34 மகிழனின் நடிப்பு

34 மகிழனின் நடிப்பு

தள்ளாடியபடி தன் அறைக்கு  சென்றான் மகிழன். அவன் வருவதற்கு முன், தன் அறைக்கு ஓடி சென்றாள் கீர்த்தி. உள்ளே வந்த மகிழன், கதவை சாத்தி தாளிட்டுவிட்டு, *இங்கே வா* என்பது போல் அவளை நோக்கி கையசைத்தான். அவனிடம் செல்லாமல் தயங்கி நின்றாள் கீர்த்தி. தன் கையில் இருந்த மது பாட்டிலை தலையின் மீது வைத்துக் கொண்டு நடனமாட துவங்கினான் மகிழன்.

"ஏய்... வா இங்க..." என்றான் ஆடியபடி.

"நீங்க குடிச்சிருக்கீங்களா?"

"எனக்கு குடிப்பழக்கம் இருக்கிற விஷயமே உனக்கு தெரியாத மாதிரி கேள்வி கேட்கிற?" என்றான் நக்கலாக.

பேச்சிழந்து நின்றாள் கீர்த்தி.

"எனக்கு குடிக்கிற பழக்கம் இருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும்... குடிச்சா நான் பொம்பளைங்க கிட்ட தப்பா நடந்துக்குவேன்னும் உனக்கு தெரியும்" என்று வில்லன் சிரிப்பு சிரித்தான்.

பயத்திற்குள்ளான கீர்த்தி இங்கும் அங்கும் நோட்டமிட்டாள்.

"உனக்கு தெரியாத இன்னொரு விஷயம் இருக்கு. நான் குடிச்சா, எனக்கு எதிர்ல இருக்கிறவங்களை அடி பின்னிடுவேன், தெரியுமா?" என்றான்.

அதைக் கேட்ட கீர்த்தி அதிர்ச்சி அடைந்தாள். இப்போது அவன் அவளை அடிக்கப் போகிறானா? அவன் மீது தன் கண்களை பொருத்தியபடி, அங்கிருந்து மெல்ல கதவை நோக்கி நகரத் துவங்கினாள், அந்த அறையை விட்டு வெளியேறும் நோக்குடன். அவளது நோக்கத்தை புரிந்து கொண்ட மகிழன், அவள் கதவை சென்று அடையும் முன், அவளை அடைந்து, அவள் கூந்தலை பற்றினான்.

"என் முடியை விடுங்க" என்று அரற்றினாள்.

"நான் உன்னை என்ன செய்யப் போறேன்னு நினைக்கிற?"

"முடியை விடுங்க... வலிக்குது"

"இப்படி தான் எனக்கும் வலிச்சது... எங்க அம்மா அப்பா கண்ணுல என்னை பொம்பளை பொறுக்கியா காட்டின போது..."

"நீங்க ஒரு குடிகாரன்... அப்படின்னா உங்க அப்பா அம்மா உங்களை பத்தி வேற எப்படி நினைப்பாங்க?" கத்தினாள் அவள்.

"உன்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா, எப்பேர்பட்டவனும் குடிகாரனா தான் மாறுவான்" கோபமாய் கூறினான் அவன்.

"என் முடியை விடுங்கன்னு சொன்னேன்"

"ஏன்? நீ தானே என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட..."

"நீங்க இப்படிப்பட்டவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல..."

"வேற என்ன நெனச்ச? உன்னோட கால்ல விழுந்து கிடப்பேன்னு நினைச்சியா? உங்க திட்டமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா?"

"என்ன திட்டம்?"

"என் ஃப்ரெண்ட் ராகேஷுக்கு உங்க அப்பன் இருபத்தஞ்சு லட்சம் கொடுத்திருக்கான். எதுக்கு? உங்களுக்கும் அவனுக்கும் என்ன உறவு? நீ அவனை வச்சிருக்கியா?"

"நாக்கை அடக்கி பேசுங்க"

"அதை நீ சொல்லாத... ராகேஷுக்கும் உன் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? எந்த ஒரு அஸ்ஸுரன்சும் இல்லாம இருபத்தஞ்சு  லட்சத்தை சாதாரணமா தூக்கிக் கொடுக்கிற அளவுக்கு உங்க அப்பன் என்ன அவ்வளவு பெரிய கொடைவள்ளலா?"

"அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது"

"சீக்கிரமாவே எனக்கு எல்லாம் தெரிய வரும். ராகேஷ் மட்டும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணான்னு எனக்கு தெரியட்டும், என்னை ஒரு மோசமான எதிரியா அவன் பார்ப்பான்... என்னோட உண்மையான சொரூபத்தை நீ பார்ப்ப..." அவளை எச்சரிக்கை செய்த அவன், அவளைப் பிடித்து தள்ளினான்.

திகில் அடைந்த முகத்துடன் அவனை ஏறிட்டாள் கீர்த்தி. ராகேஷுக்கு குமரேசன் இருபத்தைந்து லட்சம் கொடுத்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது? அவளது உடல் நடுங்கியது. உண்மை தெரிந்தால் மகிழன் என்ன செய்வான்? அவளது நிலைமை என்னவாகும்? அவளது கண்களில் மரணம் தெரிந்தது. முதன்முறையாக, அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது முடிவு தவறோ என்று எண்ணினாள் கீர்த்தி. மகிழன் நிச்சயம் அவளுக்கு நரகத்தை காட்டுவான். அவனை விவாகரத்து செய்வதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்கப் போவதில்லை. மலரவன் குடும்பத்தினரை நரகத்தில் தள்ள வேண்டும் என்று அவள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று, அவளே நரகத்தின் வாயிலில் இருக்கிறாள். என்ன செய்வதென்றே அவளுக்கு புரியவில்லை. இந்த நிலைமையை எப்படி கையாள்வது என்றும் தெரியவில்லை. மகிழனை வளைத்து பிடிக்க மிக சாமர்த்தியமாய் ஒரு சூழ்நிலையை உருவாக்கிய அந்தப் பெண், தற்போது தான் இருக்கும் சூழ்நிலையை கண்டு அஞ்சினாள்.

இதற்கிடையில்,

மலரவன் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வருவதை பார்த்த பூங்குழலி,

"என்ன ஆச்சு மலர்? எதுக்காக மகிழன் அப்படி கத்துனாரு?" என்றாள்.

"அவன் குடிச்சிருக்கான்" என்றான்.

"என்ன்னனது? அவர் உண்மையிலேயே குடிப்பாரா? என்றாள் அதிர்ச்சியாக.

"அஃப்கோர்ஸ், எல்லாரும் தான் குடிப்போம்..." என்றான் சாதாரணமாக.

"எல்லாரும் குடிப்போம்னா என்ன அர்த்தம்? நீங்க குடிப்பீங்களா?"

"ஓ, குடிப்பேனே... காபி, டீ, ஆரஞ்சு ஜூஸ்..." என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

சிரித்தபடி இடவலமாய் தலையசைத்தாள் பூங்குழலி.

"எனக்கும் குடிக்கிற பழக்கம் இருந்திருக்கலாம்" என்றான் மலரவன் சோகமாக.

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"குடிகாரன் என்ன வேணா செய்யலாம். குடிச்சிருக்கான் அப்படிங்கிறது ரொம்ப பெரிய எக்ஸ்கியூஸ்..."

"குடிச்சிருக்கிற எக்ஸ்கியூஸோட அப்படி நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?" என்றாள் குழப்பமாக.

"அதை நிஜமா நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறியா?"

"ஏன் அது என்ன அவ்வளவு பெரிய ரகசியமா?"

"நமக்குள்ள எந்த ரகசியமும் கிடையாது. அதுவும் நீ சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கும் போது, நிச்சயம் கிடையாது..."

"நான் சம்பந்தப்பட்ட விஷயமா? என்ன அது?"

"குடிகாரன் கிட்ட, இந்த உறவை ஏத்துக்க டைம் வேணும்னு நீ கேட்க முடியாதே... ஏன்னா, நீ சொல்றத கேக்குற நிதானத்துல அவன் இருக்க மாட்டான் இல்ல?"

திகைத்துப் போனாள் பூங்குழலி. அவன் சிரிப்பை அடக்கி கொண்டிருப்பதை பார்த்து, அவன் வேண்டுமென்றே தன்னை வம்புக்கு இழுக்கிறான் என்று புரிந்து போனது அவளுக்கு.

"அப்படியெல்லாம் ஏதாவது செஞ்சீங்கன்னா உங்களை கொன்னுடுவேன்" எச்சரித்தாள் அவள்.

