58 முடிவு
58 முடிவு
தன் மனைவி சுஜாதா மற்றும் மகள் கீர்த்தியுடன் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் குமரேசன்.
"டாட், எதுக்கு இன்னும் நீங்க எங்களுக்கு எந்த குட் நியூசும் சொல்லாம இருக்கீங்க? பூங்குழலிக்கு என்ன ஆச்சு? எதுக்காக நீங்க அவளை லண்டன்ல ஃப்ரீயா அலைய விட்டுக்கிட்டு இருக்கீங்க? எதுக்கு உங்களுக்கு இவ்வளவு டைம் ஆகுது?" என்றாள் எரிச்சலுடன் கீர்த்தி.
"தேவையான எல்லா அரேஞ்ச்மென்டும் பண்ணிட்டேன். எதிர்பாராத விதமா லண்டன்ல மழை கொட்டி தீக்குது. அங்க எந்த ப்ரோக்ராமும் நடக்கல. எல்லா ப்ரோக்ராமும் கேன்சல் ஆகிகிட்டே இருக்கு. பிளான் பண்ண மாதிரி எம்எம் கம்பெனியோட ப்ரோக்ராம் நடக்குமான்னு தெரியல"
"இப்படி சொன்னா என்ன அர்த்தம்? நீங்க அவளை முடிக்க போறதில்லையா? எனக்கு நிம்மதியையே கொடுக்க மாட்டீங்களா?" என்றாள் ஏமாற்றத்துடன்.
"அது எப்படி நான் அவளை அவ்வளவு சுலபமா விட்டுடுவேன்? அவங்க ப்ரோக்ராம் தான் கேன்சல் ஆகும்னு சொன்னேன். ஆனா, நான் போட்ட புரோகிராம் கேன்சல் ஆகும்னு சொன்னேனா? எது எப்படி இருந்தாலும், அவள் ஏர்போர்ட் போற வழியிலேயே வில்லியம் அவளை தீர்த்துடுவான்"
"பூங்குழலி கொல்லப்பட்ட மேட்டர் மணிமாறன் குடும்பத்துக்கு தெரிஞ்சா, அவங்க எல்லாரும் அலர்ட் ஆயிடுவாங்க. அதனால, அது அவங்க காதுக்கு வரதுக்கு முன்னாடி, முதல்ல அவங்களை முடிங்க" என்றார் சுஜாதா, ஏதோ அவர்களெல்லாம் கொசுவை போல.
"ஆமாம், நம்ம மணிமாறன் குடும்பத்தை குறைச்சி எடை போட்டுடக்கூடாது... முக்கியமாக மலரவனை..."
"ஆமாம் டாட், நம்ம நினைச்சதை விட அவங்க ரொம்ப ஸ்மார்ட்" என்றாள் கீர்த்தி கடுகடுப்புடன்.
"அந்த முதுகெலும்பு இல்லாத மகிழன், இப்படி மாறுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல" என்றார் சுஜாதா எரிச்சலுடன்.
"கொஞ்சம் பொறுமையா இருங்க. சீக்கிரமே அவங்க பூண்டோட கைலாசம் போன நல்ல விஷயம் நம்ம காதுக்கு வரும்" என்றார் குமரேசன்.
"அந்த ஒரே ஒரு செய்தி தான் நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அவங்க உயிரோட இருக்கவே கூடாது" என்றாள் கீர்த்தி.
"அவங்க உயிரோட இருக்க மாட்டாங்க. அவங்க தன்னோட முடிவை நெருங்கிகிட்டு இருக்காங்க" என்றார் குமரேசன் நம்பிக்கையுடன், தன்னுடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கும் உண்மை புரியாமல்.
சாப்பிட்டு முடித்து எழுந்து நின்றார் அவர். அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்க, கதவை நோக்கி நடந்தார். கதவை திறந்த அவர், முகத்தை சுருக்கினார். அங்கு காவலர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்து.
"உங்களுக்கு என்ன வேணும் சார்?" என்றார்.
"உங்களை நாங்க கைது பண்ண வந்திருக்கோம்" என்றார் ஆய்வாளர்.
