51 மருமகன்

51 மருமகன்

"நான் மலரவன்... தில்லைராஜனோட மருமகன்" என்றான் மலரவன் கைலாசத்தின் மீது கோபப்பார்வை வீசியபடி.

அதைக் கேட்ட கைலாசம் திகில் அடைந்தான். மலரவன் யார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் தில்லைராஜனுடைய நெருங்கிய நண்பனான மணிமாறனின் மூத்த மகன். அவன் எப்படி தில்லைராஜனின் மருமகன் ஆனான்? அவன் லண்டனில் தானே இருந்தான்? மணிமாறனின் இளைய மகனான மகிழனை தானே பூங்குழலி மணப்பதாய் இருந்தது? மகிழனை மணக்காமல் பூங்குழலி ஏன் மலரவனை மணந்து கொண்டாள்? என்ன காரணத்திற்காக அவனை மணந்து கொள்ள பூங்குழலி சம்மதித்தாள்? கைலாசத்திற்கு தெரியும், மணிமாறனோ, மகிழனோ, அவனை தேடி பிடிக்கும் அளவிற்கு திறமையானவர்கள் அல்ல. தில்லைராஜனுடன் ஆட்டத்தை துவங்கும் முன்பே, அவர்களது பலம் பலவீனத்தை பற்றி கைலாசம் தெளிவாக விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான். அவன் தெரிந்து கொண்ட விவரம், மணிமாறனும், மகிழனும் தில்லைராஜனின் சொத்தை அபகரிப்பதில் கைலாசத்திற்கு பெரிய தடையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியது. மணிமாறனின் மூத்த மகன் தான் அதை செய்வதற்குரிய எல்லா திறமையும் வாய்ந்தவன், ஆனால் அவன் தில்லைராஜனுக்கு எந்த விதத்திலும் உறவு கிடையாது, அவன் லண்டனில் வசித்து வருகிறான், அவனுக்கு இருக்கும் நேர நெருக்கடியின் காரணமாக, அவன் இந்தியா வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றல்லவா அவன் கேள்விப்பட்டிருந்தான்? அப்படி இருக்கும் போது, அவன் எப்படி இந்தியா வந்தான்? எப்படி பூங்குழலியை திருமணம் செய்து கொண்டான்?

"என்ன பாக்குற? உன்னோட திருட்டுத்தனத்தை யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா?" என்றான் மலரவன்.

"என்ன பேசுற நீ? ஜப்தி பண்ண சொத்தை, ஏலம் விடாம விக்கிறது பேங்க் செஞ்ச தப்பு. அதுல என்னோட தப்பு என்ன இருக்கு?" என்று திணறினான் கைலாசம்.

"அதுல உன்னோட தப்பு என்ன இருக்குன்னு நான் சொல்லனுமா, இல்ல நிரூபிக்கணுமா?" என்றான் மலரவன்.

நிரூபிப்பதா? கைலாசத்திற்கு நடுக்கம் தோன்றியது. எப்படி மலரவன் அவனது திருட்டுத்தனத்தை  நிரூபிப்பான்? மலரவன் திரும்பிப் பார்த்த திசையில், அந்த குறிப்பிட்ட வங்கியின் ஊழியன், காவலர்கள் பாதுகாப்பில் நின்றிருப்பதை கண்டான். கைலாசத்தை விட அதிகம் திகில் அடைந்தது அந்த வங்கியின் மேலாளர் தான்.

"அவன் அப்ரூவரா மாறிட்டான். போலீஸ்ல எல்லாத்தையும் சொல்லிட்டான்" என்றான் மலரவன்.

"நீ தான் அவனை அப்ரூவரா மாத்தி இருப்ப..." என்றான் கைலாசம் கோவமாய்.

"அஃப் கோர்ஸ், அதை நான் தான் செஞ்சேன்"

"உனக்கு என்னைப் பத்தி எப்படி தெரியும்? என்னை நீ தேடிக்கிட்டு இருந்தியா?"

