32 காசோலை
31 காசோலை
"பேசா மடந்தையா நீ? நீ பேசின பேச்சை தான் நான் பார்த்தேனே..." அவளை கிண்டலடித்தான் மலரவன்.
அவள் அவனைப் பார்த்து முறைக்க,
"நான் தான் சொன்னேனே, எந்த பொண்டாட்டியாலயும் புருஷன் கிட்ட பேசாம இருக்கவே முடியாதுன்னு..."
"போதும்... லைட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்" பேச்சை மாற்ற முயன்றாள் பூங்குழலி.
"அதுல டிஸ்கஸ் பண்ண எதுவும் இல்ல. என்ன செய்யணும்னு நான் ஸ்டீவுக்கு சொல்லிட்டேன். அவன் அதை முடிச்சுட்டான்"
"அப்புறம் எதுக்கு உங்க கிட்ட என்னை அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண சொன்னாரு?"
"நான் என்ன சொல்றேனோ அதை செய்ய வேண்டியது தானே அவனுடைய வேலை?"
"அப்படி செய்யச் சொல்லி அவர்கிட்ட சொன்னது நீங்க தானா?" என்றாள் அதிர்ச்சியாக.
ஆமாம் என்று தலையசைத்தான்.
"ஆனா ஏன்?"
"உன்னை என்கிட்ட பேச வைக்க தான்"
"நீங்க பொய் சொன்னீங்களா?"
"ஆமா, நீ என்கிட்ட இருபத்தி நாலு மணி நேரத்துக்கு பேச மாட்டேன்னு சொன்ன இல்ல? அந்த மாதிரி" என்று சிரித்தான்.
"இப்பல்லாம் நீங்க என்கிட்ட ரொம்ப வம்பு பண்றதா உங்களுக்கே தோணலையா?" என்றாள் தன் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு.
"இப்பல்லாமா? நமக்கு கல்யாணம் ஆனதே நேத்து தானே?"
"நீங்க என்னை வம்புக்கு இழுக்கிறதை, ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டீங்க. நம்ம கல்யாணம் முடிவான உடனேயே..."
"முதல் சந்திப்பிலேயே கலகலன்னு என்கிட்ட பேசினா அந்த பொண்ணை தேடி கண்டுபிடிக்கத் தான் அப்படி எல்லாம் செஞ்சேன்"
அசந்து போனாள் பூங்குழலி.
"நீ இப்படி அமைதியா இருக்கிறது உனக்கு பொருந்தவே இல்ல தெரியுமா...! நீ முதல்ல இருந்த மாதிரி இப்பவும் இருக்கணும்னு தான் நான் விரும்புறேன்" என்றான் சீரியஸாக.
"நான் பழையபடி மாறிட்டா, நீங்க என்னை வம்பு செய்றதை எல்லாம் நிறுத்திடுவீங்களா?" என்றாள் அவள் கிண்டலாக.
"அது எப்படி முடியும்? எனக்கு அந்த பழைய பூங்குழலியை ரொம்ப பிடிக்குமே"
அந்த வார்த்தைகள், அவளுக்கு சுருக் என்றது.
"உங்களுக்கு என்னை பிடிக்குமா?" அவளிடம் இருந்து வந்த கேள்வி அவனை திகைக்க செய்தது.
"உன்னை யாருக்கு தான் பிடிக்காது பூங்குழலி? நீ இருக்கிற இடமே உயிர்ப்போட இருக்குமே"
"நான் உங்களைப் பத்தி மட்டும் தான் கேட்டேன்" என்றாள் அவனது கண்களை சந்தித்தவாறு.
"ஆமாம். எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்" என்றான் எளிமையாய்.
"உங்களுக்கு என்னை பிடிக்கும்னா, எதுக்காக என்னோட பிறந்தநாளுக்கு எனக்கு நீங்க விஷ் பண்ணல?" அவன் எதிர்பாராத கேள்வியை வீசினாள்.
"அப்போ நீ என் தம்பியோட ஃபியான்சியா மாறி இருந்த"
"அதனால என்ன? தம்பியோட ஃபியான்சி, உங்க வாழ்த்துக்கு அருகதை இல்லாதவளா?"
"மகிழன் என்னை தப்பா எடுத்துக்குவான்னு நினைச்சேன்"
"அவர் ஏன் உங்களை தப்பா எடுத்துக்கணும்? வாழ்த்து சொல்றதுல என்ன தப்பு இருக்கு? அப்படியே இருந்தாலும், நீங்க எனக்கு வாழ்த்து சொன்னீங்கன்னு அவருக்கு எப்படி தெரியும்?"
"நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன்..."
