48 திருட்டு ஆட்டம்

48 திருட்டு ஆட்டம்

எம்எம் நிறுவனம்

மித்திரனின் அறைக்குள் மலரவன் நுழைந்த மறுகணமே, அவன் மீது கேள்வி கணைகளை தொடுக்க துவங்கினான் மித்திரன். அவன் அதற்காகவே காத்திருந்ததாக தெரிகிறது.

"என்ன ஆச்சி மலரா? எதுக்காக உன்னோட லண்டன் ட்ரிப்பை நீ கேன்சல் பண்ண? பூங்குழலியோட லண்டனுக்கு போகணும்னு நீ எவ்வளவு ஆசையா காத்துக்கிட்டு இருந்த? இப்போ என்ன ஆச்சு? இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ற அளவுக்கு அப்படி என்ன குடி மூழ்கி போற பிரச்சனை?" நிறுத்தாமல் கேட்டு முடித்தான் மித்திரன்.

"ஆமாம் மித்ரா, குடி முழுகுற பிரச்சனை தான்" என்றான் சீரியஸாக.

"என்னாச்சு மலரா, எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்க?" என்ற மித்திரனும் டென்ஷன் ஆனான்.

"என்னோட லாயர் பூபதி கிட்ட இருந்து நம்ப முடியாத ஒரு மெசேஜ் கிடைச்சிருக்கு"

"என்ன மெசேஜ்?"

"உனக்கு கைலாசத்தை ஞாபகம் இருக்கா?"

"கைலாசம்... கைலாசம்..." என்று நினைவு கோர முயன்றான் மித்திரன்.

"தில்லை அங்கிள் அவருக்காக தான் ஷூரிட்டி கையெழுத்து போட்டாரு..." என்றான் மலரவன்.

"ஆமாம், இப்போ எனக்கு ஞாபகம் வந்திருச்சு.  சரி அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"தில்லை அங்கிளோட வீட்டை, நாளைக்கு கைலாசம் தன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ண போறாரு"

"என்ன்னனது???? அது எப்படி நடக்க முடியும்?" என்றான் மித்திரன் அதிர்ச்சியுடன்.

"எனக்கும் ஒன்னும் புரியல. பேங்க் ரூல்ஸ் படி, ஜப்தி செஞ்ச வீடு, மக்களுக்கு முன்னிலையில ஏலம் விடப்படணும். ஆனா இந்த கேஸ்ல அப்படி எதுவும் நடக்கல. ஏன்? எனக்கு என்னமோ கைலாசம் மேல தான் சந்தேகமா இருக்கு. தில்லை அங்கிளை அவர் நம்ப வச்சு ஏமாத்தி இருக்கணும்" என்றான் கோபம் கொந்தளிக்க.

"அது எப்படி நடந்திருக்கும்னு நினைக்கிற?"

"எனக்கு தெரியல. என்னால எந்த முடிவுக்கு வர முடியல. அதனால தான் உன்னை பார்க்க வந்தேன். கைலாசம் வீட்டை தன் பேர்ல ரிஜிஸ்டர் பண்றதுக்கு முன்னாடி, உண்மையான பிரச்சனை என்னன்னு நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிஞ்சாகணும். நம்ம இதை நடக்க விடக்கூடாது. தில்லை அங்கிள், கைலாசத்துக்காக ஷூரிட்டி கையெழுத்து போட்ட பேங்கை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு வேணும். சிவகாமி ஆன்ட்டி சொன்னதை வச்சு பார்க்கும் போது, கைலாசத்து கிட்ட சல்லி காசு கூட இருக்க முடியாது. அதனால தான் அவருக்கு ஹெல்ப் பண்ணனும்னு தில்லை அங்கிள் நெனச்சிருக்காரு. கைலாசம் பேங்க்ல வாங்குன லோனை கூட ஒழுங்கா கட்டல. அதனால தான் தன்னுடைய சொத்தையும்,  உயிரையும் தில்லை அங்கிள் இழந்தாரு. அப்படி இருக்கும் போது, பல கோடி மதிப்பு இருக்கிற தில்லை அங்கிள் வீட்டை வாங்குற அளவுக்கு கைலாசத்துக்கு பணம் எங்கிருந்து வந்தது?"

