44 தலைகனம் பிடித்தவன்

44 தலைக்கனம் பிடித்தவன்

மறுநாள் காலை

மலரவனுக்கோ, பூங்குழலிக்கோ கட்டிலை விட்டு இறங்கும் எண்ணமே இருக்கவில்லை. அவர்கள் உறங்கவும் இல்லை கண்ணை திறக்கவும் இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை விலகிச் செல்லவும் இல்லை. இருவருக்கும் தெரியும், மற்றவர் விழித்து விட்டார் என்று. கடிகாரத்தை நோக்கி திரும்பி, மணியைப் பார்த்தாள் பூங்குழலி.

"மலர்..."

"ம்ம்ம்ம்"

"மணி 6 ஆயிடுச்சு"

"ம்ம்ம்"

"நான் ஆன்ட்டியை போய் பாத்துட்டு வரேன்"

"நம்ம அப்புறமா போகலாம்"

"நீங்க அப்புறமா வாங்க. நான் போறேன்"

"அதான் சிவகாமி ஆன்டியும், அத்தையும் அவங்க கூட இருக்காங்கல்ல"

"அதனால தான் நான் போயாகணும். மின்னல் ஆன்ட்டி என்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அம்மாவும் அத்தையும் என்னை ஓட விட்டு அடிப்பாங்க."

கேட்டு சிரித்த மலரவன்,

"சரி நீ போ. நான் அப்புறம் வரேன்" என்றான்.

"ம்ம்ம்"

அவளது இடையை வளைத்திருந்த கையை நீக்கினான் மலரவன். எழுந்து அமர்ந்த பூங்குழலி, தன் குழலை சரிப்படுத்திக் கொண்டாள். ஒரு தலையணையை இழுத்து, கவிழ்ந்து படித்துக் கொண்டான் மலரவன். அதைக் கண்ட பூங்குழலி, புன்னகை புரிந்த படி அவன் முதுகில் சாய்ந்தாள். அவளது அந்த செயல், மலரவனின் முகத்தில் புன்னகையை இட்டு வந்தது.

"நீ போகலையா?" என்றான் புன்னகையுடன்.

"ம்ம்ம்"

"அத்தை கிட்ட திட்டு வாங்க போற"

"ம்ம்ம்"

"அவங்க கேட்டா என்ன சொல்லுவ?"

"ஒரு ஆளு என்னை மயக்கிட்டாரு. அதனால, வர லேட் ஆயிடுச்சின்னு சொல்லுவேன்"

"நீ மயங்கி போயிட்டியா?" சிரித்தான் அவன்.

"ரொம்ப ஆடாதீங்க"

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே..."

"ம்ம்ம்"

"ம்ம்ம் னா என்ன அர்த்தம்?"

"நீங்க என்னை மயக்கிட்டீங்கன்னு அர்த்தம்"

"நிஜமாவா?

"ம்ம்ம்"

"இது எப்போ நடந்தது?"

"இப்போ கவுந்து படுத்திங்களே, அப்போ நடந்தது"

"அடடா... இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா, இதை நான் எப்பவோ செஞ்சி இருப்பேனே. இவ்வளவு நாளை வீணாக்கி இருக்க மாட்டேனே..."

"ம்ம்ம்... நீங்க ஹேண்ட்ஸம்மா  இருக்கீங்க"

"தேங்க்ஸ் யு"

"யூ ஆர் வெல்கம்"

"பூங்குழலி..."

"ம்ம்ம்?"

"இப்படி ஓப்பனா என்னை புகழ்ந்தா, எனக்கு தலைகனம் ஏறிடும்னு  உனக்கு தோணலையா?"

"என்னமோ இதுக்கு முன்னாடி உங்களை யாருமே புகழாத மாதிரி பேசுறீங்க...? இதுக்கு முன்னாடி உங்களை யாரும் புகழ்ந்ததில்லையா?"

"அது வேற..."

"எப்படி? எல்லாரும் உங்கள புகழ்ந்தாங்க. அப்பல்லாம் உங்க தலைகனம் ஏறல. இப்ப மட்டும் இப்படி ஏறும்?"

