45 பெருமை

45 பெருமை

உள்ளேயும் வெளியேயும் கொதித்துக் கொண்டிருந்தான் மகிழன். எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் கீர்த்தி அவன் அம்மாவிடம் இப்படி விளையாடியிருப்பாள்? அவள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அவனை மணந்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும். அவர்களை அவள் நிம்மதியாக இருக்க விடமாட்டாள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால் அவளுக்கு பொறுக்காது. அவள் செய்த செயலுக்கான தண்டனையை அவள் அனுபவித்தே தீர வேண்டும்... அவள் ரத்தக்கண்ணீர் வடித்தே தீர வேண்டும். தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள, அவனை அவள் ஒரு *ரிமோட்டாக* பயன்படுத்தலாம் என்று நினைத்தாள் அல்லவா? அப்படியே இருக்கட்டும். அவள் நினைத்தபடி அவன் ரிமோட் ஆகவே செயல்படுவான்... ஆனால் அவள் எண்ணிய விதத்தில் அல்ல. உட்கார்ந்த இடத்திலிருந்து அவளை வேலை செய்ய வைக்கும் விதத்தில்.

மின்னல்கொடியின் அறைக்கு வந்தான் மகிழன். எவ்வளவு தான் அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும், கீர்த்தியை பார்த்தவுடன் அவனுக்கு ரத்தம் கொதித்தது.

"எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் பாத்ரூமுக்கு போகணும்" என்றார் மின்னல்கொடி.

"நான் உங்களை கூட்டிக்கிட்டு போறேன் ஆன்ட்டி" என்றாள் கீர்த்தி.

"என்னது? எப்படி நீ அவங்களை பாத்ரூமுக்கு கூட்டிகிட்டு போவ? டாக்டர் என்ன சொன்னார்னு உனக்கு ஞாபகம் இல்லையா? அவங்க நடக்கக் கூடாதுன்னு சொன்னார்ல?" என்றான் மகிழன்.

"நீ அதைப் பத்தி கவலைப்படாத தம்பி. நாங்க தான் இருக்கோமே. நாங்க மின்னலுக்கு ஹெல்ப் பண்றோம். நீ கொஞ்ச நேரம் வெளியில இரு" என்றார் வடிவுக்கரசி.

அவர் எந்த விதத்தில் உதவப் போகிறார் என்று புரிந்தது மகிழனுக்கு. அவன் கதவை நோக்கி நடந்தான். அவன் எதிர்பார்த்தது படியே, கட்டிலுக்கு அடியில் இருந்த பெட்பேனை எடுத்தார் வடிவுக்கரசி. அதை கண்ட மகிழன் நின்றான்.

"அத்தை இந்த வேலையை நீங்க செய்ய வேண்டாம். கீர்த்தி செய்வா" என்றான்.

சிவகாமியும், வடிவுக்கரசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"பரவாயில்ல தம்பி. அவ எப்படி செய்வா? நான் செய்றேன்" என்றார் சிவகாமி.

"உங்களுக்கு அவளைப் பத்தி ஒன்னும் தெரியாது ஆன்ட்டி. அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணனும்னு அவ ரொம்ப ஆர்வத்தோட இருக்கா. நீங்க வேணும்னா அண்ணியை கூப்பிட்டு கேட்டு பாருங்களேன்" என்று தன் கைபேசியை எடுத்த மகிழன்,

"இருங்க நான் அன்னியை கூப்பிடுறேன்" என்று மலரவனின் எண்ணுக்கு ஃபோன் செய்ய விழைந்தான்.

"இல்ல இல்ல நீங்க ஃபோன் செய்ய வேண்டாம். ஆன்ட்டிக்கு நான் ஹெல்ப் பண்றேன்" என்று அவசரமாய் மறுத்தாள் கீர்த்தி.

அவளுக்கு தெரியும், பூங்குழலி அங்கு வந்தால் என்னவாகும் என்று. எப்படி இருந்தாலும் பூங்குழலி அவளைத் தான் அந்த பணியை செய்ய வைக்க போகிறாள். அதற்கு தானாகவே செய்து விடலாம் என்று எண்ணினாள் கீர்த்தி.