"என்னது? அரெஸ்ட் பண்ண வந்திருக்கீங்களா? நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?" என்றார் அதிர்ச்சியுடனும் பதட்டத்துடனும்.
"நீங்க யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு மட்டும் இல்ல, உங்க மகளுக்கும் சேர்த்து தான் அரெஸ்ட் வாரண்ட் கொண்டு வந்திருக்கோம்"
சுஜாதாவும், கீர்த்தியும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்கள்.
"என்ன உளறுறீங்க? அப்படியெல்லாம் காரணம் இல்லாம நீங்க யாரையும் அரெஸ்ட் பண்ணிட முடியாது. எதுக்காக நீங்க எங்களை அரெஸ்ட் பண்ண போறீங்க?" உறுமினார் குமரேசன்.
"மணிமாறன் குடும்பத்தைக் கொல்ல ஆள் அனுப்பினதுக்காக... "
வெடவெடத்து போனார் குமரேசன்.
"குமரேசன் குடும்பத்தை கொல்லவா? நான் ஏன் அவங்களை கொல்லணும்? அவங்க எங்களுக்கு ஃபிரண்ட்ஸ் மட்டும் இல்ல, என் மகளை கல்யாணம் பண்ணி கொடுத்த சம்பந்தியும் கூட. எங்க குடும்பங்களுக்கு இடையில நல்ல உறவுமுறை இருக்கு. தயவு செய்து எங்களை இப்படி எல்லாம் பேசி சங்கடப்படுத்தாதீங்க"
"எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. உங்களோட மேனேஜர் ரஞ்சித் அப்ரூவரா மாறிட்டாரு"
திடுக்கிட்டார் குமரேசன்.
"இல்ல... அவரு பொய் சொல்றாரு. அவரை நம்பாதீங்க. எங்க கம்பெனியில இருந்து அவர் ஒரு பெரிய தொகையை கையாடல் பண்ணிட்டாரு. அவரை நான் கையும் களவுமா பிடிச்சேன். அதுக்காகத் தான் என்னை பழிவாங்க இப்படி எல்லாம் அவர் செய்றாரு"
"அவரை நீங்க கையும் களவுமா பிடிச்சிருந்தா, எதுக்காக அவரை போலீஸ்ல ஒப்படைக்கல? எதுக்காக போக விட்டீங்க?"
"அவருக்கு ஒரு குடும்பம் இருக்கே சார்... அவர் செஞ்ச தப்புக்கு, அவர் குடும்பம் ஏன் பாதிக்கப்படணும்னு தான் சும்மா விட்டுட்டேன்" என்றார் தான் ஒரு ஆண் மதர் தெரசா என்பது போல.
"என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். நீங்க ஸ்டேஷனுக்கு வாங்க. நீங்க பேசுறதுக்கு நாங்க சந்தர்ப்பம் கொடுப்போம்"
"எதுக்கு சார் வரணும்? எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. போலீஸ் ஸ்டேஷன் உள்ள என்னால காலெடுத்து வைக்க முடியாது"
"மணிமாறன் குடும்பத்தை கொல்ல பிளான் பண்றதுக்கு முன்னாடி நீங்க அதையெல்லாம் யோசிச்சிருக்கணும்"
"நான் அப்படியெல்லாம் எதுவும் செய்யல"
"நீங்களும் வில்லியமும் பேசின ஆடியோ ரெக்கார்டிங் எங்ககிட்ட இருக்கு. நீங்க அதுல, ஒரு ஈவண்ட்டுகாக லண்டன் போக இருந்த பூங்குழலி மலரவனை கொல்ல சொல்லி அவர்கிட்ட சொன்னீங்க"
*போக இருந்த பூங்குழியா?* அதற்கு என்ன அர்த்தம்? பூங்குழலி லண்டனுக்கு செல்லவில்லையா? அப்படி என்றால், வில்லியம் எதற்காக பூங்குழலி அங்கு தனியே வந்திருப்பதாகவும், அவளை எப்படியும் முடித்து விடுவதாகவும் கூறினான்?
