54 சகோதரர்களின் குறி
54 சகோதரர்களின் குறி
அன்பு இல்லம்
தனது அறைக்கு வந்த மலரவன், தனது கைபேசியை எடுக்க நினைத்த போது, பூங்குழலி கட்டிலின் மீது அமர்ந்தபடி தன்னையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அவளிடம் வந்த அவன், அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
"என் மேல அப்சட்டா இருக்கியா?" என்றான்.
அவள் *இல்லை* என்ற தலையசைத்து விட்டு, மீண்டும் *ஆமாம்* என்று தலையசைத்தாள்.
"ஐ அம் சாரி"
"எதுக்காக நான் கோவிலுக்கு போக வேண்டாம்னு சொல்றீங்க?"
"பூங்குழலி, நம்ம கண்டிஷன் இப்போ நார்மலா இல்ல. நம்ம இப்ப தான் ரொம்ப பெரிய பிரச்சனையை கடந்து வந்திருக்கோம். அதை சாதாரணமான விஷயமா நான் நினைக்கல. நம்ம எச்சரிக்கையா இருக்கணும். கீர்த்தி நம்ம வீட்ல இல்ல. அவ எதுக்காக அவ்வளவு அவசரமா நம்ம வீட்டை விட்டு போனான்னு எனக்கு தெரியல. அவ மனசுல எந்த ஒரு மோசமான திட்டமும் இருக்காதுன்னு நம்மால உறுதியா சொல்ல முடியாது"
"உங்களுக்கு பயமா இருக்கா?"
சில நொடிகள் அவளை பார்த்துக் கொண்டிருந்த அவன், ஆம் என்று தலையசைத்தான்.
"எனக்கு பயமா தான் இருக்கு. உனக்கு ஏதாவது ஆனா, அதை என்னால தாங்க முடியாது" என்றான்.
"எனக்கு ஒன்னும் ஆகாது"
"நிச்சயமா எதுவும் ஆகக்கூடாது...! ஆனா, சில விஷயங்கள் நம்ம கையில இல்ல. அதை நம்மால மாத்தவும் முடியாது. நம்மளை வீழ்த்தனும்னு நினைக்கிறவங்களுக்கு நான் சந்தர்ப்பம் கொடுக்க விரும்பல. அதனால, நான் சொல்ற வரைக்கும் தயவு செய்து எங்கேயும் போகாத"
அவள் சரி என்று புன்னகையுடன் தலையசைக்க, உணர்ச்சிவசப்பட்டு அவளை அணைத்துக் கொண்டான் மலரவன். அதை பூங்குழலியும் உணர்ந்தாள். சிறிது நேரம் வரை அவன் அணைப்பில் கிடந்த அவள்,
"எனக்கு குறி வைச்சிருக்காங்களா, மலர்?" என்றாள் மெல்லிய குரலில்.
திடுக்கிட்டு அவளிடம் இருந்து பின்னோக்கி தன்னை இழுத்தான் மலரவன்.
"நான் நெனச்சது சரி தானே?"
ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
"நம்ம லண்டனுக்கு போகாம இருந்தது ரொம்ப நல்லதா போச்சு. அங்க உனக்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருந்திருக்கு"
"குமரேசனா?"
மீண்டும் ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
"உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"
மணிமாறனுக்கும் வில்லியமுக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பை அவளிடம் விளக்கினான் மலரவன்.
"இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க?"
"வில்லியமை குமரேசன் கிட்ட பேச சொல்லி, அதை ரெக்கார்ட் பண்ண சொல்லி இருக்கேன். அவன் அதை செஞ்சிடுவான். குமரேசனை அரெஸ்ட் பண்ண நமக்கு அந்த விட்னஸ் போதும். குமரேசனை நிரந்தரமா ஜெயில்ல வைக்கிறதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் நமக்கு வேணும். அதைத்தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன். அது வரைக்கும், தயவு செய்து வீட்டை விட்டு எங்கேயும் போய்டாத" என்றான் கெஞ்சலாய்.
