4 இந்தியாவில் மலரவன்
4 இந்தியாவில் மலரவன்
"உங்க பிரண்டு தில்லைராஜன் தற்கொலை பண்ணிக்கிட்டார் சார்" என்றது அந்த முன்பின் தெரியாத குரல்.
"என்ன்னனது...??? யார் பேசுறது? இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க"
"சார், கோபப்படாதீங்க. நான் தில்லைராஜனோட பக்கத்து வீட்டுக்காரன் பேசுறேன். உங்களை நான் அவர் வீட்டில் பல தடவை பார்த்திருக்கேன். பேங்க் காரங்க வந்து அவரோட எல்லா சொத்துக்களையும் சீஸ் பண்ணிட்டாங்க சார். வீட்டை காலி பண்ண அவருக்கு ஒரு நாள் டைம் கொடுத்து இருந்தாங்க. அவங்க கிளம்பி போன உடனேயே அவர் தற்கொலை பண்ணிக்கிட்டார் சார்"
மணிமாறனின் கையில் இருந்த கைபேசி நழுவியது.
"என்ன ஆச்சுங்க?" பதறினார் மின்னல்கொடி.
"தில்லை தற்கொலை பண்ணிக்கிட்டானாம்..." வெறித்த பார்வையுடன் கூறினார்.
"என்னங்க சொல்றீங்க? நல்லா விசாரிச்சு பாருங்க... அது உண்மையா இருக்காது"
நீர் கட்டிய கண்களுடன் அவரை ஏறிட்டார் மணிமாறன். அவரது அந்த *பார்வை* கூறியது, அவருக்கு கிடைத்தது நிச்சயமான செய்தி தான் என்று. அவர் பக்கத்தில் அமர்ந்து தோளில் சாய்ந்து வெடித்து அழுதார் மின்னல்கொடி.
எதைப் பற்றியும் யோசிக்காத மணிமாறன், உடனடியாய் மலரவனுக்கு ஃபோன் செய்தார். அப்பொழுது தான் குளித்து முடித்துவிட்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த மலரவன், வேண்டா வெறுப்பாய் அந்த அழைப்பை ஏற்றான்.
"இப்ப என்ன?" என்றான்.
"மலரா..." அவரது தொண்டை அடைத்தது.
"அப்பா... என்ன ஆச்சு?" அவரது உடைந்த குரல், அவனை பதறச் செய்தது.
"தில்லை நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டான்... அவன் தற்கொலை பண்ணிகிட்டான்"
"என்ன்ன்ன?" அவனது குரலில் அதிர்வலை உண்டானது.
"நான் அவன் வீட்டுக்கு போறேன்" அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் அழைப்பை துண்டித்தார் மணிமாறன்.
தில்லைராஜனின் மகளை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தன் இளைய மகனிடம் இந்த விஷயத்தை முதலில் கூறாமல், அவர் ஏன் அதை மலரவனிடம் கூறினார் என்று மணிமாறனுக்கு புரியவில்லை. எதையும் புரிந்து கொள்ள முடியாமல், சில நொடிகள் கல்லென சமைந்து நின்றான் மலரவன். இப்படிப்பட்ட சூழ்நிலையை அவன் எதிர்கொள்வது இது தான் முதல் முறை. தனது கைபேசியை எடுத்து, அவனது நிறுவனத்தின் லண்டன் கிளையின் மேலாளருக்கு ஃபோன் செய்தான்.
"ஸ்டீவ், அரேஞ்ச் மை டிக்கெட்ஸ் டு இந்தியா. இட்ஸ் அர்ஜென்ட். ஐ ஹேவ் டு பி தேர் இன் த ஈவினிங் ( ஸ்டீவ், நான் இந்தியா செல்ல தேவையான ஏற்பாடுகளை செய். அது அவசரம்... இன்று மாலை நான் இந்தியாவில் இருந்தாக வேண்டும் )"
"எஸ் சார்..." அழைப்பை துண்டித்தான் ஸ்டீவ்.
மலரவன் கேட்டுக் கொண்டதால், உலகின் மிக வேகமாய் செல்லக் கூடிய விமானங்களில் ஒன்றான, அவ்வளவு எளிதாய் இடம் கிடைத்து விடாத கமர்ஷியல் ஏர் ப்ளேனில் அவனுடைய டிக்கெட்டை புக் செய்தான் ஸ்டீவ். ஒரு டிராவல் ஏஜென்டின் மூலமாக, மும்மடங்கு பணம் கொடுத்து அதை அவன் செய்தான். மலரவன், *அவசரம்* என்று கூறிவிட்டதால், அது நிச்சயம் தலைப்போகும் அவசரமாக தான் இருக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும். அதனால் பணம் செலவழிப்பதை பற்றி அவன் கவலைப்படவில்லை.
