35 உடைந்த உண்மை

35 உடைந்த உண்மை

குமரேசன் ராகேஷுக்கு கொடுத்த இருபத்தைந்து லட்சத்தை பற்றி மணிமாறனிடம் கூறினான் மலரவன்.

"இது உண்மையா இருக்க முடியாது மலரா. எதுக்காக குமரேசன் ராகேஷுக்கு இருபத்தஞ்சு லட்சம் கொடுக்கணும்?"

"அதையே தான் பா நானும் கேட்கிறேன்.  எதுக்காக அவ்வளவு பணத்தை அவர் ராகேஷுக்கு கொடுக்கணும்? அவங்களுக்கு நடுவுல அப்படி என்னப்பா உறவு இருக்கு? அவருக்கு ராகேஷ் யாரு? எந்த அஸ்ஸுரன்சும் இல்லாம எதுக்காக அவர் அவனுக்கு பணம் கொடுத்தாரு?"

மலரவன் எந்த புள்ளிகளை இணைக்க முயல்கிறான் என்று புரியாத மணிமாறன் ஒன்றும் கூறாமல் நின்றார். அது புரிந்த போது, அவர் திடுக்கிட்டார்.

"குமரேசனுக்கு ராகேஷ் ஏதாவது ஒரு விதத்தில உதவி இருப்பான்னு நினைக்கிறியா?" என்றார் பதற்றத்துடன்.

"அப்படி இல்லன்னா எதுக்காக அவர் அவனுக்கு அவ்வளவு பணம் கொடுக்கணும்? உங்க ஃபிரண்டை பத்தி உங்களுக்கு தெரியாதா? மத்தவங்களுக்கு பணம் கொடுத்து உதவுற அளவுக்கு அவரு அவ்வளவு தயாள குணம் படைச்சவரா?" என்றான் மலரவன்.

மணிமாறனின் மனதில் நடுக்கம் தோன்றியது. அவருக்கு குமரேசனை பற்றி நன்றாகவே தெரியும். அவர் யாருக்கும் காலணா பணம் கொடுக்காதவர். அப்படி இருக்கும் போது இப்பொழுது மட்டும் அவர் ஏன் ராகேஷுக்கு பணம் கொடுத்தார்?

"நான் உங்ககிட்ட அப்பவே சொன்னேன்... மகிழனை நம்புங்கன்னு கெஞ்சினேன். ஆனா, நான் சொன்னதை நீங்க காது கொடுத்து கேட்கவே இல்ல. உங்க பிள்ளையை விட, உங்களுடைய ஃபிரண்டை தான் நீங்க நம்புனிங்க. இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு... மகிழன் அவனுடைய வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறான். அவனுக்கு, இதயம் இல்லாத, நம்மளை அழிக்கணும்னு நினைக்கிற ஒருத்தி பொண்டாட்டியா கிடைச்சிருக்கா" என்றார் கண்ணீர் ததும்ப மின்னல்கொடி.

"எதை வச்சி நீ கீர்த்தியை  அப்படி சொல்ற?" என்றார் மணிமாறன்.

"பின்ன என்ன? எதுக்காக செய்யாத தப்பை செஞ்சதா மகிழன் மேல குற்றம் சுமத்தி அவனை கல்யாணம் பண்ணிக்கணும்? முதல்ல அவ நம்ம  மலரவனை கல்யாணம் பண்ணிக்கனும்னு பிடிவாதமா இருந்தா. ஆனா இப்போ, அவ நம்ம மகிழனோட பொண்டாட்டி. எதுக்காக அவங்க இதை செய்யணும்?"

"அம்மா கூல் டவுன்..."

"நான் இவர்கிட்ட சொன்னேன் டா..."

"நானும் தான் மா சொன்னேன். ஆனா அப்போ சூழ்நிலை மகிழனுக்கு எதிரா இருந்தது"

"இது அவங்க வேணுமுன்னு ஏற்படுத்தின சூழ்நிலை"

"ஆமாம், ஆனா அதைப்பத்தி இப்ப பேசி எந்த பிரயோஜனமும் இல்ல"

"என்னடா இப்படி சொல்ற?"

