59 அறையும் முத்தமும்
59 அறையும் முத்தமும்
"நீங்க தான் மலரவன் ஆச்சே" என்ற அவளை தன்னை நோக்கி இழுத்த மலரவன்,
"அதுக்கு என்ன அர்த்தம்? இப்போ நான் மலரவனா இருந்தா என்ன?" என்றான் அவளது காதோர கூந்தலை ஒதுக்கிவிட்டவாறு.
"அப்படின்னா, எல்லா பிரச்சினையையும் சரி செய்றவர்னு அர்த்தம்" என்றாள் அவனது காலரை பற்றி கொண்டு.
"அப்படியா?"
"அப்படித் தான்" என்று தன் நெற்றியை அவன் நெற்றியோடு மோதினாள்.
"ஆனா, இந்த தடவை எல்லா கிரெடிட்டும் என்னை மட்டுமே சேராது. மகிழன் ரொம்ப ஸ்மார்ட்டா நடந்துக்கிட்டான். அதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல. அவன்தான் குமரேசனோட மேனேஜர் ரஞ்சித்தை, அவருக்கு எதிரா திருப்பி விட்டது. அது தான் நம்ம பக்கத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா மாத்திச்சி"
"அவர் உங்களோட தம்பியாச்சே... இந்த மாதிரியான திறமை எல்லாம் தன்னோட அண்ணன் கிட்ட இருந்து அவர் கத்துக்கிட்டு இருப்பாரு"
"என்ன விஷயம், இன்னைக்கு என் பொண்டாட்டி என்னை ரொம்ப ஓவரா புகழறா?"
"புகழக் கூடாதா?"
தன் புருவம் உயர்த்தினான் மலரவன்.
"இப்படிப்பட்ட புகழ்ச்சிக்கெல்லாம் நீங்க தகுதியானவர் தானே?"
"அது எப்படி எனக்கு தெரியும்?"
"ஆனா எனக்கு தெரியும்"
"என்ன தெரியும்?"
"உங்களுக்கு அதுக்கு தகுதி இருக்கு. உங்களுக்கு இல்லன்னா, வேற யாருக்கு இருக்க போகுது? நீங்க செஞ்சிருக்கிற விஷயமெல்லாம் வேற யாராலயுமே செய்ய முடியாது"
"அதனால?"
"என்னோட மரியாதையை ஏத்துக்கோங்க"
"ஏத்துக்கிட்டேன். சந்தோஷமா?" குறுநகை புரிந்தான் மலரவன்.
ஆமாம் என்ற தலையசைத்த பூங்குழலி,
"வாழ்க்கை கணிக்கவே முடியாத புதிர்ல?" என்றாள்.
ஆமாம் என்று தலையசைத்தான் மலரவன்.
"எவ்வளவு குறுகிய காலத்தில நம்மளோட வாழ்க்கையில என்னவெல்லாம் நடந்து, நம்ம வாழ்க்கையே தலைகீழா பிரட்டி போட்டுடிச்சி"
சிரித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன்.
"எல்லாம் கைலாசத்து கிட்ட இருந்து ஆரம்பிச்சது. அப்பா அவருக்கு ஷூருடி கையெழுத்து போட்டாரு. கைலாசம் அப்பாவை ஏமாத்ததினதால, அவர் தற்கொலை பண்ணிக்கிட்டாரு. எல்லாத்தையும் இழந்து, நாங்க நடுத்தெருவுக்கு வந்தோம். மகிழன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் நீங்க என்னை ஏத்துக்கிட்டீங்க. கீர்த்தி மகிழனை ஏமாத்தி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா. கல்யாணத்துக்குப் பிறகு மகிழன் மொத்தமா மாறிப் போனாரு. கைலாசம், குமரேசன், அவர் குடும்பம் எல்லாம் போலீஸ்ல அரெஸ்ட் ஆனாங்க" நிறுத்திவிட்டு அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் பூங்குழலி.
கிட்டத்தட்ட மலரவனும் அதே நிலையில் தான் இருந்தான்.
"இப்போ, எல்லாம் நார்மல் ஆயிடுச்சி. இதை எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்க்கும்போது எனக்கு ஒரு விஷயம் தான் புரியுது"
*என்ன?* என்பது போல் தலையசைத்தான் மலரவன்.