"வாங்க போகலாம்" என்றார் ஆய்வாளர்.
"இல்ல, நான் வரமாட்டேன்" என்று கூச்சலிட்டார் குமரேசன்.
"நீங்க வரலைனா நாங்க உங்களை இழுத்துகிட்டு போக வேண்டி இருக்கும். நீங்களே வந்துட்டா அது உங்களுக்கு மரியாதை" என்று எச்சரித்தார் அந்த ஆய்வாளர்.
"சரி, நான் வரேன். ஆனா என்னோட டாடர் எதுக்காக வரணும்? அவ ஒரு அப்பாவி. அவ எந்த தப்பும் செய்யல"
"ராகேஷை பயன்படுத்தி, தன் மேல பொய்யா பழி சுமத்தி, நாடகமாடி தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காகவும், தேங்காய் எண்ணெயை கீழே கொட்டி அவரோட அம்மா காலை உடைச்சதுக்காகவும், உங்க பொண்ணு மேல மகிழன் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு"
குமரேசனின் முகம் கருத்து போனது. கீர்த்தியோ நடுங்கத் துவங்கினாள்.
"இல்ல சார். அது உண்மை இல்ல. நான் ஏன் என் மாமியார் காலை உடைக்கணும்?"
"அதுக்கு பதில் சொல்ல வேண்டியது நீங்க தான். இல்லனா, இன்வெஸ்டிகேஷன் மூலமா அந்த பதிலை நாங்க உங்ககிட்ட இருந்து வாங்குவோம்"
இரண்டு பெண் போலீசார் கையில் விலங்குடன் கீர்த்தியை அணுகினார்கள். கீர்த்தி பின்னோக்கி நகர்ந்தாள். சுஜாதா அவர்களுக்கு இடையில் வந்து நின்று, அவர்களது வழியை மறித்தார்.
"என் பொண்ணை நீங்க அரெஸ்ட் பண்ண நான் விடமாட்டேன்" என்று அந்த பெண் காவலர்களை பிடித்து தள்ளினார். அதில் ஒரு காவலர், நாற்காலி தடுக்கி கீழே விழுந்தார்.
"தன்னோட கடமையை செய்ய வந்த போலீசை தடுத்து நிறுத்தினதுக்காகவும், அவங்களை தாக்கியதுக்காகவும் உங்களை நாங்க கைது செய்றோம்" என்று அவரது வலது கையில் விலங்கு பூட்டினார் ஒரு பெண் காவலர்.
மற்றொரு பெண் காவலர் கீர்த்தியை இழுத்து வந்து, அவளது இடது கையில் அதே விலங்கின் அடுத்த முனையை பூட்டினார்.
அவர்களை அழைத்து வந்த காவலர்கள், அவர்களை ஜிப்பில் ஏற்ற முயன்ற போது, மலரவனும் மகிழனும், ரஞ்சித்துடன் அங்கு நின்றிருப்பதை கண்டார்கள் அவர்கள்.
"நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க. இதுக்கு நீங்க நிச்சயம் பதில் சொல்லியே ஆகணும்" என்று சீறினார் குமரேசன்.
சரி என்பது போல் மகிழன் கிண்டலாய் தலையசைக்க, சாதாரண சிரிப்புடன் நின்றான் மலரவன். ரஞ்சித்தோ தலை குனிந்து கொண்டார். உள்ளுக்குள் புழுங்கினாள் கீர்த்தி.
"இதுக்காக நீங்க வருத்தப்படுவீங்க" என்று கண்களில் அனலை கக்கினாள் அவள்.
"உன்னை கல்யாணம் பண்ணதுக்காக ஏற்கனவே நான் வருத்தப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன். டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறேன் மரியாதையா கையெழுத்து போடு. இல்லனா, ஏன்டா போடாம விட்டோம்னு நீ வருத்தப்பட வேண்டியிருக்கும். ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன், எங்களை கொல்ல சொல்லி நீங்க அனுப்புன ஆள் அரெஸ்ட் ஆயிட்டான்" என்றான் மகிழன்.