"சரி. நான் எங்கேயும் போகல. ஆனா, கைலாசம் பத்தின நியூஸ், மீடியா ஃபுல்லா ஹைலைட் ஆகிக்கிட்டு இருக்கே... அப்படின்னா, நீங்க இங்க தான் இருக்கீங்க, லண்டனுக்கு போகல அப்படிங்கற விஷயம் குமரேசனுக்கு தெரிஞ்சிடுமே. அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"
"அதுக்கு கூட எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு. வில்லியம் கிட்ட அதுபடி நடந்துக்க சொல்லி இருக்கேன். அவன் மட்டும் நான் சொன்னபடி கரெக்டா செஞ்சிட்டான்னா, குமரேசனுக்கு என் மேல சந்தேகம் வராது"
யோசனையுடன் தலையசைத்தாள் பூங்குழலி. கட்டிலில் படித்துக் கொண்ட மலரவன், குமரேசனுக்கு எதிராக எப்படி தனது பக்கத்தை உறுதிப்படுத்துவது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குண்டான அத்தனை ஏற்பாட்டையும் ஏற்கனவே மகிழன் செய்து விட்டான் என்று அவனுக்கு தெரியாது.
..........
திட்டமிட்டபடியே ரஞ்சித்தும் அவரது மனைவி காவிரியும், குமரேசனின் அனுமதியை பெறாமலேயே சென்னையை விட்டு புறப்பட தயாரானார்கள், அதுவும் நள்ளிரவில். அவர்கள் வீட்டின் மீது கண் வைத்தபடி, சற்று தூரத்தில் காத்திருந்த மகிழன், அவர்களது வீட்டின் இரும்பு கதவு திறப்பதை அவன் கவனித்தான். அவன் தன்னை தயார் படுத்திக் கொண்டான்.
திடீரென்று அங்கு வந்த காவல்துறையினர் ரஞ்சித்தின் காரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். ரஞ்சித்தும் அவரது மனைவியும் திகில் அடைந்தார்கள். ஒரு காவலர் அவர்களை காரை விட்டு கீழே இறங்கும்படி கூறினார். அவர்கள் பதற்றத்துடன் அதை செய்தார்கள்.
"என்ன ஆச்சு சார்? எதுக்காக எங்களை இப்படி தடுத்து நிறுத்துறீங்க?" என்றார் ரஞ்சித்.
"நீங்க குமரேசன் கூட சேர்ந்து என்னென்ன செஞ்சீங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு"
"நான் என்ன செஞ்சேன்?"
"நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தா, விளாவரியா அதை பத்தி நம்ம பேசலாம்"
"சார், என்னை நம்புங்க. நான் ஒன்னும் செய்யல"
"ஸ்டேஷனுக்கு வந்து சொல்ல வேண்டியதை சொல்லுங்க"
"இப்படித் தான் நடக்கும்னு நான் உங்ககிட்ட சொன்னேன். குமரேசனை நீங்க மலை மாதிரி நம்பினீங்க... பாருங்க, இப்போ என்ன ஆச்சுன்னு..." என்று புலம்பினார் காவேரி.
"ஷ்... சும்மா இரு" என்று அவரை அதட்டினார் ரஞ்சித்.
அங்கு ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க, அவர்கள் ரஞ்சித்தை அதில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.
உடனடியாய் மகிழனுக்கு ஃபோன் செய்தார் காவேரி. அந்த அழைப்பை உடனே ஏற்றான் மகிழன் மகிழன்.
"சார், போலீஸ் என்னோட ஹஸ்பண்டை அரெஸ்ட் பண்ணிட்டாங்க"
"என்னங்க சொல்றீங்க? எப்போ?" என்றான் தன் குரலில் அதிர்ச்சி காட்டி.
"இப்போ தான் அரெஸ்ட் பண்ணி கூட்டிகிட்டு போறாங்க"
"நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேனே... குமரேசனும் அவருடைய பொண்ணும் எவ்வளவு மோசமானவங்கன்னு... இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க?"
