57 வேலை முடிந்தது

57 வேலை முடிந்தது

தான் கொடுத்த பணப் பையுடன்  வந்திருந்த ராகேஷை பார்த்து முகம் சுருக்கினார் குமரேசன்.

"சொல்லு ராகேஷ், என்ன விஷயம்?"

"நான் இதை உங்ககிட்ட திரும்பி கொடுக்க வந்திருக்கேன் சார்"

"திருப்பி கொடுக்க வந்திருக்கேன்னா என்ன அர்த்தம்? இது நான் உனக்கு பணம் கொடுத்த அதே பேக் தானே?"

"ஆமாம் சார்"

"என்ன ஆச்சு ராகேஷ்? எதுக்காக நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குற? ஏதாவது பிரச்சனையா?"

"ஆமாம் சார். போலீஸ் என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்காங்க. அவங்க என்னை ரொம்ப ஸ்ட்ராங்கா சந்தேகப்படுறாங்க. ஏதாவது ஒரு கேஸ்ல நான் சிக்க மாட்டேனான்னு காத்துகிட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, சார்"

"நம்ம கிட்ட தான் சரியான அக்ரீமெண்ட் பேப்பர்ஸ் இருக்கே... அப்படி இருக்கும் போது நீ எதுக்காக பயப்படுற? நான் இருக்கேன் உனக்கு"

"அதை தான் சார் நானும் உங்ககிட்ட கேட்க நினைச்சேன். நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும், சார்"

"நீ என்ன சொல்ல வர?"

"தயவுசெய்து எனக்கு உங்க கம்பெனியிலேயே ஒரு வேலை போட்டு கொடுத்துடுங்க, சார். இவ்வளவு நடந்ததுக்கு பிறகு, என்னால இனிமே மணிமாறன் சார் கம்பெனியில வேலை செய்ய முடியாது. கழுகு மாதிரி என்னை கொத்தி தின்ன காத்துகிட்டு இருக்கான் மகிழன். அவன் எப்போ என்னை கிழிக்க போறானோ எனக்கு தெரியல. என்னோட சூழ்நிலையை தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க சார். என்னை அழுத்திகிட்டு இருக்கிற இந்த பிரச்சனையில இருந்து என்னை காப்பாத்துங்க"

சிறிது நேரம் யோசித்தார் குமரேசன். அவருக்கும் கூட தனக்கு நம்பகமான ஒரு வேலையாள் தேவை தான். ராகேஷ் அப்படிப்பட்ட ஒருவனாய் நிச்சயம் இருப்பான். ஏனென்றால், ராகேஷுக்கு அவரைத் தவிர வேறு யாரும் உதவ மாட்டார்கள். அதனால் ராகேஷை தன்னுடன் வைத்துக் கொள்வது நல்ல உபாயம் தான். எப்படி இருந்தாலும் அவர் மணிமாறனின் குடும்பத்தை தீர்த்து கட்ட தானே போகிறார்? ஒருவேளை, அவரது திட்டம் தோல்வி அடைந்தால், அந்த பழியை சுமத்த அவருக்கு ஒருவர் தேவை. அதற்கு ராகேஷ் தான் சிறந்தவனாய் இருப்பான். ஏனென்றால், ஏற்கனவே தங்களுக்கு தீங்கிழைத்த அவனை,  நிச்சயம் மணிமாறனின் குடும்பத்தார் நம்ப மாட்டார்கள்.

"சரி, நான் உனக்கு வேலை போட்டு கொடுக்குறேன். ஆனா இந்த பணத்தை நீ திருப்பி கொடுக்க வேண்டிய அவசியமில்ல. நீயே வச்சுக்கோ"

"வேண்டாம் சார். இப்போதைக்கு எனக்கு தேவை எல்லாம் பாதுகாப்பும் மனநிம்மதியும் தான். இந்த பணம் என்கிட்ட இருக்கிற வரைக்கும் நிச்சயம் அந்த நிம்மதி எனக்கு கிடைக்காது. இந்த பணத்தை எடுத்துக்கிட்டு அக்ரீமெண்ட் பேப்பர்சை என்கிட்ட கொடுங்க சார். நீங்க என் கூட இருக்கீங்களே அதுவே எனக்கு போதும்"

சரி என்று தலையசைத்த குமரேசன், எதையோ யோசித்து விட்டு,

"ஒருவேளை செய், நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு சென்னையில இருக்க வேண்டாம். எங்கேயாவது கிளம்பி போ. நான் எப்போ சொல்றேனோ அப்போ திரும்பி வந்தா போதும்" என்றார் குமரேசன்.

தனது சந்தோஷத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க கடினமாய் இருந்தது ராகேஷுக்கு.

