47 வருத்தத்தில் பூங்குழலி
47 வருத்தத்தில் பூங்குழலி
கீர்த்திக்கு ஃபோன் செய்தார் குமரேசன். அந்த அழைப்பை ஏற்றாள் கீர்த்தி.
"சொல்லுங்க டாட்"
"நம்ம வீட்டுக்கு வர ரெடியா இரு"
"ஆனா ஏன் டாட்?"
"மணிமாறன் குடும்பத்துக்கு எதிரா நம்ம செயல்பட ஆரம்பிச்சதுக்கு பிறகு, நீ அங்கே இருக்க வேண்டாம். ஒருவேளை, அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வந்தா, நீ அவங்க வீட்ல மாட்டிக்குவ. என்னால அப்படி நடக்க விட முடியாது. அவங்களை நம்ம குறைச்சி எடை போடக்கூடாது. நம்மளோட திட்டம் அவங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா, நம்மளை உயிரோட தோலை உரிச்சிடுவாங்க"
"ஆனா என்ன சாக்கு சொல்லி நான் இங்கிருந்து வர்றது?"
"மயக்கம் போட்டு விழற மாதிரி நடி. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்"
"சரி"
அவர்களது திட்டப்படியே, மின்னல்கொடி, சிவகாமி, மற்றும் வடிவுக்கரசியின் முன்னிலையில் மயங்கி விழுந்தாள் கீர்த்தி. அவள் விழுவதை பார்த்த அவர்கள், பதட்டமானார்கள். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தார் சிவகாமி. கீர்த்தி மெல்ல கண்விழித்தாள்.
"என்ன ஆச்சு உனக்கு?" என்றார் வடிவுக்கரசி.
"என்னன்னு தெரியல. எனக்கு தலை சுத்துது" என்றாள் அரை மயக்க நிலையில் இருப்பவளை போல.
"நீ உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு" என்றார் மின்னல்கொடி.
"பரவாயில்ல, ஆன்ட்டி" என்றாள் தன் தலையை அழுத்தி பிடித்தபடி கீர்த்தி.
"அவளை போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு, சிவகாமி" என்றார் மின்னல்கொடி.
"நீ போ. நாங்க தான் இங்க இருக்கோமே. நாங்க மின்னலை பார்த்துக்கிறோம்" என்றார் சிவகாமி.
சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு சென்றாள் கீர்த்தி. குமரேசனுக்கு ஃபோன் செய்து அவர் கூறியபடியே தான் செய்து முடித்து விட்டதை கூறினாள்.
இதற்கிடையில்...
பூங்குழலி குழப்பமடைந்தாள். எதற்காக மலரவன் தங்களது லண்டன் பயணத்தை ரத்து செய்தான் என்று அவளுக்கு புரியவில்லை. அதுவும் அவளிடம் அவன் அது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அவளிடம் ஒன்றும் கூறாமல் அவன் எப்படி அங்கிருந்து செல்லலாம்? லண்டன் செல்ல வேண்டும் என்பதற்காக வெகு ஆர்வத்துடன் காத்திருந்தானே...! அதை ரத்து செய்யும் அளவிற்கு அப்படி என்ன தலை போகும் விஷயம் இங்கு நடந்து விட்டது? எவ்வளவு முயன்ற போதும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மணிமாறனிடம் வந்தான் மலரவன்.
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பா" என்றான் அவரை தன்னுடன் வருமாறு ஜாடை காட்டி.
அவனுடன் நடந்தார் மணிமாறன்.
"அப்பா, நானும் பூங்குழலியும் லண்டன் போக போறது இல்ல"
"ஏன் மலரா? என்ன ஆச்சு?" என்றார் அதிர்ச்சியுடன்.
"எனக்கு ஒரு முக்கியமான தகவல் கிடைச்சிருக்கு. நான் அடுத்த கொஞ்ச நாளைக்கு சென்னையில இருந்தாகணும். அதனால, எனக்கு பதிலா லண்டனுக்கு நீங்க போயிட்டு வாங்க"
"என்ன விஷயம் மலரா?"
"உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்லப்பா?"
"உன்னை தவிர வேற யாரை நான் நம்ப போறேன்?"
"அது உண்மையா இருந்தா, இந்த தடவை, தயவு செய்து என்னை எந்த கேள்வியும் கேட்காதீங்க. விஷயத்தை முடிச்சிட்டு, உங்களுக்கு எல்லாத்தையும் விவரமா சொல்றேன்"
"ஏதாவது சீரியஸான விஷயமா?"
"ரொம்ப சீரியஸான விஷயம் பா. அது வெளியில லீக் ஆக கூடாதுன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். நான் உங்ககிட்ட விஷயத்தை சொல்லலேன்னு தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்க. விஷயத்தோட ஆழம் என்னென்ன நீங்க புரிஞ்சுக்கவீங்கன்னு நினைக்கிறேன்"
"கண்டிப்பா மலரா. நான் உன்னை நம்புறேன். காரணம் இல்லாம நீ எதையும் செய்ய மாட்ட. பூங்குழலியோட நீ லண்டனுக்கு போகணும்னு எவ்வளவு ஆர்வமா இருந்தேன்னு எனக்கு தெரியும். உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடியே அதை நீ பிளான் பண்ணி இருந்த. அந்த ஈவண்ட்டை வச்சு தான் நீ உன்னோட கல்யாண தேதியையே ஃபிக்ஸ் பண்ண. அந்த ட்ரிப்பையே நீ கேன்சல் பண்றேன்னா, அந்த விஷயம் எவ்வளவு சீரியஸா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது"
"ஆமாம்பா, பூங்குழலி என்ன நினைக்கிறான்னு தெரியல"
"நீ அவகிட்ட கூட விஷயத்தை சொல்லலையா?"
"இல்லப்பா. அவ கிட்ட கூட என்னால விஷயத்தை சொல்ல முடியாது"
மணிமாறன் மருட்சிக்கு ஆளானார். விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் மேலோங்கிய போதும், அவர் மலரவனை ஒன்றும் கேட்கவில்லை. அவன் மீது அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
"சரி மலரா. உனக்கு பதில் நான் லண்டனுக்கு போறேன். சிவகாமியும் அக்காவும் மின்னலை பார்த்துக்க இங்கே இருக்காங்க. ஆனாலும் நீயும் அவளைப் பார்த்துக்கோ. கீர்த்தி விஷமே உருவானவ"
ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
"நீ இங்க இருக்க. அதனால நான் நிம்மதியா போயிட்டு வருவேன்"
"அம்மாவை நான் பார்த்துக்கிறேன் பா"
"நான் மித்திரன் கிட்ட சொல்லி, என்னுடைய டிக்கெட்டை ஏற்பாடு செய்ய சொல்றேன்"
"அதை நான் பார்த்துக்கிறேன். நான் இப்போ அவனை மீட் பண்ண தான் ஆஃபீசுக்கு போறேன். இப்போ வரைக்கும் எங்க ப்ரோக்ராம் கேன்சல் ஆன விஷயம் யாருக்கும் தெரியாது. எல்லார்கிட்டயும் நான் அதை ராத்திரி தான் சொல்ல போறேன்"
சரி என்று தலையசைத்தார் மணிமாறன்.
தனது தார் சாவியை எடுக்க தன் அறைக்கு சென்றான் மலரவன். அவர்கள் இருவருக்கும் தெரியாது, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒருவர் வேறு யாரும் அல்ல, பூங்குழலி தான். அவள் இன்னும் அதிகமாய் குழம்பிப் போனாள். மணிமாறனிடம் கூட சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன விஷயமாக முக்கியமான இருக்கும்? அந்த விஷயம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்று மலரவன் ஏன் நினைக்கிறான்? அவளுக்கு ஒன்றும் பிடிப்படவில்லை.
தங்கள் அறைக்குச் சென்ற அவள், கார் சாவியை எடுத்துக்கொண்டு மலரவன் புறப்படுவதை பார்த்தாள். அவளைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்தான் மலரவன்.