"அதெல்லாம் என் தலைக்கனத்தை ஏத்தலைன்னு யார் சொன்னது? என்னை புகழ்ந்தவங்களை போய் கேட்டு பாரு. நான் எவ்வளவு தலைகனம் பிடிச்சவன்னு சொல்லுவாங்க"

"ஒ..."

"நீ என்ன நெனச்ச?"

"நான் ஒன்னும் நினைக்கல. நீங்க எவ்வளவு தலைகனம் பிடிச்சவர்னு நான் பார்க்குறேன்"

"நான் சொன்னதை நீ நம்பலையா?"

"நம்ப முயற்சி பண்றேன்"

"நம்பு பூங்குழலி. நான் உண்மையிலேயே ரொம்ப தலைகனம் பிடிச்சவன்"

"சரி. இப்போதிலிருந்து உங்களை நான் ஓப்பனா புகழமாட்டேன்"

லேசாய் திரும்பி அவளைப் பார்த்தவன்,

"நிஜமா தான் சொல்றியா?" என்றான்.

"நெஜமா தான் சொல்றேன். எனக்கு தலைகனம் பிடிச்சவங்களை பிடிக்காது. அவங்களை நான் புகழ மாட்டேன். ஞாபகம் வச்சுக்கோங்க. அதனால ஒழுங்கா இருங்க"

அவள் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் கையைப் பிடித்தான் மலரவன்.

"என் கையை விடுங்க"

"எனக்கு ஏன் தலைக்கனம் இருக்காது? எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு நான் ஹேண்ட்ஸமா இருக்கேன்னு சொல்லிட்டாளே... அப்போ எனக்கு கொஞ்சம் பெருமையா இருக்க தானே செய்யும்?"

"அதுக்காக, அந்த பொண்ணு கிட்டயே உங்க திமிரை காட்டுவீங்களா?"

"உன்கிட்ட என் திமிரை காட்டுவேன்னு நான் எப்ப சொன்னேன்? எனக்கு தலைகனம் அதிகமாயிடும்னு சொன்னேன். அவ்வளவு தான்"

"நீங்க உங்க திமிரை என்கிட்ட காட்டினாலும் எனக்கு கவலை இல்ல. அப்படிப்பட்டவங்களை எப்படி நடத்தணும்னு எனக்கு தெரியும்"

"எப்படி?"

அவன் கன்னத்தைப் பிடித்து நறுக்கென்று கிள்ளினாள்.

"ஆஆஆஆ..." அலறினான் அவன்.

"இப்படித் தான்" கலகலவென சிரித்தாள் பூங்குழலி.

மலரவன் ஏதோ சொல்ல விழைய, அவர்களது அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"இருங்க நான் போய் பார்க்கிறேன்" என்றாள்.

"வேண்டாம். நான் போய் பாக்குறேன். நீ போய் குளி" என்றான்.

பூங்குழலி குளியலறைக்கு சென்ற பின், கதவை திறந்தான் மலரவன். அங்கு மகிழன் நின்றிருந்தான்.

"மகிழா... என்ன ஆச்சு?"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மலரா"

"உள்ள வா"

உள்ளே வந்த மகிழன்,

"எனக்கு என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல மலரா" என்றான் குழப்பத்துடன்.

"என்ன ஆச்சு? எதுக்காக இவ்வளவு குழப்பத்தோட இருக்க?"

"கீர்த்திக்கு என்ன ஆச்சு? அவ எதுக்காக இதுக்கு முன்னாடி எப்பவும் செய்யாத விஷயத்தை எல்லாம் செய்றா?"

மகிழனின் குழப்பத்திற்கு காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டான் மலரவன். கீர்த்தியை பற்றி தான் எல்லோருக்கும் தெரியுமே... முக்கியமாய் மகிழனுக்கு. அவளது மாறிவிட்ட நடத்தயால் அவனுக்கு சந்தேகம் ஏற்படுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏனென்றால் யாருமே திடீரென்று மாறிவிட முடியாது... அடக்க ஒடுக்கமாய் கூறும் வேலைகளை செய்து விட முடியாது... இது ஒன்றும் எம்ஜிஆர் பட கிளைமாக்ஸ் இல்லையே, திடீரென்று மாறிவிட...!