பெண்கள் மூவரும் நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மகிழனோ உள்ளுற நகைத்துக்கொண்டான்.

"பாத்தீங்களா, நான் சொல்லல? அவ அம்மாவுக்காக என்ன வேணாலும் செய்வா. நான் சொல்றது சரி தானே?" என்றான் தன் புருவத்தை உயர்த்தியபடி மகிழன்.

அவனை மனதிற்குள் கருக்கியபடி ஆமாம் என்று தலையசைத்தாள் கீர்த்தி.

"நான் கீர்த்திக்கு ஹெல்ப் பண்றேன்" என்றார் சிவகாமி.

"தேவையில்ல. அவளே பாத்துக்குவா" என்றான் மகிழன் கண்டிப்புடன்.

"மகிழா, அவளால அதை செய்ய முடியாது டா. நான் பாத்ரூமுக்கு போறேன்" என்றார் மின்னல் கொடி சங்கடத்துடன்.

"அம்மா, அவ உங்க மருமக இல்ல... மக. உங்களை பார்த்துக்கிறேன்னு அவ தானே மா பிடிவாதம் பிடிச்சா? அவ செய்வா மா. அத்தை வாங்க நம்ம வெளியில போகலாம்" என்று நடந்தான் மகிழன்.

அவர்களும் தலையசைத்து விட்டு அவனை பின்தொடர்ந்து கதவை சாத்திக் கொண்டு வெளியே சென்றார்கள்.

"கீர்த்தி, நீ இதையெல்லாம் செய்ய வேண்டாம். என்னை பாத்ரூமுக்கு மட்டும் கூட்டிகிட்டு போ போதும்" என்றார் மின்னல்கொடி.

"இல்ல ஆன்ட்டி. மகிழனுக்கு தெரிஞ்சா என் மேல கோவப்படுவார்" என்றாள் உண்மையான பயத்துடன்.

"அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்"

"அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி" கெஞ்சினாள் கீர்த்தி.

அவள் எதற்காக அப்படி கெஞ்சுகிறாள் என்று புரியவில்லை மின்னல்கொடிக்கு.

மின்னல்கொடியின் அறைக்கு வந்த பூங்குழலி, சிவகாமியுடனும் வடிவகரசியுடனும் மகிழன் வெளியில் நின்று இருப்பதை பார்த்தாள்

"அம்மா, என்ன ஆச்சு? எதுக்காக நீங்க வெளியில நிக்கிறீங்க?" என்றாள் குழப்பத்துடன்.

"கீர்த்தி மின்னலுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கா" என்று தன் கண்களால் அவளுக்கு ஏதோ ஜாடை காட்டினார் சிவகாமி.

அதை புரிந்து கொண்ட பூங்குழலி திகைத்துப் போனாள்.

"அவ தனியாவா ஹெல்ப் பண்றா?" என்றாள் நம்ப முடியாமல்.

"ஆமாம்" என்றான் மகிழன் திடமாய்.

"அவளுக்கு நான் ஹெல்ப் பண்றேன்" என்று உள்ளே செல்ல முயன்றாள் பூங்குழலி.

தன் கையை நீட்டி, அவள் வழியை மறைத்து, அவளை தடுத்தான் மகிழன்.

"வேணாம் அண்ணி. அவளை செய்ய விடுங்க"

"ஆனா..."

"அவளை செய்ய விடுங்க அண்ணி. அவளுக்கு இது தேவை தான். அது உங்களுக்கும் தெரியும்" என்றான் தீர்க்கமாய் மகிழன்.

பூங்குழலிக்கு சங்கடமாகி போனது. மகிழன் பேசுவதை பார்த்தால், அவனுக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று தெரிகிறது. மலரவன் தான் அவனிடம் கூறி இருக்க வேண்டும். எதற்காக அவன் அப்படி செய்தான்? அவனால் எதையும் ரகசியமாய் வைத்துக் கொள்ள முடியாதா?

