40 ஆட்டம்
40 ஆட்டம்
கூக்குரலிட்டபடி கீழே விழுந்தார் மின்னல்கொடி. அவருடைய அந்த குரல், வீட்டிலிருந்த அனைவரையும் வரவேற்பறைக்கு இழுத்து வந்தது. அனைவருக்கும் முன்னால் அங்கு ஓடிச் சென்றது பூங்குழலி தான் என்று கூறத் தேவையில்லை. அவர் விழுவதை கண்ணெதிரில் பார்த்தவள் ஆயிற்றே...! அவள் மின்னல்கொடியை தூக்க முயன்றாள். ஆனால், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரது கால் சுளுக்கிக் கொண்டதால் அவரால் அந்த வலியை தாங்க முடியவில்லை.
அனைவரும் அங்கு விரைந்து வந்தார்கள். மலரவனும், மகிழனும் அவரை நோக்கி ஓடிவந்து, அவரை தூக்கிக்கொண்டு அவரது அறைக்கு விரைந்தார்கள். வலி தாங்காத மின்னல்கொடியின் கண்கள் பொழிந்த வண்ணம் இருந்தன.
தனது கைபேசியை எடுத்து மருத்துவரை அழைத்தான் மலரவன். மின்னல்கொடியின் அருகே கட்டிலில் அமர்ந்து கொண்டாள் பூங்குழலி. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கீர்த்தியின் இழிசெயலை அவள் கண்கூடாக கண்டாள். தன் கையில் இருந்த கைபேசியை பார்த்தாள். இன்னும் அந்த வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்தி, சேமித்துக் கொண்டாள். அவளுக்கு கீர்த்தியை பற்றி தெரியும். ஆனால் அவள் இதை எதற்காக செய்தாள் என்று அவளுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். அது அந்த குடும்பத்தினரை காயப்படுத்துவதற்காகவா? இதற்காகத் தான் அவள் மகிழனை திருமணம் செய்து கொண்டாளா? இதனால் அவளுக்கு கிடைக்கப் போவது என்ன? அவள் அவ்வளவு கொடுமைக்காரியா?
அப்பொழுது மருத்துவர் வந்தார். அவரை பின்தொடர்ந்து கீர்த்தியும் வந்தாள். அவள் மின்னல் கொடியை கண்ணீருடன் கட்டிக் கொண்டாள்.
"உங்கள காயப்படுத்துற அளவுக்கு கடவுளுக்கு கண்ணில்லாம போயிடுச்சா? ஏன் அவர் எப்பவும் நல்லவங்களையே சோதிக்கிறாரு?" அவரது தோளில் சாய்ந்து அழுதாள் கீர்த்தி.
சங்கடமாய் உணர்ந்தார் மின்னல்கொடி. உலகிலேயே கொடுமையான விஷயம், நம் எதிரில் இருக்கும் நபர் நடிக்க தான் செய்கிறார் என்று தெரிந்தும், இயல்பாய் இருப்பது. அப்படித்தான் இருந்தது மின்னல்கொடியின் நிலையும். ஏற்கனவே அவருக்கு கால் வலி உயிர் போனது... அது போதாது என்று, இவள் வேறு...!
அவளது நடிப்பை கண்ட மலரவன் தன் கண்களை சுழற்றினான். மகிழனோ அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. அவளது முதலை கண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்க அவன் விரும்பவில்லை. அவளை கூர்மையான பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பூங்குழலி. அவள் வேறு ஏதாவது திட்டமிடுகிறாளா? மின்னல்கொடியிடம் இருந்து அவளை பின்னால் இழுத்து, ஓங்கி அறைய வேண்டும் என்று தோன்றியது பூங்குழலிக்கு. அவள் திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தன்னை சாந்தப்படுத்திக் கொண்டாள் பூங்குழலி.
மின்னல்கொடியின் காலை, போர்ட்டபிள் எக்ஸ்ரே மெஷின் கொண்டு சோதனை செய்தார் மருத்துவர்.
"கணுக்கால்ல லேசான விரிசல் இருக்கு. எலும்பு உடையல. அதனால பயப்பட ஒன்னும் இல்ல. பத்து நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். பத்து நாள் கழிச்சு நான் மறுபடியும் வந்து பார்க்கிறேன். அதுவரைக்கும், நடக்காம இருங்க" என்று அவருக்கு கட்டுப்போட்டு விட்டார்.
சரி என்று தலையசைத்தார் மின்னல்கொடி.
"நீங்க அவங்களைப் பத்தி கவலை படாதீங்க டாக்டர். நாங்க ரெண்டு மருமகளுங்க இருக்கோம். அவங்க கூடயே இருந்து நாங்க அவரை பார்த்துக்குவோம்" என்றாள் கீர்த்தி.