"அப்படியே இருந்தாலும், பர்த்டே விஷ் பண்றதுல என்ன தப்பு?" என்றாள் குழப்பத்துடன்.
"அதை விடு. அந்த நேரம் நான் லண்டன் புது பிரான்ச் வேலையில ரொம்ப டென்ஷனா இருந்தேன்"
பூங்குழலி மறுபடியும் ஏதோ கேட்க போக, அங்கு வந்த தண்டபாணி கதவை தட்டினான்.
"சொல்லு தண்டபாணி"
"பூங்குழலி அண்ணியோட அம்மாவும் அத்தையும் வந்திருக்காங்க, அண்ணா"
மலரவனை குழப்பத்துடன் ஏறிட்டாள் பூங்குழலி. எதற்காக அவளது அம்மா ஒன்றும் கூறாமல் திடீரென்று அங்கு வந்திருக்கிறார்? ஏதாவது பிரச்சனையா? யோசிக்காமல் கீழ்தளம் ஓடினாள். அவளை மலரவனும் பின்தொடர்ந்தான்.
அவர்கள் மின்னல்கொடியுடன் சகஜமாய் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பூங்குழலியின் மனம் நிம்மதி அடைந்தது. அவர்கள் மட்டும் அல்லாது, மேலும் இருவர் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் யார் என்று பூங்குழலிக்கு தெரியவில்லை.
"அம்மா, அத்தை, என்ன ஆச்சு?" என்றாள் அந்த இருவரையும் பார்த்தபடி.
அந்த இருவரையும் பார்த்த மலரவன், சிவகாமியையும் பார்த்தான்.
"இவர் தான் என்னோட மாப்பிள்ளை மலரவன்" என்று அவர்களுக்கு மலரவனை அறிமுகம் செய்து வைத்தார் சிவகாமி.
"ஹலோ சார்" என்றான் மலரவன்.
"நாங்க மெட்ராஸ் பெனிஃபிட் ஃபண்ட் லிமிடெட்ல இருந்து வறோம். பத்து வருஷத்துக்கு முன்னாடி, தில்லைராஜன் சார் எங்க கம்பெனியில ஒரு பர்டிகுலர் அமௌன்ட் டெபாசிட் பண்ணி இருந்தாரு. அந்த பணம் நேத்து தான் மேச்சூர் ஆச்சி. அவரோட வைஃபை தான் அவர் நாமினியா போட்டிருந்தாரு. அந்த செக்கை அவங்க வைஃப் கிட்ட கொடுத்துட்டு போக தான் நாங்க இங்க வந்தோம்" என்றார் அந்த இருவரில் ஒருவர்.
"அப்படியா? இது ரொம்ப நல்ல விஷயமாச்சே" என்றார் மின்னல்கொடி சந்தோஷமாய்.
"அவர் எவ்வளவு டெபாசிட் பண்ணி இருந்தாரு" என்றான் மலரவன்.
"பத்து கோடி"
"ஓ..." அவன் உருவம் உயர்த்த, பூங்குழலி கண்களை விரித்தாள்.
"இப்போ அந்த பணம் பன்னெண்டு கோடியா மெச்சூர் ஆகி இருக்கு"
தயக்கத்துடன் நின்றிருந்த சிவகாமியின் ஏறிட்டான் மலரவன்.
"என்ன ஆன்ட்டி யோசிக்கிறீங்க?ஏதாவது பிரச்சனையா?" என்றான்.
சிவகாமி இல்லை என்று தலையசைத்தார்.
"அப்படின்னா செக்கை வாங்கிக்கோங்க" என்றான்.
அவர்கள் கொண்டு வந்திருந்த பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு அந்த காசோலையை பெற்றுக் கொண்டார் சிவகாமி. அந்த அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
"ஏன் ஆன்ட்டி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க?" என்றான் மலரவன்.
"இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் பண்ணி வச்சிருந்த விஷயத்தை அவர் என்கிட்ட ஒரு தடவை கூட சொன்னதே இல்ல" என்றார்.
"உங்களை சர்ப்ரைஸ் பண்ணனும்னு அவர் நினைச்சிருக்கலாம்"
"இவ்வளவு பெரிய பணம் வரப்போகுதுன்னு அவனுக்கு தெரிஞ்சிருந்தா, அவன் எதுக்காக தற்கொலை பண்ணிக்கணும்?" என்றார் வடிவுக்கரசி குழப்பத்துடன்.
"அத்தை சொல்றது சரி தான். பத்து கோடி கையில இருக்கும் போது, அவருக்கு தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் ஏன் வந்தது?" என்றாள் பூங்குழலி.