விமான நிலையத்தை வந்தடைந்த மலரவன், தன் இருக்கையில் அமர்ந்தான். தனது கைபேசியை *ஃபிளைட் மோடில்* போடுவதற்கு முன், தனது தந்தைக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லு மலரா..." என்றார் சுரத்தை இல்லாமல்
"நான் கிளம்பிட்டேன் பா"
"எங்க?"
"இந்தியாவுக்கு"
"நீ வரியா?" என்றார் நம்ப முடியாமல்.
"ஆமாம் பா. சாயங்காலம் நான் அங்க இருப்பேன்"
"எப்படி இவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ண?"
"எப்படியோ பண்ணிட்டேன்"
"தில்லையோட அக்கா கூட ஈரோட்டில் இருந்து வரனும். நிச்சயம் அதுக்கு நேரம் எடுக்கும்"
"சரிங்கப்பா. நான் என்னோட மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்றேன். ஏதாவது அவசியம்னா, எனக்கு மெசேஜ் மட்டும் அனுப்புங்க"
"சரி"
"சரிங்கப்பா"
"மலரா..."
"சொல்லுங்கப்பா"
"தேங்க்யூ சோ மச்" அவர் தொண்டையை அடைத்தது.
"ரிலாக்ஸ் பா. உங்களை நான் சாயங்காலம் பாக்குறேன்" அழைப்பை துண்டித்தான் மலரவன்.
மலரவனுக்கு தன் தந்தையை பற்றி நன்றாகவே தெரியும். அவர் மனதால் மிகவும் மென்மையானவர். தங்களது நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்த போது, அவன் அதை கண்கூடாக பார்த்திருந்தான். தில்லைராஜனின் மறைவு, கிட்டத்தட்ட அதே பாதிப்பை தான் அவனது தந்தையின் மனதில் ஏற்படுத்தியிருக்கும் என்று அவனுக்கு தெரியும். தில்லைராஜனும், மணிமாறனும் உற்ற தோழர்கள். தில்லைராஜனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று மணிமாறன் மலரவனிடம் கேட்கவில்லை... அவர் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை... எதை எப்படி செய்ய வேண்டும் என்று மலரவனுக்கு நன்றாகவே தெரியும்.
அம்மாவின் கண்ணீருக்கு ஆறுதல் கூறும் மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் தந்தையின் கண்ணீரை எதிர்கொள்ளும் தைரியம், எந்த நல்ல மகனுக்கும் இருப்பதில்லை. கண்ணீரின் ஆதிக்கத்தில் தன் தந்தையை தன்னந்தனியாய் நிறுத்தி விட விரும்பவில்லை மலரவன்.
அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு இந்தியா கிளம்பி விட்டான் அவன். தன் உடன்பிறப்பின் திருமணத்திற்கு நேரம் ஒதுக்க இயலாத அவன், தில்லைராஜனின் இறுதி சடங்கு என்றவுடன், எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தில்லைராஜன் இப்படிப்பட்ட மோசமான முடிவை எடுப்பார் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அவரைப் பற்றி தன் தந்தை கூற பலமுறை கேட்டிருக்கிறான் அவன். அவனுக்குத் தெரிந்த வரை, அவர் மிகவும் தைரியசாலி. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எது அவரை தூண்டியது என்று அவனுக்கு புரியவில்லை. நல்லவேளை, அவரது மகளை, மகிழன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறான். அது நிச்சயம் தில்லைராஜனின் மனைவிக்கு நிம்மதியை அளிக்கும், என்று எண்ணினான் மலரவன்.
தில்லை அம்பலம் சென்னை
விமான நிலையத்திலிருந்து நேராக தில்லைராஜனின் வீட்டை வந்து அடைந்தான் மலரவன். அவரது வீடு, மக்களின் ஒப்பாரியால் நிரம்பி வழிந்தது. வீட்டிற்கு வெளியே தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான் மகிழன். மின்னல்கொடி, சிவகாமி மற்றும் பூங்குழலியுடன் வீட்டினுள் இருந்தார். மணிமாறன் தேவையான ஏற்பாடுகளை செய்தபடி இருந்தார்.
தான் அணிந்திருந்த கோட்டையும், டையையும் சூட்கேசுடன் சேர்த்து தன் அப்பாவின் காரில் வைத்தான் மலரவன். தன் சட்டையின் கையை சுருட்டி விட்டபடி, தன் அப்பாவை நோக்கி முன்னேறினான். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு பிறகு தன் மகனை கண்ட மணிமாறன், உணர்ச்சி பெருக்குடன் அவனை அனைத்துக் கொண்டார்.
"இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில உங்களை பார்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு பா"
"ஆமாம் மலரா... ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றார் அழுது சிவந்த விழிகளுடன் இருந்த மணிமாறன்.
"நான் ஏதாவது பண்ணனுமாப்பா?"
"இன்னும் கொஞ்சம் நேரத்துல அவனோட இறுதி சடங்கு ஆரம்பிச்சிடும். அதுக்கு பிறகு, அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாருக்கும் சாப்பாடு போடணும். அவங்களோட நிலைமை என்னன்னு தெரியல. என்ன பண்றதுன்னு புரியல"
"மித்ரன் எங்க?"
"நான் அவனை சுடுகாட்டுக்கு அனுப்பி இருக்கேன், அங்க செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டிசை முடிக்க"
தன் கைபேசியை எடுத்து தன் நண்பன் மித்திரனுக்கு அழைப்பு விடுத்தான் மலரவன். வழக்கமான உபசரிப்புகளை முடித்துக் கொண்டு, உணவு ஏற்பாடுகளை கவனிக்குமாறு மித்திரனுக்கு ஆணையிட்டான் மலரவன். அழைப்பை துண்டித்த அவன்,
"என்ன தான் பா பிரச்சனை? எதுக்காக அங்கிள் சூசைட் பண்ணிக்கிட்டாரு?" தன் மனதில் உதித்த கேள்வியை கேட்டான்.
"அவனோட கசின் பிரதருக்கு ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டிருக்கான் இந்த மடையன். அவன் பணத்தை திருப்பி கட்டாம சுருட்டிக்கிட்டு ஓடிட்டான்"
"எவ்வளவு பணத்துக்கு ஷ்யூரிட்டி கொடுத்தாரு?"
"அம்பது கோடி. இன்ட்ரஸ்ட் எல்லாம் சேர்த்து அது எங்கேயோ போய் நிக்குது. எனக்கு என்னமோ அந்த கைலாசம் இதை வேணுமின்னே செஞ்சிருப்பான்னு தோணுது"
"இருக்கலாம்"
"சிவகாமியும், பூங்குழலியும் என்ன செய்ய போறாங்களோ தெரியல"
"அவங்களுக்கு நம்ம இருக்கோமே பா. நம்ம தான் அவங்களை கை தூக்கி விடணும்"
"ஆமாம், நம்ம தான் அதை செய்யணும்"
"நம்மளுடைய சப்போர்ட், தில்லை அங்களுக்கு ஈடாகாது தான்... இருந்தாலும் நம்ம செய்ய வேண்டியதை செய்யணும்"
அவன் கூறியதை ஏற்றுக் கொண்டு தலையசைத்தார் மணிமாறன்.
"அம்மா எங்கப்பா?"
"சிவகாமி கூடவும் பூங்குழலி கூடவும் இருக்கா. காலையில இருந்து ரெண்டு பேரும் எத்தனை தடவை மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க தெரியுமா? அழுது அழுது அவங்களோட மொத்த எனர்ஜியும் போச்சு. என்னால அவங்களை அப்படி பார்க்க முடியல"
அவர்களுக்காக மானசீகமாய் வருத்தப்பட்டார் மணிமாறன்.
அப்போது, குமரேசன் தன் குடும்பத்தாருடன் அங்கு வருவதை பார்த்தார் அவர். கீர்த்தியின் பார்வை, வெள்ளை சட்டையில் மிடுக்காய் நின்றிருந்த மலரவன் மீதே இருந்தது. தனது கண்ணில் ஏதோ விழுந்து விட்டது போல் பாசாங்கு செய்த மணிமாறன்,
"மலரா, குமரேசன் குடும்பம் வராங்க. நம்ம இங்கிருந்து கிளம்பலாம்" என்றார்.
"அவங்க வந்தா, நம்ம ஏம்பா போகணும்?"
"அவங்க கிட்ட பேசிகிட்டு இருக்க இது நேரமில்ல... நீ வந்து அம்மாவையும் சிவகாமியையும் பாரு. முக்கியமா இன்னொருத்தரையும் பாக்கணும் "
"பூங்குழலியையா?"
"இல்ல, தில்லைராஜனை..."
"ஓ ஆமாம்..."
"இது தானே அவனை நம்ம பார்க்கக் கூடிய கடைசி நாள்..." துக்கம் தொண்டையை அடைக்க கூறினார்.