மின்னல்கொடி ஏதோ சொல்ல முயல,
"உங்களுக்காக நாங்க தான் இங்க இருக்கோமே ஆன்ட்டி... உங்களை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்கு தெரியாதா?" என்றாள் பொய்யான அக்கறையோடு.
முகத்தை சுருக்கினாள் பூங்குழலி. இதெல்லாம் என்ன? அவள் தன்னை மற்றவர்களிடம் நல்லவளாய் காட்டிக் கொள்ள முயல்கிறாளா? மகிழனிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவா இந்த நாடகம்? அவள் மகிழனை பார்க்க, அவனும் கீர்த்தியை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் பேசுவதை கேட்ட மலரவன் சங்கடத்தில் நெளிந்தான். அவள் கூறியதன் படி அவர்கள் மின்னல்கொடியை கவனித்துக் கொண்டால், பூங்குழலி மின்னல்கொடியுடன் இருக்க வேண்டும். அவள் அவருடன் இருந்தால், எப்படி அவனுடன் லண்டன் செல்வாள்? அவனது அம்மா இந்த நிலையில் இருக்கும் போது, முடியாது என்று அவன் எப்படி கூறுவான்? அவர் என்ன நினைப்பார்? அவனே கூட எப்படி இப்போது லண்டன் செல்ல முடியும்?
"மல்லு, ஒரு நர்சை அப்பாயிண்ட் பண்ணு. அவங்க என்னை பார்த்துக்குவாங்க" என்றார் மின்னல்கொடி.
"இல்ல ஆன்ட்டி... நாங்க இருக்கும் போது, எதுக்காக நர்ஸை நீங்க அப்பாயிண்ட் பண்ணனும்? பூங்குழலி, அவங்க கிட்ட சொல்லு, நம்ம ரெண்டு பேரும் அவங்களை பாத்துக்குவோம்னு" என்று பூங்குழலியை தங்கள் உரையாடலுக்குள் இழுத்தாள் கீர்த்தி.
அவள் என்ன பதில் கூற போகிறாள் என்று யோசித்தபடி மென்று விழுங்கினான் மலரவன்.
"ஆமாம் ஆன்ட்டி. நாங்க உங்களை பார்த்துக்கிறோம்" என்றாள் பூங்குழலி.
மலரவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"ஆனா, பூங்குழலி மலரவன் கூட ஒரு ஈவண்டுக்காக லண்டனுக்கு போறா. நீ தான் அவங்க டிக்கெட்டை பார்த்தியே" என்றார் மின்னல்கொடி.
"ஆமாம்ல... நான் உங்க டென்ஷன்ல அதை மறந்தே போயிட்டேன். என் கூட சேர்ந்து பூங்குழலியும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைச்சேன்"
அவ்வளவு தான்... கீர்த்தியின் நாடகத்திற்கான அர்த்தம் புரிந்து போனது பூங்குழலிக்கு. அவர்களது லண்டன் டிக்கெட்டை அவள் பார்த்திருக்கிறாள். அப்படி என்றால், அவர்கள் லண்டனுக்கு செல்லும் விஷயம் அவளுக்கு தெரிந்திருக்கிறது. அவளை லண்டனுக்கு செல்ல விடாமல் தடுப்பதற்காக தான், தேங்காய் எண்ணெயை கீழே ஊற்றி, மின்னல்கொடியை விழ வைத்திருக்கிறாள். தன்னை சமாளித்துக் கொண்ட பூங்குழலி,
"கீர்த்தி உங்களை கவனிச்சுக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கா போல இருக்கே ஆன்ட்டி... எதுக்காக அவளோட உரிமையை நம்ம பறிக்கணும்? நான் கீர்த்தியோட இருக்கிறேன். நாங்க உங்களை பார்த்துக்கிறோம் என்றாள் பூங்குழலி கீர்த்தியை பார்த்தவாறு.
மலரவனுக்கு ஏமாற்றமாய் போனது. மின்னல்கொடி தான் ஒரு செவிலி தனக்கு போதும் என்று கூறிவிட்டாரே...! அப்படி இருக்கும் போது, இவள் ஏன் கீர்த்தியின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்? மூட்டையாய் கட்டி வைக்கப்பட்டிருந்த கோலிகுண்டுகள், கட்டவிழ்ந்து, நாலாபுறமும் சிதறி ஓடுவது போல் இருந்தது அவனுக்கு. தொங்கிய முகத்துடன் அங்கிருந்து சென்றான் மலரவன். அது கீர்த்தியின் முகத்தை பிரகாசம் அடையச் செய்தது.
தனக்கு வழங்கப்பட்ட பெயின் கில்லரை போட்டுக்கொண்டு, படுத்து கொண்டார் மின்னல்கொடி.