"அவ என்ன செஞ்சாள்னு மலரவன் என்கிட்ட சொல்லிட்டான். அதனால அவளை காப்பாத்தணும்னு நினைக்காதீங்க. அவளை என்கிட்ட விடுங்க நான் பார்த்துக்கிறேன்"

ஒன்றும் புரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிவகாமியும் வடிவுக்கரசியும்.

"என்ன விஷயம் பூங்குழலி?" என்றார் வடிவக்கரசி.

ஒன்றுமில்லை என்பது போல் தன் தலையை இடவலமாய் அசைத்தாள் பூங்குழலி.

"எதுக்காக அண்ணி அவங்க கிட்ட இருந்து இதை மறைக்கிறீங்க? அவங்க இங்க தான் இருக்க போறாங்க. அவளோட உண்மையான முகத்தை அவங்க தெரிஞ்சுகிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். அப்போ தான் அவளை அவங்களால சமாளிக்கவும் முடியும், அவகிட்ட எச்சரிக்கையா இருக்கவும் முடியும்"

அப்படி என்ன அவள் செய்து விட்டாள் என்பது போல் முகம் சுளித்தார்கள் சிவகாமியும் வடிவுக்கரசியும்.

"அம்மாவை கீழே விழ வெச்சது அவ தான். வேணும்னே தேங்காய் எண்ணெயை கீழே கொட்டி, அம்மாவை அவ தான் வழுக்கி விழ வச்சா" என்றான் எந்த தயக்கமும் இல்லாமல் மகிழன்.

அதைக் கேட்ட அந்த பெண்மணிகள் திடுக்கிட்டார்கள்.

"அது உண்மையா?" என்ற குரல் பின்னால் இருந்து கேட்க, அவர்கள் திரும்பி பார்த்தார்கள். அங்கு அதிர்ச்சியே வடிவாய் நின்றிருந்தார் மணிமாறன்.

ஆம் என்று மகிழன் தலையசைக்க, இயலாமையுடன் கண்களை இறுக்கமாய் மூடினாள் பூங்குழலி. மகிழனை நோக்கி வந்த மணிமாறன்,

"மகிழா இது விளையாடுற விஷயம் இல்ல" என்றார்.

"இதுக்கான வீடியோ ஆதாரம் கூட என்கிட்ட இருக்கு. இதைப் பத்தி மலரவன் கூட உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கான்" என்று நெஞ்சை நிமிர்த்தி மகிழன் கூற, திகைத்துப் போனார் மணிமாறன்.

"எதுக்காக அவ அப்படி செஞ்சா?" என்றார் பரிதாபமாக.

"அண்ணி மலரவன் கூட லண்டனுக்கு போறதுல அவளுக்கு விருப்பமில்ல. அவங்களை தடுக்க தான் அவ அப்படி செஞ்சா"

"எவ்வளவு கீழ்த்தரமானவ இந்த பொண்ணு...." என்று பல்லை கடித்தார் மணிமாறன்.

"நானும் அதையே தான் உங்க கிட்ட சொன்னேன். ஆனா நீங்க தான் என்னை நம்பல" என்றான் மகிழன்.

"அங்கிள், ப்ளீஸ் அமைதியா இருங்க" என்றாள் பூங்குழலி.

"எதுக்காக மா நான் அமைதியா இருக்கணும்? ஏன் இருக்கணும்? மகிழனை பொய் சொல்லி ஏமாத்தி கல்யாணம் பண்ணதுக்காக நான் அந்த பொண்ணு மேல போலீஸ்ல கேஸ் கொடுக்கப் போறேன்" என்றார் மணிமாறன்.

அதை கேட்டு புன்னகைத்த மகிழன்,

"நானும் கூட அதை செய்ய தான் நினைக்கிறேன். ஆனா இப்போ இல்ல. அவ அம்மாவை கொஞ்ச நாள் கவனிச்சுக்கட்டும்" என்றான்.

"அவ மின்னலை இன்னும் காயப்படுத்தினா என்ன செய்றது?"

