8 அதிர்ச்சி

பாகம் 8 அதிர்ச்சி

சிவகாமி கேட்டுக்கொண்டபடியே, அனைத்து சம்பிரதாயங்களும் அடுத்த மூன்று நாட்களில் முடித்துக் கொள்ளப்பட்டன. தில்லைராஜனின் குடும்பம், இரட்டைஏரியில் இருந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தார்கள். அவர்களை அங்கு குடியமர்த்த மணிமாறனின் குடும்பத்தாரும் உடன் சென்றார்கள். அந்த வீடு, அவர்களது பழைய வீட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாளில் ஒரு பங்கு தான் இருந்தது. அது அவர்களுக்கு வருத்தத்தை தந்தது. எப்படி வாழ்ந்த குடும்பம் அது...!

சிவகாமியுடன் சேர்ந்து, துணிமணிகளை அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தில்லைராஜனின் அக்கா, வடிவுக்கரசியிடம் வந்த மின்னல்கொடி,

"நீங்க ஈரோட்டுக்கு திரும்பி போக போறீங்களா?" என்றார்.

"நான் எப்படி இவங்களை தனியா இங்கே விட்டுட்டு போறது? எனக்கு திரும்பி போற எண்ணமே இல்ல. ஈரோட்டில் இருக்கிற என்னோட வீட்டை கூட வித்துடலாம்னு யோசிச்சுக்கிட்டு  இருக்கேன்"

"ஆமாம் மின்னல். அக்கா எங்க கூட இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது." என்றார் சிவகாமி.

"ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என்ன வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் எங்களுக்கு கால் பண்ணுங்க" என்றார் மின்னல்கொடி வடிவுக்கரசியிடம்.

"நிச்சயமா செய்றேன்... நீங்க தான் எங்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை. சிவகாமிக்கும் பூங்குழலிக்கும் உங்களோட சப்போர்ட் கெடச்சது ரொம்ப பெரிய விஷயம்"

"எனக்கு தெரியுங்க. அவங்களுக்கு நாங்க இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க" என்றார் மின்னல்கொடி சிவகாமியை பார்த்தபடி.

"நீங்க மட்டும் இல்லன்னா நாங்க என்ன ஆகிருப்போம்னு தெரியல. நீங்க இருக்கிற தைரியத்துல தான் என்னோட மூச்சே சீறா ஓடிக்கிட்டு இருக்கு" என்றார் சிவகாமி.

"கவலைப்படாத சிவா. செய்ய வேண்டியதை நம்ம சீக்கிரமே செய்யலாம்" பூங்குழலியை பார்த்தபடி கூறினார் மின்னல்கொடி. அவரது வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட பூங்குழலி, தலை குனிந்து கொண்டாள்.

சந்தோஷமாய் தலையசைத்தார் சிவகாமி.

"மலரவன் இந்தியாவில் இருக்கான். அவன் இங்க இருக்கும் போதே மகிழனுக்கும் பூங்குழலிக்கும் கல்யாணத்தை முடிச்சிடறது நல்லதுன்னு எனக்கு தோணுது" என்றார் மின்னல் கொடி.

அதைக் கேட்ட பூங்குழலி திடுக்கிட்டாள்.

"ஆன்ட்டி, ப்ளீஸ்... இப்ப தான் அப்பா இறந்திருக்காரு... தயவு செய்து, அதுக்குள்ள இந்த பேச்சை எல்லாம் எடுக்காதீங்க."
 
"குழலி... பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது நடுவுல மூக்கை நுழைகிறது என்ன பழக்கம்? நாளைக்கேவா உன்னோட கல்யாணத்தை நாங்க நடத்திட போறோம்? இப்போ இதை பத்தி பேச ஆரம்பிச்சா தான், ஒரு மாசத்துலயோ ரெண்டு மாசத்துலயோ அதை செஞ்சு முடிக்க முடியும்" அவளை கடிந்து கொண்டார் வடிவுக்கரசி.

"அவ சொல்றது ஒன்னும் தப்பில்லையே... நம்ம அவளோட உணர்வுக்கு மரியாதை கொடுக்கணும். ஏன்னா, அவ தானே வாழ போறவ...! நீ கவலைப்படாதே டா. நாங்க உன்னை எதுக்காகவும் கட்டாயப்படுத்த மாட்டோம்" என்றார் மின்னல்கொடி.