"நான் ஆபீசுக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்" என்றான் தன் கோட்டை அணிந்தபடி.
சரி என்று தலையசைத்தாள் பூங்குழலி.
"நீ அப்செட் ஆயிட்டியா?"
இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
"அப்புறம் ஏன் என்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம தலையை மட்டும் ஆட்டுற?"
பெருமூச்சு விட்டாள் பூங்குழலி.
"ஐ அம் சாரி பூங்குழலி. இப்போ இருக்கிற சூழ்நிலை, என்னை நம்ம ப்ரோக்ராமை கேன்சல் பண்ண வச்சிருக்கு"
"பரவாயில்லை விடுங்க"
"இன்னும் ரெண்டு நாள்ல அதுக்கான காரணத்தை நான் உனக்கு சொல்றேன்"
"நான் உங்ககிட்ட அதை பத்தி கேட்கவே இல்லையே"
அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்து போனது.
"நம்ம சீக்கிரமாவே லண்டனுக்கு போகலாம்"
"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உங்க கூட லண்டனுக்கு வரணும்னு நீங்க தான் ஆசைப்பட்டீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கிற ஆர்வம் கல்யாணத்துக்கு அப்புறம் இருக்காது போல இருக்கு..." வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள்.
"என்கிட்ட இந்த மாதிரி எல்லாம் பேசாத பூங்குழலி" என்றான் கண்டிப்புடன் ஆனால் தன் குரலில் மென்மையை காட்டி.
"சரி, பேசமாட்டேன்"
"பூங்கு...ழலி..."
"கிளம்புங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. போய் அதை முடிங்க"
"நான் இன்னிக்கு ராத்திரி உன்கிட்ட பேசுறேன்"
"ராத்திரி நான் தூங்குவேன்"
"அப்படியா?
"அப்படி தான்..."
அவளைத் தன்னை நோக்கி இழுத்த அவன்,
"தயவு செய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணு, பூங்குழலி"
"எதுவுமே சொல்லலனா எப்படி புரிஞ்சிக்க முடியும்?"
"சீக்கிரமாவே உன்கிட்ட நான் சொல்லுவேன்"
"என்னை லண்டனுக்கு கூட்டிகிட்டு போங்கன்னு நான் உங்ககிட்ட எப்பவும் கேட்கவே இல்லை. நீங்க தான் என் மனசுல தேவையில்லாம எதிர்பார்ப்பை உருவாக்கிட்டீங்க"
"ஐ அம் சாரி"
முகத்தை சுளுக்கு என்று வைத்துக் கொண்டாள் பூங்குழலி.
"இதைப் பத்தி யார்கிட்டயும்..."
அவனது பேச்சை வெட்டி,
"சொல்ல மாட்டேன்..." என்றாள்.
அவளை திகைப்புடன் பார்த்தான் மலரவன்.
"நம்ம ப்ரோக்ராம் மாறிடுச்சுன்னு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"
"பை தி வே, நீ தானே சொன்ன, இந்த ரூமுக்கும் லண்டனுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல, ரெண்டுமே ஒன்னு தான்னு...? அப்புறம் எதுக்கு அப்செட்டா இருக்க?"
"ஆனா, இந்த ரூம்ல நம்ம இண்டியன் டிரஸ் போட்டுக்கிட்டு *ராம்ப் வாக்* பண்ண மாட்டோம் இல்லையா?"
கண்களை மூடி நெற்றியைத் தேய்த்தான் மலரவன்.
"நான் உன்னை ரொம்ப எதிர்பார்க்க வச்சுட்டேனோ?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"உன்னோட ஐடியா படி, நம்ம ஃபுல் இந்தியன் காஸ்டியூமோட ஒரு ப்ரோக்ராம் காண்டாக்ட் பண்ணலாம் ஓகேவா?"
"ஓகே" என்றாள் சோகமாக.
"நான் சீக்கிரம் வந்துடறேன்" சிரித்தான் மலரவன்.
