7 முந்திக்கொண்ட மலரவன்
7 முந்திக்கொண்ட மலரவன்
தில்லைராஜனின் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் அப்பாவின் காரிலேயே மலரவன் படுத்துக்கொள்ள, மணிமாறன் வரவேற்பறையில் இருந்த சோபாவிலும், மின்னல்கொடி சிவகாமியுடனும் படுத்துக்கொண்டார்கள். மிகவும் கலைப்பாய் இருந்ததால், படுத்தவுடன் உறங்கிப் போனார் மின்னல்கொடி. ஆனால் சிவகாமியோ நள்ளிரவு வரை தூக்கம் வராமல் விழித்திருந்தார். பூங்குழலி சுத்தமாய் தூங்கவே இல்லை. அவள் தான் மருத்துவமனையிலேயே தேவையான அளவு உறங்கி விட்டாளே. தன் அறையில் இருந்த ஜன்னல் அருகே வந்த அவள், வெளிப்பக்கம் பார்த்தபடி நின்றிருந்தாள்.
அப்போது, மலரவன் காரின் பின் இருக்கையில் இருந்து இறங்கி, முன் இருக்கையின் கதவை திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து பார்ப்பதை கண்டாள். அந்த பாட்டில் காலியாய் இருந்தது. சமையலறைக்குச் சென்ற பூங்குழலி, குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தண்ணீர் அருந்தாமலேயே மலரவன் உறங்க முற்படுவதை கண்ட அவள், காரின் கண்ணாடி ஜன்னலை தட்டினாள். அவள் நிந்திருப்பதை பார்த்த மலரவன், அவசரமாய் காரை விட்டு கீழே இறங்கி வந்தான்.
"பூங்குழலி, நீ இங்க என்ன பண்ற?"
தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள்.
"தண்ணி வேணும்னா என்னை கேட்டிருக்கலாமே..."
"எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கீங்க. உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்"
"இதுல என்ன டிஸ்டர்பன்ஸ் இருக்கு? உங்களுக்கு எது வேணும்னாலும் என்னை கேட்கலாம்"
"சரி, எனக்கு எது வேணும்னாலும் கேக்குறேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, காரில் அமர்ந்தபடி புன்னகையுடன் தண்ணீர் அருந்தினான் மலரவன்.
மறுநாள்
தில்லைராஜனின் வீட்டிற்கு வந்த மகிழன், அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமைதியாய் அமர்ந்து கொண்டான். அதைக் கண்ட மலரவன், அவனிடம் வந்தான்.
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"சொல்லு மலரா"
"உள்ள போய், சிவகாமி ஆன்ட்டி கிட்டையும் பூங்குழலி கிட்டயும் ஆறுதலா நாலு வார்த்தை பேசு"
"அவங்க இப்போ ஆறுதல் அடையுற நிலைமையில இல்லன்னு நினைக்கிறேன்"
"அதுக்கு???? நீ அப்படியே விட்டுடுவியா? நீ இந்த குடும்பத்தோட மருமகனாக போற. அவங்க மேல உனக்கு பொறுப்பில்லையா? உன்னோட வார்த்தை அவங்களுக்கு ஆறுதல் தராதுன்னு யார் சொன்னது? மத்தவங்களோட வார்த்தைகள் வேணும்னா அவங்களுக்கு ஆறுதலை தராம போகலாம். ஆனா, உன்னோட வார்த்தைகள் அப்படி இல்ல. ஏன்னா, நீ அவங்களுக்கு வரப்போற மருமகன்"
"நான் அதுக்கு சொல்லல மலரா"
"வாயை மூடிக்கிட்டு சொன்னதை செய்"
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மணிமாறன் அவர்களிடம் வந்தார்.
"உனக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாதா? ஒவ்வொன்னுத்துக்கும் உன்னை நாங்க பிடிச்சு தள்ளிக்கிட்டே இருக்கணுமா? சாதாரண விஷயத்தை கூட உன்னால புரிஞ்சுக்க முடியாது?" அவனைக் கடிந்து கொண்டார் மணிமாறன்.
"அப்பா, இது தான் நான். அது உங்களுக்கும் தெரியும். நீங்க எல்லாத்துக்கும் எப்பவும் என்னை பிடிச்சி தள்ளிக்கிட்டே இருக்க முடியாது. அதனால என்னை என் வழியில விட்டுடுங்க" அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தான் மகிழன்.
கோபத்தில் பல்லை கடித்தான் மலரவன்.
"இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லப்பா"
"அவன் இப்படித் தான் இருக்கான். கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. இவன் எப்படி பூங்குழலிக்கு ஒரு நல்ல புருஷனா இருக்க போறான்னு எனக்கு தெரியல"
"அப்புறம் எதுக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்க?" என்றான் அலுப்புடன்.
"பூங்குழலி மாதிரி ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சா பொறுப்பு வரும்னு நினைச்சோம்"
எரிச்சலுடன் முகத்தை திருப்பினான் மலரவன்.
"நம்ம இவங்களுக்கு சீக்கிரமா ஒரு வீடு ஏற்பாடு பண்ணனும்"
"தேவையில்லப்பா. நேத்து ராத்திரி, ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வரும் போது, பூங்குழலி கிட்ட இதை பத்தி பேசினேன். அவங்களுக்கு ரெட்டைஏரியில ஒரு வீடு இருக்காம்"
"அது யாரோட வீடு?"
"அவங்க பாட்டியோட வீடு"
"அப்படியா?"
"ஆமாம். தில்லை அங்கிளோட காரியம் முடிஞ்ச பிறகு, அவங்க அங்க ஷிப்டாகலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க"
பெருமூச்சு விட்ட மணிமாறன்,
"பூங்குழலி கிட்ட முன்னே விட இப்போ கொஞ்சம் தன்னம்பிக்கை தெரியுது இல்ல?" என்றார்.
ஆமாம் என்று தலையசைத்தான் மலரவன்.
"அவ யதார்த்தத்தை புரிஞ்சுகிட்டான்னு நினைக்கிறேன்" என்ற மணிமாறன், அவளுக்கு அந்த தன்னம்பிக்கையை கொடுத்தது மலரவனாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் அவருக்கு தெரியும், மலரவன் அவ்வளவாக யாரிடத்திலும் கலந்து உரையாடுவதில்லை. அதிலும் மற்றவர்களுடைய சொந்த விஷயம் என்றால், அவன் அதில் நிச்சயம் தலையிடவே மாட்டான்.
அப்போது குமரேசன் தன் குடும்பத்தாருடன் அங்கு வருவதை கண்டார் மணிமாறன்.
"இவனை யார் இங்க வர சொன்னா?" என்றார் எரிச்சலுடன்.
"யாரை சொல்றீங்க?"
"குமரேசனை"
"தில்லை அங்கிள் ஃபேமிலிக்காக அவங்க இங்க வந்திருக்கலாம்"
"இல்ல. அவங்க தில்லை குடும்பத்துக்கு ஃபிரண்ட் கிடையாது. குமரேசன், தில்லை கூட அதிகமா பேசவே மாட்டான். அவங்க இங்க உனக்காக தான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்" என்றார் தயங்கியபடி.
"அப்பா, நான் உங்களை வார்ன் பண்றேன். என்கிட்ட அவங்க கல்யாணத்தை பத்தி பேசினா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. கல்யாணத்தை பத்தி பேசுற இடமா இது?" எரிச்சல் காட்டினான்.
"ரிலாக்ஸ் மலரா. கோவப்படாம அவங்களை ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணு"
"எனக்கு எதையும் ஸ்மூத்தா ஹேண்டில் பண்ண தெரியாது பா"
மணிமாறன் கூறியது போலவே, அவர்களை நோக்கி வந்தார் குமரேசன்.
"நான் இப்ப வரேன்" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் மலரவன்.
சில நொடிகள் ஒன்றும் புரியாமல் நின்ற குமரேசன், தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார்.
"ஹலோ மாறா..."
"நீ இங்க என்ன பண்ற?"
"உனக்கும் சிஸ்டருக்கும் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தோம்"
"இல்ல, இல்ல, எங்களுக்கு எந்த ஹெல்ப்பும் தேவையில்ல"
"ஆங்... உனக்கு ஹெல்ப் பண்ண தான் மலரவன் வந்துட்டானே..."
ஆம் என்று தலையசைத்தார் மணிமாறன்.
தன் அம்மாவை தேடி வீட்டிற்குள் வந்த மலரவன், அவர் சமையலறையில் இருப்பதைக் கண்டான். அவரிடம் வந்து அவரது தோளைத் தொட்டான்.
"மலரா, உனக்கு பசிக்குதா? வா, வந்து ஏதாவது சாப்பிடு"
"எனக்கு ஒரு கப் காபி மட்டும் போதும் மா"
"சரி இரு"
பாலை அடுப்பில் வைத்து சூடேற்றினார் மின்னல்கொடி. அப்போது அங்கு வந்தாள் பூங்குழலி.