"எல்லாம் சரிங்க. யார் உங்களுடைய இளைய மகன்? நான் அவரை பார்க்கவே இல்லையே. உங்க மூத்த மகன் தான் இங்க இருக்காரு..." என வடிவுக்கரிசி கேள்வி எழுப்ப, மின்னல்கொடியை பதற்றம் தொற்றிக் கொண்டது.

இப்படி ஒரு கேள்வி எழும் என அவர் எதிர்பார்த்து இருந்தார் தான்.

"அவன் இங்க தானே இருந்தான்... நீங்க அவனை பாக்கலையா? வெள்ளை சட்டை போட்டிருந்தானே..."

"ஓ, அந்தப் பிள்ளையா? அவர் உங்களுக்கு சொந்தமில்லாத வேற யாரோன்னு நான் நெனச்சேன்"

அவர் இடித்துக் கூறுவது என்ன என்பது மின்னல்கொடிக்கு புரிந்தே இருந்தது. ஏனோ, இப்போதெல்லாம் மகிழன் எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் இருக்கிறான்.

"நீங்க எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும்" என்று பேச்சை மாற்றினார் மின்னல்கொடி.

"நிச்சயமா வரேன்" என்றார் வடிவுக்கரசி.

அப்போது மலரவனுடன் அங்கு வந்த மணிமாறன்,

"நம்ம கிளம்பலாமா?" என்றார்.

சரி என தலையசைத்தார் மின்னல்கொடி.

"நாங்க சீக்கிரமே பூ முடிக்க வருவோம்" என்று அவர் கூறியது பூங்குழலியை சங்கடத்தில் ஆழ்த்தியது.

"ரொம்ப சீக்கிரம் வந்துட மாட்டோம் கவலைப்படாதே" என அவர் பூங்குழலியை பார்த்து புன்னகைத்தார்.

புரிந்து கொண்டேன் என்பது போல் தலையசைத்த பூங்குழலி, மென்மையாய் புன்னகைத்தாள்.

அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தங்கள் காரை நோக்கி நடந்தார்கள் மணிமாறன் குடும்பத்தினர். அங்கு மகிழனை காணவில்லை.

"மகிழன் எங்க?" என்றார் மின்னல்கொடி.

"அவன் ஃப்ரெண்டு கிட்டயிருந்து ஃபோன் வந்ததுன்னு கிளம்பி போயிட்டான்" என்றார் மணிமாறன் வெறுப்புடன்.

அவர்கள் காரில் ஏறி அமர்ந்தார்கள். ஓட்டுநர் இருக்கையை மலரவன் ஆக்கிரமித்துக் கொள்ள, அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டார் மணிமாறன். பின் இருக்கையில் மின்னல்கொடி அமர்ந்தவுடன், வண்டியை கிளப்பினான் மலரவன்.

"ஏன் மகிழன் இப்படியெல்லாம் செய்றான்? அவன் அடியோட மாறிப் போயிட்டான்... எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல" பொறுமினார் மின்னல்கொடி.

"இன்னைக்கு அவன்கிட்ட இதை பத்தி நான் பேசுறேன். தில்லை வீட்ல இருந்த வரைக்கும் அவன் கிட்ட பேசவே எனக்கு நேரம் கிடைக்கல" என்றார் மணிமாறன்.

"பூங்குழலியை நெனச்சா ரொம்ப கவலையா இருக்குப்பா. அவன் இப்படி விலகி போறதை நினைச்சா, அந்த பொண்ணுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்?" என்றான் மலரவன்.

"இன்னைக்கு அவங்க கல்யாணத்தை பத்தி அவன்கிட்ட நம்ம நிச்சயமா பேசியே ஆகணும்" தீர்க்கமாய் கூறினார் மின்னல்கொடி.

"ஆம்" என்று ஆமோதித்தான் மலரவன்.

மாலை

வீட்டுக்கு வந்த மகிழன், தனது பெற்றோர், தன் அண்ணனுடன் அமர்ந்து தேநீர் பருகி கொண்டிருப்பதை கண்டான். அவனும் வந்து அவர்களுடன் அமர்ந்தான்.

"எங்க போயிருந்த?"

"ஒரு ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்" என்ற அவன், வேலைக்காரனை அழைத்தான்.