"கொன்னுக்கோ... அதைப் பத்தி யார் கவலைப்பட போறா? மெயின் மேட்டர் முடிஞ்சதுக்கு பிறகு தாராளமா கொன்னுக்கோ... சந்தோஷமா உன் கையால சாவுறேன்..."

"உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு" சிரித்தபடி அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

"மகிழன் முழு பாட்டிலையும் காலி பண்ணியிருக்க மாட்டான்னு நினைக்கிறேன். நான் கேட்டா அவன் நிச்சயம் கொடுப்பான்" என்றான் மலரவன்.

உதடு கடித்து தன் சிரிப்பை அடக்கினாள் பூங்குழலி.

"எதுக்கும் அதை அவன் கிட்ட இருந்து வாங்க நான் ட்ரை பண்றேன்"

பூங்குழலி ஏதோ சொல்ல முற்பட, அப்போது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. பூங்குழலியின் அம்மாவையும் அத்தையையும் வீட்டில் விட்டுவிட்டு அவனது பெற்றோர் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான் மலரவன்.

"நீ தூங்கு. நான் வர கொஞ்சம் லேட் ஆகும்" என்று சீரியஸாய் கூறினான் மலரவன்.

பூங்குழலியும் சீரியஸாய் சரி என்று தலையசைக்க,

"நாளைக்கு ராத்திரி நான் நிச்சயமா குளிச்சிட்டு வரேன்" என்றான் மலரவன்.

அவள் தலையணையை எடுத்து அவன் மீது வீச, அதை சிரித்தபடி பிடித்து  சோபாவின் மீது வைத்து விட்டு நடந்தான் மலரவன். மணிமாறனை சந்திக்க சென்றான் அவன். ஏனென்றால் அது மிகவும் முக்கியமானது.

மலரவன் தன் அறையை விட்டு வெளியே வருவதற்கு முன், அழுதபடி ஓடிச் சென்று கதவை திறந்தாள் கீர்த்தி. அவளைக் கண்ட மணிமாறனும் மின்னல்கொடியும் பதற்றம் அடைந்தார்கள்.

"என்ன ஆச்சுமா?" என்றார் மணிமாறன்.

"மகிழன் குடிச்சிட்டு வந்திருக்காரு"

"என்ன்னனது?" என்றார் மணிமாறன் கோபமாய்.

மின்னல்கொடி வெடவெடத்து போனார். நிச்சயம் இன்று மகிழன் மணிமாறனிடம் அடி வாங்க போகிறான். அவருக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. மகிழனின் அறையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடிய மணிமாறன், மகிழன், மலரவனின் அறையின் வாசலில் நின்று அவனுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து திகைத்து நின்றார்.

"இந்த டீலுக்கு என்ன செய்யறதுன்னு நான் உனக்கு சொல்றேன்" என்றான் மலரவன் மகிழனிடம், அவர்கள் இருவரும் வியாபார சம்பந்தமாய் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் போல.

மலரவன் மணிமாறனை பார்த்து புன்னகைத்தான்.

"அவங்களை வீட்ல டிராப் பண்ணிட்டீங்களா அப்பா?" என்றான் சகஜமாக.

மகிழனை பார்த்தபடி, குழப்பத்துடன் ஆம் என்று தலையசைத்தார் மணிமாறன்.

"நீ போய் தூங்கு மகிழா. நம்ம நாளைக்கு காலையில மிச்சத்தை டிஸ்கஸ் பண்ணலாம்" என்றான் மலரவன்.

சரி என்று தலையசைத்தான் மகிழன்.

"நீங்க என்ன டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"முக்கியமா எதுவும் இல்லப்பா. சில டிப்ஸை அவனுக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்" என்றான் மலரவன்.

குடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், புத்துணர்ச்சியுடன் இருந்த மகிழனை சந்தேகக் கண்ணோடு பார்த்தார் மணிமாறன்.

கீர்த்தியுடன் அங்கு வந்த மின்னல்கொடியும் குழப்பம் அடைந்தார். இயல்பாய் இருந்த மகிழனை பார்த்த கீர்த்தி திடுக்கிட்டாள்.

"மகிழன் குடிச்சிருக்கான்னு சொன்னியே?" என்றார் மின்னல்கொடி.