"குழலி, உனக்கு ஏதாவது வேணுமா டா?"
"எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா ஆன்ட்டி? தலை ரொம்ப வலிக்குது"
மின்னல்கொடி மலரவனை பார்க்க, அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
"என்ன ஆச்சு?"
"ஒன்னும் இல்ல டா. மலரும் இங்க காபிக்காக தான் வந்திருக்கான்"
"நீ நேத்து ராத்திரி நல்லா தூங்கலையா பூங்குழலி?" என்றான் மலரவன்.
பாலை எடுக்க நீண்ட மின்னல்கொடியின் கரம் அப்படியே நின்றது. அவர் திரும்பி மலரவனை ஏறிட்டார்.
"தூங்கினேன்"
"நீ எனக்கு தண்ணி கொடுக்கும் போது ராத்திரி ரெண்டு மணி. அதுக்கப்புறம் எப்ப தூங்கின?"
"அதுக்கப்புறம் தூங்கிட்டேன்"
"நெஜமாவா?"
"ம்ம்ம்"
அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல், அவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார் மின்னல்கொடி. முதல் நாள் இரவு, மலரவனுக்கு பூங்குழலி தண்ணீர் கொடுத்திருக்கிறாள் என்பது அவருக்கு புரிந்தது. இருவரிடமும் காபி குவளைகளை கொடுத்தார்.
"தேங்க்யூ ஆன்ட்டி"
"எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்லனும்னு அவசியம் இல்லடா"
வலி நிறைந்த புன்னகையை பதிலாய் தந்தாள் பூங்குழலி.
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்க தான் வந்தேன்" என்றாள் பூங்குழலி தன் கையில் இருந்த காபி குவளையை பார்த்தபடி.
காபியை பருகியபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன். மின்னல்கொடியோ மலரவனை ஏறிட்டார். பூங்குழலி எதை, யாரிடம் கேட்கப் போகிறாள் என்று அவருக்கு புரியவில்லை.
"நான் வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்"
காபி குடிப்பதை நிறுத்திவிட்டு மின்னல்கொடியை ஏறிட்டான் மலரவன். அவரோ மென்று விழுங்கியபடி நின்றிருந்தார்.
"அம்மாவுக்கு என்னை விட்டா வேற யாரும் இல்ல. அவங்களுக்கு நான் துணையா இருக்க வேண்டியது அவசியம்னு நினைக்கிறேன். நான் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். அவங்களுடைய நிலைமையை மோசமாக்க நான் விரும்பல" தலையை நிமிர்ந்து, சோகமே வடிவாய் நின்றிருந்த மின்னல்கொடியை ஏறிட்டாள்.
மின்னல்கொடி ஏதோ சொல்ல முயல,
"நான் ஏற்பாடு பண்றேன்" என்று முந்திக் கொண்டான் மலரவன். அவனை திகைப்புடன் பார்த்தார் மின்னல்கொடி.
"ரொம்ப தேங்க்ஸ்" புன்னகைத்தாள் பூங்குழலி.
தன் கையை நீட்டி, மலரவனின் கையில் இருந்த காலி குவளையை கொடுக்குமாறு சைகை செய்தாள். அவன் அதை அவளிடம் கொடுத்தவுடன், இரண்டு குவளைகளையும் கழுவி வைத்துவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள்.
"என்ன மலரா இப்படி பண்ணிட்ட? அவ நம்ம வீட்டுக்கு மருமகளா வரப்போறவ"
"அதனால என்ன மா?"
"அவ வேலைக்கு போனா, பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க?"
"மா, அவளோட நிலைமையை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அவ உடைஞ்சு போய் இருக்கா. முதல்ல அவ அந்த சோகத்துல இருந்து வெளியில் வரட்டும். அவ தைரியமா இருக்க வேண்டியது அவசியம் இல்லையா? ஒரு வேலை கிடைச்சா, அவ தைரியமா இருப்பானா, தயவு செய்து அவளை தடுக்காதீங்க. அவ அழுகையை நிறுத்தி இருக்கா, ஆனா அதுக்காக அவ சந்தோஷமா இருக்கான்னு அர்த்தம் இல்ல. நம்ம தான் மா அதை செய்யணும்"
ஆமோதிப்பாய் தலையசைத்த அவர்,
"இவ விஷயத்துல நீ யோசிக்கிற மாதிரியே மகிழனும் யோசிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்" என்றார் சோகமாய்.