"ஆன்ட்டி, நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க" என்றாள் கீர்த்தி.
சரி என்று தலையசைத்து விட்டு கண்களை மூடிக்கொண்டார் மின்னல்கொடி. பூங்குழலியும், கீர்த்தியும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள். தனது கைபேசியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டான் மகிழன். மின்னல்கொடியை தனியாய் விட்டுச் செல்ல அவன் விரும்பவில்லை.
தங்கள் அறைக்கு வந்த கீர்த்தி கதவை சாத்தும் முன், உள்ளே நுழைந்தாள் பூங்குழலி. அவளைப் பார்த்து முகம் சுருக்கினாள் கீர்த்தி.
"உனக்கு ஏதாவது வேணுமா?"
"ஆமா, ஒரு முக்கியமான விஷயத்தை தெரிஞ்சுக்கணும்" என்று அவளை நோக்கி முன்னேறினாள் பூங்குழலி அவளை பின்னோக்கி நகரை வைத்து.
"என்ன?"
"எதுக்காக மின்னல் ஆன்டியோட காலை உடைக்க நினைச்ச?"
அதைக் கேட்ட கீர்த்தி திகில் அடைந்தாள்.
"என்னது?" நீ என்ன பேசுற? ரப்பீஷ்" என்றாள்.
"அப்படியா? உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணா செய்யலாம்னு நினைக்கிறியா?"
"நான் என்ன செஞ்சேன்? நான் எதுவும் செய்யல"
"பூஜை ரூமுக்கு வெளியில, ஆன்ட்டியை விழ வைக்க, நீ தேங்காய் எண்ணெயை ஊத்துறதை நான் பார்த்தேன்"
கீர்த்தியின் முகத்தில் கிலி படர்ந்தது.
"இல்ல... இது சுத்த பொய்... நீ தேவையில்லாம என் மேல பழி போடுற"
"நான் பழி போடுறேனா?"
"ஆமா, நான் உன்னை உன் ஹஸ்பண்ட் கூட லண்டன் போக விடாம தடுத்துட்டேன். அதனால தான், உன்னோட கோபத்தை நீ என் மேல இந்த விதத்தில் காமிக்கிற"
"அப்படின்னா, நீ வேணும்னு தான் என்னை லண்டன் போக விடாம தடுத்திருக்க..."
"நான் ஏன் அப்படி செய்யணும்? இது சுத்த ஹம்பக்..." என்று சீறினாள்
"ஆனா இந்த வீடியோ ஹம்பக்கா இருக்க முடியாது"
தான் படம் பிடித்ததை அவளிடம் போட்டுக் காட்டினாள் பூங்குழலி. தனது நாடகம் இப்படி வெட்ட வெளிச்சமாய் சந்திக்கு வரும் என்று கீர்த்தி எதிர்பார்க்கவில்லை. அவள் அதிர்ச்சியுடன் பூங்குழலியை நோக்கினாள். ஒன்றும் கூறாமல் விஷம புன்னகையுடன் அங்கிருந்து நடந்தாள் பூங்குழலி. அவளுக்கு முன்னால் ஓடி வந்த கீர்த்தி, தன் கைகளை விரித்து அவளை தடுத்து நிறுத்தினாள்.
"இப்போ நீ என்ன செய்யப் போற?" என்றாள் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.
"என்னோட மூடுக்கு தகுந்த மாதிரி ஏதாவது செய்வேன். நீ என்கிட்ட அடக்க ஒடுக்கமா நடந்துக்கிட்டா, உன்னை மன்னிக்கலாம்னு நினைப்பேன். நீ மின்னல் ஆன்டியை பார்த்துக்க மாட்டேன்னு சொன்னா, நான் இந்த வீடியோவை மகிழ்னுக்கு அனுப்பி வைப்பேன்... இல்ல, என்னால லண்டன் போக முடியலன்னு எனக்கு கோபம் வந்தா, என் புருஷனுக்கு அனுப்பி வைப்பேன்..."
"ப்ளீஸ், அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுடாத. நான் நிச்சயம் உன்கிட்ட அடக்கமா நடந்துக்குவேன். ஆன்ட்டியையும் பார்த்துக்கிறேன்"
"அதை நீ தனியாவா செய்ய போற? என்னோட ஹெல்ப் உனக்கு வேண்டாமா?"
"வேண்டாம்... நானே செஞ்சிடுவேன். நீ லண்டனுக்கு போ"
"மின்னல் ஆன்ட்டி நல்லா இல்லாத போது நான் எப்படி லண்டனுக்கு போக முடியும்? அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?"
