38 மலரவனின் ஆர்வம்

38 மலரவனின் ஆர்வம்

பூங்குழலிக்காக தான் வாங்கிய பிறந்தநாள் அட்டை, அவள் கையில் இருப்பதை பார்த்த மலரவன் துணுக்குற்றான். அவனது முகபாவத்தை படித்த பூங்குழலி, அவன் சங்கடத்தில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.  ஆம், அவன் இதை எதிர்பார்க்கவில்லை. மெல்ல அவளை நோக்கி வந்தவன், ஐஸ்கிரீம் கரை படிந்த கோட்டை மீண்டும் அந்த பெட்டியில் வைத்தான்.

"அந்த கோட்டை டிரைகிளீன் பண்ணிடுவேன்னு சொன்னிங்களே... நீங்க அதை செய்யலையா?" என்றாள் பூங்குழலி.

"டைம் கிடைக்கல..."

கீழே குனிந்து, அவளுக்காக வாங்கி வைத்திருந்த கைப்பையை அவன் எடுக்க முயல, அவன் அதை தொடுவதற்கு முன், அதையும் மற்ற பிற பொருள்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டாள் பூங்குழலி.

தன் கோரை பல்லை நாக்கால் தொட்டபடி, கண்களை சுருக்கி அவளை ஏறிட்டான் மலரவன். மோதிர டப்பாவில் இருந்த மோதிரத்தை எடுத்து, அவள் தன் கையில் அணிந்து கொள்ள முயன்றாள். அவள் கையில் இருந்து அதை பிடுங்கினான் மலரவன்.

"அப்படின்னா, அந்த கார்டுல நீங்க எழுதி இருந்த, *சுவாரஸ்யமான பெண்* நான் இல்லையா? இந்த கிப்ட் எல்லாம் நீங்க எனக்காக வாங்கலையா?" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.

மெல்ல தன் கண்களை இமைத்த மலரவன், அவளது கையைப் பிடித்து அந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான், அவள் கேட்ட கேள்விக்கு செயலால் பதிலை தந்து.

"உன் முன்னாடி முட்டி போட்டு, உன்கிட்ட என் காதலை ப்ரொபோஸ் பண்ணும் போது இதை உன்கிட்ட கொடுக்கணும்னு நினைச்சேன்" கண்களை மூடி புன்னகைத்தான் மலரவன்.

அதைக் கேட்ட அவள், ஆச்சரியமடைய வில்லை, அதிர்ச்சி அடைந்தாள்.

"நீங்க அவ்வளவு பெரிய பைத்தியக்காரனா?" என்றாள் நம்ப முடியாமல்.

"இருக்கலாம் ( என்று சில நொடி இடைவெளி விட்டவன் ) ஆனா எல்லா விஷயத்துலயும் இல்ல..." என்றான் ஆழ்ந்த பொருளோடு.

பேச்சிழந்து போனாள், அவன் கூறியதில் இருந்த உள்ளர்த்தத்தை புரிந்து கொண்ட பூங்குழலி. அப்படி என்றால், அவன் *அவளது விஷயத்தில்* மட்டும் பைத்தியக்காரனா?

"நீங்க என்ன செஞ்சிருப்பீங்க... ஒருவேளை ..." அவள் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன், தனது ஆக்காட்டி விரலை அவள் உதடுகளின் மீது வைத்து, நடக்காத, நடக்க சந்தர்ப்பம் இல்லாத ஒன்றைப் பற்றி அவளை பேச விடாமல் தடுத்தான்.

"இப்படி நடந்திருந்தா நான் என்ன செஞ்சுருப்பேன், அப்படி நடந்திருந்தா என்ன செஞ்சு இருப்பேன்னு நான் யோசிக்க விரும்பல. என்னை உடைச்சி போடக்கூடிய *அந்த* ஒன்னு நடக்கல. நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நீ என்னோட வைஃப். அதுக்கு மேல நான் எதையும் யோசிக்க தயாரா இல்ல... அதை யோசிக்கக்கூட நான் விரும்பல" என்றான் ஊடுருவும் பார்வையோடு.