"தண்டபாணி அண்ணா..."

சமையலறையை விட்டு வெளியே வந்தான் தண்டபாணி.

"எனக்கு ஒரு காபி கொண்டு வாங்க"

"சரிங்க தம்பி" அவர் மீண்டும் சமையலறைக்கு சென்றார்.

பேச்சை துவங்குமாறு மணிமாறனுக்கு சைகை காட்டினார் மின்னல்கொடி.

"நம்ம ஏற்கனவே பேசி வச்ச மாதிரி, உன்னோட கல்யாணத்தை பூங்குழலியோட நடத்த இது தான் சரியான நேரம்னு நினைக்கிறேன். மலரவனும் இந்தியாவில் இருக்கான். அவன் இந்தியாவை விட்டு கிளம்பி போறதுக்கு முன்னாடி, இந்த கல்யாணத்தை முடிக்கிறது நல்லதுன்னு எனக்கு தோணுது. இதை தாமதம் செய்ய நான் விரும்பல" தலையை சுற்றி மூக்கை தொடாமல், நேரடியாக விஷயத்திற்கு வந்தார் மணிமாறன்.

"ஆமாம். இதை நம்ம சீக்கிரமா முடிக்கணும். அப்ப தான் சிவகாமி நிம்மதியா இருப்பா" என்றார் மின்னல்கொடி.

"அம்மா, நானும் இதைப் பத்தி உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்" என்றான் மகிழன்.

சந்தோஷமாய் மணிமாறனுடன் பார்வையை பகிர்ந்து கொண்டார் மின்னல்கொடி. அப்படி என்றால், மகிழனும் பூங்குழியை சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். பரவாயில்லை, அவர்கள் நினைத்தது போல் அவன் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை. ஆனால் அவன் உதிர்த்த அடுத்த வார்த்தைகள், அங்கிருந்த மற்ற மூவரின் மூச்சை நிறுத்தியது.

"நான் பூங்குழியை கல்யாணம் பண்ணிக்க விரும்பல" என்றான் குரலை தாழ்த்தி.

அவன் கூறியதன் பொருளை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்ட மற்ற மூவரும் தங்கள் தலையில் இடி இறங்கியது போல் உணர்ந்தார்கள்.

"நீ இப்ப என்ன சொன்ன?" என்றார் மணிமாறன் நம்ப முடியாமல்.

அமைதியாய் இருந்தான் மகிழன்.

"நீ தானே அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்பின?" என்று சீறினான் மலரவன்.

"அவ நம்ம ஸ்டேட்டஸுக்கு ஈக்குவலா இருந்த போது விரும்பினேன்..."

"அப்படின்னா, நீ விரும்பினது அவளை இல்ல... அவளோட சொத்தை தான் இல்லையா?" கொதித்துப் போனான் மலரவன்.

"சொத்தோட இருந்த அவளை விரும்பினேன்..."

"ரெண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல" கோபத்தில் பொறி பறந்தது மலரவனின் பேச்சில்.

"இருந்துட்டு போகட்டுமே..." சாதாரணமாய் கூறினான் மகிழன்.

"மகிழா, நீ செய்யறது சரி இல்ல..." திகிலுடன் கூறினார் மின்னல்கொடி.

"மகிழா, பூங்குழலியை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்னு அவளுக்கு தெரிஞ்சா, அவ மனசு என்ன பாடுபடும்?" மென்று விழுங்கினான் மலரவன்.

"பிராக்டிகலா யோசிச்சு பாரு மலரா, நம்ம சென்டிமென்டல் இடியட்ஸா இருக்கக் கூடாதுன்னு நீ தானே சொல்லுவ?"

"நான் சொன்னது பிசினஸ்... குடும்பத்துக்கு அது தகாது..."

"என்னை பொறுத்த வரைக்கும்,  பிசினஸை விட குடும்பம் ரொம்ப முக்கியம். என்னால் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது. எதுவுமே இல்லாத ஒரு பிச்சைக்காரியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது?"

அவனது வார்த்தைகள், அவர்களது காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் பாய்ந்தது.

"நாக்கை அடக்கி பேசு, மகிழா" எச்சரித்தார் மணிமாறன்.