"இது ரொம்ப சீரியஸான விஷயமா தான் தெரியுது" என்றான் மித்திரன்.

"அதனால தான் என்னோட லண்டன் ட்ரிப்பை நான் கேன்சல் பண்ணிட்டேன். தில்லை அங்கிளோட சாவுக்கு கைலாசம் தான் முழுக்க முழுக்க காரணம். அவரு தில்லை அங்கிளோட இறுதி சடங்குல கூட கலந்துக்கல. அவரோட குடும்பத்தை ஒரு தடவை சந்திக்கணும்னு கூட கைலாசம் நினைக்கல. இதுக்கெல்லாம் அந்த ஆள் பதில் சொல்லியே ஆகணும்"

"எனக்கு அரை நாள் டைம் கொடு. அந்த பேங்கை பத்தின எல்லா டீடெயில்ஸ்ஸையும் நான் உனக்கு கொடுக்கிறேன்"

"நானும் உன் கூட வரேன். என்னால வீட்ல சும்மா உக்காந்துகிட்டு இருக்க முடியாது. இதைப் பத்தி வேற யாருக்கும் தெரியவும் கூடாது. விஷயம் லீக் ஆனா, கைலாசம் தப்பிச்சிடுவாரு. அது நிச்சயம் நடக்கக் கூடாது. வீட்ல இருந்தா உன்கூட ஃபோன்ல என்னால ஃப்ரீயா பேச முடியாது"

"சரி அப்போ கிளம்பு போகலாம்"

இருவரும் அந்த குறிப்பிட்ட வங்கியை நோக்கி புறப்பட்டார்கள்.

அவர்கள் அஷ்டலட்சுமி  வங்கியை வந்தடைந்தார்கள். தங்களுக்கு தேவையான தகவல்களை எப்படி சேகரிப்பது என்ற யோசனையுடன் வெளியே காத்திருந்தார்கள். அப்போது அந்த வங்கியில் பணி புரியும் ஒரு பியூன், காலியான கண்ணாடி தேனீர் தம்ளர்களுடன் வெளியே வந்தான். மித்திரனை பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் மலரவன். அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மித்திரன், காரை விட்டு கீழே இறங்கி அந்த பியூனை  பின்தொடர்ந்த மித்திரன், தேநீர் கடையில் அந்த தம்ளர்களை அவன் கொடுத்துவிட்டு திரும்பி வரட்டும் என்று சற்று தூரத்தில் காத்திருந்தான். அவன் தன் அருகில் வந்த போது,

"ஒரு நிமிஷம் தம்பி" என்று அவனை அழைத்தான் மித்திரன்.

டிப்டாப்பாய் உடை அணிந்து பந்தமாய் இருந்த மித்திரனை ஏற இறங்க பார்த்தான் அந்த பியூன்.

"உங்களுக்கு என்ன சார் வேணும்?" என்றான் மரியாதையுடன்.

"எனக்கு  இந்த பேங்க்ல ஒரு வேலை ஆகணும். அதை பத்தி யார்கிட்ட கேக்கணும்?" என்றான்.

"யார்கிட்ட வேணும்னாலும் கேட்கலாம் சார்"

அவனை தன் அருகில் அழைத்த மித்திரன்,

"அது ஒரு இல்லீகள் சமாச்சாரம். நான் 30% ஷேர் கொடுக்க தயாரா இருக்கிறேன். இப்ப சொல்லு, நான் இதைப் பத்தி யார் கிட்ட பேசலாம்?"

இங்கும் அங்கும் எச்சரிக்கையுடன் பார்த்த அவன்,

"அதை சொன்னா எனக்கு எவ்வளவு கொடுப்பீங்க?" என்றான்.

"நீ எவ்வளவு எதிர்பார்க்குற?"

"ரெண்டாயிரம் ரூபா..."

தனது பாக்கெட்டில் இருந்து சில 2000 ரூபாய் நோட்டுகளை எடுத்த மித்திரன், அதை அந்த ஊழியனை நோக்கி நீட்டினான். அதை கண்ட அவனது கண்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் விரிந்தது. தன் கண்களை கசக்கி பிழிந்து தான் காண்பது உண்மை தானா என்பது போல் அதை பார்த்த அவன், மித்திரனின் கரத்தை கீழே அழுத்தி, சுற்று முற்றும் பார்த்துவிட்டு,

"நீங்க ஏதோ ரொம்ப பெருசா பிளான் பண்றீங்க போல இருக்கு?" என்றான்.