"எதுக்காக அவ அம்மாவை ரொம்ப அக்கறையா கவனிச்சுக்கிறா? எனக்கு ரொம்ப தப்பா தெரியுது.  அவ பெருசா எதையோ பிளான் பண்றான்னு நினைக்கிறேன். ஒரு பேஷண்டை பொறுமையா கவனிச்சிக்கிற அளவுக்கு எல்லாம் அவ நல்லவ இல்ல. அவளைப் பத்தி நமக்கு தெரியாதா? அவ சுத்தமான விஷம். நீயும் அண்ணியும் இங்க இல்லாத போது, எல்லாரையும் ஒட்டுமொத்தமா கவுக்க அவ பிளான் பண்றா. நீங்க திரும்பி வர்ற வரைக்கும் நான் அம்மாவை தனியா விட போறது இல்ல"

"அவ ஒன்னும் செய்ய மாட்டா" என்றான் மலரவன் அமைதியாக.

"இல்ல மலரா. உனக்கு அவளைப் பத்தி தெரியாது"

"எனக்கு தெரியும். உன்னை விட அதிகமாகவே தெரியும். அவ ஒன்னும் செய்ய மாட்டா"

"எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்ற?"

"நாம அதை பத்தி அப்புறம் பேசலாம். இப்ப வேண்டாம்"

"அப்படின்னா பேசுறதுக்கு ஏதாவது இருக்கா?"

"ஆமாம்"

"அது என்னன்னு சொல்லு மலரா"

"நான் சொல்றேன். ஆனா இப்ப கிடையாது. நம்ம அப்புறம் பேசலாம்னு சொன்னேன்ல"

"ஏதாவது சீரியசான விஷயமா?"

"நான் சொன்னா நீ அவளை இந்த வீட்டை விட்டு வெளியில துரத்திடுவ"

மகிழனின் ஆர்வம் அதிகரித்தது.

"என்ன விஷயம் மலரா?"

"சரி, நான் சொல்ற வரைக்கும் அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்ப மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு"

"ஆனா ஏன்? நான் அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியாதா?"

"தெரியும். ஆனா அவளை வீட்டை விட்டு வெளியில துரத்துறதுக்கு முன்னாடி, அவ செஞ்ச காரியத்துக்காக அவ வருத்தப்படணும். அதுக்காக தான் பூங்குழலி அவளை இதையெல்லாம் செய்ய வச்சுக்கிட்டு இருக்கா"

ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து போனது மகிழனுக்கு.

"சரி. நீ சொல்ற வரைக்கும் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். இப்ப சொல்லு அவ என்ன செஞ்சா?"

"முதல்ல உன்னை கூல் பண்ணிக்கோ"

"சரி "

"அம்மாவை கீழ விழ வெச்சது அவ தான்"

"என்ன்னனது?"

"ஆமாம். அவளால தான் அம்மா கீழே விழுந்து அடிபட்டிருக்காங்க"

"ஆனா, எதுக்காக அப்படி செய்யணும்?"

"பூங்குழலியை என் கூட லண்டன் வரவிடாம தடுக்க"

"அவளுக்கு எவ்வளவு தைரியம்" என்று பல்லை கடித்தான் மகிழன்.

"அவளுக்கு அதுக்கு மேலயும் தைரியம் இருக்குன்னு நமக்கு தான் தெரியுமே"

"இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிஞ்சது?"

"பூங்குழலி கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு. கீர்த்தி தேங்காய் எண்ணெயை கீழே கொட்டி அம்மாவை விழ வச்சதை அவ வீடியோ எடுத்துட்டா"

"ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல? எதுக்காக மறைச்சிங்க?"