"நான் அவன் மேலே கொலை காண்டுல இருக்கேன். அவன் செய்றது கொஞ்சம் கூட சரியில்லமா" தனது அதிருப்தியை வெளிப்படுத்தினான் மலரவன்.
"இந்த சூழ்நிலையை எந்த பாதகமும் இல்லாம எப்படி எடுத்துக்கிட்டு போறதுன்னு எனக்கு புரியல. நல்ல காலம் நீ எங்க கூட இருக்க"
"நீங்க தேவையில்லாம கவலைப்படாதீங்க. நம்ம வீட்டுக்கு போனதுக்கு பிறகு, அவன்கிட்ட பேசலாம்"
"சரி..."
அப்போது அவர்கள்,
"ஹாய் ஆன்ட்டி..." என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். சமையலறையின் முகப்பில் நின்றிருந்தாள் கீர்த்தி.
தன் பார்வையை மெல்ல மலரவனின் பக்கம் திருப்பினார் மின்னல்கொடி. அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அங்கிருந்து நடந்தான் மலரவன்.
"ஹாய்" என்று தன் கையை அவனை நோக்கி நீட்டினாள் கீர்த்தி.
அவள் கையைப் பார்த்த மலரவன், கைகுலுக்காமல் வெளியேறினான். கொதிப்படைந்த கீர்த்தி தன் விரல்களை மடக்கி கொண்டாள்.
"அவன் யார்கிட்டயும் பேச மாட்டான்" என்றார் மின்னல்கொடி.
போலி புன்னகை உதிர்த்த கீர்த்தி, 'சற்று நேரத்திற்கு முன் அவன் பூங்குழியிடம் பேசிக் கொண்டு இருக்கவில்லையா?' என்று எண்ணினாள்.
அதன் பிறகு, சுத்தமாய் கீர்த்தியை தவிர்த்தான் மலரவன். அதை மின்னல் கொடியும் மணிமாறனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். குமரேசனும், கீர்த்தியும் நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு எரிச்சல் அளித்தது. மலரவனுக்கு கீர்த்தியின் மீது சிறிதும் நாட்டமில்லை என்பதை அவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?
மணிமாறனையும் மின்னல்கொடியையும் வருமாறு அழைத்தார் சிவகாமி. அவர்கள் சிவகாமியின் அறைக்கு வந்தார்கள்.
"அண்ணா, இந்த சம்பிரதாயத்தை எல்லாம் சீக்கிரமாகவே முடிச்சிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்"
மணிமாறனும் மின்னல்கொடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நமக்கு பேங்க்ல ஒரு வாரம் டைம் கொடுத்திருக்காங்க. ஆனாலும் எனக்கு இங்கே இருக்க விருப்பமில்ல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுக்கலாம் அண்ணா" அவரது தொண்டையை அடைத்தது.
"நீ எதுக்காக மா கவலைப்படுற? நாங்க தான் இருக்கோம்ல?"
தன் முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அழுதார் சிவகாமி.
"அழாத சிவா. பூங்குழலி இப்போ எவ்வளவோ பரவாயில்ல. அவ வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராயிட்டா. நீ அழுது அவளை பலவீனமாக்காதே" மின்னல் கொடி அவரை சமாதானப்படுத்த முயன்றார்.
"அது தான் மின்னல் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. எவ்வளவு சந்தோஷமா, கவலை இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா என் குழந்தை. இந்த குடும்பத்தோட சுமையை சுமக்க, அவ தன்னை தயார் பண்ணிக்கிறதை பார்க்கவே கோராமையா இருக்கு. அவ செய்யாத தப்புக்காக அவளுக்கு ஏன் இந்த தண்டனை? இது அவங்க அப்பா செஞ்ச தப்பு. வாழ்க்கை ஏன் அவளை இப்படியெல்லாம் சோதிக்குதுன்னு எனக்கு தெரியல. குருவி தலையில பனங்காய் வச்சா மாதிரி என் குழந்தை தடுமாறி நிற்கிறா" வெடித்து அழுதார் சிவகாமி.
மணிமாறன் செய்வதறியாது தவித்தார். மின்னல்கொடியோ அவரை சமாதானப்படுத்த முயன்றார். அவர்களுக்கு மனம் கனத்துப் போனது. தன் அம்மாவின் அழுகையை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலி, அழுதுவிடாமல் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
அந்த காட்சியை கண்ட மலரவன் திகைத்துப் போனான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top