36 உணர்வுகள்
36 உணர்வுகள்
"நான் இந்தியா வர விரும்பாததுக்கு காரணம், நீ என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கு இருக்கல. ஏன்னா நான் உன்னை காதலிச்சேன்." தன் வாழ்வின் மிகப்பெரிய உண்மையை போட்டு உடைத்தான் மலரவன்.
நம்ப முடியாத பார்வையுடன், அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. இப்போது அவன் என்ன கூறினான்? அவன் கூறியது உண்மையா? அவன் அவளை காதலித்தானா? ஆரம்பத்தில் இருந்தா? தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை விழுங்க முடியாமல் திணறினாள் பூங்குழலி.
"நீங்க என்னை காதலிச்சீங்களா என்றாள்?" நம்ப முடியாமல்.
அமைதியாய் இருந்தான் மலரவன்.
"நான் உங்ககிட்ட என்னமோ கேட்டேன் மலர். சொல்லுங்க..."
"இப்போ தான் சொன்னேன்..."
"முழுசா சொல்லல"
பெருமூச்சு விட்டான் மலரவன்.
"நான் உண்மையை தெரிஞ்சிக்குறது அவசியம்னு உங்களுக்கு தோணலையா?"
"உனக்கு இப்போ என்ன தெரியணும்?"
"நீங்க என்னை ஆரம்பத்தில் இருந்தே காதலிச்சீங்களா?"
ஆம் என்று தலையசைத்தான்.
"எங்க அம்மா அப்பாவோட வெட்டிங் ஆனிவர்சரி ஃபங்ஷன்ல உன்னை பார்த்த போதே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிடுச்சு. நான் ஒருத்தர் கிட்ட இன்ட்ரஸ்டா பேசினது அது தான் முதல் தடவை. உன்னை ஏன் எனக்கு பிடிச்சதுன்னு சத்தியமா எனக்கு தெரியல. ஆரம்பத்துல நான் கூட அது ஒரு டைமிங் அட்ராக்ஷன்னு தான் நினைச்சேன். ஆனா, நான் சதா உன்னை பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட ஃபீலிங்ஸ் மேல எனக்கே சந்தேகம் வந்தது. லண்டனுக்கு போறதுக்கு முன்னாடி உன்னை ஒரு தடவையாவது பார்த்துடணும்னு மனசு அடிச்சுகிச்சு. அப்போ தான் சிக்கவே கூடாதுன்னு நினைச்ச ஒரு விஷயத்துல நான் மாட்டிக்கிட்டது புரிஞ்சது. என்னால எதுவும் செய்ய முடியல"
"அப்படின்னா ஏன் நீங்க என்னை மீட் பண்ணல?"
"உன்னை நான் மீட் பண்ணல. ஆனா, தூரத்தில் இருந்து பார்த்தேன்"
"பாத்தீங்களா? எப்போ?"
"உன்னோட காலேஜுக்கு வெளியில. அன்னைக்கு நீ ரெட் கலர் நெட்டட் சாரியும், லீவ்லெஸ் போட் நெக் பிளவுஸும் போட்டுகிட்டு ரொம்ப அழகா இருந்த"
மலைத்துப் போனாள் பூங்குழலி. ஆமாம், அவள் அந்த உடையை உடுத்திக் கொண்டிருந்தது, அவளது கல்லூரியின் ஃபவுண்டர்ஸ் டே நிகழ்ச்சிக்காக. அது அவளுக்கு மிகவும் பிடித்த புடவை. மலரவன் அவளை அவ்வளவு துல்லியமாகவா கவனித்தான்?
"மறுநாள் நான் லண்டன் போயிட்டேன். லண்டன்ல இருந்து திரும்பி வந்த பிறகு அம்மா கிட்ட உன்னை பத்தி சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ அப்போ காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த. நீ தில்லை அங்கிளோட ஒரே பொண்ணு... அதனால உன்னோட கல்யாணத்தைப் பத்தி அவர் அவ்வளவு சீக்கிரம் யோசிக்க மாட்டார்னு நினைச்சேன்" பேசுவதை நிறுத்திவிட்டு அவளை ஏறிட்டான். அவள் எப்போதும் இல்லாத அளவிற்கு அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கும் மகிழனுக்கும் இடையில் என்ன நடந்தது என்று அவனிடம் கூற வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், அவன் பேச்சின் இடையே குறுக்கிட அவள் விரும்பாததால் அமைதியாய் இருந்து, அவனை மேலும் பேச விட்டாள்.