"இது அத்தனையும் நடந்தது, உங்களை என்னோட வாழ்க்கையில கொண்டு வரத்தான்னு எனக்கு தோணுது"
மலரவனின் புன்னகை விரிவடைந்தது.
"இல்லன்னு நீங்க சொல்லுவீங்களா?"
மாட்டேன் என்பது போல் தலையசைத்தான்.
"நீ என் வாழ்க்கையோட விலக்க முடியா முடிவு. அதனால தான் விதி என்னை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கு" என்றான் மலரவன்.
"நீங்க என் மேல வச்ச காதல் உண்மையானதுன்னு *நினைக்கிறேன்* அதனால தான் விதி, அப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் என் வாழ்க்கையில் நடத்தி, உங்களுடைய ஆசையை நிறைவேத்த உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கு"
"ஓ... என் காதல் உண்மையானதுன்னு *நினைக்கிறியா*? அப்படின்னா அதுல நீ உறுதியா இல்லையா?" என்று சிரித்தான் மலரவன்.
அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்ட அவள்,
"நான் அதுல ரொம்ப உறுதியா இருக்கேன். அதைத்தான் எப்பவும் நினைச்சுகிட்டு இருக்கேன்"
"நீ சொல்றது படி பார்த்தா, நம்மளுடைய எண்ணம் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருந்தா, விதி நம்மளுடைய ஆசையை நிறைவேத்தி வைக்கும். அப்படித்தானே?"
"ஆமாம்"
"அப்படின்னா, நம்ம ஹனிமூனுக்கு லண்டனுக்கு போகணும்னு நீ கூட ரொம்ப உண்மையா ஆசைப்பட்டிருக்க போலருக்கு. அதனால தான் கொட்ற மழையை அனுப்பி நம்ம பிளான் பண்ண ப்ரோக்ராமை தடுத்து நிறுத்தி, நம்ம வந்தா தான் ப்ரோக்ராம் நடக்கணும்னு காத்துகிட்டு இருக்கு"
வெட்கப் புன்னகை பூத்தாள் பூங்குழலி.
"லண்டனுக்கு போக ரெடியா இரு. நம்ம ரெண்டு பேரும் அந்த ப்ரோக்ராமோட முதல் வரிசையில இருக்க போறோம். அது சீக்கிரமே நடக்க போகுது" என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான் மலரவன்.
"நான் எப்பவும் ரெடியா தான் இருக்கேன். பை தி வே, நம்ம விதியை பத்தி நம்ம பேசிக்கிட்டு இருந்த டாபிக்கை நீங்க மாத்திட்டீங்க"
"நீ சொன்ன எல்லாம் உண்மைன்னு நான் தான் ஒத்துக்கிட்டேனே... இன்னும் என்ன இருக்கு?"
"நீங்க ஒத்துக்க மட்டும் தான் செஞ்சீங்க. ஆனா நான் இன்னும் ஆச்சரியப்பட்டு கிட்டு இருக்கேன்"
"நானும் தான். உன்கிட்ட என் காதலை சொல்லணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்காக நான் எவ்வளவு திட்டம் போட்டு வச்சிருந்தேன் தெரியுமா? அப்போ தான் இடி மாதிரி ஒரு விஷயம் என் தலையில் வந்து இறங்குச்சு" என்று சிரித்தான்.
"மகிழன் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டதை தானே சொல்றீங்க?"
ஆமாம் என்று தலையசைத்த மலரவன்,
"நீ எனக்கு ஒய்ஃபா வருவேன்னு நான் கனவுல கூட நினைக்கல. கிட்டத்தட்ட நான் என்னோட நம்பிக்கையை முழுசா இழந்திருந்தேன். அதனால தான் இந்தியாவுக்கு திரும்ப வரவே கூடாதுன்னு முடிவான முடிவுல இருந்தேன். ஆனா தில்லை அங்கிளோட மரணம், என்னை ரொம்பவே ஆட்டி வச்சிடுச்சு"
"ஆமாம், நீங்க அப்போ, உங்க அப்பா கூட இருக்கணும்னு விருப்பப்பட்டீங்க. அதனால தான் நீங்க உடனே இந்தியாவுக்கு கிளம்பி வந்தீங்க. நீங்க இதை பத்தி ஏற்கனவே என்கிட்ட சொல்லி இருக்கீங்க"
"இல்ல. அது உண்மை இல்ல" என்று சிரித்தான் மலரவன்.