"சார், எப்படியாவது என் புருஷனை காப்பாத்துங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன்"
"உங்க புருஷனை பெயில்ல வெளில கொண்டு வந்த பிறகு, நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்"
"ரொம்ப நன்றி சார்"
"ஆனா ஒரு கண்டிஷன்"
"சார், நான் தான் சொல்லிட்டேனே, நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன்"
"உங்க புருஷன் அப்ரூவரா மாறனும்"
அந்த பக்கம் அமைதி நிலவியது.
"அதுக்கு உங்க புருஷன் தயாரா இருந்தா, நான் அவரை குமரேசன் கிட்ட இருந்து நிரந்தரமா காப்பாத்தி கொடுக்கிறேன்"
"நான் அவரை அப்ரூவரா மாற சொல்றன் சார்"
"நல்லது, நான் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். இப்போ நீங்க நிம்மதியா தூங்குங்க"
"நிச்சயமா அவரை கூட்டிட்டு வந்துடுவீங்களா சார்?"
"நாளைக்கு காலையில பத்து மணிக்கு மேல அவரை நான் உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரேன்"
"ரொம்ப நன்றி சார்"
நமுட்டு புன்னகையோடு அந்த அழைப்பை துண்டித்தான் மகிழன். இதுவரை அனைத்தும் அவன் திட்டமிட்டபடியே நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்பொழுது தான் அவன் உருப்படியான ஒரு காரியத்தை செய்திருக்கிறான். தன்னை நினைத்து தானே பெருமைப்பட்டான் மகிழன்.
மறுநாள் காலை
யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, கண்களை கசக்கியபடி கதவை திறந்தான் மலரவன். அங்கு மகிழன் நின்று கொண்டிருந்தான்.
"மகிழா, உனக்கு ஏதாவது வேணுமா?"
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மலரா"
"சரி சொல்லு" என்று அறையை விட்டு வெளியே வந்தான் மலரவன்.
"உன்னோட லாயர் பூபதியை என் கூட கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அனுப்ப முடியுமா?"
"என்ன ஆச்சு, உன்னோட ப்ரெண்ட்ஸ் யாரையாவது போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?"
"இல்ல நான் ரஞ்சித்தை பெயில்ல வெளியில் கொண்டு வரணும்"
"ரஞ்சித்தா...? நீ யாரை சொல்ற?"
"குமரேசன் மேனேஜர் தான்"
அதை கேட்ட மலரவன் குழப்பம் அடைந்தான். அவனுக்கு தெரியும் நிச்சயம் மகிழன் தன் மாமனாருக்கு உதவி செய்ய மாட்டான். அப்படி இருக்கும் போது, அவருடைய மேலாளரை அவன் ஏன் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர நினைக்கிறான்?
"ஆனா குமரேசன் கிட்ட தான் ஒரு லாயர் இருக்காரே..."
"நான் பூபதி சாரை என் கூட வர சொல்றது, குமரேசனுகாக இல்ல, நமக்காக"
"நீ சொல்றது எனக்கு புரியல"
"நேத்து ராத்திரி, ரஞ்சித் சென்னையை விட்டு கிளம்பி போக நெனச்ச போது போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க"
"ஆனா எதுக்காக?"
"அவரை அரெஸ்ட் பண்ண இன்ஸ்பெக்டர் என்னோட ஃப்ரெண்ட்"
"அதனால?"
"அவன் எனக்காக தான் அவரை அரெஸ்ட் பண்ணான்"
"உனக்காகவா?"
"ஆமாம். ரஞ்சித்தை நம்ம பக்கம் இழுக்கிறதுக்காக" என்று அவன் கூற, அசந்து போனான் மலரவன்.