"இதுல முடிவெடுக்க வேண்டியது மகிழன் தான்"

"அவனுக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல"

"எனக்கு தெரியும். அவன் என்ன செய்யணும்னு நினைக்கிறானோ அதை செய்ய விடுங்க. அவன் என்ன செஞ்சாலும் தயவு செய்து அவனை தடுத்து மட்டும் நிறுத்தாதீங்க. நான் அதைத் தான் உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன்"

கலவரத்துடன் நின்றிருந்த மணிமாறனை நோக்கினான் மலரவன்.

"அப்பா..."

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மலரா. குமரேசன் இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவான்னு என்னால நம்பவே முடியல. நான் அவனை நம்பினேன். அதனால தான் அவனோட மகளுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சப்போ, அவனோட எண்ணத்துக்கு நான் மரியாதை கொடுத்தேன். அவன் இப்படி என் முதுகுல குத்துவான்னு நான் நினைக்கவே இல்ல" என்றார் மணிமாறன் கோபமும், ஏமாற்றமும், குற்ற உணர்ச்சியும் மேலோங்க.

தன் தந்தைக்காக பரிதாபப்பட்டான் மலரவன். அவனுக்கு தெரியும் அவர் எந்த அளவிற்கு மென்மையானவர் என்று. ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. இந்த சூழ்நிலையை அவர் ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால், அவர் காதுக்குச் சென்றது அனைத்தும் உண்மை. ஒருவேளை இந்த உண்மை அவருக்கு தெரியாத நிலையில், அவர் மகிழன் செய்யும் ஒவ்வொரு செயலையும் தடுக்க பார்ப்பார். அவர் அதை செய்ய வேண்டாம் என்று எண்ணினான் மலரவன்.

"நீங்க ரிலாக்ஸா இருங்கப்பா. தனக்கு என்ன வேணும்னு மகிழனுக்கு தெரியும். அதனால, அதை நினைச்சு நீங்க உங்களை ஸ்டிரெஸ் பண்ணிக்காதீங்க"

மணிமாறன் அமைதியாய் இருந்தார். குற்ற உணர்ச்சி அவரை கொன்றது. அவர் தன் மகனின் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டார். மலரவன் கூறியது போல், அன்று அவர் காவல்துறையினரை அழைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் குமரேசனின் திட்டம் பலித்திருக்காது.

"மகிழன் ஆஃபீஸ்ல குடிச்சதை நான் பார்த்தேனே" என்றார் குழப்பத்துடன்.

"இல்லப்பா. அன்னைக்கு ஆஃபீஸ்ல குடிச்சது ராகேஷ் தான். அவனை உங்க கிட்ட இருந்து காப்பாத்த தான் மகிழன் உங்க கிட்ட எதுவும் சொல்லாம அமைதியா இருந்திருக்கான். இருபத்தஞ்சு லட்சம் கைமாறுன விஷயம் மகிழனுக்கு தெரியிறதுக்கு முன்னாடியே  அன்னைக்கு நடந்த விஷயத்தை அவன் என்கிட்ட சொல்லிட்டான்"

"இப்போ நாங்க என்ன செய்யணும்?"

"நீங்க எதுவும் செய்ய வேண்டாம். அவங்களை மகிழன் பாத்துக்குவான். நீங்க எப்பவும் போல இருங்க"

சரி என்று தலையசைத்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றார்கள் அவர்கள் இருவரும்.

இதற்கிடையில்,

கீர்த்தியை பார்த்து எகத்தாளமாய் சிரித்தான் மகிழன்.

"நீங்க குடிக்கலையா?" என்றாள் அவள்.

"ஓ... குடிச்சேனே..." என்று சிரித்தான் அவன்.

"அப்படின்னா, உங்க அப்பா அம்மா வந்தப்போ எப்படி குடிக்காத மாதிரி அவங்களை நம்ப வச்சீங்க?"

"என்னோட ரகசியத்தை நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்?"

"ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க?"

"நான் செய்யாததை செஞ்சதா, என் மேல நீ ஏன் பழி போட்ட?"

"நீங்க குடிச்சிருக்கீங்கன்னு நினைச்சேன்"

"அதை இன்னொரு தடவை சொன்னா, உன்னை நான் உண்மையிலேயே கொன்னுடுவேன்" அபாயகரமாய் சிரித்தான் மகிழன்.

