6 பழையவள் என்றாலும் புதியவள்

6 பழையவள் என்றாலும் புதியவள்

இரவு உணவை சாப்பிடவில்லை மலரவன். அவனுக்கு எதுவும் சரியாக படவில்லை. அதனால் மின்னல் கொடி அனுப்பியிருந்த உணவை அவன் தொடவே இல்லை.

ஏன் மகிழன் இப்படி இருக்கிறான்? அவன் இவ்வளவு பொறுப்பில்லாதவனா? அவனுக்கு தன் பொறுப்பு புரியவில்லை என்றால், அவனுக்கு அதை உணர்த்த வேண்டியது தன் பொறுப்பு என்று உணர்ந்தான் மலரவன். அவனிடம் அதைப் பற்றி பேசுவது என்றும் தீர்மானித்தான். ஒரு பெண்ணுக்கு தன் நல்லுறவில் நம்பிக்கை அளித்த பின், எவ்வாறு அந்த நம்பிக்கையை உடைக்க முடியும்? பூங்குழியை முதலில் திரும்பியது மகிழன் தான். அவன் தான் அவனது பெற்றோரிடம் கூறி, அவனுக்காக பூங்குழியை பெண் கேட்கச் சொன்னது. மணிமாறனும் மின்னல்கொடியும் மட்டுமல்ல, தில்லைராஜனும் சிவகாமியும் கூட ஆனந்தத்தில் திளைத்தார்கள். எல்லோரை விடவும் பேரானந்தம் அடைந்தது மணிமாறன் தான். ஏனென்றால் அவருக்குத் தெரியும், பூங்குழலியின் ரூபத்தில் தங்களுக்கு கிடைக்கப் போவது மருமகள் அல்ல, ஒரு மகள் என்று. அவர்களுக்கு ஏற்கனவே பூங்குழலியை மிகவும் பிடிக்கும். பூங்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மகிழன் கூறியவுடனேயே அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள்.  அவள் படிப்பை முடித்தவுடன் திருமணம் என்று நிச்சயத்துக் கொண்டார்கள். அவள் படிப்பை முடித்த பின், அவர்களது திருமணத்தை முடிக்க, மணிமாறனும் மின்னல்கொடியும் மலரவனை இந்தியா வர சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவனுக்கு அதற்கு நேரமே அமையவில்லை. லண்டனில் இருந்த அவர்களது நிறுவனத்தின் கிளை, அவனை மொத்தமாய் எடுத்துக் கொண்டு விட்டது.

பூங்குழலிக்கு ஏற்றப்பட்ட சலைன், முடியும் நிலையில் இருந்தது. அங்கு வந்த ஒரு செவிலி, அவளுக்கு ஊசி போட்டு விட்டு சென்றார். ஊசி போடும் போது, மயக்க நிலையிலையே முகம் சுளித்தாள் பூங்குழலி. அதை பார்த்த மலரவனுக்கு, அவள் சீக்கிரம் சுய நினைவிற்கு வந்து விடுவாள் என்ற நம்பிக்கை வந்தது.

அவன் எதிர்பார்த்தபடியே மெல்ல கண் திறந்தாள் பூங்குழலி. தான் எங்கிருக்கிறோம் என்பதும், தனக்கு என்ன நேர்ந்தது என்பதும் அவளுக்கு புரியவில்லை. தன் அருகில் அமர்ந்து, மலரவன் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள். அவள் எழ முயன்ற போது, அவள் கையில் ஏற்றப்பட்டிருந்த ஊசி குத்தியதால்,

"இஸ்ஸ்..." என்றாள்.

"கேர்ஃபுல்" என்றான் மலரவன்.

தன் கையை பிடித்தபடி முகம் சுருக்கினாள்.

"எழுந்துக்காதே... கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக்கோ" அவன் இட்ட கட்டளையில் மென்மை இருந்தது.

"அம்ம்ம்மா...?" இங்கும் அங்கும் பார்த்தபடி அழைத்தாள்.

"அவங்க வீட்ல இருக்காங்க"

"மின்னல் ஆன்ட்டி?"

"உங்க அம்மாவோட இருக்காங்க. இப்ப தான் அப்பா வீட்டுக்கு கிளம்பி போனாரு. என்னை இங்கே இருக்க சொன்னாரு"

"நான் ஏன் இங்க இருக்கேன்?"