"சரிங்க சார். நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே நான் செய்றேன். அக்ரீமெண்ட் பேப்பர்சை குடுக்குறீங்களா சார்?"

"கொஞ்சம் வெயிட் பண்ணு"

தனது அலமாரியில் வைத்திருந்த அந்த பத்திரங்களை வெளியில் எடுத்தார் குமரேசன். தங்களுக்குள் இருந்த கொடுக்கல் வாங்கல் முடிவுக்கு வந்து விட்டதாய் அதில் எழுதி, தன் கையப்பமிட்டு, அந்த பத்திரங்களின் தனது பேனாவால் குறுக்காக கோடு போட்டார். ராகேஷ் கொண்டு வந்திருந்த பணப்பையை திறந்து, அதிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து, அதை ராக்கேஷிடம் நீட்டினார்.

"இனிமே நீ எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் கவலைப்பட வேண்டியதில்ல. இந்த பணத்தை உன் செலவுக்கு வச்சுக்கோ. சென்னையை விட்டு எங்கேயாவது போ. நான் சொல்ற வரைக்கும் காத்திரு"

"ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று திருப்தியுடன் புன்னகைத்தான் ராகேஷ்.

"உன்னோட சிம் கார்டை சேஞ்ச் பண்ணிடு. உன்னுடைய பழைய நம்பரை இதுக்கு அப்புறம் யூஸ் பண்ணாத. புது சிம் கார்டு வாங்கிக்கோ. அந்த புது நம்பரை யார்கிட்டயும் கொடுக்காத... என்னையும் சேர்த்து தான்"

சந்தேகத்துடன் தன் கண்களை சுருக்கினான் ராக்கேஷ்.

"இப்போதைக்கு எந்த டிஸ்டபன்ஸும் உனக்கு வேண்டாம். சந்தோஷமா இரு" என்று சிரித்தார் குமரேசன்.

அவரது அந்த சிரிப்பு, அவர் மனதில் ஏதாவது திட்டம் இருக்குமோ என்று ராகேஷை எண்ண வைத்தது.

"சரிங்க சார். நான் கிளம்புறேன்" என்று அந்த இடத்தை விட்டு அகன்றான் ராகேஷ்.

அன்பு இல்லம்

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் மலரவன். அந்த அழைப்பு லண்டனிலிருந்து வந்திருந்தது.

"மலரா, நான் லண்டனுக்கு வந்திருக்கவே தேவையில்ல. நான் வந்தது வீணா போச்சு" என்றார் மணிமாறன்.

"அப்படியா பா சொல்றீங்க? நீங்க லண்டன் போனதால தானே உங்க மருமகள் உயிரை காப்பாத்தி இருக்கீங்க? லண்டன் போனதுக்கு  அதைவிட ஒரு பெஸ்டான காரணம் வேற என்ன இருக்க முடியும்?"

"நீ சொல்றதும் சரி தான் மலரா. ஆனா நீ பிளான் பண்ண மாதிரி நம்ம ப்ரோக்ராம் நடக்கலையே"

"ஆமாம்பா, நான் ஸ்டீவ் கிட்ட பேசினேன். ப்ரோக்ராம் ஆர்கனைசர்ஸ் நம்ம ப்ரோக்ராமை தள்ளி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்காங்களாம்"

"மிஸ்டர் அண்ட் மிஸஸ் மலரவன் வந்து முதல் வரிசையில உட்காரணும்னு இந்த ப்ரோக்ராம் ஆசைப்படுது போல இருக்கு" என்றார் மணிமாறன். அதை கேட்ட மலரவன், சிரித்தான்.

"நான் இந்தியா கிளம்பி வரேன்"

"ஆமாம்பா. நீங்க இந்தியாவுல காலடி எடுத்து வைக்கும் போது, இங்க எல்லாமே மொத்தமா மாறிப் போய் இருக்கும்"

"எதைப்பத்தி சொல்ற மலரா?"

"நேர்ல வந்து நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க"

"அந்த விஷயம் குமரேசன் சம்பந்தப்பட்டதா இருக்குமா?"

"இருக்கலாம்"

"அப்படியா? நீ அந்த விஷயத்தை முடிச்சிட்டியா??"

"கிட்டத்தட்ட"

"அதானே பார்த்தேன்... மலரவனா, கொக்கா? நீ என்ன செஞ்சு வச்சிருக்கேன்னு பாக்க நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்"

"சீக்கிரம் வாங்க... வந்து பாருங்க"

"சீ யூ"

அழைப்பை துண்டித்தான் மலரவன்.

"எந்த மாற்றத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றாள் பூங்குழலி.

அவளை நோக்கி திரும்பினான் மலரவன்.