"ஏம்பா? நான் சொன்னாலும், சொல்லலனாலும், அவ இப்ப பிச்சைக்காரி தானே? என் பொண்டாட்டியை பத்தியும், அவளோட ஸ்டேட்டஸை பத்தியும் நான் பெருமையா சொல்லிக்கிற மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன். அடுத்த வேலை சோத்துக்கே அடுத்தவங்க கையை எதிர்பார்த்துகிட்டு இருக்கிற ஒரு பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?"

மணிமாறன் ஏதோ சொல்ல முயல, அவரை தடுத்தான் மலரவன்.

"அப்பா, அந்த பொண்ண, அவன் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி குறிப்பிட்ட பிறகு, அவன் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இருக்கும்னு எனக்கு தோணல"

அவனை திகிலுடன் ஏறிட்டார் மணிமாறன். மின்னல்கொடியோ பேயறைந்தது போல் நின்றிருந்தார்.

"மலர் சொல்றது சரி தான். தன்னைப் பத்தி இவன் இவ்வளவு கீழ்த்தரமா நினைச்சுக்கிட்டு இருக்கான்னு பூங்குழலிக்கு தெரிஞ்சா, அவ நிச்சயம் இவனோட சந்தோஷமா வாழவே மாட்டா. எதிர்காலத்துல, இவன் அவளை குத்தி காட்டி பேசியே கொன்னுடுவான்" என்று கூறிய மின்னல்கொடியின் தொண்டை கட்டியது.

"அம்மா, அவளுக்கு பணம் சம்பாதிக்க  வேண்டிய உதவியை செஞ்சு கொடுங்க. நம்ம ஆபீஸ்லயே கூட வேலை போட்டு கொடுங்க. அவ தகுதிக்கு ஏத்த மாதிரி ஒருத்தனை பார்த்து கல்யாணம் கூட பண்ணி வையுங்க... அதை விட்டுட்டு..." தன் தோள்களை குலுக்கினான் மகிழன்.

"நாங்க என்ன செய்யணும்னு நீ எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இதுக்கு அப்புறம் அந்த பொண்ணை பத்தி ஏதாவது பேசினா, உன் பல்லை எல்லாம் உடைச்சிடுவேன், ராஸ்கல்..." குமுறினார் மணிமாறன்.

"நான் என்னமோ தினமும் அவ கூட ஊர் சுத்திகிட்டு இருந்த மாதிரி எதுக்கு இப்படி தேவையில்லாம ரியாக்ட் பண்றீங்க? எங்க ரிலேஷன்ஷிப்ல அவ எந்த இன்ட்ரெஸ்ட்டுமே காட்டினதில்ல... நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டது கூட இல்ல... கடவுள் புண்ணியத்துல அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. அதனால அவ மனசை மாத்திக்கிறது ஒன்னும் அவளுக்கு கஷ்டமா இருக்காது" கூறிவிட்டு அந்த இடம் விட்டு அகன்றான் மகிழன்.

தொப்பென்று சோபாவில் அமர்ந்தார் மணிமாறன். கோபத்தில் கொந்தளித்தான் மலரவன். பூங்குழலியை பிச்சைக்காரி என்று கூறியதற்காக, மகிழனின் முகத்தை அடித்து உடைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. தான் நேசித்த ஒரு பெண்ணை எப்படி அவ்வளவு சுலபமாய் அப்படி கூறி விட முடியும்? உண்மையிலேயே மகிழன் அவளை உண்மையாய் நேசித்தானா? நிச்சயம் இருக்காது. அவளை உளமாற நேசித்தவனாய் இருந்திருந்தால், அவளை இப்படி விட்டுக் கொடுக்க அவனுக்கு தோன்றாது. பைத்தியக்காரன்... உறவை விட பணத்தின் மீது தானா இவனுக்கு நாட்டம்? அதனால் தான் தில்லைராஜனின் இறுதி சடங்கில் கூட இவன் விலகியே இருந்தானா? தன் மனதில் எழுந்த கோபத்தை அடக்க முஷ்டியை இறுக்கினான் மலரவன்.

அவர்களுக்கு தெரியாது, அங்கு நடந்த அனைத்தையும், தில்லைராஜனின் வீட்டில், மின்னல்கொடி விட்டு விட்டு வந்த அவரது மணிபர்சை திரும்ப கொடுக்க வந்த வடிவுக்கரசி கேட்டுவிட்டார் என்று.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top