"நீ மயங்கிட்ட... நினைவு திரும்பவே இல்ல. அதனால தான் நானும் அப்பாவும் உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்தோம். இந்த சலைன் பாட்டில் முடிஞ்ச உடனே நம்ம வீட்டுக்கு போகலாம்"

அப்பொழுது தான் என்ன நடந்தது என்பதை உணர்ந்த அவள்,

"அப்ப்ப்பா..." என்றாள் திகிலுடன். அவள் கண்கள் சட்டென்று நீர் கட்டியது.

"ஷ்ஷ்ஷ்... அழாத..." என்ற அவனை விசித்திரமாய் பார்த்தாள்.

"எங்க அப்பா செத்துட்டாரு... ஆனா நீங்க என்னை அழாதன்னு சொல்றீங்க..."  

"நீ அழுதா உங்க அப்பா திரும்ப வந்துடுவாரா?"

அழுதபடி தலைகுனிந்தாள் பூங்குழலி.

"இந்த சூழ்நிலையை யாராலையும் ஈசியா ஏத்துக்க முடியாதுங்கிறதை நான் ஒத்துக்குறேன். ஆனா ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஏன்னா, இது தான் எதார்த்தம். நீ எவ்வளவு கதறி அழுதாலும் உங்க அப்பா திரும்ப வர மாட்டாரு..."

"நீங்க அர்த்தமில்லாம பேசுறீங்க"

"உங்க அம்மாவை பத்தி யோசிச்சு பாத்தியா? அவங்க சந்தோஷமா இருக்க வேண்டாமா? உன்னை நெனச்சு அவங்களை வருத்தப்பட வைக்க போறியா? அவங்க எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்காங்கன்னு உனக்கு தெரியாதா? அவங்களுக்கு வேற யார் இருக்கா? நீ மட்டும் தானே இருக்க? அதை கூட உன்னால புரிஞ்சுக்க முடியாதா பூங்குழலி?"

தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதாள் பூங்குழலி.

"எவ்வளவு அழணுமோ அழுதுடு. ஆனா நீ அழுது முடிக்கும் போது, இதுக்கப்புறம் அழ கூடாதுன்னு தீர்க்கமா முடிவு எடுத்துட்டு அழுகையை நிறுத்து"

உதடு கடித்து அழுதபடி அவனை ஏறிட்டாள்.

"இப்போ உனக்கு ஏற்பட்டிருக்கிற நஷ்டம் ரொம்ப பெருசு தான்... "

இயலாமையுடன் கண்களை மூடினாள் பூங்குழலி.

"புரிஞ்சிக்க முயற்சி பண்ணு, பூங்குழலி. உங்க அப்பா செஞ்ச தப்பால, உங்க அம்மா குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருக்காங்க. உங்களைப் பத்தி கவலைப்படாம, உங்க அப்பா உங்களை விட்டுட்டு போயிட்டாரு. உங்க அம்மாவாவது நிம்மதியா இருக்க வேண்டாமா? நீ இப்படி அழறதை பார்த்துகிட்டு இருந்தா, அவங்க எப்படி நிம்மதியா இருப்பாங்க? உனக்கு உங்க அம்மா இருக்காங்க, அவங்களுக்கு நீ இருக்க. என் பொண்ணு எனக்கு போதும்னு அவங்களை நினைக்க வை. அவங்களுக்கு நம்பிக்கையை கொடு. ஒரு ஆம்பள பிள்ளையை பெத்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு அவர்களை வருத்தப்பட வைக்காத"

பெயரிட முடியாத முகபாவத்துடன் அவனை ஏறிட்டாள் பூங்குழலி.

"இப்போ உங்க அம்மாவுக்கு கை கொடுக்க ஒரு ஆள் தேவை. அது நீயா இரு..."

அப்போது அங்கு வந்த செவிலி, அவள் கையில் குத்தப்பட்டிருந்த ஊசியை நீக்கினார். அதை கவனிக்காமல் அவள் வேறு எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஆழமாய் யோசிப்பது தெரிந்தது. அவள் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருப்பதும் தெள்ளத்தெளிவாய் புரிந்தது.

"நீங்க போகலாம். டாக்டர் கொடுத்த மாத்திரையை மட்டும் சரியா சாப்பிடுங்க" என்றார் அந்த செவிலி.

சரி என்று தலையசைத்தான் மலரவன். பூங்குழலி கட்டிலை விட்டு கீழே இறங்கி, அமைதியாய் அவனுடன் நடந்தாள். அவளுக்காக காரின் கதவை திறந்து விட்டான் மலரவன். காரின் கதவில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தன் முகத்தை கழுவிக் கொண்டாள் பூங்குழலி. அது மலரவனை புன்னகைக்க செய்தது.