ஒரு பெண் காவலர் கீர்த்தியை ஜிப்பை நோக்கி தள்ளினார். வேறு வழியின்றி ஏறி அமர்ந்தாள் கீர்த்தி.
அவர்களுடைய வருங்காலம் எப்படி இருக்க போகிறது என்று குமரேசனுக்கு புரிந்து போனது. ஏனென்றால், அவர்களுக்கு எதிரான ஆதாரம் மிகவும் திடமாய் இருக்கிறது. போதாத குறைக்கு, ரஞ்சித் வேறு அப்ரூவராய் மாறிவிட்டார். குமரேசன் செய்த அத்தனை அழிச்சாட்டியங்களும் அவருக்கு தெரியும். ஆனால் அவர் வில்லியமுடன் பேசிய உரையாடலின் பதிவு காவலர்கள் கைக்கு எப்படி சென்றது என்று தான் அவருக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, தான் நாளா பக்கமும் சூழப்பட்டு விட்டோம் என்பது தான் அது.
அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
"நான் என் கிராமத்துக்கே போயிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். அதுக்கு நீங்க எனக்கு உதவ முடியுமா?" என்றார் ரஞ்சித்.
"என்னோட லாயர் பூபதியை பாருங்க. சட்ட ரீதியா உங்களுக்கு தேவையான எல்லா உதவியும் அவர் செய்வார். அவர் சொல்றபடி நீங்க கேட்டா மட்டும் போதும்"
"ரொம்ப தேங்க்ஸ் மலரவன்" அங்கிருந்து சென்றார் ரஞ்சித்.
அன்பு இல்லம்
மலரவனும் மகிழனும் வீடு திரும்பினார்கள். தன் அறைக்கு வந்த மலரவன், பூங்குழலி பதற்றத்துடன் கட்டிலில் அமர்ந்திருப்பதை கண்டான். அவள் தன் நகத்தை கடித்த விதத்தில் இருந்தே, அவள் மிகவும் பதற்றத்துடன் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்து போனது. அவள் மலரவன் வந்ததையோ, அவளைப் பார்த்துக் கொண்டு நின்றதையோ கூட கவனிக்கவில்லை.
"பூங்குழலி..." என்று அவன் அழைத்தவுடன் திடுக்கிட்டு திரும்பினாள்.
"மலர், நீங்க வந்துட்டீங்களா? என்ன ஆச்சு? அவங்க என்ன சொன்னாங்க? இப்போ அவங்க எங்க இருக்காங்க? எதுவும் பிரச்சனை இல்லையே?" என்று கேள்விகளை அடிக்கினாள்.
"பார்த்து... மூச்சு அடைச்சுக்க போது... நிதானமா பேசு" என்று சிரித்தான் மலரவன்.
"சரி, சொல்லுங்க..."
"அவங்க கதை முடிஞ்சது. போலீஸ் அவங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்க"
"நெஜமாவா?"
"ஏன், நான் சொன்னதுல உனக்கு நம்பிக்கை இல்லையா?"
"இருக்கு. ஆனா..."
"ரஞ்சித் அப்ரூவரா மாறிட்டாரு. குமரேசனும், வில்லியமும் பேசின ஆடியோ ரெக்கார்டிங்கை நாங்க போலீஸ்ல கொடுத்துட்டோம். அதோட மட்டும் இல்லாம, கீர்த்தி தேங்காய் எண்ணெயை கீழே கொட்டி, அம்மாவை விழ வச்ச வீடியோவையும் கொடுத்துட்டோம்"
"அந்த எவிடன்ஸோட ஒரு காப்பி, உங்ககிட்டையும் இருக்கு இல்ல?" என்றாள் எச்சரிக்கையுடன்.
"நம்ம எல்லாருடைய ஈமெயில் ஐடிக்கும் அதை நான் அனுப்பிட்டேன்"
நிம்மதி பெருமூச்சு விட்ட பூங்குழலி,
"நீங்க தான் மலரவன் ஆச்சே..." என்றாள் பெருமையுடன். அது மலரவனின் முகத்திலும் புன்னகையை அழைத்து வந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top