"நிறைய விஷயங்கள் மாறப்போகுது"

"எப்போ?"

"சீக்கிரமே..."

"சீக்கிரம்ன்னா?"

"இன்னைக்கோ, நாளைக்கோ கூட இருக்கலாம்..."

"நிஜமாவா சொல்றீங்க?"

"இல்ல, இன்னும் சில மணி நேரத்தில் கூட இருக்கலாம்" என்று சிரித்தான் மலரவன்.

"சில மணி நேரத்துலயா?"

பதில் கூறாமல் புன்னகைத்தான் மலரவன்.

"நீங்க என்ன பிளான் பண்ணி இருக்கீங்க?"

"சீக்கிரமே சொல்றேன்"

"என்கிட்ட கூட சொல்ல மாட்டீங்களா?"

மலரவன் ஏதோ கூற நினைக்க அவனது கைபேசி சினுங்கியது.

"ம்கும்..." அலுத்து கொண்டாள் பூங்குழலி.

அந்த அழைப்பு ராகேஷிடம் இருந்து வந்ததால், மலரவனின் முகம் இறுக்கமாய் மாறிப்போனது.

"சொல்லு ராகேஷ் என்ன நடந்தது?"

"நீங்க சொன்ன மாதிரியே நான் செஞ்சிட்டேன் ண்ணா"

"உன்கிட்ட அவர் அக்ரீமெண்ட் பேப்பர்சை கொடுத்துட்டாரா?"

"ஆமாம்"

"நெஜமாவா?" என்றான் நம்ப முடியாமல்.

"ஆமாம் ண்ணா, எனக்கு வேலையும் கொடுத்து, பேப்பர்சையும் என்கிட்ட கொடுத்துட்டாரு"

"அவர் உன் கிட்ட வேற எதுவும் சொல்லலையா?"

"என்னை சென்னையை விட்டு வெளியே போய் கொஞ்ச நாள் தங்கி இருக்க சொன்னாரு. என்னுடைய சிம் கார்டையும் மாத்த சொன்னாரு. அந்த நம்பரை வேற யார்கிட்டயும், ஏன் அவர்கிட்ட கூட கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு"

"சிம் கார்டை மாத்த சொன்னாரா?" என்ற மலரவனின் மனதில் சந்தேகம் எழுந்தது.

"ஆமாம், சென்னையை விட்டு வெளியே போய் தங்க, எனக்கு செலவுக்கு ரெண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தாரு"
 
மலரவனின் சந்தேகம் ஆழமானது.

"இப்போ நீ என்ன செய்யப் போற? சென்னையை விட்டு போக போறியா?"

"நான் அவர் சொன்ன படி நடக்கிறேனா இல்லையான்னு பார்க்க அவர் எனக்கு ஃபோன் பண்ணுவாரு"

"நீ உன்னோட ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ண வேண்டாம். அவர் உனக்கு ஃபோன் பண்ணா, உன்னோட புது சிம் கார்டை நீ இன்னும் ஆக்டிவேட் பண்ணலைன்னு சொல்லு. சென்னையை விட்டு எங்கேயும் போகாத அதுக்கு பதிலா எங்க ஆஃபிஸ்க்கு போயிடு"

"உங்க ஆஃபீஸுக்கா?"

"ஆமாம் எங்க ஆஃபிசுக்கு தான்"

"ஆனா..."

"நீ இன்னும் உன்னோட வேலையை ரிசைன் பண்ணல. அதனால எல்லா பிரச்சனையையும் தூக்கி ஓரமா வச்சுட்டு, ஆஃபீஸ்க்கு போ"

"குமரேசன், எதுக்காக அங்க போனேன்னு கேட்டா என்ன சொல்றது?"

"அவர் உன்னை கேட்க மாட்டார். அப்படியே கேட்டாலும், ரெசெக்கினேஷன் லெட்டர் கொடுக்கப் போனேன்னு சொல்லு"

"சரிங்க அண்ணா"

"ஜாக்கிரதையா இரு. நீ பாதுகாப்பா இருக்கணும்னு நினைச்சா, நான் சொல்றதை கேளு"

"சரிங்க அண்ணா"

மலரவன் அழைப்பை துண்டித்தான்.

"யாரு ஃபோன்ல?"

"ராகேஷ்"

"எந்த ராகேஷ்?"

"மகிழனோட ஃப்ரெண்ட்"

"எக்ஸ் ஃப்ரெண்ட்... உண்மைய சொல்லப்போனா, அவனை எல்லாம் ஃப்ரெண்டுன்னு சொல்லவே கூடாது"

"நீ சொல்றது சரி தான்"

"அவன் எதுக்காக உங்களுக்கு ஃபோன் பண்ணான்?"