கண்களை இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்குழலி. எதற்காக அவன் சட்டென்று இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான்? அவளது உதட்டில் இருந்து தன் விரலை தாழ்த்தினான் மலரவன்.

"ஐ ஜஸ்ட்..." தடுமாறினாள் அவள்.

அவன் மெல்ல தலையசைக்க, பெட்டியில் இருந்த அவனது கோட்டை எடுத்துக் கொண்டாள் பூங்குழலி.

"நான் இதை துவைச்சி தரேன்" என்றாள் அவனது முகபாவத்தை கவனித்தவாறு.

வேண்டாம் என்று தலையசைத்தபடி, அதை அவளிடம் இருந்து அவன் பிடுங்க முயன்றான்.

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு உங்களுக்கு இந்த கலர் பிடிக்கலைன்னு சொன்னீங்க" அந்த கோட்டை பின்னால் இழுத்தாள் பூங்குழலி, அவன் அதை பறிக்காத வண்ணம்.

"எனக்கு இந்த கலர் பிடிக்கும்"

"அப்படின்னா, நான் நிச்சயம் இதை துவைச்சே ஆகணும்"

"தேவையில்ல" மறுபடியும் அவன் அதை பிடுங்க முயன்றான்.

"மலர், சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்காதீங்க"

"அதை என்கிட்ட குடு, பூங்குழலி"

"மாட்டேன்" என்று அந்த கோட்டுடன் பின்னால் நகர்ந்தாள் பூங்குழலி, மலரவன் தன்னை நோக்கி முன்னேறுவதை பார்த்து.

தனது நடையின் வேகத்தை மலரவன் கூட்ட, பூங்குழலியும் வேகமாய் பின்னோக்கி நகர்ந்து பின்னால் இருந்த கட்டிலில் விழுந்தாள். அதேநேரம் அவள் கையில் இருந்த கோட்டை பற்றிய மலரவனும் அவள் மீது விழுந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், தன்னிலை மறந்து அல்ல...!

பூங்குழலியின் இதழ்களின் மீது மலரவனின் கவனம் குவிந்தது. அவன் தன்னிலை இழக்கும் முன், அவன் மனம் அவனை எச்சரித்தது. தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட அவன், அவளை விட்டு விலகி, எழுந்து அமர்ந்தான். பூங்குழலியும் எழுந்து அமர்ந்து தலை தாழ்த்தினாள். சிறிது நேரம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பிறகு இருவரும் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அவனது கூறிய பார்வையை எதிர்கொள்ள இயலாத பூங்குழலி மீண்டும் தலை தாழ்த்திக் கொண்டாள்.

அவனுக்கு என்ன வேண்டும் என்பதை அவன் பார்வையால் கூறினான். அதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பூங்குழலி ஒன்றும் மந்த புத்தி உடையவள் அல்ல. மனதில் பட்டதை பேசவும் முடியாமல், பேசாமல் இருக்கவும் முடியாமல், இருவரும் தவித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், மலரவனின் கைபேசி ஒலித்தது.  

வெறுப்புடன் கண்களை மூடினான் மலரவன். வேண்டாத அழைப்பாக இருந்தால் அதை தவிர்த்து விடலாம் என்று எண்ணிய மலரவனால் அதை தவிர்க்க முடியவில்லை. அந்த அழைப்பு அவனது தந்தையிடம் இருந்து வந்தது என்று தெரிந்த போது.

"சொல்லுங்கப்பா"

"மலரா கொஞ்சம் கீழ வா"

"ம்ம்ம்"

அங்கிருந்து அவசரமாய் சென்றான் மலரவன். அவன் செல்வதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி, அந்த பிறந்த நாள் பரிசுகளை எடுத்து தனது அலமாரியில் வைத்துக் கொண்டாள்.