"மின்னலை பார்த்துக்க நாங்க தான் இருக்கிறோமே... நாங்க யாரும் அவளை விட்டு நகரப்போறதில்ல... அப்படி இருக்கும் போது, அந்த பொண்ணால என்ன செஞ்சிட முடியும்?" என்றார் வடிவுக்கரசி

"இல்லங்க அக்கா. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அந்த பொண்ணு நம்ம நினைச்சதை விட ரொம்ப மோசமானவளா இருக்கா"

"அவளைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க பா. அவளை நான் பார்த்துக்கிறேன்" என்றான் மகிழன்.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு, சற்று தூரத்தில் மலரவன் நின்று இருப்பதை பார்த்தார் மணிமாறன். அவனை நோக்கி சென்ற அவர்,

"இதெல்லாம் என்ன மலரா?" என்றார்.

"ஆமாம் பா துரதிஷ்டவசமா, இதெல்லாம் உண்மை தான்" என்றான் மலரவன்.

ஒன்றும் செய்ய இயலாமல் நின்றார் மணிமாறன்.

அலுப்புடன் நின்றிருந்த பூங்குழலியை கண்டான் மலரவன். அவனுக்கு தெரியும், மகிழனிடம் கீர்த்தியை பற்றிய உண்மையை கூறி விட்டதற்காக, பூங்குழலி அவனை வசைபாட போகிறாள். வேறு வழி இல்லை. அவன் வாங்கி கட்டிக் கொள்ளத்தான் வேண்டும்.

"இப்போ நான் என்ன செய்யணும் மலரா?" என்றார் மணிமாறன்.

மகிழனை பார்த்த மலரவன்,

"மகிழ் சொல்றதை செய்ங்க. அவனை நீங்க தடுக்காதீங்க. உங்களுக்கு எதுவும் தெரியாத மாதிரியே நடந்துக்கோங்க. ப்ளீஸ் பா." என்றான்.

"சரி" என்று பெருமூச்சு விட்டார் மணிமாறன்.

அப்பொழுது மின்னல்கொடியின் அறையின் கதவை திறந்த கீர்த்தி, அவர்களைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தாள். அவள் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும். அவளை சட்டை செய்யாமல் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

"எப்படி இருக்கீங்க மா?" என்றான் மலரவன்.

"நல்லா இருக்கேன் மல்லு" என்றார் மின்னல்கொடி.

"உன்னோட பேக்கிங்கை முடிச்சிட்டியா மலரா?" என்றார் மணிமாறன்.

"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பா" என்றான் அவன்.

"ஏன் பூங்குழலி? நாளைக்கு விடியற் காலையில உங்களுக்கு ஃப்லைட். உங்களுக்கு நேரமே இல்ல"

"பண்ணிடுறேன் அங்கிள்..."

"முதல்ல போய் அதை செய்" என்றார் மின்னல்கொடி.

"நாங்க தான் மின்னல் கூட இருக்கோமே.. நீ போய் அந்த வேலையை பாரு" என்றார் சிவகாமி.

சரி என்று தலையசைத்துவிட்டு, அங்கிருந்து சென்றாள் பூங்குழலி.

"நீயும் போ மலரா" என்றான் மகிழன்.

அவளை பின்தொடர்ந்து வந்த மலரவன், கதவை சாத்தி தாளிட, இடுப்பில் கை வைத்துக் கொண்டு, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றாள் பூங்குழலி. அதை எதிர்பார்த்த மலரவனுக்கு சிரிப்பு வந்தது.

"உங்களால வாயை மூடிக்கிட்டு இருக்க முடியாதா?"

சிரிப்பை அடக்க முயன்றான் அவன்.

"எதுக்காக மகிழன் கிட்ட கீர்த்தியை பத்தின உண்மையை சொன்னீங்க? தண்டோரா போடாத குறையா, அவர் எல்லார்கிட்டயும் அந்த உண்மையை சொல்லிட்டாரு. விட்டா, ஒரு சினிமா தியேட்டரை வாடகைக்கு எடுத்து, அந்த வீடியோவை ஓட்டி காட்டிடுவார் போல இருக்கு"

"அவளைப் பத்தி எல்லாரும் தெரிஞ்சிகிறது அவசியம்னு உனக்கு தோணலையா?"