திருதிருவென விழித்தாள் கீர்த்தி. அவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அங்கு என்ன நடக்கிறதென்றே அவளுக்கு புரியவில்லை. சில நிமிடத்திற்கு முன்பு வரை சாராய நெடியுடன் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்த இவன், எப்படி இவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறான்? இரண்டில் எது நடிப்பு? அதுவா? இதுவா?

"என்னைக்கு மா அவ உண்மையை பேசி இருக்கா? அவ சொல்றது எல்லாமே பொய் தானே?" என்றான் மகிழன் வருத்தத்துடன்.

"எதுக்காக பொய் சொன்ன கீர்த்தி?" என்றார் மின்னல்கொடி.

"நான் ஒன்னும் பொய் சொல்லல. அவர் தான் பொய் சொல்றாரு" என்றாள் கீர்த்தி.

"அப்பா, நான் உங்க முன்னாடி தானே இருக்கேன்? நான் குடிச்சிருக்கேனா  இல்லையான்னு உங்களுக்கு தெரியலையா?"

கீர்த்தியை ஏறிட்டார் மணிமாறன்.

"அவர் குடிச்சிருந்தாரு என்கிட்ட சண்டை போட்டாரு" என்றாள் கீர்த்தி.

"நீங்க கிளம்பி போனதிலிருந்து நான் மலர் கூட தான் நின்னு பேசிகிட்டு இருக்கேன்" என்றான் மகிழன்.

மலரவனை ஏறிட்டார் மணிமாறன். அவன் ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் சமதள முக பாவத்தோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த கீர்த்தி அதிர்ச்சி அடைந்தாள். மகிழன் மது பாட்டிலுடன் உள்ளே வந்ததை மலரவன் பார்த்ததை அவள் பார்த்தாள். மலரவன் இப்படி அமைதி காப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மலரவன் மகிழனை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று அவளுக்கு புரிந்து போனது. அவனது திருமண நாளன்று, அனைத்து சாட்சியங்களும் மகிழனுக்கு எதிராய் இருந்த போதே, தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல்  அவன் பக்கம் நின்றானே மலரவன்...! மகிழனுக்கு பக்கத்துணையாய் மலரவன் நின்றால், அவள் என்ன செய்ய முடியும்? அவள் எதிர்பார்த்தது இதுவல்ல. சகோதரர்கள் இருவரையும் சுலபமாய் பிரித்து விடலாம் என்று அவள் தப்பு கணக்கு போட்டாள். ஆனால் இவர்களோ தங்கள் பலவீனத்தை காட்டிக் கொள்ளவே இல்லை. இவர்கள் இப்படி கைகோர்த்து நின்றால், வரப்போகும் நாட்களில் அவளது நிலைமை என்னவாகும்? பீதி அடைந்தாள் கீர்த்தி.

"அப்பா, நான் ராகேஷை பத்தி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றான் மலரவன்.

அதைக் கேட்ட கீர்த்தியின் முகம் இருளடைந்து போனது. சகோதரர்கள் இருவரும் அதை கவனிக்கவே செய்தார்கள்.

"ராகேஷ் பத்தி நான் கேள்விப்பட்ட விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்" என்றான் மலரவன்.

"என்ன விஷயம் மலரா?"

"நமக்கு தெரியாம, நம்ம முதுகுக்கு பின்னாடி நிறைய விஷயம் நடந்திருக்கு. நீங்க அதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்"

"சரி வா, நம்ம ஸ்டடி ரூமுக்கு போகலாம்" என்றார் மணிமாறன்.

"அம்மா, நீங்களும் எங்க கூட வாங்க"

சரியென தலையசைத்தார் மின்னல்கொடி.

"மகிழா, நீ உன் வைஃப் கூட உன் ரூமுக்கு போ" என்றான் மலரவன்.

"சரி" என்று தன் அறையை நோக்கி நடந்தான் மகிழன்.

கீர்த்தியின் நிலை பரிதாபத்திற்குரியதாய் இருந்தது. மலரவன் தன் பெற்றோரிடம் என்ன கூற போகிறானோ தெரியவில்லை. அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கலாம் என்றால், முன்னெச்சரிக்கையாய், அவளை அங்கிருந்து மகிழனுடன் அனுப்பிவிட்டான் மலரவன். பயத்துடன் மகிழனை பின்தொடர்ந்தாள் கீர்த்தி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top