"ஆமாம், என்னைக்கு தில்லைராஜன் அங்கிள் தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்து போனாரோ, அன்னையிலிருந்து நான் உன்னைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன். யாருக்காக ஷூருட்டி கையெழுத்து போட்டு தில்லை அங்கிள் இறந்தாரோ, அந்த மனுஷன் அவரோட சாவுக்கு கூட வராம போனான்... அப்படிப்பட்ட நல்லவனை பார்க்க நான் ரொம்ப ஆசைப்பட்டேன்" என்றான் தன் கண்களை சுருக்கி ஆபத்தான தொணியில்.

கைலாசத்தின் கைகளிலும், வங்கி மேலாளர் கைகளிலும் விலங்கை பூட்டிய காவலர்கள், அவர்களை தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது கைலாசத்தின் முன்னாள் வந்து நின்ற மலரவன்,

"ஜெயிலை விட்டு வெளியில வந்துடலாம்னு கனவுல கூட நினைக்காத. உன்னோட மிச்சம் இருக்கிற மொத்த வாழ்க்கையையும் நீ ஜெயில்ல தான் கழிக்க போற. நான் அதை நடத்திக் காட்டுவேன்" என்றான் அவன் மீது கண்களால் நெருப்பை கக்கியவாறு.

"உன்னை நான் மறக்கவே மாட்டேன் மலரா" என்றான் கைலாசம் கோபமாய்.

"நீ நல்லா இருக்கணும்னு மனசார நினைச்ச தில்லை அங்கிளுக்கு நீ என்ன செஞ்சேன்னு நானும் மறக்க மாட்டேன்... நீ செஞ்ச தப்பை ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சு நினைச்சு உன் வாழ்க்கை எல்லாம் நீ வருத்தப்படணும்" என்று கூறிவிட்டு ஒதுங்கி நின்று அவன் செல்ல வழி கொடுத்தான் மலரவன்.

அவன் கைது செய்யப்பட்டதை படம் பிடிக்க வந்த பத்திரிக்கையாளர்களுக்கு தன் முகத்தை காட்டாமல் தன் கைகளால் மூடிக்கொண்டான் கைலாசம். அவன், அங்கிருந்து கொண்டு செல்லப்படும் வரை, அங்கேயே நின்றிருந்தான் மலரவன். கைலாசம் கைது செய்யப்பட்ட பிறகும் அவன் மனம் ஆறவே இல்லை. அவனது தோளை தொட்ட மித்திரன்,

"ரிலாக்ஸ் மலரா" என்றான்.

"இந்த ஒரு மனுஷனோட சுயநலத்தால, தில்லை அங்கிள் குடும்பமே சிதைஞ்சு  போச்சு" என்றான் மலரவன் வேதனையுடன்.

"நீ தான் அதை சிதைய விடலையே... நீ தான் அவங்களை காப்பாத்திட்டியே" என்றான் மித்திரன்.

"சிவகாமி ஆன்ட்டிக்கு நியாயமா சேர வேண்டிய எல்லாம் அவங்களுக்கு திரும்ப கிடைக்கணும். இந்த கேஸ் டீடைல்ஸ் எல்லாத்தையும் நம்ம லாயர் பூபதி கிட்ட கொடுத்து இந்த கேசை அவரை ஹேண்டில் பண்ண சொல்லு. நான் அவர்கிட்ட அப்புறம் பேசுறேன்"

"சரி நான் அதை செஞ்சிடுறேன்" என்றான் மித்திரன்.

அவர்கள் தங்கள் காரை நோக்கி நடந்தார்கள்.

அன்பு இல்லம்

மின்னல்கொடிக்கு பழசாறு கொண்டு வந்து கொடுத்தாள் பூங்குழலி.

"அவங்களுக்கும் கொடு குழலி" என்றார் மின்னல்கொடி.

"எங்களுக்கு ஜூஸ் வேண்டாம். நாங்க காபி சாப்பிட போறோம்" என்றார் வடிவுக்கரசி.

"சரி. உங்களுக்கு நான் காபி கொண்டு வரேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து பூங்குழலி செல்ல நினைத்தபோது, அவளது கைபேசி அழைத்தது.