"சரி"
வீட்டை விட்டு கிளம்பினான் மலரவன். மின்னல்கொடியின் அறைக்கு வந்தாள் பூங்குழலி. அங்கு கீர்த்தி இருக்கவில்லை. அவளை இங்கும் அங்கும் தேடினாள்.
"அவ இங்க இல்ல" என்றார் வடிவுக்கரசி ரகசியமாய்.
"எங்க போனா?"
"அவளோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கா"
"எதுக்கு?" என்றாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அவ மயங்கி விழுந்துட்டா"
"ஏன்?" என்றாள் முகத்தை சுருக்கியபடி பூங்குழலி.
"தெரியல"
யோசனையில் ஆழ்ந்தாள் பூங்குழலி. அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
"நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று வெளியே வந்தாள் பூங்குழலி.
தண்டபாணி சென்று கதவை திறந்தான். குமரேசன் உள்ளே நுழைவதை பார்த்து, அவள் புருவம் உயர்த்தினாள். அவர் அவளை பார்ப்பதற்கு முன் அந்த இடம் விட்டு அகன்றாள். அவரைப் பார்த்து செயற்கையான புன்னகையை உதிர்க்க அவள் விரும்பவில்லை.
அதேநேரம், ஸ்டடி ரூமில் இருந்து மணிமாறன் வெளியே வந்தார். அவர் குமரேசனை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்தார். அவருக்கு கோபத்தில் ரத்தம் கொதித்தது. அவர் எதுவும் கூறும் முன்,
"கீர்த்தி எனக்கு கால் பண்ணி இருந்தா. அவ மயங்கி விழுந்துட்டாளாமே... " என்றார் குமரேசன்.
"அதைப் பத்தி எனக்கு தெரியாது" என்றார் மணிமாறன் சிறிதும் விருப்பமின்றி.
"அவ மயங்கி விழுந்தப்போ நீ எங்க இருந்த?"
"காலையில இருந்து நான் ஸ்டடி ரூம்ல தான் இருக்கேன்"
"நான் அவளை என் கூட வீட்டுக்கு கூட்டிகிட்டு போலாம்னு இருக்கேன்"
அவரை சந்தேக கண்ணோடு பார்த்தார் மணிமாறன்.
"மின்னல் நிலைமை சரியில்ல. கீர்த்திக்கும் உடம்பு சரியில்ல அதனால தான் அவளை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போலாம்னு நெனச்சேன். ஒரு வாரம் கழிச்சு அவளை திருப்பி அனுப்பி வைக்கிறேன்"
"நீ மகிழன்கிட்ட பேசிக்கோ. அவன் என்ன சொல்லுவான்னு எனக்கு தெரியல"
"அவனை கொஞ்சம் கூப்பிடுறியா?"
தனது கைபேசியை எடுத்து மகிழனுக்கு ஃபோன் செய்தார் மணிமாறன்.
"சொல்லுங்கப்பா"
"குமரேசன் வந்திருக்காரு. அவர் உன்னை பார்க்கணுமாம். கொஞ்சம் கீழ வா"
"நான் பாத்ரூம்ல இருக்கேன். அவரை வெயிட் பண்ண சொல்லுங்க" பொய் கூறினான் மகிழன்.
"சரி" என்று அழைப்பை துண்டித்தார் மணிமாறன்.
"மகிழன் பாத்ரூம்ல இருக்கான். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. அவன் வருவான்" என்று அந்த இடத்தை விட்டு அகன்றார் மணிமாறன், குமரேசனை தனியே விட்டு.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்து மகிழுனுக்காக காத்திருந்தார் குமரேசன். காலம் கடந்து கொண்டிருந்தது. ஆனால் மகிழன் வரவில்லை. மணிமாறன் அங்கு இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை. தனியே அமர்ந்திருந்து அவர் வெறுத்துப் போனார். அவருக்கு கோபத்தில் எரிச்சல் ஏற்பட்டது.
ஒரு மணி நேரம் கழித்து அங்கு வந்த மகிழன், அவர் முன்னால் அமர்ந்தான்.
"இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்த?" என்று தன் கோபத்தை காட்டாமல் இருக்க முயன்றார் குமரேசன்.
"குளிச்சேன்..."
"இவ்வளவு நேரமாவா?"
"ரிலாக்ஸா குளிக்கணும்னு நெனச்சேன். அதனால டைம் ஆச்சு"
தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டார் குமரேசன். இங்கு அவர், இந்த முட்டாளை பார்க்க காத்திருந்தால், அவன் ஒரு மணி நேரமாக குளித்துக் கொண்டிருந்தானா?
"எதுக்காக என்னை பார்க்கணும்னு சொன்னிங்களாம்?"
"என் பொண்ணு மயங்கி விழுந்துட்டானு தெரிஞ்சப்போ நான் ரொம்ப பதறிப் போயிட்டேன்"
அவரை சாதாரணமாய் பார்த்தான் மகிழன்.
"அவளுக்கு கொஞ்சம் கவனிப்பு தேவை. உங்க அம்மாவுக்கும் உடம்பு முடியல. அதனால கீர்த்தியால இங்க ரெஸ்ட் எடுக்க முடியாது. அது அவளை மேலும் பலவீனப்படுத்தும். அதனால அவளை நான் என் கூட கூட்டிகிட்டு போலாம்னு நினைக்கிறேன்"
"எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அப்படி இருந்தும், எப்படி அவளை உங்க கூட கூட்டிக்கிட்டு போலாம்னு நினைக்கிறீங்க? அண்ணியும் லண்டனுக்கு போறாங்க. அவங்க மருமகளா இருந்து அவங்களை பார்த்துக்க வேண்டியது அவள் கடமை இல்லையா?"
"அவளோட கடமை தான். ஆனா அவளுக்கே உடம்பு சரியில்லாதப்போ அவளால எப்படி அதை செய்ய முடியும்? அதனால தான் அவளை என் கூட அனுப்ப சொல்லி கேட்கிறேன்"
"சரி கூட்டிகிட்டு போங்க" என்று அந்த இடம் விட்டு நடந்தான் மகிழன் மேலும் அங்கு காத்திராமல்.
குமரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை மகிழன் அதை விருப்பம் இல்லாமல் கூறினானா? அல்லது, கோபத்தோடு கூறினானா? அவருக்கு குழப்பமாய் இருந்தது. அவரும் அவரது திமிர் பிடித்த மருமகனும்...
"கடைந்தெடுத்த முட்டாள்," பொறுமியபடி கீர்த்தியின் அறைக்கு சென்றார்.
"கிளம்பு போகலாம். நான் உன் புருஷன் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்"
"அப்படியா? ஆனா அவர் எதுவும் சொல்லலையே"
"அவன் எதுவும் சொல்லனும்னு அவசியம் இல்ல. கிளம்பு போகலாம். அவன் மனசு மாறுறத்துக்குள்ள நம்ம இங்கிருந்து போயிடனும்"
சரி என்று அவருடன் நடந்த கீர்த்தி, மின்னல்கொடியின் அறைக்கு வந்தாள்.
"ஆன்ட்டி அப்பா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்திருக்காரு" என்றாள்.
மணிமாறனை ஏறிட்டார் மின்னல்கொடி. அவர் ஆம் என்று தலையசைத்தார்.
"பரவாயில்ல மா. நீ போயிட்டு வா" என்றார் மின்னல்கொடி.
"தேங்க்யூ ஆன்ட்டி. பை" என்று அங்கிருந்து கிளம்பினாள் கீர்த்தி.
அவள் தரைதளம் வந்த போது, மகிழன் சோபாவில் அமர்ந்து கொண்டு அவளையே உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
"நான் போகட்டுமா?" என்றாள் கீர்த்தி.
தன் கையை தலைக்கு மேல் உயர்த்தி, பெரிய கும்பிடு போட்டு,
"கிளம்பு" என்றான் மகிழன்.
அவனை கரித்துக் கொட்டியபடி குமரேசனுடன் சென்றாள் கீர்த்தி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top