"அவ அம்மாவை கீழ விழ வச்சிருக்கா... அவளை அப்படியே சும்மா விட சொல்றியா? அவ செஞ்சதை அவ சரிகட்டி தான் ஆகணும். அதுக்காகத்  தான் சிவகாமி ஆன்ட்டியையும் அத்தையையும் வரவச்சிருக்கு. அவளை அவங்க பாத்துக்குவாங்க. நீ அமைதியா இரு"

"நீ அவளை அவ்வளவு சுலபமா எடை போட்டுடாத மலரா. அவ அதுக்கு எல்லாம் அடங்குறவ இல்ல. அவங்களை எப்படி டாக்கில் பண்ணலாம்னு அவ யோசிப்பா"

"அப்படி அவ செஞ்சா, அப்போ நீ அவளை  கவனிச்சுக்கோ. எப்படி இருந்தாலும் லண்டன் போறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை நான் உன்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன். அவ மேல ஒரு கண்ணு வை"

"அந்த வீடியோவை எனக்கு அனுப்பு"

"நான் உனக்கு அனுப்புறேன். ஆனா இப்ப வேண்டாம்"

"என்னை நம்பு மலரா. நான் நிச்சயமா பொறுமையை கைவிட மாட்டேன். நீ சொல்ற வரைக்கும் நான் எதையும் செய்ய மாட்டேன்"

"ஒருவேளை அவ ஏடாகூடமா ஏதாவது செஞ்சா, நீ என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல. உனக்கு என்ன தோணுதோ அதை நீ தாராளமா செய்"

"சரி. இப்போ அந்த வீடியோவை என்கிட்ட காட்டு"

பெருமூச்சு விட்ட மலரவன்,

"சரி இரு" என்றான்.

தனது கைபேசியை கொண்டு வந்து அதில் பதிந்திருந்த காணொளியை அவள் அவனிடம் காட்டினான்.

"இந்தப் பொண்ணு என்ன வர்க்கம் மலரா?" என்றான் மகிழன் கோபம் கொந்தளிக்க.

"பொம்பளை வர்க்கமே இல்லன்னு நினைக்கிறேன்..." என்றான் மலரவன் அமைதியாய்.

"நான் அவளை வாட்ச் பண்றேன். நிச்சயம் அவ என்கிட்ட மாட்டுவா" என்றான் மகிழன்.

"நீ அமைதியா இருந்தா மட்டும் தான் அது நடக்கும். உனக்கு எல்லாம் தெரியும்னு காட்டிக்காதே"

அலுத்துக் கொண்டான் மகிழன்.

"அது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். ஆனா நமக்கு வேற வழியில்ல"

"சரி, நான் அமைதியா இருக்கேன். ஆனா இதை பத்தி நீ அப்பா கிட்ட சொல்லணும்"

யோசனையில் ஆழ்ந்தான் மலரவன்.

"ப்ளீஸ் மலரா. இந்த பொம்பளை எவ்வளவு கொடூரமானவள்னு அவருக்கு தெரியணும். ரொம்ப நல்லவ மாதிரி அவ நடிச்சுக்கிட்டு இருக்கா. அது தெரியாம அப்பா நிச்சயம் அவ நாடகத்தை நம்பிடுவாரு. அப்படி நடக்கக் கூடாது. அப்பா தான் நம்ம எல்லாரை விடவும் கவனமா இருக்கணும். இல்லைன்னா, அந்த குமரேசன் அவரை ஈசியா வாயில போட்டு முழுங்கிடுவான்"

இந்த விஷயத்தை மகிழன் இவ்வளவு தூரம் யோசிப்பதை கண்ட மலரவன் வியப்படைந்தான். கீர்த்தியாலும் அவளது அப்பாவாலும் அவன் நேரடியாய் பாதிக்கப்பட்டவன் ஆயிற்றே...! பின்பு ஏன் அவன் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க மாட்டான்?

"சரி, நான் அப்பா கிட்ட பேசுறேன்" என்றான் மலரவன்.

"தேங்க்ஸ். அந்த வீடியோவை எனக்கு அனுப்பு"

சரி என்று தலையசைத்தான் மலரவன். மகிழன் அங்கிருந்து சென்றான் கதவை சாத்தி தாளிட்ட மலரவன், மகிழன் என்ன செய்யப் போகிறானோ என்று எண்ணினான்.

அப்போது குளித்து முடித்து வெளியே வந்த பூங்குழலி, மலரவனின் முகத்தில் தெரிந்த கலவரத்தை கவனித்தாள். அவளைப் பார்த்து அவன் புன்னகைத்தான்.