"நீங்க உண்மையிலேயே குடிச்சீங்கன்னு தான் நான் நெனச்சேன். அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? உங்க கையில தான் ஆல்கஹால் பாட்டில் இருந்ததே"

"என்னோட ஃபிரண்டு கிட்ட குடுத்து, உங்க அப்பன் என்கிட்ட கொடுக்க சொன்ன பாட்டில் தானே அது? உனக்கு தெரியாதா?"

"இல்ல, அது உண்மை இல்ல"

"சீக்கிரமே உண்மையை நான் வெளியில கொண்டு வருவேன். அப்போ, நீயும் உங்க அப்பனும் என்ன செய்றீங்கன்னு நான் பாக்குறேன்"

பயத்துடன் தலைகுனிந்தாள் கீர்த்தி. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள அவள் எப்போதும் விரும்பியதில்லை. அவளது முகத்தைப் பார்த்த மகிழன்,

"உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தா, உன்னை காப்பாத்த சொல்லி வேண்டிக்கோ. ஆனாலும் அது நடக்கும்னு எனக்கு தோணல. ஏன்னா, உன்ன மாதிரி கேடுகெட்ட பொம்பளைங்களுக்கு கடவுள் எப்பவும் உதவி செய்றதில்ல"

"என் மேல உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? நான் உங்களோட மனைவி.  நீங்க நல்லா இருக்கணும்னு என்னை விட வேற யாரு நினைச்சிட போறா?" என்றாள் சோகமாக.

தன் கைகளை கட்டிக்கொண்டு அவளை எகத்தாளமாய் பார்த்தான் மகிழன்.

"என்னோட கழுத்தை முறிச்சிட்டு, சோறு ஊட்டிவிடுறியா?"

"நடந்த கசப்பான சம்பவம் எல்லாத்தையும் மறந்துட்டு, நம்ம புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதா?"

"நிச்சயம் எல்லா கசப்பான சம்பவத்தையும் நான் மறப்பேன். நீ என் வாழ்க்கையை விட்டு போன பிறகு..."

"அப்படி சொல்லாதீங்க மகிழ். நீங்க என் கழுத்துல தாலி கட்டுன நிமிஷத்துல இருந்து நான் உங்களை உயிருக்கு உயிரா காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்"

"நான் உன்னை அடியோட வெறுத்துட்டேன்.  உன் நாடகத்தை நிறுத்து. அதுக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன்"

"நாடகமா? இது நம்ம வாழ்க்கை... நாடகம் இல்ல"

"கொஞ்சம் பொறு... நீயும் உங்க அப்பனும் சேர்ந்து நடிச்ச நாடகத்தை எல்லாருக்கும் படம் போட்டு காட்டுறேனா இல்லையான்னு பாரு"

"உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா நான் என்ன செய்ய முடியும்?" என்றாள் கவலையாக.

அவளுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து வெளியேறினான் மகிழன். எந்த நேரத்தில் அவன் எங்கு செல்கிறான் என்று முகம் சுளித்தாள் கீர்த்தி. அவனது அப்பாவையோ அல்லது அண்ணனையோ பார்க்கச் செல்வான் என்று எண்ணினாள் அவள்.

.........

தன் அறைக்கு வந்த மலரவன், பூங்குழலி தூங்காமல் இருப்பதை கண்டான்.

"நீ இன்னும் தூங்கலையா?"

அவள் இல்லை என்று தலையசைத்தாள்

"ஏன்?"

"அங்கிள் மகிழன் மேல ரொம்ப கோபமா இருக்காரா?"

"இல்ல. நான் அவரை சமாதான படுத்திட்டேன்"

"நிஜமாவா?"

"ஆமாம் என்று தலையசைத்தான் மலரவன்.

"நீங்க என்ன அவ்வளவு பவர்ஃபுல்லான ஆளா?" என்ற அவள் கேள்விக்கு, புன்னகைத்துவிட்டு,

"அப்பா நான் எது சொன்னாலும் கேட்பாரு. அவருக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றான்.

"அதுக்காகத் தான் நீங்க எங்க அப்பாவோட இறுதி சடங்குல வந்து கலந்துகிட்டீங்களா?" என்று அவள் கேட்க, சில நொடி திகைத்து நின்றான் மலரவன். அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியாவிட்டாலும் ஆம் என்று தலையசைத்தான்.

"அப்பாவோட டெட் பாடியை பார்த்து அங்கிள் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு. அவரால நிக்கவே முடியல" என்றாள் அதை நினைவு கூர்ந்து.

"அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே... நான் அங்க வரும் போது அவர் கொஞ்சம் பரவாயில்ல"

"உங்களைப் பார்த்து அவர் நிம்மதி அடைஞ்சிருக்கணும்"

அமைதியாய் நின்றான் மலரவன்.

"அன்னைக்கு உங்களைப் பார்த்த பிறகு, நான் கூட கொஞ்சம் ரிலீவ் ஆனேன்" என்றாள் அவனை திகைக்க செய்து. இது தலைப்புச் செய்தியில் இடம்பெற வேண்டிய விஷயம்...! அவனைப் பார்த்து அவள் நிம்மதி அடைந்தாளா?

"நான் உன்னோட பர்த் டேக்கு விஷ் பண்ணாததால நீ என் மேல அப்சட்டா  இருப்பேன்னு நெனச்சேன்"

"அப்சட்டா இருந்தேன் தான். ஆனாலும், ஒரு நிம்மதி..."

"ஏன்?"

"ஃபாரின்ல இருந்து வர்றது ஒன்னும் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லையே... நீங்க அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கணும் இல்ல?"

"நான் பணம் மட்டும் தான் கொடுத்தேன். எந்த கஷ்டமும் படாம ஸ்டீவ் அதை செயல்படுத்தி காட்டினான்."

"ஒரே நாள்ல, எந்த கஷ்டமும் படாம, எங்க அப்பாவோட இறுதி சடங்குக்கு வந்து சேர்ந்தீங்க. அப்படி இருக்கும் போது, அதுக்கு முன்னாடி நீங்க ஏன் இந்தியாவுக்கு வரல? அங்கிளும்  ஆன்ட்டியும் உங்களை எத்தனையோ தடவை இங்கே வரச் சொல்லிக் கூப்பிட்டாங்களே... அப்போ உங்களுக்கு ஏன் இங்க வர தோணல?"

"என்னோட ஷெடியூல்ல நான் ரொம்ப பிசியா இருந்தேன்" என்றான் மேலே பார்த்தவாறு.

"இந்த சாக்கை, அங்கிளும் ஆன்ட்டியும் முன்னாடி சொன்ன போது நான் நம்பினேன்... நீங்க இந்தியாவுக்கு வர்ற வரைக்கும் நான் நம்பிகிட்டு தான் இருந்தேன். ஆனா இப்போ அதை நான் நம்பல..."

தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான் மலரவன்.

"உங்களோட செட்யூல்லை இந்தியாவிலிருந்து மேனேஜ் பண்ண முடியும், அது எவ்வளவு பெரிய ஈவென்டா இருந்தாலும். நீங்க இங்க இருந்து சொல்றதை செய்யறதுக்கு லண்டன்ல ஸ்டீவ் இருக்காரு. நீங்க நினைச்சிருந்தா, இந்தியாவுக்கு முன்னாடியே வந்திருக்கலாம்... ஆனா நீங்க வரல... ஏன்?" என்றாள்.

"ஸ்டீவால எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியும்னு அப்போ எனக்கு தெரியாது"

தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை உறுத்து பார்த்தாள் பூங்குழலி.

"நீ என்னை நம்பலையா?"

இல்லை என்று தலையசைத்த பூங்குழலி,

"நீங்க என்கிட்ட பேசும் போது ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பீங்க. ஆனா இப்போ உங்ககிட்ட ஒரு தடுமாற்றம் தெரியுது" என்றாள்

ஒன்றும் கூறாமல் அமைதி காத்தான் மலரவன்.

"காரணத்தை நான் சொல்லட்டுமா?"

உறுதியாய் அவளை ஏறிட்டான் மலரவன்.

"உங்களுக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. உங்களுக்கு மகிழனை பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அதனால அந்த கல்யாணத்துல கலந்துக்க நீங்க விரும்பல. நான் சொல்றது சரி தானே?"

அவளது கண்களை சந்தித்தபடி இல்லை என்று தலையசைத்த அவன்,

"நான் இந்தியாவுக்கு வர விரும்பல தான். ஏன்னா, நீ இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கு இருக்கல. ஏன்னா, நான் உன்னை காதலிச்சேன்..." தன் வாழ்வின் மிகப்பெரிய உண்மையை போட்டு உடைத்தான் மலரவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top