"நான் இந்தியாவுக்கு வரவே கூடாதுன்னு உறுதியா இருந்தேன். என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னோட அப்பா, அம்மா என்னை தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க. ஏன்னா, அவங்க உனக்கும் மகிழனுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது. அதை என்னால தாங்கவே முடியல. எனக்கு என் குடும்பம் தான் எல்லாம். என் அப்பா அம்மாவுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். என் தம்பியையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா நீன்னு வந்த போது, என்னால அனுசரிச்சு போய் அவங்களுக்காக விட்டுக் கொடுக்க முடியல. நான் இந்தியாவுக்கு வர்றதை தவிர்த்தேன். ஏன்னா, நீ இன்னொருத்தர் கைக்கு போறதை பார்க்கிற தைரியம் எனக்கு இருக்கல. இதைக் கேட்க சுயநலமா தெரியலாம். ஆனா சில நாள்ல, நான் இல்லாமலேயே உங்க கல்யாணத்தை அவங்க செஞ்சிடுவாங்கன்னு நான் நெனச்சேன். அதை செய்யச் சொல்லியும் நான் சொன்னேன். ஆனா அவங்க தான் அதுக்கு தயாரா இல்ல"
"நல்லவேளை நீங்க இந்தியாவுக்கு வரல" என்றாள் உணர்ச்சி பெருக்குடன்.
அவள் மீது கூறிய பார்வையை வீசினான் மலரவன். அவள் எந்த அர்த்தத்தில் அது அதை கூறினாள் என்று அவனுக்கு புரிந்திருந்த போதும், அது அவன் மனதை ஏதோ செய்தது.
"ஏன்?" என்றான் அதை அவள் வாயால் கேட்க எண்ணி.
"அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன போது, அது எனக்கு பெருசா பாதிப்பை ஏற்படுத்தல. ஏன்னா, எனக்கு அவர் மேல பெருசா எந்த ஈடுபாடும் இல்ல. ஆனா எங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்தா என்னுடைய நிலைமை ரொம்ப பரிதாபமா இருந்திருக்கும். கல்யாணத்துக்கு பிறகு அவர் இதே மாதிரி மாறி இருந்தா, அவரோட மாற்றத்தை என்னால் தாங்கி இருக்கவே முடியாது. அவர் நிச்சயம் என்னை விவாகரத்து செஞ்சிருப்பார்"
"அவன் உன்னை விவாகரத்து செஞ்சிருந்தாலும், நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பேன்" என்றான் எதைப்பற்றியும் யோசிக்காமல்.
அது பூங்குழலியை திடுக்கிட செய்தது. அதற்கு என்ன பதிலளிப்பது என்று அவளுக்கு புரியவில்லை.
"இதை என்னால நம்ப முடியல" என்று முணுமுணுத்தாள்.
சில எட்டுக்கள் எடுத்து வைத்து, அவளுக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை அழித்த மலரவன், அவளை நோக்கி குனிந்தான். அவன் சட்டென்று அவளை நெருங்கி வருவான் என்று எதிர்பார்க்காத பூங்குழலி பின்னோக்கி சாய்ந்தாள். அவளது கரங்களைப் பிடித்து கட்டிலை விட்டு இறங்கச் செய்தான். அவனது முகத்தை திகைப்புடன் பார்த்தபடி நின்றாள் பூங்குழலி.
அவள் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம் அவளை கட்டித் தழுவி, அவளுக்கு அதிர்ச்சி அளித்தான் மலரவன்.
"ஐ லவ் யூ பூங்குழலி... ஐ லவ் யூ சோ மச்" அவளை அணைத்துக் கொண்டு தன் கண்களை மூடி நின்றான் மலரவன்.
பூங்குழலியின் கண்கள் மென்மையடைந்தது. அவை அனிச்சையாய் மூடின. அவளது கரங்கள், அவனது தோள்களை சுற்றி வளைத்தன. மலரவனின் இதழ்களில் அழகிய புன்னகை மலர்கள் பூத்தன.
"உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும் பூங்குழலி. சீக்கிரமே நீயும் என்னை காதலிக்க ஆரம்பிப்பேன்னு நான் நம்புறேன்."
தன் அனைப்பிலிருந்து அவளை விடுவித்த அவன், அவளது முகத்தை படித்தான். அதில் தெரிந்ததெல்லாம் குழப்பமும், நம்ப முடியாத முகபாவமும் தான். மென்று விழுங்கியபடி தன் இதழ்களை அழுத்தமாய் அவள் நெற்றியில் பதித்தான்.
"குட் நைட்" என்ற அவனது குரல் பலவீனமாய் ஒலித்ததை உணர்ந்தாள் பூங்குழலி.
கட்டிலில் சென்று படுத்துக் கொண்டு தன் கண்களை மூடிக்கொண்டான். அவன் பேசியதை எல்லாம் மீண்டும் தன் மனதில் ஓட விட்டபடி அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்குழலி. அவர்களது முதல் சந்திப்பில் இருந்தே மலரவன் அவளை காதலித்திருப்பான் என்பது அவள் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று. அவனது செயலிகளில் அவள் பலவகையில் வித்தியாசத்தை உணர்ந்தாலும், அது என்ன என்று பெயரிட அவள் தடுமாறினாள். இப்பொழுது அவளுக்கு புரிந்து போனது. அவளும் சென்று படுத்துக் கொண்டாள்.