"எல்லாருக்கும் தெரியணும்னு அவசியம் இல்ல மலர்"

"இல்ல பூங்குழலி நீ அவளை குறைச்சி எடை போடாதே. அவளை சுத்தி இருக்கிற ஒவ்வொருத்தரும் எச்சரிக்கையா இருக்கணும். அப்போ தான் அவளால எதுவும் செய்ய முடியாது"

"நீங்க இப்படிப்பட்ட உளறு வாயா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

வாய்விட்டு சிரித்தான் மலரவன்.

ஒரு சூட்கேஸை எடுத்து அதில் தங்கள் உடமைகளை அடுக்க துவங்கினாள் பூங்குழலி. அவளிடம் வந்த மலரவன், அவள் கரத்தை பற்றினான்.

என்ன? என்பது போல் கேள்விக்குறியுடன் அவனை ஏறிட்டாள்

"நீ என் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே போயிட்ட"

"என்ன கேள்வி?"

"ஒரு பொண்ணு மனசுல *ஒரு நைட்* எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஆனா வேற ஒன்னு தான் ஏற்படுத்தும்னு சொன்ன. அது என்ன?"

"முதல்ல என்னை பேக் பண்ண விடுங்க. அப்புறமா அதை பத்தி பேசலாம்"

"முடியாது. நீ சொல்ற வரைக்கும் நான் உன்னை விடமாட்டேன்" என்றான் பிடிவாதமாக.

"நீங்க திமிர் பிடிச்சவர்னு நிரூபிக்கிறீங்க"

"பரவாயில்லை இருக்கட்டும். சொல்லு எது வித்தியாசத்தை ஏற்படுத்தும்?"

"என்னை மாதிரி ராங்கியை பேச வைக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?"

"நான் ஏற்கனவே உன்னை நிறைய பேச வச்சுட்டேன்" என்றான் ரகசியமாய்.

"ஒரு நைட் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.... ஆனா... "

"ஆனா...?"

"அதுக்கு காரணமாய் இருந்த மனுஷன் ஏற்படுத்துவான்"

 அதைக் கேட்டு திகைத்த அவன்,

"என்ன பூங்குழலி, என்னை புகழவே மாட்டேன்னு சொல்லிட்டு, இப்படி யாராலயும் புகழ முடியாத அளவுக்கு புகழ்ந்துட்ட..."

"ரொம்ப பறக்காதீங்க..."

"நான் பறக்கறேனா?"

"எனக்கு ஒரு விஷயம் புரியல" என்றாள் அவன் கூறியதை போலவே.

"என்ன?"

"எப்படி ஒரு மனுஷன் இவ்வளவு சீக்கிரமா மாறிட முடியும்?"

"அப்படின்னா?"

"நீங்க நேத்து வரைக்கும் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தீங்க. இன்னைக்கு உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு திமிர் வந்துச்சு?"

"இப்போ நீ என்ன சொல்ல வர?"

"ஒரே ஒரு நைட் ஒரு மனுஷனை இவ்வளவு மாத்திடுமா?" என்று அவன் கேட்ட அதே கேள்வியை அவளும் கேட்டாள்.

"அது நைட் பத்தின விஷயம் இல்ல" என்று சிரித்தான் மலரவன்.

அவனை வேறு எதுவும் கேட்கவில்லை பூங்குழலி. அப்படி கேட்டால், அவனும் அவளைப் போலவே பதில் கூறாமல் மழுப்புவான் என்று அவள் நினைத்தாள்.

"அது நைட் பத்தின விஷயம் இல்ல... அந்த நைட்ல அவன் என்ன சாதிச்சான் அப்படிங்குற பெருமை பத்தின விஷயம்..." என கூற, கன்னம் சிவந்தாள் பூங்குழலி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top