனுக்கு ஃபோன் செய்தார் மணிமாறன். அவரது அழைப்பை ஏற்றான் மகிழன்.
"சொல்லுங்கப்பா"
"எங்க இருக்க நீ?"
"ஃபிரண்ட்ஸோட ஹோட்டலுக்கு வந்தேன்" பொய்யுரைத்தான் மகிழன்.
"நீயும் உன் வீணாப்போன ஃபிரண்ட்ஸும்... உன் ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்துறதை தவிர, உனக்கு வேற எந்த வேலையுமே இல்லையா? நீ உருப்படவே மாட்டியா?"
"என்ன ஆச்சுப்பா? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?"
"உனக்கு பூங்குழலியோட கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கு. லைஃப்ல செட்டில் ஆகணும்னு கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா? உன்னோட அரியர் பேப்பர்ஸை எப்போ கிளியர் பண்ண போற?"
"இந்த தடவை எப்படியும் கிளியர் பண்ணிடுவேன் பா"
"கிழிச்ச... ஃபிரண்ட்ஸோட சினிமா, ஹோட்டல்ன்னு சுத்திக்கிட்டு இருந்தா, எப்படி செய்வ?"
"கூல் டவுன் பா"
"உடனே கிளம்பி வீட்டுக்கு வா. நாளைல இருந்து நீ என் கூட ஆபீசுக்கு வர போற. நீ ஊர் சுத்தி சீரழிஞ்சதெல்லாம் போதும்"
"ஆஃபீஸுக்கா? அய்யோ ப்ளீஸ் பா..."
"வாயை மூடிகிட்டு வீட்டுக்கு கிளம்பி வா. இன்னும் பதினைஞ்சி நிமிஷத்துல நீ வீட்ல இருக்கணும். இது என்னோட ஆர்டர்"
"சரி..." என்ற அவனது குரல், மங்கி ஒலித்தது.
அன்று நடந்தவற்றை கூறி முடித்தார் மணிமாறன்.
"பதினைஞ்சி நிமிஷத்துல மகிழன் வீட்டுக்கு வந்துட்டான்"
"அவங்க ரெண்டு பேருமே விருப்பத்தோட இருக்கிறதா நான் நினைச்சுக்கிட்டு இருந்தேனே..." என்றான் மலரவன்.
"நானும் கூட, பூங்குழலிக்கு மட்டும் தான் விருப்பம் இல்லைன்னு தப்பா தான் நினைச்சுகிட்டு இருந்திருக்கேன். இப்போ எனக்கு மகிழன் மேல கூட சந்தேகமா இருக்கு" என்றார் மணிமாறன் கோபமாய்.
"அப்புறம் எதுக்கு அவன் அவளை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டான்?"
"எங்களோட கல்யாண நாள் ஃபங்ஷன்ல தான் அவன் அவளை பார்த்திருக்கான். ஒரு வாரத்துல, எனக்கு பூங்குழலியை ரொம்ப பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்டான். " என்றார் மின்னல்கொடி.
"அன்னைக்கு நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, இன்னைக்கு அவனை கழுத்தை நெரிச்சி கொல்லனும்னு கோபம் வருது" என்றார் மணிமாறன்.
"அவன் அவளை உண்மையா நேசிக்கிறான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, என் தலையில இப்படி மண்ணை அள்ளி போடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" புலம்பினார் மின்னல்கொடி.
"ஒரு விதத்துல பார்க்க போனா, உனக்கு இந்தியாவுக்கு வர நேரம் கிடைக்காம போனது கூட நல்லது தான். கல்யாணத்துக்கு பிறகு, அவன் அந்த பொண்ணு கிட்ட இப்படி எல்லாம் மோசமா நடந்திருந்தா, அவ நிலைமை என்ன ஆகி இருக்கும்?"
"நீங்க சொல்றது சரி தான். பூங்குழலி மாதிரி ஒரு நல்ல பொண்ணு அவனுக்கு மனைவியா வரக்கூடாதுன்னு தான், கடவுளே மலரை இங்க வர விடாம தடுத்திருக்கு போலருக்கு" புடவை தலைப்பால் வாயை பொத்தி அழுதார் மின்னல்கொடி.