அது, அவளது *முன்னாள்* பக்கத்து வீட்டுக்காரரின் அழைப்பு.

"அம்மா, கணபதி அங்கிள் ஃபோன் பண்றாரு" என்றாள்.

"நம்ம பழைய பக்கத்து வீட்டுக்காரரா?" என்றார் சிவகாமி.

"ம்ம்ம்" அந்த அழைப்பை ஏற்றாள் பூங்குழலி.

"குழலி, நியூஸ் பாரு"

"என்ன நியூஸ் அங்கிள்?"

"தீர்ப்பு நியூஸ் சேனல்"

கட்டிலின் மீது இருந்த ரிமோட்டை எடுத்து தீர்ப்பு செய்தி சேனலுக்கு மாற்றினாள் பூங்குழலி. அனைவரும் விழிகளை விரித்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் கைலாசம் கைவிலங்கிட்டு கைது செய்யப்படும் அந்த செய்தியை பார்த்தார்கள்.

"அங்க பாரு, பின்னாடி நம்ம மலரவன் தம்பி தான் நிக்கிறாரு" என்று உற்சாகமாய் கூறினார் வடிவுக்கரசி.

அந்த செய்தியில், சில நொடிகள் வந்து மறைந்த மலரவனை பார்த்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவன் வந்து சென்றது சில நொடிகளே ஆனாலும், அவனது முகத்தில் பிரதிபலித்த கோபத்தை அவர்கள் கவனிக்கவே செய்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

*தில்லைராஜனின் சொத்துக்களை, நாடகமாடி, மோசடி செய்த கைலாசத்தையும், அது போன்ற பல  மோசடிகளுக்கு இதுவரை உடந்தையாக இருந்த வங்கி மேலாளரையும், இன்று சார்பாதிவாளர் அலுவலகத்தில் காவலர்கள் கைது செய்தார்கள்* என்று அந்த செய்தி கூறியது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த  அவர்கள் முகங்களில் அதிர்ச்சி மேலோங்கியது.

"இதுக்காக தான் லண்டன் ப்ரோக்ராமையே கேன்சல் பண்ணானா மலரவன்?" என்றார் மின்னல்கொடி.

சிவகாமியும், பூங்குழலியும் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்று கூறத் தேவையில்லை. அந்த நிகழ்ச்சிக்காக மலரவன் எவ்வளவு கடுமையாய் பாடுபட்டான் என்று அவர்களுக்குத் தான் தெரியுமே.

"இந்த விஷயத்தை கேள்விப்பட்டா, மலரோட அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாரு" என்றார் மின்னல்கொடி.

மற்ற மூவரும் பேசும் சக்தியை இழந்து விட்டிருந்ததால், அவர்கள் ஒன்றும் கூறவில்லை. தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி உண்மையானது தானா என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. சிவகாமியின் கண்கள் குளமாயின. பூங்குழலி அழாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"தில்லையோட சாவுக்கு இந்த பொறம்போக்கு தான் காரணமா?" என்றார் வடிவுக்கரசி.

"அவரு எவ்வளவு மனசார இவனுக்கு ஹெல்ப் பண்ணாரு தெரியுமா அக்கா?" என்றார் சிவகாமி கணத்த இதயத்துடன்.

"கண்ணை துடைச்சுக்கோ சிவகாமி. இது அழ வேண்டிய நேரமில்ல. தில்லை அண்ணனோட இழப்புக்கு எதுவும் ஈடாகாதுங்கறதை நான் ஒத்துக்குறேன். ஆனா இந்த படுபாவி போலீஸ்ல மாட்டிக்கிட்டதை நினைச்சு நம்ம சந்தோஷப்படணும்" என்றார் மின்னல்கொடி.

"அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறது தப்பா? அந்த நினைப்பு, என் புருஷனோட உயிரையே குடிச்சிருக்கு" என்று அழுதார் சிவகாமி.