"சரி, வாங்க போகலாம்" அவர்கள் உள்ளே சென்றார்கள்.
தன் குடும்பத்தாருடன் வந்த குமரேசன், தன் மனைவியுடனும் மகளுடனும் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டார். கீர்த்தியின் கண்கள் அந்த வீட்டின் நுழைவு வாயிலேயே சலித்த வண்ணம் இருந்தது, புகைப்படத்தில் இருந்ததை காட்டிலும் கவர்ச்சியாய் இருந்த மலரவனை எதிர்பார்த்து.
கதறி அழுது கொண்டிருந்த தன் அம்மாவை பார்த்து சிலை போல் நின்றான் மலரவன். மயங்கி கிடந்த பூங்குழலியின் கன்னத்தை, அழுதபடி தட்டினார் அவர். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இன்றி, கல்லை போல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தார் சிவகாமி. ஆனால் அவரது கண்கள் மட்டும் அருவி என பொழிந்து கொண்டிருந்தன. சமையலறையை நோக்கி விரைந்த மலரவன், தண்ணீர் கொண்டு வந்தான். மின்னல்கொடியின் முன், முழங்காலிட்டு அமர்ந்த அவன், பூங்குழலின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.
"இவ மயங்கி விழுறது இது அஞ்சாவது தடவை" என்றார் மின்னல்கொடி கண்ணீருக்கு இடையில்.
என்ன கூறுவது என்று புரியாமல் அவள் முகத்தை சோகமாய் பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன்.
தில்லைராஜனின் அக்கா, ஈரோட்டில் இருந்து ஏற்கனவே வந்து விட்டிருந்தார். சிவகாமியின் அருகில் அமர்ந்து, அவரும் அழுது கொண்டிருந்தார். அப்போது தில்லைராஜனின் உடலை எடுத்துச் செல்ல சிலர் உள்ளே வந்தார்கள்.
"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" அவர்களை தடுத்து நிறுத்தினான் மலரவன்.
"பாடியை கொண்டு வரச் சொல்லி சொன்னாங்க" என்றான் அதில் ஒருவன்.
"அவரோட பொண்ணு மயங்கிட்டாங்க. அவங்க எழுதுகிற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றான் மலரவன்.
"ஆமாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றார் மணிமாறன்.
மீண்டும் அவளது கன்னத்தை தட்டினார் மின்னல்கொடி.
"அம்மா, கொஞ்சம் தண்ணி குடிப்பாட்டுங்க" கையில் இருந்த தண்ணீர் டம்ளரை அவரிடம் நீட்டினான்.
ஆனால் மின்னல்கொடியால் அவளது வாயை திறக்க முடியவில்லை. அவர் கையில் இருந்த டம்ளரை வாங்கிக் கொண்டு,
"இப்ப திறங்க" என்றான்.
அவளது கன்னத்தை லேசாய் அழுத்தி, அவள் வாயை திறக்கச் செய்தார் மின்னல்கொடி. அவள் வாயில் சிறிது சிறிதாய் தண்ணீரை ஊற்றினான் மலரவன். மீண்டும் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்தான்... இந்த முறை, சற்று வேகமாய். கண்ணை திறந்த பூங்குழலி, தன் தந்தையின் உடலை பார்த்து, மீண்டும் கதறி அழுதாள்.
"அப்பா" அழுது அழுது கட்டிப் போயிருந்த அவளது குரல், ஈன சுரத்தில் ஒலித்தது. அவள் பலவீனமாய் இருந்தாள்.
தன் கையில் இருந்த டம்ளரை கீழே வைத்து விட்டு எழுந்து நின்றான் மலரவன். பூங்குழலி எழுந்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தவர்கள், தில்லைராஜனின் உடலை தூக்கினார்கள்.
அதைக் கண்டு எழுந்த பூங்குழலி, தன் தந்தையின் உடலின் மீது பாய முயன்றாள். தன் தந்தை ஒரேடியாய் தன்னை விட்டு செல்வதை பார்த்து, திடீரென்று அவளிடம் ஏற்பட்ட வேகத்தை கையாள முடியாமல் திணறிப் போனார் மின்னல் கொடி.
"மலரா, அவளைப் பிடி" என்றார்.
அவளது கையைப் பிடித்து அவளை தடுத்து நிறுத்தினான் மலரவன். அவன் கையை அவள் அடிக்கத் துவங்கினாள். ஆனாலும், அவளது கையை அவன் விடுவதாய் இல்லை.
"என்னை விடுங்க" என்றாள் பலவீனமான குரலில்.
"இரு, அவங்க உன்னை கூப்பிடுவாங்க" என்றான் அமைதியாய்.