"அதோட மட்டுமில்ல, அவருக்கு சேர்த்து வைக்கிற பழக்கமே கிடையாது" என்றார் சிவகாமி.
"சிவகாமி சொல்றது சரி தான். அவன் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கான்னு அவளே அவன்கிட்ட நிறைய தடவை சண்டை போட்டிருக்கா. இவ்வளவு பெரிய பணத்தை அவன் சேர்த்து வச்சிருந்தா, அவள் சண்டை போடும் போதாவது அதைப் பத்தி சொல்லி இருப்பானே" என்றார் வடிவுக்கரசி.
"நீங்க ஆளாளுக்கு ஏன் இப்படி குழம்புறீங்கன்னு எனக்கு புரியல. இவ்வளவு பெரிய அமௌன்ட் வந்திருக்கு. அங்கிள் இந்த பணத்தை டெபாசிட் பண்ணாம இருந்திருந்தா, அந்த ஆஃபீஸ்ல இருந்து இந்த பணத்தை ஏன் உங்களுக்கு கொடுக்கணும்?" என்றான் மலரவன்.
அவர்கள் அமைதியானார்கள்.
"அங்கிள் உங்களை ஒன்னும் இல்லாம விட்டுட்டு போகலன்னு சந்தோஷப்படுங்க"
அதே நேரம், தன் அம்மா வீட்டுக்குச் சென்ற கீர்த்தி, மணிமாறனுடன் வீட்டினுள் நுழைந்தாள். சிவகாமிக்கு வடிவுக்கரசிக்கும் எந்த முக்கியத்துவமும் வழங்காமல் தன் அறையை நோக்கி சென்றாள்.
"ஆன்ட்டி இப்ப நீங்க பன்னண்டு கோடிக்கு சொந்தக்காரங்க. அதைப்பத்தி மட்டும் நினைச்சு பாருங்க" என்றான் மலரவன்.
அதைக் கேட்ட கீர்த்தியின் கால்கள் நகர மறுத்தன. பன்னிரெண்டு கோடியா? அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அப்படி என்றால், இனிமேல் அவள் பணத்தை காரணம் காட்டி பூங்குழலியை மட்டம் தட்ட முடியாதா? பூங்குழலி சிவகாமியின் ஒரே வாரிசு ஆயிற்றே? அவளுக்கு மட்டும் எப்படி எல்லா விதத்திலும் பாதுகாப்பு கிடைத்து விடுகிறது? தனக்கு துணை நிற்கும் கணவன் கிடைத்து விட்டதால் அவள் ஏற்கனவே தலைகணத்தில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அது போதாதென்று, இப்பொழுது கோடிக்கணக்கில் பணம் வேறு கிடைத்துவிட்டது...! என்ன கஷ்ட காலம் இது...!
"என்னது பன்னெண்டு கோடியா? நிஜமாவா சொல்ற? எப்படி வந்தது?" என்றார் மணிமாறன் ஆவலுடன்.
"மெட்ராஸ் பெனிபிட் ஃபண்ட் லிமிடட்ல பத்து வருஷத்துக்கு முன்னாடி, தில்லை அங்கிள் பத்து கோடி ரூபாயை டெபாசிட் பண்ணி வச்சிருந்துருக்காரு. அந்த பணம் நேத்து மெச்சூர் ஆகி இருக்கு. இப்போ தான் சிவகாமி ஆன்ட்டி கிட்ட அந்த செக்கை கொண்டு வந்து கொடுத்துட்டு போனாங்க"
"அப்படி போடு அரிவாளை... பாத்தியா மின்னல், தில்லை ஏதாவது செய்யாம விட்டிருக்க மாட்டான்னு நான் சொன்னேன் இல்ல?" பூரித்துப் போனார் மணிமாறன்.
ஆமாம் என்று தலையசைத்தார் மின்னல்கொடி.
"மின்னல், எல்லாருக்கும் டின்னர் பிரிப்பேர் பண்ணு. அக்காவும் சிவகாமியும் நம்ம கூட சாப்பிடட்டும்"
"இருக்கட்டும் அண்ணா, அதெல்லாம் வேண்டாம்" என்றார் சிவகாமி.
"ஏன் சிவகாமி, உன் பொண்ணு வீட்ல சாப்பிட மாட்டியா?" என்றார் மணிமாறன்.
"அப்பா, இப்போ அவங்க கோடீஸ்வரங்க. நீங்க அவங்களை இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது" என்றான் மலரவன் கிண்டலாய்.
பூங்குழலி சிரிக்க, அப்படியெல்லாம் இல்லை என்று அவசரமாய் தலையசைத்தார் சிவகாமி.