காரில் இருந்த டிஷ்யூ பேப்பர் டப்பாவை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை மறுக்காமல் ஓரிரு காகிதங்களை எடுத்து தன் முகத்தை துடைத்துக் கொண்ட பின், காரில் அமர்ந்தாள் பூங்குழலி. தில்லைராஜனின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் மலரவன். அவர்களது பயணம் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தது.

"நீங்க எப்ப வந்தீங்க?" என்றாள் பூங்குழலி சிறிது தூரம் கடந்த பின்.

அவளைப் பார்த்து புன்னகைத்த மலரவன்,

"சாயங்காலம் வந்தேன்" என்றான்.

"அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு எப்படி டிக்கெட் கிடைச்சது?"

"என்னோட மேனேஜர் அரேஞ்ச்  பண்ணி கொடுத்தாரு"

"ஓ..."

"ஆர் யூ ஆல்ரைட்?"

"அப்படி சொல்ல முடியாது..."

"நீ மாறித் தான் ஆகணும்"

"இதையெல்லாம் எதுக்காக நீங்க எனக்கு சொல்றீங்க?" என்றாள்

"சொல்ல கூடாதா, ஒரு ஃப்ரெண்டா...?"

ஏகத்தாளமாய் சிரித்தாள் பூங்குழலி. அவளை முகத்தை சுருக்கி ஏறிட்டான்.

"எதுக்கு அப்படி சிரிச்ச?"

"ஒன்னும் இல்ல" என்றபடி வெளியே வேடிக்கை பார்த்தாள்.

"நீ பொய் சொல்ற"

"ஆமாம்"

"என்ன விஷயம்னு சொல்லு"

"நீங்க என்னோட ஃப்ரெண்ட்... அதனால தான் என்னோட பர்த்டேக்கு விஷ் பண்ண மறந்து போயிட்டீங்களா?"

சில நொடி திகைத்து நின்றான் மலரவன். அந்த கேள்வியை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை... அதுவும்  இந்த சூழ்நிலையில் நிச்சயமாய் இல்லை.

"நான் உன்னோட பர்த்டேவை மறக்கல. செப்டம்பர் 17... கரெக்டா?"

"அப்படின்னா அன்னைக்கு நீங்க ரொம்ப பிசியா இருந்திங்களா?"

"ம்ம்ம்" சாலையில் தன் கவனத்தை செலுத்தினான் மலரவன்.

"நீங்க ஃபோன் பண்ணுவீங்கன்னு நான் காத்திருந்தேன். எங்க அம்மா அப்பா கிட்ட கூட சொல்லிக்கிட்டு இருந்தேன்"

"ஐ அம் சாரி. நான் பிஸியா இருந்தேன்"

"ஃபிரண்டுக்கு பர்த்டே விஷ் பண்ண, ஒரு நிமிஷம் கூட டைம் இல்லாத அளவுக்கு பிசியா இருப்பாங்கன்னு
தான், பிசினஸ்மேன் கூட ஃபிரண்ட்ஷிப் வச்சிக்க கூடாதுன்னு சொல்றாங்க போல..."

சங்கடமாய் போனது மலரவனுக்கு. அவனால் என்ன பதில் கூற முடியும்?

அவர்கள் தில்லைராஜனின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

"பை தி வே, தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"உங்க டைமிங் அட்வைஸ்க்கு" என்ற அவளது புன்னகையில் வலி தெரிந்தது.

"நமக்கு வேற வழி இல்ல"

"ம்ம்ம்... ஷூயூரிட்டி கையெழுத்து போட வேண்டாம்னு அம்மா, அப்பாவை எவ்வளவோ  வார்ன் பண்ணாங்க. அவங்க சொன்னதை அவர் கேட்கல"

"அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்படாத. எங்க அப்பா உங்களுக்கு ஒரு வீடு அரேஞ்ச் பண்ணி கொடுப்பாரு"

"எங்களுக்கு ரெட்டையேரியில ஒரு வீடு இருக்கு. அப்பாவுடைய காரியம் முடிஞ்சதுக்கு பிறகு அங்க ஷிஃப்ட் ஆகலாம்னு இருக்கோம்"

"அது யாரோட வீடு?"

"எங்க அம்மாவுடைய அம்மாவோடது"

 "ஓ..."

"அந்த வீட்டை, எங்க பாட்டி கிட்டயிருந்து அம்மா வாங்கினப்போ, எங்க அப்பா ரொம்ப சண்டை போட்டாரு. அதை வாங்க அவரோட தன்மானம் இடம் கொடுக்கல. ஆனா இப்போ, அது தான் எங்களுக்கு ஒதுங்க நிழல் கொடுக்குது"

ஒரே நாளில், தன் குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையையும் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த சிறு பெண்ணை எண்ணி வருத்தமடைந்தான் மலரவன்.

"உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் நீ என்னை கேட்கலாம்"

"பரவாயில்ல நான் பார்த்துக்கிறேன்" என்று நம்பிக்கையுடன் வந்த அவளது பதில், மலரவனுக்கு ஆச்சரியத்தை தந்தது.

அவர்கள் தில்லைராஜனின் வீட்டை அடைந்தார்கள். மலரவனுடன் காரிலிருந்து கீழே இறங்கினாள் பூங்குழலி. தில்லைராஜனின் அக்கா, வடிவுக்கரசி அவர்களை நோக்கி வந்தார்.

"எப்படி இருக்க, கண்ணம்மா?"

"பரவாயில்ல, அத்தை"

"சலைன் ஏறிக்கிட்டு இருக்குன்னு  மாறன் தம்பி சொன்னாரு"

"ஆமாம்"  ஊசி போடப்பட்ட தன் கையை அவரிடம் காட்டினாள்.

"எப்படியோ, கடவுள் புண்ணியத்துல உன் மேல அக்கறை இருக்கிற நல்ல பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்க போற" என்று மலரவனை பார்த்து சிரித்தார் வடிவுக்கரசி.

மலரவனை பார்த்து தன் புருவம் உயர்த்திய பூங்குழலி,

"நான் கல்யாணம் பண்ணிக்க போறது இவரை இல்ல" என்றாள்.

வடிவுக்கரசியின் முகம் மாறியது.

"இவர் தானே மாறனோட மகன்?"

"இவர் அவருடைய மூத்த பிள்ளை"

"அப்போ சின்னவர் எங்க?"

தன் தோள்களை குலுக்கிவிட்டு உள்ளே சென்றாள் பூங்குழலி. அவளை பார்த்தவுடன் அழத் தொடங்கினார்  சிவகாமி. அவர் அருகில் அமர்ந்திருந்த மின்னல்கொடியும் கண் கலங்கினார். சிவகாமியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் பூங்குழலி.

"குழலி..."

"அம்மா, ப்ளீஸ் அழாதீங்க. அழுது ஒண்ணும் ஆகப்போறது இல்ல. உங்க உடம்பு தான் வீணா போகும்" சிவகாமி மட்டுமல்லாமல் மின்னல்கொடியும் கூட வாயடைத்து போனார்கள். திடீரென்று என்ன ஆகிவிட்டது இந்த பெண்ணுக்கு? அழுது அழுது பல முறை மயங்கி விழுந்தாளே...!

"நம்ம எதார்த்தத்தை ஏத்துக்கிட்டு தான் மா ஆகணும். நம்ம அப்பாவை இழந்திட்டோம்... அவர் திரும்ப வரமாட்டாரு... உங்களுக்கு நான் இருக்கேன். அதை மறந்துடாதீங்க" என்ற அவளை கட்டிக்கொண்டு அழுதார் சிவகாமி. ஆனால் அந்த அழுகை, துக்கத்தினால் வந்தது அல்ல.

அன்பாய் அவளது முதுகை வருடி கொடுத்தார் மின்னல்கொடி. ஜன்னலுக்கு அருகே, வெளிப்பக்கம், சுவற்றில் சாய்ந்து நின்று, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மலரவனின் முகத்தில் அது புன்னகையை இட்டு வந்தது.

"போய் கொஞ்சம் சாப்பிடு, குழலி" என்றார் சிவகாமி.

"நான் கொண்டு வரேன்" என்றார் மின்னல்கொடி.

"இருக்கட்டும் ஆன்ட்டி. நான் போறேன்" சமையலறைக்கு சென்ற அவள் ஒரு தட்டை எடுத்து சாதத்தை போட்டுக்கொண்டாள்.

தட்டை சமையலறை மேடையின் மீது வைத்த அவள், கையால் தன் முகத்தை மூடி, சத்தம் இல்லாமல் அழுதாள். அவள் எதார்த்தத்தை புரிந்து கொண்டாள் தான்... ஆனால், அவளது கனத்துப் போன இதயத்தை என்ன செய்வாள்? இதுவரை அவள் பார்த்தே இராத, அவளுக்கு முன்னால் வரிசை கட்டி நிற்கும் பிரச்சனைகளை அவள் எப்படி தீர்க்கப் போகிறாள்? குடும்ப செலவை எப்படி சமாளிக்க போகிறாள்? எவ்வளவு பிரச்சனைகள்...! அனைத்தையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்? ஒன்றும் தெரியாது...! கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவளுக்கு.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top