........

தரைதளம் வந்த மலரவன், மணிமாறனுடன் இருந்த குமரேசனை கண்டான். மணிமாறன் தன்னை எதற்காக அழைத்தார் என்று அவனுக்கு புரிந்து போனது. குமரேசன் மகிழனை பற்றி குறை கூறிக் கொண்டிருப்பதை கேட்ட அவன், தன்னை தயார் படுத்திக் கொண்டு அவர்களிடம் வந்தான்.

"இன்னைக்கு மகிழன் என்ன செஞ்சான்னு உனக்கு தெரியுமா? குடிச்சிட்டு என்னோட ஆஃபீஸுக்கே வந்துட்டான். முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு, நான் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம ஜனங்க முன்னாடி அவன் ரொம்ப கீழ்த்தரமா நடந்துகிட்டான். என்னையும் என் மகளையும் ரொம்ப அவமானப்படுத்திட்டான். உன் ஒருத்தனுக்காக தான் நான் அவனை பொறுத்துக்கிட்டேன்."

அப்பொழுது அவர்கள்,

"இல்லனா என்ன செஞ்சிருப்பீங்க?" என்று மலரவன் உரைத்ததை கேட்டனர்.

பின்னால் திரும்பி மலரவனை ஏறிட்ட குமரேசன், திகைப்படைந்தார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. மகிழனை அவரால் என்ன செய்துவிட முடியும்?

"அப்பாவுக்காகவெல்லாம் நீங்க ஒன்னும் அவனைப் பொறுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல. நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க" என்றான் மலரவன் சாதாரணமாய்.

எரிச்சலுடன் மணிமாறனை ஏறிட்டார் குமரேசன்.

"என்ன இது மாறா? ஏன் மலரவன் இப்படி பொறுப்பில்லாம பேசுறான்?"

"அதுக்கு நான் விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக ராகேஷுக்கு இருபத்தஞ்சு லட்சம் கொடுத்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றான் மலரவன்.

குமரேசன் அதிர்ச்சி அடைந்தார். மலரவன் தன்னிடம் இப்படி முகத்திற்கு நேராய் அந்த கேள்வியை எழுப்புவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

"நான் அதை அவனுக்கு கடனா கொடுத்தேன்"

"கடனாவா? எந்த நம்பிக்கையில கொடுத்தீங்க?" என்றான் தன் புருவத்தை உயர்த்தி.

"அவன் உங்க ஆஃபீஸோட ஹார்ட் ஒர்க்கர்னு எனக்கு தெரியும்"

"அப்படியா அப்பா? இதுவரைக்கும் அவன் எத்தனை ப்ரொஃபிஷியன்ஸி அவார்ட் ஜெயிச்சிருக்கான்?" என்றான் மலரவன் கிண்டலாக.

"ஒன்னு கூட கிடையாது" என்றார் மணிமாறன்.

"எங்க கம்பெனியில ஒவ்வொரு மாசமும் எம்பிளாயிசுக்கு அவார்ட் கொடுக்குறோம். எங்க கிட்ட வேலை செய்றவங்க, அதை வாங்குறதை பெரிய கவுரவமா நினைக்கிறாங்க. கடின உழைப்பாளிகளுக்கு மட்டும் தான் அந்த அவார்ட் கிடைக்கும். உங்களுக்கு அது தெரியாதா?"

"இப்ப நீ என்ன சொல்ல வர மலரவன்?"

"மகிழனை மடக்கி பிடிக்க, நீங்க ராக்கேஷை பயன்படுத்திக்கிட்டதா அவன் நினைக்கிறான்"

"நான் ஏன் அப்படி செய்யணும்?"