"இல்ல மலரா... சிவகாமி ரொம்ப எளிமையான பொண்ணு. நான் எத்தனை வருஷமா பார்த்துகிட்டு இருக்கேன்" என்றார் மணிமாறன்.
"ஆமாம் மல்லு, சிவாவை பணமெல்லாம் மாத்திட முடியாது" என்றார் மின்னல்கொடி.
"எங்க கூட சாப்பிடுங்க ஆன்ட்டி" என்றான் மலரவன்.
சிவகாமி சரி என்று தலையசைத்தார்.
"நீ பூங்குழியோட இரு. நான் சமைக்கிறேன்" என்றார் மின்னல்கொடி.
"நேத்து வரைக்கும் அவ எங்க கூட தானே இருந்தா... நானும் உனக்கு சமைக்க ஹெல்ப் பண்றேன்" என்றார் சிவகாமி.
"நானும் உங்க கூட இருக்கேன்" என்றாள் பூங்குழலி.
மலரவனை நோக்கி அந்த காசோலையை நீட்டினார் சிவகாமி. அவரை மலரவன் திகைப்புடன் பார்க்க,
"வச்சுக்கோங்க. நான் அப்புறமா வாங்கிக்கிறேன்" என்றார் சிவகாமி.
அதை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டான் மலரவன்.
"மலரா, அமௌன்ட் ரொம்ப பெருசு. லீகல் ஃபார்மாலிட்டிஸ் நிறைய இருக்கும். சிவகாமிக்கு எந்த பிரச்சனையும் வராம, அதை பணமா மாத்தி அவங்க அக்கவுண்ட்ல டெபாசிட் பண்ணிடு" என்றார் மணிமாறன்.
"சரிங்கப்பா" அந்த காசோலையுடன் தன் அறையை நோக்கி நடந்தான் மலரவன்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி தன் அறைக்கு சென்றாள்.
பெண்கள் சமையலறைக்குச் சென்றார்கள். ஒரு குவளை காபி கலந்த பூங்குழலி, அதை தண்டபாணியிடம் கொடுத்து,
"இதை அவர் கிட்ட கொடுத்துடுங்க" என்றாள்.
"சரிங்க அண்ணி"
"தண்டபாணி, இருப்பா" என்று அவனை தடுத்த சிவகாமி,
"குழலி, நீ காபி கொண்டு போய் மலர்கிட்ட கொடு" என்றார்.
"பரவாயில்லமா. அவர் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டாரு"
தண்டபாணியின் கையில் இருந்த குவளையை வாங்கி அதை பூங்குழலியின் கையில் கொடுத்த அவர்,
"நீ இருக்கும் போது, உனக்கு பதிலா அதை வேற யாரும் செய்யக்கூடாது. நீயே போய் குடு" என்றார் கண்டிப்புடன்.
பெருமூச்சு விட்டு அந்த குவளையுடன் நடந்தாள் பூங்குழலி. தங்கள் அறைக்கு வந்த அவள், மலரவன் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை கண்டாள். அவளைப் பார்த்த அவன், நிமிர்ந்து அமர்ந்தான். அவனிடம் அந்த காப்பியை கொடுத்தவுடன், அதை வாங்கி பருகினான்.
"நீங்க இந்த செக்கை பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்றாள்.
"இதுல நினைக்க என்ன இருக்கு?"
"இது விசித்திரமா இல்லையா?"
"ஏன்?"
"இவ்வளவு சீக்கிரம் மெச்சூராக இருந்த பணத்தை, தற்கொலை பண்ணிக்குறதுக்கு முன்னாடி எங்க அப்பா எப்படி யோசிக்காம போனாரு?"
"அப்போ அவரு ஸ்ட்ரெஸ்ல இருந்திருப்பாரு..."
"அப்படின்னா தான் அவர் நிச்சயமா இந்த பணத்தை பத்தி நினைச்சிருக்கணும். கடைசி நேரத்துல நான் அவர் கூட இருந்திருக்கேன். அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வர, ஏதாவது வழி கிடைக்காதான்னு அவர் எல்லா விதத்தையும் யோசிச்சாரு"
"ஓ..."
யோசனையில் ஆழ்ந்தாள் பூங்குழலி.
"தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத. உங்களுக்கு பணம் கிடைச்சிருக்கு. இதுக்கப்புறம் சிவகாமி ஆன்ட்டி இண்டிபெண்டன்டா இருக்க போறாங்க. அவங்க யாருடைய உதவியையும் எதிர்பார்த்துக்கிட்டு இருக்க தேவையில்ல. அதை பத்தி நினைச்சி சந்தோஷப்படு"
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் பூங்குழலி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top