"அது உண்மை இல்லையா? அப்படின்னா எதுக்கு இந்தியாவுக்கு வந்தீங்க?"
"நான் அப்பாவுக்கு சப்போட்டா இருக்க இங்க வரல. நான் வராம இருந்திருந்தா கூட அவர் மேனேஜ் பண்ணி இருப்பாரு"
குறுக்கீடு செய்யாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் என்ன காரணம் கூற போகிறான் என்று தெரிந்து கொள்ள.
"நான் உனக்காகத்தான் வந்தேன், பூங்குழலி"
"எனக்காகவா?" என்றாள் நம்ப முடியாமல்.
ஆம் என்று தலையசைத்த மலரவன், தொடர்ந்தான்.
"உன்னோட சிரிச்ச முகம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. நீ பார்ட்டியில என்கிட்ட பேசினதெல்லாம் நான் நினைச்சு பார்த்தேன். உங்க அப்பாவோட இறுதி சடங்குல நீ அதுக்கு எதிர்மாறா இருப்பேன்னு நெனச்சப்போ, அது எனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது. நீ மகிழனோட எப்படிப்பட்ட உறவு முறையில இருந்தேன் என்று எனக்கு தெரியாது. அவன் உனக்கு சப்போர்ட்டா இருப்பானான்னு கூட எனக்கு தெரியாது. உனக்கு நாலு வார்த்தை ஆறுதலா சொல்லணும்னு மட்டும் என் மனசு துடிச்சுது. உன்னை அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து தேற்றிக் கொண்டு வரவே முடியாதுன்னு தெரிஞ்சாலும், அதை செய்ய முயற்சிக்க வேண்டியது என்னோட கடமைன்னு நான் நெனச்சேன். அதனால தான் நான் இந்தியாவுக்கு வந்தேன்... உன் ஒருத்திக்காக மட்டும் தான் நான் இந்தியாவுக்கு வந்தேன்"
"நெஜமாவா?"
ஆமாம் என்று தலையசைத்தான்.
"உங்க *அலிபாபா குகை* மனசுக்குள்ள இன்னும் எத்தனை உண்மையை ஒளிச்சு வச்சிருக்கீங்க?"
வாய்விட்டு சிரித்த மலரவன்.
"இல்ல, வேற எந்த உண்மையும் இல்ல. நான் எல்லாத்தையும் அதோட சொந்தக்காரி கிட்ட கொட்டி தீர்த்துட்டேன்" என்றான்.
அப்பொழுது அவர்கள், கதவை தட்டும் சத்தம் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மலரவன் கதவை நோக்கி செல்லும் முன், பூங்குழலி ஓடி சென்று கதவை திறந்தாள். அங்கு சிவகாமி நின்று கொண்டிருந்தார்.
"உள்ள வாங்கம்மா" என்றாள்.
புன்னகையுடன் உள்ளே வந்தார் சிவகாமி.
"நான் மலரவன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"சொல்லுங்க ஆன்ட்டி.
ஒரு காசோலையை அவனை நோக்கி நீட்டினார் சிவகாமி. அது மலரவன் அவருக்காக கொடுத்த அதே காசோலை தான். அதை பார்த்த பூங்குழலி, முகம் சுருக்கினாள்
"என்னமா இது? எதுக்காக நீங்க இதை அவர்கிட்ட கொடுக்குறீங்க?"
"இந்த செக் அவரை சேர்ந்தது" என்றார் சிவகாமி.
"அம்மா, எங்க வாழ்க்கையை ஓட்ட ஏற்கனவே எங்ககிட்ட ஏராளமான பணம் இருக்கு. நீங்க உங்க பணத்தை உங்க மருமகனுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல"
அவருடைய பணத்தை அவர் மலரவனுக்கு கொடுப்பதாய் தவறாய் நினைத்தாள் பூங்குழலி.