தன் கண்களை மலரவன் மூடிக்கொண்டிருந்த போதிலும், அவளது ஆழமான பார்வை, அவனது எண்ணத்தை ஊடுருவவே செய்தது. தன் கண்களை திறந்து அவளை பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தான். அவளும் லேசாய் புன்னகைத்தாள். அவளது கண்களை சந்தித்தபடி மெல்ல அவள் கரத்தை பற்றினான். அதை தன் கன்னத்தின் அடியில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான், பூங்குழலியை உணர்ச்சிவசப்பட செய்து. அவள் வெகு நேரம் தூங்கவே இல்லை. ஆனால் மலரவனோ, தன் மனதில் தேக்கி வைத்திருந்த உணர்வுகளை அதற்கு உரியவளிடம் கொட்டி விட்ட, நிம்மதியில் உறங்கிப் போனான்.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண்விழித்த மலரவன், சோபாவில் அமர்ந்து கொண்டு பூங்குழலி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அப்பொழுது தான், முதல் நாள் இரவு அவர்களுக்குள் நடந்த உரையாடல் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவளைப் பார்த்து புன்னகைத்தபடி எழுந்து அமர்ந்தான். அவளும் பதிலுக்கு புன்னகைக்க, கட்டிலை விட்டு கீழே இறங்கிய மலரவன், குளியலறை நோக்கி சென்றான்.
அவன் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த போதும், அப்படியே அமர்ந்திருந்தாள் பூங்குழலி, எதையோ யோசித்தவாறு. அவள் தன்னிடம் எதையோ பேச நினைக்கிறாளோ என்று தோன்றியது மலரவனுக்கு.
"நீ என்கிட்ட ஏதாவது சொல்லனுமா, பூங்குழலி?" என்றான்.
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"சொல்லு" என்று தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றான்.
"மகிழன் ஒருநாள் என்னோட காலேஜுக்கு வந்து, என்னை ப்ரொபோஸ் பண்ணாரு"
"ஓ..."
"அவர் என்னை காதலிக்கிறதா சொன்னாரு"
"ம்ம்ம்"
"நான் எங்க அப்பா கிட்ட போய் பேச சொன்னேன்"
"உன்னை காதலிக்க உங்க அப்பாகிட்ட பர்மிஷன் வாங்க சொன்னியா?" என்று சிரித்தான் மலரவன்.
"எனக்கு அவரை காதலிக்கிற ஐடியா இல்ல. அதனால தான் எங்க அப்பா கிட்ட அவரை போக சொன்னேன்"
"ஓ... ஒருவேளை நான் ப்ரொபோஸ் பண்ணி இருந்தாலும், என்னையும் உங்க அப்பாகிட்ட தான் அனுப்பி இருப்ப... இல்ல?"
"இருக்கலாம், இல்லாமலும் இருந்திருக்கலாம்..."
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"நான் அதுக்கு முன்னாடி மகிழன் கிட்ட பேசினதே இல்ல. அவர் மேல எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயமும் இருந்ததில்ல. ஆனா, நம்ம முன்னாடியே பேசியிருந்தோம். நீங்க பேசின விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. முக்கியமா நீங்க என்கிட்ட பேசுனது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது"
"பெருமையாவா? ஏன்?"
"ஏன்னா, எனக்கு தெரியும், நீங்க வேற யார்கிட்டயும் பேச மாட்டீங்கன்னு. ஆனா என்கிட்ட மட்டும் பேசினீங்க"
புன்னகைத்தான் மலரவன்.
"மகிழன் என்னை ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடி, நீங்க என்னை ப்ரொபோஸ் பண்ணி இருக்கலாம்..." என்றாள் தாழ்ந்த குரலில்.
அவளது குரல் மாறியதை கவனித்தான் அவன்.
"அப்படி நடந்திருந்தா, எல்லாமே மாறி இருக்கும்... நீங்க என்னை ப்ரொபோஸ் பண்ணி இருந்தா, நம்ம கல்யாணம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நடந்திருக்கும். நான் உங்க கூட செட்டில் ஆனதை பார்த்திருந்தா, என்னோட அப்பாவும் தற்கொலை பண்ணிக்க நினைச்சு இருக்க மாட்டாரு... இல்ல?" என்றாள் கண்ணீர் ததும்ப.
மலரவனுக்கு வேதனையாய் இருந்தது. அவள் கூறுவதும் சரி தான். மகளை கரையேற்றி, தன் கடமையை முடித்துவிட்டு இருந்தால், தில்லைராஜனின் மனதில் தற்கொலை எண்ணம் எழாமல் இருந்திருக்கலாம்.
"இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல..." என்றான் மலரவன்.
அவனது பேச்சை தடுத்து,
"இல்ல இல்ல... நான் என் மனசுல பட்டதை சொன்னேன். அவ்வளவு தான்..."
தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட அவள்,
"தன்னோட மகள் சந்தோஷமா வாழறதை பார்க்கிற கொடுப்பினை எங்க அப்பாவுக்கு இல்ல" என்றாள்.
"நீ சந்தோஷமா இருக்கியா?" என்றான் மலரவன்.
"ரொம்ப.... மனசு நிறைஞ்ச சந்தோஷத்தோட திருப்தியா இருக்கேன்" என்றாள் அவனுக்கு சந்தோஷத்துடன் நிம்மதியையும் தந்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top