அவனைப் பார்த்து கண்ணடித்து தலையசைத்தான் மித்திரன்.

"இது ஒரு தனியார் பேங்க். பாக்குறதுக்கு தான் இது பேங்க். ஆனா இது ஓடிக்கிட்டு இருக்கிறது என்னவோ உங்களை மாதிரி ஆளுங்க கொடுக்கிற பர்சன்டேஜ்ல தான்"

"அப்படின்னா நான் சரியான இடத்துக்கு தான் வந்திருக்கேன்" என்றான் மித்திரன் ஆர்வமுடன்.

"விஷயம் என்னன்னு சொல்லுங்க. நான் எங்க மேனேஜர் கிட்ட சொல்றேன்"

"உன்னால உங்க மேனேஜர் கிட்ட பேச முடியுமா?"

"ஏன் முடியாது தாராளமா பேசலாம்"

"அப்படின்னா பிரச்சனை இல்ல. எனக்கு ஒரு பணக்கார ஃப்ரெண்ட் இருக்கான். எனக்கு ஷூரிட்டி போட ரெடியா இருக்கான். கொஞ்ச மாசத்துக்கு பிறகு, நான் ஒழுங்கா இஎம்ஐ கட்டல அப்படின்னு சொல்லி, நீங்க அவன் சொத்தை சீஸ் பண்ணி அதை என்கிட்ட கொடுக்கணும். அதுக்கு நான் உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்? நான் 30% வரை கொடுக்க தயாரா இருக்கேன்"

"நெஜமா தான் சொல்றீங்களா? நீங்க 30% தருவீங்களா?"

"நான் அதை உங்களுக்கு எழுத்து மூலமா எழுதிக் கொடுக்க கூட தயாராக இருக்கேன். ஆனா எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கணும். ஏன்னா, மாட்டிக்கிட்டா என் கதை அம்பேல் ஆயிடும்"

"அத பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம் சார். எங்க வேலை ரொம்ப சுத்தமா இருக்கும். நீங்க சொன்ன மாதிரி நிறைய வேலை நாங்க பார்த்து இருக்கோம். நாளைக்கு கூட, இந்த மாதிரி ஒரு விஷயம் முடிவுக்கு வருது"

"அப்படியா?" என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் மித்திரன்.

"ஷுருட்டி கையெழுத்து போட்ட ஆளு தற்கொலை பண்ணிக்கிட்டாரு. ஒருத்தருக்கு கூட என் மேல சந்தேகம் வரலையே... எங்க வேலை அப்படி கனகச்சிதமா இருக்கும்"

தனது கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டான் மித்திரன். அவனது கோபம், அனைத்தையும் பாழாக்கிவிடும். நல்லவேளை மலரவன் அவனுடன் இல்லை. இந்த பியூன் பேசுவதை மட்டும் மலரவன் கேட்டிருந்தால், அவன் நிச்சயம் தன் பொறுமை இழந்து இருப்பான்.

"உங்க மேனேஜரை நான் எப்ப பார்க்கலாம்?" என்றான் மித்திரன்.

"அவர் இப்போ ஒரு மீட்டிங்ல இருக்காரு. ஒரு மணி நேரத்துல நீங்க அவரை பார்க்கலாம்"

"சரி நான் வெயிட் பண்றேன்"

சரி என்று சந்தோஷமாய் அங்கிருந்து சென்றான் அவன், ஒரு மிகப்பெரிய பார்ட்டியை பிடித்துவிட்ட திருப்தியுடன்.

கோபமாய் காரில் வந்தமர்ந்தான் மித்திரன்.

"மலரா, நம்ம இந்த *.........* பசங்களை  சும்மா விடக்கூடாது" என்றான்.

விஷயத்தை புரிந்து கொள்ள, அவன் உதிர்த்த அந்த வார்த்தை மலரவனுக்கு போதுமானதாய் இருந்தது. ஆனால் மித்திரன் சும்மா இல்லை. விஷயத்தை மலரவனிடம் கூறி முடித்தான்.