"நல்ல மனசோட தான் அண்ணன் அவனுக்கு உதவி இருக்காரு. அதுல அவரோட தப்பு எதுவும் இல்ல. நல்ல எண்ணங்கள் எப்பவுமே தோத்துப் போகாது, சிவகாமி. அது நிச்சயம் நம்ம பிள்ளைங்களை வாழ வைக்கும்"

"மின்னல் சொல்றது உண்மை தான் சிவகாமி. அதனால தான் உனக்கு மலரவன் மாதிரி ஒரு நல்ல மருமகன் கிடைச்சிருக்காரு" என்றார் வடிவக்கரசி.

"ஆமாம் கா. மலரவனுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல"

"அவன் உன்னோட மருமகன். இதை செய்ய வேண்டியது அவனுடைய கடமை" என்றார் மின்னல்கொடி.

அப்பொழுது அவர்கள் அழைப்பு மணியின் ஓசையை கேட்டார்கள்.

"மலரவன் தான் வந்துட்டான்னு நினைக்கிறேன்" என்றார் மின்னல்கொடி.

எந்த சிந்தனையும் இன்றி கதவை திறக்க ஓடினாள் பூங்குழலி. அவள் அங்கு செல்லும் முன்பே, தண்டபாணி கதவை திறப்பதை பார்த்தாள். உள்ளே நுழைந்தது மகிழன். ஏமாற்றம் அடைந்த பூங்குழலி, மீண்டும் மின்னல்கொடியின் அறைக்கு திரும்பி சென்றாள், மகிழனுக்கு பின்னால் சற்று இடைவெளி விட்டு உள்ளே நுழைந்த மலரவனை கவனிக்காமல்.

"வந்தது யார், குழலி?" என்றார் சிவகாமி.

"மகிழன்" என்றாள் பூங்குழலி.

"நான் மலரவன் தான் வந்துட்டான்னு நினைச்சேன்" என்றார் மின்னல்கொடி ஆம் என்று தலையசைத்த பூங்குழலி, தண்ணீர் பருக அங்கிருந்த தண்ணீரை ஜக்கை  எடுத்தாள். அது காலியாய் இருக்கவே,

"நான் தண்ணி கொண்டு வரேன்" என்று அந்த ஜக்குடன் அங்கிருந்து சென்றாள்.

தண்ணீர் எடுக்க சமையலறைக்கு வந்தாள். தண்டபாணி ஆரஞ்சு பழங்களை பிழிந்து சாரு எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட அவள்,

"யாருக்கு ஜூஸ் போடுறீங்க தண்டபாணி?" என்றாள்.

"மலர் அண்ணன் கேட்டாரு அண்ணி" என்றான் தண்டபாணி.

"மலரா? அவர் வந்துட்டாரா?" என்றாள் நம்ப முடியாமல்.

"இப்ப தான் அண்ணி வந்தாரு"

அங்கிருந்து தங்கள் அறையை நோக்கி ஓட்டமாய் ஓடினாள் பூங்குழலி. தான் பிழிந்து வைத்திருந்த பழச்சாறை பார்த்தபடி நின்றான் தண்டபாணி. அதை இப்போது மலரவனின்  அறைக்கு கொண்டு செல்வதா, வேண்டாமா என்று புரியவில்லை அவனுக்கு.

முகத்தை கழுவி உடைமாற்றிக் கொண்டு குளியலறையில் இருந்து மலரவன் வெளியே வருவதை கண்ட பூங்குழலி, அப்படியே நின்றாள். அவளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தான் மலரவன். அவளது கண்கள் கலங்கி இருப்பதை
கண்ட அவனது முகம் மாறியது. அவள் உணர்ச்சி வசப்பட என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள அவனுக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. தனது கரங்களை விரித்து *என்னிடம் வா* என்பது போல் தலையசைத்தான் அவன். அவனை நோக்கி ஓடிச் சென்ற பூங்குழலி, அவனது கழுத்தை கட்டிக் கொள்ள, அவளது இடையை வளைத்து அவளை தூக்கி அணைத்துக் கொண்டான் மலரவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top