"நான் ஏற்கனவே அவரோட வைஃபை மீட் பண்ணி, குமரேசனை பத்தியும் கீர்த்தியை பத்தியும் பேசினேன். குமரேசன் செய்ற எல்லா தப்பும் அவரோட புருஷனை பாதிக்கும்னு நான் அவங்களுக்கு வார்னிங் கொடுத்தேன்"
"ஆனா ஏன்?"
"நான் அப்பாவையும் மகளையும் ஸ்ட்ராங்கா சந்தேகப்படுகிறேன்"
"ஏன்?"
"அவங்க ஏதோ பெருசா பிளான் பண்றாங்கன்னு எனக்கு தோணுது. அதனால தான், அல்பத்தனமான ஒரு காரணத்தை சொல்லி, அந்தப் பிள்ளைபூச்சி இங்க இருந்து அவசரமா கிளம்பி போயிடுச்சி" அவன் பிள்ளை பூச்சி என்று கூறியது சந்தேகம் இல்லாமல் கீர்த்தியை தான்.
அவன் கூறுவது உண்மை தான் என்பது போல் தலையசைத்தான் மலரவன்.
"ரஞ்சித் ஒருத்தருக்கு தான் குமரேசனை பத்தின எல்லா விவரமும் தெரியும். ஒருவேளை நான் சந்தேகப்படுற மாதிரி, குமரேசன் ஏதாவது தப்பான பிளான் பண்ணிக்கிட்டு இருந்தா, நிச்சயம் ரஞ்சித் அதுல இருந்து தப்பிக்க தான் பாப்பாரு. நான் நினைச்ச மாதிரியே, குமரேசனுக்கு தெரியாம தன்னோட கிராமத்துக்கு போக முடிவு பண்ணிட்டாரு ரஞ்சித். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, என் ஃப்ரெண்ட் மூலமா நான் ரஞ்சித்தை என் கஸ்டடியில் எடுத்துட்டேன்"
"உன் கஸ்டடியிலயா?"
"ஆமாம். இப்போ அவர் நம்ம கஸ்டடியில் தான் இருக்காரு. இந்த பிரச்சினையில் இருந்து அவர் வெளியில வர, நம்மால் அவருக்கு உதவ முடியும்னு அவரை நம்ம நம்ப வச்சா போதும். அதுக்காகத் தான் உன் லாயர் பூபதியை என்னோட அனுப்ப சொல்றேன்"
"எப்போதிலிருந்து நீ இப்படியெல்லாம் பிளான் பண்ண ஆரம்பிச்ச மகிழா?" என்றான் மலரவன் பெருமையுடன்.
"எப்போ என்னை ஒரு குடிகாரனா மத்தவங்க கண்ணுல காட்டி, என்னை கூனிகுறுக வச்சாங்களோ அப்போதிலிருந்து... அவங்களால என்ன முடியும்னு அவங்க காட்டினாங்க. இது என்னோட டர்ன். என்னால என்ன முடியும்னு நானும் காட்டணும் இல்ல?"
ஆம் என்ற தலைகசைத்த மலரவன்,
"சரி நானும் உன் கூட வரேன்" என்றான்.
அது மகிழனை ஆச்சரியப்படுத்தியது. மகிழன் புரிந்து கொண்டான், மலரவனின் மனதில் வேறு ஏதோ திட்டம் இருக்கிறது என்று. மலரவன் ஒரு விஷயத்தில் காலை வைக்கிறான் என்றால், அதற்கு சரியான காரணம் நிச்சயம் இருக்கும் என்பது மகிழனுக்கு தெரியும். அவன் சந்தோஷமாய் தலையசைத்தான்.
"பத்து நிமிஷம் டைம் குடு" நான் குளிச்சிட்டு வரேன் என்ற மலரவன், குளியலறை நோக்கி நடந்தான். மகிழனும் சும்மா இருக்காமல் தன் பங்குக்கு அவன் வேலையை செய்தது மலரவனுக்கு பெரும் திருப்தியை தந்தது. குமரேசனது கதையை முடிக்க இந்த உந்துதல் போதுமானது தானே...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top