"அம்மா ப்ளீஸ் அழாதீங்க"
"என்னால எப்படி அழாம இருக்க முடியும்? சிவகாமியை பார்த்து மகிழனுக்கு கல்யாணத்ததுல விருப்பம் இல்லைன்னு சொல்ல போறதை நினைச்சாலே என் உடம்பெல்லாம் நடுங்குது"
சிவகாமியின் மீது இருந்ததை விட, இவர்களின் மீது அதிக வருத்தம் ஏற்பட்டது வடிவுக்கரசிக்கு. இவர்கள் நல்லவர்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார். பூந்தொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மேஜையின் மீது தான் கொண்டு வந்த மின்னல்கொடியின் மணிபர்சை வைத்துவிட்டு, பேசாமல் அங்கிருந்து சென்றார்.
.....
வீடு திரும்பிய வடிவுக்கரசி, பேசாமல் அமைதியாய் அமர்ந்து விட்டார். அவரைப் பார்த்த சிவகாமி,
"எப்பக்கா வந்தீங்க?' என்றார்.
"இப்ப தான் வந்தேன்"
"நீங்க அவங்களை பார்த்து பேசினீங்களா? என்ன சொன்னாங்க?"
"அவங்க வீட்டை விட அவங்க மனசு ரொம்ப பெருசு"
சிவகாமியும் பூங்குழலியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
"ஆனா மகிழன் அவங்களை மாதிரி இல்ல"
"நீங்க என்னக்கா சொல்றீங்க?"
"அவன் விரும்பினது நம்ம குழலியை இல்ல. அவளோட சொத்தை தான்"
"என்னக்கா சொல்றீங்க?"
"அவன் நம்ம குழலியை கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டான்"
"என்ன்னன...?" சிவகாமியின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"ஆமாம். அவளை அவன் பிச்சைக்காரின்னு சொன்னான்"
சிவகாமியின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது. பூங்குழலியோ மென்று விழுங்கினாள்.
"மணிமாறனும் மின்னல்கொடியும் உடைஞ்சி போயிருக்காங்க. மகிழன் மேல மலரவன் ரொம்ப கோபமா இருக்கான். நான் அங்க இருக்கேன்னு தெரியாம, அவங்களுக்குள்ள பேசிக்கிட்டதை நான் கேட்டேன். அவங்க மனசு ரொம்ப தங்கம். குற்ற உணர்ச்சியில புழுங்கி தவிக்கிறாங்க. அவங்கள மாதிரி நல்லவங்க கூட வாழ நம்ம குழலிக்கு கொடுத்து வைக்கல. ஆனா, நிச்சயமா அவ மகிழன் மாதிரி ஒரு முதுகெலும்பில்லாத ஒருத்தனோட வாழறதை நான் விரும்பல"
"எனக்கு கல்யாணமே வேண்டாம். அவனை விடுங்க... அந்த மடையனை எனக்கு பிடிக்கவும் இல்ல"
பூங்குழலிக்கு மகிழன் மீது விருப்பம் இல்லாததை பற்றி அவர்கள் பேசிக் கொண்டது வடிவுக்கரசிக்கு நினைவுக்கு வந்தது.
"அவ என்ன விருப்பபடுறாளோ அதை அவளை செய்ய விடு. மத்ததை கடவுள் கிட்ட விட்டுடு. அவர் பாத்துக்குவார்" என வடிவக்கரசி கூற, ஓவென்று அழுதார் சிவகாமி.
"அவங்க தான் எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை. இதுக்கப்புறம் நான் என்ன செய்யப் போறேன்? என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ண போறேன்?"
"அம்மா, என்னோட வாழ்க்கை கல்யாணத்தை மட்டுமே சார்ந்த விஷயம் இல்ல. எல்லாம் போதும்... யாரும் என்னை பிச்சைக்காரின்னு மறுபடியும் சொல்றதை நான் விரும்பல" அந்த இடத்தை விட்டு அகன்றாள் பூங்குழலி.
"அவ இன்னும் எவ்வளவு தான் கஷ்டப்படணுமோ..." கண்களில் ஈரம் கசிய கூறினார் சிவகாமி.
"மகிழன் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக அவ வருத்தப்படல. அவன் அவளை அவமதிச்சது தான் அவளுக்கு கோபம்"
செய்வதறியாது கலங்கினார் சிவகாமி. பூங்குழியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மகிழன் கூறிவிட்ட போதிலும், அவனது குடும்பத்தாரை ரொம்பவே பிடித்து விட்டது வடிவுக்கரசிக்கு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top