"நம்ம நினைச்சது மட்டும் நடக்கட்டும், இவனுங்களுக்கு இருக்கு" என்றான் மலரவன் ஸ்டியரிங்கை முறுக்கிய படி.

மாலை

'நான் தான் லண்டனுக்கு போகிறேன்' என்று மணிமாறன் கூறியதை கேட்ட மின்னல்கொடி குழப்பமடைந்தார். சிவகாமியும் வடிவுக்கரசியும் கூட கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தார்கள். ஏனென்றால் அது பற்றி பூங்குழலி அவர்களிடம் ஒன்றுமே கூறவில்லை.

"என்ன சொல்றீங்க? நீங்களா லண்டனுக்கு போறீங்க? ஆனா ஏன்? மலரவனும், பூங்குழலியும் தானே போறதா இருந்தாங்க? திடீர்னு என்ன ஆச்சு?"

"மலரவன் தான் என்னை போக சொன்னான்"

"ஆனா ஏன்? என்ன காரணம்? எதுக்காக திடீர்னு அவனோட பிளானை மாத்தினான்?"

"எனக்கு தெரியல..."

"உங்களுக்கு தெரியாதா? மலரவன் எதுக்காக உங்களை போக சொன்னார்னு உங்களுக்கு தெரியல... ஆனாலும் நீங்க லண்டனுக்கு போக ஒத்துக்கிட்டீங்களா?" என்றார் வடிவுக்கரசி வியப்புடன்.

"ஆமாம் கா... மலரவன் எது செஞ்சாலும் அதுல நியாயமான காரணம் இருக்கும். நான் அவனை மனப்பூர்வமா நம்புறேன்." என்றார் நம்பிக்கையோடு.

"மல்லு கூட உங்ககிட்ட எதுவுமே சொல்லலையா?" என்றார் மின்னல்கொடி நம்ப முடியாமல்.

"பிரச்சனையை முடிச்சிட்டு என்கிட்ட சொல்றதா சொல்லி இருக்கான்"

பெருமூச்சு விட்டார் மின்னல்கொடி. இந்த அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் அபார புரிதலும் நம்பிக்கையும் இருந்தது அவருக்குத் தெரிந்தது தான்.

"உங்களுக்கு தேவையானதை எல்லாம் நீங்க எப்படி பேக் பண்ணுவீங்க? நீங்க தான் இதை முன்ன பின்ன செஞ்சதே இல்லையே... எதை எடுத்து வைக்கணும், எது வேணும்னு கூட உங்களுக்கு தெரியாதே..." என்றார் மின்னல்கொடி வருத்தத்துடன்.

"அது ஒன்னும் பிரச்சனை இல்ல. என்ன எடுத்து வைக்கணும்னு மட்டும் சொல்லு. நான் எடுத்து வச்சுக்கிறேன்"

சரி என்று தலையசைத்தார் மின்னல்கொடி.

"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா அங்கிள்?" என்றாள் அங்கு வந்த பூங்குழலி.

"இல்லம்மா பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன்" என்று சில நொடி தாமதித்த அவர்,

"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு நினைக்கிறேன். என்னோட யூகம் சரியா இருந்தா, லண்டன் ட்ரிப்பை கேன்சல் பண்ண காரணத்தை மலரவன் உன்கிட்ட கூட சொல்லி இருக்க மாட்டான்"

ஆம் என்று தலையசைத்தாள் பூங்குழலி.

"மனசு வருத்தப்படாத பூங்குழலி. உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகுறதுக்கு முன்னாடியே உன்னை தன்னோட லண்டனுக்கு கூட்டிக்கிட்டு போகணும்னு ரொம்ப ஆசையா இருந்தான் மலரவன். ஆனா இப்போ, அவன் இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணி இருக்கான். அப்படின்னா அவனுக்கு முன்னாடி இருக்கிற பிரச்சனை ரொம்ப முக்கியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கணும். அது உனக்கே சீக்கிரம் தெரியவரும். அவனை நம்பு"

"நான் அவரை நம்புறேன் அங்கிள்" என்று புன்னகைத்தாள் பூங்குழலி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top