"என்ன ஆச்சு மலர்? ஏன் உங்க முகத்துல ஒரு சஞ்சலம் தெரியுது?" என்றாள் கவலையுடன்.

"என்னை பார்த்த உடனே அது உனக்கு புரிஞ்சிடுச்சா?"

"ம்ம்ம்"

"நான் உன்னை பார்த்து சிரிச்ச பிறக்குமா?"

"உங்களோட உண்மையான மனநிலையை ஒரு சிரிப்பால மறைச்சிட முடியாது"

"அதை நான் பல தடவை செஞ்சிருக்கேன். இதுவரை யாருமே இப்படி கண்டுபிடிச்சது இல்ல"

அதற்கு என்ன கூறுவது என்று தெரியாததால் அமைதி காத்தாள் பூங்குழலி.

"நீ என்னை அளவுக்கு அதிகமாக ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன். அதனால தான் என் முகத்துல தெரியிற சாதாரண மாற்றத்தை கூட உன்னால கண்டுபிடிக்க முடியுது" என்றான் கிண்டலாக.

அவனை எகத்தாளமான பார்வை பார்த்தாள் பூங்குழலி.

"என்னை புகழவே கூடாதுன்னு தீர்க்கமான முடிவுல இருக்க போல இருக்கே..."

"தேவையில்லாம புகழறதில்லைன்னு முடிவுல இருக்கேன்"

"என்னை புகழுறது தேவையில்லாத வேலைன்னு நினைக்கிறியா?"

"ஏதாவது பெருசா சாதிச்சா நிச்சயம் புகழ்வேன்"

"ஒரு ராங்கியை கல்யாணம் பண்ணி இருக்கேன் அது பெரிய சாதனை இல்லையா?"

"நான் ரங்கியா?"

"இல்லையா?"

"எந்த விதத்துல?"

"என்னை கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு ஈஸியா ஒத்துக்கவே இல்லையே நீ..."

"அப்படின்னா உங்க கதை என்ன? நீங்க கூட தான் யாரையும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தீங்க. அப்ப என்னைவிட நீங்க தான் பெரிய ராங்கி"

"அப்படின்னா நான் ரங்கியாவே இருந்துட்டு போறேன்"

"ஆனா நான் தான் உங்களை மடக்கிட்டேனே..."

"எனக்கு ஒரு விஷயம் தான் புரியல"

"என்ன விஷயம்?"

"எப்படி பொண்ணுங்க இவ்வளவு சீக்கிரம் மாறிடுறீங்க?"

"அப்படின்னா?"

"நேத்து வரைக்கும் ரொம்ப பிகு பண்ணிகிட்ட... இன்னைக்கு ரொம்ப கேஷுவலா பேசிக்கிட்டு இருக்க?"

"என்ன சொல்ல வரீங்க?"

"ஒரே ராத்திரி எல்லாத்தையும் மாத்திடுமா?"

"அது ராத்திரி பத்தின விஷயம் இல்ல"

"பின்ன?"

"அதை விடுங்க"

அவளது வழியை மறித்த அவன்,

"வேற எதைப் பத்தின விஷயம்?" என்றான்.

"தேவையில்லாம உங்களை புகழ்றது இல்லன்னு நான் சபதம் எடுத்திருக்கேன்"

"அப்படின்னா அது என்னை பத்தின விஷயமா?"

"இருக்கலாம்"

"என்னன்னு சொல்லு"

"முடியாது"

"ஏன்?"

"உங்களுக்கு தான் தலைகனம் ஏறிடுமே..."

"அப்படின்னு நீ நினைக்கிறியா?"

"ஆமாம்"

"இது ரொம்ப அநியாயம்"

"அப்படியே வச்சுக்கோங்க"

"சொல்லு புங்குழலி"

"நான் தான் ராங்கியாச்சே... என்கிட்ட இருந்து நீங்க அவ்வளவு சுலபமா விஷயத்தை வாங்க முடியாது"

"உன்கிட்ட இருந்து விஷயத்தை என்னால் வாங்க முடியாதுன்னு நினைக்கிறியா?"

"முயற்சி பண்ணி பாருங்க" என்று சிரித்தபடி அங்கிருந்து சென்றாள் பூங்குழலி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top