"நான் எங்க அப்பாகிட்ட போகணும். அப்பா என்னையும் உங்க கூட கூட்டிகிட்டு போங்க"
அவளது வாசகம் மின்னல்கொடி மற்றும் மலரவனின் இதயத்தை குத்தியது. அவளை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதார் மின்னல்கொடி.
"அப்படியெல்லாம் சொல்லாதடா மா.... உனக்கு நாங்க இருக்கோம். நீயே இப்படி ஒடஞ்சி போனா, அம்மாவுக்கு யார் இருக்கா?"
அவர் தோளில் சாய்ந்து அழுதாள் பூங்குழலி.
தில்லைராஜன் மீது கோபமாய் வந்தது மலரவனுக்கு. எப்படி அவர் இவர்களை தனியாய் விட்டு செல்லலாம்? அவர் இல்லாமல் இவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ்வார்கள்? பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்றாலும், தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அவர்கள் படாத பாடு பட வேண்டி இருக்குமே...! இப்படிப்பட்ட முதுகெலும்பில்லாத கோழைகளை அவன் விரும்புவதில்லை.
அனைத்து சடங்குகளும் முடிவடைந்து, தில்லைராஜனின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மணிமாறனும் மலரவனும், அவரது உடலுக்கு தோள் கொடுத்தார்கள். சிவகாமியும், பூங்குழலியும் மீண்டும் மயங்கி விழுந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் மயானத்திற்கு சென்றான் மகிழன்.
அனைத்தும் முடிவடைந்தது. தில்லைராஜனின் இல்லம் வெறிச்சோடி போனது. சிவகாமியையும் பூங்குழலியையும் குளிக்க செய்தார் மின்னல்கொடி. தன் வீட்டின் வேலையாட்களை கொண்டுவந்து அங்கு செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்து முடித்தார். பரபரவென அவர்கள் வீட்டை சுத்தப்படுத்தினார்கள். தனக்கு தேவையான உடைகளை கொண்டு வரும்படி அவர் மகிழனிடம் ஏற்கனவே கூறி இருந்ததால், அவன் அதை செய்து முடித்திருந்தான். ஆனால் நேரடியாக தில்லைராஜனின் வீட்டிற்கு வராமல், அவன் தங்கள் இல்லம் சென்று அங்கு குளித்துக் கொண்டான்.
அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வந்து சேர்ந்தது. ஆனால் அதை சாப்பிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. தன் அம்மாவிடம் வந்த மலரவன்,
"மகிழன் எங்க?" என்றான்
"அவன் நம்ம வீட்டுக்கு குளிக்க போய் இருக்கான்"
"எதுக்கு? அவனால இங்க குளிக்க முடியாதா?" என்றான் கோபமாய்.
"இங்க இருக்கிறவங்களுக்கு இடம் பத்தாதுன்னு அவன் நினைச்சிருப்பான்"
"சரி விடுங்க. அவங்களை ஏதாவது சாப்பிட வையுங்க"
சிவகாமியின் மடியில் படித்தபடி அழுது கொண்டிருந்தாள் பூங்குழலி. அவரிடம் வந்த மின்னல்கொடி,
"சிவா, பாரு, பூங்குழலி எப்படி இருக்கான்னு... அவ காலையில இருந்து அழுது அழுது எத்தனை தடவை மயங்கி விழுந்திருக்கா...! அவளை பாத்துக்கவாவது நீ நல்லா இருக்க வேண்டாமா?" என்றார்.
தன் கையால் முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அழுதார் சிவகாமி. அப்போது தான் பூங்குழலி அசைவின்றி கிடப்பதை கவனித்தார் மின்னல்கொடி.
"குழலி... குழலி கண்ண திறந்து பாருமா..." அவளது கன்னத்தை தட்டினார் மின்னல்கொடி.
அந்த இடம் முழுவதையும் பதட்டம் ஆட்கொண்டது. மணிமாறனும், மலரவனும் அவர்களை நோக்கி ஓடினார்கள்.
"குழலி... உனக்கு என்ன ஆச்சு?" என்று மேலும் அழுதார் சிவகாமி.
"ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன்" என்றான் மலரவன்.
"ஆமாம்... வா போகலாம்... தூக்கு அவளை" என்றார் மணிமாறன்.
அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு ஓட்டமாய் ஓடினான் மலரவன். தனது காரை ஸ்டார்ட் செய்தார் மணிமாறன். அவளை பின் இருக்கையில் படுக்க வைத்த மலரவன், தன் தந்தையுடன் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். அவர்கள் மருத்துவமனையை நோக்கி விரைந்தார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top