"நீ அவங்களைப் பத்தி கவலைப்படாத பூங்குழலி. நான் அவங்களை பார்த்துக்கிறேன். நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்"
"நீயா? நிஜமாவா சொல்ற?"
"ஆமாம் சத்தியமா நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்" என்றாள்.
"ம்ம்ம்ம்... சரி, இந்த ரெண்டு நாள்ல நீ என்கிட்ட எப்படி நடந்துகுறேன்னு நான் பாக்குறேன். அதுக்கப்புறம் நீ இந்த வீட்ல இருக்கணுமா, இல்ல மகிழன்கிட்ட சொல்லி, உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே தூக்கி எறியனுமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். அந்த ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் மகிழன் காத்துக்கிட்டு இருக்கிறதா என் வீட்டுக்காரர் சொன்னாரு. ஆனா நிச்சயம் அவர் சும்மா உன்னை தூக்கி எறிய மாட்டார். நீ மின்னல் ஆன்ட்டிக்கு என்ன செஞ்சேன்னு தெரிஞ்சா, உன்னை ஃபுட்பால் ஆடிட்டு தான் அதை செய்வார்" என்று பொய்யான சோகத்தோடு கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு நடந்தாள் பூங்குழலி, கீர்த்தியை எரிச்சலுக்கு ஆளாக்கி.
தங்கள் அறைக்கு வந்த பூங்குழலி, தரையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த மலரவனை கண்டாள். அவள் கதவை சாத்தி தாழிட்ட அடுத்த நொடி, அவளை நோக்கி விரைந்து வந்த மலரவன் அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பினான்.
"எதுக்காக அவ சொன்னதுக்கு ஒத்துக்கிட்டு இங்க இருக்கேன்னு சொன்ன? உனக்கு என் கூட லண்டன் வர விருப்பம் இல்லையா பூங்குழலி? நான் நம்ம ஹனிமூன் பத்தி உன்கிட்ட விளையாட்டுக்கு தான் பேசினேன்... நீ அதை சீரியஸா..."
தன் ஆள்காட்டி விரலை அவன் உதட்டின் மீது வைத்து,
"ஷ்ஷ்ஷ்... எதுக்காக தேவையில்லாம ரியாக்ட் பண்றீங்க? அவங்க உங்க அம்மா"
அவளது கையை இறக்கிய அவன்,
"அம்மாவை பார்த்துக்க ரெண்டு மூணு நர்சை கூட என்னால அப்பாயிண்ட் பண்ண முடியும். அம்மாவும் அது போதும்னு தானே சொன்னாங்க? அவங்களே புரிஞ்சுகிட்டாங்க..."
"ஆமாம், அவங்க புரிஞ்சுகிட்டாங்க. நம்மளும் புரிஞ்சிக்கணும்..."
"சரி, அப்படின்னா நானும் லண்டனுக்கு போகல. எனக்கும் பொறுப்பு இருக்கு... எனக்கும் எங்க அம்மா மேல பாசம் இருக்கு. அவங்களுக்கு உடம்பு சரியில்லாதப்போ என்னாலையும் அவங்களை விட்டுட்டு போக முடியாது"
"எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, ஆம்பள பசங்க ரொம்ப சுயநலமா இருப்பாங்கன்னு... அதை நான் இப்போ பாக்குறேன்"
அவளைப் பார்த்து முறைத்தான் மலரவன்.
"இந்த விஷயத்துக்காக நான் உன்னை ரொம்ப வெறுக்கிறேன் பூங்குழலி"
அவனைப் பார்த்து புன்னகைத்தாள் பூங்குழலி.
"சிரிக்கிறதை நிறுத்து" என்றான்.
"நல்லவங்களால பொய் சொல்லவே முடியாதாம்... பொய் சொல்லும் போது அவங்க எவ்வளவு வலியை உணருறாங்கன்னு அவங்க முகமே காட்டி கொடுத்துடுமாம்"
மென்மையாய் புன்னகைத்தான் மலரவன்.
"நீ என்ன செய்ய முயற்சி பண்ற பூங்குழலி?"
"ஒன்னும் இல்ல" என்று தன் தோள்களை குலுக்கினாள் பூங்குழலி.
அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
"என்னால உன்னை வெறுக்க முடியாது பூங்குழலி" என்றான் மலரவன்.
அவனை நோக்கி திரும்பாமல் சிரித்தபடி நின்றாள் பூங்குழலி.
"ஏன்னு உனக்கு தெரியுமா?"
இப்போது அவனை நோக்கி திரும்பினாள்.
"ஏன்னா, என்னோட வாழ்க்கையில நீ ஒரு *சாய்ஸ்* கிடையாது. மாத்தவே முடியாத ஒரே *ஆப்ஷன்*" என்றான் அவளை திகைக்க செய்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top