"இப்போதைக்கு அவன் கிட்ட அதுக்கு பதில் இல்ல. ஆனா, ரொம்ப சீக்கிரமே எல்லாருக்கும் அவன் பதில் சொல்லுவான்"

"குடிச்சிட்டு என்னோட ஆஃபிஸ்க்கு வர வேண்டாமுன்னு அவன் கிட்ட சொல்லு"

"அதை நான் எப்படி சொல்ல முடியும்? அவன் உங்களோட மாப்பிள்ளை. உங்களுக்குள்ள அசைக்க முடியாத உறவு இருக்கு. நீங்க இன்னைக்கு சண்டை போட்டுக்குவீங்க, நாளைக்கு கூடிக்குவீங்க. அப்போ நாங்க என்ன செய்றது? உங்க பிரச்சனையை நீங்களே தீர்த்துக்கோங்க. அவன் கிட்ட பேச சொல்லி, உங்க பொண்ணு கிட்ட  சொல்லுங்க"

"அவன் டைவர்ஸ் பத்தி பேசுறான். அப்புறம் என்னோட பொண்ணால என்ன செய்ய முடியும்?"

"அப்போ, நாங்க மட்டும் என்ன செய்ய முடியும்? அவங்க பிரச்சனையை அவங்க தான் தீர்த்துக்கணும். ஆனா ஜாக்கிரதையா இருங்க. அவன் உங்க பொண்ண பார்த்தாலே பயங்கர கோபமாகுறான்" என்றான் பொய்யான அக்கறையோடு.

"இதுல உன்னால எதுவும் செய்ய முடியாத மாறா?" என்றார் குமரேசன்.

"இரு, நான் மகிழனை கூப்பிடுறேன்" என்று தனது கைபேசியை வெளியில் எடுத்தார் மணிமாறன்.

"இல்ல, ப்ளீஸ் வேண்டாம். அவன்கிட்ட நீங்க அப்புறமா பேசுங்க நான் கிளம்புறேன்" என்று விடுவிடுவென அங்கிருந்து நடக்க துவங்கினார் குமரேசன்.

கள்ளச் சிரிப்புடன் அவர் ஓடுவதை பார்த்துக் கொண்டு நின்றான் மலரவன்.

"மகிழன், குமரேசனோட ஆஃபீசுக்கு போனானா?" என்றார் மணிமாறன்.

"ஆமாம் பா. நான் தான் போக சொன்னேன்" பொய் உரைத்து அவரை கட்டுப்படுத்தினான் மலரவன்.

பெருமூச்சு விட்டார் மணிமாறன்.

"ரிலாக்ஸ் பா. அவங்க பிடியில இருந்து நம்ம வெளியில் வர வேண்டியது அவசியம்"

ஆம் என்று தலையசைத்த  மணிமாறன்,

"நீ லண்டனுக்கு போகப் போறதில்லையா?" என்றார்.

"ஆமாம்பா, இன்னும் ரெண்டு நாள்ல போறோம்"

சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து தன் அறையை நோக்கி நடந்தார் மணிமாறன்.

மலரவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. தன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த அவனது பரிசு பொருட்களை பார்த்து புன்னகை புரிந்தாள். ஒரு காகிதத்தை எடுத்து அதில், மிஸஸ் பூங்குழலி என்று எழுதிவிட்டு மீண்டும் புன்னகை புரிந்தாள். அப்போது அவளுக்கு பின்னால் வெகு நெருக்கமாய் யாரோ நிற்பதை உணர்ந்தாள். அந்த யாரோ யாரென்று அவளுக்கு தெரியும். பேனாவை பிடித்திருந்த அவளது கரத்தை பற்றி, மலரவன் என்ற தனது பெயரை பூங்குழலி என்று அவள் எழுதி இருந்த அவளது பெயருக்கு பக்கத்தில் எழுதினான் அவன். பின்னால் திரும்பி அவனை பார்த்தாள் பூங்குழலி. அவள் எதிர்பாராத வண்ணம், அவள் கன்னத்தில் முத்தமிட்டான் மலரவன்.

"ம...லர்..." அவளுக்கு பேச்சு வரவில்லை.