"கைலாசத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் நாள் ஆனாலும், எங்க சொத்து எல்லாம் திரும்பி கிடைச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால தான் மலரவனுடைய பணத்தை அவர்கிட்டையே திருப்பிக் கொடுக்க வந்தேன்"
"மலரவனுடைய பணமா?" என்றபடி மலரவனை குழப்பத்துடன் ஏறிட்டாள் பூங்குழலி.
அமைதியாய் நின்றான் மலரவன்.
"ஆமாம் குழலி. இது உன் அப்பாவுடைய பணம் இல்ல. அவர் நமக்குன்னு எதையும் சேத்து வைக்கல. இந்த செக்குக்கு பின்னால இருக்கிறது மலரவன் தான்"
அவனை மலைப்புடன் பார்த்தாள் பூங்குழலி.
"பணம் இல்ல அப்படிங்கிற காரணத்துக்காக, உன்னை யாரும் அவமானப்படுத்தக் கூடாதுன்னு தான் அவர் அப்படி செஞ்சாரு"
தன் கண்களை மலரவன் மீதிருந்து அகற்றவில்லை பூங்குழலி. அவளால் முடியவில்லை.
"உங்களோட சொத்து உங்களுக்கு திரும்பி கிடைச்சாலும், இதை திருப்பி கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு ஆன்ட்டி? அதெல்லாம் உங்களுக்கு எப்போ திரும்ப கிடைக்கும்னு தெரியல. அதனால நீங்களே வச்சுக்கோங்க"
"இல்ல மலர்"
அவரது பேச்சின் இடையே புகுந்து,
"அவங்களுக்கு சொல்லு பூங்குழலி" என்றான்.
அப்போது தான் திகைப்பிலிருந்து வெளியே வந்தாள் பூங்குழலி.
"நான் ஏன் சொல்லணும்? மாமியாருக்கும் மருமகனுக்கும் என்கிட்ட இத பத்தி சொல்லணும்னு தோணலல? இப்போ மட்டும் நான் வந்து சொல்லணுமா?"
"ஆன்ட்டி, நம்ம இதை பத்தி அப்புறம் பேசலாம்" என்றான் பூங்குழலியை பார்த்தவாறு.
"இதைப்பத்தி மலர் தான் உன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னாரு"
"இப்போ தான் அவர் மனசுல எந்த உண்மையையும் மறைச்சு வைக்கலைன்னு சொன்னாரு. அதுக்குள்ள இன்னொரு உண்மை வெளியில வருது... இன்னும் எத்தனை லைன் கட்டி நிக்குதுன்னு தெரியல"
சிவகாமியை பார்த்து சங்கடத்துடன் சிரித்தான் மலரவன்.
"சரி, நான் போயிட்டு அப்புறம் வரேன். நீங்க உங்க பிரச்சனையை பேசி முடிங்க" என்று கிளம்பிச் சென்றார் சிவகாமி.
"பூங்குழலி..." ஏதோ கூறி அவன் அவளை சமாதானப்படுத்த முயல,
அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, இதழோடு இதழ் பதித்தாள் பூங்குழலி. என்ன நடக்கிறது என்று முதலில் மலரவனுக்கு புரியவில்லை. அதன் பிறகு அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டான். எந்த குறுக்கிடும் செய்யாமல் அவளை தன்னை முத்தமிட விட்டான். அவனை முத்தமிட்ட பின், பட்டென்று அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள் பூங்குழலி. அந்த அறையை வாங்கிக் கொண்டு சிரித்தான் மலரவன்.
"என்கிட்ட எந்த உண்மையையும் மறைக்கணும்னு நெனச்சா அவ்வளவு தான்" என்றாள் மிரட்டலாய்.
"எதுக்கு முத்தம் கொடுத்த, எதுக்கு அறை கொடுத்தேன்னு கொஞ்சம் விலாவரியா சொல்ல முடியுமா?"
"என்கிட்ட உண்மையை மறைச்சதுக்காக அறை கொடுத்தேன். அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணதுக்காக முத்தம் கொடுத்தேன்"
"இவ்வளவு ஸ்ட்ராங்கான முத்தம் கிடைக்கும்னா, எனக்கு அடி வாங்குறதுல எந்த பிரச்சனையும் இல்ல" என்றான் சிரித்தபடி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top