"நம்மளை ஒழிக்க குமரேசன் பெருசா பிளான் பண்ணிக்கிட்டு இருக்காரு"

"நம்மளைன்னா?"

"நம்ம எல்லாரையும்... குடும்பத்தோட... ஒட்டுமொத்தமா..."

"அவருக்கு எவ்வளவு தைரியம்...!"

"ஆமாம், அவருக்கு நிறையவே தைரியம் இருக்கு. ஆனா அவரோட துரதிஷ்டம், எல்லாமே தலைகீழா மாறப்போகுது"

"இப்படி எல்லாம் செய்றதால அவருக்கு என்ன கிடைச்சிட போகுது? அதுக்கப்புறம் அவரால் நிம்மதியா இருக்க முடியுமா?"

"நீ உன்னோட கண்ணோட்டத்திலேயே இதை பார்க்கிற. எல்லாரும் உன்னை மாதிரியே இருக்க மாட்டாங்க. நிச்சயமா குமரேசன் உன்னை மாதிரி கிடையாது. அவர் நம்மளை அழிக்க, முழுமூச்சா வேலை செஞ்சுகிட்டு இருக்காரு"

"அப்புறம் எதுக்காக நீங்க இன்னும் காத்துகிட்டு இருக்கீங்க?"

"அவரை அரெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்களை தீர்த்துக்க வேண்டியது இருக்கு. அது இப்பதான் முடிஞ்சிருக்கு"

தனது கைபேசியை எடுத்து ரஞ்சித்துக்கு ஃபோன் செய்தான் மலரவன். அந்த அழைப்பை ஏற்ற ரஞ்சித்,

"சொல்லுங்க மலரவன்" என்றார்.

"ராகேஷ் அவன் கிட்ட கொடுத்த வேலையை செஞ்சு முடிச்சிட்டான். இப்போ நீங்க செய்ய வேண்டியது தான் மிச்சம்"

"நான் இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன்"

"நீங்க வேலையை முடிச்ச உடனே எனக்கு தெரியப்படுத்துங்க"

"நிச்சயம் செய்றேன்"

அழைப்பை துண்டித்து விட்டு பூங்குழலியை பார்த்து புன்னகைத்த மலரவன்.

"இன்னும் சில மணி நேரத்துல குமரேசன் அரெஸ்ட் ஆவாரு" என்றான்.

"இவ்வளவு புத்திசாலியான புருஷன் கிடைச்சத நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"நிஜமாவா சொல்ற?"

ஆம் என்று தலையசைத்த பூங்குழலி, சட்டென்று மலரவன் தன்னை நோக்கி அவளை இழுக்கவும் திடுக்கிட்டாள்.

"அந்தப் பெருமையை நீ கொஞ்சம் செயலில் என்கிட்ட காட்டேன்..."

"என்ன மனுஷன் நீங்க? இன்னும் கொஞ்ச நேரத்துல குமரேசன் அரஸ்ட் ஆக போறாரு... ஆனா நான் என் பெருமையை செயலில் காட்டணுமா?"

"செயலில் காட்டுறதுன்னா, கை குலுக்கல், இல்ல ஒரு முத்தம் கொடுக்கலாமேன்னு சொன்னேன்... ஆனா, நீ தான் அதை வேற என்னமோன்னு நினைச்சுகிட்ட... " என்று அவளையே கிண்டல் செய்தான் மலரவன்.

தன் முகத்தை சுளுக் என்று வைத்துக் கொண்டாள் பூங்குழலி.

"அதுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருக்க? என்கிட்ட மட்டும் ஒரு வார்த்தை சொல்லி பாரு... நான் உன்னை நினைச்சி எவ்வளவு பெருமைப்படுறேன்னு எப்படி செயலில் காட்றேன்னு பாரு..."

"ஒன்னும் தேவையில்ல..." அவனைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடினாள் பூங்குழலி.

"எனக்கு ஒரு சான்ஸ் கொடு, பூங்குழலி"

அவனை நோக்கி திரும்பிய பூங்குழலி,

"குமரேசன் அரெஸ்ட் ஆனதுக்கு பிறகு நீங்க அதை நிதானமா செய்யலாம்" சிரித்தபடி அங்கிருந்து சென்றாள் அவள்.

கண்களை மூடி சிரித்தான் மலரவன். அப்பொழுது மகிழனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர, அந்த அழைப்பை ஏற்றான்.

"சொல்லு மகிழா"

"ரஞ்சித் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டாரு"

"ஓகே நீ ரெடியா?"

"எப்பவுமே ரெடியா தான் இருக்கேன்"

"சரி கிளம்பலாம்" என்று அழைப்பை துண்டித்து விட்டு நடந்தான் மலரவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top