"ம்ம்ம்?"

"நான்..."

"நீ...?"

"வந்து..."

"நீ ஏற்கனவே ரெண்டு நாளை வேஸ்ட் பண்ணிட்ட." என்றான் அவள் கூற வருவது என்ன என்பதை புரிந்து கொண்ட அவன்.

அவள் என்ன கூறுவது என்று புரியாமல் நிற்க,

"இந்த உறவை ஏத்துக்க உனக்கு இன்னும் எத்தனை நாள் வேணும், பூங்குழலி?" என்றான் தன் கண்களை மெல்ல இமைத்து.

பூங்குழலியின் வயிற்றில் சில பட்டாம்பூச்சி கூட்டம் பறந்தது. அவன் இப்படி கேட்டால் அவள் என்ன பதில் கூறுவாள்? அவள் அதற்காக ஏதாவது திட்டம் வகுத்து வைத்திருக்கிறாளா என்ன? கிட்டத்தட்ட அவளை முழுவதுமாய் அணைத்தபடி அவன் அவ்வளவு அருகில் நின்றிருந்தால், பாவம் அவளும் தான் என்ன செய்வாள்? அவனது கூரிய பார்வையும், திடமான குரலும் அவளை அடித்துப் போட்டது.

"நீ ரொம்ப நாளைக்கு முன்னாடியே என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு எனக்கு தெரியும் பூங்குழலி. அப்புறம் ஏன் இவ்வளவு தயக்கம்? ஒருவேளை, நான் தான் உன்கிட்ட வரணும்னு நீ எதிர்பார்த்தா, இதோ, நான் உன்கிட்ட வந்து நிக்கிறேன்" தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.

அவனது கையையும் பிறகு அவனது முகத்தையும் பார்த்த பூங்குழலி, அவன் கையை பற்றாமல் நின்றாள். *என் கையைப் பற்றிக் கொள்* என்பது போல் தன் புருவம் உயர்த்தினான் அவன். அவள் தயங்கவே, அவனாகவே அவள் கரம் பற்றி, கட்டிலை நோக்கி அழைத்துச் சென்றான்.

கட்டிலில் படித்துக் கொண்ட அவன், தன் கரங்களை விரித்தை  பார்த்து, தன் விழி விரித்தாள் பூங்குழலி, அது, நேரடியான, வெளிப்படையான *அழைப்பு*. அவள் அப்படியே நின்றதை பார்த்த அவன், அவளது கரத்தைப் பற்றி இழுத்து தன் மீது விழச் செய்தான். அவளை கட்டிலில் கிடத்தி,

"உனக்கு என்னை பிடிக்கலையா?" என்றான் அவளது கூந்தலை ஒதுக்கி விட்டவாறு.

"எனக்கு உங்களை பிடிக்கும். அது உங்களுக்கும் தெரியும்" என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

"நான் *அந்த* பிடிக்கிறதை பத்தி கேட்கல" என்றான்.

"நீங்க எந்த பிடிக்கிறதை பத்தி கேட்கிறீங்கன்னு எனக்கு தெரியல"

"நிஜமாவே உனக்கு தெரியாதா?"

"தெரியாது" என்றபடி வேறெங்கோ பார்த்தாள்.

"அது என்னன்னு நான் சொல்லட்டுமா?" என்ற அவனை அதிர்ச்சியுடன் அவள் பார்க்க, சிரித்தபடி எழுந்தமர்ந்தான் மலரவன்.

அவள் அவனை நம்ப முடியாமல் பார்த்தபடி அப்படியே படுத்திருந்தாள்.

"எழுந்துடு பூங்குழலி. இல்லன்னா, நடக்க கூடாது நடந்திடலாம்... நான் எவ்வளவு ஆர்வமா இருக்கேன்னு உனக்கு தெரியாது" என்றான் புன்னகைத்தபடி.

அவள் சற்றென்று எழுந்து அமர, இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top